பல கதைகளைக் கற்று கதைப் பைத்தியமான டுல்சினியா, டெல் டொபாசோ என்று தன்னை பெயரிட்டுக் கொண்டாள். ஆனால் உண்மையில் அவள் பெயர் அல்போன்ஸா, லாரென்ஸா. தன்னை ஒரு இளவரசியாகவும், அழகியாகவும் நினைத்துக் கொண்டு கற்பனையில் மிதந்தாள். இயற்கையில் அவள் ஒரு சாதாரண விவசாயி மகளாகவும் உருவத்தில் நாற்பது வயதைக் கடந்தவளாகவும், முகத்தில் அம்மை வடுக்கள் கொண்டவளாக இருந்தாள். தனக்கு டான் க்வீசோட் டி லா மான்சா என்ற வீரப் பிரதாபங்கள் செய்யும் ஒருவனைக் கனவுக் காதலனாக தேர்ந்தெடுத்தாள். டான் க்வீசோட் வீரச் செயல்களை புரிய பல நாடுகளுக்கு சென்றிருப்பதாகவும், அழகிய பெண்களை காதலித்ததாகவும், அப்படிப்பட்ட கற்பனை வீரன் வருகின்ற திசையை நோக்கி பார்த்துக் கொண்டிருந்தாள் அல்போன்சா. இதை அறிந்த ஆலாசோ க்விஜானோ என்ற அவளை காதலித்த ஒரு வேடிக்கை மனிதன். தான்தான் டான் க்வீசோட் என சொல்லிக் கொண்டு அவளிடம் செல்லலாம் என்று நினைத்தான். பழைய கவசங்களை அணிந்து மட்டக் குதிரையின் மேலேறி டுல்சினியா தன் காதலனிடம் எதிர்பார்த்த நடவடிக்கைகளை செய்வது என்ற எண்ணத்தோடு சென்றான். இந்த முயற்சி வெற்றி அடையும் என்று நம்பி டொபாசோவுக்குச் சென்றான். ஆனால் டுல்சினியா அங்கே இறந்து போனவளாய் நினைத்துக் கொண்டு இருந்தாள். இதுதான் டான் க்வீசோட் கதையின் சாராம்சம்.

டான் க்விசாட் டி லாமான்சா என்ற நாவல் ஸ்பெயினில் 1605 இல் வெளி வந்து நானூறு ஆண்டுகள் ஆவதை ஸ்பெயின் மட்டுமல்லாமல் உலகமே கொண்டாடுகிறது. செர்வாண்மீ எழுதிய இந்நாவல் உலகத்தில் உள்ள அனைவராலும் போற்றப்பட்டு வாசிக்கப்பட்டதாகும். பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. க்விசாட்டின் பிரயாணம் இந்நாவல் 2500 கி.மீ. ஆகும். 146 ஊர்களையும், நகரங்களையும் கடக்கும் போது நடக்கின்ற சம்பவங்கள். வேடிக்கையாக, வினோதமாக, அற்புதமாக எளிதில் புரியும் தத்துவமாக நாவலில் சொல்லப்படுகின்றது.

இந்நாவலை சுமார் 60 நகரங்களை சேர்ந்த 100க்கும் மேலான எழுத்தாளர்கள் எல்லா காலத்திற்கும் ஏற்ற சாகாவரம் பெற்ற, உலகத்தரமான இலக்கிய படைப்பு என்று ஏற்றுக் கொண்டுள்ளனர். அனைத்து தரப்பினராலும் விரும்பி திரும்ப திரும்ப படிக்கக்படுகிற படைப்பாகும். நம் நாட்டில் தெனாலிராமன் கதைகள், அரேபிய இரவுகள், மதன காமராசன் கதைகளைப் போன்று, மேலை நாட்டில் சாதாரண எளிய மக்களும் விரும்பி வாசிக்கின்ற நாவலாகும். கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் உலகத்தில் நடக்கும் அநீதிகளை தன்னுடைய வீர நடவடிக்கையினால் ஒழிந்திட முற்படுகின்ற நிகழ்ச்சிதான் இந்த நாவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. டான் க்விசாட்டிடுடன் சாஞ்சோபன்சா இந்த சாகச பணிகளுக்கு துணையாக இருக்கின்றார். இந்நாவலின் படைப்பிற்கு பின்புதான் சார்லஸ் டிக்கைன்சன், மார்க் டுவின் போன்ற பல படைப்பாளிகளுக்கு இப்படைப்பு ஊற்றுக் கண்ணாக அமைந்தது மட்டுமல்லாமல் மேற்கத்திய இலக்கியப் படைப்புகளுக்கு அடிப்படை என்றும் சிலர் கூறுகின்றனர்.

இப்படைப்பின் ஆசிரியரான செர்வண்டே ஒரு ஊர் சுற்றிய போர் வீரன். இடது கை பாதிக்கப்பட்டு துருக்கியில் சிறைவாசியாக இருந்தான். அல்ஜீரியாவில் அவனுடைய உரிமைகள் பறிக்கப்பட்டு பல வேதனைகளை சந்தித்தவர். இப்படைப்பு வேடிக்கை, விநோதம், மாயாஜாலம், முட்டாள்தனம், பைத்தியக்காரத்தனம், துன்பவியல், இன்பவியல் என்று அனைத்து சுவைகளும் நிரவப்பட்ட படைப்பாகும். இரண்டு தொகுதிகளான இந்நாவல் அரபு மொழிக்கு தொடர்புடையது என்றும் விவாதங்கள் எழுந்துள்ளன. யூதர்கள் பிரச்சனை, இஸ்லாத்தின் மேலாண்மை, கிறிஸ்தவ வளர்ச்சி போன்ற பின்புலத்தில் இந்நாவலின் கருத்துகள் அமைந்துள்ளன என்று ஆராய்ச்சிகள் சொல்கின்றன. டான் க்விசாட்டின் சொந்த ஊரான லாமான்சாவில் அவர் செய்யும் சாகசங்கள் பேபெல் கோபுரத்தை கட்டும் பொழுது ஏற்படும் சர்ச்சைகள், குழப்பங்கள், இறந்தவர்களுடன் தொடர்பு கொள்வது. டான் க்விசாட் காற்றலையுடன் சண்டை போடுவது போன்ற பல்வேறு காட்சிகள், படிக்க படிக்க பரவசம். மட்டுமல்லாமல் பல வகையிலும் சிந்திக்கக்கூடிய பகுதிகளாகும்.

இப்படைப்பை கையில் எடுத்தால் முடியும் வரை மூடி வைக்க முடியாத கதையமைப்பாகும். 400 ஆண்டுகளுக்கு முன்பு வந்த நாவல்கள், இலக்கண, இலக்கிய வடிவங்கள் அறிந்திராத நேரத்தில் படைத்த இந்நாவல் இலக்கிய உலகத்தில் அடிப்படை கூறாக பன்னாட்டு அளவில் நினைக்கப்படுகின்றது.
ஒரு கட்டத்தில் டான் க்விசாட் கேஸ்டல் ஆளுநரிடம்,

“Arms are my only ornament,
My only rest the fight etc”

தன்னுடைய ஒரே ஆபரணம் ஆயுதம்தான். தனக்கு ஓய்வு என்பது சண்டை தான், மேலும் “Your bed will be the solid rock your sleep; to watch all night”

படுக்கை என்பது பாறைகள்தான். உறக்கம் என்பது இரவை பார்ப்பதாகும் என்று சொல்லும் கருத்துகள் முரணாகவும் இருக்கின்றது. வேடிக்கையாகவும் இருக்கின்றது. சிந்திக்கக்கூடியதாகவும் இருக்கின்றது. இம்மாதிரி கருத்துகள் செர்வண்டோவின், டான்க்விசாட் நாவலில் ஒவ்வொரு பக்கத்திலும் பரந்து விரிந்து வருகின்றது. கு. அழகிரிசாமி, க.நா.சு. போன்ற மூத்த தமிழ் படைப்பாளிகள் இந்நாவலைப் பற்றி பலசமயம் சிலாகித்துள்ளனர்.

ஆதாரம் :- don Quixote - Cervantes
வெளியீடு - Morden Librarian
New yark.

கழுகுமலைக் கலவரம் (1895)

முருகன் திருத்தலமும், ஆதியில் சமணர்களின் கலாசாலையும் அமைந்த கழுகுமலை, கரிசல் மண்ணான கோவில்பட்டி அருகே உள்ளது. 9 வது நூற்றாண்டில் அமைந்த பாறை குடைவு கோவில், வெட்டுவான் கோவில் என்று அழைக்கப்படுகின்ற அற்புதம், ஒரே கல்லில் அமையப் பெற்றுள்ளது.

முத்துக்கிருஷ்ணப்ப நாயக்கர் 16-ம் நூற்றாண்டில் மதுரையை ஆண்ட பொழுது இரணியல் போரின் காலத்தில் எட்டயபுரம் ஜமீன்தார் குமார எட்டப்பன் பகையாளியால் பலியானார். அந்த தியாகத்தை மதித்து இரத்த மானியமாக கழுகுமலை கிராமம் எட்டயபுரம் ஜமீனுக்கு வழங்கப்பட்டது. இதனால், கழுகுமலையில் உள்ள கழுகாசல மூர்த்தி கோவிலும் நிலங்களும் எட்டயபுரம் ஆளுமைக்கு வந்தன. 1891-ல் ஜெகவீர குமார எட்டப்ப நாயக்கர்கள் காலமான பொழுது அவருடைய புதல்வர் 12 வயதே அடைந்திருந்தார். எனவே, பட்டத்திற்கு வர இயலவில்லை. சென்னை மாகாண அரசு வெங்கட்ராயர் என்பவரை எட்டயபுரம் ஜமீன் பரிபாலனைத்திற்கு நியமித்தனர். வெங்கட்ராயர் நீதிமன்றத்தின் மூலம் கழுகுமலை தெருவில், நாடார் வகுப்பினர் எவ்வித தெரு வழியான நிகழ்ச்சிகளும் நடத்தக் கூடாது என்ற தடையைப் பெற்றார். இது நாடார் குல மக்களை வேதனைக்கு ஆழ்த்தியது. தீவிரமாக இதுகுறித்து இச்சமுதாய மக்கள் வேதனையோடு முடிவுகளைத் தேடினர். இந்நிலையில் அச்சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு பிரிவினர் காமநாயக்கன்பட்டியில் உள்ள கத்தோலிக்க தேவாயத்திற்குச் சென்று அங்கிருந்த பாமல் என்ற குருவை சந்தித்து பல குடும்பங்கள் கிறிஸ்து மார்க்கத்தில் சேர்ந்தனர்.

அதன்பின்பு, கழுகுமலைக்கு போதனைகளும் ஜெபங்களும் செய்ய பாதிரிமார்கள் வந்தனர். நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரின் பஞ்சு கிடங்கு தேவாலயமாக மாற்றப்பட்டு பிரார்த்தனைகள் நடைபெற்றன.

கழுகுமலையில் இடம் வாங்கப்பட்டு தேவாலயம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நிலையில் 1895-ல் கழுகுமலை கழுகாசல மூர்த்தி கோவில் தேர் திருவிழாவும், கிறிஸ்துவர்களுடைய குருத்தோலை விழாவும் ஒரே நாளில் நடைபெற்றது. அச்சமயம் ஏற்கனவே அடிக்கல் நாட்டப்பட்ட தேவாலயத்தில் பனை ஓலையால் கூரை கொண்டு தேவாலயம் காட்சி தந்தது. குருத்தோலை திருவிழா அன்று தேவாலயத்தில் நாடார்கள் திரண்டிருந்தனர். அந்த சமயத்தில் முருகனுடைய தேரையும் பக்தர்கள் இழுத்துக் கொண்டு வந்தனர். தேவாலயத்தின் அருகே வந்த பொழுது கூரையை அகற்ற நிர்வாக பொறுப்பிலிருந்த வெங்கட்ராயர் கிறித்துவ நாடார் சமுதாயத்திடம் கேட்டார்.

அமர்க்களமாம் சமர்க்களமாம்
அடுகளத்துப் படுகளமாம்
படுகளத்தில் மாளலாமா?
பாலன் சிறு குழந்தை

இந்த கொடிய நிகழ்ச்சிகளை கேள்விப்பட்டு பல தரப்பினரும் வந்து ஆறுதலை கூறினர். கெளசானல் என்ற சேஷ சபையைச் சார்ந்த குரு பாதிக்கப்பட்ட கிறித்துவர்களுக்கே துயர் துடைப்பு பணிகளைச் செய்தார். பாதிக்கப்பட்ட பெண்களும் குழந்தைகளும் பாளையங்கோட்டை கிறித்தவ மடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வழக்குகள் தொடரப்பட்டன. இந்நிலையில் நீதிமன்ற தீர்ப்பில் இரண்டு கத்தோலிக்கர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இவர்கள் அனைவரும் நாடார் சமுதாயத்தைச் சார்ந்தவர்கள். குற்றம் சாட்டப்பட்ட 7 இந்துக்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

பின் கெளசானல் சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்ததனால் தண்டிக்கப்பட்டோர் அனைவரும் விடுதலை பெற்றனர். இந்த கொடூர தாக்குதலுக்கு ஆளான கிறித்துவ நாடார்களுக்கு பெரிய தேவாலயம் கட்ட காலிமனை ஒதுக்கப்பட்டது. மத நல்லிணக்கம் தேவை என்ற உயர்வான கோட்பாட்டை போதிக்கும் வரலாற்று செய்தியாக கழுகுமலை கொடூரம் அமைந்துள்ளது.

பிற்காலத்தில் நாடார் சமுதாயத்தினர் சிவகாசி, திருத்தங்கல், சேந்தமரம், கமுதி, மதுரை போன்ற பகுதிகளில் பாதிக்கப்பட்டு பல்வேறு போராட்டங்களின் விளைவாக கோவில்களில் வழிபடும் உரிமை பெற்றது வரலாற்றுச் செய்தியாகும். ஆனால் நாடார்கள் கூரை தங்களுக்கு உட்பட்ட பகுதியில் உள்ளது என்றும், இன்றைக்கு குருத்தோலை திருவிழா இருப்பதால் எடுக்க முடியாது என்றனர். இந்நிலையில் வாக்குவாதங்கள் எழுந்தன. கலவரம் ஏற்பட்டு கற்களும் வீசப்பட்டன. இரு சாராருக்கும் இது சுயமரியாதைப் பிரச்சனையாக மாறிவிட்டது. நாடார்கள் தேவாலயத்திற்குள் ஓடினர். இந்துக்கள் பக்கத்தில் உள்ள வீடுகளை நோக்கி ஓடினர். வெங்கட்ராயர் கொல்லப்பட்டார். குத்தியவரை விரட்டிச் சென்ற துரைசாமியும் கிராம அதிகாரியும் கொல்லப்பட்டனர்.

நாடார் இன மக்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. குழந்தைகளின், பெண்களின் காதுகள் அறுக்கப்பட்டன. வைக்கோலும், பஞ்சு பொதிகளும் தீக்கிரையாகின. உபதேசியார் வேதமுத்து கொல்லப்பட்டார். சூசைமுத்து என்ற இளைஞனை பெட்ரோல் ஊற்றி தீயிட்டனர். அனந்தம்மாள், வேதமாணிக்கம், ராயம்மாள், ஞானமுத்து ஆகியோரும் பலியாகினர். இரு தரப்பிலும் பாதிப்புகள் அதிகமாயின. இத்துயரச் சம்பவம் வானமாமலை தொகுத்த நாட்டார் பாடலில் இடம் பெற்றுள்ளன.

உருண்ட மலை திரண்ட மலை
ஓய்யாரக் கழுகுமலை
பாசிபடர்ந்த மலை
பங்குனித் தேர் ஓடும் மலை

பங்குனி மாத்தையிலே
பதினெட்டாம் தேதியிலே
கரும்புதிங்கிற நாளையிலே
கலகம் வந்த நியாயமென்ன?

மூல முடங்கலிலே
முந்நூறு கார வீடு
கார வீட்டு முத்து நாடான்
கண்ணு வச்சிக் குத்தினானே குத்தினது முத்து நாடான்
குலவையிட்டான் சுப்பு நாடான்
மானெஜர் சாகப் போயி
மாண்டாரே சாணாரெல்லாம்

ஆதாரங்கள்: 1) கழுகுமலை தல வரலாறு
2) சங்கரபாண்டியாபுரத்தைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அமரர் சீனிவாசநாயக்கர் அவர்களின் நேர்பேச்சு
3) நா. வானமாமலை

தூக்கு மேடைக்கு வயது 75

 2006, மார்ச் 23 வீரவேங்கை மாவீரன் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு தூக்கிலிடப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவாகின்றன. இன்றைக்கு பொதுவாழ்வில் தியாகம், அற்பணிப்பு போன்றவை புறக்கணிக்கப்பட்டு புரையோடிப் போகின்ற நிலையில் பகத்சிங் அவருடைய தோழர்களின் தியாகத்தை எண்ணிப் பார்க்கின்ற நாளாகவும், பகத்சிங் மற்றும் அவருடைய தோழர்களுக்கு வீரவணக்கங்கள் தெரிவிக்கின்ற நாளாகவும் அமைகின்றது.

லாகூர் சதி வழக்கில் பகத்சிங் உட்பட 24 பேர் மீது வழக்குகள் தொடரப்பட்டு பகத்சிங் மற்றும் தோழர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது. ஏற்கனவே முதல் லாகூர் சதி வழக்கில் 135 பேர் மீது வழக்கு தொடரப்பட்டு அவ்வழக்கில் 28 பேர் தூக்கிலிடப்பட்டனர்.

“சைமன் கமிஷனே திரும்பிப் போ” என்று கோஷங்கள் நாடெங்கும் விண்முட்டியது. இந்த சைமன் கமிஷன் ஏழு உறுப்பினர்களில் ஒருவர் கூட இந்தியர் இல்லையென்று கடுமையான எதிர்ப்பை இந்தியா காட்டியது. பஞ்சாப் சிங்கம் லாலாலஜபதிராய் 30.10.28ல் லாகூரில் நடந்த கண்டனக் கூட்டத்தில் லஜபதிராயை ஆங்கில அரசின் காவல்துறையினர் கடுமையாக அடித்து மிதித்தனர். அப்பொழுது, லாலாலஜபதிராய் “என்மீது விழுந்த ஒவ்வொரு அடியும் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் மீது அடிக்கப்பட்ட அடியாகும்” என்று வீர கர்ஜனை செய்தார். அதன் காரணமாகவே லாலா லஜபதிராய் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்தார். அதற்குப் பிறகு ஜாலியன் வாலாபாக் போன்ற கொடூர சம்பவங்கள் இந்திய இளைஞர்களின் மனதில் ரணத்தையும், வெறியையும் உண்டாக்கியது.

லாலாலஜபதிராயை தாக்கிய ஜே.பி.சாண்டார்ஸ் என்ற போலீஸ் துணை கண்காணிப்பாளரை டிசம்பர் 17 ஆம் தேதி பகத்சிங், ராஜகுரு, ஆசாத் மற்றும் அவருடைய தோழர்கள் காவல் நிலையத்தின் அருகேயே கழுத்தைச் சுற்றி வீழ்த்தி ஐந்து குண்டுகளை சாண்டர்ஸின் நெத்தியில் இறக்கினர். இவ்வழக்கு குறித்து டெல்லி மாவட்ட கூடுதல் மாஜிஸ்ட்ரேட்டிடம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவர்கள் செய்கைகள் பிரச்சார நோக்கம் உள்ளதாக இருக்கிறது. குற்றங்களை தடுக்கும் நோக்கில் கூட இவர்கள் தண்டிக்கப்படத்தக்கவர்களே. இவர்கள் இளைஞர்கள். அதன் காரணமாக மட்டும் இவர்களுக்கான தண்டனையை குறைத்து விட முடியாது. பகத்சிங். தத் இருவரையுமே ஆயுட்கால நாடு கடத்தல் செய்யும்படி உத்தரவிடுகிறேன் என நீதிபதி தீர்ப்பை வாசித்தார்.

ஆங்கில அரசாங்கம் இந்தியத் தொழிலாளர்களுக்கு எதிராக அறிவித்த தொழில் தகராறு சட்டம், பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டம் போன்ற மக்கள் விரோதச் சட்டங்களுக்கு எதிராக உரிமைக்குரல் எழுப்பப் பட்டன. பகத்சிங்கும், பதகேஷ்வர்த்தும் வெடிகுண்டுகளை நாடாளு மன்றத்தில் வீசினார்கள். வீசியவர்கள் தப்பாமல் பிரிட்டிஷ் போலீசிடம் சரணும் அடைந்தனர்.

நாடாளுமன்றத்தை எழுப்பிய வெடிகுண்டு மற்றும் பகத்சிங்கின் புரட்சிகர நடவடிக்கைகள் மக்களைத் தட்டி எழுப்பின. திலகர், காந்தி, சாவர்க்கர் ஆகியோரினுடைய விசாரணையினைப் போன்று பகத்சிங் விசாரணையும் முக்கியத்துவம் பெற்றது. சர்வ பலம் பெற்ற ஆங்கில அரசாங்கத்தின் அராஜக போக்கால் பகத்சிங் போன்ற புரட்சியாளர்கள் ஒருபொழுதும் பாதிப்போ வேதனையோ அடையவில்லை.

பகத்சிங் மற்றும் அவருடைய தோழர்கள் லாகூர் சதிவழக்கில் சிறையில் இருந்தபொழுது தங்களுக்கு ஏற்பட்டுள்ள துயரங்கள் எதையும் மனதில் கொள்ளாமல் ஆங்கில அரசாங்கத்தை கேலி செய்து கூத்தாக்கி, புரட்சிகரமான பாடல்களையும் பாடி கோஷங்களையும் எழுப்பி வேடிக்கையாக பொழுதைப் போக்கினர். மற்ற வழக்கில் உள்ள கைதிகள் இவர்களுடைய கூத்துக்களைப் பார்த்து இவர்களுடன் சேர்ந்து கவலையை மறந்து சிறையில் இருந்த செய்திகளும் உண்டு.

லாகூர் சதி வழக்கின் விசாரணை லாகூரிலுள்ள பூஞ்ச் இல்லத்தில் மே ஐந்தாம் தேதி ஆரம்பமானது. நீதிபதி கோல்ட்ஸட்ரீம் விசாரணைக் குழு தலைவராகவும், நீதிபதிகள் அக்ஹா ஹெய்டர், ஹில்டன் உறுப்பினராகவும் இருந்தனர். அரசு தரப்பில் கார்டன் நோட்,காலண்டர் அலிகான், கோபால் லால், பக்சிதினாந்த் ஆகியோர் வாதம்புரிந்தனர். காலை 11 மணிக்கு டிரிபூனல் விசாரணையைத் துவக்கியது. புரட்சியாளர்கள் 10.02 மணிக்கு நுழைந்தனர். புரட்சிகர கோஷங்களை முழக்கினர். எட்டு நிமிடங்களுக்கு புரட்சிகர கீதங்களைப் பாடினர்.

முன் வழக்கில் செய்ததைப் போலவே பகத்சிங் வழக்கறிஞரை அமர்த்த மறுத்தார். விசாரணை ஒரு நாடகம் என்றும், நீதிமன்றம் போன்ற நிறுவனங்களின் மீது தமக்கு நம்பிக்கையில்லை என்றும் வற்புறுத்திக் கூறினார். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வலியுறுத்தலால் குறுக்கு விசாரணை செய்வதற்கு தமக்கு ஆலோசனை மட்டும் வழங்க துணி சந்தத்தை அனுமதித்தார். வழக்கறிஞர் சாட்சிகளை விசாரிக்கவோ நீதிமன்றத்தின் முன் பேசவோ தேவையில்லை என்றார்.

லாகூர் சதி வழக்கின் விசாரணை லாகூரில் உள்ள பூஞ்ச் இல்லத்தில் நடைபெற்றது. தன் மீது சாற்றப்பட்ட குற்றங்களை பகத்சிங் மறுக்கவில்லை. விசாரணையில் தன் கருத்துக்களை பிரச்சார மேடையாகவே வழக்கு மன்றத்தில் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தினார். நாட்டின் விடுதலையை விட தன்னுடைய சொந்த விடுதலை முக்கியமல்ல என்று வாதிட்டார்.

எதிர்பார்த்தபடியே நீதி மன்றம் பகத்சிங்கையும் அவரின் தோழர்களையும் குற்றவாளியென்றே முடிவு செய்தது. பகத்சிங்க்கு எதிரான ஆதாரங்கள் மூன்று வகையில் இருந்தன.

1 கொலை செய்ததைப் பார்த்த கண்கூடான சாட்சிகள், பகத்சிங்கை அடையாளம் காட்டியது.
2 ஜெய்கோபால், ஹான்ஸ்ராஜ், வோரா ஆகிய இரு அப்ரூவர்கள்
3 “ஸ்காட் இறந்து விட்டான் என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டரை பகத்சிங் கைப்பட எழுதினார் என்பதை நிரூபிக்கும் கையெழுத்து நிபுணர்களின் கருத்து.

இ.பி.கோ. பிரிவுகள் 121, 302 வெடிமருந்து சட்டப்பிரிவுகளின்படி பகத்சிங் தண்டிக்கப்பட்டார். அக்டோபர் 7-ல் தீர்ப்பு வாசிக்கப்பட்டது.

மே-1930 செப்டம்பர் 20 மரண தண்டனை என்று அறிவிக்கப்பட்டது அதை வீர வாஞ்சையோடு பகத்சிங் ஏற்றுக் கொண்டார். இதை அறிந்த பகத்சிங் தந்தை, கிவுன்சிங் ஆங்கில அரசிடம் கருணை மனு செய்தார். இதை அறிந்ததும் பகத்சிங் வேதனைப்பட்டதும் இல்லாமல் தனக்குக் கருணை காட்ட வேண்டிய அவசியம் இல்லை என்று தெளிவாகவும், வன்மையாகவும் தன் தந்தையாருக்கு தெரியப்படுத்தினார். தொடர்ந்து நடந்த வழக்கு போரில் இறுதிக் கட்டத்தில் பகத்சிங் இராஜசிங், சுகதேவ் தூக்குக்கயிற்றை முத்தமிட்டு தூக்குமேடை ஏறினர்.

24 வயது வாழ வேண்டிய வயது, வசந்தத்தை நாட வேண்டிய வயது, தூக்குமேடையில் நின்றபொழுது கைகளை கட்டி விட்டு, கறுப்பு துணியால் கண்களை மூடப்போகும் போது, “என் கண்களை மூடாதீர்கள், இது என் இந்தியா, இது என் நாடு என் நாட்டை பார்த்தபடியே மடிகிறேன்” என்றார்.

லாகூர் சிறையில் மார்ச் 23, 1931ம் ஆண்டு தூக்கு தண்டனை அறிவிப்பு செய்யப்பட்டது. அதே தினத்தில் முன்னிரவு 7.28க்கு தூக்கு தண்டனை முடிந்தேறியது. ஏன் எனில், அடுத்த நாள், காலை மக்கள் பெருங்கடலாக லாகூர் சிறையில் திரண்டதும் காவல் துறையினர் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் குறிப்பிட்ட தேதிக்கு முந்தைய நாள் இரவிலே பகத்சிங், இராஜகுரு, சுகதேவ் மூவரையும் தூக்கிலிட்டனர். இறுதிக் கட்டத்தில் மகிழ்ச்சியாக தாங்கள் பிறந்த மண்ணிற்கு செய்கின்ற தியாகமாக தூக்குக் கயிறுக்கு இரையாகினர். இந்தியர் என்ற அடையாளம் மட்டும் மனதில் கொண்டு எந்தவிதமான மதமுத்திரைகளுக்கு இடம் கொடாமல் இருக்கவேண்டுமென்று மூவரும் விரும்பினர். ஆனால், இறுதிச் சடங்குகளை சட்லஜ் நதிக்கரையில் நடந்ததாக ஆங்கில அரசாங்கம் அறிவிப்பு செய்தது.

லட்சிய வேட்கை, பிறந்த மண்ணின் பற்று என்ற இந்த வீதியாகிகள் பாடங்கள் இன்றைக்குள்ள பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பாலபாடமாக அமைகின்றது. இன்றைக்குள்ள பொதுவாழ்வில் தியாகத்திற்கும் அர்ப்பணிப்புக்கும் அவசியமே இல்லாமல் போலித்தனமான அரசியல் போக்குகள் தனிமனித துதிகள், அரசியல் கட்சிகளின் தலைமைகளின் விருப்பு வெறுப்புக்கு ஏற்றவாறு இருக்கின்ற ஒரு சில லட்சியவாதிகளும் லட்சியப் பயணத்தை மேற்கொள்ள முடியாமல் தவிர்க்கின்ற நிலை இருக்கின்றது. தகுதியே தடையாகவும் இருக்கின்ற இவ்வேளையில் பகத்சிங் மற்றும் அவருடைய தோழருடைய தியாகங்கள் லட்சிய வேங்கைகளுக்கு இன்றைக்கும் ஆறுதல் அளிக்கின்ற செய்திகளாக உள்ளன. இந்திய வரலாற்றில் பகத்சிங்கின் தியாகங்கள் நிலைத்திருக்கும்வரை ஓரளவாவது பொதுவாழ்வில் ஆரோக்கியம் இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இன்றைக்கு உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் என்ற நிலையில் இந்தியாவின் இறையாண்மையே கேள்விக்குறி ஆகிவிடுமோ என்ற நிலையில் பகத்சிங்கின் தியாகம் நீருபூத்த நெருப்பாக மனிதநேய ஆர்வலர்கள் மத்தியில் உள்ளன.

Pin It