தோழர் பி.கே.வாசுதேவன் நாயரின் துணைவியார் திருமதி. லெட்சுமிக்குட்டி அம்மை அவர்களோடு பி.கே.வியைப் பற்றி நடத்திய சில உரையாடல்கள்...

- ஏ.எம்.சாலன்

லெட்சுமிக்குட்டி அம்மாவுக்கு பி.கே.வி. எவ்வாறு அறிமுகமானார்?

எனக்கு பி.கே.வியைக் கணவராக நிச்சயித்ததற்குப் பிறகுதான் தெரியும். ஆனால், எங்கள் நிச்சயத்திற்கு முன்பு என் சகோதரர்கள் பி. கே. வியைப்பற்றிச் சொல்லிக் கேள்விப்பட்டிருந்தேன்.

அதற்கான சூழலைப் பற்றிக் கொஞ்சம் விளக்கிச் சொல்ல முடியுமா?

பி.கே.வி. ஒரு கம்யூனிஸ்ட் என்பதை நான் உங்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை.. அவரைப் போலவே கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது AISF-லும், கட்சியிலும் என் சகோதரர் பி.கோவிந்தப் பிள்ளையும் மும்முரமாக செயல்பட்டுக் கொண் டிருந்தார். அவரைப் போலவேதான் என்னுடைய பிற சகோதரர்களும்!

அந்த வேளையில் அவர்கள் பேசிக் கொள் வார்கள்: அப்போது நானும் அவர்களுடன்தான் இருப்பேன். ‘நம்ப வீட்டுக்கு, எங்களுக்கு மைத்துனராக வரக்கூடியவர் கண்டிப்பாக ஒரு கம்யூனிஸ்ட்டாகத் தான் இருக்க வேண்டும். உன் அபிப்பிராயம் என்ன?’ என்று என்னை நோக்கிக் கேட்பார்கள், என் சகோ தரர்கள். அதற்கு நான், உங்கள் விருப்பம்தான் என் விருப்பம் என்று சொல்லிவிடுவேன்.

அப்பொ, உங்களுக்கு என்று தனி அபிப்பிராயம் எதுவும் கிடையாதா?”

(இந்த விஷயத்தில் அப்பாவைத் தவிர) அதாவது, எனது வருங்காலக் கணவரைத் தேர்வு செய்யும் விஷயத்தில் நாங்கள் எல்லோரும் ஒரே கருத்தைத் தான் கொண்டிருந்தோம். அது மட்டுமின்றி, நாங்கள் எல்லோரும் வீட்டிற்குள் ஒரு விஷயத்தைப்பற்றி முடிவு எடுக்கும் போது எல்லோரும் கூடிப் பேசிக் கூட்டாகத்தான் முடிவு எடுப்போம். (லெட்சுமிக் குட்டி அம்மா வாய் நிரம்பச் சிரித்துக் கொண்டார்.)

பி.கே.வியை வாழ்க்கைத் துணையாகத் தேர்வு செய் வதற்கு முன்னால் வேறு யாராவது உங்களைப் பெண் பார்க்க வந்திருந்தார்களா? அப்படி வந்திருந்தால், நீங்களும் உங்கள் சகோதரர்களும் அதை எப்படிச் சமாளித்தீர்கள் என்று சொல்லுங்களேன்...

இந்தக் கேள்வியைக் கேட்டதும் 83 வயதான லெட்சுமிக் குட்டி அம்மா ஒரு இளம் பெண்ணைப் போல் களங்கம் இல்லாமல் சிரித்தார். பின்னர், அது பெரிய கதை என்று சொல்லத் தொடங்கினார்.

எங்க குடும்பம், புல்வழியில் மிகவும் பேரும் புகழும் பெற்ற ஜமீன்தார் குடும்பம்; எங்க வீட்டுக்குப் பின்னாலுள்ள ‘பரம்பில் தினமும் 25 அல்லது 30 ஆட்களுக்குக் குறையாமல் வேலை செய்வார்கள். வேலைக்கு வரக்கூடியவர்களுக்குப் பெரும்பாலும் சாப்பாடு, எங்க வீட்டில்தான். அந்தக் காலத்திலேயே எங்க அப்பா, அம்மா ஊர்ப்பிள்ளைகளுக்குப் படிப் பதற்காக ஒரு தனியார் பள்ளிக்கூடம் ஒன்றைக் கட்டி எழுப்பினார்கள், என்றால் பார்த்துக் கொள்ளுங் களேன். அப்பா, ஜமீன்தார் என்றாலும் கூட ஊரார் வளர்ச்சியில் மிகுந்த அக்கறைகொண்டு செயல் படக்கூடிய கருணையுள்ளம் படைத்தவர். அதற்கான உதாரணம் தான் நான் மேலே சொன்னது.

நான், எங்க வீட்டில் ஒரேயொரு பெண். மத்த படி எல்லாம் ஆம்புள்ளைப் பிள்ளைங்க. அதனால எனக்கு வரக்கூடிய மாப்பிள்ளைப் பையன் பேரு கேட்ட பணக்காரக் குடும்பத்திலுள்ள ஒரு நல்ல பையனாக இருக்க வேண்டும் என்பது என் அப்பாவின் ஆசை. ஆனால் என் சகோதரர்கள், இதற்கு நேர் எதிரான கருத்தையுடைவர்களாக இருந்தார்கள். அவர்களைப் பொறுத்த வரையில் எனக்கு மாப்பிள்ளை யாக வரக்கூடியவர் ஒரு கம்யூனிஸ்ட்டாகத்தான் இருக்க வேண்டும், என்கிறதில ரொம்பவும் உறுதியாக இருந்தாங்க. அதனால, என்னைப் பெண் பார்க்க வர்ராங்கன்னு தெரிஞ்சாக்கா, நீங்க பஸ் இறங்கி வந்தீங்கல்லியா ஒரு கவல (சந்தி), அங்கே போய் என் சகோதரங்க நின்னுக்கிடுவாங்க; மாப்பிள்ளை வீட்டார் வந்ததும், அப்பா பேரைச் சொல்லி, அவருக்கு மகளைத்தானே பெண் பார்க்க வந்தீங்க? அப்படீன்னு கேட்பாங்க.

அவங்களும் ‘ஆமாம்’னு பதில் சொல்லுவாங்க. உடனே இவங்க, ‘அந்தப் பெண்ணுக்கு ஒரு கண் தெரியாது; காது செவிடு, ஒரு கால் நொண்டி, அது ஒரு மந்தப்புத்தி, அப்படி இப்படின்னு எதையாவது சொல்லி, வந்தவங்களை வீட்டுக்குவரவிடாம திரும்பிப் போகும்படியா செய்துருவாங்க. வந்தவங்களும், அதை அப்படியே நம்பிடுவாங்க.

இப்படி வந்தவர்களெல்லாம் திரும்பிப் போகப் போக, அப்பாவும் அம்மாவும் சோர்ந்து போனாங்க. கடைசியில் என் சகோதரர்கள்தான் அப்பாவிடம் கேட்டாங்க. அப்பா, வேணுன்னா நாங்க லெட்சுமிக் குட்டிக்கு மாப்பிள்ளைப் பார்க்கட்டுமா என. அதற்கு அப்பா, ‘சரி’-ன்னு சொல்லவே, இவங்க ஏற்கனவே போட்ட திட்டத்தின்படி பி.கே.வியிடம் சொல்லி, என்னைப் பெண் பார்க்க வரச் சொன்னாங்க. இந்த விஷயம் எங்க வீட்டுக்குத் தெரியாது. ஆனா, இதை எங்கிட்டெ மொதலிலேயே சொல்லிவிட்டாங்க. அதன்படி மொதலிலெ பி.கே.வியும் அவங்க மாமாவும் வந்தாங்க. அப்புறம்தான் பி.கே.வியின் அப்பாவும், உறவுக்காரங்களும் வந்து பார்த்துவிட்டு, பேசி முடிச்சாங்க.

இதுக்கு எப்படி உங்க அப்பா சம்மதிச்சாங்க?

எங்க அப்பாவுக்கு முதலிலெ விஷயம் தெரியாது. பி.கே.வி. அப்பொ சட்டக்கல்லூரி மாணவர். அதனால, நம்ப மாப்பிள்ளை சட்டக்கல்லூரியிலப் படிச்சு பெரீய்ய வக்கீலாக வருவார்னு நெனைச்சு, ரொம்ப சந்தோஷத்தோடு தான் எங்க கல்யாணத்துக்குச் சம்மதிச்சாங்க.

மனைவி என்கிற முறையில் பி.கே.வி உங்ககிட்டெ எப்படி நடந்துக் கிட்டாருன்னு கொஞ்சம் சொல்ல முடியுமா?

மனசுக்கு ஏத்த மாப்பிள்ளை. எங்க இரண்டு பேருடைய உலகக் கண்ணோட்டமும் ஒரே மாதிரியான இடது சாரி உலகக்கண்ணோட்டம். ஆனதுனால, எங்க இரண்டு பேருக்கு இடையே சண்டை சச்சரவோ, கருத்து வேறுபாடோ எதுவும் வந்தது கிடையாது. கடைசி வரை ரொம்ப அன்பாகத் தான் நடத்தினார், பி.கே.வி.

பி.கே.வி. தன்னுடைய வாழ்க்கை வரலாறு புத்தகத்தில், கல்யாணத்துக்கு பெறகும் கூடத் தொடர்ந்து கட்சி வேலைகள்ல முழு மூச்சாகச் செயல்பட்டதா எழுதி யிருக்கிறாரோ அப்படிப் போகும் போது லெட்சுமிக்குட்டி அம்மா அதுக்கு இடைஞ்சல் பண்ணியிருக்கிறீங்களா?

(லெட்சுமிக்குட்டி அம்மா சிரித்துக் கொள்கிறார்) கட்சி வேலைக்காகப் போகும் போது நான் ஒரு போதும் பி.கே.விக்கு இடைஞ்சலாக இருந்தது, கிடையாது.

ஏன், அப்படி?

எனக்கு என்ன குறை? பணத்துக்குப் பணம்; வசதிக்கு வசதி, அன்பான அப்பா, அம்மா. அருமையான சகோதரங்க. நான் மேலே சொன்னதெல்லாம் இல்லைன்னாதானே ‘அய்யோ, நம்மை இந்த மாதிரி யெல்லாம் கஷ்டப்படும்படியா விட்டுட்டுப் போயிட்டாங் களேன்னு நெனைச்சு பொலம்பணும். மட்டுமல்ல; அவங்க எதுக்காக வீட்டைவிட்டுப் போறாங்க? கட்சி வேலைக்கு. கட்சி வேலைன்னா, நம் மக்கள் ஏற்றத் தாழ்வில்லாம வாழணும்னா நம் நாட்டில் பொது வுடைமை சமுதாயம் உருவாகணும்; அதுக்காகத் தான் அவங்க பாடுபடுறாங்கன்னு எனக்கு நல்ல ‘போதம்’ (சமூக உணர்வு) உண்டு. அதுனால நான் பி.கே.விக்கு ஒரு போதும் இடைஞ்சலா இருந்தது கிடையாது.

நீங்க பி.கே.வி. கூட வெளியே போயிருக்கிறீங்களா?

கல்யாணமான புதுசுல என்னை கிடங்கனூருக்கு அழைச்சிட்டுப் போயிருக்காங்க. அப்புறம், எம்.பி யான போது, பிள்ளைகளுக்கு ஸ்கூல் வெக்கேஷன் சமயத்தில எல்லோரையும் டெல்லிக்குக் கூட்டிக் கிட்டுப் போயிருக்காங்க. அந்த வேளையிலதா டெல்லியிலுள்ள முக்கியமான இடங்களையெல்லாம் சுற்றிப்பார்த்தோம்.

பிரசித்தமான கம்யூனிஸ்ட் தலைவர்களை யெல்லாம் உங்களுக்குத் தெரியுமா?

அநேகமா கேரளத்திலுள்ள எல்லாத் தலைவர் களையும் எனக்குத் தெரியும்.

எப்படி?

எங்க வீட்டோரமா அதோ தெரியுது பாருங்க, ஒரு தனி அறை. (முற்றத்தை ஒட்டிச் சற்றுத் தூரத்தி லிருந்த தனியறை ஒன்றைச் சுட்டுகிறார், லெட்சுமிக் குட்டி அம்மா) அங்கேதான் எல்லா கம்யூனிஸ்ட் தலைவர்களும் வந்து தலைமறைவா இருப்பாங்க. அந்த அறையை கம்யூனிஸ்டுகளின் ‘ரகசிய அறை’ என்று கூடச் சொல்லலாம்! அந்த அறைக்கு மேலே ஒரு மச்சு இருக்கிறது. அந்த மச்சுக்குள் ஆட்கள் இருந்தால், கீழே நின்று பார்த்தால்கூட கண்டுபிடிக்க இயலாது. அவ்வளவு ரகசியமான இடம். அது மட்டு மல்ல! அந்த அறைக்கு இரண்டு வாசல்கள் உண்டு. முன் வாசல் பூட்டிக் கிடக்கும் போது பின் வாசல் வழியே உள்ளே நுழைந்து, உட்புற ஏணிவழியே மேலே ஏறி விடலாம். பெரிய பெரிய கம்யூனிஸ்ட் தலைவர்க ளெல்லாம் இங்கே வந்து இருக்கும் போது எங்க அப்பாவுக்குக் கூடக் கண்டுபிடிக்க முடியலை. எவரும் சந்தேகப்படாதவாறு அவர்களுக்கெல்லாம் எங்க வீட்டிலிருந்துதான் சாப்பாடு போகும். இது போக, எங்க அண்ணா பி.கோவிந்தப்பிள்ளை, அந்தக் காலத்திலேயே மிகவும் பேருகேட்ட கம்யூனிஸ்ட் புத்த ஜீவியும் கூட! அதனால, கம்யூனிஸ்ட் தலைவர் களுக்கு என்னையும், எனக்கு கம்யூனிஸ்ட் தலைவர் களையும் நன்கு தெரியும்.

நாடாளுமன்ற உறுப்பினர், கேரள முதலமைச்சர், சர்வதேச மாணவர் அமைப்பின் துணைத்தலைவர் என்ற முறையில் பி.கே.வி. உலகின் பல நாடுகளுக்கும் சென்று வந்தவர். எப்போதாவது மனைவி என்ற முறையில் உங்களை அவருடன் அழைத்துச் சென்றிருக்கிறாரா?

ஒன்று, இரண்டு முறை என்னையும் அவருடன் கூட்டிக் கொண்டு போயிருக்கிறார். சோவியத் யூனியன் உலகெங்கும் பிரமாதமாகப் பேசப்பட்டுக் கொண்டிருந்த வேளை. அப்போது, பி.கே.விக்கு சோவியத் யூனியன் செல்ல வாய்ப்புக் கிடைத்தது. ‘லெட்சுமிக்குட்டி நீயும் வாயேன்; போய் வருவோம்!’ என, பி.கே.வி என்னையும் கூட வருமாறு அழைத்தார். எனக்கு சந்தோஷம் தாளவில்லை. என்னடா செய்யெ? என, விழித்தேன். காரணம், எனக்கு அப்பொ இரண் டாவது மகள் பிறந்திருந்த வேளை. புள்ளை வேறு ரொம்பச்சின்னது. ‘நீ, போயிட்டு வாடி; நீ, வர்ரது வரைக்கும் நாங்க பாத்துக்கிடுதோம்’ என்று வீட்டி லிருந்து பச்சைக் கொடி காட்டவே, நான் பி.கே.வி யோடு மாஸ்கோவுக்குப் போய், ரெண்டு மூணுமாசமா தங்கியிருந்து பார்க்க வேண்டிய இடங்களையெல்லாம் பார்த்துவிட்டு வந்தேன்.

(தோழர் பி.கே.வாசுதேவன் நாயர் அவர்களின் துணைவியார் திருமதி.லெட்சுமிக்குட்டியம்மை அவர்கள் சமீபத்தில் (ஜூலை முதல் வாரத்தில்) காலமாகி விட்டார்கள்.)

Pin It