yathumaki 400

யாதுமாகி என்ற இந்த புதிய நாவல் சிறுகதை எழுத்தாளர் எம்.ஏ.சுசீலாவின் முதல் நாவல். நான்கு தலைமுறைப் பெண் வாழ்க்கை இந்நாவலின் கதைப் பொருள். தன் வரலாற்றுப் புதின வகையைச் சேர்ந்தது.

இருபதாம் நூற்றாண்டுக்கும் அதற்கும் முற்பட்ட காலங்களிலும் சமூக வேறுபாடுகளைப் போற்றிப் பாதுகாத்து சாதி அடிப்படையில் மக்களை இழிவு படுத்திப் பிற சமூகத்தவர்களால் கொடியவர்கள் என்று வருணிக்கப்பட்ட பிராமண சமூகம் இதோடு நிற்காமல் தன் சமூகத்தைச் சேர்ந்தவர்களைக் குறிப்பாக இளம் பெண்களையும் கைம்பெண்களையும் இம்மியும் விட்டு வைக்காமல் மிகக் கொடுமைகளுக்கு ஆட்படுத்தியவர் களும்தான் என்பதை இந்நாவலைப் படித்து முடித்த வுடன் தோன்றிவிடுகிறது. இவர்களைப் பாரதி பாதகக் கொடும் பாதகர் என்று பாடியதை நாவலாசிரியை முன்னே எடுத்துக் கொடுத்திருப்பது எவ்வளவு பொருத்தம்.

வேறுபாடுகளில் திளைத்த இந்த சனாதன சமூகத்தில் பிறந்தும் மனிதாபிமானிகளாகவும் சமத்துவம் சகோதரத்துவம் பேணுபவர்களாகவும் உருவான பெண் மணிகளின் கதை இது. ஒரு நூற்றாண்டு சமூக வரலாற்றின் ஒரு சிறு காலக் குளிகைபோல இந்த நாவல் அமைந்திருக்கிறது அல்லது பெண்குலத்தின் நெடும் பயணத்தில் ஒரு சிறு பயணமாக இது அமைகிறது.

நான்கு தலைமுறைப் பெண் குலத்தின் கதை இது. சமூகப் பழக்க வழக்கம் என்ற அரக்கத்தனமான சனாதனத்தால் வாயில்லாப்பூச்சியாக வாழ்ந்து முடிந்த அன்னம்மாள், அதற்கு அடுத்து அதே சனாதனத்தால் குழந்தை மணம் செய்விக்கப் பெற்று இளம் கைம் பெண்ணாகி(கம்மனாட்டி)ப் பின் மறுமணம் செய்து கொண்டு வாழ்வை முழுமையும் அனுபவிக்க முடியாமல் போன தேவி, புதுமை முகமூடி அணிந்து கபட வேடதாரி ஆணால் வஞ்சிக்கப் பெற்று வாழ்வை இழந்த அந்த வேளையில் அதிலிருந்து மீண்டு உயிர் பெற்று வீறோடு எழும் அவர் மகள் சாரு, பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக படிப்பால் உயர்ந்து வலம் வரும் நீனு என்ற நான்கு தலைமுறைப் பெண்களை மையமிட்ட இக்கதை தன்வரலாற்றுப் பதிவு போலச் செல்கிறது. இந்தக் கதை மாந்தர்களின் மையம் தேவி. கதை சொல்லியான சாருவைப் பெற்றுவளர்த்து ஆளாக்கிய தாய்.

இதில் வரும் ஆண்களில் சடங்கு சம்பிரதாயங் களின் சிறைக்கைதிகளாக மாறிவிட்ட கையாலாகா தவர்கள் (தேவியின் தந்தை சாம்பசிவம்), மெலிந்த சீர்திருத்தக் குரலை உயர்த்திப் பிடிக்கும் உதவாக்கரைப் பட்டம் பெற்றவர்கள்(கிருஷ்ணன்), நவீன வேடந் தாங்கிய மோசடிப் பேர்வழிகள் (தேவியை மணந்து வேறு பெண்ணுடன் வாழச் சென்றவன்) என்ற வகையைச் சேர்ந்தவர்களைப் பார்க்கிறோம். இதற்கு மாறாக இதில் இடம்பெறும் பெரும்பான்மையான முக்கியப் பெண் பாத்திரங்கள் மட்டுமல்லாமல் துணைப்பாத்திரம் சிறுபாத்திரம் என்று வருகிற பெண்பாத்திரங்கள் கூட நீதி நேர்மை தூய்மையின் இருப்பிடங்களாக அமைந்தவர் களாகவும் அநீதியை எதிர்த்து நிற்கமுடியாவிட்டாலும் அளவற்ற சகிப்புத்தன்மையோடு துணிச்சலைக் காட்டிச் சிறு எதிர்ப்புகளைப் பதிவு செய்கிறவர்களாகவும் மனிதாபிமானம் மிக்கவர்களாகவும் இருப்பது ஏதோ எதிர்பாராதது அல்ல என்று தோன்றுகிறது.

சந்தர்ப்ப வாதிகளாகி அடிப்படை நன்றி முதலியவற்றை மறந்த உமா போன்றவர்கள் திருஷ்டி பரிகாரம். தேவியின் போராட்டக் குணம், அவளுக்குத் துணையாக அமையும் உயிர்த்தோழி சில்வியா, மதர் சுபிரியர்மேரி பின் வரலாற்றுப் பாத்திரங்களான சகோதரி சுப்புலட்சுமி, மீனாட்சி மேடம்,கல்யாணிப் பாட்டி என்று நீளும் நல்ல மனம் கொண்டவர்கள்,பெண்களால் ஆன இந்நாவலின் நல்லுயிர்ப்பை நிலைநிறுத்துகிறார்கள். பெண்மையின் நன்மையை நாம் பல நிகழ்வுகளிலும் கண்டுணர்வது ஒரு புத்துணர்வாகவும் அமைகிறது.

கதை நிகழிடம் காலம் என்பவற்றைப் பொறுத்த வரை இந்நாவல் நேர்கோட்டில் சொல்லப் பெறாமல் காரைக்குடி 1967, குன்னூர் 1942, மதுரை 1987, குன்னூர் 1943, மதுரை 1992, சென்னை 1926, காரைக்குடி 1967, திருவையாறு 1930, காரைக்குடி 1963, சென்னை 1934, காரைக்குடி 1969, காரைக்குடி 1948, மதுரை 1993, திருவையாறு 1935, ரிஷிகேசம் 2013 என்று மாறிமாறிக் கால இட இடைவெளிகளில் கூறப்பெறுவதில் காணப் படும் சிதறல் ஒருவகை வாய்மொழி மரபின் எச்சம் போல அமைகிறது. கதையை நெருக்கமாக இருக்கும் குழந்தைகளுக்கோ அல்லது யாருக்கோ அவ்வப்போது அசைபோட்டுக் கூறும் உத்தியால் விளைந்தது என்று தோன்றுகிறது. இதனால் கதையைச் சுருக்கிக் கூறும் பண்பு ஆங்காங்கே தலைதூக்கி விடுவதால் பெரிய கதை ஒன்றின் சுருக்கம் போல அமைந்து விடுகிறது. நிகழ்ச்சிகளின் படிநிலை வளர்ச்சியோடு கூடிய கதை நடப்புக்கு உறுதுணையாக இருக்கும் மூக்கு முழி வைத்து வருணிக்கும் சுவைதரும் வருணிப்பு என்னும் புதினத் தன்மைக்கு கதை நாடகத் தன்மைக்குக் குறைவை ஏற்படுத்தி விடுகிறதோ என்று தோன்றுகிறது.

கட்டுப்பெட்டியாக வாழ்ந்த சமூகம் தன் முக்காடுகளையும் முகமூடிகளையும் களைந்து அடுத்த கட்டத்துக்கு நகரும் சமுதாய மாற்றம் நகமும் சதையு மாக இதில் வெளிவந்திருப்பது இதன் வலு. அதுவும் சனாதனக் கட்டுப்பாடுகளுக்கு உறைவிடமாக இருந்த குடும்பம் என்ற கட்டுக்குள் இருந்து பெண்கள் வெளியேறிக் கல்வி நிலையங்கள், விடுதிகள், வேலையிடங்கள், பிற ஊர்கள் என்று தம் உறைவிடங்களை விரிவு செய்யும்போது மனவிரிவும் பன்முகப் பண்பாடுகளை ஏற்றுக் கொள்ளும் பக்குவமும் பெறுகிறார்கள் என்பதைத் தேவியின் குன்னூர் கிறிஸ்தவப் பள்ளி வாழ்வும் சென்னை விடுதி வாழ்வும் பின் காரைக்குடி உத்தியோக வாழ்வும் குறியீடுகளாக மாறிக் காட்டிவிடுகின்றன. கன்னியாஸ்திரியாக மாற நினைக்கின்ற விருப்பத்தைத் தன் உயர்ந்த வாழ்வால் தேவிக்குள் முளைவிடச் செய்து அது வெளிப்பட்ட போது அதைத் தடுத்த மதர் சுபிரியர், தேவியின் உயிர்த் தோழியாக அமையும் கிறிஸ்தவப் பெண் சில்வியா, வரலாற்றில் வாழ்ந்த சகோதரி சுப்புலட்சுமி, மீனாட்சி மேடம் போன்றோரும் அவர்கள் தொடர்பும் இந்த மனவிரிவுக்கு வழிவகுக்கிறார்கள். குடும்ப விளக்குகளாக இருந்த பெண்கள் எப்படிச் சமுதாய மயமாகிறார்கள் என்ற பரிணாமம் நுட்பமாக இப்புதினத்தில் இடம் பெறுவது இப்புதினத்திற்கு இன்னொரு சிறப்பை அளிக்கிறது என நினைக்கிறேன். பெண் வீடு என்ற சிறுகளத்திலிருந்து நாடு என்ற பெரும்களத்திற்கு இடம்பெயரும் இது பெண் வரலாற்றில் முக்கிய நகர்வு. இந்த நகர்வின் வாய்ப்புகளும் போராட்டங்களும்தான் இன்றைய பெண் வரலாறு என்பதை இன்று நடந்தேறும் பெண்ணுக்கு எதிரான பலவகையான வன்முறைகள் காட்டுகின்றன. இவற்றின் சிறு கீற்றாகவும் இந்நாவலைப் பார்க்கலாம்.

கதைச் சுருக்கமாக அமைந்துவிடுகிறது என்று சொல்லும்போது சாருவின் வாழ்வு இன்னொரு நாவலாக விரிவு பெறும் தன்மை உடையது என்பதை நாம் உணர்கிறோம். அது வடிவு கொள்ள இதை ஒரு முன்னோட்டமாகவும் நினைத்துப் பார்க்கலாம்.

எனினும் மனதைக் கவ்வும் பல நிகழ்வுகள் (தேவியின் படிப்பு, மணம் பற்றியவை) ஆர்ப்பாட்டமின்றிச் சொல்லப்பட்டிருப்பது இதன் ஆழத்தை மிகுவிக்கிறது என்று சொல்லலாம்.

நடை கொஞ்சம் புலமைத்தனத்தைக் காட்டிப் படைப்புத் தன்மைக்குப் பொருத்தமற்ற தன்மையை ஏற்படுத்திவிடுகிறதோ என்பது என் கருத்து. இயல்பான பேச்சு நடையின் தன்மையைக் கல்வியாளராகப் படைப்பாளி விளங்கியதால் கைவிட்டிருக்கலாமோ என்பது என் ஊகம். பேச்சு சார்ந்த மரபுத் தொடர்கள் மொழிக்கு ஒரு இயற்கைத் தன்மையைத் தரும். செயற்கையான ஆங்கில வழிப்பட்ட செயப்பாட்டுத் தொடர்கள் கருத்துவழிப்பட்ட உரைநடைத் தன்மையை ஏற்றிவிடும். இதை ஆசிரியை கருத்தில் கொள்ள வேண்டும். இவருடைய தேவந்தி சிறுகதைத் தொகுப்பு மதிப்புரையில் நான் சொல்லியதை மீண்டும் இங்கு நினைவுபடுத்துகிறேன்.

சில இடங்களில் ஆசிரியர் எடுத்துரைப்பில் பேச்சு நடையின் எளிமையை விட எழுத்து நடையின் இறுக்கம் இடறுகிறது. எ.டு. இயல்பான தமிழ்ப் பேச்சு நடையில் இல்லாத செயப்பாட்டு வினைத் தொடர் வாக்கிய அமைப்புகளைப் பேச்சு நடையை ஒட்டி இயல்பாக அமைத்திருக்கலாம். ‘இன்று பேசப்படுகிற (பேசுகிற) ...எடுக்கப்படுகிற (எடுக்கிற) (94) வழங்கப் பட்டிருந்த (வழங்கியிருந்த)150).’

இந்த நாவலிலும் இத்தகைய நடை இருக்கிறது. ‘நெடுக்குவசமாகப் போடப்பட்டிருக்கும் அம்மாவின் கட்டிலில் (பக் 30) என்ற தொடரில் போட்டிருந்த என்ற செய்வினைதான் பேச்சு நடையை ஒட்டியது. அதுபோன்றே மண்தரையில் நடுநாயகமாக வைக்கப் பட்டிருக்கும் (வைத்திருக்கும்) செம்மண் பூசப்பட்ட (பூசிய) துளசித் தொட்டியும்’ (பக்.30).

அவர் பெண்கள் பற்றிய சமகால இலக்கியப் பதிவுகள் பற்றி ஆராய்ந்துள்ளது அவருக்கு இந்நாவல் எழுத ஒரு வலுவான அடித்தளத்தை அமைத்துத் தந்துள்ளது. அவர் தன் ஆராய்ச்சியிலிருந்து தரும் சில குறிப்புகளையும் இந்த மதிப்புரையின் பின்னிணைப்பாக இணைப்பது வாசகருக்கும் ஆய்வாளருக்கும் பயன் தரும் என்பதால் அதையும் இத்துடன் இணைத்துள்ளேன்.

1950 ஆம் ஆண்டு வரை கிட்டத்தட்ட எல்லா சமூக நாவல்களிலுமே - துப்பறியும் நாவல் உட்பட - பாலிய மணம், பெண்கல்வி, விதவை நிலை ஆகியன பொருளாக இருந்தன. அந்தணப் பின்னணியே மிகுதி. தமிழ் நாவல்களில் மட்டுமல்ல... ஆஷாபூர்ணா தேவியின் வங்கநாவல்கள், சிறுகதைகள் எனப் பல

இந்திய நாவல்களில் இந்தப்போக்கு இருந்தது. வேறு சமூகப் பின்னணியில் (அந்தணர் அல்லாதார்) நாரண துரைக்கண்ணன் எழுதிய ‘யான் ஏன் பெண்ணாய்ப் பிறந்தேன்’என்னும் நாவல் (1934) வெளிவந்துள்ளது. என் ஆய்வேட்டில் விரிவான பட்டியல் உள்ளது. ‘விடுதலைக்கு முன் தமிழ் நாவல்கள்’என்னும் என் நூலில் - உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவன வெளியீடு- ஆய்வின் முதல் பகுதி மட்டும் உள்ளது. அது இப்போது அவர்களிடம் கிடைக்குமா தெரியவில்லை. இப்பொருள் பற்றிய வேறு சில நாவல்களாகக் கீழ்க்கண்டவற்றைக் குறிப்பிடலாம்.

1898 மாதவையா பத்மாவதி சரித்திரம், 1903 மாதவையா முத்துமீனாட்சி, மீனாட்சி சுந்தரம்மாள் -ஜெயசீலன்[1915-], ஸ்ரீதரன்[1932]1925 - பாரதி -சந்திரிகையின் கதை, வ.ரா. - சுந்தரி (1917), விஜயம் (1944),கோதைத்தீவு(1945), வை.மு. கோதைநாயகி - (ஜனரஞ்சகம்) உணர்ச்சி வெள்ளம் (1940), அபராதி (1945)மலர்ந்த இதழ் (1944) கல்கி சிறுகதைகள்- கேதாரியின் தாயார், கண்ணீரும் கடிதமும் (இந்தக் கதையில் கல்வி இல்லாமல் போனதால் தன்னை மறுமணம் செய்ய விரும்பி ஒருவன் எழுதும் கடிதத்தைப் படிக்க முடியாமல்போவதால் அந்த வாய்ப்பு அவளுக்கு நழுவிப்போவதை கல்கி காட்டியிருப்பார்-இரா பிரேமா சாகித்திய அகாதமிக்காகத் தொகுத்த பெண்மையச் சிறுகதைகளில் அது உள்ளது), இன்னும் வெண்ணிலா தொகுத்த மீதமிருக்கும் சொற்கள் (என்சிபிஎச்) பெண்ணியக் கதைகளிலும் இப்பொருள் பற்றிய சில கதைகள் உள்ளன.

வரலாறாகிப் போன பழைய வாழ்க்கையின் எச்சங்களாக எஞ்சி நிற்கும் தலைமுறையைச் சேர்ந்த சுசீலா அவர்கள் தந்துள்ள நாவல் நேற்றுடன் இன்றை இணைத்து நாளையுடன் ஒரு பிணைப்பை ஏற்படுத்த முயல்கிறது. அவரிடமிருந்து இன்னும் பல படைப்பு களை நாம் எதிர்பார்க்கிறோம்.

இந்நாவலில் ஆங்காங்கே இணைக்கப்பட்டிருக்கும் பழைய புகைப்படங்களின் கோட்டுவடிவங்கள் நாவலைக் காட்சிப்படுத்துவதற்கு உதவுகின்றன. இந்த நாவலை நன்கு வடிவமைத்துப் பிழையின்றி வெளி யிட்டிருக்கிற வம்சி பதிப்பகத்தாரைப் பாராட்ட வேண்டும்.

யாதுமாகி

ஆசிரியர்: ஏ.எம்.சுசீலா

வெளியீடு: வம்சி புக்ஸ்

திருவண்ணாமலை

விலை: ரூ. 180/-

Pin It