"பஞ்சாரமுக்கு” என்று அவ்விடத்தை எங்கள் ஊர் பாஷையில் சொல்வார்கள், "கடலைமுக்கு”. "கடலைபோடும் சந்து” என்று நீங்கள் பெயர் மாற்றிக் கொள்ளலாம், வழியில் போகிறவர்கள் வருகிறவர்கள் அனைவருக்கும் கடலை போடும் சந்து என்றும் கூறலாம்.

எத்தனையோ பெண்களின் தந்தையரும் சகோதரர்களும் இங்கு வந்திருக்கும் "நாளைய இந்தியாவை வளர்க்கும் இளம் சந்ததியரோடு” "மல்யுத்தம்” வைத்திருக்கிறார்கள். இதில் ஜெயித்தவர்களும் உண்டு; தோற்றவர்களும் உண்டு. இப்போது உங்களுக்கு முழுமையாய்ப் புரிந்திருக்கும் "பஞ்சார முக்கு” என்றால் என்னவென்று. "இது எங்கே அமைந்திருக்கிறது?” என்று நீங்கள் கேட்பது என் செவிகளில் விழுகிறது. சிறிதொரு வாய்க்கால் தார் போட்ட சாலையைக் கடந்து செல்கிறது. இதற்கான குழாய்கள் சாலையின் உள்பகுதி வழியாகச் செல்கிறது. சாலையின் இரு ஓரத்திலும் சிறிய தடுப்புச் சுவர்கள் இரண்டு உண்டு. இதை எங்கள் ஊரில் "கலுங்கு” என்று சொல்வார்கள். இதில்தான் "பஞ்சார”(சர்க்கரை) காய்ச்சுதலும். கடலை போடுதலும் நடந்து கொண்டிருக்கும். இது "லொள்ளு விடும் இடம்” என்று நீங்கள் இப்போது சரியான தலைப்பைக் கொடுத்து மனதைக் குழப்பத்திலிருந்து விடுவித்துக் கொண்டிருப்பீர்கள்.

இங்கே வயது வித்தியாசம் இல்லை. மனம்தான் முக்கியம். தலைநார்களில் நரை தொற்றிக்கொண்டு. தோல் சுருங்கி. பொக்கைவாய் விழுந்திருந்தாலும் பரவாயில்லை; மனம் ஒன்றுமட்டும் இளமையாய்த் துடித்துக் கொண்டிருந்தால் போதும். அவர்களுக்கென்று ஒரு தனி இடம் உண்டு. காரணம். முதியவர்களை மதிக்கும் சமுதாயம் எங்கள் சமுதாயம். குறிப்பாக எங்களுடைய கிராமத்தவர்கள். இதைச் சொல்லும்போது என் தன்மானம் எங்கோ உயர்வது போன்று தோன்றுகிறது. சிலர் மேடையிலே பேசிக்கொள்வதை என்னுடையதாக்கிச் சொல்கிறேன்.: "இது எங்களைப்பற்றிப் பெருமை பேசுவதற்காக அல்ல. மாறாக. அனைவரும் அறியும்படியாக உண்மையைத் திரிக்காமல் எடுத்துரைத்தல்.” மேலும் அகமும் புறமும் இளமை ததும்பி வழியும் வாலிபர்களும் உண்டு.

இவர்கள்தான் உண்மையில் இவ்விடத்தை சொந்தமாக்கிட அருகதை உள்ளவர்கள். காரணம் கடவுள் அவர்களுக்கென்றுதான் அவ்விடத்தை ஏற்பாடு செய்திருக்கிறார். இவர்கள்தான் இவ்விடத்திற்கான உண்மையான உரிமையாளர்கள். முன்னர் சொன்னாற்போன்று போக இளைஞர்களும் உண்டு. மீசை முளைக்காத வாகபர்கள்... இளைஞர் என்ற தகுதியை அடைவதற்காகத் தங்களை வருத்தித் தகுதியாக்கிக் கொண்டிருப்பவர்கள். பிஞ்சிலே பழுத்த பால்மணம் மாறாத முதியவர்கள் என்று நம் வசதிக்கேற்ப- நாம் நியாயவாதிகள் என்ற உணர்வில் அல்லது நாம் உண்மையிலேயே முதிர்ச்சி அடைந்துவிட்டோம் என்ற "அறிவுத்தெளிவில்”- கூறிவிடலாம். இங்கே வயது ஒரு பொருட்டே அல்ல. மாறாக. மனம்தான் முக்கியம்... மனம்தான் இளமையாய் இருக்க வேண்டும் என்று நான் கூறுவதில் உங்களுள் பெரும்பான்மையானவர்கள் மறுப்பு தெரிவிக்க சாத்தியம் இல்லை. காரணம். அந்நிலையில் இருப்பவர்கள்தான் பெரும்பான்மையானவர்கள்.

இது ஒரு அனாதை மந்திரம் என்று நான் அழைத்தால் நீங்கள் ஆட்சேபிக்க இயலாது. காரணம் அதன் இயற்கை அவ்வாறாய் அமைந்துள்ளது. எத்தனையோ பேரின் உள்ளத் தாகத்திற்கு இது அன்னம் போடுகிறது என்று நான் கூற முயன்றால் ஒவ்வொரு குடும்பத்தைக் குறித்தும் நான் வரலாறு எழுத வேண்டியிருக்கும். அவ்வாறு எழுதத் தொடங்கி "நிரபராதிகளை” மன்னிக்கவும். உண்மையான குற்றவாளிகளை வீதிக்கு அழைத்துவரும் அநியாயத்தை அவர்களுக்கு இழைக்க நேரிடும். அதை நான் துளியும் விரும்பேன். ஆனாலும் சிறியதொரு இரகசியத்தை நான் சொல்வேன்: "பயலுக்கு ஒரு கல்யாணம் செய்து வச்சா வீட்டில கெடப்பான்” என்று சொல்லப்பட்ட விஷயம் இங்கே பொய்யாகிறது. ஏன் அவர்கள் வருகிறார்கள் என்று நீங்கள் திரும்பத்திரும்ப நோண்டி நோண்டிக் கேட்டால் "நிரபராதிகளுக்கு” அநியாயம் சேர்க்கும் பணியை நான் செய்ய வேண்டியிருக்கும். பிறகு "பச்சப் புள்ளய பாவம் செய்ய வைத்த” அநியாயத்திற்கு நீங்கள் ஆளாவீர்கள்; நானும் பெரும் பாவி ஆகிவிடுவேன்.

மனம் உறுத்திக்கொண்டே இருப்பதால் நான் கூற வந்ததை சரியான முறையில் எசகுபிசகின்றிக் கூற விழைகிறேன். இது நான் வாழ்வின் உயிர்மூச்சாய்க் கொண்டுள்ள நேர்மையின் அடையாளம். அறத்தின்மேல் கொண்ட தீராத தாகத்தால் நான் எனதாக்கிக் கொண்ட கடமையுணர்வின் வெளிப்பாடு. எது நேர்மை எது பொய்மை என்று என்னிடம் கேட்டு என் புத்தியைத் தற்போது குழப்பிக்கொள்ள நான் விரும்பவில்லை. அந்நோக்குடன் என்னைக் கேள்விக்குள்ளாக்கும் எண்ணம் யாருக்காவது இருந்தால் அது என்னைச் சிறிதும் வருத்தாது என்று இவ்வேளையில் பிரகடனம் செய்துகொள்கிறேன்.

மானம் எங்களுக்கு ஆடை போன்றது. ஆடையில்லாத மனிதன் அரை மனிதன் ஆகிவிடுவான் அல்லவா? ஆகையால் நாங்கள் மானம் காத்து முழு மனிதர்களாக வலம் வந்து கொண்டிருக்கிறோம். கவுரவம் பார்ப்பவர்கள் எங்கள் ஊரார். பெருமைக்குச் சொந்தக்காரர்கள் எங்கள் ஊரார். சொந்த மேன்மையைத் தக்கவைத்துக் கொள்ள மனப்பூர்வமாகப் பாடுபடுபவர்கள் எங்கள் ஊரார் என்றெல்லாம் நான் முன்னரே சொன்னவற்றை நீங்கள் மறந்திருத்தல் இயலாது. மனைவியின் சுக்குப்பிடிக்குள் முடங்கிக் கிடக்கிறான் என்று எங்கள் ஊரில் உள்ள எவனது ஆண்மை குறித்தும் கூறினால் எங்கள் ஊராரின் சாபம் உங்களை வெறுமனே விட்டுவிடாது. அவர்கள் மானஸ்தர்கள். ஊரிலே கவுரவமாக வாழ்ந்திட கடவுளிடம் வரம் வாங்கி வந்தவர்கள். மனைவியின் தலையணை மந்திரமோ. அவளின் மாயப் பொடியோ அவர்களைக் கட்டிப்போடும் வலிமை எள்ளளவும் பெற்றிருக்கவில்லை.

எவ்வளவு பெண்கள் தங்கள் முழுத் தந்திரங்களையும் பயன்படுத்தி ஆண்களை வீட்டுக்குள் முடக்கப் பார்த்திருக்கிறார்கள். அவர்கள் சகல வித்தைகளையும் பயன்படுத்தியிருக்கிறார்கள். நகரத்திலே வாழ்ந்த பெண்கள் எவ்வளவு விதமான தந்திரங்களைக் கையாண்டார்கள் என்றால் அவை சொல்லித் தாளாது. அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் ஒவ்வொன்றும் ஏதாவது கொலைப்புள்ளியின் மீது பயன்படுத்தப்பட்டிருந்தால் பாவம் அவன் இந்நேரம் எல்லாவற்றையும் ஒப்புக்கொண்டு புனிதன் ஆகியிருப்பான். உபதேசங்களால் கட்டிப்போடப் பார்த்தவர்கள். அழகால் முடக்கிப்போடப் பார்த்தவர்கள். உணவால் ஆரோக்கியமாய் வைக்கப் பார்த்தவர்கள்.

பாச மழையால் நனைத்து அதில் நீந்திட வைக்கத் தீவிரமாய் முயன்றவர்கள் என்று பட்டியல் நீள்கிறது. இதைவிட மேலான காரியம் மேற்கொண்டும்கூட கட்டுக்குள் வைக்க முடியவில்லை. அதுதான் குழந்தைச் செல்வங்கள். குழந்தைகளை அரவணைத்தல். அவர்களோடு கொஞ்சிக் குலாவுதல். அவர்களைச் சுமந்து திரிதல். உணவு ஊட்டுதல். மழலை மொழி கேட்டு இன்புற்றிருத்தல் என எதுவும் நடைமுறை சாத்தியமாய் இல்லை.
"அப்படியென்றால் உங்கள் ஊர் ஆண்கள் கடின உள்ளத்தினரா?” என்று கேட்டால் எனக்குக் கெட்ட கோபம் வரும். மனைவியை விடவும்.

குழந்தைகளை விடவும் அவர்களை முன்னோக்கிச் செலுத்திக் கொண்டிருந்த மாபெரும் சக்தி வேறொன்று உண்டு. அது மானம். தனமானம். ஆண்மகன்களுக்கென்று இறைவன் கொடுத்திருக்கும் தனி வரம் அது. அது இல்லையென்றால் அவர்கள் உயிர் வாழ்தல் என்பது சாத்தியம் ஆகாது. இது கடின உள்ளத்தின் வெளிப்பாடு அல்ல. மாறாக. சுய அபிமானம் காத்தகன் பகுதியாகும். ஆண்கள் என்றால் இரவில் இரவுணவு/உண்பதற்காகவும் தூங்குவதற்காகவும் மட்டும்தான் செல்ல வேண்டும் என்பது எங்கள் ஊரிலே எழுதப்படாத நியதி.

இது எங்கள் ஊர் ஆண்மக்கள் தங்கள் உயிர்மூச்சாய்க் கொண்டு போற்றிவரும் தன்மானத்தின் இலக்கணம். ரோட்டுக்குச் செல்தல். அங்கே சுற்றித் திரிதல் என்பன ஆண்மக்களின் இலக்கணங்கள். இவை இல்லை என்றால் அவன் ஆண்மகனே இல்லை. ஆண்மகன் என்னும் போர்வையில் நடக்கும் பெண். இல்லையேல் மனைவியின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு நடக்கும் கோழை அல்லது முதுகெலும்பற்றவன். மனைவியின் சேலையின் நுனியில் கட்டுண்டவனாய். அக்கட்டை அவிழ்க்க முடியாதவனாய் வால் குழைத்து. காலடி சுற்றி வரும். எஜமானருக்கு விசுவாசமான நாய். இவன் ஆண்மகன் என்னும் பெயருக்கே அருகதையற்றவன். இவனுக்கு மீசை இருப்பதும் நாய்க்கு வால் இருப்பதும் சரிசமம். இவன் ஆண் இனத்திற்குப் பெரும் இழுக்கு.; தாங்க முடியாத அவமானம்.

மனைவியுடன் அதிகமாகப் பேசியிருத்தலும். அளவலாவுதலும் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத ஈனச்செயல்கள். ஆண்மகன் வேலைக்குச் சென்று எவ்வளவு சம்பாதித்தான் என்று மனைவியிடம் கூறுதல். ச்சீ.... நினைத்துக்கூடப் பார்க்க முடியாத வெட்கக்கேடான செயல். பணம் சம்பாதித்தால் அதை விருப்பம்போல் செலவிடும் சகல அதிகாரங்களும் ஆண்மகன் ஒருவனுக்கு மட்டுமே உண்டு. இது ஆணாதிக்கம் என்று சொன்னால் அதை உழைக்கும் வர்க்கம் கேட்டுக்கொண்டு சும்மா இருக்காது. காரணம் வேலை செய்தவன் பெற்ற கூலியை அவன் விருப்பம்போல் செலவு செய்யும் சகல உரிமையும் அவன் ஒருவனுக்கே உண்டு.

மனைவியின் கடமை- கிடைப்பதைப் பெற்றுக்கொள்தல். அதை வைத்துப் பிள்ளைகளுக்கு ஆக்கிப்போடுதல். அதுவும் ஆண்மகனுக்கோ வாய்க்கு ருசியான விதத்தில்... வீட்டில் இருக்கும் கழுதைக்குப் போதிய பணம் கொடுக்கப்படுகிறது. வயிறு நிறைய உணவு கிடைக்கிறது... இதைவிட மேலான காரியம் என்ன வேண்டும்! இதற்கு மேல் கேள்வி எழுப்புதல் கொழுப்பின் அடையாளம் என்று எங்கள் ஊர் ஆண்மக்கள் சொல்லும் நியாயத்தில் அநியாயம் கண்டுபிடிக்க உங்களால் இயலுமா? என்னே எங்கள் ஊர்மக்களின் உரிமைத் தாகம்! தன்மான வேட்கை! இதை நினைக்கும் போதெல்லாம் என் உடலில் உள்ள மயிர்கள் எல்லாம் மேலெழும்பி உரிமைக்குச் சாதகமாய் குரல் கொடுக்கின்றன.

இத்தலைப்புகளும் விளக்கங்களும் ஆண்மகன்களின் அடையாளத்தை உங்கள் கண்முன் விரித்திருக்கும். இது பஞ்சாரமுக்குக்கு வரும் கணவன்களைக் குறித்த விளக்கம். இதற்கு மேலும் அவர்களைப்பற்றி விளக்கம் உண்டு.

வீட்டில் பெண்களான சகோதரிகள் இருந்தால் அவர்களோடு பேசிப் பழகியிருத்தல் பெரும் அவமானம். இதை எங்கள் ஊர் திருமணமாகாத ஆண்மகன்கள் சிறிதும் விரும்பிலர். அவர்கள் தங்கள் தன்மானத்திற்காக உயிரையும் கொடுக்கத் தயாரானவர்கள் அல்லவா? தங்கைகளிடம் பேசுதல். அவர்களின் அன்பைப் பெறுதல் ஆகியவற்றை இவர்களது ஆண்மை சிறிதும் அனுமதியாது. பணம் கொடுப்பார்கள்; ஆனால் அவர்களைப் பற்றி நல்ல வார்த்தைகள் பேச மாட்டார்கள். அவர்களின் அன்பை கிஞ்சித்தும் விரும்பவும் செய்ய மாட்டார்கள். தாயின் சொல்லைக் கேட்டு நடத்தல் என்பது அவர்களின் ஆண்மைக்கு அழகல்ல. பெண்கள் பாசத்தோடு பழகினால் அதைத் தீண்டத் தகாததாக ஒதுக்கித் தள்ளுவார்கள்.

அவர்கள் உபதேசம் சொன்னால் நாராசமாய்க் கருதி முன்னிருக்கும் அன்னத்தைக்கூட தூக்கி வீச எங்கள் ஆண்மகன்கள் தைரியம் காட்டுவார்கள் என்று கூறும்போது பெருமையால் என் உடல் புல்லரிக்கிறது. என்னே அவர்கள் ஆண்மை! என்னே அவர்கள் மீசையின் திமிர்ப்பு! என்னே அவர்களின் தன்மானம்! எங்கள் ஊரார் ஆண்மையின் மகத்துவம் பேணுதற்கென்றே கடவுளிடமிருந்து வரம் வாங்கி வந்திருக்கிறார்கள். இதை மிகையாகக் கருதினால் அது கடவுளைப் பழித்துரைப்பதற்கு நிகராக வைத்துக் கருதப்படும். அப்பாதகத்தை நீங்கள் செய்ய வேண்டாம்.

வீட்டிற்கு ஆண்மகன் எப்போது வருவான் என்று எங்கள் ஊரில் உள்ள எந்தப் பெண்மணியாவது நிச்சயமாகச் சொல்கிறாள் என்றால் அவ்வீட்டு ஆண்மகன் உயிர் வாழ்தலில் அர்த்தம் இல்லை. இவனுக்குச் சூடு என்பது தொட்டுகூடத் தேய்க்கப்பட வில்லை என்று அர்த்தம். ஆண்மகன் வருவதும் போவதும் எல்லாம் மனைவியின் முன்னால் உச்ச கட்ட இரகசியங்களாக நிலைகொள்ள வேண்டிய தெய்வீக உண்மை என்பதை நீங்கள் புறக்கணிக்கிறீர்கள் என்றால் உங்கள்மேல் காறியுமிழ்வதை விட எங்களால் ஒன்றும் செய்ய முடியாது. "எப்பொழுது வருவார்? இன்று வருவாரா? நாளை வருவாரா?” என்று மனைவியிடம் கேட்டு ஆண்மகனைப் பற்றிய விளக்கங்களை உங்களால் பெற முடிகிறது என்றால் அது எங்கள் ஊராராக நிச்சயமாக இருக்க முடியாது என்று நான் திட்டவட்டமாகச் சொல்ல முடியும். அதையும் தாண்டி யாராவது இப்படி கேட்கிறான் என்றால் அவன் சுத்த வடிகட்டிய முட்டாள் என்று சொல்வதைத் தவிர வேறு வழியில்லை.

எங்கள் ஊரில் எந்த ஆண்மகனும் தன் மனைவியுடன் இணையாக நடந்து செல்வதை நீங்கள் பார்க்க முடியாது. இதில் எங்கள் ஆண்மகன்களுக்கு சுயஅபிமானம்தான் மேலோங்கி நிற்கிறது என்றாலும். இதில் சற்று விசித்திரமான உண்மைகளும் உண்டு. மனைவியின் அழகுக்கு ஈடுகொடுக்க முடியாமல் வெட்கி விலகுகிறார்கள் என்ற அவர்களின் எளிமையின் இலக்கணத்தை நான் மெச்சித்தான் ஆக வேண்டும். "என் மனைவியின் அழகுக்கு முன்னால் இந்தப் பண்பற்ற அழுக்கன் நிற்க சற்றும் தகுதியற்றவன்” என்ற எண்ணம்தான் இங்கே மேலோங்குகிறது. இது தாழ்வு மனப்பான்மை என்று கூறி எங்கள் ஆண்மகன்கள் மீது நீங்கள் சேறு வாரி பூசக் கூடாது. காரணம் அவர்கள் தங்களைவிடத் தங்களது மனைவியரின் கௌரவத்தைக் காப்பாற்றுவதில் கருத்தானவர்கள்.

என்னே அவர்களின் கரிசனை! மனைவியோடான மதிப்புதான் என்னே! இதை மெச்சிப் பாராட்டாமல் என்னால் இருத்தல் இயலாது. ஒருவேளை எதேச்சையாக மனைவியோடு செல்ல நேரிடுகிறது என்றால் பண்டைய காலத்தைய தீட்டுமுறையைச் சரியாகக் கடைபிடிப்பவர்கள். "நீ முன்னாலே போ. நான் பின்னாலே வாரேன்! என்ற விதியைச் சரிவர அனுசரித்துப் போகிறவர்கள் என்றால் அதில் அதிசயம் ஏதுமில்லை. மனைவிக்கு எது வாங்க வேண்டுமென்றாலும் அதைச் செய்துகொடுப்பவன் கணவனாகத் தான் இருக்க முடியும். மனைவியின் விருப்பு வெறுப்புகளுக்கு இங்கே இடம் இல்லை. இதுவும் மனைவியின்மீது கொண்ட கரிசனையின் விளைவுதான் என்று சொன்னால் நீங்கள் என்மீது கோபம் கொள்ளக் கூடாது. மனைவியைப் பத்திரமாக வீட்டில் வைத்துப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு கணவன் ஒருவனுக்கே உண்டு. இதைக் கடமையாகக் கொண்டு செயல்படுபவர்கள் எங்கள் ஊர் ஆண்மகன்கள் என்று பெருமையாக என்னால் சொல்ல முடியும்.

எங்கள் ஆண்மக்களின் "களவு வாழ்க்கையை”க் குறித்து நான் சற்றுப் பேசித்தான் ஆக வேண்டும். அவர்களின் மாலைத்தொழில் சம்பந்தமான விஷயம் ஆதலால் நீங்கள் இதில் தவறேதும் கூறக் கூடாது; கூறவும் இயலாது. வயிற்றுப் பசியைவிட மேலானதல்லவா உள்ளப்பசி. அவ்வுள்ளப்பசி இங்கே பஞ்சாரமுக்கில் வைத்துத்தான் நிவர்த்தி செய்யப்படுகிறது. எவ்வாறு நிவர்த்தி செய்யப்படுகிறது என்பதை நான் உங்களுக்கு விளக்குவேன். இப்பஞ்சாரமுக்கு வழியாகத்தான் எங்கள் ஊர் "ஃபேஷன் ஷோ” நடைபெறும். அதாவது அழகிகளின் தேர்வு. அழகிகளின் தேர்வு என்று மட்டும் இதைச் சுருக்கிவிட முடியாது. அழகர்களின் தேர்வும் இங்கே நடைபெறும். இதன் வழியாகக் கடந்து செல்பவர்கள் ஒவ்வொருவரும் இந்த எடைபோடலுக்கு ஆளாக வேண்டியிருக்கிறது.

இதன் வழியாகச் செல்லும்போது எத்தனை விதமான மாற்றங்களை உடலுக்கு ஏற்படுத்த வேண்டுமென்றால் நீங்களே சற்று அதிசயித்துப் போவீர்கள். உடலின் பாகங்களில் ஏற்படும் மாறுபாடுகள் பன்முகம் கொண்டவை. அனிச்சையாகச் செயல்பட வேண்டிய உடலும் அதன் அசைவுகளும் ஏதேதோ விசித்திரமான உணர்வுகளை உடகனூடாய் வெளிப்படுத்த வேண்டியிருக்கிறது. இவ்வெளிப்படுத்தலில்தான் உள்ளப்பசி ஆற்றப்படுகிறது. இங்கே சாதாரணமாய் நடக்க வேண்டியவர்கள் அசாதரணமாய் நடக்க நிர்பந்திக்கப்படுகின்றனர். அவர்களின் பார்வை அவ்வளவு கொடூரமானதாய் பார்ப்பவர்கள் ஒவ்வொருவரையும் குத்தி ஊடுருவும் பார்வை. என்னே அதன் சக்தி! அடிமுடி அளக்கும் விசித்திரமான பார்வை. அவ்வழி செல்வோர் தங்களது ஒவ்வொரு அசைவையும் தத்ரூபமாக எவ்வித சந்தேகமும் ஏற்படாமல் தகவமைத்துக் கொள்ள வேண்டும். பாதசாரிகள் மட்டுமே இங்கே பாதிக்கப்படுபவர்கள் என்று வாகனங்களில் செல்வோர் யாரும் தப்பித்தல் இயலாது.

அவர்களும் எடை போடப்படுவார்கள். அவர்களுக்கு "காலம்” குறைவாதலால் பெரும் பாதிப்பு இல்லையென்றே சொல்ல வேண்டும். பார்வையாளர்களின் உள்ளிருப்புகள் பார்ப்பவர்களின் உள்ளிருப்போடு இயைவாய் அமைத்திட நடக்கும் எத்தனிப்பு அதிபயங்கரமாய் உள்ளுக்குள் அரங்கேறிக் கொண்டிருக்கும். இதன் வெளிப்பாடுகள்தாம் அவ்வழி கடந்து செல்வோர் ஒவ்வொருவரின் அகத்தினுள்ளும் நடக்கும் என்பது உங்களுக்கு இப்போது விளங்கியிருக்கும்... விசித்திரமான நடைகள். இயல்பற்ற இயக்கங்கள். ஒழுங்கற்ற பாவனைகள். செயற்கை நடைமுறைகள். புகுத்தப்பட்ட உணர்ச்சி வெளிப்பாடுகள். யாவும் செயற்கையாய் அமைந்தால் சுவாரசியம் மிகுதியாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கும்.

உலகம் ஒரு நாடக மேடை என்றும் அதனுள் மனிதர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதாபாத்திரத்தை ஏற்றுக்கொண்டு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பாகங்களைப் பிசகின்றி செய்து கொண்டிருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. எனில். அதன் உண்மையான வெளிப்பாடு இங்கே நிஜமாக. கண்கூடாக தரிசிக்க முடியும். அதனால் அதன் வழியாகச் செல்பவர்கள் ஒவ்வொருவரினுடையவும் நடை. உடை. பாவனை ஆகியவற்றில் ஒரு புதுமை ஒட்டியிருக்கும். சுருங்கக் கூறின் பிறனின்றி வாழ்வில்லை என்னும் தத்துவம் இங்கே செயலாற்றுகிறது. என் இருப்பைப் பிறன் உணர வேண்டும் என்ற நியதியை அடிப்படையாகக் கொண்டுதான் இது இயங்குகிறது போலும்.

பஞ்சாரமுக்குக்கு இனி ஆட்கள் வருவது குறைந்துவிடும் என்ற செய்தி என் காதில் விழுகிறபோது எங்கள் ஊர் ஆண்மக்களின் நிர்கதி என் மனதை வெகுவாகப் பாதிக்கிறது. அவர்களுக்கு இனி யார் ஆதரவு தருவார் என்ற கவலைதான் நெஞ்சை வெடிக்க வைக்கும் சோகமாக மனதை அழுத்துகிறது. எல்லாம் நேற்று மாலையில் அந்தி மயங்கும் வேளையில் நடந்த நிகழ்வுதான். எவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருந்த இடம் இன்று நாதியற்றுக் கிடக்கிறது. சில்மிஷத் தலைவர்களின் சில்மிஷம் நேற்று சற்று வேலிகளைத் தாண்டியதுதான் இந்த அலங்கோல நிலை எட்டுவதற்கான காரணம். சீண்டுவதற்கும் மற்றவர்களை அளப்பதற்கும் ஒரு அளவு இருக்கிறதல்லவா? உணர்ச்சிகளின் தாண்டவம் அதிகமாக மேலோங்கும்போது நாம் மனிதர்களைக் குறை கூறலாமா என்று நீங்கள் கேட்பதும் நியாயமாகவே படுகிறது. என்றாலும் அந்தப் பெண்மணியிடம் அவர்கள் செய்ததுதான் இதற்கான காரணம். வால்களைத் தரிப்பதற்குப் பதிலாக "குரங்கர்களின்” வாலை ஒட்டவல்லவா தரித்துவிட்டாள் அவள்!

சீண்டப்பட்டது ஆண்களுக்கு நிகராக செங்கல் சூளையில் வேலை செய்யும் பெண்மணிதான். அவள் சும்மா விடுவாளா? இரண்டில் ஒன்று பார்த்துவிட்டாள். வசைமாரியோடு நின்றுவிட்டால் பரவாயில்லை. ரோட்டோரமாகக் கிடந்த மாட்டுச் சாணியை எடுத்தல்லவா வீசிவிட்டாள். இனி எங்கள் இளைஞர்களால் தலை நிமிர்ந்து நடக்க முடியுமா? மனிதர்கள் கேவலமாக அல்லவா பார்ப்பார்கள்? "சாணியடிபட்டவன்” அதுவும் "பெண்புள்ள வீசிய சாணியால்” தாக்கப்பட்டவன். இங்கே துளியும் உடற்காயம் ஏற்படவில்லை என்று உங்களுக்குத் தெரியும். மேலும் மாட்டுச் சாணத்தின் மணம் தாங்குவதற்கு ஏதும் பிரச்சினையில்லை. ஆனால் இது உள்ளத்துக்குள் ஏற்படுத்திய காயமும் நாற்றமும் என்றுதான் மறைந்தொழியும்? யாரால்தான் அகற்றிட இயலும்? என்னதான் இருந்தாலும் அந்தப் பெண்ணுக்கு அவ்வளவு திமிர் கூடாது என்று பொக்கை வாய் கிழவிகூட தத்துவம் உதிர்க்கிறது.

ஒருவர்மேல் மட்டுமல்ல சாணி விழுந்தது. அங்கு கூடியிருந்த அனைவர் மேலும் விழுந்தது என்றுதான் சொல்ல வேண்டும். அது ஏற்படுத்திய "ஊர் துர்நாற்றம்” இனி என்றுதான் மறையும் என்பதை யாரும் அறியிலர். நம்முடைய ஆண்மக்கள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை இத்தகைய தாக்குதல் வரும் என்று. இல்லையேல் உஷாராய் இருந்திருப்பார்கள். அவளுடைய நெருப்பு கொப்பளிக்கும் விழிகளும் அதனின்று புறப்பட்ட அனலும் யாராலும் தடுக்க இயலாததாய் அவ்வளவு கொடூரமாயும் கொடுமையாயும் வந்தது. காரணம் இதுதான்: ஒருவன் காகத்தின் குரல் கொடுத்து "டே. வெள்ளத்துணி ஒந்நு காற்றில பறந்து பறந்து போவுது” என்றதோடு விட்டுவிடாமல் நான் இங்கே கலாச்சாரம் கருதி தவிர்க்கும் வேறு சில இரட்டைப்பொருள் வாசகங்களையும் உதிர்த்தான். பிறகு யாரும் நிதானித்து. அவதானித்துச் செயல்படத் தொடங்குமுன் அங்கே அனைத்தும் அரங்கேறி விட்டன.

அவளை எதிர்க்கும் தைரியம் யாருக்கும் வரவில்லை. இது எங்கள் ஊர் ஆண்மகன்களுக்கு வீரம் இல்லாததால் அல்ல. மாறாக... என்ன சொல்ல... அது அப்படித்தான்... செயல் மறந்த தீரம் பயம் விளைவிக்கும் நேரம் அது.
இன்று அங்கு நாய்கள் படுத்து உறங்குகினறன... மலம் கழிக்கின்றன... மூத்திரம் பெய்கின்றன... இரவில் அவ்விடத்திலிருந்து ஊளையிடுகின்றன... நாசம். சர்வமும் நாசம். இப்படியாக. பஞ்சாரமுக்கு இன்று நாய்களின் முக்காய் உருக்குலைந்து போனதில் சில பெண்மணிகளாவது வீடுகளில் சந்தோஷம் கொள்ளுகிறார்கள் என்ற செய்தி உங்களுள் சிலருக்கு நற்செய்தியாய் அமையலாம். ஆனால் அது எங்களுடைய ஊரைப் பொறுத்தவரை பெரும் அவமானம். ஆண்களுக்கேற்பட்ட துடைத்தெறிதற்கரிய மாபெரும் களங்கம். எங்களின் மூதாதையர்கள் "அவ்வுலகத்திலிருந்து” இரத்தக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்கள். காரணம் நாளைய ஆண் மகன்களை உருவாக்க வேண்டிய இடம் இன்று கேட்பாரற்று நிஜ நாய்களின் தாவளமாகவல்லவா இருக்கிறது!
Pin It