அந்தப் பகுதி முழுவதையும் மரணத்தின் அமைதி போர்த்தியிருந்தது. ராகுலை எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியாது தவித்தான் ரஹ்மான். அவனைத் தேடி அவனது வீட்டை அடைந்தும் தயங்கி நின்று கொண்டிருந்தவனுக்கு அங்கு நிலவிய அமைதி அச்சத்தை அளித்தது. மூடப்பட்டிருந்த கதவின் பின்னல் யாரோ இருந்து தன்னையே உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதாக உணர்ந்த போது கலவரமடைந்தான். வேகமாகத் திரும்பி தெருவைநோக்கி அடி எடுத்து வைத்தான். அப்போதும் அவனுக்குப் பின்னால் துப்பாக்கிக் குண்டு முதுகில் எந்த நேரமும் பாய இருக்கிறது என்பதை உணர்ந்தபோது அவன் முதுகுத் தண்டையே உறைய வைத்தது.

மூச்சையடக்கி தெருவை அடைந்த போது முகம் வியர்வையில் நனைந்திருந்தது. அப்போது அங்கே வந்த பஸ்ஸினுள் விரைவாகப் பாய்ந்து, ஏறி முகத்தைத் துடைத்துக் கொண்டான். தைரியமிழந் தவனாய் தான் ஒரு ஆபத்தான கட்டத்தில் இருப்ப தாகவே எண்ணினான். ராகுலைக் காணாதது அவனுக்கு மேலும் பயமாக இருந்தது. பயங்கர வாதிகளின் கையில் காஷ்மீர் சிக்கினாலும், காஷ்மீரை விட்டு வெளியேறக் கூடாது என்று கல்லூரியில் படித்த நண்பர்கள் முடிவெடுத் திருந்தனர். ஆனால் இதற்கிடையில் ராகுலின் அண்ணனும், அண்ணியும் தங்கள் நெருங்கிய உறவினர், நண்பர்களுடன் ஸ்ரீநகரிலிருந்து ஜம்மு வுக்குக் குடிபெயர்ந்தனர். ஆனால் அங்கும் நிலை சரியில்லாததால் டில்லிக்குச் சென்று அகதிகளாக வாழ்வதாகவும், ஆனாலும் அந்த மாநகரமும் தங்கள் நெஞ்சில் பதியாமல் எந்த நேரமும் தாங்கள் வாழ்ந்த காஷ்மீரத்தின் மண்வாசனையும், அதன் அழகும் தங்களை நினைவூட்டி வருத்திக் கொண் டிருப்பதாகவும் எழுதியிருந்ததை நினைத்துக் கொண்டான் ரஹ்மான்.

தன் வீட்டை அடைந்தும் ரஹ்மான் அமைதியின்றித் தவித்தான். இந்த நேரத்தில் வேறு யாரையும் போய்ப்பார்க்க முடியாது. ஏற்கெனவே அவனுடைய பெற்றோர் அவனை நச்சரித்துக் கொண்டிருந்தார்கள். எந்த நேரத்திலும் முகமூடி அணிந்த தீவிரவாதிகளால் அவன் கடத்தப்படலாம் என்றும் இங்கேயே அவன் தங்கியிருப்பது அவனைப் போன்ற இளைஞர்கள் தீவிரவாதி களால் வலுக்கட்டாயமாக துப்பாக்கி ஏந்த நிர்ப்பந்திக்கப்படலாம் அல்லது பாதுகாப்புப் படையினராலோ இராணுவத்தாலோ உயிர் பறிக்கப்படலாம் என்றும் இந்த இடத்தை விட்டு வெளியேறி வெகுதொலைவிலுள்ள தங்கள் கிராமத்தில் போய்த் தங்கியிருக்க வேண்டு மென்பதே அவர்கள் குறிக்கோள். தாங்கள் வயதானவர்களானதால் யாருக்கும் பயன்படாத நிலையில் பாதுகாப்பாக இருக்கிறோம் என்றார் கள். கடைசியில் அவனும் அதற்கு ஒத்துக் கொண் டான். தான் வெளியேறிப் போகவிருப்பதை ராகுலிடம் சொல்வதற்காகவே அவனைத் தேடினான்.

ராகுலைப் பார்த்து வருவதாகச் சொல்லி, வீட்டைவிட்டு இறங்கினான். ராகுலைப் பற்றிய நினைவு அவனை அலைக்கழித்தது. ராகுலும் அவனும் சின்ன வயதிலிருந்தே ஒன்றாகப் படித்தவர்கள். எல்லா இளைஞர்கைளயும் போலவே படித்துவிட்டு வேலைக்காக அலைந்து கொண்டிருந்தான். ரஹ்மானின் பெற்றோர்க்குத் தோட்டங்கள் கிடையாது. கம்பளி ஆடைபின்னத் தெரியாது. அவர்களுக்குப் பூத்தையல் வேலையும் தெரியாது. படித்துச் சம்பளம் வாங்கும் அணி யினரில் தானும் ஒருவனாக வரலாம் என்று கனவு கண்டான். ஆனால் இப்போதுள்ள சூழ்நிலையில் வேலை எங்கே இருக்கிறது?

பனிபடர்ந்த மேட்டுப்பாங்கான இடத்தைக் கடந்த போது பாதை சரிவாக மிகுந்தது. ஓரங்களில் சினார் மரங்களும், பைன் மரங்களும் அடர்த்தி யாயிருந்தன. சரிவில் நிதானமாக இறங்குவதற்காக மரங்களைத் தாங்கிக் கொண்டு இறங்கினான். ஒரு வழியாகச் சமன்வெளியை அடைந்த போது, பாதையில் யாரோ குப்புறக் கிடப்பதைக் கண்டான். பயத்தினால் வேறு பாதையில் செல்ல லாம் என்று திரும்பும் போது எதேச்சையாக அந்த உருவத்தைக் கவனித்தான். முதுகில் நீளமான முடிதொங்கியிருப்பதைக் கண்டவுடன் பயம் மேலும் கூடி அவன் மலைத்து நின்றான். மெதுவாகக் கடந்து ஒருமரத்திற்குப் பின்னால் மறைந்து நின்று கொண்டு அந்த உருவத்தைப் பார்த்தான். சருகுகளில் தடம் பதித்து நடந்து வருவது போல் யாரோ அந்த உருவத்தைநோக்கி பனியில் பூட்° தடம் பதிய நடந்து வருவதைக் கண்டான். தன்னை நோக்கி துப்பாக்கி பாயும் என்ற இடத்தில் நெற்றியில் வியர்வை கொப்பளிக்க மரத்தில் மறைந்து கொண்டான்.

வந்தவன் அங்கு கிடந்த பெண்ணின் முகத்தில் தண்ணீரைத் தெளித்தபோது, அவன் ராகுல் என்பதைக் கண்டுகொண்ட ரஹ்மான் மகிழ்ச்சி யடைந்தான்.

தனக்குப் பின்னால் யாரோ நடந்து வருவதைக் கண்ட ராகுல் எழுந்து நின்று ஓட நினைத்தான்.

அவனருகே வந்த ரஹ்மான் “ராகுல் நான் ரஹ்மான்” என்றான்.

“நல்ல வேளை,வேறு யாரோவென்று பயந்து விட்டேன்”.

“நானுந்தான் பயந்துவிட்டேன். வா. இந்த இடத்தை விட்டுப் போகலாம்.

“இந்தப் பெண்ணை இப்படியே விட்டு விட்டா?”

“அவள் உயிரோடு இருக்கிறாளா?”

“அநேகமாக மயக்கத்தில் இருக்கலாம்”

“அவள் யார்?”

“எனக்கும் தெரியாது”

“நாம் இங்கே இருப்பது சரியாகுமா?”

“எனக்கு முன்னால் என்னுடைய குடும்பம் போய்க் கொண்டிருக்கிறது. நான் இந்த வளைவைச் சுற்றிப் போகலாம் என்று கருதிய போது இவள் உடலைக் கவனித்தேன்”

“என்னுடைய போர்வையினால் அவளை மூடவா?”

“மூடு. நேற்று இரவு ஒரு பெண் இந்த வழியாக ஓடிக் கொண்டிருப்பதையும், அவளைப் பின் தொடர்ந்து கனத்த பூட்ஸ் ஒலியெழுப்பிக் கொண்டு சென்று கொண்டிருப்பதையும் கேட்டேன். நாங்களோ மறைவில் பதுங்கி யிருந்தோம். என் தங்கையும் எங்களுடனிருந்தாள். அதனால் நாங்கள் எதுவும் செய்ய முடியாதிருந்தோம்.”

“அதற்குப் பிறகு?”

“பொறு. அவளுக்கு நினைவு வருவது போலத் தெரிகிறது”

“அந்தப் பெண் கண்களைத் திறந்தாள். நாங்கள் இருவரும் குனிந்து அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டவுடன் வீறிட்டு அலறினாள். தான் நிர்வாணமாய் இருப்பதை யுணர்ந்த அவள், போர்வையில் தன்னை மூடிய வாறு ஓட முயன்றாள்.

“தங்கையே! நாங்கள் உனக்கு உதவலாமா?”

கனிவான குரலைக் கேட்டுத் திகைத்தவள் பயத்துடன் அவர்களை நோக்கினாள். அப்போது இருவரும் முகத்தைத் தொங்கப்போட்டு மரத் தினடியில் சாய்ந்து அமர்ந்திருப்பதைக் கண்டாள். அவர்களுடைய பார்வை அவளை நோக்காது என்பதையறிந்து முணங்கியவாறே ஒரு கையில் போர்வையுடனும், கீழே சிதறிக்கிடந்த தனது ஆடைகளையும் எடுத்துக் கொண்டு ஒரு மரத்தின் பின்னால் மறைந்துகொண்டாள். ஒரு வேளை தன் ஆடைகளை அணிந்துகொள்கிறாளோ? அவர் களுக்கு எதுவும் புரியவில்லை. சிறிது நேரத்தில் மரத்தின் பின்னால் மறைந்தவளின் அழுகை கேட்டது. மடித்த முழங்கால்களில் முகத்தை மறைத்துக் கொண்டு அழுது கொண்டிருப்பதைக் கண்டனர்.

“தங்கையே, இங்கே தங்கியிருப்பது ஆபத் தானது. என்னைத் தவறாகக் கருதாதே. சற்றுத் தொலைவில் என் குடும்பம் போய்க் கொண்டி ருக்கிறது. நீ விரும்பினால் வேகமாகப் போனால் அவர்களை எட்டிவிடலாம். அதற்குப்பின் ஆபத்து இராது”

அவள் பதிலளியாது மௌனமாயிருந்தாள். அவள் எழ முயற்சித்தபோது எழ முடியாது. மேலும் வலி தாங்க முடியாலும் பொறுமினாள். அவளைத் தூக்கி நிறுத்துவோமா என்று முனைந் தவர்கள் அப்படிச் செய்யாது நின்றுவிட்டனர்.

“உன்னுடைய பெயர் என்ன?”

“நீ எந்தப் பகுதியில் குடியிருக்கிறாய்?”

“உன் தகப்பனார் பெயரென்ன?”

எந்தக் கேள்விக்குமே அவள் பதிலளிக்க வில்லை. அவள் யாரென்று தெரியாத போது, தங்களுடன் அவளை அழைத்துக் கொண்டு போ வது பாதுகாப்பாக இருக்குh? ஒருவேளை அவர் களுடன் வரவிரும்பாது, அவளுடைய வீட்டிற்கே செல்ல விரும்பிகிறாளா? ஏதாவது சொல்ல மாட்டாளா? அவர்களாகவே கேள்வி எழுப்பிக் கொண்டனர்.

“அவள் குஜ்ஜாராக இருக்குமோ?”

“பண்டிட்டாகவும் இருக்குமோ?”

“முஸ்லிமாகக் கூட இருக்கலாம்”

“ஆனால் உறுதியாக அவள் ஒரு காஷ்மீரிதான்”

அவள் ஏதாவது பேசக்கூடுமென்று சிறிது நேரம் மௌனமாயிருந்தனர். ஆனால் அவளோ மௌனத் திலேயே மூழ்கிவிட்டாள். இப்போது ராகுலுக்கு தன் குடும்பத்தைப் பற்றிய எண்ணம் வந்தது. தம்பி காய்ச்சலோடு இருக்கிறான். அவனை அம்மா, அப்பா, தங்கை காணாதது அவர்களுக்குக் கவலையளித்துக் கொண்டிருக்கும்.

“ஏதாவது பேசும்மா. நீ எங்களுடன் வருவதா யிருந்தால் வா, போகலாம். இங்கேயே இருப்பது நம் எல்லோருக்குமே ஆபத்து”

“ உன் வீட்டிற்குப் போக விரும்பினால், நாங்கள் உன்னை அங்கே கொண்டு போய் விடுகிறோம்.”

மீண்டும் மௌனத்திலிருந்தவள், சிறிது நேரத் தில் கண்களைத் துடைத்தவாறு அவமானத்தால் குனிந்த தலையுடன், தடுமாறிக் கொண்டே நடந்து, அவர்கள் முன் நின்றாள். அவளுடைய முகத்தைப் பார்க்கலாம் என்று அவளை ஏறிட்டுப் பார்த்தார் கள். தலைமுடி முழுவதும் முகத்தில் படிந்து, அவளுடைய முகத்தின் வடிவத்தையே மறைத் திருந்தது. அதனால் அவளது முகத்தைப் பார்க்க முடியாத நிலையில் இருந்தனர்.

“ நான் ராகுல். இவன் ரஹ்மான். சிறு வயதி லிருந்தே நாங்கள் நண்பர்கள். நீ இந்துவானால், நீ என் தங்கை; நீ மு°லிமானால் ரஹ்மான் வழியாக என் தங்கையாவாய். உன்னைப் பற்றிச் சொல்ல விரும்பினால் சொல். அதனால் நாங்கள்...”

“நான் ஒரு பெண். ஒரு பெண்ணின் அடை யாளம் இந்துவிலும் இல்லை, முஸ்லிமிலும் இல்லை” களைப்படைந்த நிலையில் சிரமத் துடனான மெல்லொலி அவளிடமிருந்து கசிந்தது.

ராகுலும் ரஹ்மானும் இதை எதிர்பார்க்க வில்லை. இந்து-முஸ்லிம் என்ற தடைகளை மீறி, அவர்கள் ஒன்றாகவே இருக்கிறார்கள். ஆனால் இது என்ன விந்தையாக இருக்கிறது. இந்த இரண் டிலும் இராமல் மூன்றாவதாக இது என்ன?”

“பெண்களை ஆண்கள் மதிப்பதே இல்லை. ஆனாலும் அவர்கள் தான் மதப்பற்றுள்ளவர்களாய் தங்களை இந்து என்றும் முஸ்லிம் என்றும் கூறிக்கொள்கிறார்கள். நான் யார்? என்னுடைய பெயர், மதம் என்ன? என் குடியிருப்பு, முகவரி? இதற்கெல்லாம் நான் பதில் சொல்ல விரும்புவது - நான் இரண்டு குழந்தைகளின் தாய். என் கணவரை கடந்த ஒரு ஆண்டாகக் காண முடியவில்லை.”

“தங்கையே, நாங்கள் வருந்துகிறோம். உங்களைப் பற்றி...” ரஹ்மான் தடுமாறினான் அவளுக்கு முன்னால் தாங்கள் தாழ்ந்தவர்களாக இருப்பதாகக் கருதினான்.

ஆத்திரத்துடன் கேட்டான் ராகுல் :

“அவர்கள் யார்?”

“அவர்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்கள் என்பது தெரியாது. சீருடையில் அனைவரும் ஒன்றாகவே தெரிகிறார்கள். என் கணவரை எங்கே என்று கேட்டார்கள். எனக்கே தெரியாதே. அதனால் பதிலளியாது பேசாதிருந்தேன். நான் பேசா திருப்பதைக் கண்டவுடன் வெகுண்ட அவர்கள் பசித்த எலிகள் பிறாண்டுவது போல் என் சட்டையைத் தாறுமாறாய்க் கிழித்தெறிந்தனர். பயத்தால் அலறிய குழந்தைகளை அடித்தே கொன்றனர். பயத்தால் ஊமையானேன். வீடு மட்டுமல்ல என் உள்ளத்திலும் இருள் படர்ந் திருப்பதாக உணர்ந்தேன்.”

அந்த இளம் வயது தாய் மரத்தில் முட்டி மோதி அரற்றினாள். செய்வதறியாது ஒருவரை யொருவர் பார்த்துக் கொண்டு, ‘சமூகக் கேட்டிற்கு மதம் மட்டுமல்ல வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் அரசியல் குறுக்கீடு மனித வர்க் கத்தையே மூச்சுத் திணற வைக்கிறது’ என்றுணர்ந்து அவமானத்தால் கூனிக்குறுகி நின்றார்கள் ராகுலும் ரஹ்மானும் .

“நீங்கள் இருவரும் போகலாம். நான் ஒரு தாய், இறந்து போன என் குழந்தைகளைப் புதைக்கவேண்டும். நான் ஒரு மனைவி. கணவனின் வருகைக்காகக் காத்திருக்க வேண்டும். நான் பெண்ணானதால் அநீதிக்கிடையிலும் வாழ வேண்டும். நான் எங்கேயும் ஓடவோ ஒளிந்து கொள்ளவோ முடியாது. நான் வாழத்தான் வேண்டும்.”

தன்னை அமைதிப்படுத்திக்கொண்டு அவர் களை ஊடுருவிப்பார்த்தாள். அதற்குப் பிறகு அந்த இடத்தை விட்டு மெதுவாக நகன்றாள். ராகுலும் ரஹ்மானும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். இத்தணை இன்னல்களுக்கிடை யிலும் அந்தப் பெண் தன் வீட்டிற்குப் போவது, அவர்களுடைய வாக்குறுதியை நினைவு படுத் தியது. ரஹ்மானின் முதுகைத் தட்டிக் கொடுத்தான் ராகுல். ரஹ்மானும் அதை ஏற்றுக் கொண்டு திரும்பினான்.

மானக்கேடும் அவமரியாதையும் தனி மனிதர்களின் முகங்களை மட்டுமல்ல. அந்தப் பள்ளத்தாக்கு முழுவதையுமே இருளடையச் செய்தது. அந்த இருட்டைக் கீறிப்பார்த்தால் பெண்ணொருத்தியின் உடம்பும் அதைக் கடந்து செல்லும் ஆணின் நிழலும் அதற்கப்பால் வெகுதூரத்தில் சென்று கொண்டிருக்கும் ஒரு குடும்பத்தின் காலடிச் சத்தத்தையும், அதன் எதிரொலியையும் கண்டும், கேட்டுமிருக்கலாம். அனைத்துமே நம்பிக்கை தரும் அடிவானத்தை நோக்கி நகர்கின்றது.

இந்தியில் : நஸிரா சர்மா

ஆங்கில வழி தமிழில் : ப.ரத்தினம்

Pin It