அறிவியல் சிந்தனைகள் தமிழகத்தில் மிகுதி யாக இடம் பெற்று இருந்தும் ஒரு வளமான மொழி வழி வளர்ந்து வந்தும் ஏன் அச்சிந்தனை கள் நூலாக்கம் பெறவில்லை?. இந்த வினாவிற்கு அறிவியல் நூல் தமிழில் எழுதப் பெற்று மறைந்தன என்பதைவிட அறிவியல் சிந்தனைகள் நூலாக்கம் பெற வேண்டிய சூழல் அல்லது தேவை தமிழகத்தில் இல்லை என்று குறிப்பிடுவதே சரியாக அமையும்.

first science book tamilகாதலையும் வீரத்தையும் போற்றிய தமிழ்

பல ஆயிரம் ஆண்டுகளாக சிறந்து வளர்ந்து வர காரணமாக இருப்பவை தமிழில் உள்ள கவிதைகளும் காவியங்களுமே. தொன்மையுள்ள உரைநடை ஏதும் தமிழ் இலக்கியத்தில் இல்லை. இதற்குக் காரணம் அக்காலத்தில் கல்வியறிவு பெற்றோர் மிகக்குறைவு. புலவர்கள் இலக்கி யங்களின் மீது நாட்டம் கொண்டு காதலையும் வீரத்தையும் முதன்மையாக பாடினர். அக்கால அரசியல் சூழ்நிலையும் அறிவியல் அறிவு வளர்ச்சி பெறாமைக்கு ஒரு காரணமாக அமைந்தது. இத்துடன் அந்நிய நாட்டுத் தாக்குதலாலும் உள்நாட்டுப் பூசல்களாலும் சிதறுண்ட தமிழகம் அறிவியலைப் பற்றி சிந்திப்பது ஆராய்வது என்பது அதற்கு இயலாத ஒன்றாக இருந்தது. ஆனாலும் அறிவியல் நூல்கள் இருந்துள்ளதை உரையாசிரி யர்கள் மூலம் அறிய முடிகிறது.

காணக் கிடைக்காத நூல்கள்

தமிழில் வெளியான கணக்கதிகாரம், ஆய்தான கோலாகலம், கோளதீபிகை, பூலோக விலாசம், கூவநூல், அசுவ சாஸ்திரம் முதலிய, தற்போது கிடைக்காத நூல்களை உரையாசிரியர்கள் குறிப்பு களின் வாயிலாக அறிய முடிகிறது. இத்துடன் கல்லணை, மாமல்லபுரம், தஞ்சை பெரியகோவில், திருமலை நாயக்கர் மஹால் ஆகியன தமிழர் களின் கட்டிடக்கலை பழங்கால தொழில்நுட்பங் களை கூறுபவையாக உள்ளது.

இத்தகைய தொழில்நுட்பம் வருவாய்க்குரிய தாய் இருந்ததால் குறிப்பிட்ட சமூகச் சூழலுக் குள்ளேயே சுழன்று வந்தது. மேலும் தமிழர் களுக்கு வரலாற்றுணர்வு கொஞ்சம் குறைவு என்பதும் ஒரு காரணமாகும். இதற்கு “காயமே இது பொய்யடா” “காற்றடைத்த பையடா” “யாக்கை நிலையாமை” “நில்லா உலகம்” முதலிய உலகம் மறுப்பு வாழ்க்கை மறுப்புக் கோட்பாடுகளும் இதற்கு ஓர் அடித்தளமாக இருந்திருக்கலாம்.

ஐரோப்பியர் வருகை

ஆனால், ஐரோப்பாவில் 11ஆம் நூற்றாண்டில் வளரத் தொடங்கிய அறிவியல் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் ஐரோப்பியர் வரவால் புத்துயிர் பெற்றது. அறிவியல் வளர அச்சகம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இதனால் ஏராள மான இதழ்களும், நூல்களும் வெளிவரலாயின.

1835-ஆம் ஆண்டு அச்சகங்கள் நடத்தும் உரிமை அரசமைப்புகளுக்கும், கிறித்தவ சார்பு அமைப்புகளுக்கும், சமயப் பணியாளர்களுக்கும் மட்டுமே வழங்கப்பட்டிருந்தது. இக்காலகட்டத்தில் கிறித்தவ சமயத்தைப் பரப்ப வந்த கத்தோலிக்க பாதிரிகளாக வீரமாமுனிவர், கால்டுவெல், பாப் போன்றோர் வண்டமிழின் வளத்தினை வெளியுல கத்திற்கு உணர்த்தினர் என்றாலும் அறிவியல் பக்கம் நாட்டம் கொள்ளவில்லை. இதற்குக் காரணம் கிறிஸ்தவ மதத்திற்கு அறிவியல் எதிரானது என்று கருதி கத்தோலிக்கர்கள் அவற்றுக்கெல்லாம் எதிர்ப்பு தெரிவித்தது ஆகும். இதற்கு மாறாக, சீர்திருத்த கிறிஸ்தவர்கள் ஒருகையில் விவிலியத் தையும் மறுகையில் அறிவியலையும் ஆரம்ப காலத்திலேயே எடுத்துக்கொண்டார்கள்.

முதல் மேலை அறிவியல் நூல்

இந்தக் கோட்பாட்டின் அடிப்படையிலே தான் சீர்திருத்தப் பாதிரியான இரேனியஸ் முதல் மேலைநாட்டு அறிவியல் நூலை தமிழில், இவரால் தொடங்கப்பட்ட துண்டறிக்கை சங்கம் காலரா விற்கான தடுப்புமுறை துண்டுப்பிரசுரங்களை வெளியிட்டபின், 1832-ல் மூடநம்பிக்கையில் மூழ்கியிருந்த மக்களுக்கு அறிவைப்பரப்ப மெய் மையை காணச் செய்வதை நோக்கமாகக் கொண்டு “தமிழர்களுக்கு அறிவுண்டாகும்படி” என்ற முகப் பட்டையுடன் “பூமி சாஸ்திரம்” என்று நூலை வெளியிட்டார்.

பொருளியல் மேதை மார்க்ஸ் கூறுவது போல முதலாளிகள் தொழில் சமூகம் பரவ வேண்டுமென்று கருதுகிற போதே மூலதனம் பரவலும் நிகழ வேண்டுமென்று விழைவர். இரேனியசும் அப்படித்தான் அறிவியலோடு கிறித்தவமும் சேர்ந்தே பரப்பிட எண்ணினார்.

அந்நூலின் முன்னுரையில் “நான் உங்களுக் குள்ளே வந்த நாள் முதற்கொண்டு மெய்யான தேவனாகிய பார்ப்பானையறிகிற அறிவையல்லாமற் புத்தியைத் தெரிவிக்கிற மற்ற கல்விகளையும் உங்களுக்கும் போதிக்கும்படிக்கும் மிகுந்த ஆசை யாய் பிரயாசைப்பட்டு வருகிறேன். ஆகையால் நீங்கள் குடியிருக்கிற தேசத்தின் வயனங்களையும் இந்த தேசமே பூலோகமென்று அநேகர் நினைக்கிற படியினாலே நான் அந்த வயனங்களை உங்களுக்கு அறிவிக்க விரும்பி ......இந்த புத்தகத்தை செய்தேன்” என்று கூறுகிறார்.

பிராமணிய எதிர்ப்பு

இந்நூலில் பிராமணியயெதிர்ப்புடன் இந்து மதத்தையும் கூறத்தவறவில்லை. “வடதிசையிலுள்ள நல்தேய நாட்டிலிருந்து இந்து தேசத்திற்கு வந்து ........ சோதிடக் கலையைப் பரப்பி, விக்கிரம ஆராதனையை சிறப்பாக்கி, பிரம்மா, விட்டுணு உருத்திரன் என்பவர்களையும் அவர்களுடைய பிள்ளை முதலானவர்களையும் குறித்துப் பல கதைகளைக் கட்டிக் கொண்டு, தங்களைப் பிராமணர் களென்றும், கர்த்தாக்களென்றும், நேசர்களென்றும் மேன்மைப்படுத்தக் குடிகளையும் சிரசாகிகளையும் தேவன் போல் ஆண்டு வந்தார்கள்” என்று சுட்டு கிறார். இத்துடன் இரேனியஸ் இஸ்லாமிய மதத் தையும் குறைகூறத் தவறவில்லை.

இருபது ஆண்டுகள் தமிழ்நாட்டில் வாழ்ந்த இரேனியஸ் தமிழ்ச் சமூகத்தில் கட்டுமானத்தைச் சரியாக புரிந்து கொண்டவர். அம்மக்களின் புனித பூலோகவியலை (Sacred Geography) சற்றே அசைக்க வாவது செய்தால்தான் கிறித்தவ சமயத்தை ஊன்றி வைக்க இயலும் என்பதை நன்குணர்ந்து பூமி சாஸ்திரத்தில் ......... பூமி முதலானவைகள் யானைகளினாவது ஆதிசேடனாலாவது தாங்கப் பட்டதாய் இருந்தால் அந்தரத்திலே எட்டி நிற்கு மென்றால் பராபரன் கொடுத்த முறைப்படி......... சின்னப் பொருளானது பெரிய பொருளாலே இழுத்துக் கொள்ளப்பட்டு விழாதபடிக் காக்கப் படுகிறது என்று விளக்குகிறார்.

மேலும் 728 பக்கங்கள் கொண்ட இந்நூலில் 17ஆம் நூற்றாண்டு தொடங்கி இன்று வரை வழங்கும் கண்டமாய் ஐரோப்பாவும், இரட்சிப்புப் பெறுவனவாய் மற்றைய கண்டங்களும் இருப்ப தாய் காட்டப் பெறுகிறது.

தமிழின் முதல் கலைச் சொல்லாக்குநர்

பூமி சாஸ்திரத்தில் இரேனியஸ் புவிவியல் தொடர்பாக 51 கலைச் சொற்களைப் பட்டியலிட்டு வெளியிட்டுள்ளார். இரேனியஸ் தமிழின் முதல் அறிவியல் நூலாக்குனர் மட்டுமல்லாது தமிழின் முதல் கலைச்சொல்லாக்குனரும் (Terminologist)) தமிழின் முதல் அறிவியல் பாடநூலாக்குனரும் ஆவார்.

மொழிநடை

இவர் தம் நூலில் பிறமொழி பெயர் சொற் களைத் தமிழிலக்கண மரபுக்கேற்ப துருக்கியை துருக்கை எனவும், பிரான்ஸ்சை பிராஞ்சியெனவும் மாற்றி அதுபோல ‘ஜெ’ என்னும் ஆங்கில ஒலி யினை ‘ய’ கரமாக ஒலித்து ஜானை - யோவானா கவும், ஜேக்கப்பை யாக்கோபுவாகவும் மாற்றி அத்துடன் தமிழிலக்கண மரபுக்கேற்ப இகரத்தை முன்னிறுதி எழுதுகிறார் எ.கா. ஜப்பான் - யப்பான்- இயப்பான்.

இரேனியஸ் இறுதிக்காலம்

முதல் மேலை நாட்டு அறிவியல் நூலை அறிமுகப்படுத்திய இரேனியஸ் 5-6-1838-இல் பாளையங்கோட்டையில் இறந்தார். இவர் உடல் கிருத்தவ வழக்கம் போல் கிறித்தவ தேவாலயத்தில் உள்ள கல்லறையில் புதைக்கப்படாது, அடைக்கல புரம் என்று அழைக்கப்படும் பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது என்பது ஒரு சோகக்கதை.

Pin It