வானம்பாடி கவிதை இயக்கத்தில் உச்சம் தொட்டவர் கவிஞர் சிற்பி. மரபிலும், புதுமையிலும் வேரூன்றி கவிதை படைப்பவர். பெருங்கவிஞர்கள் ஒரு கட்டத்தில் படைப்பிலிருந்து விலகிவிடுவார்கள். மாறாக, கவிஞர் சிற்பி தன்னைக் கவிதைகள் வழியே புதுப்பித்துக்கொள்கிறவராக இருக்கிறார். காரணம் சமகால உணர்வும், எதிர்கால அக்கறையும் அவரிடம் நிரம்ப உண்டு. தமிழில் வரும் நவீன எழுத்துக்களைத் தொடர்ந்து வாசிப்பவராகவும் அவர் இருக்கிறார். படைப்பின் ஊற்றுக் கண்களை உற்றுக் கவனிப்பதாலேயே அவரின் படைப்புகள் சீர்இளமை கொண்டு விளங்குகின்றன.

sirpi poems“ஒரு நல்ல கவிதை சூரியனைப்போல் தகதகக்கவும், பவள மல்லிகைப் பூப்போல் தன்னை அடையாளப் படுத்திக் கொள்ளவும், கம்பங்கூழ் போல் சாரம் ததும்பவும் தவறுவதில்லை. அது எந்தக் காலத்தில் பிறந்திருந் தாலும்” என்று கூறும் சிற்பி, 2012-இல் வெளிவந்த ‘நீலக்குருவி’க்குப் பிறகு தற்போது,’கண்ணாடிச் சிறகுள்ள ஒரு பறவை’யைத் தந்துள்ளார். உரைநடை நூல்களும், இராமானுஜர் காவியம் போன்ற பெருநூல்களும் படைத்திருந்தாலும் ‘நிலவுப்பூ(1963)’வின் தொடர்ச்சியை இத்தொகுப்பிலும் காணமுடிகின்றது.

இத்தொகுப்பில் உள்ள கவிதைகள் பெரும்பாலும் சூழலியம் சார்ந்து இயங்குகின்றன. பின் காலனிய நாடுகளில் மனிதமும், இயற்கையும் வதைபட்டதை எழுதும் பசுமை எழுத்துக்கள் மிகுதி. தமிழ்ச் சூழலில் இவ்வித சூழலிய எழுத்துக்கள் மிகக்குறைவு. இயற்கையி லிருந்து முளைத்துத் திளைத்தவை தமிழின் பண்டையக் கவிதைகள். திணை வெளிதானே நம் அகமும், புறமும். நிலத்தை, நீரை, காட்டை, கானுயிர்களை, வானுயிர் களை இக்கவிதைகளில் கவிஞர் சிற்பி மனிதன் முன் நிறுத்தி கேள்வி கேட்கிறார். அறிவியலும், அறவியலும், உயிரிரக்கமும் கூட்டுச் சேர்ந்து கவிச்சொற்களாகி யுள்ளன. எளிமையும் நுட்பமும் கூடிய அழகியல் சிற்பி யுடையது. இக்கவிதைகளிலும் இவையே மெருகூட்டு கின்றன.

காட்டின் அழகை விரித்துச் செல்லும் ‘அது ஒரு காடு’ இயற்கையைக் கொண்டாடுகின்றது. இறுதியில்,

காட்டு மரக்கிளை வெட்டியோர் மனிதன் / கோடரி செய்தான் / காலம் செலச்செலக் கோடரி பெருகி / காடுகள் அழியும் / பாட்டு மணிக்குரல் கேட்டு நடந்த / நதிகள் தொலையும் / பஞ்சம் தஞ்சையின் முகவரி கேட்டு / வயலில் திரியும் / சீட்டுக் கிழிந்து செதுக்கிய மலைகள் / கப்பலில் ஏறும் / சின்னப் போத்தலில் கங்கை காவிரி / வாழ்க்கை அடங்கும் / மீட்டும் அடிமை யுகமொன்று பிறக்கும் / அறிகுறி தோன்றும் / விலை போய்விட்ட / மனிதரின் நாடு / அது ஒருகாடு!

காடுகள் அழித்த நாடு காடாகவும், விலங்குகள் அழித்த மனிதன் விலங்காகவும் மாறி நிற்பதை மிக அருமையாகப் பதிவு செய்கிறார். ‘ஒரு சிங்கவால் குரங்கின் மரணத்துக்’காகப் பதைபதைக்கிறார் கவிஞர் ஒரு கவிதையில். மரக்கட்டிலில் தூக்கமின்றித் தவிக்கிறார், காரணம் ‘வனதேவதை’ குடியிருந்த மரமாம் அது. கட்டிலை ஒதுக்கித் தரையில் படுத்துறங்குகிறார் ஒரு கவிதையில். ‘கடைசிமரம்’ ஒரு கவிதையில் தன் இதயத்தால் அழுகிறது. ‘காட்டின் கனவான்’ என யானையை உச்சு முகர்கிறது ஒரு கவிதை. “ஆதி இயற்கையான கடலின் / திமிங்கிலத்துக்குப் போட்டியாய் / பூமி படைத்துக் கொண்டது / யானையை” என்கிறார் கவிஞர். ‘கண்ணாடிச் சிறகுள்ள ஒரு பறவை’யில் அதிசயப் பறவையின் அழகில் மூழ்கித் திளைக்கிறார். “வானத்து நீலத்தை / வைரக் கீறலெனக் கிழித்தபடி / அத்திமர அடர்த்திக்குள் பறந்து / கம்பிக் கால் மறைய / அமர்ந்து கொண்டது அப்பறவை” என்றும் “தும்பிச் சிறகைப் பெரிதாக்கிக் / காஞ்சிப் பட்டாய்த் தகதகக்கும் / கண்ணாடிச் சிறகுகள்” என்றும் காட்சிதரும் பறவை, மறுநாள் புன்னைமரத்தடியில் சடலமாகக் கிடக்கிறது. “எல்லையற்ற பேரழகுக்கும் / இறுதி உண்டு உண்டென்னும் / இயற்கை விதி / வென்றதோ?” என மனசு கனக்க கவிதை முடிகிறது.

பறந்து செல்லும் ‘தும்பி’யைப் பார்த்து “அதன் இரண்டு கண்களில் முப்பதினாயிரம் சிறு கண்கள்” என வியக்கிறார் கவிஞர். ‘ஆதிவாசி’யை இப்படி அறிமுகப்படுத்துகிறார். “காட்டுக் கொடிகளென / நரம்புகள் புடைத்த கால்களில் / உறைந்திருக்கின்றன / ராஜநாகத்தின் துடிப்பும் / மலை அணிலின் துள்ளலும் / கருஞ்சிறுத்தையின் பதுங்கலும்” என்றும், “மூக்கு நுனியில் / முந்நூறு வாசனைகளை / வேறு வேறாய்த் தரம் பிரிக்கும் / சோதனைச்சாலை” என்றும் கூறி, “மலசன், காடன், வேடன் / எல்லாம் நீங்கள் இட்ட / பெயர்கள்... நீங்கள் அறிவீர்களா / கானுயிர் அனைத்துக்கும் / பெயர் வைத்த பெரிய மனிதன் அவனென்று?” என்பதாக ஆக்கி வைத்திருக்கும் பொதுச்சமூகத்தின் புத்தியில் அறைகிறது கவிதை.

இன்னொரு கவிதை மொரீஷியஸ் தீவில் காணாமல் போன ‘டோடோ பறவை’க்காகவும், அப்பறவை அருகியதால், சந்ததியின்றி அழிந்து வரும் ‘கல்வாரா’ மரங்களுக்காகவும், கண்ணீர் விடுகிறது. கவிஞரின் பார்வைகள் இயற்கையை மரிமரி இரசிக்கவும் செய்கின்றன. பச்சைப் பாம்பு ‘கண்கொத்தி’ என அம்மா சொல்ல, ‘உன் அழகு கண்ணைக் கொத்தும் என்பதல்லவா உண்மை?’ என கவிஞர் மறுமொழி தருவது இரசிக்கத்தக்கது. இதே போல ‘காந்தள்’ பூவை சங்கப்புலவர்கள் பாடியவற்றை வரிசைக்கட்டி சொல்லி, கார்த்திகைப்பூவை ‘கண்வலிப்பூ’ எனும் போது மனம் வலிக்கிறது என்கிறார்.

இப்படி இயற்கை உயிர்களை, அவற்றின் இருப்பை, இன்மை அழிவை பல கவிதைகளில் கவிஞர் உயிர்ப்புடன் தருகின்றார். இயற்கைச் சமநிலை காப்பதும், பல்லுயிர் ஓம்பலும் இன்றையத் தேவைகள். சூழல் காப்பில் ஈடுபடாவிட்டால் மனிதர்களுக்கான நிலமே சூன்யமாகும் ஆபத்து. மலைகளை, ஆறுகளை, மணல்வெளியை, நிலத்தை, நீரை, வனத்தை, காட்டுயிர்களைக் காப்பதே இருபத்தியோராம் நூற்றாண்டின் முதன்மைச் சவால்.

முன்பொரு கவிதையில் காவிரியை - ‘நெல் வயல்களின் பச்சை ரத்தம்’ என்கிறார். இத்தொகுப்பில் நீரை ‘உயிரின் சங்கிலி’ என்கிறார்.

“குழாயின் விளிம்பில் / முத்துச்சொட்டாய்த் / திரண்டது ஒருதுளி, அதனுள் / உற்றுப்பார்த்தேன் / பாடி நகர்ந்து வரும் / ஒருநதி. பாறைமேல் விழுந்து / வைரச்சிதறலாய் / விழும் ஓர் அருவி. உச்சி மலை மடிப்பில் / சோலைக்குள் / ஒளிந்திருக்கும் ஈரம். ஆதித்தாவரமான / புல்லிதழில் / தயங்கி நிற்கும் நீர்மணி. மேலே / கண்ணுக்குத் தெரியாமல் / முகடுகளில்

உராயும் / முகில் எங்கோ / தொலை தூரத்தில் / எல்லைகளுக்கப்பால் / அலைபாயும் கடல். மீண்டும் பார்த்தேன் / இல்லை நீர்த்துளி / உயிரின் சங்கிலி.” அன்பின் வழியது உயிர்நிலை என்ற வள்ளுவரின், வாடிய பயிரில் உயிரைக்கண்ட வள்ளலாரின் உயிர் இரக்கப்பண்பின் நீட்சியாய் விரிகிறது கவிஞர் உள்ளம்.

கவிஞன் காலத்தின் மனசாட்சி. வாழும் காலத்தின் நிழலை தன் கவிதைகளில் ஒட்டிவைக்கிறான் கவிஞன். கவிஞர் சிற்பியும் தன் நெஞ்சை உலுக்கிய சிலவற்றைப் பதிவு செய்துள்ளார். காதலால் நிகழ்த்தப்படும் சாதலை, ஆணவக் கொலைகளை - கள்ள மௌனங்கள் எனக் கண்டிக்கிறார். பெண்ணைக் கற்பென்றும், நீதியென்றும் காவு கொள்ளும் ஆணிய அநீதியை ‘கல்லெறிகாதை’ எனும் கதைக்கவிதையில் தோலுரிக்கிறார். ‘முட்டைகள் நிரம்பிய கூடை’யில் வெடிகுண்டு கலாச்சாரத்திற்கு எதிராக வெடிக்கிறார். சந்தக் கவியிசையில் ‘தெரியாத வைகளின் இதிகாசம்’ எனத் தமிழ்நாட்டின் கீழ்மைகளைப் பந்திவைக்கிறார். நாள்தோறும் வந்து விழும் செய்தி களின் தீ நாக்குகளால் இவரின் ‘காலைத் தேநீர் இரத்த மாகிறது’. இன்னொரு கவிதை பிணஅறை ‘காவலாளி’ வழி நடப்புச் சமூகத்தின் கோர முகத்தைச் சுட்டிச் செல்கிறது. ‘மனிதன்’ என்னும் கவிதை “தானும் சுழன்று / ஞாயிறையும் சுற்றிவரும் / பூமிபோல் / தன்னையும் அழித்து / மண்ணையும் அழிக்கக் / காத்திருக்கிறான் / மனிதன்... என்று விசனப்பட்டு, ‘மனிதனா இவன்? / பூமியைத் தின்னும் / பூச்சி / சீச்சீ... சீச்சீ...” என மதிப்பிழந்த மனிதனுக்காக வேதனைப்படுகிறது. மண்ணாசை, பெண்ணாசை, பொருளாசை, புகழாசை களில் தன்னிலை தாழும் மனிதக் கீழ்மைகளைத் தன் கவிதைகளில் கூர்மையாகக் கவிஞர் சிற்பி பதிவு செய்கிறார். இப்படிச் சமூகத்தைச் சாடும் அதே வேளை, விழ விழ எழும் நம்பிக்கைத் தெறிப்புகளையும் மனிதர்களுக்கு தன் கவிதை வழியே வழங்கிச்செல்கிறார். காதலுக்காக காதலையே ஈகை செய்த நாட்டில், சக உயிரியான பெண்ணின் முகத்தில் ஆஸிட் ஊற்றும் அசிங்கத்தை விமர்சிப்பதோடு, அப்படிப் பாதிக்கப்பட்ட பெண் ‘நானும் வாழ்வேன்’ எனக் கூறுவது போல ஒரு கவிதை படைத்துள்ளது நம்பிக்கை ஊற்று.

வாழ்க்கை பற்றிய தேடல்தான் எல்லாமுமாக அமையும். கவிப்பார்வை வாழ்க்கை குறித்த வழமையான சிந்தனைகளைக் குறுக்கீடு செய்யும். விடுதலை என்பதுதான் இறுதி நிலை. உணர்வுப் பின்னலில், அறிவுத் தேட்டத்தில், மனித மனதின் நுட்பங்களை படைப்பாளிகளால் எளிதில் கண்டடைய முடியும். கவிஞர் சிற்பியும் அப்படியாகச் சில கவிதைகளை எழுதியுள்ளார். ‘தேடும் சொற்கள்’ கவிதையில்

சொற்கள் துரத்திக் கொண்டே வருகின்றன. ஆற்றுநீர் அழைப்பாக, தென்னந்தோகை கூவலாக, கோயில் கலசமாக, பெருமூச்சாக, ஓலமாக... தும்பிகள் மாதிரி எங்கும் சொற்கள்... சலனமற்றுப் போகிறான் மனிதன். அதேபோல ‘அந்நியன்’ கவிதையில் தெருவில் உண்ணுமிடத்தில், மேடையில், நடையில், படுக்கை அறையில்... என எங்கும், ‘எப்போதும் / என்பின்னால் / யாரோ வருகிறார்கள்’ எனப் பதைக்கிறார். ‘முடிவு’ என்றொரு கவிதை, வாழ்க்கை முடிவின் குறியீடாக அமைகிறது. நாய் பற்றிய தமிழ்க் கவிதைகளில் சிற்பியும் ஒரு நல்ல நாயைப் படைத்துவிடுகிறார். ‘தொலைந்து போன நாய் கவிதையில் ‘தருமனோடு வானகம் போன / அந்த நாய் / அகப்படுமா என அலைந்து சலிக்கிறேன்’ எனக் கவிதையை முடிக்கிறார். கிராமத்து மனிதர்கள் பலர் மடிந்து போகிறார்கள். பால்ய நினைவுகள். வேறிச்சோடிக்கிடக்கிறது தெரு. ‘இன்மையின் இருப்பு’ வெறுமையாய் மனதைத் தகிக்கிறது ஒரு கவிதையில். முகம் இல்லா மனிதனின் ‘முகவரி’, அந்நியத்தை வெளிப்படுத்தும் ‘இறந்த காலம்’ ஆகிய கவிதைகளும் ஆழ்மனத் தேடலாக அமைகின்றன.

இவை வாழ்விலிருந்து வாழ்வின் பொருளைத் தேடும் கவிதைகள். மனித உறவுகள் சிதிலமடைந்து வருகின்றன. மனித உணர்வுகளைவிடப் பொருள் மதிப்பு கூடிவிட்டது. மனிதன் சமூகத்தில், குடும்பத்தில் ஏன் தனக்குத்தானே அந்நியமாகிப் போகிறான். இந்த நிலைகள் கவிஞரின் கவித்தெறிப்புகளாக வந்து விழுகின்றன. முகம், முகவரி, அடையாளங்கள் இழந்த மனிதன் வெறும் சரக்காக - சக்கையாக மரிப் போவதை - மக்கட்பண்புகளற்று மரம் போல்வராவதை இதைவிட எப்படிச் சொல்லமுடியும்?

கவிதை என்றால் இலக்கியத்தின் அரசி. முதலில் கவிதையாக அது இருக்க வேண்டும். பின்னர்தான் கவிதையில் என்ன இருக்கிறது? எனப் பார்க்க வேண்டும். அப்படி அழகு மிளிரும் சில கவிதைகளும் இத் தொகுப்பில், பாவேந்தரால் அடையாளங் காட்டப் பட்டவர் சிற்பி. அழகின் சிரிப்புபோல, ஒரு அற்புதக் கவிதை ‘புல்லின் கதை’. “ஒருதுளி நீர் / சிறுபிடி மண் / உயிர்ப்பேன் அதில் / என்றது புல். புல்லிதழ் நுனி / போதும் இனி / குந்தும் இடம் / என்றது பனி.

அடடா பனி / அடங்கிடச் சுகம் / ஒடுங்குவேன் நான் / என்றது வான். வெண்பனிச் சிறை / விழுந்தது வான் / விடுவிப்பேன் நான் / என்றது கதிர். ஒன்றில் ஒன்று / ஒன்றுக்குள் ஒன்று / ஒன்றினைத் தின்று / வாழும் மற்றொன்று! விளக்கங்கள் தேவைப்படாத அமிழ்தக் கவிதை இது.

முரண்கள் எப்போதும் அழகுதான். “வானத்தை / நீலக்குடை என்றதும் / விஞ்ஞானி சிரித்தான். வைரத்தை / நிலக்கரி என்றதும் கவிஞன் சிரித்தான்” என்பதில் இதை உணரலாம்.

இன்னொரு கவிதை: தலைப்பு ‘ஓய்வு’

இந்த மணல் வெளியில் / நிழலுக்கு / ஒரு மரமில்லை. நாளெல்லாம் / வெயில் பருகும் / தாகம் / நட்சத்திரங்கள் / உரையாடும் இரவில் / ஒட்டுக் கேட்டு / மனப் புழுக்கம் / ஆறும் மணல் துகள்கள் / வண்ணத் துணுக்குகளாய் / ஓயாமல் சிறகடிக்கும் / கடல் பறவைகள் / எங்கே போய் / ஓய்வெடுக்கும்?

இப்படி அழகியலை நளினமாகச் சிற்பி படைத்து விடுகிறார்.

‘ஹைக்கூ’ வடிவத்தில் அதிகம் ஈடுபாடு இல்லாதவர் சிற்பி. இத்தொகுப்பில் ‘மின் துளிர்கள்’ என்னும் தலைப்பில் குறுங்கவிதைகளைப் படைத்துள்ளார்.

பவளமல்லிகை வேரில் / பதுங்கிய தவளைக்கு / நித்தமும் பூ மழை / நாய்கள் துரத்திக் குரைக்க / ஓடுபவனின் நிழல் / இன்னொரு நாய் / ஆளரவம் அற்ற சாலை / பாவம் பிள்ளையார் / சூரைத்தேங்காய்க்கு ஏங்கி / மணல் தோண்டிய / படுகுழிகளில் கிடக்கிறது / ஆற்றின் சடலம் / தப்பித்தால் பட்டுப்பூச்சி / அகப்பட்டால் / பட்டுப்புடவை.

இப்படி அழகும், அமைதியும் நிரம்பி கவிதைகள் சிலிர்க்கின்றன.

படைப்பு அனுபவம் எழுத்தின் அடர்த்தியில் தெரியும். கவிஞர் சிற்பியின் நீண்ட அனுபவம் இக் கவிதைகளில் முதிர்ச்சியாக வெளிப்படுகின்றன. அவருக்கே உரித்தான சொற்சேர்க்கைகள், இசை யழகுகள், சொல்முறைகள், விளையாட்டுக்கள், விசாரணைகள் இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன. இயற்கை, உயிர்கள், சூழல் காப்பு ஆகிய தடங்களில் பயணிக்கும் கவிதைகள் தமிழ்ச் சூழலிய இலக்கிய வகைமை வளர்ச்சிக்கு உரமாகும்.

கண்ணாடிச் சிறகுள்ள ஒரு பறவை

சிற்பி

வெளியீடு: கவிதா பப்ளிகேஷன்

சென்னை - 600 017

விலை:ரூ.80.00

Pin It