ஆர்.பி.பி.யின் பூனை

 நடு ஜாமத்தில் உறவுக்கு அழைக்கும்
கெடாப் பூனையின்
அடித் தொண்டைக்குரல் தடிக்கிறது

சொற்ப
வரும்படியில் ஜீவிக்கும்
தாம்பத்யம் பண்ணாதவனை சேர்த்து
எங்கோ கிளப்பிக்கொண்டு போகிறது அது.

கித்தானில் விளையாடும்
ஆர்.பி.பி.யின் பூனைகள்
நினைவு மேட்டில் ஏறி
காதுகளை உயர்த்துகின்றன.
வாலை
கொடிபோல் ஆட்டுகின்றன.
மொட்டை மாடியை
அங்கிட்டும்
இங்கிட்டும் அல்லோலப்படுத்துகின்றன.

இரவு புகாரற்றுத் திரும்பும்
பெட்டைப் பூனை மீதேறி
இருட்டின் சுவர்களை உடைக்கிறது கெடா

வெண் புனல் பொங்கி ஜாமத்தை நனைக்கிறது
இருட்டின் கருமை கரைந்து
பொள பொளவென
புலர்ந்து வருகிறது பகற்பொழுது.



மாலை

உயர்த்தி நடப்பட்ட கூடையை நோக்கி
பந்தைப் போட முயலும்
ஆட்டக்கலைஞனைப்போல
சூரியனைக் கொண்டு வந்து
இருட்டின் கூடைக்குள் போடுகிறது பகல்.

ஒரு சிறுமியின் உற்சாகம் ஒத்து
சுறுசுறுப்படையும் பகற்பொழுதை
இரவு விடாமல் விரட்டிக்கொண்டே ஓடுகிறது

பெரிய பெரிய வலைகள்.
வரையறுத்த விதிமுறைகள்.
தீர்மானிக்கப்பட்ட கோடுகள்.
ஆட்டக் கலைஞன் தன் வேலைகளை வேகப்படுத்துகிறான்.

இலக்குத் தவறி விழும் பகற் பந்தை
எடுத்துப்போட
சரசரவென்று மேற்கே இறங்கிக் கொண்டிருக்கிறது
மாலை



தடுமன் எழுத்து

சதுர சதுரமான உயர்ந்தோங்கியச் சுவர்கள்.
வளர்ந்து நிற்கும் மருத்துவமனை
தொங்கி அலுக்காத
தடுமன் தடுமன் எழுத்துக்கள்
வாசித்துக் கொண்டு வருகிறான் வயசாலி.
மருத்துவமனைக்கு வெளியே நீண்ட கண்களை
இழுத்து வந்து மருந்தருந்த வைக்கிறான் கம்பெளண்டர்.
தடுமன் தடுமன் எழுத்தினைக் கூட்டி
மருத்துவர் படிக்கச் சொன்னதும்
மறைந்தொளியும் எழுத்துக்களைப் பிடிக்க
நீண்ட படிக்கட்டுகளை
தழுவத் தொடங்கின வயசாளியின் கால்கள்.



தன் வாழ்வை எழுதுபவன்

தூரத்து சந்திரன் நடுவானில் தொங்க
தன் இரட்டை எருதுகளை
இரை பொறுக்க விட்டுவிட்டு எதையோ
உற்று நோக்கியவனாய் நின்றிருக்கிறான் ஒரு
பழங்குடி.
நிலவொளி ஒவ்வொரு கம்பியாக நீண்டு
அவனது முகத்திற்கு வெள்ளையடித்துக் கொண்டிருந்தது.
இறந்துபோன பருந்தொன்றின் இறகுகளை கற்றையாக்கி
தலைக்கு கிரீடம் தரித்தவன்
மேய்ப்பு நிலத்தின் மீதாக தன் பார்வையை
அப்படியே மேயவிடுகிறான்.
பால் மஞ்சளாறு அவன் மீது விழுந்து கடந்து நகர்கிறது.
தேர்ந்த தைல ஓவியத்திற்கு இணையான வாழ்வை
அவன் மெல்ல எழுத ஆரம்பிக்கிறான்.



விநோதி

தேகம் முழுக்க
ஓவியங்களை வரைந்திருப்பவளை
எனக்குத் தெரியும்.
அவள் கழுத்துப் பகுதியில் பல வருடங்களாக
நீந்திக் கொண்டிருக்கும் கலம்
கரை சேர முடியாமல் துறைமுகத்தை தேடிக்கொண்டிருக்கிறது.
அவள் புன்னகைக்கும் உதட்டோரம்
ஆண் புலியொன்று தன் முன்னங்கால் உயர்த்தி
எப்போதும் நர்த்தனம் பண்ணுகிறது.
அவள் இருதயத்தைத் துளைத்துக் கொண்டிறங்கும்
காதல் அம்பொன்று என்னை சதா இம்சிக்கிறது.
தாமரைக் கொடிகள் மடித்து
உடல் சர்வமைக்கும் அவள் பந்தலிட்டிருக்கிறாள்.
அங்
கொன்றும் இங்
கொன்றும்
அல்லி கமலம் மல்லி
முல்லை குறிஞ்சி காந்தள் பூத்துக் கொட்டுகின்றன.
ஒற்றைக் கொம்பின் மீதேறி தோகை அகல மயில் அகவிப்
பாடுகிறது.
தாம்புக் கயிரென பின்னிய அவள் கூந்தலில் பாரம்பரியம் வேர்க்
கட்டுகிறது.
கிளி பேச
மயில் ஆட
மான் தாவ
பறவைகள் சல்லாபிக்க
அவளது மோக கொடி இழைகள்
காண்போரை சிறைப் பிடிக்க அலைகின்றன.
Pin It