முதன்முதலில் மனிதன் எப்போது தோன்றினான்? எங்கே தோன்றினான்? ஆசியாவிலா? ஆப்பிரிக்காவிலா? ஐரோப்பாவிலா? இந்தக் கேள்விக்கு இதுவரை விடை தெரியாமல் இருக்கிறது. ஆனால், உலகம் முழுவதும் நடைபெற்று வருகின்ற மனிதர்களின் குருதி குறித்த ஆய்வுகளின் முடிவில், முதன்முதலில் மனிதன் எங்கே தோன்றினான் என்பதை, அறிவியல் அறிஞர்கள் அறுதியிட்டு உறுதியாக விரைவில் அறிவிக்க இருக்கிறார்கள்.

மனிதர்கள், ஆயிரம் ஆண்டுகள் வாழ முடியுமா? முடியும் என்று மருத்துவ அறிவியல் மெய்ப்பித்து வருகிறது. 2025 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பிறக்கின்ற குழந்தைகள் 1000ஆண்டுகள் வரையிலும் வாழக்கூடிய வாய்ப்புகள் பெருகி வருகின்றன என்பதை அண்மையில் வெளியாகி உள்ள பல ஆய்வுக் கட்டுரைகள் தக்க சான்றுகளுடன் விவரிக்கின்றன. மனித உடற்கூறின் அடிப்படை மரபு அணு 15 சதவீதம் கண்டு அறியப்பட்டு உள்ளது. அடிப்படை தெரிந்துவிட்டதால், மேற்கொண்டு ஆராய்ச்சிகள் விரைவாக நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன. அடுத்தசில ஆண்டுகளில் வியக்கத்தக்க மாறுதல்கள் ஏற்பட இருக்கின்றன.

- சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆடை அணியாமல் திரிந்த மனிதன் வெயிலிலும், மழையிலும், பனியிலும், குளிரிலும் பாதிக்கப்பட்டான். பெரும்பாலும் 25 ஆண்டுகளே உயிர் வாழ்ந்தான்.

- எப்போது மனிதன் ஆடை அணியத் தொடங்கினானோ, அப்போதிலிருந்து அவனது வாழ்நாள் பத்து ஆண்டுகள் கூடியது.

- ஒரு வீட்டைக் கட்டி அதில் குடியேறியபோது மேலும் பத்து ஆண்டுகள் கூடுதலான வாழ்நாள் பெற்றான்.

- பச்சையாக உணவு உண்ணும் பழக்கத்தில் இருந்து விடுபட்டு, நெருப்பின் மூலம் சமைத்த உணவை உண்ணத் தொடங்கியபோது மேலும் கூடுதல் வாழ்நாள் பெற்றான்.

- நடந்து செல்கிற இடங்களுக்கு வண்டிகளைப் பயன்படுத்துவதால், மூட்டுத் தேய்மானம் தவிர்க்கப்படுகிறது. வீணாக சக்தி விரயம் ஆவதும் தவிர்க்கப்படுவதால், ஐந்து ஆண்டுகள் கூடப்பெற்றான். எனவே, வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றால் கால்களால் நடக்காதீர்கள். காலையில் நடை பழகுங்கள்.

- காலில் செருப்பு அணியத் தொடங்கியபோது மேலும் ஐந்து ஆண்டுகள் கூடுதல் வாழ்நாள் பெற்றான்.

- கடுமையான உடல் உழைப்பினால் செய்துவந்த பணிகளையெல்லாம் மின்பொறிகளைக் கொண்டு செய்ய வைத்ததால், மேலும் 10 ஆண்டுகள் வாழ்நாள் பெற்றான். எனவே, உடல் உழைப்பைக் குறையுங்கள். உடற்பயிற்சி செய்யுங்கள்.

- தூய்மையைக் கடைப்பிடித்து, குளிர் மற்றும் கோடை காலங்களில் அறை வெப்பநிலையை சமச்சீரான அளவில் வைத்துக்கொள்வதால் மேலும் வாழ்நாள் கூடுகிறது.

கடந்த நூற்றாண்டில் கிடைக்கத் தொடங்கிய மருத்துவ வசதிகள் மனிதனுடைய உடல்நலத்தைப் பாதுகாப்பதிலும், வாழ்நாளைக் கூட்டுவதிலும் எத்தகைய பங்கு வகிக்கின்றன என்பதை நாம் அறிவோம். இவ்வாறான புறக்காரணிகளால், மனிதனுடைய வாழ்நாள் கூடுதலாகி வந்து இருப்பதை யாரும் மறுக்க முடியாது. தற்போது மனிதர்களின் வாழ்நாள் 70 வயதைக் கடந்து உள்ளது. ஜப்பான் நாட்டில் 100 வயதை நெருங்கியவர்கள் 22,000 பேர் இருக்கிறார்கள்.

வருமுன் காப்போம்

நோய்கள் வந்தபின்பு மருத்துவம் பார்த்த காலம் மாறி, நோய்கள் வருவதைத் தடுப்பதற்கான மருத்துவ முறைகள் வந்துவிட்டன. நம்முடைய காலத்திலேயே பெரியம்மை, இளம்பிள்ளைவாதம் போன்ற பல நோய்களுக்குத் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு, முற்றிலுமாக ஒழிக்கப்பட்டதைக் கண்டோம். அதிலும் பெரியம்மை நோயின் அறிகுறிகள் குறித்துத் தகவல் தருபவர்களுக்கு ஆயிரம் ரூபாய் பரிசு என்று வீதிகள் தோறும் அறிவிக்கப்பட்டது. தற்போது பிறக்கின்ற குழந்தைகளுக்கு பல்வேறு நோய்கள் வராமல் தடுப்பதற்காகத் தடுப்பு ஊசிகள் போடப்படுகின்றன. மூன்று ஆண்டுகளுக்கு என்னென்ன தடுப்பு ஊசிகள் போட வேண்டும் என்பதை ஒரு பட்டியல் அட்டவணையாக அச்சடித்துக் கையில் கொடுத்துவிடுகிறார்கள்.

இரண்டு மாதக் கருவாக இருக்கின்றபோதே, குழந்தையின் உடல் உறுப்புகளின் வளர்ச்சியில் குறைபாடு ஏதும் ஏற்படுமா? இல்லையா? என்பதைக் கண்டு அறியவும், அவ்வாறு குறைபாடுகள் ஏற்படக்கூடுமானால், இரண்டு மாதக் கருவிலேயே தகுந்த அறுவைச் சிகிச்சை செய்யக்கூடிய அளவுக்கு மருத்துவ அறிவியல் முன்னேறி விட்டது.

கடந்த நூற்றாண்டில், சமச்சீரான சத்துகள் கொண்ட உணவு கிடைக்காததால், போதுமான அளவு உடல் வளர்ச்சி இன்றி, பல்வேறு உடல்நலக்குறைவுகள் ஏற்பட்டன. நோய்க்கிருமிகள் எளிதில் உடலைத் தாக்கி உட்புகுந்தன. ஆனால், இப்போது நம்முடைய உணவுப் பழக்கவழக்கங்களில் ஏராளமான மாறுதல்கள் ஏற்பட்டு உள்ளன அதனால், உடல் வளர்ச்சி கூடிவருகிறது.

எடுத்துக்காட்டாக 1990ஆம் ஆண்டுக்குப் பின்னர் தமிழகத்தில் எத்தனை ஆயிரம் கோழிக்கறிக் கடைகள் புதிதாகத் திறக்கப்பட்டு உள்ளன என்பதை எண்ணிப் பாருங்கள். எனது சொந்த ஊரான சங்கரன்கோவிலில், 1990 ஆம் ஆண்டு கோழிக்கறிக் கடை எதுவும் கிடையாது. தற்போது, சுமார் 150க்கும் மேற்பட்ட கடைகள் இருக்கின்றன.

தற்போதைய மருத்துவ வசதிகள் அதிகப்படியானவை, தேவையற்றவை என்று பலர் கருதுகிறார்கள். தெருவில் நாடோடிகளாகத் திரிபவர்களுக்கு நோய் வருகிறதா? என்று எதிர்வினா எழுப்புகிறார்கள். அவர்களுக்கு என்ன நோய்கள் இருக்கின்றன என்பதைப் பரிசோதனை செய்து பார்த்தால் அல்லவா தெரியும்? மருத்துவர்களிடம் செல்வதற்கு அவர்களிடம் பணம் இல்லை - கல்வி அறிவு இல்லை. நரிக்குறவர்கள், வீதியில் வசிப்பவர்கள் நன்றாக இருப்பதாகக் கருதினால் அது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வது ஆகும். அவர்களுடைய வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்தி மேன்மை அடையச் செய்ய வேண்டும்.

என்னதான் ஆயிரத்தைக் கண்டுபிடித்தாலும் குழந்தைப் பிறப்பைத் தடுக்க முடியுமா? அது இறைவன் கொடுக்கும் வரம் அல்லவா? என்றார்கள். இன்று குழந்தை வேண்டுமா? வேண்டாமா? என்பதை நாம்தான் தீர்மானிக்கிறோம். கருவில் இருப்பது ஆணா? பெண்ணா? என்று கண்டுபிடிக்க முடியுமா? என்று பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை நம்மில் பலர் சவால் விட்டுக்கொண்டு இருந்தார்கள். ஸ்கேனர்கள் வந்தபின்பு இன்று அவர்கள் அதைப் பற்றிப் பேசுவதே கிடையாது. கருவில் இருக்கும் இரண்டு மாதக் குழந்தை அழுவதும், சிரிப்பதும் வண்ணப் படங்களாக வெளிவரத் தொடங்கிவிட்டன. இரண்டு மாதக் கருவிலேயே அறுவைச் சிகிச்சைகள் நடைபெறுகின்றன.

எல்லாம் இறைவன் செயல் என்று சொல்லித் தன்னுடைய பொறுப்பைத் தட்டிக்கழித்துவிடுவது, வேறு ஒருவர் கண்டுபிடித்துத் தந்த வசதிகளைப் பயன்படுத்திக்கொள்வது என்பது தன்னை நம்பாதவர்களின் இயல்பு. எந்தவொரு புதிய கண்டுபிடிப்பையும் அதன் அறிமுக நிலையில் மதவாதிகள் ஆண்டவனுக்கு எதிரானது என்றே முத்திரை குத்தினர். ‘கடவுளின் சினமே இடியாக ஒலிக்கிறது - கடவுளின் சிறுநீர் மழையாகப் பொழிகிறது’ என்றெல்லாம் சொல்லப்பட்டது. விண்வெளி குறித்து மனிதன் மேற்கொண்ட ஆய்வுகளால், அந்தப் பொய், புரட்டு, கற்பனைகள் வலு இழந்தன. தங்களுடைய எதிர்ப்பு முனைமுறிந்து போகிறபோது மதவாதிகள் வேறு ஆயுதங்களைக் கையில் எடுத்துக் கொள்வார்கள். அவர்கள் இப்போது தொலைக்காட்சியில் மடமையைப் பரப்பி வருகிறார்கள்.

நோயைக் கண்டு அறிய ஸ்கேனர்களைப் பயன்படுத்துவது தேவை இல்லாதது, மருத்துவர் அதிகப்படியாகச் செலவை ஏற்படுத்துகிறார் என்று பலர் நினைக்கிறார்கள். அது தவறான கருத்து.

‘நோய்நாடி - நோய்முதல் நாடிஅது தணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்’

என்றார் வள்ளுவர். நோயின் தன்மையைத் தெளிவாகக் காண்பதற்கு ஸ்கேன் பரிசோதனை, குருதி, சிறுநீர் மற்றும் இதர பரிசோதனைகள் கட்டாயத் தேவை ஆகும். அதன்வழியாக நோயின் தன்மையைக் கண்டு அறிந்து, அதற்கு ஏற்ற வகையில்தான் சிறப்பான மருத்துவ உதவிகள் அளிக்க முடியும். ஆண்டுக்கு ஒருமுறை அல்லது குறிப்பிட்ட கால இடைவெளிகளில் அனைவரும் தங்கள் உடலை முழுமையாகப் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. குருதிக்கொடை அளிப்பது உடலுக்கு நல்லது. அதன் மூலம் - குருதி ஓட்டத்தில் அழுத்தம் குறையும். புதிய குருதி ஊறும். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை குருதிக்கொடை அளிக்கலாம்.

தரம் பிரிக்கப்பட்ட பால்

உலக நாடுகள் ஒன்றியப் பொதுப் பேரவையின் புத்தாயிரம் ஆண்டுச் சிறப்புக் கூட்டத்தொடரில்(2000), இந்தியாவின் சார்பில் தியாகவேங்கை வைகோ அவர்கள் பங்கு பெற்றபோது அவருடைய செயலாளராக உடன் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. நியூயார்க் நகரின் மன்ஹாட்டன் பகுதியில் நாங்கள் தங்கி இருந்த விடுதி அறையில், காஃபி மட்டும் நாமே தயாரித்துக் கொள்வதற்கு காபி மேக்கர்கள் இருந்தன. எனவே, காலையில் கடைக்குச் சென்று பால் வாங்கி வந்து காஃபி தயாரித்துக்கொள்வேன். ஒவ்வொரு நாளும் வாங்கி வந்த பாலில் வேறுபாடு இருந்தது. தினமும் நாங்கள் தங்கி இருந்த அறைக்கு வந்து எங்களது தேவைகளைக் கவனித்து விருந்தோம்பிக் கொண்டு இருந்த உசிலம்பட்டி ஜெயராஜ் அவர்களிடம், அமெரிக்காவிலேயே பாலில் தண்ணீரை அதிகமாகக் கலந்து விற்கிறார்களே? என்றேன். அவர் விளக்கம் சொன்னார். அப்போதுதான், அமெரிக்காவில் பால் ஒவ்வொருவருக்கும் ஏற்றவகையில் தனித்தனியான அளவுகளில் பால் விற்கப்படுகின்ற விவரம் தெரிந்தது. ஒரு பால் திக்காகவும் மற்றொன்றில் தண்ணீரின் அளவு கூடுதலாகவும் இருக்கிறது. சுமார் 15 வகையான பால் அங்கே விற்பனை ஆகிறது. ஒவ்வொருவரும் எந்தச் சத்துகள் அடங்கிய பாலைக் குடிக்க வேண்டும் என்று மருத்துவர்களிடம் பரிந்துரை பெற்றே பால் அருந்துகிறார்கள்.

ஆனால், நம் நாட்டில் கொழுப்புச்சத்து இல்லாதவர்களுக்கும் - கொழுப்புச்சத்து கூடுதலாக உள்ளவர்களுக்கும் அனைவருக்கும் ஒரேவிதமான பால்தான் கிடைக்கிறது. பெரியவர்கள், நடுத்தர வயதினர், குழந்தைகள் என நாம் அனைவரும் ஒரே தரத்திலான பாலை வாங்கி, அவரவர் தேவைக்கு ஏற்றவாறு தண்ணீர் கலந்து குடித்துக்கொண்டு இருக்கிறோம். அதுவே பெரிய தவறு. நம் நாட்டில் பால், குழந்தைகள், நடுத்தர வயதினர், பெரியவர்களுக்கு ஏற்ற வகையில் பலவகையாகத் தரம் பிரிக்கப்பட வேண்டும். தற்போது சென்னையில் நான்கு வகையான தரத்தில் பால் கிடைக்கிறது. அனைவரும், தாங்கள் குடிக்கின்ற பாலில் என்ன சத்துக்கள், எந்த அளவு கலந்து இருக்கின்றன என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

நம்முடைய உணவில், ஒரு நாள் கத்தரிக்காய், மறுநாள் உருளை, அடுத்த நாள் கீரை என்று சாப்பிடுகிறோம். ஆனால், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் ஒவ்வொரு நாளும், பல காய்கறிகள், பழங்களைச் சாப்பிடுகிறார்கள். ஒவ்வொரு காய்கறியிலும் ஒவ்வொரு சத்து இருக்கிறது. எனவே, ஒரு நாளில், குறைந்தது ஒரு முட்டை, கீரை, பால், பழங்கள் கட்டாயம் சாப்பிடுங்கள். காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் காபி, டீ குடிப்பதைக் கண்டிப்பாகத் தவிர்த்துவிடுங்கள். நம்முடைய கிராமத்துப் பெரியவர்களைக் கேட்டால், காலையில் பழைய தண்ணீர் சாப்பிடுவது உடலுக்கு நல்லது என்பார்கள். அவர்கள் அறிந்த சத்தான பானம் அதுதான். தற்கால உணவு வகைகளைப் பற்றி அறியாதவர்கள்தான், இப்படி அறிவுரை சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். காலையில், காய்கறி, மக்காச் சோளம் உள்ளிட்ட சூப் வகைகள் சாப்பிட வேண்டும். காலை உணவைக் கட்டாயம் 9.00 மணிக்குள் உட்கொண்டுவிட்டு, அதற்குப் பின்னர் காபி, டீ குடிக்கலாம்.

உணவைத் தீர்மானியுங்கள்

ஒவ்வொருவரும் தங்கள் உடலை அவ்வப்போது பரிசோதனை செய்து கொண்டு தேவையான, சமச்சீரான உணவை உட்கொள்ள வேண்டும். அதற்காக ஊட்டநெறித் தொழில்நுட்ப வல்லுநர்களிடம் (டயட்டீசியன்) உங்களுக்குத் தேவையான உணவுக்கான அட்டவணையைத் தயார் செய்து பெற்றுக்கொள்ள வேண்டும். அதன்படி உணவு அருந்த வேண்டும். நாம் அன்றாடம் செய்கின்ற ஒவ்வொரு வேலைக்கும் நம் உடலில் எவ்வளவு கலோரி சத்து செலவு ஆகிறது? - அன்றைக்குச் செலவழித்த கலோரி சக்தியைப் பெறுகிற அளவுக்கு எந்த உணவை உண்ண வேண்டும்? என்று திட்டமிட்டுத்தான் மேலைநாட்டவர் உண்கிறார்கள். அதுபோல் உங்கள் உணவுப்பழக்கத்தைத் திட்டமிடுங்கள்.

நான்கு இட்லி சாப்பிட்டேன், ஐந்து தோசை சாப்பிட்டேன் என்று எண்ணிச் சாப்பிடுவதை நிறுத்துங்கள். சாப்பிடுகின்ற உணவில் எத்தனை கலோரி இருக்கிறது என்பதைக் கணக்கிட்டுச் சாப்பிடுங்கள்.

இந்திய நாட்டின் கிராமங்களில் இருக்கின்ற விவசாயிகள், ஒட்டிய வயிறும், உருக்குலைந்த தோற்றத்துடனும்தான் இருக்கிறார்கள். காரணம் என்ன? அவர்கள் செய்கின்ற மிகக் கடுமையான உடல் உழைப்புக்கு ஏற்ற சத்து உள்ள உணவை அவர்கள் சாப்பிடுவது இல்லை. தகுந்த வருமானம் இல்லாததால், மூன்று வேளை வயிறார உணவு கிடைப்பது இல்லை. கிராமத்து விவசாயிகள், 40 வயதிலேயே எண்பது வயதுக்கான தோற்றத்தில் காட்சி அளிப்பார்கள். தற்போது, விவசாய வேலைகளைச் செய்வதற்கான கருவிகள் வந்துவிட்டதால், விவசாயிகள் உடல் உழைப்பைக் குறைக்க வேண்டும்.

இல்லையில்லை, கடுமையாக உடல் உழைப்புச் செய்ய வேண்டும், அப்போதுதான் உடல் ஆரோக்கியமாக இருக்கும். உடல் உழைப்பு செய்யாததால்தான், தற்போது ஏகப்பட்ட வியாதிகள் வருகின்றன என்றெல்லாம் சிலர் சொல்லுகிறார்கள். அவர்கள் யார் என்று பார்த்தால், கண்டிப்பாக கிராமத்தில் இருந்து நகரத்துக்குக் குடிபெயர்ந்து, அங்கேயே வசிப்பவர்களாகத்தான் இருப்பார்கள். அவர்களால், மீண்டும் கிராமங்களுக்குத் திரும்பி வந்து வாழ முடியுமா? இல்லை. அறிவுரை மட்டும்தான் சொல்ல முடியும்.

இயற்கை உணவு என்ற பெயரில் சிலர் சமையலை நிறுத்திவிட்டுக் காய்கறிகளைப் பச்சையாகவே சாப்பிடுவதாகச் செய்திகள் வருகின்றன. பச்சையாகக் காய்கறிகளைத் திண்பவர்கள், பச்சையாக இறைச்சியைச் சாப்பிடுவார்களா? சிலர் தண்ணீர் மட்டுமே குடித்து வாழ்வதாகவும் செய்திகள் வருகின்றன. இது ஒன்றும் சாதனை அல்ல - வேதனை. தற்கொலை முயற்சி என்றுதான் சொல்லவேண்டும். காலத்துக்கு ஏற்பத் தங்களை மாற்றிக்கொள்ள இயலாதவர்கள் - இப்படிப்பட்டவர்கள் காடுகளுக்குள் சென்று உடை எதுவும் அணியாமல், இயற்கையோடு ஒன்றி கற்கால வாழ்க்கை நடத்தலாமே?

ஒரே கால்நடை - ஒரே மனிதன்

எல்லாம் சரி - இப்போது மனித வடிவம் பெற்று இருக்கின்ற உடல் ஆயிரம் ஆண்டுகள் வாழத் தகுதியானதாக இருக்கிறதா? இல்லை. இப்போது உள்ள உடல் 150 ஆண்டுகள் வரை மட்டுமே வாழத் தகுதி உள்ளதாக இருக்கிறது. அதற்கு மேல் வாழ வேண்டுமானால் மனித உடலில் பல மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். அதன்படி, இனி நம்முடைய உடலில் பல பாகங்கள் சிறிய அளவிலான கருவிகளைக் கொண்டு இயக்கப்படும்.

எடுத்துக்காட்டாக, இருதயத் துடிப்பை சீராக இயக்குவதற்கு தற்பொழுது ‘பேஸ் மேக்கர்’ என்ற கருவி பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது, நம் உடலில் கண்களை மாற்றலாம்; காதுகளுக்கு ஒலிபெருக்கும் கருவியைப் பயன்படுத்தலாம்; பற்களை மாற்றலாம்; முக சீரமைப்பு சிகிச்சை செய்துகொள்ளலாம்; சிறுநீரகத்தை மாற்றலாம்; மூட்டுகளை மாற்றலாம்; எலும்புகளை மாற்றலாம்; எலும்புக்கு உள்ளே இருக்கின்ற மஜ்ஜையை எடுத்துவிட்டுப் புதிதாக நிரப்புகிறார்கள்; தோலை மாற்றலாம்; அமெரிக்காவில் கணையம், கல்லீரலைக்கூட மாற்றுகிறார்கள். 60 வயதானவுடன், கால் மூட்டுக்களை மாற்றிவிட்டுப் புதிதாகப் பொருத்திக் கொள்ளுங்கள். தற்போது, எல்லோரது காதுகளுக்கு வெளியே இருக்கின்ற செல்போன், கூடிய விரைவில் காதுகளிலேயே நிரந்தரமாகப் பொருத்தப்பட்டுவிடும்.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஒரு சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. கூடுதலாகப் பால் மற்றும் இறைச்சியைத் தரக்கூடிய ஒரே அளவிலான நல்ல தரமான கால்நடைகளை மட்டுமே படியாக்க முறையில் (குளோனிங்) உருவாக்குவதற்கான அனுமதியைக் கேட்டு அந்தச் சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. நாடாளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்படுமானால், 2010ஆம் ஆண்டுக்குள் அந்தச் சட்டம் நடைமுறைப் படுத்தப்படலாம். முதலில் கால்நடை. அதற்கு அடுத்த கட்டமாக, நல்ல உடல் அமைப்புக் கொண்ட ஒரு ஆணும், பெண்ணும் தேர்ந்து எடுக்கப்பட்டு அவர்களைப் போலவே ஒரே வகையான மனிதர்களும் உருவாக்கப்படலாம்.

அப்போது அடையாளம் காண்பது எப்படி? என்று கேட்கலாம். அடையாளம் காண்பதற்கான வகையில் மனித உடலில் கருவிகள் பொருத்தப்படும்.

பல மருத்துவமனைகளின் தீவிர கண்காணிப்புப் பிரிவுகளில் மருத்துவக் கருவிகளின் உதவியுடன்தான் உயிர்கள் பாதுகாக்கப்படுவதை நாம் பார்க்கிறோம். வருங்காலத்தில் அக்கருவிகள் அளவில் சிறிதாக வடிவமைக்கப்பட்டு நம்முடைய உடலிலேயே இடம்பெற்றுவிடும். ஆயுள் முடிந்துபோன செல்கள், திசுக்கள் புதுப்பிக்கப்படும். ஆங்கிலத் திரைப்படங்களில் காண்பிக்கப்படுவதைப் போல வருங்காலத்தில் மனிதர்களுடைய உடலும் ஒரே வடிவில் செயற்கையாக வடிவமைக்கப்படும். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ஒவ்வொருவரும் தங்கள் முகத்தைப் படம் எடுத்து ஒரே பக்கத்தில் வரிசையாக ஒட்டி வர வேண்டும். அப்பொழுதுதான் தங்களுடைய உருவம் எப்படி மாறி வருகிறது என்பதை அறிய முடியும்.

நமக்கு என்ன பெருமை?

இக்கட்டுரையைப் படிக்கும் யாரும் மனிதன் ஆயிரம் ஆண்டுகள் வாழப்போகிறான் என்பதை ஒப்புக்கொள்வார்கள் என்று நம்புகிறேன். இது ஆரூடம் அல்ல,- நடக்கப் போகும் உண்மை என்பதை அறிவியல் முன்னேற்றங்கள் நாளுக்கு நாள் மெய்ப்பித்து வருகின்றன. என்ன ஒன்று, நமக்குத்தான் அந்தக் கொடுப்பினை இல்லை. ஆனால், மின்சாரம், தொலைக்காட்சி, கணினி என தற்போதைய கண்டுபிடிப்பு வசதிகள் இல்லாத காலத்தை நாம் பார்த்தோம், தற்போது அவை இருக்கிற காலத்தையும் நாம் பார்க்கிறோம். அது ஒன்றுதான் நமக்குப் பெருமை. நமக்கு முந்தைய தலைமுறையினர் இவை எதையும் பார்த்தது இல்லை. நமக்குப் பிந்தைய தலைமுறை பிறக்கும்போதே அத்தனை வசதிகளும் இருக்கின்றன.

நம்முடைய தாத்தாவுக்குத் தாத்தாவின் பெயர் நமக்குத் தெரியாது. அந்தக் காலத்தில் ஒளிப்படக் கருவிகள் இல்லாததால், நம்முடைய முன்னோர்களின் உருவங்கள் பதிவு செய்யப்படவில்லை. ஆனால், ஐரோப்பியர்கள் ஓவியங்களாக வரைந்து வைத்து இருக்கிறார்கள். எனவே, எதிர்காலத் தலைமுறையினர் அறிந்துகொள்வதற்காக, நம்முடைய உருவத்தைப் படங்களாக, வீடியோ படக் காட்சிகளாகப் பதிவு செய்து வைத்துவிட்டால், அவற்றை ஆயிரம் ஆண்டுகளுக்குப் பாதுகாக்கக்கூடிய வசதிகள் இருக்கின்றன. எனவே, உங்கள் உருவத்தை, நீங்கள் பேசுவதைப் பதிவு செய்து வையுங்கள்.

இன்றைக்கு நம்முடைய அலுவலகங்களில் சிறிய அளவில் இடம்பெற்று உள்ள கணினிகள், கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் ஒரு அறையையே அடைத்துக் கொள்ளக்கூடிய அளவுக்கு மிகப்பெரிய அளவில் இருந்தது.

முதன்முதலாக கணினி வடிவமைக்கப்பட்டபோது அதற்கான மின் இணைப்புகள் எல்.ஐ.சி. கட்டடத்தின் உயரத்துக்கு இருந்தன. சிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டதற்குப் பின்னர் நாளடைவில் அதன் கன பரிமாணங்கள் குறைந்துவிட்டன. தற்போது ஜப்பான், அமெரிக்கா மற்றும் வளர்ந்த நாடுகளில் பெரும்பாலும் தொலைக்காட்சிகள் சுவர்களில்தான் மாட்டி வைக்கப்பட்டு உள்ளன. நம் வீடுகளில் இடத்தை அடைத்துக் கொண்டு இருக்கிற நிலை விரைவில் மாறிவிடும். செல்போன்களில் படம் பார்க்கக்கூடிய வசதி வந்துவிட்டது.

இவையெல்லாம் நடக்காது என்று சொல்வதற்கு இல்லை. எதையும் முடியாது என்று சொல்வது இனி முடியாது.

நலவாழ்வு வாழ.... மிதமான உணவு, நடை பழகுதல், எளிதான உடற்பயிற்சிகள், இசையை ரசித்தல் - கோபப்படாதிருத்தல், நகைச்சுவை உணர்வு, அனைத்துச் சத்துகளும் அடங்கிய உணவு. நீங்கள் 100 ஆண்டுகளும், உங்கள் தலைமுறையினர் 1000 ஆண்டுகளும் வாழலாம்.

Pin It