அனைவருக்கும் வணக்கம்.

கதைசொல்லி எண்வழிச் சிற்றிதழின் ஆசிரியர் திரு. கி. ராஜநாராயணன் அவர்கள் விருப்பப்படி இந்த இதழில் இருந்து நான் கதை சொல்லி கந்தாய இதழின் பொறுப்பாசிரியராகிறேன்.


சிற்றிதழ் நடத்துவதின் சிரமம் அனைவரும் அறிந்ததுதான். கி.ரா. அவர்களின் வேண்டுகோளைத் தட்ட முடியாமல் இச்சுமையை நான் ஏற்றுக் கொண்டிருக்கிறேன். “என் இலக்கியத் திறன், பொருளாதார நிலை, உடல் வலிமை, உள்ளத்து உறுதியாவும் உள்ளவரை “கதைசொல்லி” என்ற இந்த இலக்கிய தீபத்தை அணையாமல் காப்பேன்” என்று உறுதி கூறுகிறேன்.

புதிது புதிதாக சிற்றிதழ்கள் பூத்து வருவதும், சிற்சில இதழ்கள் கால வெள்ளத்தை எதிர்த்து நின்று அலை வீசுவதும், சில இதழ்கள் காணாமல் போவதுமான இயங்கியல் தன்மையை “கதை சொல்லி” அவதானிக்காமல் இல்லை. எந்த விதமான நெருக்கடிகளுக்கும் ‘கழுத்துக்’ கொடுக்காத கி.ரா. கதை சொல்லி என்ற சிற்றிதழை ஆரம்பித்த போது நானே மிகவும் ஆச்சரியப்பட்டேன். 16இதழ்கள் இதுவரை வெளிவந்துள்ளன. இது 17வது இதழ் ஆகும்.

இலக்கிய உலகம் புதுமைப்பித்தன் நூற்றாண்டைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில், திருநெல்வேலிச் சீமையில் இருந்து இந்த இதழ் சிறகு விரிப்பது பொருத்தமாக உள்ளது என்று நான் கருதுகிறேன்.

சில சிற்றிதழ்களில் மட்டும் கதை சொல்லிக்கு நான் பொறுப்பாசிரியராகிறேன் என்று அறிவிப்பு வெளியானதும். சரஞ்சரமாக, என் முகவரிக்குக் கடிதங்கள் வந்து குவிந்து கொண்டிருக்கின்றன. அக் கடிதங்களில் சில எனக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றன, சில “பயப்படாதே சந்தா அனுப்புகிறேன்” என்று சந்தோசச் செய்திகளைக் கூறுகின்றன. கதை சொல்லிக்கு நான் எதிர்பார்க்கும் சில படைப்புகளும் வந்துள்ளன.

திரு. தி.க.சி. அவர்களின் அருகில் நான் இருப்பது எனக்குப் பெரிய பலம். தி.க.சி அவர்களின் நீண்ட நெடிய பத்திரிக்கைத் துறை அனுபவமும் இலக்கிய ஈடுபாடும் கதை சொல்லிக்கு மேலும் வலுச் சேர்க்கும் என்று மனப்பூர்வமாக நம்புகிறேன். கதைசொல்லிக்கு ஆலோசனைகளை வழங்க திரு. தி.க.சி. அவர்களும் சம்மதித்துள்ளார்கள். தென்காசி தீப. நடராஜன் அவர்கள் ரசிகமணி டி.கே.சி அவர்களின் பேரன் கி.ரா. அவர்களின் நெருங்கிய நண்பர்; ரசனை மிக்க அன்பர் திரு. தீப. நடராஜன் அவர்களும் கதை சொல்லிக்கு கைகொடுக்க முன் வந்துள்ளார்கள். திரு. தீப.நடராஜன் அவர்களும் கதைசொல்லியின் ஆசிரியர் குழுவில் இடம் பெறுகிறார்கள்.

திருநெல்வேலி சிந்துபூந்துறையில் வசித்து வரும் என் இனிய நண்பர் கிருஷி அவர்களும் கதை சொல்லியின், ஆசிரியர்க் குழுவில் இடம் பெறுகிறார்கள். திருவில்லிபுத்தூருக்கு அருகிலுள்ள நாச்சியார்பட்டியைச் சேர்ந்த கி.ராவின் நண்பர் திரு. சுப.கோ. நாராயணசாமி அவர்கள் என்னோடு தோள் கொடுக்க முன்வந்தது மகிழ்ச்சியான செய்தியாகும். ஆசிரியர் குழுவில் அவர்களும் இடம் பெறுகிறார்கள்.

“சிறுகக் கட்டி பெருக வாழ்” என்பது பழமொழி. கதை சொல்லி, பெருகி வாழ, உங்களால் இயன்ற உதவிகளைச் செய்யுங்கள். ஆண்டுச் சந்தா தொகையை வசூலித்து விட்டு ஒன்றிரண்டு இதழோடு கடையை மூடிவிடும் காரியத்தைக் கதை சொல்லி செய்யாது என்று உறுதி கூறுகிறேன்.

கதைசொல்லி இனி “கந்தாய இதழாக” (நான்கு மாதத்திற்கு ஒரு இதழாக) தொடர்ந்து காலம் தவறாமல் வெளிவரும். நாட்டுப்புறவியல் சார்ந்த படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுத்து கதை சொல்லி படைப்புகளை வெளியிடும் நாட்டுப்புறவியல் சார்ந்த படைப்புகள், பூர்த்தியாகக் கிடைக்கும் வரை, சிறுகதைகளையும், கட்டுரைகளையும் கதை சொல்லி வெளியிடும் நாளாவட்டத்தில், நாட்டுப் புறவியலுக்கான இதழாக, கதை சொல்லியை மாற்ற என்னால் ஆன எல்லா முயற்சிகளையும் செய்வேன். ‘தமிழில் வெளிவரும் நாட்டுப் புறவியலுக்கான இதழ் கதை சொல்லி’ என்ற பெயரெடுப்பதே எனது கனவாகும்.

கி.ராவின் எண்ணமும், ஆசையும் அதுவே. ஆய்வாளர்கள், படைப்பாளர்கள், வாசகர்கள், நாட்டுப் புறவியல் சார்ந்த சிறு படைப்பை அனுப்பினாலும், கதை சொல்லி அதை பரிசீலனை செய்யும், கதை சொல்லியில் பிரசுரிக்கும் தரத்தில் இருந்தால் அதை கதைசொல்லி வெளியிடும், பழமொழிகள், விடுகதைகள், வழக்குச் சொற்கள், சொற்றொடர்கள், நாட்டுப்புற பாடல்கள், கதைப் பாடல்கள், அனுபவச் செய்திகள், நாட்டார் கதைகள் என்று எல்லாவிதமான நாட்டுப்புறவியல் சார்ந்த தரவுகளையும் கதை சொல்லி வரவேற்கிறது.

கதைசொல்லி தனி இதழின் விலை ரூ 20/ ஆண்டுச்சந்தா ரூ 60/. ஆயுள் சந்தா கிடையாது. கதை சொல்லி, விளம்பரங்களைப் பெற்றுத் தரும் முகவர்களுக்கும், இதழ்களை விற்றுத்தரும் முகவர்களுக்கும் வாடிக்கையான கழிவுத் தொகை வழங்கும்.

நீங்கள், “கதை சொல்லி’ என்ற இத்தகைய சிற்றிதழும் தமிழ் இலக்கிய உலகுக்குத் தேவைதான் என்று நன்கு உணர்வீர்கள் நீங்கள். கதை சொல்லியிடம் அன்பு காட்டுங்கள். கதைசொல்லிக்கு ஆதரவுக் கரம் நீட்டுங்கள். மனமார்ந்த நன்றியுடன்,

அன்பன்
-கழனியூரன்

ஒப்படைப்பு

அன்பார்ந்த கழனியூரன் அவர்களுக்கு நலம். “கதை சொல்லி” இதழ் சந்தாதாரர்களுக்கு மட்டுமே. இனாம்படிகள் அனுப்புவதில்லையாருக்கும். முகவர் (‘ஏஜெண்ட்’)களுக்கு அனுப்புவதில்லை; ஏனெனில் சிறுபத்திரிகைகளின், எமன் இவர்களே என்பதால் நட்டம் ஏற்படாமல் இருக்கவே விலை அதிகம் வைத்தோம். 25 ரூபாய் என்பது பெரிய தொகையே அல்ல என்பது எங்கள் அனுபவ உண்மை. உங்களுக்குத் தயக்கம் ஏற்பட்டால் 20 என்று குறைத்து வைத்துக் கொள்ளுங்கள். எனக்கு ஆட்சேபமில்லை சந்தா இதழாகக் கொண்டு வந்தோம் ஒரு வருசம். பிறகுதான் அதுவும் வேண்டாம். “எண்வழிச் சிற்றிதழ்” என்பதே சரி என்று தீர்மானித்தோம்.

இந்த எண் வழி என்பதில் சில சங்கடங்கள் அரசு நூலகங்ளில் “எண் வழி” என்ற பட்டியல் அவர்களிடம் கிடையாது; கால், அரை, ஆண்டுகள், மாதம் மாதமிரு முறை இப்படித்தான் அவர்கள் கொண்டிருப்பது. “கந்தாயம்’ என்பது அவர்கள் கேள்விப் பட்டிருக்கவே மாட்டார்கள். அப்புறம் இதழ் என்றால், பதிவு, பதிவுஎண் இதுகள்ளாம் வேண்டும். அதில் பல சங்கடங்கள் கையூட்டுகள், காத்திருத்தல் போன்ற அலப்பரைகள் உண்டு. “நன்கொடை இதழ்” என்றால் கேள்வி இருக்காது. இதுகள் எல்லாத்தையும் விட புத்தக இதழ் என்பதுதான் நமக்குச் சரி. வை.கோவிந்தன் “சக்தி” இதழை புத்தகங்களாக (அவரது கடைசி காலத்தில்) கொண்டுவந்த விபரத்தை தி.க.சி அவர்களிடம் விசாரித்துக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

“எண் வழிப் புத்தக இதழ்” என்று கொண்டு வரலாம். பொதுப்பெயர் “கதை சொல்லி” யாக ஒரு மூலையில் தொடர்ந்து குறிப்பிட்டுக் கொண்டே., வரும் ஒவ்வொரு இதழ்ப் புத்தகத்துக்கும் ஒரு தலைப்புப் பெயர் துணிப்பாகத் தெரியும் படி இருக்க வேண்டும். எண்வழிக் கதை சொல்லி இப்போது எண்வழிப் புத்தக இதழாக அல்லது இதழ்ப் புத்தகமாக வருகிறது என்றிருக்க வேண்டும். ஆசிரியர் வழக்கம் போல் கி.ரா. உதவி ஆசிரியர், பேரா. பஞ்சாங்கம் அவர்கள் பொறுப்பாசிரியர் கழனியூரன் அவர்கள். இனி கதை சொல்லியின் சகல பொறுப்புகளும் கழனியூரன் அவர்களையே சேரும்; சேருகிறது.

17 ஆவது இதழ் தயாரிப்புக்கு மட்டும் நான் எனது கைப்பணம் ரூ. ஏழாயிரம் மட்டும் சந்தாத் தொகைகளையும் சேர்த்து அனுப்பித் தருவேன். அதிலிருந்து தொடர்ந்து வண்டியை நீங்கள்தான் ஓட்ட வேண்டும்; நீங்கதான் குதிரை நீங்கள்தான் ராவுத்தர்! (“அவரே குதிரை அவரே ராவுத்தர்” என்ற சொலவடையை கேட்டிருப்பீர்கள்)

சந்தாதார்களின் பட்டியல் இத்துடன் அனுப்பியிருக்கிறேன். இதில் சந்தா பாக்கி அதாவது சந்தா முடிந்த சந்தாதார்களும் இருக்கிறார்கள். தட்டுந்தடவலாக கண்டும் காணாமலும் இருக்கும். பத்திரிகைகளுக்கு மாற்று இதழ்களாக ஒரு 25லிருந்து முப்பது வரை அனுப்ப வேண்டியதிருக்கும். எனக்கு ஒரு 25 படிகள் கட்டாயம் அனுப்ப வேண்டும்; ஆசிரியர் மூலவர் என்ற பாவத்திற்காக! (நான் அனுப்பும் படைப்புகளுக்கு நீங்கள் பணம் தர வேண்டியதில்லை)

படிகள் அச்சடிக்கதுக்கு முன்னால் பஞ்சுவிடம் விவரம் கேட்டு அதன்படி எண்ணிக்கையை அச்சிடுங்கள்.

-கி.ரா

Pin It