மாந்திரீக யதார்த்தவாதம் என்று தமிழில் இன்று பிரபலமாகியுள்ள இந்த இலக்கியக் கொள்கை ஆங்கிலத்தில் பல பெயர்களில் வழங்கப் படுகிறது Magic Realism, Magical Realism; Marvellous Realism என்றெல்லாம் இது அழைக்கப்படுகிறது. அடித்தளத்தில் இவையாவும் ஒரே பண்பு உள்ளவை. அது யதார்த்தவாதத்தினை எதிர்ப்பதாகும். ஆயினும் இவற்றிற்கு இடையே சில சிறு வேறு பாடுகள் உண்டு. வசதி கருதி Magic Realism என்பதை மாந்திரீக யதார்த்தவாதம் என்றும், Magical Realism என்பதை மாய யதார்த்த வாதம் என்றும் Marvellous Realism என்பதை அற்புத யதார்த்த வாதம் என்றும், வைத்துக் கொள்ளலாம்.

magical realismஇது 1920ஆவது ஆண்டிலேயே ஜெர்மனியில் தோன்றிவிட்டது. பின்னர் 1940களில் இது மத்திய அமெரிக்காவில் பரவியது (லத்தீன் அமெரிக்க நாடுகள்). பின்னர் இது அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளுக்குப் பரவியது. பின்னர், இங்கிலாந்து, ஐரோப்பா என்று பரவி கிழக்கு நாடுகளிலும் இது இடம் பெற்றுள்ளது. தமிழகத்திலும் இதன் தாக்கத்தில் எம்.ஜி. சுரேஷ், கோணங்கி, சாரு நிவேதிதா என்று பலரிடம் காணலாம். ஆனால் இதனை வளர்த்தெடுத்தவர்களில் முக்கியமான வர்கள் பிரான்ஸ் ரோ (ஜெர்மனி) அலிஜோ கார்பன் டியர் (கியூபா) மஸ்ஸிமோ போன்டபெல்லி ஏஞ்சல் புளோர்ஸ், காப்பிரியேல் கார்சியா மார்க்யுஸ் (லத்தீன் அமெரிக்கா).

இது தோன்றுவதற்கான வரலாற்றுச்சூழல் 1920 ஆம் ஆண்டில் முதல் உலகப்போருக்குப் பின்னர் ஜெர்மனியில் இடம் பெற்ற ஒரு ஸ்திரமற்ற சூழ்நிலை ஆகும். உலகப் போரினால் ஏற்பட்ட சேதம், பொருளாதார நெருக்கடி, பணவீக்கம் ஆகியன நிராசை, அவநம்பிக்கை ஆகியன இடம்பெற்றன. உலகப்போரின் விளைவுகள் பல கலைஞர்களைப் பாதித்தது. உதாரணமாக டி.எஸ். எலியட் என்ற ஆங்கிலக் கவிஞர் எழுதிய “பாழ் நிலம்” (The Waste Land) என்ற நீண்ட கவிதையில் உலகமே பாழ்நிலமாக, காட்டப்படு கிறது. ஒரு கனவு உலகம் அதில் காட்டப்படுகிறது. கிரேக்கக் கதைகள் கலந்த ஒரு மாயச் சித்திரம் அதில் இடம் பெறுகிறது. இந்தச் சூழ்நிலையில் தான் ஜெர்மனியில் மாந்திரீக யதார்த்தவாதம் தோன்றியது.

இது இத்தாலிக்குப் பரவிய பொழுது அங்கு சர்வாதிகார ஆட்சி நடந்து கொண்டிருந்தது. தென் அமெரிக்காவில் மாந்திரீக யதார்த்தவாதம் காலூன்றிய பொழுது காலனி ஆதிக்கத்தின் கொடுமைகளை அங்குள்ளவர்கள் அனுபவத்தில் கொண்டிருந்தனர். உதாரணமாக சிலியில் பினோ செட் என்ற இராணுவ சர்வாதிகாரி ஆட்சி புரிந்தார். நாடு முழுவதும் கொந்தளித்துக் கொண்டிருந்தது. அரசியல் எதிரிகள் கொலை செய்யப்பட்டனர். மெக்ஸிகோ போன்ற இடங் களில் குடியேறியவர்களுக்கும், அமெரிக்க காலனி ஆதிக்கத்திற்கும் முரண்பாடுகள் இருந்தன. அமெரிக்க ஐக்கிய நாடுகளில் கறுப்பு இனமக்கள் பிரச்சினை உள்ளது. கனடாவில் பலதேசத்து மக்கள் குடியேறி இருந்தனர். இந்தச் சூழ்நிலையில் யதார்த்தம் என்பது இவர்களுக்குக் கசப்பாக இருந்தது. அதனை உள்ளபடியே சொல்வது என்பது விரும்பத்தகாத ஒன்றாக இருந்தது. இதிலிருந்து தப்பி ஓடும் ஒன்றாகத்தான் மாந்திரீக யதார்த்த வாதம் இருந்தது.

இந்த நிலையில் இது உருவானது என்றாலும் எதனை மாந்திரீக யதார்த்தவாதம் என்று கூறுவதில் குழப்பம் இருந்தது. அதனால்தான் மேலே குறிப்பிட்ட சொற் குழப்பம் ஆகும். இங்கு இடம் பெறுவது என்னவென்றால் மாந்திரீகம், மாயம், அற்புதம் என்பதை அதனுடன் பொருந் தாத யதார்த்தவாதம் என்பதுடன் இணைப்பது ஆகும். இங்கு முரண்படும் அம்சங்கள் வலுக் கட்டாயமாக இணைக்கப்படுகின்றன. நம்பமுடியாத நிகழ்ச்சிகளை, நம்பக்கூடியவற்றுடன், நடைமுறை யுடன் இணைத்து ஒரு மாயத் தோற்றத்தினை உருவாக்கும் போக்கு இது. இதற்கு ஒரு உதாரண மாக காஃப்கா என்ற எழுத்தாளரின் ‘உருமாற்றம்’ (Matamorphosis) என்ற கதையைக் காட்டுகின்றனர். இக்கதையில் யதார்த்த உலகில் உள்ள மனிதன், விழித்தெழும் பொழுது ஒரு பூச்சியாக மாறி யுள்ளான். அதே நிலையில் குடும்பத்தில் வசிக் கிறான். இதுவும் யதார்த்தம் என்று கருதுகிறான். செர்வாண்டிஸ் என்ற ஸ்பெயின் எழுத்தாளர் சுமார் முன்னூறு வருடங்களுக்கு முன்பு “டான் குவிக்சாட்” என்ற நாவலை எழுதினார். இது உலகின் முதல் நாவல் என்று கருதப்படுகிறது. ஒரு பெருவீரன் இதன் கதாநாயகன். இவன் முட்டாள் தனமான, கற்பனை உலகில் சஞ்சரிக்கிற கதா பாத்திரம். இவனது வேலையாள் சான்கோபான்சா நடைமுறை உலகினைச் சார்ந்தவன். டான் குவிக் சாட் கற்பனையாகக் காணும் உலகினை, மறுத்து யதார்த்த உலகினை முன்வைப்பவன் சான்கோ பான்சா. இந்த இரண்டும் கலந்த படைப்பாக இந்த நாவல் விளங்குகிறது. இதனை மாந்திரீக யதார்த்தவாதத்தின் முன்னோடி நூல் என்று கூறுவர்.

ஆனால் இந்த இலக்கியப் போக்கு லத்தீன் அமெரிக்காவோடு தான் அதிகம் இணைத்துப் பேசப்படுகிறது. இங்குதான் கார்சியா மார்க்யூஸ் (கொலம்பியா) “ஒரு நூற்றாண்டுத் தனிமை” (One hundred years of solitute)) என்ற நாவலை வெளி யிட்டார் (1967). இந்த நாவலில் பழமை நாட்டம், மாந்திரீக நிகழ்ச்சிகள், (உதாரணம் வாலுடன் பிறக்கும் குழந்தை) போன்றவை இடம் பெறு கின்றன. இங்கு காலம் மறுக்கப்படுகிறது; மூட நம்பிக்கை, புரளி, மிகைப்பேச்சு, புதியதைக் கண்டு அதிர்ச்சியடைதல் ஆகியன இடம் பெறுகின்றன. சில உதாரணங்கள் தரலாம். இந்த நாவலின் கதை மாந்தர்கள், அவர்களது குழந்தைகள் வாலுடன் பிறக்கும் என்று அஞ்சுகிறார்கள்.

ஒரு நகரம் முழுவதும் மயக்கநிலையில் இருக் கிறது; மர்மமான ஒரு ஜிப்சி தரும் மந்திர சக்தி யுள்ள மருந்தைக் குடித்து அவர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்கிறார்கள்.

லத்தீன் அமெரிக்காவின் முதல் பெண் எழுத் தாளர் எனப்படுபவர் இஸபெல் அலன்டே என்பவர். இவர் சிலியின் மாஜி ஜனாதிபதி. அலன் டேயின் உறவினர் அரசியல் கொடுமைகளுக்கு ஆளானவர். இவர் எழுதிய நாவல் “ஆவிகளின் வீடு” ((The house of the spirits) என்பது (1982) இந்த நாவலில் ஆவிகளுடன் பேசும் கிளாரா என்பவள் ஒரு குடும்பத்தில் ஆவியாக வருகிறாள். ஒரு தலை முறை அங்கத்தினர்கள் முழுவதும் இந்த ஆவியை நம்பி வாழ்கின்றனர். அடுத்த தலைமுறையினர் யதார்த்த உலகத்திற்கு வருகின்றனர். அலன்டேக்குப் பிறகு ஏற்பட்ட கொடூர நிகழ்ச்சிகள், சிறைவாசம் ஆகியன யதார்த்தமாக வர்ணிக்கப்படுகின்றன. சிறையில் உள்ள இதன் கதாநாயகி, அங்கு மன நோயாளியின் குழந்தைகளுக்கு மந்திரக் கதை களைச் சொல்கிறாள்.

ஏஞ்சலா கார்ட்டர் என்ற பெண் எழுத்தாளரது ‘சர்க்கஸ் இரவுகள்’ (1984) என்ற நாவலில் ஒரு உழைக்கும் வர்க்கப் பெண்ணிற்கு உண்மையில் இறகு முளைக்கிறது. சல்மான் ருஷ்டி என்ற பிரபல எழுத்தாளர் வெளிநாட்டில் வசிப்பவர். இவர் இந்தியர். வெள்ளைக் காலனி ஆதிக்கம், இந்தியக் கலாச்சாரம் ஆகியவற்றின் தாக்கம் இவர் மீது அதிகம் உண்டு. “நள்ளிரவுக் குழந்தைகள்” என்ற நாவலில் சலீம் அவளுடைய கதையையும், இந்தி யாவின் கதையையும் கூறுகிறாள். ஆரம்பத்திலிருந்தே சலீம் பல மாந்திரீக நிகழ்ச்சிகளைக் காண்கிறாள்; பலவற்றில் பங்கெடுக்கிறாள். அவளது வருங்காலம் பற்றி ஒரு சோசியர் கூறுகிறார். உடல்கள் மறை வதைக் காண்கிறாள். ஒரு பெண் மந்திரவாதியின் உதவியுடன் அவள் வானில் பறக்கிறாள். ருஷ்டியின் கருத்துப்படி, இது இந்தியாவின் பன்மைத் தன்மை யைக் குறிக்கிறது என்பதாகும்.

இவை சில உதாரணங்கள். இவற்றைக் கவனிக்கும் பொழுது மாந்திரீக யதார்த்தவாதம் என்ன என்பதைக் காணவேண்டியுள்ளது.

முதலாவது அதில் உள்ள இரு சொற்கள்: மாந்திரீகம், யதார்த்தவாதம். மாந்திரீகம் என்பது இயற்கைக்கு அப்பாற்பட்டது. யதார்த்தவாதம் உண்மையை, நடப்பினை அடிப்படையாகக் கொண்டது. இருவேறு தன்மைகள் கொண்ட வற்றை ஒன்றாக இணைப்பது மாந்திரீக யதார்த்த வாதம் ஆகும். இதில் மாந்திரீகம் யதார்த்தம் போல் காட்டப்படுகிறது. யதார்த்தம் மாந்திரீகம் போல் காட்டப்படுகிறது. அமரில் சானடி என்ப வரது கூற்றுப்படி, இது அறிவுப் பூர்வமானதையும், அதற்கு எதிரானதையும் ஒன்று கலக்கும் செயல் ஆகும். சாத்தியமற்றதையும்; சாத்தியமாகக் கூடிய தையும் இணைப்பது ஆகும். இங்கு இயற்கைக்கு அப்பாற்பட்டவை எல்லாம் சாதாரணமானவை, நடைமுறையில் இடம் பெறுபவை. இது யதார்த்த வாதத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

இரண்டாவது: இவ்வாறு இணைக்கும் பொழுது ஒரு புதிய கண்ணோட்டம் தோன்று கிறது. இங்கு தர்க்க எல்லைகள், பூகோள எல்லைகள், அரசியல், மதம், இனம், ஆகியன தகர்க்கப்படுகின்றன. இந்த எல்லை மீறல் அல்லது சிதைக்கும் பண்பு இந்த யதார்த்தவாதத்தில் இடம் பெறுகிறது. மாந்திரீகம் என்று தனியாகக் கண்டால் அங்கு இந்த எல்லை மீறல் கிடையாது; யதார்த்தம் என்று எடுத்துக்கொண்டால் அங்கு இந்த எல்லை மீறல் இல்லை. இந்த இரண்டையும் இணைக்கும் பொழுது இந்த எல்லை மீறல் இடம் பெறுகிறது.

மூன்றாவது: இந்த எல்லை மீறல் காரணமாக, சர்வாதிகார அமைப்புகளுக்கு எதிராக எழுத இந்த மாந்திரீக யதார்த்தவாதம் ஒரு சாதனமாக விளங்கு கிறது. மேலே குறிப்பிட்ட படைப்பாளிகள் எல்லோரும் இதனைத் தான் செய்தனர்; செய்து கொண்டிருக்கின்றனர். இதனை இன்னும் விரிவாக் கினால் இது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு எதிராக இது விளங்குகிறது. இதற்குக் காரணம் ஒற்றைப் பரிமாணத்தை இது மறுக்கிறது. பல குரல்கள் உள்ளதை இது ஏற்றுக் கொள்கிறது. மையமான கலாச்சாரத்தை இது எதிர்க்கிறது.

நான்காவது: அறிவுசார்ந்த எதையும், தர்க்க ரீதியான எதையும் இந்த இலக்கியக் கொள்கை ஏற்றுக் கொள்வதில்லை. இதன் மூலம் முழுமை யான உண்மை என்பதை மறுத்து, உலகினைப் பல கோணங்களில் பார்க்க முடியும் என்று இந்த யதார்த்தவாதம் கூறுகிறது.

ஐந்தாவது: இதில் வரலாற்றுப் பார்வை மறுக்கப்படுகிறது. இது பின் நவீனத்துவப் பார்வையாகும். வரலாறு என்பது தெளிவற்றது. உண்மைகளை அறுதியிட்டுக் கூறமுடியாது; அவற்றிற்குப் பல அர்த்தங்கள் உண்டு; வரலாறு என்பது ஒருதலைப்பட்சமான கருத்துகள், தவறான அனுமானங்கள், அறியாமை, அறிவு ஆகியன எல்லாம் கலந்து உருவாக்கப்பட்டது என்று இதில் கூறப்படுகிறது.

ஆறாவது: காரணகாரியத் தொடர்பு என்பது இதில் மறுக்கப்படுகிறது. தர்க்க ரீதியான அணுகுமுறை மறுக்கப்படுகிறது.

ஏழாவது: மாந்திரீக யதார்த்தவாதப் படைப்புகள் எல்லாமே விளிம்புநிலை மனிதர்களுடன் தொடர் புள்ளதாக இருக்கிறது. இதில் இடம் பெறு பவர்கள் அதிகாரமையத்தில் உள்ளவர்கள் அல்ல. செல்வாக்கு உள்ளவர்களும் அல்ல. உதாரணமாக சல்மான் ரூஷ்டியின் கதை மாந்தர்கள் ஆண்மை யற்ற எழுத்தாளர், அல்லது லண்டனில் வசிக்கும் இங்கிலாந்து நாட்டின் புரட்சியாளர்களாக இருக்கலாம்.

எட்டாவது: இந்த யதார்த்தவாதம் எதனுடன் எல்லாம் தொடர்புள்ளது என்பது. இது பின் நவீனத்துவம், பின்னைக்காலனியம், சர்ரியலிசம், பிராய்டிசம், யுங்கின் உளவியல், பக்தினின் நாவல் கொள்கை, காண்டின் தத்துவம், இருத்தலியம் ஆகியவற்றுடன் தொடர்புடையது. இதில் மார்க்சி யத்தையும் இணைத்துக் கொள்கிறார்கள். இவை எல்லாம் கலந்த கலவையாக இது உள்ளது.

இந்தப் போக்குகள் அனைத்தையும் கவனித்தால் மாந்திரீக யதார்த்தவாதம் யதார்த்தவாதத்திற்கு நேர் எதிராக உள்ளது என்பதைக் காணலாம். மாந்திரீகச் செயல்களை உண்மைபோல் கூற வேண்டும். இவை யதார்த்தம் போல ஏற்றுக் கொள்ளப்படவேண்டும் என்று இதனை வரை யறை செய்கின்றனர். இங்குதான் நாம் இது பற்றிய விமர்சனத்தை முன்வைக்கவேண்டியுள்ளது.

முதலில் இதன் தத்துவப் பகுதியை எடுத்துக் கொள்வோம். இது பின் நவீனத்துவம் காண்டியம், நீட்ஷேயிசம் ஆகியவற்றுடன் தொடர்புடையது என்று பல அறிஞர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். கான்ட் நாம் பார்க்கும் பொருள்கள் எல்லாம் மனப் பதிவே அன்றி வேறில்லை என்றார். நமது உணர் வினால் அறியத்தக்க நிகழ்வுகளின் தொகுப்பே உலகம் என்பது அவர் கருத்து. வெளியே இருக்கும் உலகம் (பொருள்) நமது பிடிக்கு அகப்படாமல் அதுவாகவே உள்ளது. நீட்ஷே என்பவர் உலகமே அதர்க்கமானது என்று கூறினார். இதில் ஒழுங்கு எதுவும் இல்லை என்று கூறினார். இதற்கு அடுத்த படியாக பிராய்ட் வருகிறார். இவர் தர்க்க ரீதியான நனவு மனதினைப் புறக்கணித்துவிட்டு, குழப்ப மான, மர்மமான, அதர்க்கரீதியான நனவிலி மனதினை எல்லாவற்றிற்கும் அடிப்படையாக ஏற்றுக் கொள்கிறார். இதன் நீட்சியாக யுங் சமுதாய நனவிலி மனம் என்பதற்குச் செல்கிறார் இவர்கள் கூறுவதைக் காணும் பொழுது புற உலகம் என்பது இல்லை. அகத்தில் உள்ள எண்ணங்களே புற உலகமாக தோன்றுகின்றன என்பதாகிறது. அது ஒழுங்கற்றது என்பதும் தோன்றுகிறது. இது தத்துவத்தில் அகவயக் கருத்துமுதல்வாதம் ஆகிறது. இது சுற்றி வளைத்து உலகம் ஒரு மாயத் தோற்றம் என்று கூறுவதைப் போன்றது. இங்குதான் மாந்திரீகம் என்பது வருகிறது. புராதன நம்பிக்கைகள், உள்ளுணர்வு சார்ந்த வினோதக் கருத்துக்கள், விஞ்ஞானம். வளராத காலத்தில் இயற்கையை மந்திரத்தால் வெற்றி கொள்ளமுடியும் என்ற மூட நம்பிக்கைகள், இவற்றின் அடிப்படையில் தோன்றிய கதைகள் ஆகியன மாந்திரீகம் என்பதில் இடம் பெறுகிறது.

யதார்த்தவாதம் என்பது உலகினைப் புறவய மாக ஏற்றுக்கொள்ளும் கொள்கை; இதன் அடித்தளம் பொருள் முதல்வாதம். பிரத்தியட்ச மான சமுதாயத்தின் தன்மை, குறைகள், நிறைகள், ஆகியவற்றை ஆய்வு செய்யும் போக்கு யதார்த்த வாதத்தில் இடம் பெறுகிறது. இது இலக்கியத்தில் பல்வேறு முறைகளில் இடம் பெறுகிறது. இதில் காரண காரியத் தொடர்பு ஏற்றுக் கொள்ளப் படுகிறது. உலகம் தர்க்க ரீதியானது என்பது ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இதனைப் புரிந்து கொள்ள முடியும் என்றும் கூறப்படுகிறது.

இந்த யதார்த்தவாதத்தினைச் செத்துவிட்டது என்று மாந்திரீக யதார்த்தவாதிகள், பின் நவீனத்துவவாதிகள் ஆகியோர் கூறுகின்றனர். இதற்குக் காரணம் என்ன? நாம் முன்னர் குறிப்பிட்டது போன்று, மாந்திரீக யதார்த்தவாதம் தோன்றிய காலத்திலிருந்து முதலாளித்துவ சமுதாயத்தில் தோன்றிய நெருக்கடிகள்தாம் இதற்குக் காரணம். இரண்டு உலகப் போர்கள், பொருளாதார மந்தம், இன்றைய உலகின் பொருளாதார ஏகாதிபத்தியம் ஆகியன, மனித வாழ்க்கையைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தக் கட்டத்தில் இவற்றை அப்படியே சித்திரிக் கலாமா என்ற கேள்வி எழுகிற இங்கு இரண்டு விஷயங்களைக் காணலாம். கடுமையான பொருளா தார நெருக்கடி, ஏழ்மை, அறியாமை, அச்சம், அடிமை சிறுமதி ஆகியன நிலவிய ரஷ்யாவில் மாக்சிம் கார்க்கி “தாய்” நாவலை எழுதினார். இது உலகின் முதல் சோஷலிச யதார்த்தவாத நாவல் எனப்படுகிறது. டால்ஸ்டாய், அலக்சி டால்ஸ்டாய், கார்க்கி போன்றவர்கள் யதார்த்தவாதப் படைப்பு களை வெளிக் கொணர்ந்தனர்.

அடக்கு முறை காலகட்டத்தில்தான் பாரதி தெளிவான கவிதை களை எழுதினார். ஏறத்தாழ இதே போன்ற சூழ்நிலையில் சிலியில் தோன்றிய எழுத்தாளர்கள் யதார்த்தத்தையும், மாந்திரீகத்தையும் இணைத்து ஒரு புதுவகை யதார்த்தத்தினை உருவாக்கினர். இவர்கள் யதார்த்தத்தினையும் மீறுகிறோம், மந்திரத் தையும் மீறுகிறோம், இவை இரண்டையும் ஒன்று கலக்கிறோம் என்று கூறி ஒரு மாயத் தோற்றத் தினை அவர்களது படைப்புகளில் உருவாக்கினர். இவர்கள் பார்வையில் உலகம் அதர்க்கமானது, இதனை விஞ்ஞானப் பூர்வமாக விளக்கமுடியாது. எனவே இதனைச் சிதைத்து, ஒரு மாயச் சித்திர மாகக் காட்ட வேண்டும் என்று உள்ளது. பழைய காலத்தில் சமூக ஒடுக்குமுறை காரணமாகக் கூறு வதைக் கதைகளாகக் கூறினர். இன்று விஞ்ஞானம் வளர்ச்சி பெற்ற பிறகு பல விஷயங்களுக்கு இக் கதைகள் தேவையில்லை. மேலும் இன்று பெரும் பாலும் கருத்து சுதந்திரம் எல்லா நாட்டிலும் உள்ளது. எதையும் நேரடியாகக் கூறலாம் என்ற நிலை உள்ளது. அப்பொழுது இந்த மாந்திரீக யதார்த்தவாதம் தேவையா என்ற கேள்வி எழுகிறது”. அதனால் தான் மாந்திரீக யதார்த்த வாதத்தில் உள்ள பிரச்சினை அதில் உள்ள முரண்படும் தன்மையும், பன்முகநோக்கும், ஆகும். இதுவே அதன் சாபக்கேடு.” இவ்வாறு மேகி ஆன் பவர்ஸ் என்பவர் கூறுகிறார். Magic (AL) Realism: Maggie Ann Bowers ISBN Books)

Pin It