வழக்கமான நாட்டார் தொகுப்புப் பாடல் களிலிருந்து இத்தொகுப்பு வேறுபட்டதாக அமைகிறது.  தமது முனைவர் பட்ட ஆய்விற்காக தி.நடராசன் தொகுத்த இப்பாடல்கள்,கீழத் தஞ்சை என்ற நிலப்பகுதியின் சமூகப் பொருளாதாரம் மற்றும் வரலாற்றைக் கண்டறிவதற்கான அரிய ஆவணமாக இருப்பதைக் காணமுடிகிறது. மக்களின் வாய்மொழி மரபில் பதிவாகியுள்ள சமகால வரலாற்றை இத்தொகுப்பு வழி நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது. ஒடுக்கப்பட்ட சாதி மற்றும் உழைக்கும் மக்களாக வாழ்வோரின் குரல்களாக இவை உள்ளன. இப்பாடல்கள் வழி பெறலாகும் தன்மைகளைப் பின்கண்டவாறு தொகுக்கலாம்.

- இத்தொகுப்பில் உள்ள பாடல்களில் பெரும் பான்மையான பாடல்கள் பெண்களால் பாடப்பட்டவை. ஒவ்வொரு பாடலிலும் பெண் குரலை நம்மால் கேட்க முடிகிறது.  பெண்ணாகப் பிறந்தாலும் சாதி மற்றும் பொருளாதார நெருக்கடியால் ஒடுக்கப் படும் பெண், அதனை எவ்விதம் மடை மாற்றம் செய்துகொள்கிறார் என்பதற்கான அரிய பதிவாக இவை அமைந்துள்ளன.

- கீழத் தஞ்சைப் பகுதி என்பது நிலவுடைமையாளர்கள்  பண்ணை ஆட்கள் என்ற முரணில் கட்டப்பட்டது ஆகும். தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்து இதனால் இப்பகுதி தனித்து அமைந்துள்ளது. இத்தனித்தன்மை மக்களின் வழக்காறுகளில் பதிவாகியுள்ளதை இத்தொகுப்பு வழி அறிகிறோம்.

- மக்களிடம் பெரிதும் அறியப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் அதன் தலைவர்களை, மக்கள் தமது வழக்காறுகளில் எவ்விதம் பதிவு செய்கிறார்கள் என்பதை அறிய முடி கிறது.  வெகுசன உளவியலில், அரசியல் கட்சி மற்றும் தலைவர்கள் பதிவாகும் தன்மைகள் எப்படி எல்லாம் அமைகின்றன என்பதைக் காண முடிகிறது.

- கீழத் தஞ்சைப் பகுதியில் நாகூர் தர்க்காவும் வேளாங்கண்ணி மாதா கோவிலும் பரவலாக எல்லோராலும் அறியப்பட்டவை. மாரியம்மனைப் பாடும் தொனியிலேயே கிறித்துவ, இஸ்லாமியக் கடவுளர்களையும் இப்பகுதி மக்கள் தமது வழக்காறுகளில் பதிவு செய்வதைக் காண முடிகிறது.

- நாட்டார் வழக்காறுகளில், சொல்லப்படும் செய்திகளைவிட, அதற்கான வெளிப்படும் ஒலிக்கூறு சார்ந்த சொற்கட்டுகள் ஆழமான பொருளுடையவை.இத்தொகுப்பில் கவன மாகப் பதிவு செய்யப்பட்டிருக்கும் சொற்கட்டுகள் எவ்வகையான பொருளாழத்தை வெளிப்படுத்தும் ஒலிக்கூறுகளைக் கொண்டுள்ளன என்று புரிந்துகொள்வது அவசியமாகிறது.

தாலாட்டு எனப்படும் பெண்குரல், பெண்ணின் விருப்பம், இயலாமை, கனவுகள் ஆகிய பலவற்றைச் சமகால மொழியில் சொல்வதாகும். இத்தொகுப்பில் உள்ள தாலாட்டுப் பாடல்கள், தங்களுக்குக் கிடைக் காதவற்றை எல்லாம் கிடைத்ததாகப் பேசுவதைக் காண முடிகிறது. தங்களின் சமகால இருப்பிலிருந்து கற்பனையான கனவுலக இருப்புப் பதிவாகிறது.  வட்டார வரலாறு பேசப்படுகிறது.  புதிது புதிதாக சமூகத்தில் உருவாகும் தன்மைகளைப் பதிவு செய்கிறது.

இத்தொகுப்பில் உள்ள தாலாட்டுப் பாடல் களில் இரயில் வண்டி பறப்பது பதிவாகியுள்ளது.  ஊர்ப்புறங்களில் இரயில் பாதை என்பது விநோத மானது. எல்லா இடங்களிலும் இருப்பதில்லை.  எனவே தாலாட்டில் இரயில் ஒரு பாடுபொரு ளாகிறது.  வட்டாரத்தில் விளையும் பயிர்கள்,பூக்கள்,மரங்கள் ஆகியவை பாடலுக்குள் இடம் பிடித்துக் கொள்கின்றன.  இவ்வகையில் இயல்பான மக்கள் வரலாறு,தாலாட்டு என்னும் வடிவமாகிறது.  இத்தொகுப்பில் உள்ள தாலாட்டுப் பாடல்கள் அவ்வகையில் அமைந்துள்ளன.

நாட்டார் பாடல்களின் அடிப்படையான மரபு வளம் வேண்டிப் பாடுவது. தங்கள் வாழ்க் கையில் உள்ள வளங்களையும் தங்களுக்குத் தேவைப் படும் வளங்களையும் நாட்டார் பாடல்களும் சடங்கு களும் நம்பிக்கைகளும் தம்முள் கொண்டிருப்பதை நாம் அறிவோம்.  மங்களப் பாடல்கள் என்னும் சோபனப் பாடல்கள்,(இத்தொகுப்பில் பேச்சு வழக்கில் சோவனப் பாடல்களாகத் தொகுக்கப் பட்டுள்ளன. இத்தொகுப்பிற்கு ஒரு தனித்த சிறப்பை இப்பாடல்கள் தருகின்றன. பெண் பூப்படைதல் என்பது வளமாகக் கருதிக் கொண்டாடப்படுவது சோபனப் பாடல்களின் முதன்மையான பாடு பொருளாகிறது.  ‘பெண் திரண்டு விட்டாள்’ என்று இப்பாடல்கள் சொல்லுகின்றன.  பெண்ணின் பருவ வளர்ச்சியில் உருவாகும் இவ்வளத்தைக் கொண்டாடும் இப்பாடல்களுக்குள்,பெண் என்ற உயிரியின் மேன்மைகள் பாடப்படுகின்றன.  வண்ணான் உடுப்பு கட்ட, வாணியன் எண்ணை குடிக்க, சாணியன் சேல கட்ட, கன்னான் வளவிபோட திரண்டா...” என்னும் சோபனப் பாடல் வரிகள் பெண்ணிற்கான சமூகம் சார் சடங்குகளைப் பதிவு செய்திருப்பதைக் காண்கிறோம்.)

வண்ணார், வாணியர், சாணியர், கன்னார் என்னும் தொழில் சார்ந்த சாதிப் பிரிவுகள் பற்றிய பதிவாக அமைகிறது. இவை மக்களின் அன்றாட வாழ்வில் கொள்ளும் இடத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது. இவ்வகையான சடங்குகளின் இன்றைய நிலைமைகள் குறித்தும் விளங்கிக் கொள்ள இயலுகிறது.  இவ்வகையில் சமூக வரலாற்றுத் தரவுகளாக வாய்மொழி வழக்காறுகள் இருப்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இவை பெண்ணைக் கொண்டாடிய காலமும் பெண்ணை அடிமைப் படுத்திய காலமும் எப்போது என்ற உரையாடலையும் நாம் நிகழ்த்த வேண்டும்.  இவ்வகையில் இத்தொகுப்பில் உள்ள கும்மிப் பாடல்கள் எவ்வகையில் பெண் மொழியாக அமைந்துள்ளன என்பதைக் காண முடியும்.

ஆண்,பெண் உறவுசார்ந்த பாடல்கள் மிக நளினமான முருகியல் தன்மையில் இத்தொகுப்பில்இடம்பெற்றுள்ளன. ஏரிக்கரைகள்,பாக்குமரத்தோப்புகள்,ஆற்றங்கரையோரங்கள், நாற்று நடும் இடங்கள் எனப் பல்வேறு வெளிகளிலும் ஆண்-பெண் சந்திப்பு என்னும் காதல் பற்றிய இப்பாடல்கள் பெண்ணின்இருப்பை,மறுஉற்பத்தியில் பெண்ணுக்கான முதன்மையைப் பாடுவதைப் பார்க்கிறோம்.  ஆனால், இதே பெண், குடும்பம் என்னும் சிறையில் மாட்டிக்கொண்டு தவிப்பது குறித்தும், வரதட்சணைக் கொடுமையால் அடையும் துன்பங்கள் குறித்தும் இத்தொகுப்பில் உள்ள பாடல்கள் பேசுகின்றன. பெண் என்னும் உயிரிக்கு மட்டும் ஏன் இந்த இரட்டை நிலை?‘ஆவதும் அழிவதும் பெண்ணால்’ என்று இழிவுபடுத்தப்படுவதேன்?

பண்பாட்டுத் தளத்தில் மிகப் பெரிய உயர்வும் மிகக் கேவலமான தாழ்வும் ஏன் கற்பிக்கப்படு கின்றன? என்ற கேள்விகளுக்கு விடையளிக்கும் வகையில் இத்தொகுப்பு மிகுதியான பாடல்களைக் கொண்டிருப்பதைக் காண்கிறோம்.  இத்தொகுப்பின் மூலம் வெளிப்படும் பெண் குரல் மிக விரிவாகப் பேச வேண்டிய வெளியைக் கொண்டிருப்பதைப் பதிவு செய்யவேண்டும். பெண்ணின் பல்பரிமாண வாழ்வைப் பேசும் பாடல்கள் இத்தொகுப்பில் மிகுதியாக இடம் பெற்றிருப்பதேன்? அவற்றைப் பாடியவர்கள் எல்லாம் ஒடுக்கப்பட்ட சாதிப் பெண்களாக இருப்பது ஏன்? என்ற உரையாடலை நாம் தொடர வேண்டும்.

உலகின் எந்தப் பகுதியிலும் இல்லாத சாணிப் பால் குடிக்கச் செய்தல்,சாட்டையால் அடித்தல் என்னும் நிலவுடைமை அதிகார வெறி நடைமுறைப் படுத்தப்பட்ட நிலப்பகுதி கீழத்தஞ்சை.  இத்தன்மை களுக்கு எதிராக 1940களில் செங்கொடி இயக்கம் அங்கு வலுவாகக் காலூன்றியது.  இந்த வரலாற்றை, இப்பகுதி மக்களின் வழக்காறுகள் எவ்வகையில் பதிவு செய்துள்ளன என்பதற்கு விடையாக இத் தொகுப்பு அமைந்துள்ளது.

இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள செங்கொடி இயக்கப் பாடல்கள்,விவசாயத் தியாகிகள் குறித்த பாடல்கள்,போராட்டப் பாடல்கள் அனைத்தும் வேறு எந்தப் பகுதியிலும் இல்லாதவை.  சமகால வரலாற்றை, சமகால நிகழ்வுகளை, சமகால இருப்பை நாட்டார் வழக்காறுகள் எவ்வகையில் பதிவு செய்துள்ளன என்பதற்கு இத்தொகுப்பு அரிய ஆவணமாக உள்ளது.  “உழைப்பவன் தங்களுக்கு உழுத நிலம் சொந்தம் என்று உறுதியுடன் சொல்லுங் கொடி, செங்கொடி” எனப்பாடுவதன் மூலம் கீழத் தஞ்சையின் நிலவுரிமைப் போராட்டத்தை அறிய முடிகிறது.

செங்கொடி இயக்கத்தில் இணைந்து, போராடி, அவ்வியக்கத்திற்குத் தமது உயிரைத் தியாகம் செய்த தோழர்கள் முருகையன், சிவராமன், குப்பு, சீனிவாசராவ், பக்கிரிசாமி, மணியம்மை ஆகிய பலர் குறித்த பதிவுகளை இப்பாடல்கள் கொண்டுள்ளன. இந்த வரலாறு வேரும் வேரடி மண்ணும் கலந்த வரலாறாகப் பதிவாகியிருப்பதைக் காண்கிறோம். மக்களோடு மக்களாக வாழ்ந்த மனிதர்கள்,மக்கள் மொழியில் பதிவாகியிருப்பதாகக் கருத முடியும்.  இவர்களது போராட்டத்தில் உழைக்கும் மக்களுக்குக் கிடைத்த வெற்றிகளும் இப்பாடல்களில் பதிவாகியுள்ளன. கீழவெண்மணியில் உயிரோடு மக்கள் கொளுத்தப்பட்ட கொடுமையையும் பல பாடல்கள் பதிவு செய்திருப்பதைக் காண்கிறோம். இவ்வகையில் கீழத் தஞ்சையின் சமகால வரலாற்றுப் பதிவாக இவை அமைந்துள்ளன. இத்தொகுப்பின் தனித் தன்மை இவ்வகைப் பாடல்களின் தொகுப்பில் தான் அடங்கியுள்ளது. சமகால வரலாற்றுப் பெட்டக மாகவும் இத்தொகுப்பு அமைகிறது.

இத்தொகுப்பில்பெரியார்,சி.என்.அண்ணாதுரை,மு.கருணாநிதி,எம்.ஜி.இராமச்சந்திரன் ஆகியோர் குறித்த பாடல்களும் இடம்பெற்றுள்ளன. காங்கிரஸ் கட்சியையும் கருணாநிதியின் இலவசத் திட்டங்களையும் விமர்சனம் செய்த பாடல்களும் இடம்பெற்றுள்ளன. வெகுசன உளவியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய தலைவர்களைப் பெரிதும் போற்றிப் பாடும் பாடல்களும் அவர்களின் செயல் பாடுகளை எதிர்நிலையில் நின்று பேசும் பாடல் களும் இடம்பெற்றிருப்பதன் மூலம்,சமகால வரலாறு மக்களிடத்தில் எப்படியெல்லாம் பதிவாகியுள்ளது என்பதைக் காணமுடிகிறது.

மாரியம்மனையும் முருகனையும் வழிபடும் பாடல்கள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.  இக்கடவுளர்களை எவ்வகையில்வழிபடுகிறார்களோ,அதற்குக்கொஞ்சமும் குறைவில்லாமல் நாகூர் தர்காவில் இருக்கும் மீரானையும் வேளாங்கண்ணி மாதாவையும் இம்மக்கள் வழிபடுவதைக் காணமுடிகிறது. இம்மக்களிடம் மத முரண்பாடுகள் வேரற்று இருப்பதைக் காண்கிறோம்.

அவர்களுக்கு வழிபாடு என்பது மட்டுமே தேவைப்படுகிறது.  அதற்குள் இருக்கும் மதம் பற்றி அவர்களுக்குக் கவலையில்லை. உழைக்கும் மக்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் மதமற்றவர்களாக எதார்த்தத்தில் வாழ்வதை இப்பாடல்கள் உறுதிப் படுத்துகின்றன.  மதவெறி ஆதிக்கம் செலுத்தும் சூழலில் மதமற்ற மனநிலை சாதாரண மக்களிடம் செயல்படுவதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.  இத்தன்மைபற்றிய புரிதலுக்கு இத்தொகுப்பு அரிய ஆவணமாக உள்ளது.

இத்தொகுப்பின் சிறப்புக்களில் ஒன்று,பாடல்களின் சொற்கட்டுக்களைச் சிரத்தையுடன் பதிவு செய்திருப்பது.  இரட்டித்துப்பாடும் வரிகள், பேச்சு வழக்குச் சொற்களைக் கவனமாகப் பதிவு செய் திருக்கும் முறை, ‘ஏ நன்னானே’,‘நன்னானே நானன்னே’, ‘நன்னே நன்னே நானே’, ‘நானே நன்னானே’, ‘தன்னானே நானே’ மற்றும் ‘ஏ’ என்னும் ஒலிக்கூறு ஆகியவை சார்ந்து பாடல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வொலிக் கூறுகள் உழைக்கும் மக்களின் உடல் மொழி ஆகும். உடல் இயக்கத்திற்கும் பாடும் முறைக்கும் பாடலின் பொருண்மைக்கும் ஒன்றுக்கொன்று தொடர்புள்ளது. இதனைத் தனித்தனியாகப் பிரித்துவிட்டால் பாடல் செத்துப்போகும்.  பாடலின் உயிர்த்தன்மையே இவ்வொலிக் கூறுகளில்தான் அடங்கியுள்ளது.  ஒலிப் பேழையில் பதிவு செய்யும்போது கிடைக்கும் தன்மையை, அச்சு வடிவத்தில் இழக்க நேரிடுகிறது. அச்சில் இழந்து போகாமல் ஓரளவு அந்த ஒலிக் கூறுகள் இத்தொகுப்பில் பதிவாகியுள்ளன. இவ் வகையான தொகுப்புகளைக் கொண்டு வரும்போது பதிவு செய்யப்பட்ட இப்பாடல்களின் ஒலிப் பேழை யையும் உடன் இணைப்பது அவசியம். 

இக்காலத்தில் அது சாத்தியமே. வருங்காலத்தில் இத்தொகுப்பு மீண்டும் அச்சாகும்போது பாடல்களின் ஒலிப் பேழையையும் இணைத்தே விற்பனை செய்வது அவசியம்.நடராஜன் தொகுத்துள்ள இப்பாடல்கள் பல்வேறு நிலைகளிலும் புதிய செயல்பாடாக அமைகிறது. வழக்காறு -வரலாறு -அரசியல் எனப் பல்பரிமாணப் புரிதல்களுக்குரிய ஆவணமாகவும் அமைகிறது.

குறிப்பு : திரு.தி.நடராஜன் தொகுத்துள்ள கீழத் தஞ்சை மக்கள் பாடல்கள் என்னும் நூலுக்கு எழுதப்பட்ட அணிந்துரை.

Pin It