ஏவிவிடப்பட்ட பறவைகள் வனத்திற்குள் பகலில் மட்டுமே அங்கும் இங்கும் பறந்து திரிந்தன. சின்னப் பறவைகளாக இருந்ததாலும் நீளம் குறைவாக இருந்ததாலும் அவற்றால் கயிறுகளை அறுத்தெறிய முடியவில்லை. கொஞ்சம் பறவைகள் அந்தக் கயிற்றுப் பந்தலுக்குள்ளேயே சிக்கிக் கொண்டு வெளியே வர முடியாமல் செத்து மடிந்தன. இன்னும்சில பறவைகள் விஷப் பழங்களைத் தின்றதால் செத்து விழுந்தன. நாட்டில் எந்தப் பறவையினமும், இல்லாமல் அழிக்கப்பட்ட பின்னர் தான் கூகையைப் பற்றி மோகனவள்ளியிடம் யாரோ சொல்லியிருக்கிறார்கள். அதுவரை கூகையைப் பற்றி ஒன்றுமே தெரியாத மோகனவள்ளி இப்போது கூகை கூகை என்று புலம்புகிறாள். இரவில் மட்டுமே வெளியே தலை காட்டும் கூகை கண்ணில் தட்டுப் படவேயில்லை. நாடெங்கிலும் சுற்றியும் ஒருவர் கண்ணில்கூட கூகை சிக்கவில்லை.

பருத்த உருவமும் மிக நீண்ட உரத்த இறக்கைகளும் இரவில் மட்டுமே பறக்கும் தன்மையும் கொண்ட ஒரேஒரு கூகை கிடைத்தால் போதும் அத்தனை கயிறுகளையும் அறுத்தெறிந்து நாடோடியைத் தோற்கடித்து அமோக வெற்றிபெற்று விடலாம் என்று பித்துப் பிடித்து புலம்பிக் கொண்டிருந்த மோகன வள்ளியின் முன்னால் சீனி கொண்டு வரப் பட்டான். சீனியைக் கொண்டு வந்து மோகனவள்ளியின் முன்னிறுத்திய இருகாவலரும் ரகசியமாய் சொன்னார்கள்.

வா என்றால் வரவும் போ என்றால் போகவும் கூடிய மாயக் கூகையை வைத்திருந்தான் இவன். வனத்துக்குள் அத்துமீறி நுழைந்து நம்முடைய அய்ந்தாம் காவல்வரை வந்துவிட்டான். அவன் தோளில் கூகை இருந்ததால், கொல்லாமர் உங்களிடம் கொண்டு வந்திருக்கிறோம். உங்களிடம் ஒப்படைப்பது சட்டபபடி குற்றம். இவனைக் கொல்லாமல் விடுவதும் சட்ட விரோதம். தாங்கள் இவனை பத்திரப்படுத்தி பயன்படுத்திக் கொள்வதோடு ரகசியம் காக்க வேண்டும்.

வனக் காவலர்கள் இருவருக்கும் கட்டுக்கட்டாக அடுக்கப்பட்டிருந்த பணமூட்டை கொடுக்கப்பட்டது. காவலர்கள் போனபின் ஓடோடிவந்த மோகனவள்ளி சீனியின் காலில் விழுந்து கால்களை இறுக்கிப் பிடித்துக்கொண்டு கதறியழுதாள். என்னுடைய மானம், மரியாதை, கௌரவம் அனைத்தையும் நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும் என்றும் வெற்றி பெற்ற உடனே உங்களை அரண்மனையில் மந்திரியாக ஆக்குகிறேன் என்றும் உங்களுடைய ஆலோசனையின் பேரிலேயே நாட்டை நிர்வகிக்கிறேன் என்றும் சத்தியம் செய்து அழுதாள் மோகன வள்ளி. கயிறுகளை எண்ணிப் புதிய மன்னரைத் தேர்ந்தெடுக்க இன்னும் மூன்று சாட்கள் இருந்த நிலையில் எந்தக் கயிறுமே அறுபடாமல் இருந்ததால், நாடோடி வாய்ச்சவடால் பேர்வழி மீண்டும் வெற்றி பெற்றுவிடலாம் என்ற சந்தோசக்களிப்பில் மிதந்தாள்.

அன்று இரவு வனத்திற்குள் ஒரு பெரும் புயல் உருக்கொண்டதைப் போல் கூகை மரங்களுக்கிடையே தன் நீண்ட இறக்கைகளை வீசியடித்து குறுக்கும் மறுக்குமாகப் பறந்து திரிந்தது. கயிறுகள் கட்டிநின்ற மரங்கள் அலைக்கழிக்கப் படுவதையும் கயிறுகள் கூகையின் இறக்கையடிப்பில் அறுந்து விழுவதையும் நான்கு பக்க வாசல்களிலும் காவலுக்கு நிற்கும் காவலர்கள் உணர்ந்து கொண்டனர். இரவில் மட்டுமே வேட்டையாடும் கூகையை பகலில் கொல்வதற்காக வனத்தைச் சுற்றி காவலிருந்த வேடர்கள் கூகை வெளியே வராததால் ஏமாந்தனர். மாமிசப் பட்சியாகிய கூகை விஷப் பழங்களைத் தின்று சாகாது என்பதை அறிந்த நாடோடி சவடால் பேர்வழியின் ஆட்கள் விஷம் வைத்துக் கொன்ற எலிகளையும், அணில்களையும், முயல்களையும் வனத்திற்குள் வீசினார்கள். தான் கொன்ற பிராணியை மட்டுமே உண்ணும் கூகை விஷத்தில் சாகாமல் தப்பித்துக் கொண்டது. தன் மூக்கால் புயல் காற்றையும் உறிஞ்சும் எத்தர்களிடம் முறையிட்டு வனத்திற்குள் இருக்கும் காற்று அனைத்தையும் உறிஞ்சிவிடக் கட்டளை யிட்டான் நாடோடி. காற்றே புக முடியாத பாழும்பொந்துக்குள்ளேயே தன் பூர்வீக வாசமாகையால் கூகைக்குக் காற்று தேவையில்லை. பொந்துக்குள் பதுங்கிக் கொண்டு தேவையானால் காற்றைத் தானே உருவாக்கிக் கொள்ளும் அபூர்வ சக்தியும் வரம்பும் பெற்றது கூகை என்பது நாடோடிக்குத் தெரியவில்லை.

இரண்டாம் நாளும் மூன்றாம் நாளும்பகலில் பதுங்கிக் கொண்ட கூகை இரவில் புயலாய் உருக்கொண்டு வனத்தைச் சல்லடையாய்த் துளைத்தெடுத்தது. வீச்சரிவாளின் லாவகத்தில் கூகையின் இறக்கையடிப்பில் கயிறுகள் அறுபட்டு தெரித்து விழுந்தன. நான்காம் நாள் காலை சீனியின் முன்னால் வந்து பொத்தென்று விழுந்தது. ரத்தக் கறைகள் படிந்திருந்த அதன் இறக்கைகளையும் கூர் அலகினையும் தடவிவிட்டான் சீனி. கூகை மிகவும் களைப்புடன் இளைத்துக் கொண்டு சீனியின் மடியில் கிடந்தது. பாதி உரோமங்கள் உதிர்ந்து மேலெல்லாம் பொட்டல் பொட்டலாய் காயம் பட்டிருந்தது. கூகையின் கதகதப்பில் சீனி மடிமீது சூடேற்றிக் கொண்டிருந்தது.

வெளியே பலமான கோசங்கள் கேட்கவும், கூகையைத் தூக்கியபடியே வாசலில் வந்து எட்டிப் பார்த்தான் சீனி. வெற்றி ஊர்வல ரதத்தை விட்டு அரசியாக இறங்கி வேகமாக வந்து கொண்டிருந்தாள் மோகனவள்ளி. காயத்துடனிருந்த கூகையை கையில் வைத்துக் கொண்டிருந்த சீனியை எட்டி உதைத்து கீழே தள்ளிவிட்டுப் போனாள் மோகனவள்ளி. பத்திருபது குதிரை வீரர்கள் திமுதிமு வென்று வந்து சீனியை சூழ்ந்து கொண்டார்கள். வலுக்கட்டாயமாக பிணம் தின்னும் வனத்திற்குள் இழுத்துப் போனார்கள். சீனி மரங்களால் உண்ணப்பட்டு பிண வாடைவீசும் பழங்களாக மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தான். கூகை கண்டம் துண்டமாக வெட்டி வீசி எறியப்பட்டது. பிணம் தின்னும் வனத்தில் இனிமேல் பிண வாடையோடு கூகையின் நாற்றமும் சேர்ந்து கொள்ளும்.

சீனியைகட கொல்வதற்கு மோகனவள்ளி உத்தரவிட்ட காரணம் அடுத்த தேர்தலில் எனக்கு அய்ந்தாம் எண் கிடைக்காமல், ஒண்ணாம் எண் கிடைத்தால் நான் கயிறுகயை அறுபடாமல் எப்படிப் பாதுகாப்பது. அய்ந்தாம் எண்காரனுக்கு இப்போது மாதிரி விசுவாசமாக இவன் மாறிவிட்டால் என்ன செய்வது. இவன் மாறமாட்டான் என்பதற்கும் எனக்கு அடுத்த தேர்தலில் அய்ந்தாம் எண்தான் கிடைக்கும் என்பதற்கும் என்ன உத்திரவாதமிருக்கிறது. இனிமேல் நானே கூகையை வளர்த்து நம் இஷ்டத்திற்கு செயல்பட வைப்போம்.

சித்திரம்பட்டியில் வேதக் கோயிலின் முன்னால் புதிதாகச் செய்த சப்பரம் அலங்கரித்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. நாளை இரவு சப்பர ஊர்வலம். நேற்று நடந்த சம்பவங்களைப் பற்றி பேதுரு சத்தமாகப் பேசிக் கொண்டிருந்தான்.

சப்பரத் திருவிழாவுக்கு அடித்துத் தின்பதற்காக வாங்கிவரப்பட்ட இரண்டு கன்றுக் குட்டிகளை கொம்புகளில் பூ சுற்றி அலங்கரித்து ஊர்வலமாகக் கொண்டுவந்தனர் பறைக்குடி கிறிஸ்தவர்கள். மாடுகளின் பின்னால் சந்தோசமாக கூச்சலிட்டுக் கொண்டு சென்றார்கள் சிறுவர்கள். பள்ளக்குடித்தெரு வழியே அடிக்கப் போகிற மாடுகளைக் கொண்டு வரக்கூடாது என்று தடுத்தனர் இளைஞர்கள்.இரண்டு தெரு ஆட்களுக்கம் கடுமையான வாக்குவாதம் முற்றி கைகலப்பு வரை வந்துவிட்டது. ஒருவரை ஒருவர் மிகக் கடுமையான வார்த்தைகளில் திட்டிக் கொண்டதோடு பரஸ்பரம் சவால்களையும் விட்டுக் கொண்டனர். கொஞ்சநேரத்தில் சாகப் போகிறோம் என்பதை அறியாத மாடுகளைப் போலவே ஏசுவும் அமைதியாய் தொங்கிக் கொண்டிருந்தார் சிலுவையில்.

“கூகையை கும்புட்ட பயகளுக்கு என்னடா அறிவிருக்கும்”

“கூகையைக் கும்புட்டாலும் ஆந்தையைக் கும்புட்டாலும் ஒங்கள மாதிரி மாட்டை அடிச்சாடா திங்கோம், நம்மகூட ஒழைக்கற உசுப்பிராணிய நம்மளே அடிச்சித் திங்கலாமாடா”

“ஏலேய்...அறிவுகெட்ட பயகளா ஒங்களுக்கத்தான் அறிவில்லே, அந்த சாமியானுக்காவது அறிவிருக்கா”

“என்னல நடக்கும்”

“அய்யர் வயக்காட்டு துட்டு உறுத்துது போலருக்கு, அய்யர் வயக்காட்டை உழுதுட்டாப்ல நீங்க எல்லாரும் அய்யராகிட்டோங்கற நெனப்பு”

“டேய்...நாங்க ஒழச்சி சாப்பிடுற ஜாதிடா, ஒங்கள மாதிரி மூடைமூடையா ஊர்பேர் தெரியாத பயக கிட்டே கோதுமையப் பிச்சையாவாங்கிச் சாப்பிடற ஜாதிஇல்ல”

“நாளைக்கி இந்த வழியா சப்பரம் வரட்டும் சப்பரத்தை நொறுக்கித் தீ வெச்சிக் கொளுத்தி சாம்பலாக்கலனா பாரு”

“இந்த வழிதான் சப்பரம் வரும் கொளுத்து பாத்திருவம்”

பேதுரு சீனியை நினைத்துக் கொண்டான். சொன்னால் பரிந்து கொள்ளக்கூடிய ஒரே ஆள் பள்ளக்குடியில் சீனிதான். அவனையும் ஊரைவிட்டு விரட்டிவிட்டார்கள். இரண்டு தெருக்காரர்களும் அடிக்கடி மோதிக் கொள்வதும் பரஸ்பரம் சவால் விட்டுக் கொள்வதும் சகசமாகிப் போனது. அதபோல்தான் இதுவும் என்று நினைத்தான் பேதுரு. ஆனால் இளவட்டங்கள் கூடிக்கூடிப் பேசுவதும் சில நடவடிக்கைகளும் அவனை பயமுறுத்தவே, சாமியாரிடம் போய் எல்லா விவரங்களையும் சொல்லிவிட்டு வந்தான். இரவு வெகுநேரமாகி விட்டபடியால் கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாகக் கலையவும் பேதுரும் இன்னும் சில இளைஞர்கள் மட்டுமே அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தின் பக்கத்தில் நின்று பேசிக் கொண்டிருந்தார்கள்.

பள்ளக்குடியின் காளியம்மன் கோயில் பக்கத்திலிருந்து அந்த நிசப்த இரவில் மிதந்து வந்தது கூகையின் சத்தம். பேதுரு பதறிப் போனான். சரியாக நாலேநாலு சத்தம். அப்புறம் நீண்ட இடைவேளி. திரும்பவும் நாலேநாலு சத்தம். பள்ளக்குடி ஜனங்களும் விழித்துக் கொண்டார்கள். கூகையின் சத்தம் தொடர்ந்து இடைவெளி விட்டு கேட்டுக் கொண்டேயிருந்தது.

“என்னடா இது ஒரு நாளும் இல்லாத திருநாளா இந்த ஆக்கங்கெட்ட கூகை வந்து நடுச்சாமத்திலே அழுகுது”

“கூகை அழுவக் கூடாதுன்னு சீனி ஓயாம சொல்வானா, இது நல்லதுக்கோ பொல்லதுக்கோ?”

“அது முந்தியிருந்த எடத்தைப்பாக்க வந்திருக்கும் அந்த எடத்துல காளியாத்தாளைப் பாத்த ஒடன வயித்தெரிச்சல்ல அழுகுது. பாவம் அழுதுட்டுப் போகுது”

“டேய் கேலி பண்ணாதீகடா சின்னப் பயகளா, கூகை அழுதா ஊருக்கு நல்லதில்லடா”

“எது அழுதா நல்லதுன்னு சொல்லும், நாளைக்கே அதக் கொண்டாந்து அழ வெச்சிருவம்”

“இப்படிப் பேசிப் பேசித்தான் சீனிய வெரட்டிட்டீக, இனி யார வெரட்டப் போறீகளோ தெரியல”

ஆலமரத்தடியில் தான் கூடை பின்னுகிறபோது எப்போதாவது இரவில் கூகை கூப்பிட்டால் என்னென்ன நடக்குமென்பதை ஒரு பாட்டைப் போல் தன்னிடம் சீனி அடிக்கடி சொன்னதை நினைத்துப் பார்த்தான் பேதுரு. கூடவே கிருஷ்ணன் என்ற தன் பெயரை பேதுரு என்ற மாற்றிய பின்னரும் அவன் கிட்ணா கிட்ணா என்று கூப்பிட்டுக் கேலி பண்ணியதையும் நினைத்துக் கொண்டான். சீனி அடிக்கடி சொன்ன சகுனப் பாட்டை அசை போட்டான்.

“ஓருரை உரைக்குமாகில் உற்றதோர் சாவு சொல்லும்.
ஈருரை உரைக்குமாகில் எண்ணிய கருமம் ஈடேறும்.
மூவுரை உரைக்குமாகில் மோகமாய் மங்கை சேர்வாள்.
நாலுரை உரைக்குமாகில் நாழியில் கலகம் வந்திரும்.
அய்யுரை உரைக்குமாகில் ஒரு பயணம் கிட்டும்.
ஆருரை உரைக்குமாகில் அடுத்தவர் வரவு கூறும்
ஏழுரை உரைக்குமாகில் இழந்த பொருள்கள் மீளும்
எண்ணுரை உரைக்குமாகில் திட்டென சாவு நேரும்
ஒன்பதும் பத்தும் உத்தமம் மிகவே நன்று.”

கூகையின் சத்தத்தை ஒவ்வொரு முறை கூப்பிடும் போதும் எண்ணிப் பார்த்தான் பேதுரு. மிகச் சரியாக நான்கே முறை அழுதுவிட்டு நிறுத்திக் கொண்டது. அன்று இரவு முழுக்க சித்திரம் பட்டியைச் சுற்றிச் சுற்றி கூகைச் சத்தம் கேட்டுக் கொண்டேயிருந்தது. பேதுரு காலையில் பரபரப்புடன் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு சிரித்தான். யாருமே அவன் பேச்சை சட்டை செய்யவில்லை. இளவட்டங்கள் கைகொட்டிச் சிரித்தார்கள்.

பேதுருக்குத்தான் பயம் பிடித்துக் கொண்டது. இன்று இரவு சப்பர ஊர்வலம் எப்படி நடக்கப் போகிறதோ என்று பயந்தான். அடிக்கடி மார்பில் சிலுவைக்குறி இட்டவாறு கையை முத்திக் கொண்டான்.

இரவில் குரல் கொடுத்த அழுத கூகை பகலில் பல்லுருக் கொண்ட ஆக்ரோசத்துடன் பள்ளக்குடிக்குள் பதுங்கிக் கொண்டு இரவுக்காய் காத்திருந்தது. நித்தம் நித்தம் இரவையே கவசமாக்கிக் கொண்டு இரை தேடி வேட்டையாடும் கூகைகள் சப்பரத்தின் வரவுக்காய் காத்திருந்தன. சிலுவை சுமந்த மனுசகுமாரனை சுமந்தபடி சப்பரம் தெரு வழியே ஊர்ந்து வந்தது. இரண்டு தெருக்களில் வலம் வந்த மனுசகுமாரன் தன்னுடைய சிலுவைப் பாதையான காளியம்மன் கோயில் தெருப்பக்கம் திரும்பி ஊர்ந்தது. நாலாபுறமும் சூழ்ந்து கொண்ட கூகைக் கூட்டம் சப்பரத்தைக் குறிவைத்துத் தாக்கியது. இரவில் மட்டுமே ஒளிரும் தீப்பந்தக் கண்களால் சப்பரத்தை சாம்பலாக்கியது. சப்பரம் சுமந்து வந்தவர்கள் தப்பித்து ஓடினார்கள். பேதுரு வெட்டிக் கொல்லப்பட்டான்.

காளியின் ருத்ரதாண்டவம் என பறக்குடியில் பல வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. சாமியார் மடம் சின்னாபின்னப் படுத்தப்பட்டு பொருட்கள் சூறையாடப்பட்டன.

விடிந்த போது அரைச் சிலுவைகளை கையில் ஏந்திய காவலர்கள் லாரிகளிலிருந்து குதித்தார்கள். பள்ளக்குடி ஆண்கள் அனைவரும் கூகைகளாக மாறி காட்டுக்குள் பதுங்கிக் கொண்டனர். பெண்கள், குழந்தைகள், ஆடுகள், மாடுகள் நவதானியங்கள் அனைத்தையும் கைகளில் அரைச்சிலுவை ஏந்திய காவலர் சூறையாடினர். பள்ளக் குடி இரண்டாம் முறையாக தீக்குளித்து மீண்டது. சாமியார் மடத்திலிருந்து தினமும் மாமிச மணம் பறந்து வந்தது.

(காலச்சுவடு பதிப்பகத்தின் வெளியீடாக வெளிவர இருக்கும் சோ.தர்மனின் கூகை நாவலிலிருந்து ஒரு பகுதி)

Pin It