இந்தியாவில் பிராமணர்கள்
எல்லாம்
அழிந்து போனது போல்

‘சாதி’ என்ற
வார்த்தை
சமாதிக்குள்ளானது போல்

பெண் சமத்துவம்
உலகம் முழுவதும்
பரவியது போல்

இலங்கையின்
ஆட்சி மொழி
தொல் தமிழ்
ஆனது போல்

பன்னாட்டுக்
கம்பெனிகளுக்குப்
பைத்தியம் பிடித்ததைப் போல்

பஞ்சமி நிலங்கள்
உரியவர்களுக்கே
திரும்பக் கிடைத்ததைப் போல்

இருக்கின்ற எல்லா
இராகங்களுக்கும்
இளையராசாவின்
பெயர் வைத்ததைப் போல்

இசுலாமியர்களும்
இந்தியர்களே, வரலாற்றில்
இன்றியமையாதவர்களே
எனப் பிஞ்சு மனத்தில்
எல்லாம் பதிய
வைத்ததைப் போல்

பன்னாட்டு அழகுச்
சாதனப் பொருள்கள்
எல்லாம் அழிந்து போனது போல்

பறை ஆட்டமும்
பழங்குடியினப் பாட்டும்
தேசிய கீதங்கள்
ஆக்கப்பட்டதைப் போல்

விவசாயிகள் உலகின்
கடவுளர்கள் ஆக்கப்பட்டதைப்போல்

காவல்துறையில்
மனிதர்கள்
சேர்க்கப்பட்டதைப் போல்

கண்டிப்பாக
கக்கூசை, அவரவரே
பினாயிலிட்டுக்
கழுவுவதைப் போல்

குறிப்பாக
அமெரிக்காவில், கறுப்பினத்
தொல்குடிகளிடம், ஆட்சிபொறுப்பைத்
தந்ததுபோல்

எத்தியோப்பியா
சோமாலியாவில்,
3 வேளை உணவு
எல்லோருக்கும் கிடைத்ததைப் போல்

இஸ்ரேலும் _ பாலஸ்தீனும்
இணைபிரியா
நண்பர்கள் ஆனது போல்

மனது முழுக்க
நினைவு மணக்க
சிறகு முளைத்த மகிழ்ச்சி!

என் அம்மாவிடம்
தொலைபேசியில்
உரையாடியபோது.....
(ஒரு வாரத்திற்குப் பிறகு)
Pin It