உலகிலேயே மிக மோசமான ஒரு பாலைவனப் பகுதி அது. அங்கே கட்டப்பட்டுள்ள பாதாளச்சிறையின் இரு பிரிவுகளான ப்ளாக் 1, மற்றும் ப்ளாக் 2. ஒவ்வொரு ப்ளாக்கிலும் 29 செல்கள். ஒவ்வொரு செல்லும் நான்கடி அகலம். ஒன்பதடி நீளம். ஐந்தடி உயரம். ஐந்தடிக்கு மேல் உள்ளவர்கள் குனிந்தபடிதான் நிற்க வேண்டும். கிட்டத்தட்ட கல்லறை. கல்லறைக்கும் இந்த செல்லுக்குமான வித்தியாசம்: மலஜலம் கழிப்பதற்காக இருந்த ஒரு துவாரம். துவாரத்தின் விட்டம் நான்கு இஞ்ச்.

கைதிகள் சுவாசிப்பதற்கென்று மேற்புறத்தில் ஒரு சிறிய துளை இருந்தது. ஆனால் அதன் வழியாகவும் வெளிச்சம் வராதபடி அமைக்கப்பட்டிருந்தது அந்தத் துளை. மொத்தம் 58 கைதிகள். அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த தண்டனை மூன்றிலிருந்து பத்தாண்டுகள் சிறை என்ற போதிலும், அவர்கள் அனைவரும் ஒரு சாதாரண சிறைச்சாலையில் இரண்டு ஆண்டுகளைக் கழித்த பிறகு இந்த பாதாளச் சிறைக்கு கொண்டு வரப்பட்டு அடைக்கப்பட்டு விட்டார்கள்.

 தன்னை விமர்சிப்பவர்களை மன்னர் 18 ஆண்டுகள் சிறையில் அடைப்பது வழக்கம். ஆனால் இந்தக் கைதிகள் அவரைக் கொலை செய்ய முயன்றவர்கள். எனவே அவர்கள் சாகும்வரை அந்த இருட்டுப் பொந்தில் அடைந்து கிடக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார் மன்னர். முதல் ப்ளாக்கில் இருந்தவர்கள், சற்றே அதிர்ஷ்டம் செய்தவர்கள். ஏனென்றால், பாலைவன வெப்பமும், கடும் குளிர்காலத்தின் பனியும் முதலில் இரண்டாவது ப்ளாக்கையே தாக்கும்படி அமைக்கப்பட்டிருந்தது அந்த பாதாளச் சிறை.

ஜூலை 10, 1971. ராணுவப் பள்ளி ஒன்றில் அதிகாரிகளுக்குரிய பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த அந்த வருங்கால ராணுவத்தினருக்கு உயரதிகாரிகள் ஒரு உத்தரவிட்டனர். உடனடியாக அவர்கள் அனைவரும் ராணுவ வண்டிகளில் ஏறித் தலைநகரம் செல்ல வேண்டும். அங்கே அரண்மனையில் மன்னரின் 42-வது பிறந்த நாள் கொண்டாட்டம் நடந்து கொண்டிருக்கிறது. அதில் கலந்து கொண்டுள்ளவர்கள் அனைவரும் ராஜ துரோகிகள்; மன்னரின் ஆட்சியைக் கவிழ்க்கத் திட்டமிட்டிருப்பவர்கள். அவர்கள் அனைவரையும் சுட்டுத் தள்ள வேண்டும்; ஒருவர் கூட தப்பிக்கக் கூடாது. ஆனால் உண்மை என்னவென்றால், மன்னரைக் கொன்றுவிட்டு ராணுவ ஆட்சியை நிறுவலாம் என சில ராணுவ அதிகாரிகள் திட்டமிட்டனர். அத்திட்டத்தின்படியே அவர்கள் தமக்குக் கீழுள்ள பயிற்சி அதிகாரிகளைப் பயன்படுத்திக் கொண்டனர்.

இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட பல பயிற்சி நிலை ராணுவத்தினருக்கு ஒன்றும் புரியவில்லை. குழப்பத்தில் சிலரால் சுடக்கூட முடியவில்லை. இருந்தபோதிலும் அன்று, மன்னரின் 98 விருந்தினர்கள் கொல்லப்பட்டனர். மன்னர் பிழைத்துக் கொண்டார்.

ராணுவ நடவடிக்கை என்றால் வன்கலவி இல்லாமல் இருக்குமா? இரண்டு ராணுவத்தினர் அரண்மனையின் உள்பகுதிக்குச் சென்று - உள்பகுதிக்குச் செல்லக்கூடாது என அவர்களுக்கு முன்கூட்டியே உத்தரவிடப்பட்டிருந்தது - அங்கிருந்த ஒரு பெண்ணை வன்கலவி செய்ய முயன்றனர். அப்போது அங்கே வந்த அவர்களுடைய சீனியரான அட்டா என்பவன் இருவரையும் விரட்டி அடித்தான்.

மறுநாள் அட்டாவை அரசவைக்கு வரவழைத்தார் மன்னர். அந்த இரண்டு மிருகங்களின் பெயர்களையும் கேட்டார். சொல்ல மறுத்து விடுகிறான் அட்டா. பெயர்களைச் சொன்னால் அவனுக்கு விடுதலையளிப்பதாகக் கூறுகிறார். ஆனால் கடைசி வரை அவர்களின் பெயரை சொல்ல மறுத்து விடுகிறான் அட்டா. மறுநாள் சுட்டுக் கொல்லப்படுகிறான். உயிரே போனாலும் அவர்களின் பெயரைச் சொல்ல அவன் மறுத்ததன் காரணம் அவனது சக ராணுவத்தினருக்கு வியப்பை அளிக்கிறது.


அந்த இருட்டுக் கல்லறையில் அடைபட்டிருந்த கைதிகளின் ஆதாரப் பிரச்சினை: காலம். செத்துப் போகும் வரை அவர்கள் அந்தக் குழியிலேயே கிடக்க வேண்டும். மரணம் எப்போது வரும்? மரணம் வரும் வரை என்ன செய்வது? சிந்திப்பதா? இந்த இருட்டுக் குழியில் சிந்தனை ஒரு ஆபத்தான எதிரி. சிந்தனை உங்களைப் பழைய வாழ்க்கையின் அற்புதக் கணங்களில் கொண்டு போய் நிறுத்தும். வாழ்க்கை என்பதே அற்புதம்தானே? ஒரு குழந்தையின் அழுகை, ஒரு பெண்ணின் சிரிப்பு, வாகனங்களின் சப்தம். எல்லாவற்றையும் விட, வெளிச்சம்... கண்களைக் குருடாக்கும் இந்த இருளும், மயான அமைதியும் வாழ்வின் மரணத்தை அல்லவா உணர்த்திக் கொண்டிருக்கிறது?

கடந்த கால அற்புதமும் எதிர்காலம் குறித்த நம்பிக்கையும் இந்த மரணக்குழியில் உங்கள் சித்தத்தைக் கலங்க அடித்து விடும். ஏனென்றால், இந்த இருளிலிருந்து உங்களுக்குச் சாகும் வரை விடுதலை கிடையாது. மரணம் உங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கும் வகையில் உங்கள் தண்டனை வெகு கவனமாக திட்டமிடப்பட்டிருக்கிறது. அணுஅணுவாகச் சாகும் வகையில் ஒன்றிரண்டு ரொட்டித் துண்டுகளும் கொஞ்சம் தண்ணீரும் மட்டுமே அக்கைதிகளுக்கு வழங்கப்பட்டன.

மரணக்குழியில் கூட வர்க்க பேதங்கள் பேணப்பட்டன. முதல் ப்ளாக்கில் இருந்தவர்கள், ராணுவத்தில் உயர் பதவியில் இருந்து ஆட்சிக் கவிழ்ப்பைத் திட்டமிட்ட வேறு சில உயரதிகாரிகள், கடைசி நேரத்தில் மன்னரின் ஆதரவாளர்கள் போல் நடித்துத் தங்கள் உயிரையும், பதவியையும் காப்பாற்றிக் கொண்டார்கள்.

***

முதலில் இறந்தவன் பெயர் ஹமீத். நம்பர் 12. இங்கெல்லாம் வெறும் எண்கள்தான். பெயர்களைச் சொல்லக் கூடாது. அவனுக்குத்தான் முதல் முதலாக இங்கே சித்தப்பிரமை பிடித்தது. என்னவென்றே புரியாத சொற்கள். சில நேரங்களில் புரியும். புலி, பூனை, புண்ணாக்கு, புஷ்பம், புடலை, பூசாரி, பூசணிக்காய்.... அன்றைய தினம் ‘பூ’ தினம்.

நம்பர் 10 ன் பெயர் உஸ்தாத் கார்பி. அவன் ஹமீதை சாந்தப்படுத்துவதற்காக குரானை ஓதுவான். ஓதும் வரை அமைதியாயிருக்கும் ஹமீத், உஸ்தாதின் குரல் நின்றவுடன் பேச ஆரம்பித்து விடுவான். கடைசி வரை பேசிப் பேசியே இறந்து போனான் ஹமீத்.

****

அப்போது அந்த மரணக்குழிக்கு வந்து ஒரு வருடம் ஆகியிருந்தது. அடுத்த மரணம் யாருடையது? த்ரிஸ்ஸின் நம்பர் 9. அவனுக்கு எலும்பிலும் தசையிலும் நோய் கண்டது. கைகளும் கால்களும் சுருட்டிக் கொண்டன. மரணம் அவனை நீண்ட நாட்கள் வதைக்கவில்லை. விரைவிலேயே இறந்து போனான் த்ரிஸ். இறக்கும் தருணத்தில் ஏதோ சொல்ல முயற்சி செய்தான். ஏதோ ஒரு எண். ஆம் ‘நாற்பது’ என்றுதான் அவன் சொல்ல நினைத்திருக்க வேண்டும். மரணம் அவனது உடலை முழுமையாகத் தழுவிக் கொள்ள நாற்பது நாட்கள் எடுத்துக் கொண்டது. அவன் விஷயத்தில் அது விரைவாகவே வந்தது. காவலாளிகள் ஒரு தள்ளு வண்டியை எடுத்து வந்து ஒரு கார்ச்சக்கரத்தைப் போல் சுருண்டு கிடந்த அவன் உடலை அதில் உருட்டி விட்டார்கள்.

***

கரீமின் எண்.15. அவன் காலத்தைக் கணக்கிடத் துவங்கினான். தொடர்ந்து எண்ணிக் கொண்டேயிருந்தான். ஒன்றல்ல, இரண்டல்ல, பல வருடங்கள்.

‘‘இப்போது என்ன நேரம், கரீம்? என்ன நாள்? என்ன வருடம்?’’

‘‘1972 ஆம் வருடம். மே 14ஆம் தேதி. காலை 9.36’’ இப்படியாக, அந்தக்கைதிகளின் கடிகாரமாகவே மாறிப் போனான் கரீம்.

***

பாபா என்ற ஒரு கைதி குளிர்தாங்க முடியாமல் செத்துப் போனான். அவன் அணிந்திருந்த நீண்ட அங்கியைக் கிழித்து மற்ற கைதிகளுக்கு 10 டிராயர்களும், 5 சட்டைகளும் தைத்துக் கொடுத்தான் அஸீஸ்.

***

லார்பியின் எண். 4 சிகரெட்டின் அடிமை. லார்பியால் சிகரெட் இல்லாமல் இருக்க முடியவில்லை. அதனால் பட்டினிப் போராட்டம் நடத்தினான். அவன் சாவதற்கு ஒரு மாதம் எடுத்தது.

***

ருஷ்டி, கைதி எண் 23. பைத்தியம் பிடித்து செத்துப் போனவன்.

***

காவலாளிகள் அந்த மரணக்குழியில் சில தேள்களைக் கொண்டு வந்து போட்டனர். தேள்கள் குட்டி போட்டு பல்கிப் பெருகின. சில கைதிகளுக்கு தேள் கடியால் ஜூரம் வந்தது. வக்ரீன், கைதி எண் 21, தேள்களைப் பற்றி நன்கு அறிந்திருந்தான். அவன் வாழ்ந்த பாலைவனப் பகுதியில் தேள்கள் அதிகம். அவன் தேள்களோடு வாழ்வது எப்படி என மற்ற கைதிகளுக்கு சொல்லிக் கொடுத்தான். அதையும் மீறி தேள் கடித்து விட்டால், காவலாளிகளிடமிருந்து அனுமதி பெற்று, தேள் கடித்த இடத்தில் வாயை வைத்து தேளின் விஷத்தை உறிஞ்சித் துப்பினான்.

சிறைவாசிகளைத் தவிர சில காவலாளிகளும் செத்துப் போனார்கள். அவர்களில் ஒருவன் பான்ட்டாஸ். அங்கிருந்த எட்டு காவலாளிகளில் அவன்தான் மிகவும் கொடூரமானவன். திடீரென்று அவனுடைய இரண்டு மகன்களும் செத்துப் போனார்கள். தான் கைதிகளுக்குச் செய்த கொடுமைகளுக்கு இறைவன் தந்த தண்டனையென்று நினைத்தான் பான்ட்டாஸ். ஒரு நாள் எல்லாக் கைதிகளிடமும் வந்து மன்னிப்புக் கேட்டான். பிறகு நீண்ட நாட்கள் பட்டினி கிடந்து இறந்து போனான்.

***

ஒரு நாள் இரவு முஸ்தஃபா, கைதி எண் 8, தேள் கடித்து விட்டதுபோல் அலறினான். நேரமாக ஆக அவன் அலறல் அதிகமாகியது. இரவு என்பதால் காவலாளிகளை அழைக்க முடியவில்லை. அவர்கள் வந்து கதவைத் திறந்து விட்டால் தேள் ஸ்பெஷலிஸ்ட் வக்ரீனை விட்டு விஷத்தை உறிஞ்சி எடுக்கச் சொல்லலாம். அப்போது கரீம் நேரத்தைச் சொல்ல ஆரம்பித்தான். இது வியாழக்கிழமை. 1979 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதி. நேரம் : காலை 3.16.

திடீரென்று முஸ்தபாவின் சத்தம் நின்று போனது. செத்து விட்டான் என்று தோன்றியது. கார்பி குரான் ஓதுவதில் வல்லவன். அவன் குரானை ஓத ஆரம்பித்தான்.

காலையில் காவலாளிகள் முஸ்தஃபாவின் செல்லுக்குச் சென்று பார்க்க வக்ரீனை அனுமதித்தனர். செல் கதவை திறந்த வக்ரீன் அலறிக்கொண்டே வாசலுக்கு ஓடினான். பாதாளச் சிறையிலிருந்த அத்தனை தேள்களும் முஸ்தஃபாவின் உடலைத் தின்று கொண்டிருந்தன.

***

முஸ்தஃபா இறந்ததிலிருந்து மோவுக்குப் பைத்தியம் பிடித்தது. மோ - கைதி எண்.1. தன் அம்மா சமைத்துக் கொடுக்கும் விதவிதமான உணவு வகைகளைப் பற்றி புலம்ப ஆரம்பித்தான். வெறும் காய்ந்த ரொட்டியையே தின்று கொண்டிருந்த மற்ற கைதிகளின் வாயில் எச்சில் ஊறியது. பல தினங்கள் அப்படிச் சொல்லிக் கொண்டிருந்தான் மோ. காவலாளிகள் கொடுத்த காய்ந்த ரொட்டியையும் சாப்பிடவில்லை. அவன் சாக சில மாதங்கள் பிடித்தது.

***

அப்போது அந்த பாதாள சிறைக்கு வந்து சேர்ந்தது ஒரு நாய். ஐந்தாண்டு ஆயுள் தண்டனை பெற்ற நாய். யாரோ ஒரு ராணுவ அதிகாரியைக் கடித்து விட்டதால் கிடைத்த தண்டனை. அதுவும் அந்த இருட்டுச் சிறையில் தனி செல்லில் அடைக்கப்பட்டது. தண்ணீரில் வேக வைத்த நூடுல்ஸ் மட்டுமே அதற்குக் கொடுக்கப்பட்ட உணவு. அதுவும் ஒரு வேளைதான். பாதாளச் சிறையின் கும்மிருட்டில் அந்த நாய்க்கு ஒரே மாதத்தில் பைத்தியம் பிடித்தது. காவலாளிகள் அதற்கு உணவளிக்கவும் பயந்தனர். பட்டினியில் அதன் வெறி இன்னும் கூடியது. நாள் முழுவதும் ஊளையிட்டபடியே ஒரு நாள் அது செத்துப் போனது.

***

அந்தப் பாதாளச் சிறையில் கார்பியின் பணி குரான் ஓதுவது; கரீம் காலத்தைக் கவனித்துக் கொள்பவன்; வக்ரீன் தேள் ஸ்பெஸலிஸ்ட் என்பது போல் அஸீஸின் வேலை கதை சொல்வது. அஸீஸ் உலக இலக்கியம் அறிந்தவன். அது அவனுக்கு அவனுடைய அப்பாவின் வழி வந்தது. அவன் அப்பா அரசவைக் கவிஞர். அப்படிச் சொல்வதை விட அரசரின் எடுபிடி என்று சொல்லலாம். ஆட்சிக் கவிழ்ப்பு சம்பவத்தில் அஸீஸ் ஈடுபட்டதை அறிந்த அவர், அஸீஸை தன் புதல்வனல்ல என்று பகிரங்கமாக அறிவித்தவர்.

அப்துல் காதரின் எண்.2 அவன் அஸீஸை தினமும் கதை சொல்லும்படி வற்புறுத்துவான். கதை கேட்காவிட்டால் செத்து விடுவேன் என்பான்.

‘‘அஸீஸ்.... என் நண்பனே.... நான் பருகுவதற்கு ஏதாவது கதை சொல். உன் கதை தான் எனக்கு உயிர் கொடுக்கும் தண்ணீர். உன் கதைதான் எனது நம்பிக்கை. அதுதான் நான் சுவாசிக்கும் காற்று’’ என்றெல்லாம் சொல்லிக் கெஞ்சுவான். இதனால் அந்தப் பாதாளச் சிறையிலேயே அஸீஸூக்கும், காலத்தின் கண்காணிப்பாளனான கரீமுக்கும்தான் அதிக வேலையிருந்தது.

ஒரு முறை அஸீஸூக்கு ஜூரம் வந்தது. ஒரு வார காலம் பேசவே முடியாமல் மயக்க நிலையில் கிடந்தான். ஜூரம் தெளிந்து எழுந்த போது, அவன் பேசிய முதல் வார்த்தை: அப்துல் காதர். இரண்டு தினங்களுக்கு முன்பே அவன் செத்து விட்டதாகச் சொன்னார்கள். தற்கொலை. ரத்தமாக வாந்தியெடுத்துச் செத்தானாம். ஏதோ ஒரு கூர்மையான பொருளை விழுங்கியிருக்கிறான். அந்த பாதாளச் சிறையிலேயே மிகவும் அன்பானவன் அவன்தான். தன் ரொட்டியைக் கூட மற்றவர்களுக்குத் தந்து விடக் கூடியவன். ஒருமுறை ‘‘இறைவன் எனக்கு அளிக்கும் எல்லாவற்றையும் உன்னோடு பகிர்ந்து கொள்வேன், நண்பா... என்னுடைய கஃபன் துணியைக் கூட” என்று அஸீஸிடம் சொன்னான். (கஃபன் துணி - நல்லடக்கத்தின்போது இறந்தவரின் மீது போர்த்தப்படும் வெண்ணிறத் துணி)

***

மஜீத். கைதி எண்.6. கரீமிடம் நேரமென்ன, நேரமென்ன என்று கேட்டுக் கொண்டேயிருப்பான். பெர்பெர் இனத்தைச் சேர்ந்தவன். அந்த பாதாளச் சிறையின் இருண்ட கல்லறைக் குழியில் பத்து வருடங்கள் தாக்குப் பிடித்த அவன் திடீரென்று தன் சுவாதீனத்தை இழந்தான். ‘‘இதுவரை இறந்து போன லார்பி, அப்துல் காதர், முஸ்தஃபா, த்ரிஸ், ருஷ்டி, ஹமீத் யாரும் இறக்கவேயில்லை. மலையின் மறுபுறம் அவர்கள் ஒளிந்து கொண்டிருக்கிறார்கள். விரைவில் வந்து நம்மைக் காப்பாற்றுவார்கள். நான் ஒன்றும் உளறவில்லை. இறந்து போனது போல் நடித்து அவர்கள் காவலாளிகளை ஏமாற்றினார்கள். இங்கேதான் செத்துப் போனவர்களை புதைக்காமல் அப்படியே தூக்கியெறிந்து விடுகிறார்களே... அப்படித்தான் அவர்கள் தப்பினார்கள்’’ என்று திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டு கரீமிடம் நேரத்தையும் தேதியையும் கேட்டுக் கொண்டேயிருந்தான் மஜீத்.

மஜீதுக்கு நேரம் சொல்லிச் சொல்லி அலுத்துப் போன கரீம் ஒருநாள் ‘‘என் கடிகாரம் உடைந்து விட்டது’’ என்றான். அதைக் கேட்டு நீண்ட நேரம் அழுதான் மஜீத். பிறகு அவன் பேசவில்லை.

பாதாளச் சிறையிலேயே தூக்கு மாட்டிக் கொண்டு சாக முடிந்த ஒரே ஆள் மஜீத் தான். தன் சட்டையைக் கிழித்து கயிறாக ஆக்கி, மேலேயிருந்த காற்றுத் துவாரத்தில் மாட்டி கால்களை மடக்கிக் கொண்டு தொங்கியிருக்கிறான். அவன் பிணம் நிர்வாணமாக இருந்தது.

பௌர்ராஸின் எண்.13. மலம் கழிக்க முடியாமல் இறந்து போனவன். நாளாக நாளாக மலம் வயிற்றிலேயே சேகரமாகி அவனுக்கு வயிறு உப்பிக் கொண்டு வந்தது. அதனால் சாப்பிடுவதை நிறுத்தினான். ஒரு நாள் வயிற்று வலியில் கதற ஆரம்பித்தான். வலி தாங்க முடியாமல் சுவர்களையும், தரையையும் உதைத்தான். காவலாளிகள் வந்து பார்த்து சிரித்துவிட்டுப் போனார்கள். ‘‘நாம் என்ன அவன் குண்டியில் ஸ்பூனை விட்டுக் குடையவா முடியும்?’’ என்று ஒரு காவலாளி சொன்னது கைதிகளுக்குக் கேட்டது.

ஒரு செல்லின் கதவுக்குப் பக்கத்தில் கிடந்த விளக்கு மாற்றைச் சுற்றிக் கட்டியிருந்த தகரத்தை எடுத்து அதில் ஒரு ஸ்பூன் மாதிரி செய்து கொடுத்தான் லௌசின். அந்த ஸ்பூனை வைத்து தன் குதத்தைக் குடைந்தான் பௌர்ராஸ். மலத்துக்குப் பதிலாக ரத்தம் தான் கொட்டியது. ஊளையிட்டபடியே மயக்கம் அடைந்தான் பௌர்ராஸ். மறுநாள் இறந்து போனான். இறந்த பிறகு அவன் வயிற்றிலிருந்த மலம் முழுவதும் வெளியேறியது. நாற்றம் குடலைப் பிடுங்கியது. வந்து பார்த்த காவலாளிகள் சிரிக்கவில்லை. மூக்கைப் பொத்தியபடி ‘‘நாம் அவனைக் காப்பாற்றியிருக்கலாம்’’ என்று முனகினார்கள்.

***

எண்பதுகளின் முற்பகுதியில் அந்த பாதாளச் சிறையில் கொண்டு வந்து அடைக்கப் பட்டான் செப்பான். அவன் அங்கிருந்த கைதிகளிடம் எதுவும் பேசவில்லை. பேச மறுத்து விட்டான். அவனைப் பற்றி யாருக்கும் எதுவும் தெரியவில்லை.

இரவில் அவன் உடற்பயிற்சி செய்யும் சத்தம் மட்டுமே கேட்டது. மற்றவர்கள் அவனைப் பேச வைக்க முயன்றனர். முடியவில்லை. ஒரு நாள் அவனைப் பார்ப்பதற்கு காவலாளியிடம் அனுமதி பெற்றான் அஸீஸ். காவலாளிகளுக்கும் அவனைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தது. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் செப்பான், மன்னரின் பாதுகாவலர்களில் ஒருவனாக இருந்தான் என்பதுதான். ஒரு வேளை இளவரசியிடமே அவமரியாதையாக நடந்து விட்டானோ என்னவோ...

செப்பானைப் பார்க்க அஸீஸூக்கு அனுமதி கிடைத்தது. செப்பானின் செல் கதவைத் திறந்து டார்ச் லைட்டை அடித்தான் காவலாளி. ஆனால் அஸீஸிடம் ஒரு சில வார்த்தைகளைத் தவிர வேறேதும் பேச மறுத்து விட்டான் செப்பான். டார்ச் லைட் வெளிச்சத்தில் அவனது வலது கை அழுகிப் போயிருந்தது தெரிந்தது. அந்த அழுகிய கையிலிருந்து துவங்கி அவன் உடல் முழுவதையும் தின்று விட்டன, அந்தச் சிறையிலிருந்த ஆயிரக் கணக்கான கரப்பான் பூச்சிகள்.

பிணத்தை எடுத்துச் செல்ல காவலாளிகள் வந்தபோது செப்பானின் உடலில் புழுக்கள் நெளிந்து கொண்டிருந்தன. அந்த செல்லிலிருந்த கரப்பான் பூச்சிகளைக் கொன்றான். இப்படியாக செப்பானின் மரணம் அக்கைதிகளுக்கு கரப்பான் பூச்சி பிரச்சினையைத் தீர்த்து வைத்தது. காவலாளியிடமிருந்து பூச்சி மருந்தை வாங்கி எல்லா செல்லிலும் அடித்தான் அஸீஸ். ‘‘இது விதிகளுக்குப் புறம்பானது’’ என்றான் ஒரு காவலாளி.

‘‘இந்தப் பூச்சிகளைக் கொல்லாவிட்டால் இது எங்கள் எல்லோரையும் இன்னும் சில தினங்களில் தின்றுவிடும். ஆனால், மரணம் இங்கே கொஞ்சம் கொஞ்சமாக வர வேண்டும் என்பது உத்தரவு. ஒரேயடியாக நாங்கள் அத்தனை பேரும் செத்துப் போனால் உங்கள் வேலை போய்விடும். இஞ்ச் இஞ்ச்காக சாக வேண்டும் என்பதற்குத்தானே எங்களை இங்கே போட்டிருக்கிறார்கள்?’’ என்று காவலாளியைக் கேட்டான் அஸீஸ்.

‘‘நீ எங்கள் கமாண்டரைப் போலவே பேசுகிறாய்’’ என்று சொல்லி அஸீஸைப் பார்த்து ஸல்யூட் அடித்தான் அந்தக் காவலாளி.

***

அப்துல் மாலிக். கைதி எண் 5. செல்லிலிருந்து தப்பிக்க நினைத்து முயற்சி செய்த ஒரே ஆள். அவன் உடலை அப்புறப்படுத்திய போதுதான் அவன் இறந்த காரணம் தெரிந்தது. அவனது செல்லில் கிடந்த காய்ந்து போன ரொட்டிகளில் ஆயிரக்கணக்கான கரப்பான் பூச்சி முட்டைகள் இருந்தன. அப்துல் மாலிக் அந்த ரொட்டிகளைத்தான் தின்றிருக்கிறான்.

***

அவர்கள் அந்த மரணக் குழிக்கு வந்து பதின்மூன்று ஆண்டுகள் ஆகியிருந்தன. காவலாளிகளுக்கும் அலுத்துப் போயிற்று. காவலாளிகள் யாரும் மாற்றப்படவில்லை. பதின்மூன்று ஆண்டுகளாக அதே காவலாளிகள்தான். கைதிகள் அத்தனை பேரும் சாகும்வரை அக்காவலாளிகளும் அதே பாலைவனச் சிறையில்தான் பணி புரிந்தாக வேண்டும்.

காவலாளிகளின் தலைவனான சார்ஜண்ட் ஃபாதல், வக்ரீனிடம் சில வார்த்தைகள் பேச ஆரம்பித்தான். அவர்கள் பேசியது அரபி மொழியல்ல. பெர்பெர்களின் மொழியான தமாஸீத். பிறகுதான் தெரிந்தது, அவர்கள் இருவரும் மிக நெருங்கிய உறவினர்கள் என்பது. ஒருமுறை ஃபாதல் விடுமுறையில் ஊருக்குச் சென்றபோது வக்ரீனிடமிருந்து அவன் மனைவிக்கு ஒரு கடிதத்தை எடுத்துச் சென்று கொடுத்தான். அந்தக் கடிதத்தின் மூலம்தான் இந்தக் கைதிகளைப் பற்றிய செய்தி மனித உரிமை அமைப்புகளை எட்டியது. அந்தக் கடிதத்திற்காக ஃபாதலுக்கு நிறைய லஞ்சமும் கொடுத்தது வக்ரீன் குடும்பம். ‘நரகத்தில் கூட லஞ்சம் வேலை செய்கிறது’ என்று நினைத்துக் கொண்டான் அஸீஸ்.

***

ஒரு நாள் லௌசின், கைதி எண்.20, அஸீஸைத் திட்டினான். ‘‘நீ ஒரு வேசி மகன். நீ உன் தகப்பனுக்குப் பிறந்தவனல்ல. அப்படியிருந்திருந்தால் மன்னரிடம் சொல்லி உன் தந்தை உன்னைக் காப்பாற்றியிருப்பார். அஸீஸ் எப்போதுமே ஒரு துறவியின் மனநிலையில்தான் இருந்திருக்கிறான். ஆனால், வெளிச்சமேயில்லாத அந்த இருட்டுக் குழியில் 13 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் அந்தக் குறிப்பிட்ட தருணத்தில் அவன் ஒரு மனநோயாளியைப் போல் காணப்பட்டான். அப்போதுதான் அஸீஸை அப்படித் திட்டினான் லௌசின். அதற்கு லௌசின் பாணியிலேயே பதில் சொன்னான் அஸீஸ்.

‘‘ஆம். நான் வேசி மகன்தான். ஆனால் ஒன்பது மாதங்களும் பத்து நாட்களும் கழித்துப் பிறந்த உன் மகன் உனக்குப் பிறந்தவன் என்றா நினைத்துக் கொண்டிருக்கிறாய்?’’

அவர்கள் இந்த பாதாளச் சிறைக்கு வருவதற்கு முன்னால் சாதாரண சிறையில் இருந்தபோது சிறை மருத்துவரின் உதவியால் லௌசின் ஒருமுறை தன் மனைவியைச் சந்தித்திருந்தான். அந்தச் சந்திப்பின் மூலமாக அவன் மனைவிக்கு ஒரு குழந்தை பிறந்தது. அக்குழந்தை ஒன்பது மாதங்களில் பிறக்காமல் பத்து தினங்கள் கழிந்தே பிறந்தது.

அஸீஸின் வார்த்தைகள் லௌஸினைக் கொன்றுவிட்டன. அதற்குப் பிறகு அஸீஸ் எவ்வளவோ மன்னிப்புக் கேட்டான். தன் தங்கை கூட அவ்வாறு தாமதமாகத்தான் பிறந்தாள் என்று பொய் கூறினான். ஆனால் லௌஸினைக் காப்பாற்ற முடியவில்லை. பல வாரங்கள் சாப்பிடாமல் பட்டினிகிடந்து, யாரிடமும் பேசாமல் அஸீஸின் மடியில் இறந்து போனான். அப்போது அந்தச் சிறையில் உஸ்தாதின் குரான் வசனங்கள் ஒலிக்கத் துவங்கின.

***

பாதாளச் சிறையில் கைதிகள் தமது 17ஆவது ஆண்டை கழித்துக் கொண்டிருந்தார்கள். பாதல் மூலமாக கைதிகளிடமிருந்து உறவினர்களுக்குச் செய்திகள் சென்று கொண்டிருந்தன. தனக்குக் கிடைக்கும் லஞ்சப் பணத்திற்காக பாதல் அந்த ஆபத்தான காரியத்தைச் செய்து கொண்டிருந்தான். கைதிகளுக்குத் தாங்கள் காப்பாற்றப்படுவோம் என்று சிறிதளவு நம்பிக்கை பிறந்தது. அப்போது இறந்து போனான் அப்துல் கரீம். மற்ற கைதிகளுக்கு அத்தனை ஆண்டுகளாக காலத்தை அறிவித்து கொண்டிருந்தவன். திடீரென்று அவனுக்குப் பசி நின்று போனது. இறப்பதற்கு முன்னால் தனது வேலையை அஸிஸை எடுத்துக் கொள்ளும்படி கேட்டான் கரீம். அஸீஸூக்கும் உடல் நிலை சீர்கெட்டுப் போயிருந்ததால் அஸீஸூக்கு உதவியாக வந்தான் பெல்லா. எண் 14. பெல்லா நேரத்தைக் கணக்கிட்டான். அஸீஸூக்கு நாட்களும் மாதங்களும்.

பெல்லாவுக்கு ஒரு பிரச்சினை இருந்தது. சிறுநீர் கழிக்கும்போது ரத்தம் வந்தது. சில சமயங்களில், ரத்தத்தோடு சீழும் கலந்து வந்தது. இதற்குக் காரணம், தன் மனைவி என்று சொன்னான் பெல்லா. அதாவது பெல்லா வேசிகளிடம் சென்று கொண்டிருந்தபோது ஒரு வேசி அவனுக்கு செய்வினை செய்த மயக்கி அவனை மணம் செய்து கொண்டுவிட்டாள்.

சிஃபிலிஸ் முற்றிய நிலையில் சித்தம் கலங்கி ஏதேதோ பிதற்ற ஆரம்பித்தான் பெல்லா. அன்றைய இரவு ஆந்தை கத்தியதைக் கேட்டனர் கைதிகள். அந்த ஆந்தை பாதாளச் சிறையின் மேல் தளத்தில் நின்று கொண்டு கத்தியபோதெல்லாம் கைதிகளில் ஒருவன் இறந்திருக்கிறான். இத்தனை ஆண்டுகளில் அது ஒருமுறை கூடத் தவறியதில்லை. ஆனால் எல்லோரும் எதிர்பார்த்ததைப் போல் அன்றைய தினம் இறந்தது பெல்லா அல்ல அப்துல்லா. கைதி எண்.19. அவனுக்குப் பல வாரங்களாக வயிற்றுப் போக்கு இருந்திருக்கிறது. ஆனால் அதை அவன் யாரிடமும் சொல்லவில்லை. அந்த மலக் கழிவிலேயே பல தினங்களாகக் கிடந்திருக்கிறான் என்பது அவன் மரணத்துக்குப் பிறகுதான் அனைவருக்கும் தெரிய வந்தது.

***

அப்துல்லாவைத் தொடர்ந்து பெல்லாவும் இறந்து போனான். ஒரு கட்டத்தில் அவனால் சிறுநீரே கழிக்க இயலாமல் போனது. வலியில் கதறினான். கதவையும், சுவரையும் உதைத்தான். ஒரு நாள் இரவு அவனுடைய செல் அமைதியானது. ஆச்சரியப்படும் விதத்தில் அன்றைய இரவு ஆந்தையின் மரண கீதம் இசைக்கவில்லை.

***

மரணத்தின் அடுத்த அழைப்பு உஸ்தாதுக்காக வந்தது. அப்போது அவன் சொன்னான். ‘‘நான் உள்ளுக்குள் வேதனைப் படுகிறேன். என்னுடைய வலி உள்வலி. என் இதயம் வேதனையின் பிடியில் இருக்கிறது. எனக்குச் சந்தேகங்கள் வர ஆரம்பித்திருக்கின்றன. நமது புனித நூலைப் படித்தேன். இறைவனையும், இறைத் தூதரையும் தொழுதேன். ஸல்லல்லா அலைஹவ ஸல்லம். ஆனால் தெளிவுக்குப் பதிலாக மீண்டும் என் ஆரம்ப நிலைக்கே வந்து விடுகிறேன்... தனியாகவும், கைவிடப்பட்டவனாகவும், புனித நூலாகிய அந்த எல்லையற்ற சாகரத்துக்குள் தலைகீழாய்ப் பாய்கிறேன். ஆனால் அடுத்த கணமே சுண்டியெறியப்படுகிறேன். பல திக்குகளில் சீறிப்பாயும் வார்த்தை அலைகளால் சிக்குண்டு என் நம்பிக்கையை இழக்கிறேன்.

என் தலை விண்விண்ணென்று தெறிக்கிறது. என்ன செய்வதென்று தெரியவில்லை. இதை இன்று நான் உனக்குச் சொல்வதன் காரணம், எனக்குத் தப்பிக்கும் வழி தெரியவில்லை. சூரியனையும், வெளிச்சத்தையும் காணாமலேயே சாகப் போகிறேன். ஒரு வேளை, நரகமானது இப்போது இவர்கள் நம்மை வைத்து வதைத்துக் கொண்டிருக்கும் இந்த பாதாளச் சிறையைவிட கொடூரம் குறைந்ததாகத்தான் இருக்கும். இறைவன் என்னை மன்னிப்பான் என்றே நம்புகிறேன். இறைவனே நீதிமான். இறைவனே சத்தியமானவன். இறைவனே அருளாளன். இறைவனே நிகரற்ற அன்புடையோன். அவன் என்னை அழைத்துக் கொள்வதையே நான் விரும்புகிறேன். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். (‘‘நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். மேலும் நிச்சயமாக அவனிடமே திரும்பிச் செல்வோராய் இருக்கின்றோம்’’- திருக்குர்ஆன் 2:156)

எனக்கு வயதாகி விட்டது. நான் வாழ்ந்ததும் வெகு சொற்பம். அதுதான் என் விதி. எனது நேரம் நெருங்கி விட்டதென்றே உணர்கிறேன், தயவுசெய்து, அஸீஸ், அவர்கள் வழக்கமாகச் செய்வதுபோல் என் சடலத்தின் மீதும் சுண்ணாம்புக் கிளிஞ்சல்களைப் போட்டு மூடி விட அனுமதிக்காதே. என் உடல் மீது கஃபன் துணி போர்த்தப்பட்டு, என் அடக்கத்தின்போது பிரார்த்தனையும் செய்யப்பட வேண்டும். ஏனென்றால், நான் இறைவனிடம் சுத்தமாகச் சென்றடைய விரும்புகிறேன். இதற்கெல்லாம் நான் உன்னைத்தான் நம்பியிருக்கிறேன். என் இதயத்திலிருக்கும் இந்த வலியைப் போக்குவதற்காக இப்போது நான் ஓதப்போகிறேன் - ஒரு டன் அளவு எடையுள்ள ஒரு இரும்புத் தூணை என் விலாவில் வைத்தது போல் இருக்கிறது’’ ஸூகாரத் அல்-மௌத் என்பார்களே, அந்த மரணத்தின் பரவச நிலைக்கு -அல்லது, போதை என்று சொல்லலாமா-அந்த நிலைக்குச் சென்று விட்டான் உஸ்தாத்.

கைதிகள் அப்போது அந்த பாதாளச் சிறையின் நடைக்கூடத்தில் நின்று கொண்டிருந்தார்கள். காவலாளிகளும் அசையாமல் நின்று உஸ்தாத் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். உஸ்தாத் சாய்ந்துவிட்டான். அஸீஸ் அவனைத் தன் கரங்களில் தாங்கிக் கொண்டான். அப்போதும் உஸ்தாதுக்கு தனது ஆட்காட்டி விரலை உயர்த்தி அவன் கொண்ட மார்க்கத்தின் வார்த்தைகளைச் சொல்ல முடிந்தது. உஸ்தாதின் கரங்களைப் பிடித்தபடி, இந்த உலகத்தை விட்டு நீங்கும்போது ஒவ்வொரு முஸ்லீமும் சொல்ல வேண்டிய வார்த்தைகளை அவனோடு சேர்ந்து சொன்னான் அஸீஸ்.

உஸ்தாத் கார்பிக்கு முறையான அடக்கத்தைச் செய்ய அனுமதி வழங்கினான் பாதல். அந்த பாதாளச் சிறையில் நடந்த ஒரே நல்லடக்கம் உஸ்தாதினுடையதுதான். ஒரு காவலாளி கஃபன் துணியை எடுத்து வந்து அஸீஸிடம் கொடுக்கிறான். கைதிகள் சிறிது நேரம் அந்த மையத்து மைதானத்தில் குரானை ஓதியபடி நின்று கொண்டிருக்கிறார்கள். ஒரு காவலாளி தன் கண்ணில் வழிந்த நீரைத் துடைத்துக் கொள்கிறான். இத்தனை ஆண்டுகளாக குரானை ஓதிக் கொண்டிருந்த உஸ்தாதின் குரலை இனி அவர்களால் கேட்க முடியாது.

பிறகொரு நாள் உஸ்தாதையும் அவன் விட்டுச்சென்ற வெற்றிடத்தையும் நினைத்துப் பார்க்கிறான் அஸீஸ். உஸ்தாத் என்றைக்குமே மரணத்தைக் கண்டு அஞ்சியதில்லை. அவர்களின் நிலையை எண்ணி வருந்தியதோ சினந்து கொண்டதோ இல்லை. ‘‘இறைவனுக்குத் தொண்டு செய்வதே என் பணி. பிரார்த்தனை செய்வதற்கே இந்த இடத்திற்கு நான் அனுப்பப்பட்டிருக்கிறேன் - என் சக மனிதர்களின் மீது குறை கூறிக் கொண்டிருப்பதற்காக அல்ல’’ என்று அடிக்கடி அஸீஸிடம் கூறியிருக்கிறான் உஸ்தாத்.

மேலும் அவன் சொல்வான்: ‘‘மனிதன் உயிரோடிருப்பதை விட இறக்கும்போதுதான் மேன்மையடைகிறான். ஏனென்றால், பூமிக்குத் திரும்பும்போதுதான் அவன் பூமியாகவே ஆகிறான். நமது கண்களை மூடி ஒரு பேரழகான நித்தியத்துவத்தின்பால் நம்மை மலரச் செய்து நம்மைக் கல்லறையாக்கிக் கொள்ளும் பூமியை விட மேன்மையான ஒன்று இருக்க முடியுமா என்ன?’’

***

அது ஜூன், 1991. அவர்கள் அந்த பாதாளச் சிறைக்கு வந்து 18 வருடங்கள் ஆகியிருந்தன. ப்ரான்ஸிலிருந்த சிலர் இவர்களை வெளியே கொண்டு வர செய்து கொண்டிருந்த முயற்சிகள் எதையும் இவர்கள் அறிந்து கொள்வதற்கு சாத்தியமில்லை. அப்போதுதான் அஸீஸின் சக கைதிகளில் மேலும் இருவர் மரித்தனர். ஒருவன், முகம்மது, கைதி எண்.11 மற்றவன், இச்சோ. பெர்பெர் இனத்தைச் சேர்ந்தவன். நீண்ட காலம் உடல் நலமின்றி கவனிக்கப்படாமல் இறந்து போனார்கள் அவர்கள்.

***

அந்த சஹாரா பாலைவனத்தின் கோடைக்காலம் துவங்கியது. 1991 ஆம் ஆண்டு. அந்த இரண்டாவது ப்ளாக்கில் அடைக்கப்பட்ட 23 பேரில் அப்போது உயிரோடு இருந்தவர்கள் 5 பேர். அச்சர், அப்பாஸ், ஓமர், வக்ரீன் மற்றும் அஸீஸ்.

ழான் பால் ஸார்த்தரும், ஸிமோன் தி போவாவும் தங்கள் விடுதலைக்காக முயற்சி செய்து கொண்டிருப்பார்களென நினைக்கிறான் அஸீஸ். ஆனால், அந்த இருவருமே அப்போது உயிரோடு இல்லை என்ற செய்தி அந்த இருட்டுக் கல்லறையிலிருந்த அஸீஸின் செவிகளை எட்டியிருக்கவில்லை. ஆனாலும் மனித உரிமை அமைப்பைச் சேர்ந்த வேறு சிலர் மூலம் அக்கைதிகளுக்குத் தரப்படும் உணவில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன.

ஜூலை தொடங்கியிருந்தது. 18 வருடங்களாகத் தரப்பட்ட காய்ந்த ரொட்டிக்குப் பதிலாக, முதல் முதலாக அவர்களுக்கு ஒட்டகக் கறியும், உருளைக் கிழங்கும், பட்டாணியும் கொடுக்கப்பட்டன. அஸீஸூக்கு 18 வருட இடைவெளிக்குப் பிறகு கறியை உண்ண முடியவில்லை. காய்கறிகளையும் ரொட்டியையும் மட்டுமே உண்டான். ஆனால் அப்பாஸ் கறி முழுவதையும் மெல்லாமல் விழுங்கி விட்டதால் அது செரிமானமாகாமல் போனது. மறு நாளாவது அவன் பட்டினி கிடந்திருக்க வேண்டும். அப்படியும் செய்யாமல், மறுநாளும் பீன்ஸூம், நூடுல்ஸூம் சாப்பிட்டான் அப்பாஸ். அதன்பிறகு, ஒரு வார காலம் தொடர்ந்து வாந்தியெடுத்துக் கொண்டிருந்தான். ஜூலை இறுதியில் இறந்து போனான்.

***

கைதிகளின் எண்ணிக்கை நான்காகக் குறைந்தது. முதல் ப்ளாக்கில் உயிர் பிழைத்தவர்கள் சற்று அதிகம். இரண்டு ப்ளாக்கிலும் மொத்தமாக அடைக்கப்பட்ட 58 பேரில் உயிர் பிழைத்தோர் எண்ணிக்கை 28. அக்டோபர் 29, 1991 ஆம் ஆண்டு அவர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள். அப்போது அவர்களின் உயரம் அரை அடி குறைந்திருந்தது.

****

அப்துல்லத்தீஃப் குறித்த எனது கட்டுரையில் மொராக்கோவில் என்னைக் கவர்ந்த இரண்டு எழுத்தாளர்களென மொகமது சுக்ரி மற்றும் தாஹர் பென் ஜெலோனைக் குறிப்பிட்டிருந்தேன். (மளையால ‘மாத்தியமம்’ இதழில் சாரு எழுதும் பத்தியில் இதைக் குறிப்பிட்டிருக்கிறார். இக்கட்டுரையும் அதில் வெளிவந்ததின் தமிழாக்கமே.) தாஹர் பென் ஜெலோன் 1944 ஆம் ஆண்டு நகரில் பிறந்தவர். கல்லூரி மாணவராக இருந்தபோது 1964 ஆம் ஆண்டு மன்னன் இரண்டாம் ஹாசனின் எதிர்ப்பாளர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு 18 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார் ஜெலோன்.

 1971 ஆம் ஆண்டு ப்ரான்ஸ் சென்ற அவர் இன்றளவும் அதையே தனது வசிப்பிடமாகக் கொண்டிருக்கிறார். ப்ரெஞ்ச் மொழியில் எழுதும் ஜெலோன் இதுவரை இருபதுக்கு மேற்பட்ட நாவல்களும் மூன்று கவிதைத் தொகுதிகளும், இரண்டு நாடகங்களும் எழுதியுள்ளார். சமூக உளவியலில் ஆய்வுப் பட்டம் பெற்றுள்ள இவர் எழுதிய நாவல்களுள் ஒன்று. ‘This Binding Absense of Light’

இரண்டாம் ஹாஸனைக் கொன்றுவிட்டு மொராக்கோவில் ஆட்சியை நிறுவ எண்ணிய சில ராணுவ அதிகாரிகள் தங்களுக்குக் கீழுள்ள ராணுவத்தினரைப் பயன்படுத்தி அதைச் சாதிக்கத் திட்டமிட்டனர். மன்னனின் விருந்தினர்களில் 98 பேர் கொல்லப்பட்டனர். மன்னன் பிழைத்துக் கொண்டான். இந்தச் சம்பவத்தில் தங்கள் விருப்பமின்றி சிக்கிக் கொண்ட கீழ்நிலை அதிகாரிகளை தனது நாட்டின் சஹாரா பாலைவனத்திலுள்ள Tazmamart என்ற பாதாளச் சிறையில் அடைத்தான் இரண்டாம் ஹாஸன். அப்படி அடைக்கப்பட்டவர்களுள் ஒருவர் அஸீஸ். அவர் விடுதலையான பிறகு அவரைச் சந்தித்து அவரது அனுபவங்களை ப்ரெஞ்சில் எழுதினார் தாஹர் பென் ஜெலோன். அந்த நாவல்தான்: This Binding Absense of Light. ImpacPl°u என்று அழைக்கப்படும் இலக்கிய விருதை சென்ற ஆண்டு பெற்றது இந்த நாவல். பரிசுத் தொகை 1 லட்சம் யூரோக்கள். (ஒரு யூரோ 60 ரூபாய்) ஒரே புத்தகத்துக்கென அளிக்கப்படும் விருதுகளில் உலகிலேயே மிகப் பெரிய விருது இது ஒன்றுதான்.

ஆங்கிலத்திலும் மற்றும் உலகம் முழுவதும் பல மொழிகளிலிருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட புத்தகங்களும் சேர்த்து மொத்தம் 125 புத்தகங்களிலிருந்து பரிசுக்கென தேர்வு செய்யப்பட்டது இந்த நாவல். இந்த நாவலை எழுதியதற்காக ஜெலோன் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். காரணம், 1971 இலேயே ப்ரான்ஸ் சென்றுவிட்ட அவர் தனது நாட்டின் சிறையில் செத்துக் கொண்டிருந்தவர்களுக்காக ப்ரெஞ்சுக்காரர்களும், மனித உரிமை அமைப்புகளும் கடுமையாகப் போராடிக் கொண்டிருந்த கால கட்டத்தில் இருபது ஆண்டுகளாக தன் சுண்டு விரலைக் கூட அசைக்காதவர். ஆனால் அவர்கள் விடுதலையாகி வந்தவுடன் அவர்களில் ஒருவரின் சிறை அனுபவங்களைக் கேட்டு நாவலாக எழுதிவிட்டார். அப்படி எழுதுவதற்கான தார்மீக உரிமை ஜெலோனுக்குக் கிடையாது என்று விமர்சிக்கப்பட்டார். இந்தக் குற்றச்சாட்டுக்கு ஜெலோன் கூறிய பதில் மிகவும் பலவீனமாக இருந்தது.

அவர் கூறினார். ‘‘Tazmamart விஷயத்தைப் பற்றி எழுதுமாறு மற்றவர்கள் கேட்டுக் கொண்டதாலேயே இந்த நாவலை எழுதினேன். இதற்குக் கிடைத்த விருதுப் பணத்தை அஸீஸூடனும் இந்நாவலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவருடனும் பகிர்ந்து கொள்வேன்’’ ஆனால் இது பற்றி அஸீஸ் எதுவும் அலட்டிக் கொள்ளவில்லை. ‘‘தாஹரின் நாவலில் என்னுடைய கதையே சொல்லப்பட்டிருந்தாலும் அதிலுள்ள ஆன்மீகம் தாஹருக்கே உரியது’’ என்று சொன்னார் அவர்.

நாவலின் பலமே இதிலுள்ள ஆன்மீகம்தான். இருட்டுக் குழியில் கிடந்த 18 ஆண்டுகளையும் பெரும்பாலும் தொழுகையிலும், குரானை ஓதுவதிலுமே கழித்திருக்கிறார் அஸீஸ். இந்த இரண்டும்தான் தன்னை துவேஷம் என்ற நோயிலிருந்து காப்பாற்றியது என்கிறார் அவர். வெறுப்பு ஒரு விஷம். தன்னை இந்த இருட்டுக் குழியில் தள்ளியவர்களை வெறுக்கத் துவங்கினால் அது வெகு சீக்கிரத்தில் தன்னைக் கொன்று விடும் என்று உணர்கிறார் அஸீஸ். அதற்கான தர்க்கம் என்னவென்றால், அந்த மரணக் குழியிலிருந்து விடுதலை என்பதற்கு சாத்தியமேயில்லை. அப்படியிருக்கும்போது வெறுப்பும், பழிவாங்கும் உணர்வும் மேலோங்கினால் - இங்கிருந்து வெளியேற முடியவில்லையே என்ற எண்ணம் உருவாகி அந்தக் கழிவிரக்கத்திலேயே செத்து விடுவோம் என்கிறார் அஸீஸ்.

தொழுகையின் விளைவாக அவரால் தன் உடலைவிட்டே பிரிந்திருக்க முடிகிறது. அது பற்றி ஜெலோன் எழுதுகிறார்: “நான் எனது எண்ணங்களாகவே மாறினேன். அந்த நிலையை அடைந்ததும் எல்லாமே லகுவாயிற்று. இப்படியாகத்தான் ஒருநாள் இரவு காபாவின் பக்கத்தில் நின்று கொண்டிருப்பதை அறிந்தேன். அதை மெதுவாக நெருங்கினேன். அணைத்துக் கொண்டேன். கடந்த காலத்தின் பல நூற்றாண்டுகளைத் தாண்டிச் சென்று விட்டதுபோலவும், அதே சமயம், காற்றின் மெல்லிய அலைகளில் எதிர்காலமென்ற ஒளிப்பிழம்பை நோக்கி மிதந்து வருவது போலவும் உணர்ந்தேன். காலை நேரத்தின் முதல் தொழுகை துவங்கும்வரை இரவு முழுவதும் காபாவிலேயே தங்கியிருந்தேன். ஓளு செய்து கொண்டிருந்தவர்களும், தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்களும் எனக்குள் ஊடுருவிப் பார்ப்பதை உணர்ந்தேன். நான் ஸ்படிகத்தைப் போல் ஒளி ஊடுருவக் கூடியவனாயிருந்தேன். என் ஆவி மட்டுமே அங்கேயிருந்தது. இந்த விடுதலை சில சந்தர்ப்பங்களில் மட்டுமே வாய்க்கக் கூடியது. இதை நான் கெடுத்துக் கொள்ளக் கூடாது. குழியில் கிடக்கும் என் உடம்புக்கும் அதன் வேதனைக்கும் திரும்பிச் சென்றாக வேண்டும்.’’

(ஓளு செய்தல் : தொழுகைக்கு முன்னால் கை, கால், முகம் முதலியவற்றைச் சுத்தம் செய்து கொள்ளுதல்) தொழுகையைப் பற்றிய மற்றொரு இடம் பின் வருவது: ‘‘நாம் சொர்க்த்திற்குச் செல்வோம் என்று நீ நம்புகிறாயா?’’

‘‘அதை இறைவன் மட்டுமே அறிவான். என்னால் அதற்குப் பதில் கூற முடியாது. ஆனால் நான் சொல்வது போல் செய். தொழுகையில் ஈடுபடு. அதற்கு வெகுமதியாக எதையும் எதிர்பார்க்காதே. பிரதிபலன் பாராமல் தொழுகை செய். அதுவே நம்பிக்கையின் வலிமை’’

‘‘நீ கூறுவது எனக்குப் புரியவில்லை?’’

‘‘அகண்டகாரத்தை நோக்கி நான் தொழுகிறேன். இந்த வெளியுலகத்திலிருந்து என்னை விடுவித்துக் கொள்ளவே தொழுகிறேன். இந்த உலகம் வேண்டாம் என்பதற்காக நான் தொழவில்லை. ஆனால் துவேஷக் கிணற்றின் அருகே நம்மை இழுத்துச் செல்ல முயலும் எண்ணங்களுக்கு எதிராகவே தொழுகிறேன். தொழுகைக்காக வாழவில்லை. தொழுகையில் வாழ்கிறேன். ஆதாயமடைவோம் என்ற நம்பிக்கையில் தொழவில்லை. வாழ்வின் களைப்புக்கெதிராகவே தொழுகிறேன். நம் குரல்வளையைக் கவ்விப்பிடிக்கும் சோர்வுக்கு எதிராகவே தொழுகிறேன். எனவே, எனதருமை நண்பனே, தொழுகை என்பது முழுக்க முழுக்க கைம்மாறு கருதாத ஒன்றாக இருக்க வேண்டும்.’’ இவ்வாறுதான் அந்த மரணக் குழியில் தனது பதினெட்டு ஆண்டுகளைக் கழித்ததாகக் கூறுகிறார் அஸீஸ்.

*****

தாஹர் பென் ஜெலோனின் நாவலை வாசிக்கும் ஒருவரின் தத்துவ நோக்கையும், வாழ்தல் குறித்த புரிதலையுமே மாற்றி விடக் கூடியதாக இருக்கிறது என்று சொல்லலாம். அப்படிப்பட்ட நூல்கள் உலகில் அரிதாகத்தான் எழுதப்படுகின்றன. என்றாலும் இந்த நாவல் நவீனத்துவத்தைத் தாண்டவில்லை என்பது இதன் மிகப்பெரிய பலவீனம்.

உதாரணமாக, மனித உளவியலை புனிதம் - அசுத்தம் என்ற binary opposition -இல் வைக்கிறார் ஜெலோன். அஸீஸ் புனிதன். அச்சர் நீசன். பொறாமை கொண்டவன். விடுதலையாகிப் போனால், தன் மனைவி மக்களை விட்டு விட்டு வேறு ஒரு இளம் பெண்ணை மணமுடித்துக் கொள்வதாகச் சொல்லிக் கொண்டிருப்பவன். மொத்தத்தில், ஒரு நீசன், ஆத்மா உடல் என்று பிரித்து அஸீஸை புனித ஆத்மாவாகவும், உடல் துய்ப்பு பற்றிப் பேசுகிற அச்சரை நீசனாகவும் காட்டி மனித வாழ்வின் சிடுக்குகளுக்குள் செல்லாமல் அதை எளிமையாக்கி விடுகிறார் தாஹர் பென் ஜெலோன். எனவே, ஜெலோனை நான் ஒரு எழுத்தாளர் என்று மட்டுமே கருத முடிகிறது. இதை மீறி மொராக்கோவில் ஒரு கலைஞனாகவே வாழ்ந்து, கலைஞனாகவே எழுதி, கலைஞனாகவே இறந்து போன ஒருவர் என முகமதுசுக்ரியைக் கூறலாம். அவரைப் பற்றி பின்னர் ஒரு சமயம் எழுதுவேன்.

*****

பின் குறிப்பு :

1.slam Explained to Children 2. Racism as Explained to my Daughter இதில் முதல் புத்தகம் மிக முக்கியமானது. ஒவ்வொரு குழந்தையும் வாசிக்க வேண்டிய ஒன்று.

2. ஒரு முறை ஜெலோனிடம் ‘‘நீங்கள் ஏன் ப்ரெஞ்சிலேயே எழுதுகிறீர்கள்?’’ என கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறிய பதில்: ‘‘அரபி குரானின் மொழி. அதில் இவ்வளவு வன்முறையை எழுத என் மனம் ஒப்பவில்லை.’’

3. ஜெலோனின் நாவலைப் படித்து முடித்தபோது எனக்குள் இரண்டு முக்கியமான கேள்விகள் எழுந்தன. ஒன்று, தன் சிறு வயது முதற்கொண்டும், அதற்குப் பின்னர் ஒரு இருட்டுப் பொந்தில் 18 ஆண்டுகள் அடைக்கப்பட்டு கிடந்தபோதும் குரானை ஓதுவதிலேயே தன் வாழ்நாளைக் கழித்த உஸ்தாத் கார்பி ஏன் வெளிச்சத்தையே காணாமல் இறந்து போனார்? இரண்டாவது கேள்வி : தன்னை எதிர்த்தவர்களை, சமயங்களில் அப்பாவிகளையும் பாதாளச் சிறைகளில் போட்டு அணு அணுவாய்ச் சித்ரவதை செய்த மன்னன் இரண்டாம் ஹாஸன் மொராக்கோவை தன்னிச்சையாக ஆண்டவன். ஆட்சிக் காலத்தின் ஆரம்பக் கட்டத்தில் நடந்த இரண்டு ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிகளையும் வெகு எளிதில் முறியடித்தவன்.

1971 ஜூலை 10 சம்பவத்துக்குப் பின் ஒரு ஆண்டு கழித்து, பாதுகாப்பு மந்திரியான ஜெனரல் ஒளஃப்கிரின் திட்டத்தின் பேரில் ஹாசனைக் கொல்ல ஒரு முயற்சி நடந்தது. ஹாசன் ப்ரான்ஸ் சென்று விட்டுத் திரும்பும்போது அவனுடைய விமானத்தைத் தாக்கும்படி உத்தரவிட்டிருந்தார் ஒளஃப்கிர். அப்போது விமானியின் மைக்கைப் பிடுங்கி, விமான நிலையத்திலிருந்த ஒளஃப்கிரின் ஆட்களிடம் ‘‘கொடுங்கோலன் இறந்து விட்டான்’’ என்று அறிவித்தான் ஹாசன். இதை நம்பிவிட்ட ஒளஃப்கிரின் சிப்பாய்கள் விமானத்தை தரையிறங்க அனுமதித்தனர். அதற்குள் தனது படைகளை விமான நிலையத்துக்கு வரவழைத்துவிட்ட ஹாசன், ஒளஃப்கிரை வளைத்து விட்டான்.

 இந்த இரண்டு சம்பவங்களைத் தவிர ஹாசன் வேறு எந்தப் பிரச்சினைகளையும் எதிர் கொள்ளவில்லை. மக்கள் பட்டினியால் மடிந்து கொண்டிருந்தபோது தான் மட்டும் சுகபோகங்களின் உச்சத்தில் வாழ்ந்தான். மொராக்கோவுக்கு ப்ரான்ஸிடமிருந்து 1956 ஆம்ஆண்டு சுதந்திரம் கிடைத்தது. 1961 இல் இரண்டாம் ஹாசன் மன்னனானான். அதிலிருந்து 1999 -ஆம் ஆண்டு இயற்கை மரணம் அடையும்வரை - 38 ஆண்டுகள் நாட்டை ஆண்டான். ஹாசன் ஒரு தீவிர கால்ஃப் பிரியன் என்பதால் நாடு முழுக்கவும் மிக அழகான கால்ஃப் விளையாட்டு மைதானங்களை அமைத்தான். அந்த கால்ஃப் விளையாட்டுக்காரனை யாரால் தண்டிக்க முடிந்தது? இந்த இரண்டு கேள்விகளும் கண்பார்வையற்ற ஈயைப் போல் என் மனதை சுற்றிச் சுற்றி வருகின்றன.

3. அஸீஸூடன் பாதாளச் சிறையில் அடைக்கப்பட்ட ஒருவர் அஹ்மத் மர்ஸோக்கி. அவர் தனது அனுபவங்களை Tazmamart cell 10 என்ற தலைப்பில் சிறைக் குறிப்புகளாக எழுதியிருக்கிறார். இவர் ப்ரெஞ்ச் தினசரியான Le monde இல் தாஹர் பென் ஜெலோனைப் பற்றி இவ்வாறு எழுதுகிறார். ‘‘Tazmamart இல் நாங்கள் 20 ஆண்டுகள் அடைந்து கிடந்த போது எங்களுக்காக அவர் ஒரு வார்த்தை கூட எழுதவில்லை. அவ்வளவு காலமும் மௌனமாகவே இருந்த அவர் இன்றைக்கு ஏன் இவ்வளவு தூரம் அலட்டிக் கொள்கிறார்?’’

Pin It