எதிரே கத்தும் கடல். அனாதி காலம் தொட்டே கடல் கத்திக் கொண்டுதான் இருக்கிறது. ஓயாத ஒழியாத கத்தல். சின்ன வயதில் பாட்டி சொல்வாள். ‘கடலுக்குள் இருந்து கடவுள் கத்துகிறார்’ என்று. கடவுள் எங்கெங்கு இருப்பார் என்று பாட்டிமார்களுக்குத்தான் தெரியும் போல.

Ocean கடவுள் எதற்காகக் கத்த வேண்டும்.? சோகத்தில் கத்துவார்கள் மனிதர்கள். சில நேரம் சந்தோஷத்தில் கத்த வேண்டும் போல் இருக்கும்தான். நீரைப்போல உள்ளவருக்கு என்ன இருக்கிறது கத்த. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை நீர்தான் நிரம்பிக் கிடக்கிறது. இன்னும் எட்டாத தூரத்திலும் நீர்தான். தூரங்களைத் தெளிவாக பார்க்க முடியவில்லை. காட்சிகளை மறைக்கிறது நீர்த்தூசு. ஆக்ரோஷமாய் எழும் அலைகள் உப்பு எரியும் நீர்தூசை கண்ணில் விதைக்கிறது.

ஆழத்திலிருந்து பொங்கி கோபம் போல் எழும்பி இளம் யுவதியின் மென் துகில் போல் அடுக்குகளாய் படிகிறது அலைகள். ஒரு கணம்தான். என்ன மாயமோ,மந்திரமோ. படிந்த அலைகள் வெள்ளையாய் நுரைத்து பூச்சிதறலாய் குழைந்து விடுகிறது கரையில். இந்த மாயத்தில் தான் கடவுள் ஒளிந்திருக்கிறாரோ. பாட்டிசொன்னது சரிதான். எங்கெல்லாம் மர்மம் உள்ளதோ அங்கெல்லாம் கடவுள் இருப்பார். கடலின் ஆழம்கூட மர்மம்தான். அள்ள அள்ளக் குறையாத நிதியங்களின் பெட்டகம். முத்து, பவளம், சங்கு, சிப்பி என பெண்களுக்கு குழந்தைகளுக்கு கொடுத்து கொடுத்த வற்றாத நிதிய பெட்டகம். அதன் பாதுகாவலர்தானோ கடவுள். அவரின் விளிம்பு எது? நீர் சிந்திவிடாமல் தேக்கி வைத்திருக்கும் அவர் கரங்கள்தான் எத்தனை? கடலின் அலைகள் கடவுளின் மூச்சு என்கிறாள் பாட்டி. சின்னச் சின்ன அலைகள் சின்னச் சின்ன மூச்சு. சரி. பெரிய அலைகள், பெருமூச்சோ? பெருமூச்சு விடும் அளவு அவரின் மனதிற்குள் இருக்கும் வலி எது? ஆனாலும் அந்த வலிகளில் குளிக்கவென்றே மனிதர்கள் கூட்டம் கூட்டமாய் வருகிறார்கள். அதிலும் இந்த வெளிநாட்டவர்கள் விசேஷமானவர்கள். குளிப்பது நமக்கெல்லாம் ஒரு கடமை அல்லது வேலை.

இவர்களுக்கு ஆனந்தம். கடவுளையே தொடுவது போல அலைகளைத் தழுவுகிறார்கள். ஆடை துறந்து அறிவைத் துறந்து புத்தன் தேடிப் போன ஞானமாய் கடலைத் தேடி ஓடி வருகிறார்கள். சூரியன் காய நீர் நனைக்க குளியலுக்காகவே குளிக்கிறார்கள். வெயில் கூச, உப்பு உடம்பில் பிசுபிசுக்க, காற்று காதில் இரைய, கடலின் குரலை கேட்டுக்கொண்டே மணலில் படுத்துக் கிடக்கிறார்கள். காடோ, மலையோ, மலைக்குகையோ அல்லது கடலோ கடவுள் எங்கெல்லாம் இருக்கிறாரோ அங்கெல்லாம் எப்படியோ இவர்கள் வந்து விடுகிறார்கள். வீடு வேண்டாம், உறவு வேண்டாம். கடவுள் ஒன்றே போதும். கடலின் கடவுள்.

சிறிய துணியை விரித்து வானம் பார்க்கப் படுக்கிறார்கள் கரையில். ஒருபுறமாய் திரும்பி ஒரு கையை தலைக்குத் தாங்கல் வைத்து புத்தகம் படிக்கிறார்கள். கண்ணுக்கு கருப்பு கண்ணாடி போட்டு தூங்குவதாய் பாவனையில் கிடக்கிறார்கள். செந்நிற கேசம் முகத்தில் புரள ஈர உடம்பில் மணல் துகள்கள் மின்ன விரலிடுக்கில் புகையும் சிகரெட்டுடன் அழகழகாய் மேனிகள். மறுபுறம் திரும்பிப் படுத்தால் பிதுங்கும் செழுமைப் பகுதிகள். மெல்லிய கச்சையின் ஊடே துருத்தும் மொட்டுகள். பொன்னிற மயிர் துணுக்குகள் ஒளி பட்டு துலங்கும் போல எழில்கள்.

கடவுளின் கரையில் காமம் தோன்றா அங்க நெரிசல்கள். காமத்தோடு பார்க்க முடியா கண்கள். நிச்சயம் இது கடவுளின் கிருபைதான். வாழ்வில் காமம் அற்ற மனநிலை. எனக்கு ஏனோ கமலாக்கா ஞாபகம் வருகிறது. கனத்த தனங்களை உடைய அழகான கமலாக்கா. கல்யாணமான புதிதில் கணவனோடு இந்த கடற்கரைக்கு வந்தது பெரிய கமலாக்கா. சில்க் சட்டையும் சீட்டி பாவாடையுமாய் வாழைத் தோப்பிற்கு வாழைப்பூ வெட்ட அரிவாளுடன் என் கூட வந்தது சின்ன கமலாக்கா. வாழை மரம் உயரமாயிருந்தது. எட்டி பூவை வெட்ட முடியவில்லை.

மரத்திற்கு அந்தப்புறம் அக்காளும் இந்தப்புறம் நானும் நின்று கொண்டோம். அவர்கள் அரிவாளை வீச, என் பக்கம் வந்து விழும். நான் வீச, அரிவாள் அவர்கள் பக்கம் விழும். பூ மட்டும் விழுவதாய் இல்லை. குறி பார்த்து வீசத் தெரியா வயது. ஒருமுறை அவர்கள் வீசிய போது அரிவாள் லேசாக பூவை உரசி விட்டு என் கால் சுண்டு விரலில் பாய்ந்து விட்டது. ரத்தம் பீறிட்ட காயத்தில் களிமண்ணை வைத்து அப்பினோம். அந்தக் காயம் ஆறி இன்னும் வடுமட்டும் இருக்கிறது. அந்த வடுவைப் பார்க்கும் போதெல்லாம் கமலாக்கா ஞாபகமே வரும். கண்ணாடி போட்ட கமலாக்கா, குலுங்க குலுங்க நடக்கும் கமலாக்கா, ‘குதிரை மாதிரி நடக்காதடி’ என அம்மாவிடம் அடிக்கடி திட்டு வாங்கும் பக்கத்து வீட்டு கமலாக்கா. சுத்தமான தொடைகள். பம்புசெட்டில் குளிப்போம். முதுகு தேய்த்து விடச் சொல்லுவார்கள். பூனை மயிர் துளிர் விட்ட திரேகம். சொல்லிச் சொல்லி ஒவ்வொன்றாய்க் காண்பிப்பார்கள். ஆசையே வராது. அறியா பருவம் அது.

இதோ இந்த வெளிநாட்டு பெண்களை, இத்தனை வயதில் பார்க்கும் போதும் அப்படித்தான் இருக்கிறது. சரிந்து வளைந்து சுற்றிலும் விழுந்து கிடக்கும் நிலைக்கு ஏற்ப அழகு கோணம் காட்டும் ஆனந்த நடன அபூர்வம். ஆனால் மனதில் கிளர்ச்சியில்லை. கள்ளத்தனமோ குற்ற உணர்ச்சியோ வெட்கமோ இல்லா வெற்று நிலை. என்னவாயிற்று? காமத்தை உறிஞ்சி விட்டாரே கடவுள். கடலின் கடவுள். நீரைப் போல் உள்ளவர் முன் மனித மனமும் நீரைப் போல் உருமாறிப் பளிங்காய் ஆயிற்றோ? மணலின் ஈரத்தில் கட்டம் கீறி விளையாடும் குழந்தையாய் ஆயினோமோ? அவரின் பேரிரைச்சல் முன் மன அழுக்குகள் கரைந்தனவோ? இல்லை. மனித காமத்தை அவர் தனதாக்கி அபகரித்துக் கொண்டாரோ? ஆம். அப்படித்தான் இருக்கவேண்டும். எல்லோர் காமத்தையும் அவர் உறிஞ்சி உறிஞ்சி மகா பெரும் காமக்கடலாக ஆகியிருக்க வேண்டும். இல்லையென்றால் புதுக்கணவனோடு வந்த கமலாக்கா கடலில் மூழ்கி, அவருடனேயே போயிருப்பார்களா? இப்போதெல்லாம் நான் எந்தக் கடலுக்கும் போவதில்லை. கடவுளின் கடல் அது என்பதால் அல்ல. கமலாக்காவின் கடல் என்பதால்.

Pin It