நாவலிலிருந்து ஒரு பகுதி

இருளடையும் கரிய நாவுகளின் சுழட்டலில் சிலுசிலுப்பான கூதல் காற்று சிலும்பியது. எள்ளுச் செடியின் எண்ணெய்ப் பிசுக்கை உடலெங்கும் அப்பியிருந்தான் முனிசாமி. இரவின் ஒலி ஊளைகள் கசிந்து கொண்டிருந்தன. கண்களைத் துழாவிச் சுற்றிலுமாக நோட்டம் பார்த்தவன், அலையும் எண்ண ஓட்டங்களை ஒருங்கு குவித்து மேற்கு முகமாய்த் திரும்பி கருத்த இருளில் முகம் புதைத்துக் கும்பிட்டான். நடுச்சாமத்தின் தெய்வமான கருப்பராயனுக்கு தனது வலதுகையைக் கீறி குருதித் துளிகளைச் சிந்தியவாறே மனமொப்பி வேண்டினான். சற்றைக்கெல்லாம் கையின் காந்திய எரிச்சல் இரவின் மஞ்சு பட்டு மங்கியது. மெதுவாகக் கைகளை நீவிவிட்டுக் கொண்டு கனத்த காலடிகளை வீசிப்போட்டு நடக்க ஆரம்பித்தான்.

காலடியில் அலைவுறும் சருகுகளின் சரசரப்பு போர்த்தியிருந்த இருட்டை விலக்கிக் காட்டியது. கருநாவற்பழத்தின் வாகான திரேகம் அவனுக்கு. மையிருட்டோடு பொருந்தியிருந்த அவனது மத்தகத்திலும் மார்பிலும் அடைந்திருந்த வெம்மை துலங்கி, கண்கள் நின்றெரியும் சுளுந்துகளாய் மினுக்க, நைச்சியமான இருளினூடே அவனது காலின் ஒற்றைத் தண்டை மினுக்கிட்டாம் பூச்சியாய் வெளிச்சம் போட, கப்பியிருத்த கறுப்பைத் துளைத்து நடுச்சாமத்தின் வாடையை நுகர்ந்த வாறே நீண்டது அவனது காலடித்தடம்.

தூரத்தே ஒலித்த நாய்களின் குறைப்பில் அவனது கால்களின் விசை மட்டுப்பட்டது. மெதுவாக நடந்துபோய் அருகிலிருந்த சுமைதாங்கிக் கல்லின் மீது ஏறி உட்கார்ந்தான். நாய்களின் குறைப்பொலியில் கோம்பையின் வாடையடித்தது. உடலெங்கும் செங்குளவிகள் கொட்டும் வலி சொடுக்கியெடுக்க, கால்களை ஆட்டிக்கொண்டே இடுப்பிலிருந்த சிலும்பியை எடுத்து சுத்தம் செய்தான். காய்ந்த கஞ்சா இலைகளை உள்ளங்கையில் பரப்பி கட்டைவிரலில் பதமாக நிமிண்டி சிலும்பியில் கெட்டித்துப் பதமாகப் பற்றவைத்தான். கைகளைக் குவித்து ஆழமாய்ப் புகையை இழுத்ததில் கண்கள் ஜிவ்வென்று ஏறின.
நாய்களிலேயே போக்கிரியானது கோம்பை நாய்தான். இரவுக்கான ஆளுகையை தனதுபின்னங்கால் இடுக்குகளில் வைத்திருப்பதிலும், எதிராளியை நுட்பமாக மோப்பம் பிடிப்பதிலும், தருணம் பார்த்துப் பாய்ந்து கடித்துக் குதறுவதிலும் அபாரமான திறமைசாலி. ஓய்வு ஒழிச்சலின்றி சதா உறுமிக்கொண்டும், அலைந்து திரிந்து கொண்டும் இருக்கும் அது, குட்டியாயிருக்கும் போதே கோதும்பிகளை அரைத்துப் பாலோடு புகட்டி வளர்த்தும் முறையினால் கோதும்பிகளைப் போலவே ரீங்காரத்துடன் உறுமிக்கொண்டு எதிரிகளைத் துவம்சம் செய்யும். எங்கு போனாலும் விடாது துரத்தித் துரத்திக் கொட்டும் கோதும்பியின் மோப்பம் கோம்பையின் நீண்ட நாக்கில் எச்சியாய் ஒழுகும். ‘கோம்பையிடம் மாட்டினால் சூம்பைதான்’ என்ற சொலவம் ஞாபகத்தைக் கவ்வியது.

அந்தக் கோம்பை நாய்க்கும் தனக்கும் ஏதோ ஒரு புள்ளியில் ஒற்றுமை இழையோடுவதாகப் புலப்பட்டது அவனுக்கு. தன்னுடைய வளர்ப்பு முறையும் தாய்ப்பாலோடு அரைத்துப் புகட்டப்பட்ட கள்ளத்தனம் தானே... ஆழ்ந்து புகையை உள்ளிழுக்கும்போது சிலும்பியின் தீக்கங்கு கனன்றுதிர்ந்தது.

எல்லா மனிதருக்கும் ஆரவாரமாக பகலின் வெளிச்சத்தில் விடியும் வாழ்வியல் தனக்கும் கோம்பைக்கும் கருத்த வெளியில் இருண்மையாகிப் போன ஊழ்வினையின் சூத்திரத்தை ஒப்பிட்டுப்பார்த்தான். தனது நுகர்ச்சி பகலின் வெண்ணிறமேனியைவிடவும், இரவின் கறுத்த திரேகத்தையே மோப்பம் பிடிக்கிறது.

கால்களை ஆட்டிக் கொண்டே கடைசி இழுப்பை வழித்து சிலும்பியை வீசியெறிந்தான். எங்கோ தொலைந்த சத்தத்தில் முகம் புதைத்தவாறே கால்களை முன்னும் பின்னும் அசைத்தான். அந்தரத்தில் அசைகின்றன கால்கள். பாழ்வெளியின் அழகு அவனைத் தாவுகிறது. அது ஒரு மந்திரத்தன்மை கொண்ட தாலாட்டு. காலுக்குக் கீழே விலகிப் போகிறது நிலம். அந்தரவெளியில் அசைகிறது உடல். நிச்சலனத்தை உடைத்துக் கொண்டு அவனைச் சுற்றி உயரே எழும்புகிறது சூறை. ஆகாசமும் பூமியும் மாறிமாறிக் கண்களில் நிறைகின்றன. இரவும் பகலும் அசைந்து அசைந்து காட்சிகள் மறைந்து காலத்தின் நடுவே அவன் வீற்றிருக்கிற மாயாஜாலம் ஆடிக் கொண்டிருக்கிறது.

பகலில் ஒரு தோற்றத்துடன் தரிசனம் காட்டும் வெளி, இரவில் எதிர்தரிசனமாய் வேறு ஒரு தோற்றம் கொள்ளும் உருவாக்கத்தில் அதுவரையிலான பார்வைகள் அடியோடு மாற்றம் பெறும். பகலின் தூலத்தன்மை முற்றிலுமாக மறைந்து இரவில் சூக்குமம் கொள்ளும் அதே கணத்தில் சூக்குமமடைந்திருந்த புதிர்கள் தூலமாய் உயிர் பெறும். ஆன்மதிருட்டியில் உருமாறியிருக்கும் அபூர்வ தரிசனத்தை அவனால் அழகாக இனங்காண முடியும்.

மனிதத் தோற்றத்தில் படர்ந்த வெயிலின் வெம்மை மறைந்து போக, இருளின் மந்தாரத்தில் செந்நாய்களின் வாடையடிக்கிறது. மனித ஆகிருதியோடு கூடிய கிழநரியின் ஊளைகள் இருளில் சுழல்கின்றன. வாலிப நரம்புகளின் வெளிச்சம், திமிலைச் சிலுப்பிக் கொண்டேகும் பாய்ச்சலாக விடைக்கிறது இருளில். தூலமான மனித முகம் சிதைந்து சூக்குமமாய் கூம்பி நிற்க, முனையைக் கிழித்து நெட்டுக்குத்தாய் நிற்கும் இரண்டு பற்களின் வெண்மையில் வெயிலும், கருத்த இனுகிய சதையில் இருளும், தரிசனம் காட்டும் பாங்கில் அவனது கண்கள் நிலைகுத்தி நிற்கின்றன.

இரண்டாவது சாமம் நெருங்கிக் கொண்டிருந்ததை சில்லிட்டுப்போன குளிரின் விசுவிசுப்பு உணர்த்தியது. காட்சிகளை மெதுவாக உதறி சுமைதாங்கிக் கல்லிலிருந்து இறங்கி நடக்கத் தொடங்கினான். சூறைக்காற்று இன்னும் சுழன்றாடியபடி அவனது கால்களைக் கவ்வி சருகுகளைக் கொண்டு வந்து கப்பிய அதே கணத்தில், அவனது இடதுகாலில் அணிந்திருந்த ஒற்றைத் தண்டை, அனாயசமாய் விலக்கிக் காலெட்டிப் போட்டது.
காத்துக் கருப்பு அண்டாமல் பாதுகாக்க அவன் உடலோடு கூடிய உறுப்பாகவே மாறிப்போயிருந்த அந்தக் கங்கணத்தின் விடைப்பு கெண்டைக்காலின் தசைகளில் விம்ம, அது ஒரு மந்திரக்காப்பு.

சூனியத்தால் கட்டப்பட்டு விட்ட வழித்தடம் புரண்டு கொடுத்ததில் சாலடித்துப்போகின்றன அவனது கால்க்குறடுகள். ஈரமண்ணைக் கீறியெடுத்துப் போடும் வாகாக, அவனது நடையில் துள்ளும் செம்மண் புழுதியில் சுழலுகிறது பாதுகாப்பு வளையம்.

செய்வினையின் சூன்ய வித்தைகள் கருவேலங் காற்றாய்ப் பிளறியெழுந்து வெளி முழுவதும் சுழன்றோடி அவனைச் சூழ்ந்து உள்ளிழுத்து விஷக் கொடுக்காய் வளைந்திருந்த இலந்தை முட்களின் கூரிய நாவுகள் நாக்கைச் சப்புக் கொட்டி நெளிந்தன. நாசியைத்தாக்கி தலை முழுவதும் கும்மென்றேகிய தாழையின் நெரி கால்க் கவசத்தைக் குடைந்தது.

சட்டென அவனிடமிருந்து அரவத்தின் நீண்ட இரைச்சல் வெளிப்பட, தாழை மடல்களுக்குள் நுழைந்து இலந்தை முட்களின் கூர்மையில் பில்லியின் மந்திரச் சொல்லை மாட்டிக் குருதி கிழித்து கருவேலங்காயை நிமிண்டிச் சாறெடுத்து தனது நெற்றியில் பொட்டிட்டுக் கொண்டான்.

எல்லாமே மறைகிறது. நீண்ட இருளில் நிச்சலனமாய்ப் படுத்திருந்தது செம்மண் பாதை. ஆசுவாசத்துடன் சுற்றிலும் பார்வையால் துழாவிக் கொண்டு, தண்டை குலுங்க நடையை வைத்தான்.

முதுகில் தொங்கிக் கொண்டிருந்த கன்னக்கோல் மெதுவாக ஒரு கூட்டாளியின் இதத்துடன் அசைந்து கொடுத்ததில் உற்சாகம் அலையடித்தது. அவனது கைகள் அதை ஆதுரமாய்த் தடவிக் கொடுத்தன. அந்தத்தொடு உணர்வில் உயிருள்ள ஜீவனின் வெதுவெதுப்பு அவன் உள்ளங்கையில் ஓடிப்பரவியது.

அது அவன் அய்யா அவனுக்கு விட்டுச்சென்ற பங்காளி. தனது பிண்டத்திலிருந்து உயிர் பெற்றதைப் போன்ற அந்தக் கருத்த வஸ்துவை உயிரற்ற ஜடம் என்று அவன் ஒரு போதும் ஒப்புக் கொண்டதில்லை.
வருசத்திற்கொரு பூசை, மாசத்திற்கொரு வெண்ணைத் தேப்பு என்று, அவனது அய்யா அதை ராஜாவின் செங்கோல் போலப் பேணிவந்தார்.

அவர் வேட்டைக்கு புறப்படும்போது அதற்குத் தூபம் காட்டி வெகுநேரம் வரை வழிபடுவார். அதன் தேகத்தில் கையை வைத்து ‘சம்மதம்’ கேட்பார். கருத்த நெகுநெகுப்பான அந்த மரக்கோலில் சற்றைக்கெல்லாம் ரத்தநாளங்கள் புடைத்தெழும்ப, வெதுவெதுப்புடன் இசைவாக அவரது உள்ளங்கையில் சம்மதம் சொல்லிய பிறகே எடுத்துச் செல்வார். சேகுபாய்ந்த கருவேல மரத்தின் அடிநாதமாய்ப் பிளறியெழும் ஆற்றலும், பிறந்ததிலிருந்து பெண் வாசமே சேராத கருமான் அடித்துக் கொடுத்த கூரான உளியின் கூச்சும் இணைந்த அதன் உடல் வலிமையை, உறுதிமிக்க வானுயர்ந்த அரண்களில் லாவகமாய் கிடுக்கிப் போட்டு நசுக்கும் சுளுவில் சத்தமேயில்லாமல் சிதறிவிழும் சுவர்களின் பலம் சொக்கிப் போய்.

தசைநார்கள் திமிர்த்த அந்த உடலை உயிருள்ள ஜீவனாகவே அவனிடம் ஒப்படைத்த அவனது அய்யா, அவனது இளம்பிராயத்திலிருந்தே பில்லி சூனியத்தின் புதிர் முடையப்பட்டிருந்த மந்திரச்சொல்லை அவனது குருதி ஓட்டத்தில் உடையாத குமிழியாக மிதக்கவைத்தார். மந்திர உச்சாடனங்களின் வினோதத்தில் எழும்பும் அற்புத தரிசனங்களின் சுழிப்பில் சுழன்றோடிப் பிரியும் பின்னற்பிரிகளால் தனது உடல் தசைகளை முறுக்கேற்றினான். மாயலிபியின் நெளிக்கோடுகளை ஞாபக அடுக்குகளில் வெட்டி வைத்தான்.

நடுச்சாமத்தில் அலறும் கோட்டான்களின் கூவல் அவனுக்குள் கிளர்ச்சியை ஏற்படுத்தியது. சமநிலைப்பட்டவனாய் பார்வையைக் கூராக்கி ஒரு முறை சுற்றிலும் நோட்டம் விட்டான். தூரத்தில் அசைந்த வெளிச்சக் கங்குகள் பெரிதாகியிருக்க ஊர் சமீபித்திருந்தது என்பதை உணர்ந்த போது அவனையுமறியாமல் இன்னதென்று உணர முடியாத ஒருவித உணர்வு உடலெங்கும் கவ்வியது.

Pin It