பாரத நாடு பிளவுண்டு விடுதலை பெற்றது! காந்தியடிகளின் படுகொலை, விடுதலைப் பாதையில் பாரதம் தொடங்கிய நெடும் பயணம், இந்நிகழ்ச்சித் தொடருக்கு உந்து சக்தியாக விளங்கிய மக்கள் எழுச்சியின் பெருமை சிறுமைகள், சாதனை - சோதனைகள், தவறு - திரிபுகள் - இவற்றின் வடுக் களையும் எண்ணச் சுமைகளையும் இள நெஞ்சிலே தாங்கித் தமிழிலக்கிய உலகில் நுழைந்தவர் ஜெய காந்தன்.

jayakanthan 267இந்நிகழ்ச்சித் தொடரின் பிரதிபலிப்பாக ஒரு நபருக்குள்ளே உருத்திரண்ட உள வளத்தின், உள்ளொளியின் கதையை ‘ஓர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள்’ எனும் நூலில் தமது சுயதரிசனமாக ஜெயகாந்தன் கூறியிருக்கிறார்.

அந்தப் புறநிலை, அகநிலை வளர்ச்சிகளின் ஊடுருவலான அனுபவ, அறிவுப் பின்னணியே அவரது இலக்கியத்துக்குப் பின்னணியாகும்.

எனவே பாரதத்தின் சென்ற காலம், நிகழ் காலம், எதிர்காலம் மூன்றையும் காட்டும் காலக் கண்ணாடியாகவும், இப்படி ஒன்றோடொன்று முரண்பட்டு மோதிக்கொண்டு முன்னேறும் காலத்தின் பாலமாகவும் அவருடைய இலக்கியம் இலங்குவதில் வியப்பேதுமில்லை.

இந்தியப் புரட்சி, இந்திய விடுதலை இன்னும் முடிவு பெறவில்லை. “சத்திய சோதனை” தொடர்ந்த வாறு இருக்கிறது என்று நேரு முதல் இந்திரா அம்மையார் ஈறாகச் சொல்லிக் கொண்டிருப்பதை நாடறியும். எனவே பழைய பணச் சக்திகளுக்கும், புதிய பணச் சக்திகளுக்கும், மக்கள் சக்திக்கும் இடையே நலன்கள் பண்புகள் விஷயத்தில் நடக்கும் போராட்டம் அவருடைய இலக்கியத்துக்கு ஆதார சுருதியாகும். அவருடைய எந்தச் சிறுகதை அல்லது நாவலை எடுத்துப் பார்த்தாலும் இதைக் கண்டு கொள்ளலாம்.

எனவே தான், அந்தப் போராட்டம் போலவே இவருடைய இலக்கியமும் ஒவ்வொரு படியிலும் பலத்த சர்ச்சைப் புயலைக் கிளப்புகிறது. இப் புயலில் சிக்காத இளைஞனோ, முதியவரோ தமிழ கத்தில் இல்லை. இப்போது இந்தியாவின் பிற மொழிகளிலும் இவருடைய இலக்கிய வெள்ளம் பாய்ந்து வருவதால் இந்தியா முழுவதிலும் இருக்க மாட்டார்கள் என்று உறுதியாகச் சொல்ல முடியும்.

அவர் துவக்கக் காலத்தில் கீழ்த்தட்டு மக்களைக் கதைப் பொருளாக எடுத்துக் கொண்டார். பிறகு வரலாற்றின் வளர்ச்சியை அடியொற்றி மேல் தட்டு ஜாதியினரையும் வர்க்கத்தினரையும் கதைப் பொருளாக எடுத்துக் கொண்டார். இது இயல்பு. புதுமைப் புரட்சி உருத்திரண்டு வருவதைக் கணிப் பதற்கு மக்களின் நிலை மாற்றத்தைக் கவனித்தால் மட்டும் போதாது. ஆட்சி புரிந்து வரும் மேல் தட்டுச் சக்திகளின் நிலை மாற்றத்தையும் - நிலை தடுமாற்றம் என்று சொல்வதே சரியாயிருக்கும் - கவனித்து வர வேண்டும் என்று லெனின் கூறியதை இங்கு நினைவூட்டிக் கொள்கிறேன். முற்போக்கு எழுத்தாளன் என்று சொல்லிக் கொள்ள விரும்பு வோர் இவ்விஷயத்தைப் பற்றிச் சிந்திப்பது நலம்.

மற்றொரு விஷயம். இலௌகீக நலன்களின் தொலைவான பிரதிபலிப்பாக உள்ள பண்புகள் கருத்தோட்டங்கள், மனச்சாய்வுகள் முதலிய வற்றிலே முரண்பட்டும் முரண் முடித்தும் நிகழ்கிற மாற்றங்களைச் சித்தரிப்பதே எழுத்தாளனின் பணி. இந்த மாற்றங்களை நுட்பமாக, கூராக, தைரிய மாக, இழையிழையாக சிக்கறுத்து ஜெயகாந்தன் சித்தரிக்கிறது போல் வேறெந்த எழுத்தாளனும் செய்யவில்லை. இதற்கு அவர் ஏதோ ஒரு விதத்தில் புதுமைப் பித்தனுக்கும், கு.ப.ரா.வுக்கும், லா.ச.ராவுக்கும், தி.ஜானகிராமனுக்கும், விந்தனுக்கும், ரகு நாதனுக்கும் கடன்பட்டிருக்கிறார். மற்றவர்களின் வளர்ச்சி ஜெயகாந்தனின் புரட்சியாகப் பரிண மித்திருக்கிறது.

ஜெயகாந்தன் மக்களை உள்ளன்போடு நேசிக் கிறார். எனவேதான் “நெஞ்சு பொறுக்குதிலையே - எனினும் நெஞ்சு வெறுக்குதிலையே!” எனும் ஈடுபாட்டுடன் மக்கள் பற்றிய அத்தனை விவகாரங் களையும் துணிந்து அம்பலத்திற்கிழுத்து ஒளி பெய்து காட்டுகிறார். இது அவருடைய உளத் தூய்மைக்கு ஒவ்வொரு அடியிலும் வினாடியிலும் சான்றளிக்கிறது. இந்தச் “சத்திய சோதனையில்” அவர் மரபுப் பண்புகள் தம்மளவில் பிரக்ஞை பெற்றுச் சீர்திருத்திக் கொள்ள முயல்வதையும், அவற்றுடன் மோதும் புதிய பண்புகள் - அசலும் போலியுமான புதிய பண்புகள் - அரைகுறையான வெற்றி பெறுவதையும் வஞ்சமில்லாமல் அப்படியே அருவடைய ஒவ்வொரு கதாபாத்திரமும் எடுத்துக் காட்டுகிறது. எனவேதான் மரபுப் பண்பாளர் களும், புதிய போலிப் பண்பாளர்களும் அவருடைய எழுத்துகளைத் தாக்குகின்றனர். மரபுப் பண்புகளி லுள்ள உளத்தூய்மையுள்ள அம்சங்களை, சமுதாயத் தேவையுள்ள அம்சங்களை நிராகரிக்காமல் அவற்றின் ஸ்தூலமான சலனங்களிலே அவர் சித் தரிக்கும் பொது சில அரைவேக்காடு ‘முற்போக் காளர்கள்’ அவரோடு அனாவசியமாக மோதிக் கொள்வதையும் தமிழுலகம் கண்டு வருகிறது.

ஆண் - பெண் உறவு விஷயத்தில் இவர் மித மிஞ்சி அக்கறை காட்டுகிறார் என்று முகத்தைத் திருப்பிக் கொள்கிற முற் - பிற்போக்காளர்களும் இருக்கிறார்கள். ஆண் - பெண் உறவு விஷயத்தில் மாற்றம் விழையாத, மாற்றம் கொணராத சமுதாயப் புரட்சி புரட்சியேயல்ல என்பது வரலாற்றின் தீர்ப் பாகும். சொத்துறவுகள் விஷயம் புரட்சிக்கு எவ் வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் பாலுறவு களுங்கூடக் குடும்பத்தின் தோற்றத்தைப் பற்றி வர லாற்றுப் பார்வை பெற்றவர்கள் இவ்வுண்மையை மறுக்க முடியாது. இத்துறையில் ஜெயகாந்தன் காட்டும் விசாலப் பார்வையும், மென்மையான மனநெகிழ்ச்சியும், தூய ஜனநாயக நெறியும் பாரதி யின் போதனைக்கு உண்மையாக நடந்து கொள் கின்றன. ஆதிக்கப் பிடிப்புள்ள சக்திகள் இத் துறையில் வெளிப்படுத்தும் போலி கோஷங் களையும் பாசாங்குகளையும் அவர் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருவது போல் வேறெந்த எழுத் தாளனும் அவ்வளவு துணிச்சலோடு செய்ததில்லை, செய்யவில்லை. உண்மையாகப் பார்த்தால், இவர் அம்பலப்படுத்துகிறார் என்று சொல்கிறதைவிட நடைமுறை வாழ்க்கை அம்பலப்படுத்தி வருவதை மறைக்காமல், மழுப்பாமல் இவர் இலக்கியத்தில் பிரதிபலிக்கிறார் என்று சொல்வதே சரி. அதன் வழியாக அந்த மாற்றங்களுக்கு வீச்சும் விரைவும் கூட்டித் தருகிறார் இவர்.

இவ்வாறு இலக்கியத் துறையில் புரட்சி விதைத்து வரும் ஜெயகாந்தனின் பணிக்கு உழு படைகளாக இருப்பவை இரண்டாகும். ஒன்று, அவரிடம் காணப்படும் அளவற்ற தத்துவதரிசன தாகம்; இரண்டாவது, மக்களோடு நெஞ்சு கலந்து உறவாடும் ஒட்டுப் பண்பு. இளமையிலேயே அனுபவ வாயிலாகப் பெற்ற மார்க்ஸியப் பார்வை; பிற்காலத்தில் பாரதி - காந்தியடிகள் - விவே கானந்தர் வழியே பெற்ற செயற்பிடிப்புள்ள அத் துவைத வேதாந்தப் பார்வை, இரண்டையும் இணைக்க முயலும் வழியில் பாரதியுடன் நடக் கிறார் இவர். இப்படிப்பட்ட ஒரு கலவைப் போக்கு திரு.வி.க., வி.சக்கரைச் செட்டியார் ஆகியோரிடமும் தமிழகம் கண்டிருக்கிறது. மக்களியக்கம் மேலோங்கி வரும் போது இக் கலவைப் போக்கு மார்க்ஸியத்துடன் தோள் சேர்த்து வழி நடக்கும் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு அத்துவைதத்தைப் பற்றிய சம்பிரதாயப் பிடிப்புள்ள வியாக்கியானங்கள் நடைமுறைகள் வீழ்ந்து போகும். ஏன், இன்றே வீழ்ந்து வருகின்றன என்று சொல்ல முடியும். கம்யூனிஸ்டுகள் 1970-இல் நடத்திய நாடு தழுவிய நில மீட்சிப் போராட்டத்தை இந்தப் பார்வை வழியேதான் உறுதியாக ஜெயகாந்தன் ஆதரித்தார். 1975-இல் வந்த இந்திய அரசாங்கத்தின் இருபது அம்சத் திட்டத் தையும் ஆதரிக்கிறார். இதற்கு மாறாக அத்து வைதத்தையும் கீதோபதேசத்தையும் பிற்போக்காக வியாக்கியானப்படுத்தி யக்ஞம் நடத்துகிறவர்கள் நிலச்சீர்த்திருத்தத்தை - ஏன் எல்லாச் சீர்த்திருத்தத் தையும் - எதிர்ப்பதை நாடறியும்.

ஜெயகாந்தன் எழுத்தாளர் மட்டுமல்ல, சுயேச்சையான (நல்ல அர்த்தத்தில் சொல்கிறேன்) அரசியல்வாதியுங்கூட. அவரது தெளிந்த பார்வை, மக்களோடுள்ள ஒட்டுப் பண்பு ஆகியவற்றின் சிறப்பால் மொத்தத்தில் அவர் மக்களியக்கத்தின் வழியே போய்க்கொண்டிருக்கிறார். இவ்வழி நடையில் அவர் கம்யூனிஸ்டுக் கட்சியைப் பற்றி மொழிந்துள்ள சில கணிப்புகளும் சரி, தி.க., தி.மு.க. பற்றி மொழிந்துள்ள கருத்துகளும் சரி எனக்கு உடன்பாடானவை அல்ல. ஒரே திசையில், ஒரே வழியில் நடப்பதால் இவை குறித்துத் தொடர்ந்து விவாதிக்க இடமுண்டு என்று மட்டும் இங்கே சொல்லிக் கொள்கிறேன்.

மனிதனின் உள்ளத்திலே உறையும் அழுக்கு களையும், அழகையும் காட்டிப் பொய்யையும் உண்மையையும் விளக்கி, மறத்தைப் புதைத்து அறத்தைப் புதுக்கிப் பேணும் நோக்குடன் இவர் நீடிக்க வேண்டும் என்று வாழ்த்தும் எண்ணற்ற வாசகர்களின் விருப்பத்தை நானும் எதிரொலிக் கிறேன்.

‘ஜெயகாந்தன் பற்றி மார்க்சிய அறிஞர் ஆர்.கே.கண்ணன்’ - நூலிலிருந்து.

Pin It