மதுரை நகரைப் போல நீர் நிலைகள் நிறைந்த நகரம் வேறெங்கும் காணமுடியாது.  ஒவ்வொரு தெருவிலும் ஒரு கிணறு இருந்தது.  மெல்லிய இடையில் கனமான குடங்களை ஏந்தித் தண்ணீர் லாரி வரவுக்காகக் காத்திருக்கும் அவலங்கள் ஒருபோதும் இருந்ததில்லை.

வற்றாத நதியாக வைகை ஓடிக்கொண்டிருந் தாலும் குளிப்பதற்கு மட்டுமே பயன்பட்டது.  வயல்கள்தோறும் பாய்ந்து வளமாக்கும் நதிகளை ரசாயனக் கழிவுகளால் பாழாக்கி விடக்கூடாது என்ற அக்கறை இருந்தது.  1970கள் வரை வைகை யாற்றில் தண்ணீர் நளின நடையோடு ஓடிக் கொண் டிருந்தது.  அருகிலேயே கிருதமால் நதியும் ஓடிக் கொண்டிருந்தது.

1959-1960களில் செல்லூரில் குடியிருந்தபோது ஆறு நிறைந்து நின்றது.  ஓடு கால்கள் தண்ணீர்த் தொட்டிகள் வராத பொற்காலம். கீழத் தோப்பி லிருந்து சிம்மக்கல் வழியாக நகருக்குள் நுழை வதானால் கீழ்ப்பாலமான கல்பாலம் வழியே தான் நடக்க வேண்டும்.  பாலத்தின் மேற்புமும் தண்ணீர் கசிவுடன் இருக்கும்.

திருவாப்புடையார் கோவில் படித்துறையின் உயரமான சிங்கச் சிலையிலிருந்து எப்போதும் சில சிறுவர்கள் டைவ் அடித்துக் குளித்துக்கொண்டிருந்தனர்.  ஆற்றில் மீன்களும் நிறைந்து துள்ளின.

ஆற்றில் வெள்ளம் வரும்போது சில பிணங்களும் மிதந்து வரும்.  தத்தனேரியில் எரிக்க இட மில்லாமல் ஆற்றில் இழுத்து விடுவதாகப் பேச்சு வரும்.  பிணம் பார்த்த அதிர்ச்சியில் காய்ச்சல் வந்து விடக்கூடாது என்பதற்காக திருநீறு பூசித் தான் வீட்டுக்குள் விடுவார்கள்.  தத்தனேரி மதுரையின் மகாமயானம்.

செல்லூர் ஆற்றுப் பகுதியில் பேய் ஓட்டும் உடுக்குச்சத்தம் இரவில் பயங்கரமாக ஒலிக்கும்.  பேய் ஓட்டுபவர் பேய் பிடித்த பெண்ணின் உச்சி முடியைப் பிடுங்கி முனிசிபல் ஆபீஸ் தென்புறச் சுவரை ஒட்டிய பனை மரங்களில் ஆணியடிப்பார்கள்.  அப்போது மதுரையில் முனிசிபாலிட்டி தான்.  இரவில் அந்தப் பக்கம் போகப் பிள்ளைகள் பயப்படுவார்கள்.

இப்போதும் ஆணிகளுடன் அந்தப் பனை மரங்கள் உள்ளன.  உடுக்கைச் சத்தமும் பேயாடும் பெண்ணும் தான் இல்லை.  மின்சாரம் வந்ததால் பேய்கள் மறைந்துவிட்டதாகவும் பேயாடுதல் ஒருவித மனப்பிறழ்வு என்றும் இப்போது பேசப்படுகிறது.  இப்போதும் அந்த வழியே பனை மரங்களைக் கடந்து செல்லும்போது மோழையன் மகள் சின்னத் தாயக்காள் கல் சுமந்து ஓடியது மனதில் தெரிகிறது.  மனிதனின் வாழும் ஆசையில் பேய்களே அஞ்சி ஓடிவிட்டன.

தல்லாகுளம் பெருமாள் கோயில் மேற்குப்புறத் தெப்பம் குட்டையாகத் தண்ணீர் நிறைந்து நின்றது.  செல்லூர் கண்மாய் நீச்சல்பழகும் சிறுவர்களுக்கு வரப்பிரசாதமாக இருந்தது.  அநாயசமாக “தேவமார் பையன்கள்” தண்ணீர்ப் பாம்புகளைப் பிடித்து பக்கத்து தண்டவாளத்தில் விடுவார்கள்.  தண்ணீர் மறுகால் பாய்ந்து கொன்னவாயன் சாலை வாய்க் காலில் ஓட வழியில் குடியிருப்போர் துணி துவைப் பார்கள்.  வண்டியூர் கண்மாயில் கார் டியூப்களில் காற்றடித்து மிதந்து விளையாடுவார்கள்.  மேல மடையில் எப்போதும் நீர் ஓடும்.  ஓரத்தில் கோரைப் பாயைத் தடுத்து கலயத்தில் மீன்களைச் சேகரிப்பார்கள்.  இதை வாங்க ஒரு கூட்டம் நிற்கும்.  வாங்கிய பின் அருகில் உள்ள பாண்டி கோயிலில் போய்ச் சமைப்பார்கள்.

வில்லாபுரம் கண்மாய் எப்போதும் ததும்பி நின்று அலையடிக்கும்.  நாடார் உயர்நிலைப் பள்ளியில் என்னுடன் பயின்ற தனுக்கோடி கால் கழுவப் போனவனை பிணமாகக் கண்டெடுத்தனர்.  கட்டணக் கழிப்பறைகளும் குளியலறைகளும் இல்லாத கால கட்டத்தில் கண்மாய்களே இதனை ஈடு செய்தன.  இன்று வில்லாபுரம் கண்மாயில் கட்டப்பட்ட வீடுகளின் விலை பல லட்சம்.  தண்ணீர் லாரி காலையும் மாலையும் வருகிறது.

வடக்கு ஆவணி மூல வீதியில் செம்பியன் கிணறு இருந்தது.  யாதவர்களும் பிராமணர்களும் பால்பேதமின்றிப் பயன்படுத்தினர்.  எல்லீஸ்துரை கலெக்டராக இருந்த போது இக்கிணற்றுப் பகுதிகள் பாதுகாக்கப்பட்டன.  இன்று எல்லீஸ்துரை பெயர் எல்லீஸ் நகராக உள்ளது.  செம்பியன் கிணறு இருந்த இடத்தில் சந்தனம், குங்குமம் பூசப்பட்ட “கல்சோணைசாமி” வழிபாடு நடக்கிறது.  கிணறுதான் இல்லை.

தெற்கு மாசி வீதியையும் தெற்கு ஆவணி மூல வீதியையும் இணைக்கும் தொட்டியன் கிணற்றுச் சந்தில் மாணிக்க மண்டபம் முன்பாக தொட்டியன் கிணறு இருந்தது.  நாயக்கர்கள் காலத்தில் படைப் பிரிவில் இருந்த தொட்டிய நாயக்கர்களும் மறவர் படையினரும் தாகந்தணித்துக் கொண்ட கிணறு இன்று காணப்படவில்லை.  நினைவாகத் தொட்டிச்சி அம்மான் கோவில் தான் உள்ளது.

தெற்கு வாசல் பார்ப்பான் கிணற்று நீரால் சின்னக்கடைத் தெரு உபயோகமடைந்த வரலாற்றைச் சொன்னால் எவரும் நம்பமாட்டார்கள்.  அது இன்று எழுத்தாணிக்காரத் தெரு பரபரப்பில் காணாமல் போய்விட்டது.

வாணியன் கிணற்று நீரால் மேலமாசி வீதியும் சுற்றி உள்ள பகுதிகளும் செழித்தன.  ஆனால் இன்று கிணறு காணாமல் போய் “வாணியர் சந்து” ஆகி விட்டது.  மதுரை மேற்குக் கோட்டையில் இருந்த காவல் வீரர்கள் தண்டு இறங்கி நின்று வழிபட்ட தண்டு மாரியம்மன் கோவில் வழிபாட்டுக்கு இந்நீர் பயன்பட்டது என்பார்கள்.  இன்று தண்டு மாரி யம்மனுக்கு வாசலில் உள்ள குழாய் நீரில் தான் குளியல்.

இன்றைய டவுன் ஹால் சாலை மையப் பகுதியில் உள்ள பெருமாள் தெப்பக்குளம் கூடல் அழகர் பெருமாளின் மஞ்சன நீராட்டுக்குப் பயன் பட்டது.  இத்தெப்பத்தின் மேற்குப் பகுதியில் உள்ள ரோசரி சர்ச்சில் தங்கியிருந்து பணி செய்த பாதிரியார் இத்தெப்பத்தில் நீராடிய பின்பே தேவாலய வழிபாடுகள் செய்ததாகக் கூறுகின்றார்கள்.

மதுரை பெரியார் பேருந்து நிலையத்தின் பின்புறம் புகைவண்டித் தண்டவாளங்களைக் கடந்தால் வலை வீசித் தெப்பம் மூன்று ஆண்டுகள் முன்பு வரை இருந்தது.  இதனைக் காலைக் கடன் முடித்தவர்கள் கால் கழுவப் பயன்படுத்தியதால் இது மூடப்பட்டதாகக் கூறுகிறார்கள்.

இது புராணச் சிறப்புடையதாகும்.  மதுரை சொக்கநாதர் வலை வீசிய திருவிளையாடல் நடத்தியதால் இதில் ஆண்டு தோறும் மீனாட்சி சுந்தரேசுவரர் ஆவணி மாதத்தில் மண்டகப்படி வைபவம் நடக்கும்.

இன்று இந்தத் தெப்பக்குளம் மறைந்து “பையன்கள் கிரிக்கெட் விளையாடுகிறார்கள்.

மதுரையின் கிழக்கே மைனா தெப்பக்குளம் இருந்தது.  திருமலை நாயக்கர் மதுரையை ஆண்ட போது இத்தெப்பத்தின் கரைகளில் வந்து உலாவு வாராம்.  திருமலை நாயக்கரை மக்கள் நைனா (அப்பா) என்று அழைப்பார்கள்.  அதுவே மருவி மைனாத் தெப்பம் ஆனதாகக் கூறுகிறார்கள்.  இன்று பாத்திரக் கடைக் கிட்டங்கிகளால் நிறைந்து விட்டது.

பீபீ குளம் கண்மாய் இன்று வானொலி நிலையம் வைப்பு நிதி அலுவலகங்களால் நிறைந்து விட்டது.  இன்று கரையில் இருந்த காட்டுப் பிள்ளையார் மட்டுமே சாட்சியாக உள்ளார்.

மதுரையின் கிழக்குப் பகுதிகளில் உள்ள மாரி யம்மன் தெப்பக்குளம் உலகப் பிரசித்தி பெற்றது.  மன்னரின் மனநிலைக்கேற்ப கட்டப்பட்டது.  இதைத் தோண்டும் போது தான் முக்குறுணிப்பிள்ளையார் கிடைத்ததாகக் கூறுவார்கள்.  ஏறத்தாழப் பதினெட்டு அடி உயரமுள்ள இப்பிள்ளையார் மீனாட்சி அம்மன் திருக்கோயிலின் பிரதான கடவுளரில் ஒருவராவார்.  மாரியம்மன் தெப்பக்குளத்தின் நடுவில் உள்ள நீராழி மைய மண்டபம் பலவித மூலிகை மரங்களால் நிறைந்தது.  இன்று மாரியம்மன் தெப்பக்குளத்தில் நீர் வற்றி வைகை மூலம் நீர் கொண்டு வரப்படுகிறது.  வைகை ஆற்றிலிருந்து வெட்டப்பட்ட கால்வாய் மீது கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதால் தியாகராசர் கல்லூரி பின்புறம் இதற்கென்றே நீர் இறைக்கும் மோட்டார்கள் உள்ளன.  ஆனால் ஆற்று நீர் வற்றி ஊற்று நீரும் வற்றிப் போனதால் மீனாட்சி சுந்தரேசுவரர் நீரில்லாத தெப்பத்தைச் சுற்றி வந்தது ஒரு சோகமான நிகழ்வு.

மதுரையில் வடக்கு வெளி வீதியையும் பேச்சி யம்மன் படித்துறையையும் இணைக்கும் ஒரு பெரிய தெப்பம் கிருஷ்ணராயர் தெப்பக்குளம்.  பிராமண சமூகத்தினர் குளிப்பதற்காக பிரத்தியேக மான அமைப்பு இருந்ததாம்.  இன்றைய ஞாயிற்றுக் கிழமை சந்தை அந்தக் குளத்தின் ஒரு பகுதியாகும்.  இதன் கரையில் தான் பாண்டித்துரைத் தேவர் தமிழ்ச் சங்கம் நிறுவி வளர்த்தார்.

ஞாயிற்றுக்கிழமை சந்தை 1975 வரை மதுரை திலகர் திடலாக இருந்தது.  மதுரையின் அரசியல் இந்த மேடையையே சுற்றிச் சுழன்றது.  மொழிப் போரின் போது இந்த உயரமான மேடையில் அரசியல் சட்ட நகல் எரிப்புப் போராட்டம் நடை பெற்றது.  ஞாயிற்றுக்கிழமைகளில் காமராசர், பக்தவத்சலம், முத்துராமலிங்கத் தேவர், பெரியார் போன்றவர்கள் பேசுவார்கள்.  கூட்டம் நிறையும்.  அதற்குப் பிறகு திலகரும் இல்லை, திடலும் இல்லை.  மேடை கம்பீரம் மறைந்து பழைய, புதிய இரும்புக் கடைகள் நிறைந்த சந்தையாகி விட்டது.

தண்ணீர் இல்லாத உலகத்தைக் கற்பனையில் கூடக் காண முடியாது.  ஓடைகளிலும் ஊற்றுக் களிலும் கிணறுகளிலும் “தண்” என்னும் குளிர்ச்சி யோடு கிடைத்த நீர் இன்று பாட்டில்களில் அடைத்து விற்கப்படுகிறது.  பத்து ரூபாய் கொடுத்துப் பால் வாங்கிப் பசியாற முடியாதவர்கள் பதினெட்டு ரூபாய் கொடுத்து “மினரல் வாட்டர்” வாங்கிக் குடிக்கின்றனர்.  ஒரு வேளை தாகந்தீர காசிருந்தால் தான் முடியும் என்று ஊரே “அக்வா மினரல்” உலகமாகிவிட்டது.

மதுரை மேற்கு கோச்சடை அருகே தோன்றி மதுரையின் தெருக்கள் வழியாகத் தவழ்ந்து காஞ்சிரங்குளம், சிந்தாமணி தொடர்ந்து சிவகங்கை மாவட்டத்தின் ஒரு பகுதி வரை ஓடி ஊரை யெல்லாம் வளப்படுத்திய “கிருதமால் நதி” இன்று கிருதமால் வாய்க்காலாக மாறி மதுரையின் கழிவு களைச் சுமந்து சிந்தாமணி அருகே ஜலசமாதி ஆகி வருகிறது.  புரோகிதர்கள் மந்திரம் ஓதும் போது கங்கா, காவிரி நதிகளின் பெயர்களோடு கிருத மாலா என்று இந்த நதியின் பெயரைத் தான் உச்சரிக் கின்றனர்.  சென்னைக் கூவம் போல மதுரைக் கூவம் கிருதமால்... மனிதனின் பேராசைக்கு நதிகளே முதல் பலியாவது சோகமானது.

மதுரை புதுமண்டபம் எதிரில் எழுகடல் இருந்தது.  தரையிலிருந்து 30 அடி உயரம் இருந்த இந்த எழு கடலில் ஏழு இடங்களில் கிணறுகள் இருந்தன.  மாமியார் காஞ்சனமாலைக்காக மதுரைக் கடவுள் சொக்கநாதர் தோற்றுவித்த ஏழு கடலும் பொங்கி வந்ததாகக் கூறுவார்கள்.  புராணம் பொய்யோ நிஜமோ? ஏழு கிணறுகள் இருந்த இந்தக் குளம் போன்ற அமைப்பு மூடப்பட்டு இன்று பல லட்சம் வருமானம் தேடித்தரும் தேவஸ்தானக் கடைகளால் நிரம்பி பிளாஸ்டிக் கோடவுன் களாகிவிட்டது.

மதுரையின் மையப் பகுதியான மீனாட்சி யம்மன் கோவிலில் தென்புறமாக அமைந்த பொற்றா மரைக்குளம் இன்று படித்துறைக் கற்கள் மட்டுமே காண முடிகிறது.  இந்தத் தெப்பக்குளம் எத்தனையோ வரலாறுகளைக் கண்டது.  எத்தனையோ புலவர் களும் கவிஞர்களும் அமர்ந்து நீரலைகளின் குளிர்ச்சி தாலாட்ட தமிழாய்ந்த பொற்றாமரைக்குளம் இன்று நீர் வற்றி நிலம் காய்ந்து கிடக்கிறது.

தெப்பத்தின் ஊற்றுக்கண்களை ஈயம் காய்ச்சி அடைத்துவிட்டு செயற்கையாக நிரப்பி நவராத்திரி கொண்டாடியவர்கள் இன்று பல லட்சம் செலவில் ஊற்றுக்கண்களைத் தோண்டி தாமரை வளர்க்கத் தண்ணீரை நிரப்புகின்றனர்.  மீனாட்சியம்மன் கோவில் தெப்பக்குளம் நிரம்பும் போது நிலத்தடி நீர் நான்கு ஆவணி மூல வீதிகள் வரை வற்றாமல் சுரக்கும்.  இப்படி ஒரு காலத்தில் இப்பகுதிகள் இருந்த போது எப்போது குழாயைத் திறந்தாலும் ஜில்லென்று தண்ணீர் கொட்டியது ஒரு பொற்காலம்.

கோச்சடை தாண்டி துவரிமான் அருகே புல்லூத்து இருந்தது.  நாகமலையில் மழைநீரும் ஊற்று நீரும் பெருகி பாய்ஸ் டவுன் அருகே பசுமையான புற்களுக்கு மத்தியில் ஊற்று பீறிட்டுக் கிளம்பும்.  மதுரை நகரை ஒட்டி இருப்பதால் மாணவர்களும் மற்றவர்களும் சைக்கிளில் பிக்னிக் போய் குளித்துக் கும்மாளமிடுவார்கள்.  இந்த நீரால் அப்பகுதி நிலங்களும் வாழைத் தோப்புகளும் செழித்தன.  இந்த நீர் வாய்க்காலாக ஓடி வைகையில் கலக்கும்.  இன்று புற்களும் காய்ந்து ஊற்றுக் கண்ணும் வறண்டு புல்லூத்துத் தண்ணீர் “குடி” மகன்கள் சொல்வது போல கால்பாட்டில் கூட நிரம்புவதில்லை.

மதுரை தாண்டி கொடிமங்கலம் மலையடி வாரத்தில் நாகர் ஊற்று இருந்தது.  நாகமலை என்ற பெயருக்கேற்ப பாம்புகள் நிறைந்திருந்த பகுதி.  இந்த ஊற்றுத் தண்ணீர் மூலிகைக்குணம் நிறைந்து, வாய்க்கால் வழியோடி கொடிமங்கலம் வந்து தேனூருக்கு எதிரில் ஆற்றில் கலக்கும்.  மதுரையின் சுற்றுலாத் தலங்களில் ஒன்றான இந்த ஊற்றும் புல்லூத்து போல மழைக் காலங்களில் மட்டுமே பெருகுகிறது.  நாகம்மாள் கோவில் மட்டுமே சாட்சியாக நிற்கிறது.  வெள்ளி, செவ்வாய்களில் பிள்ளைவரம் கேட்டும் தோஷம் நீங்கவும் கூட்டம் அலைமோதுகிறது.

அழகர் கோவிலின் நூபுரகங்கை மட்டுமே இன்று பெருகி வழிகிறது.  ஆழமான தொட்டிகளில் பெருகி வரும் இது குளிக்கவும் குடிக்கவுமான ஒன்று.  ஆனால் குரங்கு ஒன்று விழுந்து இறந்ததால் இன்று கம்பிவலை போட்டு ஒரு வாளி மட்டும் உள்ளே போகும் அளவில் அமைத்து தினமும் நூற்றுக்கணக் கானோர் குளிக்கின்றனர்.

திருப்பரங்குன்றம் மலையில் காசிவிசுவநாதர் கோவில் நீருற்று என்னும் வற்றாதது.  ஆனால் பாதை சரியாக இல்லாததால் பலரும் போவதில்லை.  இங்குள்ள படியில் பழமையான கல்வெட்டு உள்ளது.

மாடக்குளத்தில் பாதி வயலாகிவிட்டது.  உலகநேரி கண்மாய் உயர்நீதிமன்றப் பரபரப்பில் காணாமல் போய்விட்டது.  தண்ணீர் நிறைந்திருந்த தல்லாகுளம் மேலூர் சாலையில் இருந்த குளம் நீதிமன்றங்களாகிவிட்டன.  நீர் நிலைகள் எல்லாம் வீட்டு மனைக்கற்கள் ஊன்றப்பட்டு மதுரையின் ரியல் எஸ்டேட் வளர்ச்சிக்குச் சான்றாகி வருகின்றன.

இப்படியெல்லாம் நீரும் நிலமுமாய் வயலும் வளப்பமுமாய் இருந்த “ஆறு கிடந்தன்ன அகல் நெடு வீதிகள்” கொண்ட தென்மதுரை பரிபாடல் புகழ் இழந்து தென்னகத்தின் ஏதென்ஸ் மதுரை கான்கிரீட் நகரமாகித் தண்ணீர் பாட்டில்களை வாயில் கவிழ்த்தும் கூட நாவறட்சி நீங்காமல் நிற்கிறது.  ஆறில்லாததால் ஊர் அழகிழந்து ஈரப் பசை இல்லாத மதுரையாக மாறிவருகிறது.  மண்ணில் ஈரம் இல்லாததால் மனிதர்களும் வறண்டு போய் வாழ்கிறார்கள்.

ஊரெல்லாம் மிஞ்சி இருக்கும் நீர் நிலை களையாவது காப்பாற்றாவிட்டால் மூன்றாம் உலகப் போர் மூண்டால் அது தண்ணீரால்தான் மூளும் என்பது உண்மையாகும்.  அப்போது முதலில் அழிவது மதுரையாகத் தானிருக்கும்.

Pin It