குழந்தைகள் இருக்கும் வீடுகளை எளிதில் கண்டுபிடித்து விடலாம் என்று சொல்வார்கள். ஆங்காங்கே இறைந்து கிடக்கும் பொருள்கள், பொம்மைகள், புத்தகங்கள், சுவற்றில் இருக்கும் கிரையான் கிறுக்கல்கள் போன்றவைகள் வீட்டில் துறுதுறு குழந்தைகள் உள்ளனர் என்று சொல்லாமல் சொல்லிவிடும். குழந்தைகள் வளர்ந்து கற்றுக்கொள்ளும் வரை வீட்டில் ஒரே களேபரம்தான். பெரியவர்கள் சொல்வதைக் கேட்டு வீடு சுத்தமாகவும், அமைதியாகவும் இருக்க குழந்தைகளால் உதவ முடிவதில்லை. பெரியவர்களும் அவ்வப்போது குழந்தைகளிடம் சத்தம் போட்டு விட்டு பின்னர் வருந்துவார்கள். ஓரிரு குழந்தைகளை வீட்டில் வைத்துக்கொண்டே நம்மால் சமாளிக்க முடியாமல் போகும்போது, நூற்றுக்கணக்கான குழந்தைகளை வைத்துக் கொண்டு நர்சரிப் பள்ளிக் கூடத்தில் எப்படிச் சமாளிக்கிறார்கள் என்ற ஆச்சரியம் உங்களில் நிறைய பேருக்கு இருக்கும். வெரி சிம்பிள்! குழந்தைகளுக்கான ரூல்ஸ் அங்கே தெளிவாக இருக்கின்றன. அதை நடைமுறைப்படுத்த ஆசிரியர்கள் உள்ளனர். ஆர்வமும் மகிழ்ச்சியும் கொப்பளிக்க அவர்களைப் பின்பற்றும் ஆர்வத்துடன் குழந்தைகள் இருக்கிறார்கள்.

பெற்றோர்களுக்கு வீட்டில் உள்ள குழந்தைகளை எளிதில் கையாளத் தெரிய வேண்டும். ஒரு கட்டுக்கோப்பும் அமைதியும் ஒழுங்குமுறையும் வீட்டில் நிலவ வேண்டும் என்றால் வீட்டில் உள்ள சிறுவர், சிறுமிகள் சில அடிப்படை நல் ஒழுக்கங்களைப் பின்பற்றுபவர்களாக இருக்க வேண்டும். பள்ளிக்கூடத்தில் இருப்பது போல வீட்டிலும் குழந்தைகளுக்கான ‘பேமிலி ரூல்ஸை' அவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும்.

நீங்கள் போடும் வீட்டுச் சட்டங்கள் மூலம் உங்கள் குழந்தைகளிடம் நீங்கள் எதை பெரிதும் மதிக்கிறீர்கள் என்று சொல்ல வேண்டும். அவர்களிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்றும் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும். சட்டங்கள் அனைத்தும் குழந்தைகளுக்கு மட்டுமல்ல: வீட்டில் உள்ள பெரியவர்களாகிய உங்களுக்கும் சேர்த்துதான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பெரியவர்கள் முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டும்போது குழந்தைகள் எளிதில் பின் பற்றுவார்கள்.family 417போடும் சட்டங்கள் எப்படி இருக்க வேண்டும்?

குழந்தைகளுக்கான குடும்ப சட்டதிட்டங்கள் போட விரும்பும் பெற்றோர்கள், அவைகள் எளிதில் குழந்தைகளுக்கு புரியும்படி இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளிடம் பேசி எழுதி வீட்டில் எல்லோருக்கும் தெரியும்படி மாட்டி அல்லது ஒட்டி வைக்கலாம். குழந்தைகளின் அறையிலோ அல்லது ப்ரிஜிலோ கூட ஒட்டி வைக்கலாம்.

குழந்தைகளுக்கென்று போடும் ஹவுஸ் ரூல்ஸ் கடுமையானதாக இருக்கக் கூடாது. குழந்தைகளைப் பயமுறுத்தித் தண்டிக்கும் நோக்கம் இல்லாமல் இருக்க வேண்டும். தேவையானவைகளுக்கு மட்டும்தான் வரைமுறைகள் இருக்க வேண்டுமே ஒழிய குழந்தைகளை மிலிட்டரி ரூல்ஸ் போட்டு அவர்களின் சிறகை ஒடிக்கக் கூடாது.

குழந்தைகளுக்குப் புரியாதவாறு பொதுவாக ஒரு சட்டம் போட்டு அவர்களை திரு திருவென்று முழிக்கச் சொல்லக் கூடாது. உதாரணத்திற்கு 'யாரும் தப்பு செய்யக் கூடாது'. இந்த ரூல்ஸில் எது சரி, எது தப்பு என்பது குழந்தைகளுக்குத் தெரியாது.

ஒரு நேரத்தில் ஓரிரு சட்டங்கள்தான் போடலாம். அதை அவர்கள் புரிந்து கடைபிடிக்க ஆரம்பித்து, பின்னர் அவர்களின் இயல்பான பழக்கமாகிய பிறகுதான் அடுத்த செட் ரூல்ஸ்களுக்குப் போக வேண்டும். பெரிய லிஸ்டைத் தயாரித்து இவைகள்தான் நம்ம வீட்டு ரூல்ஸ் என்று சொல்லக் கூடாது.

குழந்தைகளிடம் விவாதித்து கலந்து பேசி அவர்களின் சம்மதத்துடன் போடப்படும் ரூல்ஸ்களை அவர்கள் எப்போதும் மீறுவதில்லை. எப்போதாவது மீறினாலும் பெரிதுபடுத்தாமல் விட்டு விட வேண்டியதுதான். தண்டனை எல்லாம் கொடுத்து துன்புறுத்தக் கூடாது. இருப்பினும் குடும்ப சட்டத்தை மீறும்போதே குழந்தையை எச்சரித்து அதன் விளைவுகளைத் தெளிவாக்கி விட வேண்டும். பெற்றோர்களின் தொடர் கண்காணிப்பில் சின்சியராகப் பின்பற்றும் குழந்தைகளை பாராட்டவோ ஊக்குவிக்கவோ தயங்கக் கூடாது.

எதற்கெல்லாம் சட்டம் போடலாம்?

குழந்தைகளுக்கான 'பேமிலி ரூல்ஸ்' போடுபவர்கள் கீழ்க்கண்ட கருத்துக்களை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்

1. பாதுகாப்பு:

குழந்தைகளின் உடல் பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுத்து வறைமுறைகளை வகுக்க வேண்டும். பாதுகாப்பு என்று சொல்லும்போது வீட்டில் உள்ள பர்னிச்சர்கள், வீட்டு உபயோகச் சாமான்களின் பாதுகாப்பையும் மனதில் கொள்ள வேண்டும். கூரான பொருள்கள், பர்னிச்சர்கள், மாடிப்படிகள், மரங்கள், நீர் நிலைகள், நீச்சல் குளம் முதலிய இடங்களை குழந்தைகள் எப்படி உபயோகப் படுத்த வேண்டும் என்று தெளிவாகச் சொல்ல வேண்டும்.

பள்ளியிலும் வெளியில் செல்லும்போதும் அறிமுகம் இல்லாத நபர்களை எப்படித் தவிர்க்க வேண்டும் என்று சொல்லித் தர வேண்டும்

2. நற்பண்புகள்:

நல்ல பண்புகளையும், பழக்கங்களையும் கற்க இந்தக் காலமே நல்ல தருணம். எப்போதும் உண்மை பேசுதல், பொருள்களின் உரிமை பற்றித் தெரிந்து கொண்டு, பிறர் பொருள்கள் மீது ஆசைப்படாமல் இருத்தல், தன்னிடம் உள்ள பொருள்களை பிறருடன் பகிர்ந்து கொள்ளுதல் போன்ற பழக்கங்களை எளிதில் கற்றுக் கொடுக்கலாம். வீட்டிற்கு வரும் நண்பர்கள், உறவினர்களை எப்படி வரவேற்று உபசரிப்பது என்று சொல்லிக் கொடுக்க சரியான நேரம் இதுவே. இதனால் குழந்தைகளுக்கு இயல்பாகவே உள்ள கூச்ச சுபாவம் எளிதில் போய்விடும்.

வீட்டில் காரணமின்றி சத்தம் போட்டுப் பேசுவதோ, கத்துவதோ ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்வதோ கண்டிப்பாக அனுமதிக்கக் கூடாது. குழந்தைகள் விளையாடும் இடத்தை, முடிந்த பிறகு சுத்தம் செய்ய வேண்டியது விளையாடியவர்களின் வேலை என்று கண்டிப்புடன் எடுத்துச் சொல்லலாம். வீட்டை சுத்தமாக வைத்திருப்பதும், எடுத்த பொருள்களை அதே இடத்தில் பின்னர் வைத்து விடுவதும் அவர்களின் வேலை என்று சொல்ல வேண்டும்.

வீட்டில் பெற்றோர்களுக்கு அன்றாட வேலைகளில் உதவுவதை தினசரி செய்து பழக வேண்டும். சிறு சிறு வேலைகளைச் செய்வதில் குழந்தைகள் எல்லோருமே ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள்.

3. சுத்தமும் சுகாதாரமும்:

குழந்தைகளுக்கு ஆரோக்கியமான பழக்கங்களைச் சொல்லிக் கொடுக்க வேண்டும். கழிவறை, குளியல் அறைகளை உபயோகித்தல், தன் உடலை சுத்தமாகப் பேணுதல். கைகழுவும் முறை, சுத்தமான ஆடைகளை அணிவது போன்ற சுய சுத்தம், சுகாதாரம் தெரிய வேண்டும்.

4. உணவுப் பழக்கங்கள்:

வீட்டில் குறைந்த பட்சம் ஒரு வேளை உணவாவது அனைவரும் சேர்ந்து உண்ணும் பழக்கம் வேண்டும். சாப்பிடும்போது பெரியவர்கள் உள்பட யாருமே மொபைல் உபயோகிக்கக் கூடாது. குழந்தைகளுக்கும் சாப்பாடு ஊட்டும் சாதனமாகவும் மொபைலை பயன்படுத்தக் கூடாது. அதுபோல பாட்டில் ட்ரிங்ஸ், துரித உணவுகள் முதலியவற்றுக்கு வீட்டில் அனுமதியில்லை என்றும் தெளிவுபடுத்தலாம். உணவை முழுவதும் சாப்பிடாமல் வீணடிப்பதை அனுமதிக்கக் கூடாது.சாப்பிட்ட இடத்தை சுத்தம் செய்தல் முதலியனவும் பழக வேண்டும்.

5. பிறருடன் பழகும் முறை:

குழந்தைகள் வீட்டை விட்டு வெளி உலகுக்குச் செல்லும்போது பிறருடன் பழகும் திறன் பெற்றவர்களாக இருக்க வேண்டும். அவர்களுக்கு சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட மேனரிசங்கள் தேவை. அறிமுகம் ஆனவர்கள், அறிமுகம் இல்லாதவர்கள் போன்றோர்களுடன் எப்படிப் பழகுவது என்பது தெரிய வேண்டும், பொது இடங்களில் தன்முறை வரும் வரையிலும் காத்திருக்கத் தெரிய வேண்டும். கதவைத் தட்டிவிட்டு பிறர் அறைக்குள் நுழைவது, தன் வயது ஒத்தவர்களுடன் விளையாடுவது, பெரியவர்கள் பேசும்போது, தன்முறை வரும் வரையிலும் காத்திருந்து பேசுவது போன்றவை தெரிய வேண்டும். வீட்டில் அவர்கள் பழகும் முறையின் தொடர்ச்சியாக வெளி உலகிலும் நல்ல பண்புகளுடனும் பழக்கங்களுடனும் பயணிக்க வேண்டும். சமூகத்தில், பள்ளியில்,பொது இடங்களில் எளிதில் பழகத் தெரிய வேண்டும்.

இதனால் என்ன நன்மை?

இம்மாதிரி வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் கடைபிடிக்கும்படியான சட்டதிட்டங்களை குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே அறிமுகப்படுத்துவதால் அவர்களுக்கு வெளியிலும் பொது விதிகளை மதித்து கடைபிடிக்கும் குணம் எளிதில் வந்துவிடுகிறது. பெற்றோர்களால் அனுமதிக்கப்படாத காரியங்களுக்கு குழந்தைகள் அடம் பிடிப்பதும், பிடிவாதக் குணமும் குறைந்து விடுகிறது. அது அவர்களின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது. இம்மாதிரி வளரும் குழந்தைகளுக்கு உடல் பருமன் போன்ற பிரச்சினைகளும் வருவதும் இல்லை. அவர்கள் வளரும் குடும்ப அமைப்பில் எது சாத்தியம், எது சாத்தியம் இல்லை என்பதையும் தெரிந்து அதற்கேற்றாற் போல் வளர ஆரம்பித்து விடுகிறார்கள். இம்மாதிரி சட்ட திட்டங்கள் போடும் பெற்றோர்களுக்கும் இயல்பாகவே குழந்தைகள் மீது உள்ள அன்பும் அக்கறையும் அதிகமாகிறது. குழந்தைகளும் ஒரு சுய கட்டுப்பாட்டைக் கற்றுக் கொண்டு வெளியுலகில் மன அழுத்தம் ஏதுமின்றி நல்லவர்களாக வலம் வர முடிகிறது.

- மருத்துவர் ப.வைத்திலிங்கம், குழந்தை மருத்துவ நிபுணர்.

Pin It