பிளாத்தோவும், அரிஸ்டாட்டிலும் இறந்த பின், ஒழுக்க இயலிலும், மெய்யுணர்வுச் சிந்தனை யிலும் ஒரு பெரிய மாற்றம் இடம்பெற்றுள்ளது. பொருட்களின் தன்மையையும், மெய்யுணர்வின் தன்மையையும் பெரும்பாலும் ஆராயாது மக்களி னுடைய செயல்முறை ஒழுக்கத்தையே மெய்யுணர்வு வல்லுநர் ஆராயத் தொடங்கினர். மக்கள் அரசினுடைய நோக்கங்களுக்குக் கீழ்ப்படிந்து இருத்தல் வேண்டும் என்று பிளாத் தோவும் அரிஸ்டாட்டிலும் வற் புறுத்தினர். மெய்யுணர்வுச் சிந்தனையைவிட ஒழுக்க இயற்பண்பு குறைந்த நிலை உடையது என்று வற் புறுத்தியிருந்தார் அரிஸ்டாட்டில். அரசினுடைய நன்மை தனிமக்களின் நன்மைக்கு உயர்ந்ததென்றும் மக்களை விட உயர்ந்த பொருட்களும் சிந்தனையும் உலகில் உள்ளன என்றும் கூறினார். கிரேக்க மக்கள், எடுத்துக்காட்டாக விளங்கக் கூடிய அரசு ஒன்றை அமைக்கப் பலமுறை முயன்றும், அன்னார் அந்த முயற்சியில் வெற்றி பெறவில்லை. கிரேக்க நாட்டு நகர் அரசுகள் தம்முள் முரண்பட்டுப் போர் செய்த தால் தம் சுதந்திர நிலையையும் செல்வாக்கையும் இழந்தனர். எனவே அரசின் வழியாகத் தம் நலன் களையெல்லாம் பெற விரும்பிய சிந்தனையாளர் ஏமாற்றம் அடைந்து தனி மக்களின் ஒழுக்கத்தைச் செம்மைப்படுத்துவதிலும், அரசியலாற் பெறாத நலங்களைத் தனிமக்களின் மேம்பாட்டால் பெறு வதிலும் முயன்றனர்.

இவ்வுலகில் ஞானிகள் தொடர்ந்து ஒருவர் பின் ஒருவர் தோன்றுவது அரிது. ஒரு சில காலத்தில் பெரும் ஞானிகள் தோன்றுகின்றனர். ஆனால் அவர்களுக்குப்பின் வழித்தோன்றல்களாக வருபவர் தம் ஆசான்களைப்போல் அத்துணைச் சிறப்புப் பெற்றவர்களாக விளங்குகின்றார் அல்லர். கி.மு. ஐந்தாம் ஆறாம் நூற்றாண்டுகளில் பெரும் ஞானிகள் பல நாடுகளில் தோன்றினர். கிரேக்க நாட்டில் சாக்ரெட்டிஸ், பிளாத்தோ, அரிஸ்டாட்டில், பாரசீக நாட்டில் சொரோ வாஸ்டர், சீனத்தில் கன்பூஷியஸ், லாவோட்சே, இந்தியாவில் மகாவீரர், புத்தர், கோசாலர் போன்றவர்கள் தோன்றினர். உலகில் பெரும் சிந்தனை முன்னேற்றத்தையும் இயக்கங் களையும் இப்பெரியார் வளர்த்தனர்.

1

பிளாத்தோவும், அரிஸ்டாட்டிலும் காலஞ் சென்ற பின் ஸ்டாயிக்வாதம் சிப்பிறசிற் பிறந்த சேனா (Zeno) (336-364 கி.மு.) என்னும் மெய்யுணர்வு வல்லுநரால் பரப்பப்பெற்றது. அதே காலத்தில் எபிக்யூரஸ் (Epicurus) (341-270 கி.மு.) என்றவர் கிரேக்க நாட்டில் எபிக்யூரஸ் வாதம் என்னும் கொள்கையைக் கற்பித்து வந்தார். ஸ்டாயிக் வாதமும், எபிக்யூரஸ்வாதமும் அவை தோன்றிய நாடுகளைவிட இத்தாலிய நாட்டில் பெருஞ் செல் வாக்கு அடைந்தன. கிரேக்கரை உரோமர் போரில் வென்றவராயினும் கிரேக்கருடைய சிந்தனையும் கலையும் உரோமரை வென்றன என்பர். உரோ மருடைய இலக்கியமும், கவின்கலைகளும் கிரேக்க இலக்கியத்தையும் கவின்கலைகளையும் அடிப் படையாகக் கொண்டவை. உரோமருடைய பண்பு செயல் முறைப்பண்பு; அன்னார் தத்துவஞானி களுக்கும் மெய்யுணர்வு வல்லுநர்களுக்கும் கிரேக்க நாட்டைப் போல் இடம் கொடுக்கவில்லை. மெய் யுணர்வு வல்லுநர் தத்தம் கொள்கைகளைப் பரப்பி வருவதால் தம் நகரில் கலகங்கள் ஏற்படுகின்றன என்று பன்முறை இத்தகைய ஞானிகளைத் தம் நகரிலிருந்து உரோமர் கடத்தினதும் உண்டு.

எபிக்யூரஸ்வாதம் கிரேக்க நாட்டில் தோன்றி இத்தாலிய நாட்டில் பரவியது. டெமொ கிரீட்டஸ் (450-360 கி.மு.) என்பாருடைய அணுவாதமும் பூத வாதமும், எபிக்யூரஸ் வாதத்திற்கு அடிப்படையாக இருந்தன. சமயத்தை எவ்வகையிலும் போற்றாத எபிக்யூரஸ், இன்பமே வாழ்க்கையின் உயர்ந்த நோக்கம் என்றும், இன்பமே மக்களால் பெற வேண்டிய மனநலம் என்றும் வற்புறுத்தினார். இவ்வின்பம் ஐம்புல இன்பமாக இருத்தலும் கூடும்; மனத்தின் இன்பமாக இருத்தலும் கூடும்; பகுத் தறிவின் இன்பமாக இருத்தலும் கூடும். அறம் நலத்தைத் தரும் என்று நாம் கூறும்பொழுது, அறத்தின் தன்மையில் நலமோ நன்மையோ ஒன்றும் இல்லாததால் அறத்தால் வரும் இன்பத்தையே நாம் கருதுகின்றோம். இன்பம் வாழ்க்கையின் குறிக் கோளாக இருப்பது அத்துணைச் சிறப்பன்று. மன அமைதியும் நடுநிலைமையையும் பற்றற்ற பான் மையுமே சிறப்பு. மக்கள் இன்பத்தையும், துன்பத் தையும் ஒரே மனநிலையுடன் பார்க்க வேண்டும். இன்பம் வருங்கால் மகிழ்வது நன்றன்று, துன்பம் வருங்கால் வருந்துவதும் நன்றன்று. எபிக்யூரஸ் வாதமும் ஸ்டாயிக் வாதமும் தத்தம் உயர்ந்த போதனையில் இந்த நொதுமல் தன்மையைப் பாராட்டி வந்தன. இத்தாலிய நாட்டில் எபிக்யூரஸ் வாதத்தின் பெரும் புலவராக விளங்கியவர் லுக்ரேஷியுஸ் (Lucretius) என்பவர். அன்னார் இவ்வாதத்தின் உயர்ந்த தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதிய நீண்ட செய்யுள் “பொருட்களின் இயல்பு” என்பதாகும் (De Natura Rerums).

2

எபிக்யூரஸ் வாதம் எல்லாவகை இன்பத்தையும் போற்றவில்லை. சிற்றின்பங்களில் ஈடுபடுவது அழகன்று என்றும், மிகுதியாய் உண்பதும் குடிப் பதும் முறையன்று என்றும் சாற்றினர் எபிக்யூரஸ் வாதிகள். எபிக்யூரஸ் உண்டியைப் பொருட்படுத்த வில்லை. எனக்கு ஒரு சிறிது உணவும், தண்ணீரும் இருத்தால் போதும். ஒரு சில நாட்களில் பாற் கட்டி கிடைக்கு மெனில் நான் இன்பமாக வாழ் வேன் என்றார். நட்பால் வரும் இன்பத்தை நுகர் வதும், நண்பருடன் கலந்து உரையாடுவதும் இத் தத்துவ வாழ்க்கை தரும் பெரும் இன்பங்கள் என்றும் கருதினார்.

எபிக்யூரஸ் உயர்ந்த மெய்யுணர்வு அறிவியல் தத்துவங்களைப் போற்றினார் அல்லர். ஒருவன் ஹோமரின் ஓர் அடியேனும் கல்லாமல் இருத்தல் கூடும், ஹெக்டர் கிரேக்கனோ, ட்ரோஜனோ என்று அறியாமல் இருத்தல் கூடும். ஒரு சிறிது படிக்கவும், எழுதவும் அறிந்திருந்தால் சாலும் என்பது அவர் கருத்து. எபிக்யூரஸ் அறத்தையும், இன்பத்தையும் ஒன்றாகவே கருதினர். அறநெறிக்கு மாறாக நடந்து கொள்ளுதல் தவறன்று. ஆனால் அத்தகைய ஒழுக்கம் சமூகத்தின் வழக்கத்திற்கு மாறாக இருப்பதால் சமூகச் சட்டங்களையே நாம் கடைப்பிடித்தல் வேண்டும். அவற்றை மீறுங்கால் சமூகம் நம்மைக் கண்டித்தல்கூடும் அல்லது எள்ளுதல் செய்தல் கூடும் என்று அஞ்சுகின்றோம். அவ்வச்சம் நம் மனநிலையை அழிக்கின்றது. ஆதலால் சமூக வழக்க ஒழுக்கங்களை நம் மனநிலை கலங்காதிருக்குமாறு நாம் கடைப்பிடித்தல் வேண்டும்.

வள்ளுவர் வினைத்தூய்மையைப் போற்று வதுடன் மனத் தூய்மையையும் போற்றுகின்றார். நல்லொழுக்கத்தில் ஈடுபடுவதற்குக் காரணம் சமூகத்தின் கண்டிப்பும் அன்று, ஏளனமும் அன்று. அறம் முறையாதலால் அதைக் கடைப்பிடித்தல் வேண்டும். “மனத்துக்கண் மாசிலனாதல் அனைத்து அறம்” (34); “உள்ளற்க உள்ளம் சிறுகுவ” (798). திருக்குறளிலும் முன்னர்க் கூறியவாறு ஐம்புலன் களின் இன்பம் இடம் பெறுகின்றது. ஐம்புலன் களின் இன்பமும் உண்டு. மனத்தின் இன்பமும் உண்டு. ஆனால் இன்பமும், அறமும், ஒரு பொருட் கிளவிகளல்ல. ஒருவன் இன்பத்திற்காக அறம் செய் வதில்லை. அறம் செய்வதால் இன்பத்தைப் பயனாகப் பெறுகின்றான். அறத்திற்கும், இன்பத்திற்கும் இருக்கும் தொடர்பு காரண காரியத் தொடர்பு.

3

எபிக்யூரஸ் வாதம் பேதைமையையும், செல்வம் ஈட்டுதலையும், சிற்றின்பங்களையும் விலக்குவதற்குக் காரணம் அவற்றின் பொருளல்லாத் தன்மையே யாம். இவற்றையெல்லாம் மக்கள் ஒரு பொருளாகக் கருத வேண்டியதில்லை என்ற மனப்பான்மை யுடன் இவற்றை விலக்குகின்றனர். ஆனால் இவ் வாதத்தில் உயர்ந்த கொள்கைகளுக்கும் கடமைக்கும் அதன் செயல்களுக்கும் தமக்கென வாழாமல் பிறர்க் கென வாழ்தலுக்கும் பொது நலனுக்காக நம்மையே கொடுப்பதற்கும் இடம் இல்லை. ஒப்புரவு திருக் குறளில் பெரிதும் இடம் பெறுகின்றது. வாழ்க்கை பிறர்க்கெனவே அமைதல்வேண்டும்.

4

திருக்குறளில் களவும் கற்பும் போற்றப்படுகின்றன. இல்லறத்தில் இனிது வாழ்பவர் விருந்து ஓம்புவதிலும், ஈகையிலும் பிற நலம் தேடுவதிலும் தம் நாட்களைக் கழிக்கின்றனர்.

சங்க காலத்தில் தமிழ்நாட்டிலும் நல்லதன் நலனும் தீயதன் தீமையும் இல்லை என்போர் நிலவினர் என்பது புறப்பாட்டில் (29) வரும் ‘நல்லதன் நலனும் தீயதன் தீமையும் இல்லை யென்போர்’ என்பதனால் விளங்குகிறது. இவ்அடியைப் பரிமேலழகரும் ‘சிற்றினஞ்சேராமை’ என்றும் அதிகாரத்தில் மேற்கோள் காட்டுகின்றார். “வாயுணர்வின் மக்கள் அவியினும் வாழினும் என்” (42) என்பதால் சிற்றின்பவாதிகளைக் கண்டித்தார் திருவள்ளுவர்.

5

பற்றற்று வாழ்வதே குறிக்கோளென்று ஸ்டாயிக் வாதமும் எபிக்யூரஸ் வாதமும் கற்பித்தன. ஆயினும் “மன நலம்” (happiness) இன்பமென்று கூறினர் எபிக்யூரஸ் வாதிகள். மனநலம் அறம் என்று கூறினர் ஸ்டாயிக் வாதிகள். தனி அணுக்கொள்கையை அடிப் படையாகக் கொண்டனர் எபிக்யூரஸ் வாதிகள். ஸ்டாயிக் வாதிகளோ உலக இயற்கைக்கு ஒற்றுமை உண்டென்றும், உலக இயற்கைப் பொருள்கள் அனைத்தும் இவ்வொற்றுமையால் பிணிக்கப் பட்டிருக்கின்றன என்றும் கருதினர். இத்தகைய ஒற்றுமை காட்டும் உலகில் மக்களும் ஒரு பகுதி. எனவே மக்கள் இவ்வொற்றுமையைப் பாராட்டி ஒழுகுதல் வேண்டும். இவ்வொற்றுமைக் கருத்து மார்க்ஸ் ஒளரேலியஸ் என்பவருடைய சிந்தனையில் பெருந் தெளிவுடன் புலப்படுகின்றது.

உலகம், அதிலுள்ள கோடிக்கணக்கான பிராணிகள், உயிரற்ற வஸ்துக்கள் இவை அனைத்தும் ஒன்றுக்கொன்று பரஸ்பர சம்பந்தத்துடன் அமைக்கப் பட்டுள்ள ஒரு அமைப்பாகும். உலகத்திலிருந்து ஒருவன் தன்னை வேறுபடுத்திக் கொண்டு வாழ்வது உடம்பில் ஒரு கொப்புளம் அல்லது பரு உண்டாவது போலாகும். சரீர சம்பந்தம் இருந்தும் அந்தச் சரீரத்தின் அமைப்பில் சரியாய்ச் சேராமல் நோய் இழைப்பது கொப்புளம் அல்லது புண். ஒருவன் உலகத்திலுள்ள ஜீவராசிகளுடன் ஐக்கியப்படாமல் தன்னை வேறுபடுத்திக் கொள்வதும் ஆத்மத் துரோக மாகும். இந்த உலகத்தின் ஒரு பாகமாகிய எனக்கு நேரிடும் எந்தச் சம்பவத்தைக் குறித்தும் நான் வருத்தப்படக் கூடாது. வருத்தப்பட்டால் உலக அமைப்பில் சேருவதற்கு இணங்காமல் அதற்கு இடையூறு விளைவித்ததைப் போலாகும். உலகம் முழுவதும் அடங்கியுள்ள பராசக்திக்கு அது துரோக மாகும். ஒருவனைத் துவேஷித்தாலும் அல்லது ஒருவன் மேல் கோபங்கொண்டு தீங்கு செய்ய நினைத்தாலும் அது உலகத்தினின்று வேறுபடும் குற்றமாகும். நேர்ந்த இன்பத்தினாலாவது துன்பத் தினாலாவது மனநிலை கெட்டால் அதுவும் துரோக மாகும். கபடம், பொய், மோசம் இவை கலந்த பேச்சும் செயலும் துரோகமாகும்.1

நம் இயற்கை உணர்ச்சிகளும் அறம் அல்ல. உள்ளக் கிளர்ச்சிகளும் அறம் அல்ல. எனவே இவ் வுள்ளக் கிளர்ச்சி களையும், உணர்ச்சிகளையும் நாம் அடக்குதல் வேண்டும். பற்று இருப்பதால் நாம் தீய ஒழுக்கத்தில் ஈடுபடுகின்றோம். எனவே, பற்றுகள் அனைத்தையும் விலக்க வேண்டும். இரக்கமுள்ள வனும் உருக்கமுள்ளவனும் இரக்கத்தையும் உருக்கத் தையும் களைய வேண்டும். ஏனெனில் இரக்க முள்ளவன் இரக்கத்தின் பொருட்டு நீதிக்கும், நடுநிலைமைக்கும், மனத்திற்கும் மாறாக நடத்தல் கூடும். செல்வமென்பது யாது என்று சேனோ வினவுகின்றார். பற்றுகள் இல்லாமையே செல்வம் என்பது அவர் துணிவு.2

ஸ்டாயிக் வாதம் வற்புறுத்திய உலக ஒற்று மையும் உயிர்களின் ஒற்றுமையும் திருக்குறளில் நன்கு துலங்குகின்றது. ஆனால், இவ்வுலக ஒற்று மையும் மக்களின் ஒற்றுமையும் மக்கள் தம் முயற்சியால் செம்மைப்படுத்தல் கூடும் என்னும் கருத்தும் திருக்குறட்பாக்களில் இன்னும் தெளி வாகக் கூறப்பட்டிருக்கின்றது. முன்னமே இயற்கை யால் நிலை நிறுத்தப் பெற்ற ஒற்றுமையைத் தழுவுவது அன்று திருக்குறள். மேலோர் இவ்வுலகில் விரும்பும் ஒற்றுமையை உருவாக்கிக்கொண்டு செல்வதே திருக்குறளின் அற முயற்சி. திருக்குறளில் அன்பும், அறமும், ஒப்புரவும் இவ்வொற்றுமையை உருவாக்கு கின்றன. திருக்குறளில் உழைப்பைப்பற்றிக் கூறிய கருத்துக்களினும் முயற்சியைப் பற்றிக் கூறிய கருத்துக்களே பெரும்பான்மையும் சிறந்தன.

“இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்

துன்பம் உறுதல் இலன்.” - 628

ஸ்டாயிக் வாதிகள் தம்முடைய வாதத்திற்கு எடுத்துக்காட்டாக இலட்சிய மனிதனின் பண்பு களைத் தீட்டுகின்றனர். அவர்களுடைய இலட்சிய மனிதன் மார்க்ஸ் ஒளரேலியஸ், செனெகா, எப்பிக் டேற்றல் போன்ற பெரும் ஞானி. அவர்களின் ஞானி நடுநிலைமையையும், மனங்கலங்காமையையும், நொதுமல் தன்மையையும் சிறப்பாகக் கொண்டவன். அவன் துன்பத்தால் வருந்துவதும் இல்லை; இன் பத்தில் மகிழ்வதும் இல்லை. அவன் பற்றுக்களை அறுப்பவன், தீயவை செய்யாதவன். உயிர் துறப்பதை அஞ்சாதவன். இடுக்கண்ணால் இடர்ப்படாதவன். இவ்வாறு திருக்குறளும் ஓர் எடுத்துக்காட்டால் மனிதனின் ஆகவேண்டிய இலட்சியத்தைக் கூறு கின்றது. அவன் பெயர் சான்றோன். இவ்வுலகம் உண்டெனில் அது சான்றோர் இருப்பதால் உண்டு. ஓர் ஊர் வாழ்வதற்கு ஏற்ற இடமாக வேண்டுமாயின் அங்கே சான்றோர் பலர் இருத்தல் வேண்டும். சான்றோர் தம் பண்புகளில் குன்றுவாரெனில் உலகமே தன் தாங்கும் தன்மையில் குன்றும். ஸ்டாயிக் வாதிகளின்படி அவர்களுடைய இலட்சிய புருஷர் ஒரு சிலரே. அச்சிலர் தனிமையாகத் தம் இல்லங் களில் வாழ்ந்து வருபவர். திருக்குறளின் சான்றோர் பலர். ஒவ்வொரு மகனும் சான்றோனாகுதல் கூடும். அவன் அவ்வாறு ஆவதே கல்வியின் நோக்கம். ஒவ் வொரு தாயும் தன் மகன் சான்றோனாகுதல் கூடும் என்று எதிர்பார்ப்பாள். சான்றோன் ஆக்குதல் ஒவ்வொரு தந்தைக்கும் கடனாகும். ஸ்டாயிக் வாதியாகிய ஞானிக்கும் தமிழ்ச் சான்றோனுக்கும் ஒற்றுமைப்பண்புகள் பலஉள. இருவரும் அடக்கமும் நடுநிலைமையும் உடையவர். இருவரும் புறங்கூறார், பயனில சொல்லார், வெகுளார், நிலையாமையுணர் வார், உயிர் துறக்க அஞ்சார், மானம், பெருமை, சான்றாண்மை, பண்புடைமை படைத்தவர். ஆயினும் உரோமைய ஞானி வாழ்க்கையிலும், உலகிலும் சமூக முன்னேற்றத்திலும் தமிழனைப்போல் அத்துணை ஈடுபாடு கொண்டவனல்லன். உரோமைய ஞானி துறவி போல் தனியே காணப்படுகின்றான். தமிழ்ச் சான்றோரின் இல்லறப் பண்புடையனாக மக்கள் நடுவில் காட்சி அளிக்கின்றான்.3

இவ்வாறு பல சமூகங்களில் குறிக்கோட் பண்புகள் எல்லாம் உருவெடுத்த மகனைப் போற்றுவது வழக்கு, பொதுமக்கள் இத்தகைய இலட்சியத்திலிருந்து எவ்வாறு தாமும் தம் வாழ்க் கையை அமைக்கக்கூடும் என்று கற்றுக்கொள் கின்றனர். பிளாத்தோவினுடைய அரசியல் ஞானியும் அரசனும் ஆகிய ஒருவன் இலட்சியமாகின்றான். உரோமருடைய அரசில் பண்பும் சொல்வன்மையும் படைத்த வழக்கறிஞன் இலட்சிய புருஷன். இங்கி லாந்தின் இடைக்காலத்தில் கல்விபெற்ற பெரு நிலக் கிழவன் இலட்சிய புருஷன். இடைக்கால ஐரோப்பாவில் கவின் கலைகளில் ஈடுபடும் போர் வீரன் இலட்சிய புருஷன். தமிழ் உலகிலோ

சான்றோர் இலட்சிய புருஷன். சொல்லிலும் கருத்திலும் உரோமிய ஸ்டாயிக் வாதிகளின் “Sapiens.” மனிதனுக்கும் தமிழ்ச் சான்றோனுக்கும் ஒற்றுமை உண்டு. சான்றாண்மை என்பது எல்லா நற்குணங்களும் நிறைந்தது (Perfactus) எனப் பொருள் படும். சான்றோனும் எல்லாம் நிறைந்தவன்.4

7

ஸ்டாயிக் வாதிகள் புதியதொரு பண்பையும் ஒழுக்க இயலில் சேர்த்துக்கொண்டார்கள். மக்கள் பல காலமாக ஒழுக்க இயலைப்பற்றிச் சிந்தித்தும் ஒழுக்க இயலில் மேன்மேலும் உயர்தல் கூடும் என்னும் கருத்தை விளக்கவில்லை. உரோமிய ஸ்டாயிக் வாதிகள் அக்கருத்தை மேல் நாட்டு ஒழுக்க இயலில் முதல் முதற் கூறி விளக்கினர்.

நல்லொழுக்கத்தில் முன்னேறுவது, சமூகம் பல காலமாக அடைந்த ஒரு கருத்தாகத் திருக் குறளில் இடம் பெறுகின்றது.

“இல்லை ஒழுக்கம் இலான்கண் உயர்வு” - 135

“ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை” - 137

“உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்” - 596

ஸ்டாயிக் வாதிகள், கடமை என்னும் கருத் தையும் நன்கு விளக்கினர். ஒழுக்கச் சட்டத்தைக் கடைப்பிடிப்பது கடமையாகும். எனவே மக்களை நல்ல ஒழுக்கத்தில் கட்டுப்படுத்தும் அதிகாரம் சமூகத்தில் இருந்து வருவதில்லை. வழக்கமென்று உறுதி பெறுவது இல்லை. அறத்தைச் செய்வது மனிதனின் கடமை. திருக்குறளிலும் கடமை போற்றப் படுகின்றது. நல்ல ஒழுக்கத்தால் செல்வம் வருதல் கூடும்; உயர்ந்த புதல்வர் தோன்றுவர்; புகழ் அமை கின்றது. ஆயினும், இப்புகழின் பொருட்டு மனிதன் நன்றாக ஒழுகுவதில்லை. ஆனால், கடமையும் அவன் அறத்திற்குக் காரணமன்று, முறைமையுமன்று. அறத்தின் தன்மையே காரணம்- அறமே அறஞ்செய்ய வற் புறுத்துகின்றது. மேல் உலகம் இல்லெனினும் ஈதலே நன்று (222).

“இம்மைச் செய்தது மறுகைக் காமெனும்

அறவிலை வணிக னாயலன் பிறரும்

சான்றோர் சென்ற நெறியென

ஆங்குப் பட்டன் றவன்கைவண் மையே”    (புறம்: 134)

8

பற்றறுத்த நொதுமல் தன்மை ஸ்டாயிக் வாதத்தின் அடிப்படை. ஞானி பிறருடைய துன்பங் களைக் கண்டு துன்பம் அடைவது முறையன்று. அவனுடைய உறுதியும், அவன் நொதுமல் தன்மையும், அமைதியும் எக்காரணம் பற்றியும் கலக்கமடைதல் ஆகாது. சாவினை வரவேற்றனர், ஸ்டாயிக் வாதிகள். சாவால் தாம் தீங்கு அடைவதாகக் கருதினர் அல்லர். இறப்பது மக்களுக்கு இயல்பு. எனவே அச்சத்துடன் இறப்பதை எதிர்பார்த்தல் கூடாது. தற்கொலை செய்து கொள்வதையும் ஸ்டாயிக் வாதிகள் பொருட்படுத்த வில்லை. மானமாக மக்கள் வாழ முடியாதெனில் அன்னார் தாமே உயிரைத் துறத்தல் கூடும். செனேகா தன்னுடைய கடிதங்களில் அடிமைகள் தம் அடிமைத் தன்மை யையும், கொடுமையையும் தாங்க முடியாது, பல்வேறு யுக்திகளால் உயிர் துறந்ததை எடுத்துக் காட்டாகக் கூறி அடிமைக்கு இத்தகைய துணிவு உண்டெனின் உயர்ந்த மக்களுக்கு எத்தகைய துணிவு வேண்டுமென்று கூறுகின்றார்.

“மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்

உயிர்நீப்பர் மானம் வரின்.” - 969

வடக்கிருத்தல் என்னும் வழக்குடன் இக்குறட் பாவிற்குப் பொருள் கொளல் நலம். கோப்பெருஞ் சோழன் போன்றவர்கள் மனத்தையும் ஐம்புலன் களையும் அடக்கி நடத்தும் இத்துறவு மனப்பான் மையை, ஸ்டாயிக் வாதிகளுக்கு ஈபுரு மக்கள் கற்பித்திருத்தல் கூடும் என்று அறிஞர் சிலர் கருது கின்றனர். மறு உலகைப் பற்றி ஸ்டாயிக் வாதிகள் கருதியது யாதெனின் ஆண்டும் வாழ்வும் உண்டு என்பதேயாம். ஆனால் அதன் இயல்பைக் கூறினார் அல்லர்.

9

ஸ்டாயின் வாதிகள் உலகில் ஒற்றுமை இருப் பதாகக் கண்டு மக்கள்அனைவரும் ஒரே குலத்தவர் என்றும், எல்லா உயிர்களும் தொடர்பு உள்ளன என்றும் கற்பித்தனர். ஒன்றே குலம் என்ற மனப் பான்மை மேல்நாட்டுச் சிந்தனை வரலாற்றில் முதன்முதல் ஸ்டாயிக் வாதிகளால் போற்றப்படு கின்றது. பிளாத்தோவும் அரிஸ்டாட்டிலும் நகர அரசுகளில் வாழ்ந்ததால் அவற்றின் சிற்றெல்லை களால் குறுகிய மனப்பான்மையை உடைய வராயினர். ஸ்டாயிக் வாதிகளோ உரோமியப் பேரரசில் வாழ்ந்த தால் அன்னார் விரிந்த மனப்பான்மையை அடைந் தனர். உரோமர் உலகின் பல நாடுகளுக்குச் சென்று வாணிகம் நடத்தியது அனைவரும் அறிந்த வரலாற்றுச் செய்தியேயாம். தமிழ் நாட்டிலிருந்து முத்தையும், மிளகையும் ஏற்றுமதி செய்து தம்முடைய தேறலையும், பொன்னையும் தமிழ்நாட்டுக்குக் கொடுத்தனர்.

“யவனர் தந்த வினைமாண் நன்கலம்

பொன்னொடு வந்து கறியொடு பெயரும்.”

 (அகநானூறு: 149:9)

அரிக்காமேட்டின் மண்பாண்டங்களும், குடங்களும் இத்தாலியத் தேறலின் வண்டல் படிந்தவைகளாகக் காணப் பெறுகின்றன. இங்ஙனம் உரோமருடைய பேரரசின் வாணிகமும், மக்கள் குலத்தின் ஒற்றுமையை நன்றாக மேலைய நாட்ட வருக்குப் புலப்படுத்தியது. செனாகா சொல்லுவர்:

“ஒவ்வொருவனையும், அவனுக்கு எத்தகைய பண்புகள் இருப்பினும், நான் பொருட்படுத்தி, அவன் மகன் ஆதலால் போற்ற வேண்டும். எல்லா மக்களின் நாடுகளும் என் தாய் நாடு என்றும் என் நாடு எல்லா மக்களுக்கும் தாய் நாடு என்றும் கருதுதல் வேண்டும்.” மார்க்ஸ் ஒளரேலியஸ் கூறுவர்: “நான் பகுத்தறிவும் கூட்டுறவும் உடையவன். நான் அன்டோலைனஸ் என்பதால் உரோமுக்கு உரியவன், நான் மனிதன் என்பதால் உலகிற்கு உரியவன்.”

இவ்வாறே உலக மாந்தரின் ஒற்றுமைத் தன்மை திருக்குறளில் மிகவும் அழகாகக் கூறப்பெற்றுள்ளது. உரோமையர் புதிதாகக் கண்டுபிடித்ததோர் உண்மை போல் கூறுவதை வள்ளுவர் என்றும் உள்ள உண்மை போல் கூறுகின்றார். மக்கள் அனைவரும் மக் கட்டன்மையை வளர்க்க வேண்டுமென்று அவர் மக்களுக்காக எழுதிய நூல் திருக்குறள். ஏனைய சங்க நூல்களும் காப்பியங்களும், தமிழ்ப்பற்றையும், தமிழ் நாட்டுப் பற்றையும் வற்புறுத்துவன. “பொதுமை சூட்டிய மூவர் உலகம்” (புறம் 357: 2) என்றும், “அருந்தமிழ் ஆற்றல் அறிந்திலர்” (சிலம்பு 26: 161) என்றும் பாராட்டும் நூல்கள். திருக்குறளில் தமிழ் என்னும் பெயரையே காண்டல் அரிது. எனவே, “மக்கள் அனைவரின் புலவர்”, “உலகப் புலவர்” என்று திருவள்ளுவரைப் போப் ஐயர் போற்றுவது சாலப் பொருத்தம்.

10

மக்கள் அனைவரையும் ஒரே குலத்தவர் என்று கருதுவதோடு உயிர்கள் அனைத்தையும் மக்களோடு சேர்த்து ஒரே குலத்தவை என்று கருதும் பண்பும் திருக்குறளுக்கும், ஸ்டாயிக் வாதிகளுக்கும் பொது வானதாகும். மார்க்ஸ் ஒளரேலியஸ் கூறுவர் “பகுத் தறிவு இல்லாத விலங்குகளையும் ஏனைய உயிர் களையும் பெருந்தன்மையுடன் நாம் நடத்துதல் வேண்டும்”.

எல்லா உயிர்களையும் போற்றுவது ஒழுக்க இயலில் மிகவும் உயர்ந்த பண்பு. ஸ்டாயிக் வாதிகள் உயிர்களைப் பேணினாராயினும், புலால் உண்பதைக் கைவிடவில்லை. திருக்குறளோ செனக்காவிற்கும் மார்க்ஸ் அவுரேலியஸிற்கும் புலப்படாத பண்பு களைக் கற்பிக்கின்றது.

“அறவினை யாதெனிற் கொல்லாமை” - 321

“பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்” - 322

“தன்னுயிர் நீப்பினுஞ் செய்யற்க தான்பிறிது

இன்னுயிர் நீக்கும் வினை” - 327

“கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி

எல்லா உயிரும் தொழும்.” - 260

11

ஸ்டாயிக் (Stoic) வாதிகள் மூவர் எழுதிய நூல்களுடன் திருவள்ளுவரின் நூலைச் சிறப்பாக ஒப்பிடுதல் கூடும். நீரோ என்னும் பேரரசின் ஆசிரியராக விளங்கியவர் செனெக்கா என்பவர். அவர் உரோமைப் பேரரசின் பெரும் ஆளுநராக இருந்து அரசியலில் போதிய பட்டறிவு பெற்றவர். ஆயினும் கொடுங்கோல் மன்னனாகிய தம் மாணவர் நீரோவின் கட்டளையின்படி தற்கொலை செய்து கொண்டு மாண்டார். எட்டு ஆண்டுகளாக நாடு கடத்தப்பெற்று வாழ்ந்து வந்தவர். அவர் எழுதிய நூல்களும் திருக்குறளின் பாக்களும் ஒரே பொருளை விளக்குகின்றன. கண்ணோட்டம், ஒப்புரவு, நடுவு நிலைமை, வெகுளி, உறுதி, மானம், இன்ப வாழ்க்கை முதலியவைகளைப்பற்றி அவர் இயற்றிய நூல்களும், நூற்று இருபத்து நான்கு கடிதங்களும், நல்லொழுக்கப் பண்புகளை விரித்து விளக்குகின்றன. இவ்விளக்கத் திற்குக் கிரேக்க உரோமைய நாடுகளின் பெரியார் பலரின் அருஞ்செயல்களை எடுத்துக்காட்டாக அமைக்கின்றார் செனெக்கா. வீரமாமுனிவர் திருக்குறளை செனெக்காவினுடைய பொன் மொழி களுடன் ஒப்பிட்டது வியப்பன்று:

“இடைவிடாது அன்பு பூண்டு ஒழுகுவதால் தான் தீயவரையும் தம் வசப்படுத்தக்கூடும். அன்பினால் வெல்ல முடியாத பகையுமில்லை; உறுதியுமில்லை.”

“இயன்ற மட்டும் பலருடைய நலத்திற்காக உழைக்க வேண்டும். அது கூடாதெனில் சிலருடைய நலத்திற்காகவாவது உழைக்க வேண்டும். அஃதும் இயலாதெனில் தன்னலத்திற்காகவாவது உழைக்க வேண்டும். உலகம் நம் அனைவர்க்கும் தாய். நாம் உயர் குலத்தில் பிறந்திருந்தாலும், தாழ்ந்த குலத்தில் பிறந்திருந்தாலும் நம் உலகத் தாயே அனைவர்க்கும் பிறப்பிடம். அறம் எவர்க்கும் விலக்கப்பட்டதன்று; அனைவர்க்கும் உரியது; அனைவரையும் அழைக் கின்றது; குடிகள், அடிமைகள், அரசர், நாடு கடத்தப் பட்டவர் அனைவரையும் வரவேற்கின்றது. பிறப் பையும் செல்வத்தையும் நோக்குவது அன்று அறம். எத்தன்மையராயினும் அறஞ்செய்ய வேண்டு மென்பதே உயர்ந்தோர் கருத்து.”

இத்தகைய சிந்தனையாளரும் தம் வாழ்க்கையில் நேர்மையைக் கடைப்பிடிக்கவில்லையென்றும், பிறர் செல்வங்களையும் கவர்ந்தார் என்றும் வரலாறு கூறுகின்றது. தம் நரம்புகளை வெட்டி உயிர் துறந்த பொழுது மகிழ்ச்சியுடன் இறந்தாராம் ஸ்டாயிக் வாதி செனெக்கா.5

12

தம் கடவுள் பற்றாலும் பக்தியாலும் நம் கருத்தைக் கவரும் ஸ்டாயிக்வாதி எபிக்டெடுஸ் (நுயீiஉவைநவரள) என்பவர். அவர் கி.பி.முதலாம் நூற்றாண்டில் உரோமை மாநகரில் அடிமையாக இருந்தவர். விடுதலை பெற்றதும் உரோமை மாநகரில் மெய் யுணர் வினைக் கற்று அதன்பின் மெய்யுணர்வினைக் கற்பித்தார். தம்முடைய மொழிகளை நூல் வடிவில் தாமே எழுதவில்லையெனினும், அவருடைய மாணவர் அறியன் என்பவர் “இறைவன் மக்களின் தந்தை”, “நடுவு நிலைமை”, “ஒழுக்கமுடைமை”, ஒழுக்கத்தில் மேன்மையடைதல்”, “நம்மால் இயன்றதும் இயலாததும்” போன்றவைகளை எழுதி வைத்தார். எபிக்டெடுஸ் காட்டும் கடவுட் பற்றும் பக்தியும் திருக்குறளின் பாயிரம் ஒழிந்த ஏனைய அதிகாரங் களில் இல்லை என்றே கூறுதல் வேண்டும். எபிக்டெடுஸ் (Epictetus) கூறும் விதிகள் எல்லாம் கடவுட் பற்றையும் அவரின் காத்தல் அருளையும், அடிப்படையாகக் கொண்டவை. ஒழுக்க இயலில் பெரும்பாலும் நடுவு நிலைமையையும், தூய்மையையும், பொறு மையையும் பாராட்டுகின்றார்.

13

மார்க்கஸ் அவுரேலியஸ் என்னும் பேரரசன் பாசறையில் எழுதிய சிந்தனை நூல்கள் பிற்காலத்தவர் அனைவரையும் கவர்ந்துள்ளன. அவர் நெஞ்சோடு கிளத்தும் பான்மையில் நூல்களின் பெரும்பகுதியை எழுதினார்.

“மக்கள் அன்பு பூண்டு ஒழுகி இறைவன் ஆணையைச் செய். அறம் செய்யாதவன் நாத்திகன். ஒருவர் ஒருவர்க்கு நலம் செய்யவே இயற்கை பகுத் தறிவுள்ள நம்மைப் படைத்தது.” எவர்க்கும் தீமை செய்வதற்கன்று. “காலையில் எழும்பத் தயங்கினால் நான் மக்கள் கூட்டத்தில் ஒருவனாகச் சேர்ந்து தொழில் செய்யப்போகிறேன் என்று நினை.”

14

உரோமையர் வரலாற்றில் சிறந்த வழக்கறிஞரும் சொல்வன்மை படைத்தவரும் சிசரோ. அவர் வழக் கறிஞனாக அரிய சொற்பொழிவுகளை ஆற்றிய துடன் மெய்யுணர்வு நூல்களையும், ஒழுக்க நூல் களையும் எழுதியிருந்தார். இவர் ஸ்டாயிக் வாதி யாக இருக்காவிடினும் ஸ்டாயிக்வாத நூல்களில் உறுதியான பயிற்சி பெற்றவர். திருக்குறளுடன் ஒப்பிடத்தக்க நூல்களுள் நம் கடமைகள் என்ற நூலும், நட்பு என்ற நூலும் சிறந்தவை. பண்டைக் காலத்தில் சொல்வன்மையே மிகவும் உயர்ந்த கலையாகக் கருதப் பெற்றது. சொல்வன்மையைப் பற்றி இவர் எழுதிய நூலும், இந்திய நாட்டில் தண்டி அலங்காரம் நன்னூல் போன்ற நூல்களைப் போல் ஐரோப்பாவில் மாணவரால் இன்றும் பயிலப் பெற்று வருகின்றது. சொல்வன்மையைப் பற்றியும் அவை அஞ்சாமையைப் பற்றியும் அறிவைப் பற்றியும் கல்வியைப் பற்றியும் திருக்குறளில் விரவிவரும் பாக்களைச் சேர்த்துப் பதிப்பித்தால் சொல்வன்மையின் உயர்ந்த கருத்துக்களைத் திருக்குறள் கூறுவதையும் சொற்பொழிவின் செயல்முறைப் பண்புகளை மட்டுமே சிசரோ விளக்குவதையும் காணலாம். குவிண்டிலியன் (Quintillian) என்பவரும் அவ்வாறே விளக்குகின்றார்.6

15

பல கோணங்களிலிருந்து உரோமையர் சொல் வன்மையைப் பற்றியும் நட்பைப் பற்றியும், காதலைப் பற்றியும் யாத்த இலக்கியங்களைத் திருக்குறளுடன் ஒப்பிட்டு நோக்குதல் கூடும். காதலையும், நட்பையும் பற்றி வள்ளுவர் கூறும் கருத்துக்கள், தன்னலம் கருதாது பிறர் நலத்திற்காகத் தம்மை முற்றும் நல்கும் வாழ்க்கையை வற்புறுத்துகின்றன.

நட்பிலும், காதலிலும் பெரும்பாலும் உரோமைய பெரியார் தன்னலத்தையும் முன்னேற்றத்தையுமே கருதுகின்றனர். ஒருவன் தன் ஆளுமையை நன்றாகச் செம்மைப்படுத்துவதற்கு நட்பு பயன்படுகிறது என்றும், ஒருவன் தன் வாழ்க்கையில் பெறக்கூடிய இன்பங்களில் நட்பு ஒன்றென்றும் வரையறுத் துள்ளனர் உரோமையர். பழைமை என்னும் அதி காரத்தில் வள்ளுவர் நட்பைப் பாராட்டும் முறை உரோமையரின் இலக்கியத்திலோ அரிஸ்டாட்டி லிலோ காண்பது அரிது.7

“பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க

நோதக்க நட்டார் செயின்” - 805

“அழிவந்த செய்யினும் அன்பறா ரன்பின்

வழிவந்த கேண்மை யவர்”- 807

உரோமையரின் காதல் இலக்கியத்தை வள்ளு வரின் காமத்துப்பாடலுடன் ஒப்பிடுங்கால் வள்ளு வரின் கருத்துக்கள் உரோமையினும் பன் மடங்கு உயர்ந்தவையாக இருப்பதைக் காண்கிறோம். பிலவுட்டஸ் (Plautus), கத்துல்லஸ் (Catullus), ஓவிட் (Ovid) போன்றவர்கள் களவையும், கற்பையும் பற்றிய உயர்ந்த கருத்துக்களைப் போற்றவில்லை.

உரோமையர் தம்முடைய நீதி நூல்களில் தம்மவரின் எடுத்துக்காட்டுகளையும் பெருமை யையுமே பெரும்பாலும் போற்றுகின்றனர். நாம், நம்மவர் என்ற செருக்குடன் உரோமைய ஆசிரியர் உரோமருக்குப் பயன்படும் முறையில் எழுதுகின்றனர். ஆனால் வள்ளுவரோ எல்லா உலகிற்கும், எல்லா மக்களுக்கும் பயன்படும் முறையில் தமிழோ, தமிழ்நாடோ என்ற குறிப்பேதும் இல்லாமல் உலகெலாம் தழுவுவதற்குரிய பான்மையில் தம் நூலை யாத்துள்ளார்.

அடிக்குறிப்புகள்

1.            Marcus Aurelius, ஆத்தும சிந்தனை (trans, by C. Rajagopalachari).

2.            See Albert Schweitzer, Civillization and Ethics, Adam & Charles Black, London, 1949, PP. 35 ff.

3.            See, E. Vernon Arnold, Roman Stoicism, Kegan Paul, London, 1958 p. 297-298; “The founders of Stocism never doubted that wise men had existed and did exist; they looked forward to a time not far distant when there should be a Cosmopolis in which every citizen should be wise. This robust belief was not maintained by their successors. According to Chrysippus only one or two wise men have ever exited; and he expressly denies that he-himself or any or his acquainatance are amongst the mumber. The Stoics of the transition period avoided the topic as troublesome; and their opponents naturally pressed it on them all the more. Zero, had said ‘It is reasonable to honour the gods: It is not reasonable to honour the nonexistent: therefore the gods exist’. The was now parodied: It is reasonable to honour wise men; It is not reasonable to honour the non existent; therefore wise men exist. If this argument was unsatisfactory, as we are told, to the Stoics, because they had not yet discovered their wise man anywhere, we are not surprised, to find that sometimes they refer him to the golden age, at other times convert him into an ideal. The Stoics under the Roman principate re-affirmed vigorously the existence of the wiseman. Seneca however admits that his appearance is as rare as that of the phoenix, and altogether disclaims any such character for himself indvidually. Epictetus is far more true to the spirit of the old doctrine, when he not only abstains from any morbid depreciation of his own character, but also urges his peoples never to give up the hope of reaching perfection.”

4.            See Sir Alexander Grant, Arisotle’s Ethics.

5.            Moral saying of Seneca:

                No man is nobler than his fellow, even if it happen that his spiritual nature is better constituted and he is more capable of higher learning. The world is the one mother of us all, and the ultimate, origin of each one of us can be traced back to her, whether the steps in the ladder of descent be noble or humble. To no one is virtue forbidden; she is accessible to all; she admits everyone, she invites everyone in: free men and freedmen, slaves, kings and exiles. She regards neither birth nor forture; the man alone is all she wants.

                It is a mistake to think that the status of a slave affects the whole of a person’s nature; the nobler part of it is not touched thereby.

                Every single person, even if there is nothing else to recommend him. I must hold in regard, because he bears the name of man.

                In the treatment of slave we have to consider not how much we can do to him without being liable to punishment, but how much the nature of right and of justice allows us to do, seeing that these bid us treat gently even prisoners and purchased slaves.

Although in the treatment of a slave everything is allowed there is neverthless something which through the common right of every living being is stigmatised as not permissible in the treatment of a man,

because he is of the same nature as thyself.

                Moral saying of Epictetus:

                Nature is wonderful, and full of love for all creatures.

                Wait upon God, ye men. When he calls you, and releases you from service, then go to him; but for the present remain quietly in the postition in which He has?

                You carry a good about with you, and do not know it, unhappy one! You have him within yourself, and do not notice-it when you defile him with unclean thoughts of foul deeds.

                Cultivate the will to satisfy yourself, and to stand fight before God. Strive to become pure, one with yourself a one with God. (See the Teaching of Epictetus, by T.W. Rolleston, London. 1891).

                Moral Sayings from the Meditations of Marcus Aurellus:

                Everything that happens right, and-it you can observe things carefully, you will recognize that it is so I do not mean only in accordance with the course of nature, but much more that they happen in accordance with the law of righteousness, and as if controlled by a Being who orders all things according to merit.

                If I am active, I am so with due regard to the general welfare. If anything happens to me, I accept it and consider it in relation to the gods and the universal source from which, in close connection, come all our happenings.

                He who commits unrighteousness is godless. for universal nature created rational beings for one another; to help each other where there is need, but never to injure one another.

                Love mankind; obey the god-head.

6.            Quintilian, On Rhetoric; Cicero De Oratore, De Amicitia.

7.            Otto Kiefer, Sexual Life in Anciet Rome, Kegan Paul, London, 1956, Hans Licht, Sexual Life in Ancient. Greece, Kegan Paul, 1956, Geoffrey Peruval Aristatle on Friendship, Cambridge, 1940, I MARROU, History of Ancient Education, London. 1957.

(அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சொர்ணம்மாள் அறக்கட்டளைச் சொற்பொழிவில் 1967ஆம் ஆண்டில் அறிஞர் தனிநாயகம் அடிகள் செய்த சொற்பொழிவின் ஒரு பகுதி. இப்பகுதி அண்ணாமலைப் பகல்லைக்கழகம் வெளியீட்டுள்ள (1967) திருவள்ளுவர் என்னும் நூலிலிருந்து எடுத்து மறுவெளியீடு செய்யப்படுகிறது.)

Pin It