மனிதன்
வீடு திரும்பும்
மற்றொரு விலங்கு.

பெரியவைகள் அதி சோர்வுடன்
சிறியவைகள் மிகு உற்சாகத்துடன்
என்ற சிறு முரணோடு

சின்னதும்
பெரியதுமாய்
பழக்கப்பட்ட வழியில்
திரும்பிவிடுகின்றன
எண்களின் வழி
காலத்தை ஊகித்தவாறு

தொண்டை கரகரக்கையில்
கிடைக்கும் சுக்கு வெந்நீரில்
சூட்டிலும் மணத்திலும்
அம்மாவின் கைப்பக்குவம்

புத்தக மூட்டையுடன்
ஓடிவந்து
முதுகில் ஒட்டிய எல்.கே.ஜி
இறங்கிப் போய்
பூட்டிய கதவை சரிபார்க்கிறது
பாட்டியின் சொச்சமாய்.

“இறப்பென்றால்
நினைவுக் காம்பிலிருந்து உதிர்வது’’
யாரோ சொன்னதைக்
கொண்டுவந்து பார்த்தேன்.

அடுத்தடுத்த நாளில்
எப்பவும்போல்
வலம்வரத் தொடங்கினாள்
அம்மா
என் மனைவியாக குழந்தையாக.
Pin It