1

வாக்களிக்கும் நாளுக்கு முன்பாகவே
வாக்களித்துக்கொண்டிருக்கிறார்கள்.
வீணாகும் வாக்குகள் இவ்விதமாகவும்...
வேற்று கிரகத்தவளா நான்?
வெகுஎளிது விமர்சித்தல்
என் வாக்குகள் எத்தனையெத்தனை
விழுங்கப்பட்டுவிட்ட ‘வெளி’யது...
எண்ணத்தவறும் சில வாக்குகள்
என் வாக்கும் எவர் வாக்கையும் போன்றே
தினமும் தேர்தலைச் சந்தித்தாக
வேண்டியிருக்கிறது.

2

ஆயிரமாயிரம் வாக்குகளை அடைகாத்து
வருகிறோம்.
அசந்த வேளையில் அள்ளிக்கொண்டுபோய்
அரியணையேறிவிடுகிறார்கள்.
காட்சிகள் மாறிக்கொண்டே வரும்
ஆட்சிபீடத்தின் இருமருங்கும்
பாமரர்களாய், அன்றி, பார்வையாளர்களாய்
நிற்கப் பழகிவிடுகிறோம்.
விரலா, எழுதுகோலா, எது செங்கோல்
என்றவாறு
வீணான, அன்றி, விவரமான
குழப்பங்களில் உழன்றபடி.

3

தூக்கிக்கொண்டு போக யாருமில்லாததால்
வாக்களிக்கவியலா ஏக்கம் தாக்கி
யிருந்தவர்
வீடு தேடி வந்த நீதி தேவதை
அவர் விழிகளில் மண்டியிருந்த
இழப்பைத் துடைத்தவாறு
பகரும்:
‘வருந்த வேண்டாம்.
நான் வேட்பாளராகும் நாளில், உடல்
ஊனமுற்றவர்களுக்கான வாக்குறுதிகளைக்
கட்டாயம் தருவேன்.
நகரும் வாக்குச்சாவடியே நான் அளிக்கும்
முதல் வாக்காகும்.’

4

வாக்களித்துவிட்டு வெளியேறிய
விழியிழந்தவர் ஒரு
நீண்ட பெருமூச்செறிந்தார்:
‘இன்றுதான் ‘ப்ரெய்க’யில்
வாக்களிக்க வழி காணப்பட்டிருக்கிறது.
மக்கள் மன்றப் பிரதிநிதிகளாக
இன்னும் எத்தனை மாமாங்கங்களோ...?

5

வீதியோரங்களில் கழிவுப்பொருட்களாய்க்
கிடக்கும் அவர்கள்
வாக்குகளெல்லாம்
பசியேப்பங்களாய் வெளியை
முட்டி மோதி
நீக்கமறக் கேட்கும்
ஒலித்திரளின்
பொருள் பிரித்தறியப்
பொறுமையில்லாமல், போய்க்
கொண்டிருக்கிறோம்
பதவியேற்பு வைபவத்திற்கு.

6

நாக்குகள் சுழற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன
நாளும்.
வாக்குப் பிசகல்களில்
பொசுங்கியவாறிருக்கும் கும்பிகள்
வரவாக்கும் வலிவேதனையைத்
தாக்குப் பிடிக்க மாட்டாமல்
போகும் நாளில்
அவரவர் கும்பியை மெதுவே
வெளியே எடுத்து, தம்
ஒடுங்கிய உடலங்களருகே இருத்திக்கொண்டு
இதமாய் வருடித் தரும்படி
அருள்வாக்கு சொல்லப்பட்டது.
சில மயக்க மருந்துகளும் தரப்பட்டன.
மரத்துப்போகச் செய்த பின்
மறுபடியும் உடல் நுழைத்து
அதனதனிடத்தில் பொருத்திக்கொள்ளப்
படித்துக்கொண்டு
கிடந்தவாக்கில் கிடக்கிறது
பசித்த மானுடம்.

7

பொழுது விடிகிறது
ஒரு அப்பாவியின் தலையை
வெட்டியெடுத்தபடி.
விறுவிறுவென அது முன்னேறும்
வழியில்
மூழ்கடிக்கின்றன சிலபல
வாக்குறுதிகள், இருந்தும்
முன்னமே முடிந்துபோய்விட்டவர்களை
இன்னமும் பயங்கர
ஆழ்கடலொன்றில்.
உண்மைதான், வீட்டிற்கொரு
தொலைக்காட்சிப் பெட்டி நம்மை
மேலும் நெருங்கச் செய்யும்
கனவுச் சொர்க்கத்தை.
என்றாலும்
அதன் குறுஞ்சதுரப் பரப்பில்
சதாசர்வ காலமும் கேட்டுக்கொண்டிருக்கிறது
என்றுமாய் சவப் பெட்டிக்குள்
ஒளிக்கப்பட்டுவிட்ட அந்த
முகமற்ற மனிதனின்
இறுதி வாக்கு.

8

இறந்தும் வாழ்பவர்களைப்போலவே
இரந்து வாழ்பவனிடமும்
தரவும் பெறவுமாய் இருந்தன வாக்குகள்.
அவற்றை முனகவும் மறந்து போயின
தினசரிப் பசிப் பொழுதுகளின்
சுமை தூக்கித் தூக்கி
சீக்காளியாகிவிட்ட அவன்
உடலும் மனமும்
மடியில் இல்லாத கனத்தை ஈடுசெய்வதாய்
கூடிக்கொண்டே போனது அவன்
மேனியில் அழுக்கு.
சாக்கடை நாற்றம் மீற
சிங்காரித்துக் கொண்டிருக்கிறது
ஊரும் நாடும்.
ஊறும் பேன் ஊற, என்றோ தான்
மறந்துபோயிருந்த அவன்
பெயரில்
வழங்கப்படவில்லை வாக்காளர் அட்டை.
வறுமை தாக்கிக் கிழிந்துகொண்டே போகும்
அவன் சட்டைக்குள்ளிருந்து
களவாடப்பட்டுவிடுகின்றன வாக்கின் தாக்கங்கள்.

9

வாக்களிக்கும் நேரம்
வாமனாவதாரமாய்
வேட்பாளரிடம் கேட்டேன்
‘மூன்றடி’ தருமாறு.
மண் தராமல் வழங்கிய மூன்று
அடிகள்
இன்னமும்
விண்விண்ணெனத் தெறித்தவாறு!

10

அன்பெனும் ஒரு வாக்கை
புட்டியில் இட்டு மூடி
அலைகளின்மேல் உருட்டிவிட்டிருக்கிறேன்.
அது பட்டால்
மீன்களெல்லாம் சிறகு முளைத்து
பறந்து போகட்டும்.
அகதிகள் அதைக் கண்ணால் தொட்டாலே
அவர்தம் நாட்டுப் போர் முடிவுக்கு
வருவதாகட்டும்.
Pin It