ஒவ்வொரு சமூக அமைப்பும் தன்னுடைய இலக்கியங்களோடு தன்னைக் கட்டமைத்துக் கொள்கிறது என்ற முன் மொழிவோடு தனது ஏற்புரையைத் தொடங்கினார் இலங்கையைச் சேர்ந்த மூத்த தமிழ்ப் பேராசிரியர் கா.சிவத்தம்பி.

சென்னைப் பல்கலைக்கழக இலக்கியத் துறையும் டொரண்டோ பல்கலைக்கழக தெற்காசிய ஆய்வு மையமும் இணைந்து டிசம்பர் 12 முதல் 14 வரை கார்த்திகேசு சிவத்தம்பியின் வகிபாகமும் திசைவழிகளும் என்ற தலைப்பில் மூன்று நாள் நடத்திய கருத்தரங்கின் நிறைவில் தான் சிவத்தம்பி இவ்வாறு குறிப்பிட்டார். இலக்கியம் காலத்தின் கண்ணாடி மட்டுமல்ல; சமூகத்தின் கண்ணாடியுமாகும் என்பது பன்முக ஆய்வுகளில் தெரியவரும்.

1960களில் தொடங்கி அரை நூற்றாண்டு காலத்தை நெருங்கும் நிலையில் தமிழ் இலக்கியத் தளத்தை அதன் ஆய்வுத் தளத்தை நுணுகிய பார்வையின் பக்கம் திருப்பிய பெருமை கா. சிவத்தம்பிக்கு உண்டு. அவரது நுண்மாண் நுழை புலம் வழமையான உணர்ச்சிபூர்வ முறையை மாற்றி தமிழர்களின் சமூக வாழ்க்கையோடு உரசி ஒப்பிட்டு அறிவுபூர்வ ஆய்வு முறைக்கு இட்டுச் சென்றது. மிகச் சிறந்த வழிகாட்டி ஆய்வாளர்களில் ஒருவரான அவர், இந்தக் கருத்தரங்கில் பேசும் போது, தனது பள்ளி, கல்லூரி வாழ்க்கையையும் குடும்பத்தினர் பற்றிய நினைவுகளையும் உணர்ச்சி ததும்ப முன்வைத்தார். இலங்கைப் பேராசிரியர் கைலாசபதி, தமிழகத்தின் இலக்கிய ஆய்வு முன்னோடிகளான தொ.மு.சி. ரகுநாதன், வி.ஐ. சுப்பிரமணியம் ஆகியோருடன் தமக்கிருந்த தொடர்பையும் தமது ஆய்வுப் பணியில் அவர்களின் பங்களிப்பையும் மறவாமல் குறிப்பிட்டார்.

இன்றைய ஆய்வு நிலைகளோடு தன்னை ஒப்பிட்டுப் பார்க்கும் போது, ஒரு காலக்கட்டத்தோடு தாம் தேங்கிப்போனதாகவும் இன்றைய ஆய்வுகள் மார்க்சீய அடிப்படையில் வேறொரு பரிமாணத்திற்கு சென்றுள்ளது என்றும் தமக்கேயுரிய மேதைமையோடும் எதார்த்தத்தோடும் அவர் பேசினார்.

`உலகத்தின் புதிய சிந்தனைகளைப் பேராசிரியர் சிவத்தம்பி உள்வாங்கவில்லை’ என பேராசிரியர் அ. மார்க்ஸ் பேசியதற்கு பதில் போல் இது அமைந்திருந்தது.

இந்தக் கருத்தரங்கில் புதிய சிந்தனைகள் என்ற தலைப்பில் உரையாற்றிய அ.மார்க்ஸ் முன்வைத்த வேறு சில கருத்துக்களும் சிந்திக்க வேண்டியவையாக இருந்தன. ‘ரஷ்ய, சீன முரண்பாடுகளை வெறும் அரசியல் முரண்பாடாகக் கண்டது பேராசிரியர் சிவத்தம்பியின் தவறான முடிவாகும். ஏனெனில் அதனை சோஷலிசக் கட்டுமானங்களில் உள்ளப் பிரச்சனையாகக் கண்டறியவில்லை’ என்று அவர் சொன்னார்.

‘தமிழ்நாட்டில் உள்ள புலமையாளர்கள் உள்ளூர் அளவிலேயே பேசப்பட்டனர். அதே நேரத்தில் தேசிய சர்வதேசிய அளவில் பேசக்கூடிய பலர்

இலங்கையைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். அவர்களிலும் பேராசிரியர் சிவத்தம்பி முக்கியமானவர். அவர் மேற்கத்திய நவீன பார்வையோடு, நவீன தன்மையோடு அறிவியல் ரீதியான கோட்பாட்டு முறையைத் தமிழ் ஆராய்ச்சி உலகத்துக்கு அளித்தார். அதற்கு முக்கியமான பின்புலம் மார்க்சிய முறைமையே ஆகும்’ என்று திருவனந்தபுரத்தில் உள்ள கேரளப் பல்கலைக் கழகப் பேராசிரியர் கி. நாச்சிமுத்து கூறியதும்;

‘தமிழ் ஆராய்ச்சிக்கு என்று ஒரு விஞ்ஞானப் பூர்வ அணுகுமுறையை அறிமுகப்படுத்தியதில் கைலாசபதியும், சிவத்தம்பியும் முக்கியமானவர்கள். எல்லாவற்றிலும் வரலாற்றுப் பார்வையை அடிப்படையாகக் கொள்கிறார் சிவத்தம்பி. இயக்கவியல் வரலாற்றுப் பொருள் முதல்வாதத்தின் அடிப்படையில் இதனைப் பரீட்சித்துப் பார்க்கிறார். அதற்கான தரவுகளை எவ்வளவு தூரம் பெற முடியுமோ பெறுகிறார்’ என தமிழவன் கூறியதும்;

வரலாற்று ரீதியில் திணைக் கோட்பாடுகளை அணுகிய விதம், மன்னர்கள் பற்றிய தெளிவான நிலைப்பாடுகள் என பேராசிரியர் சிவத்தம்பியின் பல்வேறு நூல்களில் உள்ள வரலாற்றுப் புரிதல் பற்றி மே. து. ராசுகுமார் கூறியதும், உண்மைகள்; வெறும் புகழ்ச்சியல்ல.

“முல்லைத் திணையில் இருந்த அகத்தை வைத்துக்கொண்டு பெண்ணியம் சார்ந்த சில கேள்விகளைக் கேட்க முடியும். சங்க காலம் பொற்காலம் என்றால் பெண்ணிய அறம் என்னவாக இருந்தது? பெண்ணின் நடத்தை என்பது கற்பு என்பதோடு மீட்டுருவாக்கம் செய்யப்படுகிறது. கடந்த கால, நிகழ்காலப் பகுப்போடு விமர்சனத்திற்கு உட்படாமல் மரபாகிறது” என்ற வ. கீதாவின் கருத்துக்களும்,

“தமிழ்ப் பண்பாடு என்பது சமய சமரசம், எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளுதல் என்பதாக இருக்கிறது. தமிழ் ஆய்வு முறையில், மானுடவியலாரைப் போல் புறவயமாக ஆய்வு செய்யப்பட வேண்டும். சமூகம், மொழி, பண்பாடு ஆகியவை இயங்குதல் தன்மையுடையது. சமூக, அரசியல் பொருளாதார மாற்றத்திற்கு ஏற்ப தன்னைத் தகவமைத்துக் கொள்கிறது” என்ற ஆ. தனஞ்செயன் பேச்சும்,

“80, 90 களில் ஈழத்துப் போர்ச் சூழலில் ஈழத் தமிழ் அரங்கம் ஏற்பட்டது. இளையபத்மநாபன் போன்றவர்களால் அடையாள அரசியல் அது பற்றிய நாடக விவாதங்கள் நடைபெற்றன. பல்கலைக்கழகங்களில் நாடகம் பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட்டது. புலம் பெயர்ந்தோர் நாடகங்கள் உருவாயின” என பேராசிரியர் அ. மங்கை தெரிவித்த கருத்துக்களும் பார்வையாளர்களுக்குப் புதிய சிந்தனைக் களத்தை உருவாக்கிக் கொடுத்தன.

தமிழகத்தில் அரசியலும் சினிமாவும் இரட்டைப் பிறவிகள் போல் இன்னமும் ஒட்டிக் கொண்டேயிருக்கின்றன. சினிமா காட்சிகளும் பாடல்களும் வசனங்களும் பெரும்பாலும் அரசியல் பிரவேசத்தைக் குறியாக வைத்தே கட்டமைக்கப்படுவதை பல திரைப்படங்களில் பார்க்கலாம். இதனையும் கா. சிவத்தம்பி தனது இலக்கிய ஆய்வுகளின் ஒரு பகுதியாக கொண்டிருக்கிறார்.

திரைப்பாடல்கள் நாட்டார் வழக்காற்றுப் பாடல்களிலிருந்து வந்ததையும், சிவாஜிகணேசன் என்ற நடிகரின் பாத்திர வார்ப்பையும், தமிழ் சினிமா தமிழ் மக்களின் கருத்தை முன்னெடுக்காமல் சினிமா நடிகரை அரசியல் தலைவராக்குவதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளது என்பதையும் “தமிழ் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்” என்ற நூலில் கா. சிவத்தம்பி எழுதியிருப்பதை செ. ரவீந்திரன் விளக்கமாக எடுத்துரைத்தது தமிழகத்தின் தற்கால அரசியல் நிலையையும் காட்டுவதாக இருந்தது.

தமிழ் இலக்கிய ஆய்வுக் களத்தில் தடம் பதித்துள்ள பொ. வேல்சாமி, தொ. பரமசிவன், மு. ராமசாமி, ராம. சுந்தரம், எம்.எஸ்.எஸ். பாண்டியன், கி.பி. அரவிந்தன், பெ. மாதையன், இன்குலாப், கே.எஸ். சிவசுப்ரமணியன், சி. மகேந்திரன், ஆர். ராதாகிருஷ்ணமூர்த்தி, ஆர். சண்பகலட்சுமி ஆகியோரும் இவ்வாய்வரங்கில் கருத்துப் பரிமாற்றம் செய்தனர்.

ஆய்வாளர்களுக்கென இதுவரை எந்தக் கருத்தரங்கமும் நடைபெற்றதில்லை. இதுவே முதன்மை என்பதால் பெருமிதம் கொள்ள வைக்கிறது என்று வாழ்த்துரை வழங்கிய வா.செ. குழந்தைசாமி கூறியது மிகச் சரியானதாகும்.

மொத்தத்தில் கைலாசபதி, தொ.மு.சி. ரகுநாதன், கார்த்தி கேசு சிவத்தம்பி என்ற இயக்கவியலை அடிப்படையாகக் கொண்ட விமர்சன ஆய்வு முறை அடுத்த தலைமுறைக்கு கையளிக்கப்பட்டதாகவே இந்தக் கருத்தரங்கம் இருந்தது எனலாம்.

புதிய இலக்குகள், எதிர்கொள்ளும் புதிய ஆய்வு முறைகள், அதனால் ஏற்படும் பிரச்சனைகள் எல்லாம் அடுத்த தலை முறையின் ஆய்வில் தெரியவரும்.

மூன்று நாள் கருத்தரங்கம் புதிய புரிதலோடு நம் முன் உள்ள சவால்களையும் கோடிட்டுக் காட்டியது.

Pin It