‘எங்களது குலதெய்வம் ஒச்சாண்டம்மன் தாழ்த்தப்பட்டவர்களைத் தலைவர்களாக ஏற்காது’ என்று பாப்பாபட்டியில் பஞ்சாயத்து தேர்தலையொட்டி தேவரின சமூகம் நடத்தி வரும் சாதிய வன்கொலைகளை தெய்வத்தின் பெயரால் நியாயப்படுத்தும் செய்தி ஒன்றை சமீபத்தில் படித்தேன். ‘சாத்தானுமில்லை கடவுளுமில்லை’ என்ற ஆர்த்தோவின் குரூர அரங்க அறிக்கையின் முதல் வரிகளே எனக்கு ஞாபகத்தில் வந்தன. ஆர்த்தோவின் குரூர அரங்க தத்துவத்தை, மொழியை பின்பற்றி தேசிய நாடகப் பள்ளியில் எனது இறுதியாண்டுத் தேர்விற்காக ஜெர்மன் நாடக ஆசிரியர் பீட்டர் வைஸின் மராத்ஞிசாத் என்ற பிரதியை தேர்வு செய்து மூன்று மாதகால பயிற்சிக்குப் பின் மேடையேற்றினேன். இந்த பிரதி ஒரு வன்கொலையை மீண்டும் மீண்டும் நிகழ்த்துவது.

ஜான் பால் மராத் என்ற பிரெஞ்சு புரட்சியாளன் கொலை செய்யப்பட்டதை, மான்ஸயர் டீ சாத்தின் பார்வையில் பெருங்காமம், காமம் சார் உடல் வெளியோடு தொடர்புபடுத்தி இந்நாடகம் பேசினாலும், வன்கொலையை மீண்டும் மீண்டும் நிகழ்த்தும் செயல் பிரதியாளரால் வலியுறுத்தப்பட்ட ஒன்றாக பிரதி முழுதும் வியாபித்திருந்தது. இது எனக்கு, நமது வன்கொலைச் சடங்குளை நினைவூட்டியது. சாதி, மத மேலாதிக்க வன்முறையால் கொல்லப்பட்ட சமூக நாயகர்களின் வன்கொலைகளை, அடித்தளச் சமூகம் விழாக்கள், சடங்குகளாக நிகழ்த்துகிறது. ஆர்த்தோவிற்கு குரூர அரங்க தத்துவத்தை உருவாக்க அடிப்படையாய் இருந்த பாலினிய நடனத்தை விட, அதீத குரூரத்தன்மை கொண்டதாய் விளங்குகின்றன நமது வன்கொலைச் சடங்குகள்.

உதாரணமாக திருச்சியைச் சுற்றி நிகழ்த்தப்படும் ‘காத்தவராயன் கழுவேற்றமும்’ ஏழாயிரம் பண்ணை, சிவகாசி ஆகிய ஊர்களில் நிகழ்த்தப்படும் ‘சமணக்கழுவேற்றமும்’ குரூர அரங்க தத்துவத்தின் பரிபூரண செயல் வடிவமாய் திகழ்கிறது.

ஏழாயிரம் பண்ணை சமணக் கழுவேற்றம் பன்னிரண்டிற்கும் மேற்பட்ட நிகழ்த்துவோர்களைக் கொண்டு இடுகாட்டுப் பகுதியில் நிகழ்த்தப்படுகிறது. கழுவேற்றப்பட்ட சம்பவத்தை, உடல்களை தரையில் புதைத்து தலைகள் மட்டுமே வெளியே தெரியும் வண்ணமும், தலைகளை மண்ணில் புதைத்து உடலின் கை, கால் பகுதிகள் வெளித்தெரியும் விதமாக கிடந்தபடியும், அந்தரத்தில் தொங்கியபடியும் தீப்பந்த ஒளியில் குரூர முறையில் நிகழ்த்திக் காட்டினர்.

பார்வையாளர்கள் அதிர்ச்சியையும், வலியையும் உணரும்படியாக என்றோ நடந்த கொலைகளை இன்று மிகவும் விளக்கமாக நிகழ்த்திக் காட்டுவதன் நோக்கம் என்ன? ஆண்டுதோறும் மீண்டும் மீண்டும் வன்கொலைகளை சடங்காக நிகழத்துவதன் மூலம் இந்தக் கூட்டுச் சமூக நனவிலி எதை பழிதீர்த்துக் கொள்கிறது?

நந்தன், முத்துப்பட்டன், மதுரை வீரன், காத்தவராயன் போன்ற சமூக நாயகர்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்கொலைகளை பாடல்கள், கதைப்பாடல்கள், நாடகங்கள், நடனங்கள், சடங்குகள் என பல்வேறு விதமான வெளிப்பாட்டுச் சாதனங்கள் மூலம் உலகுக்கு அறிவித்தபடி உள்ளது பாதிக்கப்பட்ட அடித்தளச் சமூகம். இந்த ‘அறிவித்தல்’ நினைவுப்படுத்துதல், எச்சரித்தல், போராட்டத்தை கூர்மைபடுத்தல் என பலவகையான அர்த்தத் தளங்களைக் கொண்டது. அதற்கு மாறாக சமூகநாயகர்கள் மீது வன்முறை நிகழ்த்திய மேலாதிக்கச் சமூகம் அதை மறைக்க அல்லது இயல்பானதாக்க தெய்வத்தோடு தொடர்புடைய புனைவுகளை கற்பிக்கிறது.

உயிருடன் இருக்கையில் இருப்பை மறுத்தலித்து தீட்டு என ஒதுக்கி வன்கொலைக்குப் பின் புனிதப்படுத்துகிறது. இந்தப் புனிதம் என்பது கூட முரணான பாவனை சார்ந்ததே.

கொலையுண்டவர்கள் தெய்வத்தின் அவதாரங்கள், சோதியில் கலந்து தாங்கள் பூலோக வாழ்வினை மாய்த்துக் கொண்டார்கள் போன்ற புனைகளோடு தொடர்புடையதே பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் புனைவும். இத்தகைய புனைவுகளை கட்டவிழ்க்கவும் தங்கள் எதிர்ப்புப் பண்புகளை கூர்மைப்படுத்தவுமே காலம் காலமாக அடித்தளச் சமூகம் வன்கொலைச் சடங்குளை போராட்டங்களினூடே போராட்டமாக நிகழ்த்திக் கொள்கிறது. போராட்டமெனக் கூறக்காரணம் சடங்கு நிகழும் தளமென்பது முற்றிலும் சடங்கு வெளியாக மட்டும் இருப்பதில்லை. அது உருமாறும் தன்மை கொண்டதாய் சடங்கிற்கும் யதார்த்தத்திற்குமான இடைவெளி பலநேரங்களில் கட்புலனாகாததாக உள்ளது.

ஆகவேதான் பல தொல்குடிச் சமூகங்களில் சடங்கென்பது பெரும் நிகழ்வினை நிகழ்த்துவதற்கு ஆற்றல் பெரும் ஒத்திகையாகவே கருதப்பட்டது.

Pin It