இன்று பூராவும்
சந்தோஷங் கொண்டிருக்க
ஏதாகிலும் செய்தாக வேண்டும்
தயிர்சாதம் பிசைந்து
ரோகிகளுக்கு ஊட்டிவிடுதல்
முடிந்தமட்டில் ரோகிகளில்
ஒருத்தரையாவது குளிப்பாட்டி
வெளுத்த உடைகளை உடுத்தி
அழகு பார்த்தல் என
ஏதாகிலும் செய்தாக வேண்டும்

முட்டக் குடித்துவிட்டு மலையுச்சியிலிருந்து
குதித்துவிட்டால் மிகவும் நல்லது
நாமங்கெட்டு அலைதல்
பெரும் சுகமென பாபுவிடம்
ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்
பதியனிட்ட மிளகுச் செடிகளை
உன் வீட்டில் நட்டு வைத்துவிடலாம்
இனி அடையாளங்கள் தேவையில்லை
சுற்றியாகிவிட்டது
கடலென கரைந்து
கரை ஒதுங்கும் பட்சத்தில்
யாரும் என்னைக்
கண்டுகொள்ளாமல் இருந்தால்
அது போதும்.
Pin It