ஜே.கேயின் எழுத்து:

புதிய பாணியில் ஜே.கேயின் சிறுகதைகள் அமைந் திருந்தன. அதை எப்படிச் சொல்லலாம்? புதுமைப் பித்தனின் பாத்திரங்களெல்லாம் அவர்களை யாரோ இடுப்பில் கயிற்றைக் கட்டி இழுத்துக் கொண்டிருப்பது போல உலவும். அவ்வப்போது அக்கயிற்றைப் பிடித்து இழுப்பது புதுமைப்பித்தன்தான் என்பது நாமறிந்ததே. ஆனால், ஜேகேயின் பாத்திரங்கள் அப்படிக் கயிறேதும் கட்டப்படாதவர்களாகவே இருப்பார்கள். புதுமையான முடிவுகள் எடுப்பார்கள்; புதுமையான விசயங்களைப் பேசுவார்கள். அப்பாத்திரங்களுக்கு முன்புறமாக கையில் கம்பை வைத்துக்கொண்டு ஜேகே நிற்கிறாரோ எனவும் தோன்றும். ஜேகே சிறுகதைகளில் ஒரு தனிக் கட்டமைப்பு உண்டு. உருவம் பற்றிய அக்கறை ஜேகேயிடம் எப்போதும் இருந்ததில்லை. உள்ளடக்கமே உருவத்தைத் தீர்மானிக்கிறது என்பதை உறுதியாக நம்பியவர் அவர். அவர் நம்பிக்கை பொய்யானதல்ல. பாத்திரங்களை வார்ப்பதில் ஜேகேயின் சிமெண்ட் ஒரு தனி பிராண்ட்.

ஜேகேயின் பேச்சு:

jayakanthan 315மிகவும் பரபரப்பை உண்டாக்கக்கூடிய அளவில் அவர் பேசுவார் எனக் கேள்விப்பட்டதுண்டு. சிவகங்கை கல்லூரியில்கூட தகராறுகள் நடந்ததாக அறிகிறேன். பேராசிரியர் நா.தர்மராஜன் இது பற்றி விரிவாகக் கூறமுடியும். இரண்டுமுறை ஜேகேயுடனான உரையாடலை வேடிக்கைப் பார்த்திருக்கிறேன். நேரம் ஆக ஆக, உரையாடலின் போக்குப் போவதை நேரில்தான் காணவேண்டும். இறுக்கத்தோடு நூல்பிடித்தமாதிரி ஜேகே பேசிக்கொண்டுபோவார். மற்றவர்களில் சிலர் நூலறுந்த பட்டம் போல சகல திசைகளிலும் பறப்பார்கள். நூல் அறுந்ததற்கான காரணம் கலந்து கொண்டவர்கள் மட்டுமே அறிவர்.

ஜேகேயின் உருவம்:

இளம் வயதில் மீசை மழித்த தோற்றம். பின்னர் நீண்ட கிருதா மீசையுடன் இணைந்திருக்கும். முழுக்கை சட்டை இன் செய்யப்பட்டு பெல்ட் போட்டிருப்பார். பல சமயங்களில் அப்பெல்ட் உருவப்படும் சூழ்நிலை உருவாகும் எனவும் அறிந்திருக்கிறேன். வயதான பிறகு பெரும்பாலும் வேட்டியிலேயே அதிகமாகக் காணப்பட்டார்.

ஜே.கே.யின் பழக்கம்:

பேசும்போது ஜேகே நன்றாகச் சிரிப்பார். அவர் கஞ்சா பிடிப்பதையும் மது அருந்துவதையும் ஒரே சமயத்தில் செய்வார். நானறிந்த வரையில் இரண்டையும் ஒரே சமயத்தில் பயன்படுத்தும் பழக்கமுள்ளவர்கள் இல்லை. அந்தமாதிரியான நேரங்களில் அவர் நன்றாக வாய்விட்டு குலுங்கக் குலுங்கச் சிரிப்பார். இரண்டு வேதபானங்களும் அவரை மகாமுனிவனாக்கியிருந்தன. இப்படியான தாங்கும் உடல் அவருக்கு இவ்வளவு நாள் அமைந்திருந்தது ஆச்சரியமான விசயம்தான். இரண்டின் அளவிற்கும் காலத்திற்கும் ஒரு எல்லையை வகுத்துக் கொண்டதோடு அதைத் தாண்டாமல் கடைசிவரைக் கடைப்பிடித்தும் வந்திருக்கிறார் ஜே.கே.

ஜேகேயின் சினிமா:

ஜேகேயின் சினிமா, ஜேகேயின் சினிமா மட்டுமே. அதற்கு முன்வழிகாட்டலும் இல்லை. பின்தொடர்ச்சியும் இல்லை. ‘என்னைப் போல் ஒருவன்’தமிழ் சினிமா ஆர்வலர்கள் அனைவரும் பார்க்கவேண்டிய முக்கியமான படம். தயாரித்து, இயக்கி, தியேட்டரை வாடகைக்குப் பிடித்துத் தானே டிக்கெட்டும் கொடுத்து - ஒரு இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்களைப் படித்துப்பாருங்கள், அலுப்புத்தராத நூல் அது. கீழே வைக்க முடியாது. அது ஒரு தினுசு. மக்கள் சினிமாவைக் கைவிட்டபோது அவரும் சினிமாவைக் கைவிட்டார்.

நண்பர் செல்லமணி ஒரு தகவலை நினை வூட்டினார். ஜேகேயின் ‘சினிமாவிற்குப்போன சித்தாளு’நாவல் வெளிவந்து ஒரே பரபரப்பு. அந்நாவலில் குறிப்பிடப்படும் நடிகர் எம்.ஜி.ஆர்தான் என்பது ஊரறிந்த விசயம். திரையுலகின் தெய்வமாக அவரை அனைவரும் மாற்றிக்கொண்டிருந்தபோது இப்படி யரு நாவல் வந்தது, அதுவும் ஜேகேயிடம் இருந்து வந்தது, கேட்கவா வேண்டும். ஒருநாள் எம்ஜிஆரின் உண்மை விசுவாசிகளில் சிலர் ஜேகேயிடம் வருகிறார்கள். வந்து, ‘உங்களை அவர் பார்க்கவேண்டும் என்கிறார்’என்கிறார்கள். உடனே ஜேகே என்ன சொன்னார் தெரியுமா? ‘ரொம்ப மகிழ்ச்சி, எப்போது வேண்டு மானாலும் வரச்சொல்லுங்கள்’. கூப்பிட்டவருக்கு எப்படியிருந்திருக்கும். சில ஆண்டுகளுக்கு முன்னால் சூப்பர் ஸ்டார் எனப்படும் ஒருவரை தமிழ் எழுத் தாளர்கள் பஜனை பாடினார்கள், சுந்தரராமசாமி உட்பட. உடனே அதைக் கண்டித்து ஒரு கடிதமே எழுதியிருந்தார் ஜேகே.

ஜேகேயின் நினைவு

சிவகங்கை பொதிகை கலை இலக்கிய வட்டத்தின் கூட்டத்திற்காக ஜேகேயை அழைத்திருந்தோம். அச் சமயம் சிவகங்கை மாவட்ட ஆட்சியராக இருந்தவரைப் போய் நேரில் சந்தித்து (அவர் இலக்கிய ஆர்வலர் எனக் கேள்விப்பட்டிருந்தபடியால்) நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கக் கோரினோம். அவரும் சந்தோசமாக ஏற்றுக்கொண்டார். அழைப்பிதழ்கள், சுவரொட்டிகள் அச்சிட்டோம். நகரெங்கும் சுவரெழுத்து ஒரு இடத்தில் மட்டும் 100க்கு 10 என்ற அளவில் நீண்ட சுவரெழுத்து ஜேகேயின் படத்தோடு வரைந்திருந்தோம். நண்பர் சரவணக்குமார் இலக்கியமேதை என்று விளம்பரங்களில் ஜேகேவுக்குப் பட்டம் கொடுத்திருந்தார். அப்போதிருந்த ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் கூட்டம். சுமார் 200பேருக்கு மேலிருக்கும். மண்டபம் நிரம்பி வெளியில் ஆட்கள் நின்றிருந்தார்கள்.

பள்ளி மாணாக்கர்களுக்கு கட்டுரைப் போட்டி நடத்தி ஜேகே அவர்களுக்குப் பரிசுகளெல்லாம் வழங்கினார். ஜெயகாந்தன் எனும் பெயரின் மீதிருந்த ஈர்ப்பு அது. கடைசி நேரத்தில் கலெக்டர் விழாவிற்கு வரவில்லை. உளவுத்துறை எதையோ உளறி வைத்ததாகப் பின்னர் அறிந்தோம். இந்த நிகழ்ச்சியில் அவர் கலந்திருந்தால் அது அவருக்கு ஒரு மறக்கமுடியாத அனுபவமாக இருந்திருக்கும். பிறகு தோழர் சந்திரகாந்தனைத் தலைமை தாங்கச்சொல்லி நடத்தினோம். இத்தகைய நினைவுகள் இப்போது வருவதற்கு தோழர் சந்திரகாந்தன் தான் முழுக் காரணமாகும். அவர்தான் ஜேகேயை சிவகங்கைக்கு அழைத்துவந்தார். அன்று இரவு நடந்த உரையாடலின் போது கவிஞர் மீராவும் பேராசிரியர் தர்மராஜனும் இடையில் வந்து போனார்கள்.

சில நேரங்களில் சில மரணங்கள்...!

ஜெயகாந்தனுக்கு அஞ்சலி!

என சிவகங்கை பொதிகை கலை இலக்கிய வட்டம் சுவரொட்டி அடித்து ஒட்டியிருந்தது.

ஜேகே இன்று இல்லை.

இப்போது சித்தாள்கள்தான் சினிமாவிற்குப் போவதில்லையே!

பிறகு ஜேகே மட்டும் எப்படி இருப்பார்?

Pin It