நட்சத்திர ஓட்டலில் நாவுக்கு ருசியாக நல்ல சாப்பாடு சாப்பிடலாம்... விசேடங்களில் திருப்திகரமான விருந்து உண்ணலாம்... பல முறைகளில் விதவிதமான பதார்த்தங்கள் வைக்கப்பட்டு... வைக்கப்பட்டதில் விரும்பியதை எடுத்து, பவ்வே பாணியில் நாகரிகமாய்...  நாசுக்காய் உண்ணலாம்... இந்த வகைகளில் விருந்துகள் சிறப்பாக இருந்தாலும்... ஒரு பொரியல், கூட்டு, குழம்பு, சுட்ட அப்பளம் முதலியனவற்றுடன் அம்மா கைப்பக்குவச் சமையலைச் சாப்பிடும்போது ஏற்படும் நிறைவு அலாதியானது.

என்னதான் கோக், பவண்டா, டொரினோ, மிரண்டா முதலிய குளிர்பானங்களைச் சுவைத்து அருந்தினாலும், பெருங்காயம், கருவேப்பிலை,இஞ்சி கலந்த மோருக்கு உள்ள சுவைக்கு ஈடாகாது.

அது போன்று குளிர் சாதன பெட்டியில் குளிர வைத்த குடிதண்ணீரை எடுத்துக் குடிக்கும்போது ஏற்படுகிற குளிர்ச்சியினைக் காட்டிலும் மண்பானைத் தண்ணீருக்குள்ள குளிர்ச்சி மகத்தானது.

அம்மா கைச் சாப்பாடு, தாகம் தணிக்கும் மோர், வெயிலுக்கு உகந்த மண்பானைத் தண்ணீர் முதலியன வற்றைப் போன்றது மேடை நாடகங்கள்.

நட்சத்திர விடுதி உணவு, விதவிதமான விருந்துகள், வெளிநாட்டுக் குளிர்பானங்கள், குளிர்சாதன பெட்டியில் வைத்த குடிநீர் ஆகியனவற்றை நவீன ஊடகங்களின் நிகழ்ச்சிகளுக்கு ஒப்பிடலாம்.  சின்னத்திரை சீரியல்கள், நாட்டிய நடனங்கள், பாட்டுப் போட்டி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள், ஆடலுடன் பாடல் கலை நிகழ்ச்சிகள் இத்தியாதிகளைப் பார்த்து ரசிப்பது நவீன உணவு வகைகள், பானங்கள் வகையறாக்களைச் சாப்பிடுவதற்குச் சமம் ஆகும்.  உண்பது உடலைக் கெடுக்கும் என்றால்...  ரசிப்பது உள்ளத்தைப் பழுதாக்கும்.

“நாடகங்கள் மறைந்துபோய் விட்டன” என்கிற எண்ணங்களே அங்கிங்கெனாதபடி எங்கும் நிலவு கின்றன.  ஆனால் நிலைமை அப்படி இல்லை. சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர், மதுரை, புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்றளவும் வள்ளித் திருமணம், சத்யவான் சாவித்திரி, பவளக்கொடி, கட்ட பொம்மன், போன்ற நாடகங்கள் திருவிழாக் காலங்களில் போடப்படுகின்றன.  இரவு பத்தரைக்குத் தொடங்கும் நாடகம் அதிகாலை ஐந்துமணி வாக்கில் நிறைவுறும். அதுவரை விழித்திருந்து பார்க்கக் கூடிய ரசிகப் பெருமக்கள் இருக்கவே செய்கிறார்கள்.

ஆடலுடன் பாடல் நிகழ்ச்சி, விடிய விடிய திரைப்படங்கள் முதலியனவற்றைச் சில திருவிழாக்களில் இடம்பெறுவதை மறுக்க முடியாது.  இருந்தபோதிலும் வெறியான நாடக விரும்பிகள் கிராமங்களில் நிறையவே இருக்கிறார்கள் என்பதையும் மறைக்க இயலாது.  வசனங்களை வரிவரியாக ஒப்பிக்கின்ற ரசிகர்கள் பலருண்டு.

மானாமதுரையில் 1979 முதல் நாடக நடிகர் சங்கம் இயங்கிவருகின்றது. முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் தோழர் கே.தங்கமணி, இந்தச் சங்கத்திற்கு ஒரு முறை தலைவராக இருந்து வழிகாட்டி இருக்கிறார்.  சங்கத்தின் வெள்ளி விழா ஆண்டான 2005-இல் மானாமதுரை நகரில் நாடகக் கலைஞர்களின் ஊர்வலம் தோழர் கே. தங்க மணி, தோழர் எஸ்.முத்தையா (ஒன்றியச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சி) ஆகியோர் முன்னிலையில்  நடத்தப்பட்டது.

இந்த நாடகக் கலைஞர்கள் “தமிழ் நாடகத் தலைமையாசிரியர்” என்கிற சிறப்புப் பெற்ற சங்கரதாஸ் சுவாமிகள் மீதும், “சின்ன சங்கரதாஸ் சுவாமிகள்”  என்ற பட்டம் பெற்ற கே.ஏ. கனகசபாபதி பிள்ளை அவர்கள் மீதும் ஆழமான மரியாதை வைத்திருப்பதைப் பார்க்க முடிகிறது. இவர்கள் இம் மண்ணை விட்டுப் போனாலும் சீடர்களின் மனங்களை விட்டுப் போகவில்லை.

சங்கரதாஸ் சுவாமிகள் ‘சாவித்திரி’ நாடகத்தில் எமனாக நடித்தபோது நாடகம் பார்த்த ஒரு பெண் மணிக்குக் கர்ப்பம் கலைந்தது.

நள தமயந்தி நாடகத்தில் சனீஸ்வரனாக நடித்த போது அதனைப் பார்த்த  பெண் ஒருத்தி மாரடைப்பால் மரணமடைந்தார்.

இந்த இரு நிகழ்விற்குப் பிறகு சுவாமிகள் நடிப்பதை விட்டுவிட்டு நாடகம் எழுதுகிற, கற்றுத் தருகிற பணி களில் ஈடுபட்டார்.

மொத்தம் நாற்பது நாடகங்கள் சுவாமிகள் எழுதியிருக்கின்றார்.

1967-ஆம் வருடம் சங்கரதாஸ் சுவாமிகளின் நூற்றாண்டு விழாவின் போது மதுரை தமுக்கம் வாயிலில் அவருக்குச் சிலை நிறுவப்பட்டது.

கே.ஏ.கனகசபாபதி பிள்ளை மானாமதுரைப் பகுதியில் பிறந்தவர், சங்கரதாஸ் சுவாமிகளைக் குருவாக ஏற்றுக் கொண்டவர், நாடக நடிப்பில் சிறந்து விளங்கியவர். 2000க்கு மேற்பட்ட நாடகக் கலைஞர்களை உருவாக்கியவர்.

நாடகப் பயிற்சியின்போது வசன உச்சரிப்புக்கள்  இளம் நடிகர்களுக்குச் சரியாக வராவிட்டால் புளிய விளாரால் அடித்துத் திருத்துவார்.

கனகசபாபதி பிள்ளையவர்களின் சிறப்புக்களை உணர்ந்து பேரூராட்சி மன்றம் இவரது பெயரை மானா மதுரையில் தெருவொன்றிற்குச் சூட்டி கௌரவித்தது. இன்றளவும் அது கனகசபாபதி பிள்ளை தெரு என்றழைக்கப்படுகின்றது.

ஏனாதி செங்கோட்டை கிராமத்தில் 1911-இல் பிறந்த கனகசபாபதி பிள்ளையவர்கள் 1979-இல் உடல் நலக் குறைவால் மதுரையில் மரணமடைந்தார். மதுரை தத்தனரி இடுகாட்டில் அவரது நல்லடக்கம் குலாலர் சமூகத்தினர் உதவியால் நடந்தது.

--இதுபோன்ற முக்கிய தகவல்களை மானாமதுரை நாடக நடிகர் சங்கத்தினரிடம் இருந்து அறிய முடிகின்றது.

வருடந்தோறும் சங்கரதாஸ் சுவாமிகள், கே.ஏ. கனகசபாபதி பிள்ளை ஆகியோரின் குரு பூஜையும் நாடக நடிகர் சங்க ஆண்டுவிழாவும் மானாமதுரையில் நடத்துகின்றார்கள்.  இந்த முறை மேமாதம் முதல் வாரத்தில்  நடந்த விழாவில் ஆசான் கே.ஏ. கனகசபாபதி பிள்ளை அவர்கள் பற்றிய வாழ்க்கைக் குறிப்பினைச் சிறு நூலாக வெளியிட்டனர்.  அடுத்த ஆண்டு அவர் பற்றிய விவரங்கள் அதிகமாகச் சேகரித்து... இரு நூறு பக்க அளவில் நூல் கொண்டு வர முடிவு செய்திருக்கிறார்கள்.

நாடகம் நடத்துவதற்கு உரிய சன்மானம், வருமானம் கிடைக்காவிட்டாலும் நாடகக் கலையின் மீது ஏற்பட்ட ஆர்வம், சங்கரதாஸ் சுவாமிகள், ஆசான் கே.ஏ. கனக சபாபதி ஆகியோரிடம் வைத்திருக்கும் குரு பக்தி இத்தியாதிகளால் இந்தக் கலைஞர்கள் நாடகம் நடத்தக் கூப்பிட்டவுடன் உற்சாகமாய்க் கிளம்பிவிடுகிறார்கள். ஆங்காங்கே எதிர்கொள்ளும் அவமானங்களைக் கூடப் பெரிதாய்க் கருதுவதில்லை.

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம், இந்தக் கலைஞர்களை உரிய வழியில் ஊக்குவித்தால் நாடகக் கலை வளரும், நச்சுக் கலை ஒழியும். நாடகக் கலைஞர்களின் வாழ்வும் ஓகோவென்று இல்லாவிட்டாலும், ஓரளவு பிரகாசம் பெறும்.

Pin It