ஹான்ஸ் ராபர்ட் ஜாஸ், 21, டிசம்பர், 1921 அன்று ஜெர்மனியில் வுர்ட்டம் பெர்க் அருகில் கோப்பிங்கென் பகுதியில் பிறந்தார். நீண்ட காலமாக ஆசிரியத் தொழிலில் ஈடுபட்டு வந்த குடும்பத்தில் பிறந்த ஜாஸ் இரண்டாம் உலகப் போரில் ரஷ்ய முன்னணியில் படைவீரராகப் பணிபுரிந்தார். நவம்பர் 1948-இல் ஹெய்டல் பெர்க்கில் போருக்குப் பிந்திய சிறைவாசத்தை முடித்த 27 வயது இளைஞரான ஜாஸ் புதுப்புனைவு மொழியியல், மெய்யியல், ஜெர்மானியரின் வரலாறும் பண்பாடும் ஆகியவற்றைக் கற்கத் துவங்கி நன்கு தேர்ச்சி பெற்றார். 1952-இல் ஹெய்டல்பெர்க் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற ஹான்ஸ் ராபர்ட் ஜாஸ், 1959-இல் மூன்ஸ்டர் பல்கலைக்கழகத்தில் இணைப் பேராசிரியராகப் பணியேற்றார். பின்னர் 1961-இல் கீபென் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பொறுப்பேற்ற ஜாஸ் அங்கே புதுப் புனைவிலக்கியத் துறையைச் சீரமைத்தார்.

1959ஆம் ஆண்டுக்கும் 1962ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் எரிக் கோஹ்லருடன் இணைந்து “Outline of Romance Literatures of the Middle Ages” என்ற தலைப்பில் நூல்வரிசை ஒன்றை வெளியிட்டார். மேலும் “Aesthetic Experience and Literary Hermenectics”, “Toward an Aexthetic of Reception,”, “Art Criticism – The Role of the Critic” உள்ளிட்ட பல நூல்களை எழுதி, இலக்கிய உலகுக்குப் படைத்தவர் ஹான்ஸ் ராபர்ட் ஜாஸ். உலகப் புகழ்பெற்ற ‘தி கான்ஸ்டன்ஸ் ஸ்கூல்’ என்ற ஆராய்ச்சி அமைப்பை நிறுவியவர்களுள் பேராசிரியர் ஜாஸும் ஒருவர். அங்கே இலக்கிய ஆய்வுகளைப் புதிய அணுகுமுறையில் கையாளுவது எப்படி என்று எடுத்துரைக்கும் நோக்கில் “Literary History as a Challenge to Literary Theory” என்ற தலைப்பில் உரையாற்றினார் (இதன் மொழி பெயர்ப்பே இக்கட்டுரை.) இக்கட்டுரை உயிர்ப்புடனும், வரன்முறையுடனும் இலக்கிய ஆய்வுகளை அணுகுவதற்கான முறையியலை அளிக்கிறது. இலக்கிய வரலாறு எழுதுமுறை (Literary Historiography) பற்றிய தெளிவை ஏற்படுத்துகிறது.

நம் காலத்தில், இலக்கிய வரலாறு கடும் வீழ்ச்சியை அடைந்துள்ளது. அந்த வீழ்ச்சிக்குக் காரணம் இல்லாமல் இல்லை. கடந்த நூறு, நூற்றைம்பது ஆண்டுக்கால வரலாற்றின் இந்த மோசமான செல்நெறி , ஒரு வலுவான அழிவிற்கான பாதையைத் தெளிவாக விவரிக்கிறது. அதன் சிறந்த சாதனைகளெல்லாம் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சார்ந்தவையே. ஜெர்வினஸ் மற்றும் ஸ்கீரெர் காலத்திலும், டி சான்க்டிஸ் மற்றும் லான்ஸன் காலத்திலும் ஒரு தேசிய இலக்கியத்தின் வரலாற்றை எழுதுவது என்பது மொழி யியலாளரின் தலைசிறந்த பணியாகும். இலக்கியச் செல்நெறி பற்றிய முதுநிலை ஆய்வாளர்கள் அதனை தேசிய தனிப்பண்புக் கருத்துநிலையின் போக்கிலேயே இலக்கிய வரலாற்று நூல்களில் பதிவு செய்வதைத் தங்கள் குறிக்கோளாகக் கொண்டனர். இந்த உச்சநிலையானது இன்று நினைவுக்குப் புலப்படாத ஒன்றாகவே இருக்கிறது.

இதுவரை கிடைக்கப்பெற்றுள்ள இலக்கிய வரலாற்றின் எழுதுமுறை, நம் காலத்திய அறிவுசார் வாழ்வில், தன்னைக் கட்டுப்படுத்தும் தளைகளை அறுந்தெறிந்து தனக்கென ஒரு வாழ்வைத் தேடிக் கொள்வது என்பது அரிதாகவே உள்ளது. அது, தயார்நிலையில் உள்ள அரசுப் போட்டித் தேர்வுத் தேவைகளுக்கேற்ப தகவமைத்துக் கொள்ளப் படுகிறது. மேல்நிலைப் பள்ளிக் கல்விப் பாடத்திட்டத்தில் இலக்கிய வரலாறு என்பது கட்டாயப் பாடம் என்பது ஜெர்மனியில் கிட்டத்தட்ட மறைந்தே போய்விட்டது. இலக்கிய வரலாறுகள் வேறு எங்கேதான் இருக்கின்றன என்றால், படித்த மேட்டுக்குடியின் புத்தக அலமாரிகளில் தான் நிறைந்துள்ளன. அவர்களும், இலக்கியப் புதிர்க் கேள்விகளுக்குப் பதில் அளிக்க இலக்கிய அகராதியாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

பல்கலைக்கழகப் பாடத்திட்டங்களில் இலக்கிய வரலாறு முற்றிலுமாக மறைந்தே விட்டது. மேலும் , என் தலைமுறையைச் சேர்ந்த மொழியியலாளர்கள் காலம் காலமாக நீடித்து வரும் தங்கள் தேச இலக்கியத்தின் மரபுவழி அணுகுமுறையாக விலக்கி, அவ்விடத்தில் வரலாற்றின் மீதான சிக்கலான விளக்கவுரைகளை அல்லது, அதற்கேற்ற அணுகுமுறைகளைப் பதிவு செய்வதிலேயே பெருமிதம் கொள்கின்றனர் என்பதில் எந்த ஒளிவு மறைவும் இல்லை.

சிறு கையேடுகள், கலைக்களஞ்சியங்கள் வடிவில் கருத்துத் திரட்டல், சேகரிக்கப்பட்ட விளக்கங்களின் தொகுப்பு ஆகியவை, இலக்கிய வரலாற்றைக் காத்திர மற்றதாக ஊகக் கற்பனைக்குரியதாகத் தரம் தாழ்த்துகின்றன. இன்றைய புலமைநிலை இப்படியொரு நிலைமையையே புலப்படுத்துகிறது. அதிலும் மிக முக்கியமாக, இதைப் போன்ற போலி வரலாற்றுத் தொகுப்புகள் பெரும்பாலும் தகுதியுடைய ஆய்வாளர்களின் முனைவினால் உருவெடுப்ப தில்லை; அவற்றில் பெரும்பாலானவை இயந்திரத்தனமாக இயங்கிக் கொண்டிருக்கும் வெளியிட்டாளரிடமிருந்தே புறப்படுகின்றன. இன்னொரு புறம், காத்திரமான, கருத்தாழமிக்க ஆய்வுப் பணி, புலமைசார்ந்த இதழ்களில் கட்டுரையாக இடம்பிடிக்க, விரைந்தோடிக் கொண்டிருக் கின்றது. அதன் மூலம் மொழியின் தகுநடை, சொல்லாட்சி, பணுவல்சார் மொழியியல், சொற்பொருள் ஆய்வியல், கவிதையியல், சொல்லியல், வரலாற்று மொழியியல், கலைப்பண்புக்கூறு இலக்கிய மற்றும் நடை வரலாறு ஆகிய ஆய்வுமுறைகளின் கட்டுப்பாடான தரநிலையைப் பெற்றுக்கொள்கிறது.

இன்றைய மொழியியல் புலமை சார்ந்த இதழ்கள் இலக்கிய வரலாற்றுச் செல்நெறியைத் தம் வசம் கொண்டுள்ள கட்டுரைகளையே வெளியிடுகின்றன. அதனால், அக்கட்டுரை ஆசிரியர்கள், இரட்டிப்பு விமர்சனத்தைச் சந்திக்க வேண்டியுள்ளது. ஆய்வுக்குரிய பொருளை அவர்கள் முறைப்படுத்தும் வகையானது செல் நெறியைப் பற்றிய கருதுகோள் என்றுதான் பொதுவாகவோ, தனிப்பட்ட அளவிலோ மதிப்பீடு செய்யப்படுகின்றன. அவற்றின் முடிவுகள் வெறும் பழம்பொருள் சார்ந்த அறிவு என்று புறக்கணிக்கப்படுகின்றன. இலக்கியச் செல் நெறியைப் பற்றிய விமர்சனம் ஆய்வுப் பொருளை மிகத் தெளிவாகப் பார்ப்பது என்பது அரிதாகவே நிகழ்கிறது. செவ்விலக்கிய வரலாறு மட்டுமே நிகரற்ற வரலாறாக காட்டிக் கொள்வதாக அமைகிறது. ஆனால் இது உண்மையில் வரலாற்றியல் பார்வைக்கு வெளியேதான் இயங்குகிறது. அதன்மூலம் புறநிலையாக இலக்கியத்தால் வலியுறுத்தப்படும் அழகுணர்ச்சி அறிகையின் வளர்ச்சி பற்றிக் குற்றம் காணுகிறது.

முதலில் இந்த விமர்சனம் பற்றித் தெளிவுபடுத்தப்பட வேண்டும். பெரும்பாலான இலக்கிய வரலாறு பொதுப் படையான போக்குகள்,இலக்கிய நடை, இன்னும் விவரிக்கப்பட வேண்டிய அவசியமான கால வரிசைப்படி தனிப்பட்ட படைப்புகள் ஆகியவற்றை விவரிக்கும், வெறுமனே பட்டியலிட்டுத் தொகுக்கும் இரண்டக நிலையிலிருந்து தப்பிக்க முயற்சி செய்கின்றன. விளக்கக் குறிப்பு என்ற பெயரில் எழுத்தாளரின் வாழ்க்கை வரலாறு, கட்டுரையின் தரம், மதிப்பீடு ஆகியவை தேவையற்ற இடங்களில், மிகவும் கவர்ச்சியாக இடம் பெறுகின்றன. அல்லது, இந்த இலக்கிய வரலாறு சிறந்த எழுத்தாளர்களின் வரிசை அடிப்படையில், அவர்களின் வாழ்க்கை வரலாற்று நூலின் சுருக்கமாக அமைகின்றது; சாதாரண, புகழ்பெறாத எழுத்தாளர்கள் இங்கே இரண்டாம் நிலைக்குத் தள்ளப் படுகிறார்கள் (அவர்கள் சிறு இடைவெளியில் நிலை பெற்று விடுகிறார்கள்). அதன்மூலம் இலக்கிய பாணியின் வளர்ச்சி தவிர்க்க இயலாத நிலையில் ஒதுக்கப்பட வேண்டும்.

இலக்கிய வரலாற்று எழுத்துகளில் இரண்டாவது வகை என்பது செவ்விலக்கியப் படைப்பாளர்களின் ஏடுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக இருக்கிறது; முதல் வகை ஆய்வுக்குரிய படைப்பாளர்கள் மற்றும் படைப்புகளைக் கொண்ட பட்டியலாகிறது. தெரிவுப் பட்டியலில் இடம்பிடிக்க நவீன இலக்கியங்கள் சிரமத்துடன் போராடும் நிலைமை அடிக்கடி காணப் படுகிறது. அதனால், ஏற்கெனவே வரையறுக்கப்பட்ட, ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு முறையைப் பின்பற்றி, எழுத்தாளர்களின் வாழ்க்கையையும் படைப்பையும் ஒன்றன் பின் ஒன்றாக காலவரிசைப்படி தொகுக்கப் படுகிறது. இலக்கிய விவரித்தல் என்பது ஜெர்வினஸ் ஏற்கெனவே குறிப்பிட்டபடி, “வரலாறு அல்ல; ஒரு வரலாற்றின் அறிமுகமாகும்”. இதே கூற்றின்படி எந்த வரலாற்றாய்வாளரும், கவிதை, நாடகம், புதினம் ஆகியவற்றின் வளர்ச்சி வடிவங்களில் சார்ந்த தனித்த விதிமுறைகளை - படைப்புக்குப் படைப்பு சில மாற்றங் களைப் பதிவு செய்த நிலையில் - பின்பற்றிய பாணியின் மூலமும் அந்தந்தக் காலத்தில் அரசியல் நிலவரப்படியான பொதுவான ஒரு கூர்நோக்குடன் (பெரும்பாலும் வரலாற்று ஆய்வுகளிலிருந்து எடுத்துக்கொள்ளப்பட்டவை) கண்டறிந்த இலக்கிய வளர்ச்சியின் கூறை வரைமுறைப் படுத்துவதன் மூலமும் வெறுமனே இலக்கியப் படைப்பை வரலாற்றுக்குரிய சான்றாக மட்டும் பார்க்கமாட்டார்.

இன்னொரு வகையில், இது அபூர்வமானது. ஓர் இலக்கிய வரலாற்றாய்வாளர் முற்காலத்தைச் சேர்ந்த இலக்கிய நூல்களைப் பற்றிய ஒரு கருத்தினைக் கொண்டிருக்க வேண்டும் என்பது ஏறத்தாழ தடுக்கப்பட்ட நிலையிலேயே இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், அவர் ‘இலக்கியம் உண்மையில் எவ்வாறு இருந்தது’ என்று விவரிக்க வேண்டிய வரலாற்று எழுத்தாண்மையின் நடுநிலைச் சீர்மையை நோக்கிச் செயலாற்றுவதற்கே முக்கியத்துவம் கொடுக்கிறார். அவருடைய அழகியல் தவிர்ப்புக்கு நல்ல நிலைக்கலன்கaள் உண்டு. ஆக, ஓர் இலக்கிய ஆக்கத்தின் தரமும், மேன்மையும், அதன் தோற்று வாயின் ‘வரலாற்று நிலைமையின்’ அல்லது ‘வரலாற்றின்’ நிபந்தனைகளின் அடிப்படையிலோ அல்லது ஓர் இலக்கிய பாணியின் வளர்ச்சியின் தொடர் நிலையில் அது பெற்றிருக்கும் இடத்தின் அடிப்படையிலோ மதிப்பிடப் படுவதில்லை. மாறாக, அது ஏற்படுத்தியுள்ள தாக்கம், பெற்றுள்ள வரவேற்பு, படைப்பாளரின் இறப்புக்குப் பிறகு அது பெற்றிருக்கும் புகழ் ஆகியவை சார்ந்த அறிவார்ந்த திட்டமான ஒப்பளவுகள் மூலமே மதிப்பிடப்படுகிறது. மேலும், ஒரு வரலாற்றாய்வாளர் நடுநிலைச் சீர்மைக்குக் கட்டுப்பட்ட நிலையில் தன்னுடைய சொந்த இலக்கிய விமர்சனப் பணியை, நம்பகமான திறனாய்வாளர்களுக்கு (இன்னும் காலம் முடிவுறாத நிலையில்) விட்டுவிட்டு, சிறந்த படைப்பேடுகளைப் பாதுகாப்பதற்கு, தன்னை வரை யறைப்படுத்திக் கொண்டு இலக்கியத்தில் ஏற்பட்டுள்ள அண்மைக்கால வளர்ச்சிக்கு ஓரிரு தலைமுறைக்குத் தொலைவிலேயே பின்தங்கி இருக்கிறார்.

அவர் இறுதியாக, நிகழ்கால இலக்கிய விமர்சனத்தில் பங்கெடுத்துக் கொள்கிறார். அதில், ‘இது இலக்கியச் செறிவு கொண்டது அல்ல’ என்று ஆரவாரமின்றிப் புறக்கணிக்கத்தக்க ஒரு புலமை சார்ந்து செல்கிற அளவுக்குத் தன்னுடைய அறிவுக் குறைவை வெளிப்படுத்தி விடுகிறார். பிறகு, இலக்கிய வரலாற்று ஆய்வு என்னவாக இருக்க வேண்டும்? ஃப்ரெட்ரிக் ஸ்கில்லரின் வரலாற்று ஆர்வத்தின் அடிப் படையிலான ஒரு செவ்விலக்கிய வரையறுப்பை எதிர்த்து சிந்திக்கக்கூடிய கூர்நோக்கர்களுக்கு மிகமிகக் குறைவான அறிவூட்டலைக்கூட அளிக்காது, உலகின் சுறுசுறுப்பான மனிதன் பின்பற்றக்கூடிய ஒரு மாதிரியை வழங்காது, ஆய்வாளருக்கு முக்கியமான தகவல் அளிக்காது, வாசகருக்கு உன்னதமான மகிழ்ச்சிக்கு ஆதாரமாக இருக்குமென வாக்குறுதி அளிக்க முடியுமா?

இலக்கிய வரலாற்றின் ஒரு புதிய தொடக்கம் வரலாற்றுப் புறநிலைவாதம் பற்றியும், படைப்பின் மரபு வழி ரசனைக்கான களன் அமைத்தல் பற்றியும், வரவேற் பையும் செல்வாக்கையும் கொண்ட ஓர் அழகு வாய்ந்த படைப்பு பற்றியும் முன்கூட்டிய தற்சார்பு நிலையை நீக்க வலியுறுத்துகிறது. இலக்கிய வரலாறு என்பது நிர்மாணிக்கப் பட்டுள்ள இலக்கிய நிகழ்வுகளின் தொகுப்பில் இல்லை; மாறாக, இலக்கியப் படைப்பின் மீது அதன் வாசகர்களால் ஏற்படுத்தப்படும் முன்னோக்கிய அனுபவத்திலேயே இருப்பு கொள்கிறது.

வரலாற்றில் நடுநிலைக் கருத்துநிலை திறனாய்வைச் சார்ந்துள்ள ஆர்.ஜி.காலிங்வுட்-டின் ஆராய்ச்சி அடிப்படை நிலையானது - “வரலாறு என்பது வரலாற்றியலாளரின் மனதில் உள்ள பழைய சிந்தனையைப் புதுப்பித்தலே தவிர வேறொன்றுமில்லை” என்பது இலக்கிய வரலாற்றுக்குத் தகுதி வாய்ந்த ஒன்றாகும். மொத்தத்தில், தனித்ததொரு கடந்த காலத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளின் பட்டியல் ஒன்றினைப் பற்றிய புறநிலை விவரணம் என்ற அளவில் வரலாற்றின் நேர்காட்சிவாத நோக்கு கலைப்பண்பையும் இலக்கியத்தின் குறிப்பிட்ட வரலாற்றுத் தன்மையையும் அலட்சியப்படுத்துகிறது. ஓர் இலக்கியப் படைப்பு தன்னைத் தானே சார்ந்து நிற்கும் ஒரு பொருளோ, அந்தப் பார்வையை ஒவ்வொரு காலகட்டத்தைச் சேர்ந்த ஒவ்வொரு வாசகருக்கும் கொடுக்கக்கூடிய பொருளோ அல்ல. அது தன்னுடைய காலவரையறையற்ற ஆதாரத்தைத் தானாகவே வெளிக்காட்டுகின்ற ஒரு சிறப்புக்கூறு அல்ல. அது தன்னுடைய வாசகர்களிடையே புது அறிகைகளை எப்போதும் இசைக்கச் செய்கிற, சொற்களின் இயல்பு நிலையிலிருந்து வரிகளை விலக்கி, அதை இன்றைய இருப்பு நிலைக்குக் கொண்டு வருகிற பாடல் உருவாக்கமாக இருக்கிறது. அதாவது, “வார்த்தைகள்; அவரிடம் அவை பேசுகிற அதே வேளையில், அவற்றைப் புரிந்துகொள்ளும் தகுதி வாய்ந்த உரையாளரை உருவாக்க வேண்டும்”. இலக்கியப் படைப்போடு உரையாடுகின்ற நபர், மொழியியல் புரிதல் வரிகளுடன் தொடர்ச்சியான ஒரு முரணிலையிலேயே மட்டும் ஏன் இருக்க முடிகிறது என்பதும், மெய்மையறிவு நிலைக்கு ஏன் அனுமதிக்கப் படாமல் இருக்கிறார் என்பதும் முன்னுக்கு வருகிறது. புற நிலை பற்றிய அறிகை, அதன் மீதான பிரதிபலிப்பு மற்றும் இந்த அறிவு நிறைவுநிலை புதிய புரிதலின் சிறப்பாக விளக்குதல் ஆகியவற்றை அறிந்துகொள்வதுடன், தன் னுடைய குறிக்கோளை எடுத்துரைக்கிற விளக்கத்துடன், மொழியியல் புரிதல் எப்போதும் இசைவாக உள்ளது.

இலக்கியத்தின் வரலாறானது, வரவேற்கிற வாசகர், பிரதிபலித்துக் காட்டுகிற திறனாய்வாளர், தொடர்ந்த படைப்புப் பிரதி, அதன் படைப்பாளர் ஆகியோரின் சார்பில் இலக்கிய வரிகளை உணரும் செயலில் நிகழும், ரசனை மிகுந்த வரவேற்பையும் ஆக்கத்தையும் பெறுகிற உருவாக்கம் ஆகும். முடிவின்றி வளர்ந்துவரும் பழம் இலக்கிய வரலாறுகளைச் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கும் இலக்கிய ‘நிகழ்வுகளின்’ தொகுப்பு இந்த உருவாக்கத் திலிருந்து புறந்தள்ளப்படுகிறது. அது தேர்வு செய்யப் பட்டவையும், தொகுக்கப்பட்டவையுமான பழைய நிகழ்வுகள் மட்டுமே; எனவே அது வரலாறே அல்ல; பொய்யான, புனைவுநிலை வரலாறு ஆகும். இத்தகைய இலக்கிய நிகழ்வுகளின் தொடர்ச்சியை, இலக்கிய வரலாறு என்று கருதுபவர் வரலாற்று வாய்மை நிலையுடனான ஒரு கலைப் படைப்பின் நிறைவான சிறப்புத் தன்மையை முற்றிலும் குழப்புகிறார். கிரீடியன் டி ட்ராயிஸ் (Chretien de Troyes) ஓர் இலக்கிய நிகழ்வாக எழுதிய பெர்ஸீவல் (Perceval) அந்த நேரத்தில் நடந்துகொண்டிருந்த தர்ட் க்ரூஸேட் (Third Crusade) போன்ற ஒரு வரலாற்று நிகழ்வே அல்ல. அது, தொழில்நிலையிலான முன் நிபந்தனை, நோக்கம் ஆகிய தொகுப்புகளால், மறுநிர்மாணம் செய்யப்படக்கூடிய அளவிலான ஒரு வரலாற்று ரீதியான இயக்கத்தின் நோக்கத்தால், இந்தச் செயலின் இன்றியமையாத மற்றும், இரண்டாம்நிலை விளைவுகளால் விளக்கப்படக்கூடிய ஓர் “மெய்மை”யல்ல.

ஓர் இலக்கியப் படைப்பு இடம்பெறும் வரலாற்று ரீதியான அமைவு என்பது ஒரு கூர்நோக்கருக்கு அப்பால் இருப்பு கொண் டிருக்கும் மெய்மைசார் தொகுதியல்ல. கிரெடியனின் இந்தக் கடைசிப் படைப்பை, அவரது முந்தைய படைப்பு களை நினைவிற் கொண்டு படித்து, இவற்றுடனும், அவர் ஏற்கெனவே அறிந்துள்ள மற்ற படைப்புகளுடனும் அதன் தனித்துவத்தை ஒப்பிட்டு இனங் கண்டுகொண்டு, அதன் மூலம் வருங்கால இலக்கியப் படைப்புகளை மதிப்பிடு வதற்கான புதிய விமர்சன முறைகளை அடைகிற வாசகருக்கு மட்டுமே பெர்ஸீவல் (Perceval) ஓர் இலக்கிய நிகழ்ச்சியாகிறது. ஓர் அரசியல் நிகழ்ச்சிக்கு மாறாக, ஓர் இலக்கிய நிகழ்ச்சி, அடுத்து வரும் தலைமுறை ஒரு போதும் தப்பிக்க முடியாதபடி தவிர்க்கவியலாத பின்விளைவுகளைத் தன்னகத்தே பெற்றிருக்கவில்லை. ஓர் இலக்கிய நிகழ்ச்சி அதற்குப் பிறகு வந்து அல்லது மீண்டும் ஒரு முறை அதற்கு எதிர்வினையாற்றுபவர்களாக இருந்தால் மட்டுமே, ஒரு விளைவைத் தன்னகத்தே கொண்டு தொடர முடியும். தாங்கள் தழுவி, அதை விஞ்சி அல்லது மறுதலிக்கிற கடந்த கால இலக்கியப் படைப்பு அல்லது படைப்பாளர்களை மீண்டும் பொருத்திப் பார்க்கிற வாசகர்கள் இருந்தால் மட்டுமே. இலக்கிய இசைவிணைவு ஒரு நிகழ்ச்சி என்ற அளவில் முதலில் நிகழ்கால இலக்கிய அனுபவத்தின் எதிர்பார்ப்புகளின் அறிவெல்லைக் கோட்டிலும், அடுத்து, வாசகர்கள், திறனாய்வாளர்கள், படைப்பாளர்களுக்கு மத்தியிலும் இடையீட்டாளராகச் செயலாற்றுகிறது. இலக்கியத்தின் வரலாற்றை அதன் தனித்தன்மை வாய்ந்த வரலாற்று மெய்ப்பாட்டில் புரிந்துகொண்டு, அதை எடுத்தியம்ப முடியுமா என்பது, இந்த எதிர்பார்ப்புகளின் அறி வெல்லைக் கோட்டுக்கு உருப்படியான வடிவம் வழங்க முடியுமா என்பதைச் சார்ந்தது.

தமிழில் : சா.ஜெயராஜ்

Pin It