ஏமாந்த நேரங்களிலெல்லாம் இந்தியா சுரண்டப்பட்டிருக்கிறது. நானூறு ஆண்டுகளுக்கு முன் இந்திய மண்ணில் வணிகத்துக்கென்று வந்திறங்கியவர்கள் 1947 ஆகஸ்ட் 15 வரை எப்படியெல்லாம் இங்கிருந்த செல்வத்தைக் கொள்ளை கொண்டு சென்றார்கள் என்பது வரலாறு நெடுகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்தப் பதிவுகளின் முத்தாய்ப்பாகத்தான் பாரதி வெகுண்டெழுந்து வீரியமான சொற்களால் கருத்துப் பதியம் செய்தான்.

“நாளெல்லாம் எங்கள் செல்வம்
கொள்ளை கொண்டு போகவோ நாங்கள் சாகவோ”

நேரடிக் கொள்ளை இனி நடக்காது என்று அறிந்து கொண்ட உலகச் சட்டாம்பிள்ளை நாடுகள் இப்போது மறைமுகமாகக் கொள்ளையடிக்கிறார்கள். மக்களின் நுகர்பொருள் விருப்பத்தைக் கணக்கிட்டு மோகத்தை விதைத்து லாபத்தை அறுவடை செய்கிறார்கள். அந்த அறுவடைக்கு நமது நிலத்தையும் நீரையும் நம்மிடமிருந்தே பறித்துக்கொள்கிற சதியையும் செய்கிறார்கள். அப்படிப்பட்ட சதிகளில் ஒன்றுதான் தாமிரபரணி ஆற்றுத் தண்ணீரை உறிஞ்சி கோக கோலாவாக, பெப்சியாக புட்டிகளில் அடைத்து நம்மிடமே விற்றுப் பணம் பண்ண நினைக்கும் முயற்சி. இது ஏதோ குடங்களில் தண்ணீர் மொண்டு குடிக்கிற ஏற்பாடல்ல. கரைபுரண்டோடும் ஆற்று நீரை புராணத்து அகத்தியர்போல் அள்ளி விழுங்கிவிட்டு மணல் திட்டுகளாக்கும் பகாசுர முயற்சி.

இந்த முயற்சியில் அந்நிய கோக் நிறுவனத்தின் சதி மட்டுமல்ல; நம்மை ஆள்வோரின் சதியும் கலந்திருக்கிறது. இதனை வெறுமனே அரசியல் பொருளாதாரப் பிரச்சனையாக மட்டும் பார்க்க முடியாது. தவித்த வாய்க்குத் தண்ணீர் தருகிற ஈர மனம் கொண்ட எம் தமிழ் மக்களைத் தண்ணீருக்கு அலையவிட்டு மனதையும் வறட்சியாக்குகிற ஒரு முயற்சி. எனவே, இதில் பண்பாட்டுப் பிரச்சனையும் பொதிந்து கிடக்கிறது. அதனால்தான் கலை இலக்கிய பண்பாட்டு அமைப்பான தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தாமிரபரணி ஆற்று நீரை கோக கோலா நிறுவனம் உறிஞ்சிக் கொள்ளையிடும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டிச. 11, 2005 அன்று போர்க் களத்தில் இறங்கியது.

தண்ணீர் உறிஞ்சப்படுவது சுற்றுச்சூழலில் மிகப்பெரும் கேட்டினை உருவாக்கும். இது நிலத்தடி நீராதாரத்தோடு, விவசாயப் பணிகளோடு, விளைபொருள்களோடு சம்பந்தப்பட்டது என்கிற ஆணிவேர்களையும் அறிவது அவசியம். நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்டு நம்மை ஆள்வர்கள் அந்நிய மோகத்தால் அல்லது அவர்கள் தரும் டாலர்களால் மக்களை மறந்துவிடலாம். ஆனால் கோக கோலாவின் பிறப்பிடமான அமெரிக்காவிலேயே இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்தியாவிலும் கொலம்பியாவிலும் இந்த நிறுவனம் சுற்றுச்சூழல் பிரச்சனையை ஏற்படுத்தியிருப்பதால், இதன் தயாரிப்புகளை வாங்க மாட்டோம் என்று நியூயார்க் பல்கலைக் கழகம், மிச்சிகன் பல்கலைக்கழகம், ரட்கெர்ஸ் பல்கலைக்கழகம் ஆகியவை அறிவித்துள்ளன. சம்பந்தப்பட்ட பல்கலைக் கழகங்களின் நிர்வாக முடிவு மட்டுமல்ல இது. அங்கே பயிலும் ஆயிரக்கணக்கான மாணவர்களின் முடிவுமாகும்.

இந்தியாவின் நீராதாரம் பறிக்கப்பட்டு சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவது கண்டு அமெரிக்கப் பல்கலைக்கழகங்களும் மாணவர்களும் கோக கோலாவைப் புறக்கணிக்கும்போது தாமிரபரணி ஆறு வற்றி மணல் மேடாவதைத் தடுக்க தமிழகப் பல்கலைக்கழகங்களும் மாணவர்களும் கோக கோலாவைப் புறக்கணிக்கப் போவது எப்போது? உள்ளே வராதே என கோக், பெப்சி நிறுவனத்தை விரட்டிய கேரள மாநிலம் பிளாச்மெடாவைப் போல் தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியும் மாறுவது எப்போது?

Pin It