சமூகத்தின் மீதான விமர்சனங்களோடும் தங்கள் வாழ்வியலுக்கான தீர்வுகளோடும் கடுங்கோபத் தினூடாகத் தலித் வகைப்பட்ட காத்திரமான புனை விலக்கியங்களைப் பூமணி தொடங்கிப் பாண்டியக் கண்ணன் வரையிலான எழுத்தாளர்கள் படைத்து வந்துள்ளனர். குறிப்பாக அடித்தள மக்களின் வகை மாதிரிப் புனை கதையாடலின் பரப்பில் விளிம்பு நிலை மனிதர்களின் சமூக வாழ்வும் பேதமும் சீரழிவும் அப்பட்டமாய்ப் பதிவு செய்யப்பட்டே வந்துள்ளன. அப்படியானதொரு பதிவே, மயானத்தில் பிணமெரிப்பதை வாழ்வாதாரமாக்கி ஜீவிதம் பண்ணும் வெட்டியானின் அவல வாழ்வைப் புனை கதையாக்கிய ஆண்டாள் பிரியதர்ஷினியின் ‘தகனம்’ என்னும் புதினம். தகனத்தின் தொடர்புறும் புதின மாய் சமீபத்திய வரவான ‘சாந்தி வனத்து வேர் களை’யும் (பாவை பப்ளிகேஷன்ஸ். வெளியீடு, 2012) கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டும்.

‘சாந்தி வனத்து வேர்கள்’ புதினத்தின் படைப் பாளி ஆ. திருநாவுக்கரசன் என்னும் கவிஞர் ‘மரணம் வரை’ (2006), ‘தந்தை மகனுக்கு’ (2007) ஆகிய கவிதைத் தொகுதிகள்வழித் தமிழ்ப் படைப்புத்தளத்தில் இயங்கியவர். ‘சாந்தி வனத்து வேர்கள்’ மூலம் தனது முதல் புதினப் பங்களிப்பாற்றியுள்ளார். இவர் மதுரை கனரா வங்கியிலும் பணியில் உள்ளார். புதின ஆசிரியர் ஆ.திருநாவுக்கரசன் தன் படைப்பின் வழி சமூகத்தின் கடைக்கோடி மனிதனான வெட்டி யான் சங்கிலியின் சமூக இருப்பைக் கேள்விக் குள்ளாக்கும் மேட்டிமைவாசிகளின் குணாம்சத்தைப் புதினத்தில் அம்பலப்படுத்தியுள்ளார்.

திண்ணையடிவலசை, இராமநாதபுர மாவட்டத்தின் ஒதுக்குப்புறக் கிராமம். அக்கிராமத் தாரின் உறவற்றுத் தனித்ததொரு ஒற்றைக் குடிசை வாசியாய் வெட்டியான் சங்கிலி. சங்கிலியின் மனைவி பிச்சாயி. மகள் பெருமாயி. மகன் கருப்பசாமி. புதின ஆசிரியர் கூறுவது போல, “இவன் வாழ்க்கையோ ஒன்றோடு ஒன்று தொடர்பு இல்லாமல் அங்கங்கே அறுந்து கிடந்தது” (ப.2) என்பதாகத்தான் வெட்டி யான் சங்கிலியின் வாழ்வென்பது. இவ்வாழ்க்கை யினூடாகவே வெட்டியான் சங்கிலியின் இருத்தலும் அமைகிறது. “குடிசை ரகத்திலும் சேர்க்க முடியாது. குட்டிச்சுவரில் ஓலை வேயப்பட்ட ஒற்றைக்குடிசை” (ப.1) என்றமைக்கப்பட்டதுதான் வெட்டியான் சங்கிலியின் இருப்பிடம். சங்கிலியின் உடைமை யென்பது தொழில்சார் உபகரணங்களோடு சொளகு, மண்பானைகள், உலைமூடி, விளிம்பொடிந்த மண் சட்டி, அலுமினியத் தூக்கு வாளி (ப.2) ஆகியன மட்டுமே. இச்சூழலோடுதான் வெட்டியான் சங்கிலியின் வாழ்க்கைப் பயணம் தடுமாற்றத்தோடே செல் வதாகச் சித்திரித்துக் காட்டுவது விளிம்புநிலை மனிதனின் வசிப்பிட அவலத்தையும் வாழ்வியல் வறுமையையும் உய்த்துணர வழிவகை செய்கிறது. தள்ளாட்டமாய்ப் பயணிக்கும் வெட்டியான் சங்கிலியின் குடும்பத்திற்கு மேட்டிமைச் சாதி யினரால் நிகழ்வுறும் அவமதிப்புகள், தாக்குதல்கள், பாலியல் வன்புணர்வுகள், நிராகரிப்புகள், வலுக் கட்டாயத் தண்டனைகள் என்பதாகப் புதினம் விரிவடைந்து வாசகமனத்தைக் கலக்கமுறவும் நிலை தடுமாறவும் செய்து விடுகிறது.

மேட்டிமையினரின் சாதியதிகாரம் வெட்டி யான் சங்கிலியின் குடும்பத்திற்குப் பன்முக வடிவ நிலைகளில் வெளிப்படுவதை மிக அழுத்தமாகவே புதின ஆசிரியர் சித்திரித்துள்ளார். குறிப்பாக மேலாடை தரித்தல், உருமால் கட்டுதல், செருப்பணிதல் ஆகிய செயல்பாடுகளெல்லாம் வெட்டியான் சங்கிலியின் குடும்பத்தாருக்கு மேற்சாதியினரால் மறுக்கப்படு வதுடன் தெருக்கள், கோயில்கள், வயல்வெளிகள் போன்ற பொது இடங்களிலும் அவர்களுக்கான நுழைவுச் சுதந்திரமென்பது மறுதலிக்கப்படுவதையும் மிக விரிவானதொரு நிகழ்வுகளாய்ப் படைப்பாசிரியர் புதினத்தில் பதிவு செய்து மனித மனங்களின் சாதியக் குரூரத்தையும் வக்ரத்தையும் வெளிப்படுத்திக் காட்டி யுள்ளார். குறிப்பாக, வெட்டியான் சங்கிலி ஆளுகை புரியும் சுடுகாட்டிலும்கூட அவன் மேற்சாதியினரின் ஆதிக்கத்திற்குள் இயங்குவதையும் மிக நுணுக்க மாகவே ஆ. திருநாவுக்கரசன் தொட்டுச் செல்கிறார்.

வெட்டியான் சங்கிலி குடும்ப உறுப்பினர்கள் மீதான மேற்சாதியினரின் வசைச் சொற்பிரயோகமும் வன்முறையிலான தாக்குதலும் உடல்ரீதியான நெருக்கடிகளும் வாசகரை அதிர்ச்சியடையவும் நிலைகுலையவும் செய்துவிடுகின்றன. மனித குலத்தின் இந்நடத்தை முறைகள் நம்மை வெட்கித் தலை குனியச் செய்யும் மனப்பாங்கை ஏற்படுத்திடக் கூடியவை. குறிப்பாக, சங்கிலியின் மனைவி பிச்சாயிக்கும் மகள் பெருமாயிக்கும் நேர்ந்து விடுகிற மேற்சாதி ஆடவர்களின் பாலியல் வன் புணர்வுகள் (ப.3, 60, 78) மட்டுமல்லாமல் உடலளவில் பெருமாயி ஆதிக்கச் சாதியினரால் மலினப்படுத்தப்பட்டு விவாதப் பொருளாவதும் (ப. 19) வாசகமனம் சகிக்க முடியாத காட்சி நிகழ்வாகும். விளிம்பு நிலையினரான வெட்டி யான்களின் வாழ்வியலென்பது அவலங்களின் உச்சமாய்ப் பரந்து விரிந்து கோரத்தாண்டவமாடிக் கிடப்பதையே ‘சாந்தி வனத்து வேர்கள்’ படம் பிடித்துக் காட்டியுள்ளது.

வாசகமனத்தைப் பதைபதைத்திடச் செய்யும் அதிமுக்கியமான நிகழ்வொன்றும் புதினத்தில் (ப.12) காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பிணமெரிக்கும் சுடுகாட்டில் வெட்டியான் சங்கிலியின் மனைவி பெருமாயி குழந்தை பெற்றெடுக்கும் நிகழ்வே அது. முந்நாளையத் தன் பிரசவ அனுபவத் துணையோடு பெருமாயி, தன்னுடலைக் குழந்தை பெற்றெடுக்கும் ஆயத்த நிலையில் வைத்துக்கொண்டே ஒரு மருத் துவச்சியின் நுணுக்கமான தொழிற்புரிதலோடு தன் கணவன் சங்கிலிக்கு வாய்மொழியாகவே பேறு காலச் செயல் முறைகளை விவரணையாக எடுத் துரைத்து அவனுதவியோடு பிள்ளைப்பேறடையும் காட்சியானது வாசிப்போரைத் திகிலடையச் செய்து பரவசமடையவும் செய்து விடுகிறது. படைப்பாசிரி யரின் அக்காட்சி எடுத்துரைப்பிற்கு வாழ்த்துகள். இந் நிகழ்வினூடாக இரு வேறு நேரெதிர்த் துருவங் களான மனித மரணத்தையும் ஜனனத்தையும் தத்துவப்புரிதலோடு ஒன்றிணைத்துச் சிந்திக்கவும் புதினம் வகை செய்துள்ளது.

வெட்டியான் சங்கிலியின் குடும்பம் உயிர் வாழ்தலென்பது வாய்க்கரிசியால் நீட்டித்திருப்பதைப் (ப.15) புதினம் சுட்டிச் செல்லும் அதே வேளையில் பிணமெரிக்கும் தொழிலாளிக்கு அசைவ உணவின் சுவையென்பதை மரண வீட்டு நிகழ்வுகளில் மட்டுமே அறிந்துணர முடிவதையும் புதினம் வெளிக்காட்டு வதோடு அவர்களின் துயர் மிகு வாழ்வின் வறுமையைப் படம்பிடித்துக் காட்டுவதாய் ‘சாந்தி வனத்து வேர்கள்’ உருவாகியுள்ளது.

பிணமெரிக்கும் வெட்டியானின் வாழ்வியலை மையமிட்டு உருவாகியுள்ள ‘சாந்தி வனத்து வேர்கள்’ ஊடாக இறப்புச்சடங்கு விவரணைகள் (ப.37), புராணச் செய்திகள் (ப.38), ஆண்ஆதிக்க வெளிப் பாடு (ப.40), அங்கதம் (ப.24), பழமொழி (ப.8), எனப் பதிவு செய்துள்ளது. புதின ஆசிரியர் இடையீடாகத் தத்துவார்த்த விளக்கவுரைகளாகச் சொல்லிச் செல்வ தென்பது (ப.30, 39, 40, 63) புனைவின் போக்கில் பிரசாரத் தொனியையும் ஏற்படுத்துகிறது. மேலும் முரண் இயைபுத் தொடர்கள் (ப.13, 14, 24, 25, 29, 32, 33, 39, 41, 55, 68, 69, 74) புனைவின் போக்கில் அதிக அளவில் புலப்படுவது சிற்சில இடங்களில் ரசித்திட்டாலும் தூக்கலாகவும் அமைந்து தன்னை இனங்காட்டுவது செயற்கைத்தனத்தை அடையாளப் படுத்தி விடுகிறது. வெட்டியானின் பாலியல் இச்சை கூட சுடுகாட்டில் நடந்தேறுவதும் (ப.12) சிவதாணு, வேதநாயகம் ஆகிய பாத்திர உருவாக்கங்களும் வாசக மனதின் ஆழத்தில் வேரோடி சமூகத்தின் பாற்பட்ட கேள்விகளை எழச் செய்பவை.

‘சாந்தி வனத்து வேர்கள்’ புதினத்தின் மூலம் சுடுகாட்டு வெட்டியானின் சமூக இருத்தலையும் அதன்பாற்பட்ட வேதனைகளையும் வலிகளையும் ஆழமான புரிதலோடு பிரதிவழிப் பதிவாக்கிய ஆசிரியர் திருநாவுக்கரசன், தீர்வு நோக்கிய கதை நகர்வில் தீவிரவாதக்குழு, குழுவின் தலைமறைவு வாழ்க்கை, கருப்பசாமியின் மாறுவேடம், பழி வாங்கல் எனத் திரைப்படப் பாணியிலான புனை வாகப் பயணப்படுகிறார். புனைவின் இப்போக்குச் சாதிய மேலாண்மையென்னும் கொடூரத்தின் தீவிரத்தை முழுமையாக வாசகர்கள் புரிந்துணரும் வாய்ப்பை மட்டுப்படுத்தி வேறொரு தளம் நோக்கி இட்டுச் செல்ல வழிவகுத்து விடுகிறது. இப்போக்கானது புனைவின் முன்னெடுப்பில் பெருஞ்சறுக்கலாகி விட மிதமிஞ்சிய ஏமாற்றத்தையே சமூகப் பிரக்ஞை யுள்ள வாசக நெஞ்சிற்கு அளித்துவிடுகிறது.

‘சாந்தி வனத்து வேர்கள்’ புதினம் படைப்பாளர்களால் பெரிதும் பேசப்படாத களத்தை மதுரை வட்டார மொழியோடும் இடையீடாகக் கவிமொழியோடும் புலப்படுத்தியதோடு புதிதான ஒரு விளிம்புநிலை மனிதவாழ்வியலின் பெரும் பரப்பைப் பதிவாக்கியுள்ள தன்மையில் ஆ.திருநாவுக்கரசன் பாராட்டப்பட வேண்டியவரே. 

சாந்தி வனத்து வேர்கள்

ஆசிரியர் : ஆ.திருநாவுக்கரசன்

வெளியீடு : பாவை பப்ளிகேஷன்ஸ்

விலை : ரூ.100.00

Pin It