“பரமக்குடி ஆயிர வைசிய துவக்க நிலையிலும்
செந்தூர் சரவணய்யர் நடுநிலையிலும்
காரப்பேட்டை நாடார் மேனிலையிலும்
மதுரை யாதவர் கல்லூரி நிலையிலும்
வருடா வருடம் சளைக்காது
சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்
‘சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்,,,’ ”

கவிதாசரணில் வெளிவந்த இந்தக் கவிதையே முதன் முதலில் எனக்கு அறிமுகமான மதிவண்ணன் கவிதை, இருப்புக்கும் இலட்சியத்திற்குமான இடைவெளியை எளிய மொழியில் எவ்வளவு தெளிவாகச் சொல்லிவிடுகிறது இந்தக் கவிதை என்று ஆச்சரியப்பட்டேன், கவிஞர் ம, மதிவண்ணனின் முதற் கவிதைத் தொகுதி ‘நெரிந்து,,,’வுக்கு கவிதாசரணில் வெளிவந்த விமர்சனம் படித்திருக்கிறேன், அவரது இரண்டாவது கவிதை நூலே ‘நமக்கிடையிலான தொலைவு’, ‘வெளிச்சத்தைப் புதைத்த குழிகள்’ என்றொரு விமர்சனக் கட்டுரைகள் கொண்ட இவரது உரைநடை நூலும் ஏற்கெனவே வெளிவந்திருக்கிறது,

“சொல்புதிது; பொருள் புதிது,,, மகா கவிதை.” என்றான் பாரதி, தனது கவிதை குறித்த கணிப்பேயாயினும் புதுக் கவிதைக்கு இதைவிடப் பொருத்தமான விளக்கம் வேறென்ன இருக்க முடியும், காதலை உணர்வதில்கூட ஒரு தலித்துக்கு ஏற்பட்டிருக்கும் மனத்தடை பதற்றம் குறித்துப் பேசுகிறபோதே பேசுபொருள் புதியதாகிவிடுகிறது, ‘நமக்குள் ஒளிந்திருக்கும் சமமின்மையும் வக்கிரமும்’ தெரியவருகிறபோது பிடிக்கும் தீயில் பிறக்கும் சொற்களுக்குள் சூடு பறக்கிறது, கற்பிக்கப்பட்ட புனிதங்கள். மேலெழுந்தவாரியாய்க் கட்டப்பட்ட பீடங்கள் மீது காறியுமிழ்ந்தபடி. சாதி மனிதர்களின் காதில் சப்பென்று அறைந்த படி கைவீசி நடக்கின்றன மதிவண்ணன் கவிதைகள்,

இந்த நூலின் முதற்கவிதை இது:

""வெற்றுமடியை உதறிக்காட்டி
உதட்டைப் பிதுக்குகிறது
எதிர்வரும் ஒவ்வொரு நாளும்
குருதியும் நிணமும் சிந்தி
கசகசக்க
வீச்சமெடுக்கிறது இருக்குமிடம்
இருப்புக்கு நியாயம் சொல்ல
எதுவுமில்லை
நீ தரும் முத்தம் தவிர.”

இரண்டாம் கவிதை இப்படிப் பேசுகிறது:

“எப்படி ஒன்றாய்
வளர்க்கப் போகிறோம்
இந்த முற்றத்தில்
சோறுபோடும் பன்றிகளையும்
நீ கொண்டு வரும்
முல்லைச் செடியையும்

காதலர்களாய் மட்டுமே இவ்விரு காரியங்களையும் ஒரே நேரத்தில் வேறெவரை விடவும் சிறப்பாகச் செய்ய இயலும், எந்தப் பள்ளத்தையும் நிரப்பிவிடுவதே காதலின் சக்தி,

வெள்ளையடிப்பதற்கு முன்பாய் வீட்டில் ஒட்டடையடித்து. சுவரில் படிந்த அழுக்குக் கறையை இலேசாய்ச் சுரண்டி எடுத்து. விளக்குமாறு கொண்டு சுவரைப் பெருக்கியெடுத்து. நீரில் நனைத்துக் காய விட்டுப் பின்னர் சுண்ணாம்பில் நீர் கலந்து. வெள்ளை சோபிக்கும் அளவுக்கு நீலம் கலந்து அடிப்பதுண்டு, படைப்பது என்பதும் இப்படித்தான், நிலமானால் இறுகிக் கிடக்கும் பாறைக்கற்களைச் சம்மட்டியால் உடைத்து நொறுக்கி அப்புறப்படுத்தி. தேங்கிக் கிடக்கும் பழங்குப்பைகளைக் கூட்டிப் பெருக்கி. கொளுத்தி. சீராக்கி. நீர் பாய்ச்சிப் பின்னர் பயிரிட ஆரம்பிப்போம், மானுடம் மேற்செல்லும் வழியில் மண்டிக் கிடக்கும் சாதீய முட்புதர்களை எரிப்பதில். இடறும் பாறைக் கற்களை உடைத்து நொறுக்குவதில் மதிவண்ணன் வெற்றியே காண்கிறார்,

பரிணாமத்தின் உச்சியில் மனிதன் தோன்றினான் என்பது அறிவியல் உண்மை, ஆனாலும் மனத்தளவில் எதிர்ப்பரிணாம இறங்கு வரிசையில்தான் அவன் இன்னமும் இருக்கிறான், ‘ஒன்றே குலம்; ஒருவனே தேவன்’. ‘பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும்’ என்றெல்லாம் பேசிய சமூகத்தின் பிரதிநிதிகளா நாம் என்று கேட்கத் தோன்றுகிறது, வரலாற்றின் போக்கில் பிறப்பினடிப்படையில் சாதியைத் தீர்மானித்த நாள் நியாயத்தின் தீர்ப்பில் கறுப்பு நாளாகவே கருதப்படும், விலங்காய்த் திரிந்து வேட்டையாடித் தின்று காட்டு வாழ்க்கை நடாத்திய காலத்தில் சாதி தோன்றியிருக்க வாய்ப்பில்லை, அறிவின் தளத்தில் வாழ்க்கை ஆரம்பித்து சமூக மனிதனாய் அவன் மாறத் தொடங்கியதொரு காலகட்டத்தில் தொழிலாற் பிரிந்து தோற்றம் கொண்டிருந்த நேரத்தில் இளைத்தவரை ஏய்க்க வலுத்தவர் வலிந்து பரப்பிய சீப்பட்ட சிந்தனையே பிறப்பினடிப்படையில் தோன்றிய சாதியாய் இருக்கக்கூடும், அதனால் விளைந்த அவலம் கண்டே திருமூலனுக்கும் வள்ளுவனுக்கும் எல்லோரும் ஒன்றென்று எடுத்தியம்பும் கட்டாயம் நேர்ந்திருக்கும்,

சாதிகள் இல்லை என்பது இன்றைக்கு சத்தியமாய்ப் பொய், ஒவ்வொரு மனிதனுக் குள்ளும் ஒரு சாதி மனிதன் உலவிக் கொண்டிருக்கிறான், தேவைகளின் அடிப்படையில் தனக்குச் சாதகமான விஷயங்களில் அடங்கிப் போவதும் மற்ற நேரத்தில் ஆர்ப்பரிப்பதும் என்ற இரட்டை நிலைப்பாட்டில் எப்போதும் மனிதன் கெட்டிக்காரன், தேர்தல் களத்தில் நிறுத்தப் பட்டிருக்கும் அனைத்துக் கட்சிகளின் வேட்பாளர் பட்டியலைக் கொஞ்சம் அலசிப் பார்த்தால் இது விளங்கும், எந்தத் தொகுதியில் யார் வேட்பாளர் என்று பாருங்கள், பெரும்பான்மை சமூகத்தின் பிரதிநிதிகளே பெரும்பாலும் பெரிய கட்சிகளால் நிறுத்தப்படுகின்றனர், சாதி அபிமானமும் பற்றும் இரத்தத்தில் இல்லையாயினும் மனிதன் சித்தத்தில் மறைந்தும் வெளிப்பட்டும் தோற்றம் காட்டிக் கொண்டிருக்கிறது, காதலுக்கும்- மதிவண்ணன் குறிப்பிடுவதைப் போல் காமத்துக்கும் மட்டுமே இங்கே சாதி வேண்டியதில்லை, சாதி மீறி காதலித்துக் கைபிடித்தவர்கள்கூட தங்கள் பிள்ளைகளின் திருமணம் என்று வருகிறபோது தம்முள் சமூக நிலைப்பாட்டில் உயரத்திலிருக்கும் சாதியோடேயே சம்பந்தம் வைத்துக்கொள்ள முயல்வது கண்கூடு,

வழிபாட்டிலும் சாதி குறுக்கிடுகிறது, கண்டதேவி கோயில் தேர்வடம் பிடித்திழுக்க வழக்கொன்று எழுந்தது நாம்அறிந்ததே, இவ்வளவு ஏன்? பாப்பாபட்டி. கீரிப்பட்டி பஞ்சாயத்துக்களில் ஜனநாயக முறையில் தலித் பிரதிநிதிகள் இன்னமும் தேர்ந்தெடுக்கப்பட்டுச் செயல்பட முடியவில்லை,

விதைத்து. விளைவித்து. அறுத்துத்
தரவேண்டும் நான்
சொகுசாய் நிழலில் உட்கார்ந்து
தின்பாய் நீ
,,,,,,,,
சாக்கடை தள்ளி குப்பைவாரி
துவைத்து மயிர் சிரைத்து
பிணமெரித்து புதைத்து
இன்ன பிறவும் செய்துகொண்டு
நானிருந்தால்
அழகாய்ப் பரிபாலனம்
பண்ணிக் கொண்டிருப்பாய்,,,

என்ற வரிகளில். இருக்கும் கொடிய நிலைமை எடுத்தியம்பப்படுகிறது, ஒரே தெய்வம்தான், ஆனாலும் ஒரே ஊரில் வெவ்வேறு சமூகத்தினர்க்கும் வெவ்வேறு பெயரில் கோயில்கள், பிள்ளைமாருக்கு திரௌபதியம்மன், மறவர்க்கு அங்காளம்மன், நாடார் சமூகத்தவர்க்கு பத்திர காளியம்மன், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மாரியம்மன், அம்மன் ஒன்று; அடியார்கள் வேறுவேறு!

தாவரங்களையும் விலங்குகளையும் தனக்குப் பயன்படுத்திக்கொள்வதில் மனிதன் சமர்த்தன், அவற்றிற்கெல்லாம் வாழும் உரிமை உண்டு என்பதைப் பற்றி அவனுக்கு அக்கறையில்லை, ஆதிநாட்களில் பசிக்காக வேட்டையாடிய மனிதன் இன்று ருசிக்காகக் கொல்கிறான், அவனது இந்தச் சுயநலம்தான் சகமனிதர்களிடத்தும் வெளிப்படுகிறது, மாட்டுத் தோலில் செய்த செருப்பைக் காலில் மாட்டிக் கொண்டு உயிர்வதைக்கெதிராய் ஓங்கிக் குரல்கொடுக்கவும். உணவுப் பழக்கத்தில் சைவத்தின் மேன்மையைச் சபைகூட்டி முழங்கவும் மனிதனால் மட்டுமே முடியும், பத்து சதவீதப் பாலை கன்றுக்குட்டிக்காய்ப் பாதுகாத்து எக்கி வைக்கவும் பசுவை இவன் அனுமதிப்பதில்லை, சும்மாவேனும் தாவர இலைகளைக் கிள்ளுவான், தாங்கி நடக்கும் நாயைக் கல்லெறிவான், பட்டையைக் கீறுவான், மரத்தின் பூக்களைக் கொய்வான், என்னமோ இவனது காதலியின் கூந்தலுக்கு அவை ஏங்கிக் கிடப்பவை போல, இவன் சூடித் திகழவும் கடவுளர் சிலைக்குச் சூட்டி மகிழவும் தாவரங்கள் அளிக்கும் தானமா மலர்கள்? பூக்கள் என்பவை தாவரத்தின் புணர்ச்சி உறுப்புகள் என்பதை எவ்வளவு வசதியாய் மறந்து விடுகிறான், போதாததற்கு காது மடல்களில் செருகிவைத்துக்கொள்ளும் கனபாடிகள் வேறு!

மனிதனின் இந்த அகம்பாவமும் சுயநலமுமே வருணங்களும் சாதியும் முளைத்துத் தழைக்கக் காரணமென்று கருதுகிறேன், Might is Right என்னும் விலங்கு தர்மத்திலிருந்து மனிதன் இன்னமும் முற்றாய் வெளிவரவில்லை, சாதீயக் கட்டுமானத்தின் உச்சியில் எளிமையான வேலைகளைத் தேர்ந்தெடுத்துச் செய்து சௌகரியமாய் உட்கார்ந்துகொண்டவர்கள் இட ஒதுக்கீட்டுக்கெதிராய்க் குரலெழுப்புவதைக் கேட்க முடிகிறது, உடலுழைப்பைத் தாழ்வாய்க் கருதிய சமூகம் உடலுழைப்பு செய்பவரையும் தாழ்வாய்க் கருதத் தொடங்கியபோது தொழிலாற் பிரிந்திரிந்தோருக்கிடையே பிறப்பினடிப்படையில் சாதி பிறந்திருக்கக் கூடும், ஒரு குடும்பத்தில் நடக்கும் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகளுக்கு பார்ப்பனர்களும். துக்க நிகழ்வுகளுக்கு உடலுழைப்புச் செய்ய தாழ்த்தப் பட்ட மக்களும் தேவைப் படுகிறார்கள்,

ஒரு குடும்பத்திற்கு என்றில்லை -ஒட்டு மொத்த இந்தியாவிலும் இப்படித்தான், இந்தியாவில் ஐ,ஐ,டி,யில் எத்தனை பேராசிரியர்கள் யார் யார்? இந்திய ரயில்வே யில் எத்தனை கலாசிகள் யார் யார்? என்ற புள்ளிவிவரம் ஒன்று போதும் புரிவதற்கு, “பாடல் பெற்ற ஸ்தலம்” என்றொரு கவிதை,

தீட்டாகும் நாளென்று
வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடக்கிறாய்
குறுகுறுப்புடன் பம்முகிறது கர்ப்பக்கிரகம்
மீசை இழந்து நிற்கும் தேவனருகில்
கால்களை நெருக்கிச் சேர்த்து
தொடைகளை இறுக்க அழுத்திக்கொண்டு
சங்கடத்தில் நின்றிருக்கின்றனர்
தேவியர் அந்த அரையிருட்டில்,

இதுவரை ஆகவில்லை, ஆனாலும் இன்றைக்கு ஆகிவிடுமென்பதால் கோயி லுக்குப் போகாமல் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறாள் அவள், ஆன சங்கடத்தில் தொடைகளை இறுக்க அழுத்திக்கொண்டு நின்றிருக்கின்றனர் தேவியர் சிலைகளாய் அரையிருட்டில், தலித்துகளைப்போலவே பெண்களும் இந்தச் சமூகத்தில் உரிமை மறுக்கப்பட்டு ஒடுக்கப்பட்டுக் கிடக்கிறார்கள், உடல் சார்ந்து பெண் அனுப விக்கும் உபாதைதான் இந்த மாதவிலக்கு, ஒரு உடற்கூற்று நிகழ்வு, அருவெறுக்க. புறம் ஒதுக்க ஏதுமில்லை, ஆனால் இதுவே ஒரு குறைபாடாய். ஒடுங்கிப் போகுமளவு தாழ்வுணர்ச்சியைக் கொடுத்திருக்கிறது இந்தச் சமூகம்,

விருந்துக்கு வந்த இடத்தில்
விலக்காகி
மலக்கோப்பைக்குள்
தீட்டுத் துணிகளை
திணித்து வைத்துப் போனவளும்
கனவில் ஒழுக்கிய
விந்துத் துளிகள்
படம் வரைந்த
நண்பனின் லுங்கியை
மடித்து வைத்துப் போனவனும்

தத்தமது இயலாமையை
மறைக்கும் முயற்சியில்
தடுமாறிய கணத்தில்
ஏதுமறியா பாவனையிலிருக்கும்
நமக்குள் ஒளிந்திருக்கும்
சமமின்மையும் வக்கிரமும்,

நிர்பந்தம் நேராதவரை ‘சுத்தம்’ என்பது மாட்டிக் கொள்ளாதவரை ‘யோக்கியன்’ என்பதைப்போல,

பெண்களும் இந்த ‘விலக்கு’ குறித்து இன்னும் விளங்கிக்கொள்ள வேண்டும், இதனாலேயே ‘நாற்றப்பிறவி’ யென்று நம்பிக்கொண்டு வாசனைப்பூக்கள் சூடி வலம்வந்துகொண்டிருக்க வேண்டியதில்லை, மேற்குறிப்பிட்ட இவ்விரண்டு கவிதைகளும் எனக்கு மிகவும் பிடித் தவை, வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடத் தலிலும் வெளியே வந்தால் ஏதுமறியா பாவனையிலும் பாசாங்கிலும் இந்தச் சமூகம் இன்னமும் தியங்கியும் மயங்கியும் கிடப்பதாகவே நான் கருதுகிறேன்,
வீட்டோடு சாதி இருக்கும்வரை ஆதிக்கச் சக்திகளுக்கு விருப்பம்; அகமண முறைக்கும் அதுபோன்ற குடும்ப நிகழ்வுகளுக்கும் உறவுகளுக்கும் சாதியோடு சாதியாய் இருக்க அவர்களுக்குச் சம்மதம், வேலை வாய்ப்பு. கல்வியில் மட்டும் சாதியை ஒழித்துக்கட்டிவிட வேண்டும், இல்லையெனில் யாரும் எந்த வேலையையும் செய்யலாம் என்ற நிலை வந்துவிடுமே? வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு என்பதேகூட இலைகளில் மருந்தடிக்கும் ஏற்பாடுதான், கல்வி பரவலாக்கப்படுவதே வேரைப் பலப்படுத்தும் வீரிய காரியம், கல்வி வெளிச்சத்தால் விளையும் அக எழுச்சியே ஒரு சமூகத்தை மீட்டெடுக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டுகள் இங்கு உண்டு, உணர்வு மற்றும் மனநிலையில் மாற்றங் கொணரும் ம,மதிவண்ணனின் இது போன்ற கவிதை முயற்சிகள் பாராட்டத் தக்கவை, அடுத்துச் செய்ய வேண்டியது சாதிக்கட்டமைப்பை உடைத்து நொறுக் குவதே, அதற்கான போராட்டங்கள் நடந்தேறும் அதே வேளை தனி நிலவுடைமை தகர்ந்து உழுபவர்க்கு நிலம் சொந்தமாக வேண்டும், தலித்துகள். ஒடுக்கப்பட்டோர் மற்றும் தலித்தாய் உணர்வு கொண்டோர் ஒன்றுபட்டு எழும் ஒரு நாளில் - இணைந்து புரட்சி செய்யும் ஏற்பாட்டில் சாதி மரணிக்கும் சம்பவம் நடக்கும், ‘எல்லோரும் சமம்’ என்பது அப்போதே உறுதியாகும், "நமக்கிடை யிலான தொலைவுஃம் அப்போதே தொலையும்,

நமக்கிடையிலான தொலைவு. கவிதைத் தொகுப்பு. ம,மதிவண்ணன். விலை ரூ,35. கருப்புப் பிரதிகள். 45ஏ. இஸ்மாயில் மை தானம் லாயிட்ஸ்சாலை.சென்னை-5,

Pin It