பொதுவாக அதிகாரப்படுத்துதல் என்றால் அதிகாரங்களை கொடுத்தல் என்ற புரிதலைத்தான் நம்மில் பெரும்பாலானவர்கள் பெற்றுள்ளனர். அதிகாரத்தை யாரும் யாருக்கும் கொடுப்பதல்ல. அதிகாரங்களும் உரிமைகளும் வென்றெடுக்கப்பட வேண்டியவைகள், அதிகாரங்களும், உரிமைகளும் போராடியவர்களுக்குத்தான் வந்து சேரும். அப்படிப் போராடுவது மட்டுமல்ல, நம்மை நாம் விபரம் அறிந்தவராக, ஆற்றல் மிக்கவராக திறன் மிக்கவராக மாற்றிக் கொள்வது. இந்த மாற்றங்களை நமக்குள் கொண்டு வருவது என்பதும் போராட்டமே. யார் ஒருவர் தான் யார், தனக்குள் இருக்கும் ஆற்றலைப் புரிந்து அதை உணர்ந்து மேலும் வளர்த்துக் கொள்ள முனைகின்றாரோ அவர் அதிகாரப்படுத்தப்பட்டு விடுவார் என்ற புரிதல் நமக்கு வேண்டும். தன் ஆற்றல் அறிதல்தான் அதிகாரப்படுத்துதல் என்பதற்குப் பொருள். அதிகாரங்கள் என்பது கொடுப்பவை அல்ல, எடுப்பவை. அப்படி எடுப்பதற்கான ஆற்றல் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
அதிகாரங்களை எடுக்கத் தேவையான சக்தியை வளர்த்துக் கொள்ளுதலும் அதிகாரப்படுத்துதலாகும். இன்றைய சூழலில் நாம் யாராக இருக்கின்றோம் என்று சற்று யோசித்துப் பார்த்தால் நாம் அரசை நம்பி வாழும் அல்லது சார்ந்து வாழும் ஒரு பயனாளியாகவே வாழ்ந்து வருகின்றோம். ஒரு குடியாட்சி நடைபெறுகின்ற நாட்டில் பொதுமக்கள் குடிமக்களாக நிறைய பொறுப்புக்களுடன் பொறுப்புமிக்க குடிமக்களாகச் செயல்படுவார்கள். ஒரு குடியாட்சி நடைபெறும் நாட்டில் குடிமக்கள் செயல்பாடுகள் என்பது அதிகமாக இருக்கும். அரசின் செயல்பாடுகள் என்பது குறைவானதாக இருக்கும். அரசின் செயல்பாடுகளும் குடிமக்கள் செயல்பாடுகளுக்கு உதவுவதற்காக என்ற நிலைப்பாட்டில் இருக்கும். இந்தச் சூழல் எப்பொழுது உருவாகும் என்றால் நம் பொதுமக்களிடம் பயனாளிச் சிந்தனை குறைந்து, குடிமக்கள் சிந்தனை வளர்ந்து வரும்போது மட்டும்தான் என்ற உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும்.
நாம் பயனாளியாக சிந்திக்கும் வரையில் அரசு எஜமானனாகச் செயல்படும். என்று நாம் பொறுப்புமிக்க குடிமக்கள் என்ற சிந்தனைக்கு வருகின்றோமோ அப்பொழுதே அரசு நமக்கு சேவகராக மாறிவிடும். நாமும் எஜமானனாக மாறி விடுவோம். நாம் பயனாளிச் சிந்தனையை தொடரும் வரையில் நமக்கு சுயமரியாதை என்பது கிடையாது, அரசு மக்களுக்கு ஆற்ற வேண்டிய சேவைகள் என்பது கட்டியக் கடமைகளாகும். அவைகள் அனைத்தும் மக்களின் உரிமைகள். எனவே மக்கள் உரிமை சார்ந்து சிந்திக்கின்ற சூழலுக்கு வந்துவிட்டால் அரசு தானாக மாற்றம் பெற்றுவிடும். நாம் பயனாளியாக சிந்திக்கின்றவரை நம் பொதுச் செயல்பாடுகள் அனைத்தும் பொறுப்புமிக்கவை என்று கூற இயலாது. குடிமக்களாக நாம் மாறும்போது, நாம் பொறுப்புள்ளவர்களாக மாறி பெரும் பொறுப்புக்களை சுமக்கத் தயாராகி விடுவோம்.
நம் சிந்தனைப் போக்கில் அரசின் பயன் என்பது போய், உரிமையுடன் வாழும் வாழ்க்கை என்ற சிந்தனைக்கு நாம் வந்து விடுவோம். உரிமைகளும் கடமைகளும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் போல் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது. பயனாளியாக இருப்பது மிக எளிது. பொறுப்புமிக்க குடிமக்களாக இருப்பதற்கு நம் சிந்தனையில் நடத்தையில், செயல்பாடுகளில் மிகப் பெரிய மாற்றங்களை நாமே வலிய கொண்டுவர வேண்டும். பொதுமக்களை பயனாளிகளாக மாற்றுவதற்கு எந்த பெரு முயற்சியும் தேவை இல்லை. ஆனால் பொறுப்பு மிக்க குடிமக்களாக மாறுவதற்கு மிகப் பெரிய போராட்டத்தினை நமக்குள் நாம் நடத்தியாக வேண்டும். உரிமைகள் சார்ந்தும், பொறுப்புக்கள் சார்ந்தும் சிந்திக்க நம் மக்களை தயார் செய்ய தவறுவோமேயானால் பொறுப்பற்ற பயனாளிப் பட்டாளம் தான் ஒரு நாட்டில் இருக்கும். அரசு மக்களுக்காக எப்போது செயல்படும் என்றால் மக்கள் அரசைப் பற்றிய விழிப்புணர்வுடன் செயல்படும்போது மட்டும் தான் என்பதை 350 ஆண்டுகளுக்கு முன் தாமஸ் பெயின் என்ற தத்துவ அறிஞன் விளக்கமாக தன் பொது அறிவு என்ற நூலில் கூறிவிட்டான்.
நம் நாட்டின் சுதந்திரத்தை சும்மா பெறவில்லை, போராடிப் பெற்றோம். பெற்ற சுதந்திரத்தை பேணிக்காக்க குடிமக்களாக நாம் வளர்ந்திருக்க வேண்டும், வளர்த்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படி வளர்ந்திருக்கின்றோமா அல்லது வளர்த்தெடுக்கப் பட்டிருக்கிறோமா? என்ற கேள்வியைக் கேட்டு பதில் தேடினால் இல்லை என்பதுதான் பதிலாக வரும். நமக்கு நம்மை வழிநடத்த நம் அரசியல் சாசனம் இருக்கிறது. அது மட்டுமல்ல. இன்ன பிற பாதுகாப்புச் சட்டங்களும் உருவாக்கப்பட்டு மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ளன. அத்துடன் மேம்பாடு என்பதை உரிமையாக்கி, பல அடிப்படையான சேவைகளை உரிமைகளாக தரப்பட்டுள்ளன. தரப்பட்ட உரிமைகள் வென்றெடுக்கப்பட்டனவா? அரசு தந்த கட்டுக் கட்டான உரிமைகள் வென்றெடுக்கப்படாமல் வீதியில் கிடப்பதை நாம் பார்த்து வருகின்றோம். அவைகளை நம் பொதுமக்களால் வென்றெடுக்க முடியவில்லை. காரணம் உரிமைகளை வென்றெடுக்க வேண்டிய நிலைக்கு பொதுமக்கள் தங்களை பொறுப்புமிக்க குடிமக்களாக மாற்றிக் கொள்ளவில்லை. தொடர்ந்து அரசின் பயன்களுக்கு ஏங்கி பொதுமக்கள் நிற்பதால் மக்கள் ஒரு குடியரசு நாட்டில் மேய்க்கப்படுகின்றார்கள். 84% கல்வி அறிவு பெற்றிருந்தும், உலகில் விஞ்ஞானம், தொழில் நுட்பம், மனித வளம் மற்றும் ஆற்றலில் முதல் நான்கு ஐந்து இடங்களுக்குள் நாம் இருந்தாலும் பொறுப்பற்ற பொதுமக்களைக் கொண்ட நாடாகவே நாம் விளங்குகின்றோம்.
பொதுமக்கள் பொறுப்பற்று இயங்குவதால் பொதுமக்களுக்காக உருவாக்கப்பட்ட நிறுவனங்கள் மற்றும் அமைப்புக்கள் அனைத்தும் பொறுப்பற்று செயல்படுகின்றன என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். நாம் பெற்ற அறிவு நம் வாழ்வியலை உன்னதமாக மாற்றியமைக்க இயலவில்லை. பொறுப்புமிக்க குடிமக்களாக பொதுமக்கள் மாறுவதற்கு மிகப்பெரும் முயற்சி அனைவரிடமும் வந்தாக வேண்டும். அப்படி தங்களை மாற்றிக் கொள்கின்றபோது பொது மக்களின் பார்வையில், அணுகுமுறையில், சிந்தனைப் போக்கில், நடத்தையில் செயல்பாடுகளில் மிகப் பெரிய மாற்றம் வந்துவிடும்.
இந்த புதிய சூழலை உருவாக்க இன்று மக்களுக்கு வந்திருக்கும் வாய்ப்பு புதிய உள்ளாட்சி அரசாங்கம். இந்த புதிய அரசாங்கம் இதுவரை மத்திய மாநில அரசுகளால் தொடப்படாத விளிம்புநிலை மக்களைத் தொட்டு சேவை செய்திட உருவாக்கப்பட்டவையாகும். இந்த மாற்றத்தை மக்கள் பங்கேற்போடு செயல்படுத்திட வேண்டும். இந்தச் செயல்பாடுகள் மூலம் மக்களை பொறுப்பு மிக்க குடிமக்களாக மாற்றிட வேண்டும். அதற்கான விழிப்புணர்வு மற்றும் திறன் வளர்ப்பு மக்கள் மத்தியில் நடைபெற வேண்டும். உள்ளாட்சி அமைப்புக்கள். அடிப்படைத் தேவைகளை சேவைகளாகச் செய்வதுடன் மக்களைத் திரட்டி அரசுடன் கைகோர்த்து செயல்பட்டு பொறுப்பு மிக்க உன்னத கிராமிய வாழ்க்கையை ஏற்படுத்துவதுதான் புதிய உள்ளாட்சிக்கு கொடுக்கப்பட்ட சவாலான மிக முக்கியப் பணி. இந்த மக்கள் தயாரிப்பைச் செய்திடும் தகுதியை நம் பஞ்சாயத்துத் தலைவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். இதற்கான புரிதலை நம் பஞ்சாயத்துத் தலைவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். அத்துடன் தன் செயல்பாடுகளினால் மக்கள் நம்பிக்கையைப் பெற்றவராக விளங்க வேண்டும். மக்களோடு இணைந்து மக்களை நேசித்து, மக்களை மதித்து செயல்படும் பார்வை கொண்டவரால் மட்டுமே இந்த மாற்றத்தை ஏற்படுத்த முடியும். உள்ளாட்சித் தலைவர்கள் சமத்துவம் பற்றி ஆழமான புரிந்தால் இருந்தால் மட்டுமே மேற்கூறிய செயல்பாடுகளைச் செய்ய முடியும்.
இதற்கான புரிதலை மக்களிடமும், மக்கள் பிரதிநிதிகளிடமும் உருவாக்குவதுதான் இன்று நமக்குத் தேவையான இன்றியமையாத பணி. ஒரு பொது வினியோகக் கடையில் பெருந்தொற்று காலத்தில் தந்த அரிசியை வாங்கும்போது ஒவ்வொருவருக்கும் 2 கிலோ குறைத்துத் தந்தார்கள். ஏன் எங்களுக்கு இரண்டு கிலோ அரிசி குறைத்துப் போடுகிறீர்கள் என்று கேள்வி கேட்டார். ரேஷன் வாங்கியவர். அப்படி எதிர்த்துக் கேள்வி கேட்டவுடன், அந்தக் கடையில் பணியாற்றியவர், “கிடைப்பதே ஓசி, இனாம் இதில் என்ன கேள்வி, கொடுப்பதை வாங்கிக் கொண்டு அமைதியாகச் செல்” என்று பதில் கூறி அனுப்பி விட்டார். உடனே பஞ்சாயத்துத் தலைவரிடம் அவர் சென்று நடந்ததைக் கூறி மன்றாடுகிறார்.
அந்த ஊர் பஞ்சாயத்துத் தலைவர் அதற்கு பதிலளித்தார். “அரசாங்கம் உங்களுக்கு விலை இல்லாமல்தானே தருகிறது, நீங்கள் ஏதோ பணம் கொடுத்து வாங்கியதுபோல் கூறுகிறீர்களே” என்று கூறி அவர் கண்டு கொள்ளவில்லை. உடனே அந்த ஊரில் மக்கள் பிரச்சினைக்காக போராடும் இளைஞர் ஒருவரிடம் எடுத்துச் சென்று பொது வினியோகக் கடையில் நடந்ததைக் கூறினார். அத்துடன் அவர் பஞ்சாயத்துத் தலைவரிடம் சென்று முறையிட்டதையும் அவர் கூறிய பதிலையும் கூறினார், அவர் கூறியதைக் கேட்ட இளைஞர் கொதித்துப் போய் உடனே அவருடன் வந்து அந்தப் பொது வினியோகக் கடைக்குச் சென்று விசாரித்தார். அந்தக் கடைக்குச் செல்லுமுன் ஒரு ஊடக நண்பருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு வரவழைத்தார். இவர் கடைக்குச் செல்லுமுன் அந்த ஊடக நண்பரும் ரேஷன் கடைக்கு வந்து விட்டார். அங்கு பொது வினியோகக் கடை ஊழியரிடம் ஏன் இரண்டு கிலோ குறைவாகப் போடுகிறீர்கள் என்று கூறி விவாதம் செய்தார். அந்த நிகழ்வை ஒரு தொலைக்காட்சி நேரலை செய்து கொண்டிருந்தது. அந்த நிகழ்வைப் பார்த்த மாவட்ட ஆட்சித் தலைவர் அடுத்த பத்து நிமிடத்தில் முடிவெடுத்து அந்த பொது வினியோகப் பணியாளர் வீட்டுக்கு அனுப்பப்பட்டார். இந்தச் செய்தியை அந்த இளைஞர் ஊடகங்களுக்குச் செய்தியாகத் தந்து வெளியிட வைத்தார். அந்த இளைஞர் அங்கு கூடியிருந்த பொதுமக்களிடம் என்ன கூறினார் என்றால் “உணவு உங்கள் உரிமை, அதைத்தான் அரசு பாதுகாக்க உணவு தானியத்தை விலையில்லாமல் தந்தது. அது ஒன்றும் தானம் அல்ல, பிச்சையும் அல்ல, அது நமது உரிமை, அந்த உரிமையை பாதுகாக்க ஒவ்வொருவரும் போராடியே ஆக வேண்டும்” என்று கூறினார்.
அந்த இளைஞருக்கு இருந்த பார்வை, அந்த கிராமப் பஞ்சாயத்துத் தலைவருக்கு இல்லை. அந்த இளைஞர் ஒரு பொறுப்பு மிக்க குடிமகனாகச் சிந்தித்து பாதிக்கப்பட்டவரை போராட வைத்து வெற்றியும் பெற்றார். அந்த பஞ்சாயத்துத் தலைவருக்கு புரியாத ஒன்று அந்த ஊர் இளைஞருக்கு புரிந்திருக்கிறது.
இன்னொரு ஊரில் தரமற்ற பொருள்களை பொது வினியோகக் கடையில் தந்துள்ளனர். அதனை பஞ்சாயத்துத் தலைவரிடம் வந்து பொதுமக்கள் கூறுகின்றனர். உடனே அவர் பல பொது வினியோக கடைகளுக்குச் சென்று ஆய்வு செய்து விட்டு அந்த ஒன்றியத்தில் உள்ள அனைத்து, பஞ்சாயத்துத் தலைவர்களையும் ஒன்றிணைத்து இந்தப் பிரச்சினைக்கு முடிவு கட்ட வேண்டும் என்று விவாதம் செய்கிறார். அந்தத் தலைவர்கள் அனைவருமே இவர் கூறிய விவாதத்தில் உள்ள நியாயத்தை உணர்ந்து இவருடன் செயல்பட தயாராகின்றனர். போராட்டத்தை அறிவிக்கின்றனர். சுவரொட்டிகள் அச்சிட்டு சுவர்களில் ஒட்டி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த செயல்பட்டனர். “எங்கள் பணத்தில் எங்களுக்கு ஏன் தரமற்ற பொருள்கள் ஏழைகளுக்குத் தரும் பொருள் என்றால் தாம் குறைந்ததைத் தான் தருவீர்களா? இது எங்கள் பணம், அதிலிருந்து எங்களுக்குக் கிடைக்கும் பொருள்கள் எங்களின் உரிமை என்று எங்கு பார்த்தாலும் சுவரொட்டி ஒட்டப்பட்டு, போராட்டத் தேதியும் அறிவிக்கப்பட்டு விட்டன. மாவட்ட ஆட்சித் தலைவர் போராட்டம் நடைபெறுவதற்கு முதல் நாள் அந்த ஊருக்குச் சென்று பஞ்சாயத்துத் தலைவர்களுடன் பொது வினியோகக் கடைகளை பார்வையிட்டு, அங்கு இருந்த தரமற்ற பொருட்களை திருப்பி அனுப்ப உத்தரவிட்டு தரமான பொருள்களை வினியோகிக்கச் செய்தார்.
இந்த இரண்டு நிகழ்வுகளும் கூறும் செய்தி ஒன்றுதான். விழிப்புணர்வுடன், பொறுப்புடன் புரிதலுடன் நம் மக்களும், மக்கள் பிரதிநிதிகளும் செயல்பட்டால் அரசு மக்கள் கூறுவதைக் கேட்கும். அத்துடன் மக்களுக்குக் கடமைப்பட்டதாக செயல்படும் இல்லையேல் மக்களை மேய்க்கும். எனவே நாம் முதலில் பொறுப்பு மிக்கவராக, புரிதல் உள்ளவராக, ஆற்றல் பெருக்கப்பட்டவராக மாற்றங்களை உள்வாங்கக் கூடியவராக செயல்பட்டால், நம்மைச் சுற்றியுள்ளவர்கள் மாறுவார்கள். அதற்கு நம் பஞ்சாயத்துத் தலைவர்களை தயார்படுத்திக் கொண்டு மக்களை தயார் செய்து பெரும் மாற்றத்தை மக்களின் சிந்தனைப் போக்கில் கொண்டுவர வேண்டும்.
நம்மை இன்று சாதியத்தின் வாயிலாக, மதரீதியாக, அரசியல் ரீதியாக பிரித்து வைத்துக் கொண்டு அரசியல் நடத்துவதால் நாம் சுரண்டப்படுகின்றோம். நம் மக்கள் தாங்கள் சுரண்டப்படுகிறோம் என்பது அறியாமலேயே வாழ்வதுதான் நாம் 75 வருடமாகப் பார்த்த பெரும் சோகம். கிராம சமுதாயம் எந்த அடிப்படையில் பிரிந்தாலும் சுரண்டப்படப் போவது கிராம மக்கள் தான் கிராமம் மேம்பட கிராமத்தில் சமூகத்தில் ஒற்றுமை நிலவ வேண்டும். அந்தப் புரிதலை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும். அந்தப் புரிதலுடன் கிராம சமுதாயம் செயல்பட ஆரம்பித்தால் அரசு அந்தக் கிராமத்திற்குப் பணி செய்யும். இதை நாம் நம் கண் முன்னே பல கிராமங்களில் பார்த்து வருகின்றோம். எனவே இந்தப் புரிதலை ஏற்படுத்துவதுதான் அதிகாரப் படுத்துதலாகும். மக்களாட்சி நடைபெறும் நாட்டின் மக்களின் விழிப்புடன் கூடிய செயல்பாடுகள்தான் மக்களைக் காக்கும். அந்தப் புரிதலை மக்களிடம் ஏற்படுத்துவதைத்தான் அதிகாரப்படுத்துதல் என்று கூறுகின்றோம். இந்தப் புரிதலுடன் நம் மக்கள் பிரதிநிதிகள் உள்ளாட்சியில் செயல்பட வேண்டும். அதுதான் இன்றைய தேவை.
- க.பழனித்துரை