அதிபதி என்று என் துணைவரால் அறிமுகப் படுத்தப்பட்ட நண்பர் கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி அவர்கள். அவர் ஒரு சிறந்த படைப்பாளி. அவரது படைப்புகள் சமூகத்தின் மீது அவருக்கு இருக்கும் எதிர்பார்ப்பையும், ஏமாற்றத்தையும் சுமந்திருக் கின்றன. தனிமனித உணர்வுகளை விட சமூகத்தின் மீதான அவரது உணர்வுகளே பெருமளவு அவர் படைப்புகளில் தடம் பதித்திருக்கின்றன.

நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் வெளி யீடாக வந்துள்ள துணங்கைக் கூத்து என்னும் சிறுகதைத் தொகுப்பின் தலைப்பே அவருடைய இலக்கிய வாசிப்பிற்குச் சான்று. இவரது கதை களில் நடமாடும் பாத்திரங்கள் நாம் தினசரி வாழ்வில் தினம் காணும் மனிதர்களே. இக் கதைகளில் புதிய வகையான உத்திகளை உருவாக்குவதில் ஆசிரியர் முனைந்துள்ளார். சங்க காலம் தொட்டு அறிவியல் காலம் வரை ஒவ்வொரு வரலாற்றிலும் மனம் பாதித் துள்ள சூழலைக் கதைக்களமாகக் கொண்டுள்ளார். இலக்கியங்களில் ஆசிரியருக்கு உள்ள ஆர்வம் வியப்பைத் தருவதாக உள்ளது. கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் இணைத்துத் தனது கதைகளுக்குச் சுவையூட்டுவதில் வெற்றி பெற்றுள்ளார் எனலாம்.

இவரது கதைகளின் கரு, வாழ்வியல் எதார்த்தத்தை விதைத்துச் செல்கின்றன. சொந்த நாட்டில் முதலாளியாக வாழும் வாழ்வை விடுத்து வெளிநாட்டில் அடிமையாக வாழும் வாழ்வை ஏற்றுக்கொள்ளும் இன்றைய இளைஞர்களின் வாழ்வைப் படம் பிடித்துக் காட்டுகிறார். இலக்க எண்களில் வரும் சம்பளத்திற்கு ஆசைப்பட்டு அயல் நாட்டில் அனாதையாக வாழ்ந்து வரும் அவர்கள் இழப்பது எவற்றை என்று சிந்திக்க வைத்திருக் கிறார் (நவீன கொத்தடிமைகள்).

இளைஞர்களின் உழைப்பினை, அறிவுத் திறனை அயல்நாட்டு வர்த்தகங்கள் உறிஞ்சும் தன்மையையும், சுகபோக வாழ்வு கிடைக்கும் என்ற ஆசையில் அவர்கள் அடிமைப்பட்டிருக்கும் பரிதாப நிலையினையும் தன் கதைகளில் சித்திரித்துள்ளார். அரசியல், மதம், அயல்நாட்டு வர்த்தகம் அனைத்தும் இளைய சமு தாயத்தை அடிமைப்படுத்தும் நோக்கில் செயல் படுவதனைத் தன் எழுத்துகளில் விதைத்துச் செல் கிறார் (புடைத்துண்ணும் சதுக்கபூதம்).

இலங்கைத் தமிழர் சிக்கலைக் கருவாகக் கொண்டு அவர்களின் இடர்ப்பாடுகளையும் படம் பிடித்துக் காட்டியுள்ளார். அவர்களது இடர்களைக் களைய அரசியலார் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் ஆதாயம் தேடும் நிலையையும் தோலுரித்துக் காட்டு கிறார். சூலியும், நீலியும் பேசுகின்ற வார்த்தைகள் நெஞ்சைச் சுடுவது என்னவோ உண்மை (வார்த்தை களுடன் ஒரு யுத்தம், துணங்கைக் கூத்து).

இயற்கை வழிபாட்டினையும், இறை வழிபாட்டி னையும் செய்து வந்த நம்மவர்களுக்கு யாகங்களை அறிமுகப்படுத்தியவர்கள் ஆரியர்கள். மக்களின் நன்மைக்காக அல்ல; அவர்களின் வளமான வாழ் விற்காக. எந்தக் காலமாக இருந்தாலும் பெண்கள் ஏற்றுக்கொள்ள விரும்பாத பெயர் மலடி என்பதே. அந்தப் பெயரில் இருந்து அவர்களைக் காப்பதற்காகப் புத்திர காமேட்டி யாகம் என்ற பெயரில் அவர்கள் அறியாமல் அவர்களது கற்பினைப் பலி கொடுக்கும் நிலை இன்றும் காணப்படுவதனைப் பதிவு செய் திருக்கிறார் (காமேட்டி).

வழிபாடு செய்வது நம் முன்னோர்களை என்றாலும் அந்த வழிபாட்டினைச் செய்வதற்கும் நாம் ஐயர்களையே எதிர்பார்த்திருக்கிறோம் என்ற நிதர்சனத்தைப் புரிய வைக்க முயற்சி செய்துள்ளார். மார்பினைச் சேலையால் மறைக்க நமக்கு முந்தைய தலைமுறைப் பெண்கள் பட்ட துன்பங்களைத் தன் எழுத்துக்களில் வடித்துள்ளார். இலக்கியமும் உயர் குலப் பெண்களைப் பதிவு செய்துள்ள அளவு மற்ற பெண்களைப் பதிவு செய்யவில்லை என்ற வருத்தத் தினையும் இழையோடச் செய்துள்ளார் (குளத்தப்பன் கதை).

இன்றைய கல்விமுறை பணம் சேர்க்கும் எந்திரங் களை உருவாக்கியுள்ளதே தவிர, மிகுதியான பணம் இருக்கும்போது எதிர்காலத்தைத் திட்டமிடாமல் பகற்கனவுகளில் வாழ்ந்து வரும் இன்றைய இளைஞர் களையும், துன்பம் என்று வரும்போது எதிர்காலத்தைச் சந்திக்க அஞ்சும் அவர்களது மனப் போக்கினையும் படைத்துக் காட்டியுள்ளார் (சம்பாத்தியம்).

இன்றைய ஜனநாயகத்தில் குடிமகன்களைக் ‘குடிமகன்களாகவே’ வைத்திருக்க அரசு எடுக்கும் முயற்சியையும் தன் கதைகளில் வெளிக்காட்டியுள்ளார். பள்ளிக் கூடங்களை அதிகரிக்க வேண்டிய அரசு டாஸ்மாக் கடைகளை ஊர்தோறும் திறந்திருப்பதால் நடுத்தர மக்கள் வாழ்வில் நேரிடும் சிக்கல்களைச் சித்திரித்துள்ளார் (சாவித்திரிகள்).

ஓட்டுரிமை என்பது இந்தியக் குடிமகன் ஒவ் வொருவரது அடிப்படை உரிமை. ஆனால் மக்கள் அதை உணர்ந்துகொள்ளாமல் தேர்தல் நேரத்தில் யார் அதிகம் பணம் கொடுக்கின்றார்களோ அவர் களுக்குத் தம்மை விற்றுவிடுகின்றனர். சில மணி நேர உணர்வுகளில் தம் உரிமையை இழந்து நிற் கின்றனர் என்பதனைப் பதிவு செய்துள்ளார் (நிழல் தொலைத்தவர்கள்).

ஆளும் வர்க்கம், அதிகார வர்க்கம் இவற்றிற்கு அடிபணிந்து வாழாதவர்கள் வாழ்வினையும் பின்னிச் செல்கிறார். ஆளும் வர்க்கத்திற்கு எதிராகக் குரல் கொடுப்பவர்கள் எல்லாக் காலத்திலும் துன்பத் திற்கு உள்ளாவதனை எடுத்துச் சொல்கிறார் (கழு வேற்றம்).

மனிதன் அறிவியலை ஆக்கபூர்வமான செயல் களுக்குப் பயன்படுத்துவதாகக் கூறிக் கொண்டாலும் அவை எதிர்காலத்தில் அழிவை நோக்கியே பயணம் செய்கின்றன. தன்னுடைய வாழ்வு வசதிகளைப் பெருக்கிக் கொள்ள மனிதன் தனது அறிவைப் பயன்படுத்தினாலும் சக மனிதனின் உழைப்பிற் கேற்ற ஊதியத்தைக் கூடத் தருவதற்கு அவன் தயாராக இல்லை என்ற உண்மையை வெளிக்காட்டியுள்ளார். (இயந்திர இதயம்).

கோடிக்கணக்கில் பணம் வைத்திருப்பவர்களின் கனவு ஏழு தலைமுறைக்கும் சொத்து சேர்த்து வைப் பதில் நிலைத்திருக்க ஏழைகளின் கனவு அடிப்படை வசதிகளுக்காக ஏங்குவதனை வெளிப்படுத்தியுள்ளார். ஒரு புதிய வகை உத்தியினையும் தன் கதைகளில் பயன்படுத்தியுள்ளார் (கனவுகளின் கனவு).

கடவுள் இல்லை என்ற ஆசிரியரது நம்பிக் கையும் ஒரு கதையினை நகர்த்திச் செல்கிறது. அப்படிக் கடவுள் என்று ஒருவர் இருந்தாலும் காலம் காலமாக மாற்றப்பட்டு வரும் வழிபாட்டு முறைகளில் அர்ச்சனைச் சொற்கள் அவருக்கே மறந்துவிடும் என்று அங்கதச் சுவையுடன் கதையை நகர்த்திச் செல்கிறார். இன்று தமிழை வளர்ப் பதாகக் கூறிக் கொண்டு அதன் அமைப்பினைச் சிதைத்து வரும் நிலையினையும் எடுத்துக் காட்டி யுள்ளார் (தமிழைத் தேடி வந்த கடவுள்).

கல்லூரியில் பணிபுரியும் தமிழ்ப் பேராசிரி யர்கள் தமிழால் வாழ்ந்துகொண்டு தமிழை வளர்க்க எந்த முயற்சியும் எடுக்காமல் தாங்கள் மட்டும் வளமாக வாழ்கிறார்கள் என்ற இவரது ஆதங்கத்தையும் இவர் எழுத்துகளில் காண முடி கிறது. அவர்கள் தாங்கள் எதுவும் செய்யாமல் இருப்ப தோடு அல்லாமல், ஏதேனும் முயற்சி செய்து வரும் இலக்கிய வட்டத்தைச் சார்ந்தவர்களைப் புண் படுத்திப் பேசும் தன்மையையும் பதிவு செய்துள்ளார் (இராஜ வாழ்க்கை).

இவை மட்டுமல்லாது இயற்கைக்கும் மனி தனுக்கும் இடையிலான போராட்டம் (மேற்கில் உதயம்) பொருளுக்குக் கொடுக்கும் மதிப்பினை உறவுகளுக்குக் கொடுக்க மறுக்கும் மனநிலை (வலியின் ஒலி) மனைவியைப் பிரிந்து முதிய வயதில் வாடும் வயோதிகர் ஏக்கம் (அவள் அற்ற உலகம்), சொல்லாலும் செயலாலும் யாரையும் காயப்படுத்தக் கூடாது என்ற ஆசிரியரின் எண்ணம் (அவள்) நமக்காக உழைக்கும் மனிதர்களைவிட அவர்கள் கொடுக்கும் பணத்திற்காக நிறைவடையும் மனம் (பூ மணம்), உணவு முறையால் இளவயதி லேயே உடல்நலனைக் கெடுத்துக் கொள்ளும் நிலை (தொல் யாசகன்) என்று தனிமனித உணர்வுகள் ஒவ்வொன்றையும் தன் படைப்புகளில் பதிவு செய்துள்ளார்.

இந்தச் சிறுகதைத் தொகுப்பினைப் படித்து முடிக்கும் போது இலக்கிய வானிலும், சமுதாய வானிலும் பறந்து திரிந்த பிரமிப்பு ஏற்படுவது உறுதி. ஆசிரியரின் கதைகள் மழையின் துளிகள் தான் என்பதிலும் ஐயமில்லை.

துணங்கைக் கூத்து

கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி

வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,

41-B, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,

அம்பத்தூர், சென்னை - 600 098

விலை : ரூ.90/-

Pin It