“கதை சொல்லி’’யை நண்பர்களும் அன்பர்களும் உள்ளங்கையில் வைத்துத் தாங்குகிறார்கள் என்று சொன்னால் அது மிகையான வார்த்தை இல்லை.

சரியாகச் சொல்வதானால் நான் பெயருக்குத்தான் இதழ் ஆசிரியர். முதல் இதழ் பெறும்போதுதான் சிரமப்பட்டேன். அதன்பிறகு நண்பர்களும், அன்பர்களும் ஓடிவந்து எனக்குச் செய்த உதவிகள் உள்ளத்தில் வைத்துப் போற்ற வேண்டியவை.

இந்த “கதை சொல்லி’’யைப் புதிய பொலிவோடு கொண்டுவரப் போகிறார்கள் என்று அறியும்போது மிக்க நிறைவாகவும் மிகுந்த மகிழ்ச்சியாகவும் இருக்கிறது எனக்கு.

இதழைப் பதிவு செய்துவிட வேண்டும் என்று தீர்மானமாகி (அன்பர் கே.எஸ்.ஆர். அவர்களின் முயற்சியால்) 20.10.2006இல் சென்னை எழும்பூர் பெருநகர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

மூன்று பெயர்கள் சொல்ல வேண்டுமாம்

கதை சொல்லி

கி.ரா.வின் கதை சொல்லி

கிராமத்தின் கதை சொல்லி

என்ற பெயர்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

எனது ஆசைப்படி கதை சொல்லி என்ற பெயரே கிடைத்தால் நன்றாக இருக்கும். பெத்த பிள்ளைக்குப் பெயர் வைக்கவும் மூன்று பெயர்கள் கேட்பார்களோ!

புதுச்சேரி கி.ரா.
7.2.2007


இணை ஆசிரியர் உரை...

கே.எஸ். இராதாகிருஷ்ணன்கி.ரா.வின் கதை சொல்லிக்கு வயது 10; எண் வழி இதழாக 1997ல் துவங்கப்பட்டு பின் கந்தாய இதழாக (4 மாதம்) மாறியது. கரிசல் காட்டில் கந்தாயப் பயிர் என்பது நான்கு மாதப் பயிராகப் பொருள்படும். இதுவரை 19 இதழ்கள் வெளிவந்துள்ளன. இது 20வது இதழ். புதுப்பொலிவுடன் மூன்று மாத இதழாக இனி வெளிவர இருக்கிறது. இதன் ஆசிரியர் கி.ரா. அவர்களும், பொறுப்பாசிரியர் கழனியூரான் அவர்களும், இணை ஆசிரியர்-பதிப்பாளர் என்ற நிலையை எனக்கு அளித்துள்ளனர் என்பதை நன்றியோடு பார்க்கின்றேன்.

34 ஆண்டுகாலம் அரசியல் பணி, 27 ஆண்டுகள் வழக்கறிஞர் பணி என்று சுற்றி இதழியல் துறையில் பணி எப்படி இருக்குமோ என்று தெரியவில்லை. பல அனுபவங்கள், படிப்பினைகள் என் மனதை பக்குவப்படுத்தியுள்ளது. முயற்சியும், சலிப்பில்லாத பணியும் ஒரு மனிதனை சோம்பலிலிருந்தும், கவலையிலிருந்தும் விடுபடச் செய்கிறது. தடைகளை மீறி நடைபோட வேண்டும். பதிவுகளும், தடங்களும் அடையாளமாக ஓரளவு இருக்கும்.

பண்டித நேருவுக்குப் பிடித்த ஆங்கிலக் கவி ராபர்ட் ஃப்ராஸ்ட் (Robert Frost) வரிகள் நினைவுக்கு வருகின்றன.

The woods are lovely, dark and deep
But I have promises to keep,
And miles to go before I sleep
And miles to go before I sleep

இக்கவித்துவம் ஒவ்வொரு மனிதனுக்கும் சலிப்பு, தோல்விகளை, தடைகளை அகற்றுகின்ற மாமருந்தாகும். இந்த இலக்கியப் பணி இவ்வகையில் ஆறுதலையும், மகிழ்ச்சியையும் தரும்.

இதற்கு ஆக்கத்தையும், ஊக்கத்தையும் அளித்து வாழ்த்துரை வழங்கியுள்ள, தமிழகத்தின் மனசாட்சியாகத் திகழும் எங்கள் பொதுச் செயலாளர் வைகோ அவர்களுக்கு மிக்க நன்றி.

கதை சொல்லி பணி சிறக்க அனைவரின் ஆதரவும் தேவை. இன்று (17.02.2007) புதுப்பொலிவான கதை சொல்லி, தமிழ்ப் படைப்புலகத்தின் பிதாமகன் த. ஜெயகாந்தன் அவர்கள் தலைமையில் மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் வெளியிட, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழுச் செயலாளர் தா. பாண்டியன் முதல் பிரதியைப் பெறுகின்றார். இதழ் ஆசிரியர் கி.ரா., மற்றும் திரைப்படக் கலைஞர் பார்த்திபன், நாஞ்சில் சம்பத், சகோதரி ஓவியா ஆகியோர் வாழ்த்துரை வழங்கவும், அடியேன் வரவேற்புரை வழங்க, இதழ் பொறுப்பாசிரியர் கழனியூரன் நன்றியுரை ஆற்றுகின்றார்.

நமது கலாச்சாரங்கள், பண்பாடுகள், மரபுகள், நெறிமுறைகளை இன்றைக்குள்ள புதுவேகத்திற்கு ஏற்ப பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொண்டுசெல்வது அனைவரின் கடமை. இவ்வாறு இப்பணியை தொடர்ந்து காக்க வேண்டியவற்றைக் காத்து, ஆங்கிலத்தில் சொல்வதைப் போல ‘சைக்ளிக்’(சுழல்) நடவடிக்கையாக அடுத்த தலைமுறைக்கு போகவேண்டும். தாவரவியலில் ‘கெர்ப் சைக்கிள்’ என்ற கோட்பாடு ஒன்று உள்ளது. அந்த கோட்பாடும் இந்த நடைமுறையை ஒத்ததாகும். இந்த இதழில் தமிழகம் நன்கு அறிந்த படைப்பாளிகளின் ஆழமான, அழுத்தமான, அர்த்தமான, அழகான மற்றும் கனமான கருத்துகள் அடங்கிய படைப்புகள் இடம்பெற்றுள்ளன.

கதை சொல்லி கடந்த காலத்தில் மணிக்கொடி, சரஸ்வதி, தீபம் போன்ற கீர்த்தி பெற்ற ஏடுகளைப் போன்றும், இன்றைக்குள்ள தரமான இலக்கிய ஏடுகளைப் போன்றும் தமிழ்கூறும் நல்லுலகத்தில் உலா வரும் என்பதில் ஐயமில்லை.

சென்னை
11.02.07


பொறுப்பாசிரியர் உரை...

கழனியூரான்


20-வது கதை சொல்லி இதழ் தாமதமாக வருவதற்குப் பொறுப்பாசிரியர் என்ற முறையில் நானே பொறுப்பேற்கிறேன். இந்த இதழில் இருந்து “கதை சொல்லி’’ காலாண்டிதழாகத் தொடர்ந்து கூடுதல் பக்கங்களுடன், புதிய பொலிவுடன் தாமதமின்றி வெளிவரும்.

கதை சொல்லி இதழின் இணை ஆசிரியராக இந்த இதழில் இருந்து வழக்கறிஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணன் அவர்கள் பொறுப்பேற்கின்றார். இதழை முறையாகப் பதிவு செய்யவும், அனுமதியைப் பெறவும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்.

19-வது இதழுக்கும் 20-வது இதழுக்கும் இடையில் நம் நெஞ்சுக்கு நெருக்கமான எழுத்தாளர்களான கே.பி. கணபதி என்ற மாறன் அவர்களும் கதை சொல்லி இதழின் ஆசிரியர் குழுவில் இருந்து கதை சொல்லி இதழின் வளர்ச்சியில் மிகுந்த அக்கறை கொண்டு செயல்பட்ட எழுத்தாளர் ஸ்ரீவில்லிபுத்தூர் சுப.கோ. நாராயணசாமி அவர்களும், சிற்றிதழ்களின் காவல் அரணாக விளங்கிய மூத்த எழுத்தாளர் வல்லிக்கண்ணன் அவர்களும் மறைந்துவிட்ட செய்தியைக் கதை சொல்லி இதழ் ஆழ்ந்த வருத்தத்தோடு பதிவு செய்கிறது.

இவ்வாண்டு சாகித்ய அகாடமி விருது பெற்ற கவிஞர் மு.மேத்தா அவர்களுக்கு கதை சொல்லி வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது. கதைசொல்லி இதழின் ஆலோசனைக் குழுவில் புதிதாக இடம்பெறும் எழுத்தாளர்களையும், கவிஞர்களையும் வாழ்த்தி வரவேற்கிறேன்.

கழுநீர்குளம்
03.02.07
Pin It