கெஸ ஸாத் / தமிழில் : யூமா. வாசுகி

இந்தக் கதை ஒரு டைரியிலிருந்து கிடைத்தது. இதை எழுதிய பையன் என் தூரத்து உறவினன். அவனது இருபதாம் வயதில் அவனைப்பற்றி ஒன்றும் தெரியவில்லை. அவனது அம்மா சமீபத்தில் இறந்த போது டைரியை என்னிடம் சேர்ப்பித்தாள். கொஞ்சம் காலம் எனக்கு அதைத் திறந்து பார்ப்பதற்கு சந்தர்ப்பம் ஏற்படவில்லை. கடந்த வாரம்தான் படிக்கத் தொடங்கினேன். அதன் எளிமையையும், நம்பகத் தன்மையையும், யதார்த்தத்தையும் கண்டு நான் வியந்துபோனேன். மூன்றாவது நோட்டுப் புத்தகத்தில் சுவாரசியமான சில விஷயங்கள் இருந்தன. வாக்கிய அமைப்பில் சில்லறைத் திருத்தங்கள் செய்து சற்றே குறுக்கி அதை இங்கே எடுத்தெழுதியிருக்கிறேன்.

என் சிறிய தங்கை இர்மாவின் நண்பர்களில் மிகவும் அழகானவள் எம்மா. அவளது சிறிய அழகானமுகமும், சாம்பல் நிறக்கண்களும் எழிலான தலைமுடியும் முதல் தடவைப் பார்த்தபோதே என்னை அவள் வசம் ஈர்த்தன. நான் இரண்டாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன். அவளும் இர்மாவும் ஒன்றாம் வகுப்பில் படித்தனர். மற்ற சிறுவர்கள் அவளை விரும்பினார்கள்.

ஆனால் அதை யாரும் வெளியே சொல்லிக் கொள்ளவில்லை. ஒரு சிறுமியை, அதுவும் ஒன்றாம் வகுப்பில் படிக்கின்ற சிறுமியை பொருட்படுத்துவது மானக்கேடான விஷயம் என்பதால்.

ஆனால் அவளை நான் நேசிக்கிறேன் என்பதை நான் உணர்ந்திருந்தேன். என்றைக்கும் நான் அவளை நேசிப்பேன். ஒருநாள் அவளைத் திருமணம் செய்து கொள்வேன், வெட்கமாக இருந்தாலும்.

என் இரண்டு தங்கைகளுடனும் தம்பி காபேரோடும் சேர்ந்து விளையாட இடையிடையில் எம்மா வருவாள்.

சில சமயங்களில் அங்கே வேறு சிறுமிகளும் இருப்பார்கள். ஆனியும் ஜுலியுமெல்லாம். நிலவறையிலும், வராண்டாவிலும், தோட்டத்திலும், பரணியிலுமெல்லாம் வைத்து இவர்களை நாங்கள் முத்தமிடுவோம்.

செப்டம்பர் மாதம் அருமையாக இருந்தது. நல்ல வெப்பம். ஆசுவாசம் தருகிற காலநிலை. இலையுதிர் காலத்தைவிட நன்றாக இருந்தது. காலை எட்டு மணி முதல் பதினொன்று மணி வரையிலும் பிற்பகல் இரண்டு முதல் நான்கு மணி வரையிலும் பள்ளி நேரம். வெளியே பந்து விளையாடுவதற்கு உற்சாகமாயிருக்கும்.
களைப்பே தோன்றாது. இடையிடையே வீட்டிற்கோடி ஏதாவது பலகாரம் தின்போம். திரும்பி வந்து இரவு உணவுக்கான நேரம்வரை மீண்டும் விளையாட்டு.

பள்ளியும் ஆர்வமூட்டக் கூடியதாய் இருந்தது. அங்கே அதிகமான மகிழ்ச்சி இருந்தது. புதிய ஆசிரியர், அதாவது மைக்கேல் ஸ்லாடக், ஒரு பிரம்பை உபயோகப்படுத்தினார். அவருக்கு நல்ல உயரமும், சிவந்த முகமும், கனத்த குரலும் உண்டு.

எங்களது வீடு ஐந்தாவது மாவட்டத்தில் இருக்கிறது. நகரத்திற்கருகில் இருக்கிறது எங்களது பள்ளி.

பெரும்பாலான பிள்ளைகள் விவசாயக் குடும்பத்திலிருந்து வருபவர்கள். சிலருக்கு ஷூக்கள் இல்லை.

கோடுகளுடைய காலிக்கோ சட்டைதான் அவர்களது உடை. மற்றவர்களுக்கு கால்களில் பூட்ஸும், வெல்வெட் நிக்கரும் உண்டு. நான் அவர்கள் மீது பகைமை கொண்டிருந்தேன். அவர்கள் வித்தியாசமானவர்கள் என்று எனக்குத் தோன்றியது. என்னைவிட தைரியமும் வலிமையும் உடையவர்கள். ஸுல்டி என்று ஒருவன் இருந்தான். எல்லோரையும்விட நான்கைந்து வயது மூத்தவன். அவனது பூட்டின் முனையில் ஒரு சிறிய கத்தி இருந்தது. ஒரு தடவை அவன் அதை என்னிடம் காட்டி "கடவுளுக்குகூட நான் பயப்பட மாட்டேன்'' என்றான்.

நான் அதை என் சகோதரனிடம் சொன்னேன். அவன் நம்பவில்லை. புதிய ஆசிரியர், முன்பு ஒன்றாம் வகுப்பில் இருந்த நல்ல ஆசிரியரைப்போல பாடங்களை உரக்க வாசிக்கவோ, புத்தகத்தில் உள்ளதை நோட்டில் எழுதவோ எங்களிடம் சொல்லவில்லை. அதற்குப் பதிலாக அவர் எங்களிடம் உரையாற்றுவார். பிறகு கரும்பலகைக்கு அருகில் வரும்படி அழைப்பார். யாராவது பேசிக் கொண்டிருந்தாலோ, கோமாளிச் சேட்டைகள் புரிந்தாலோ அப்போதே அறிவித்து விடுவார். அடுத்தமுறை அவனை எழுந்து நிற்கவைத்து மெதுவாகச் சொல்வார்:

"தரையில் படுடா பையா'' பிறகு வகுப்பை நோக்கிச் சொல்வார். "யார் இவனை மூன்று அடி அடிக்கிறீர்கள்?''

அருமையான நிகழ்ச்சி! பத்து அல்லது பதினைந்து பிள்ளைகள் எழுந்து நிற்பார்கள். ஆசிரியர் யாரெல்லாம் அந்தத் தன்னார்வத் தொண்டர்கள் என்று பரிசோதிப்பார். ஒரு பிள்ளையைக் கூப்பிடுவார். பிரம்பை அவன் கையில் கொடுப்பார்.

- முழு சக்தியையும் திரட்டி அடிக்க முடியவில்லை என்றால் அவனிடமிருந்து பிரம்பை வாங்கி அடுத்தவன் கையில் கொடுப்பார். மரண அமைதியுடன் வகுப்பில் உள்ளவர்கள் அடி விழுவதையும் பேரலறல் எழுவதையும் பார்த்திருப்பார்கள். அடி வாங்கி அழாதவர்களையும் தேம்பாதவர்களையும் நாங்கள் மதித்தோம். அவர்கள் மீது கொஞ்சம் வெறுப்பும் இருந்தது என்று எனக்குத் தோன்றியது. இதைப் பற்றி நான் யோசித்திருக்கிறேன். ஆனால் எப்படி விளக்குவது என்று தெரியவில்லை.

என்னைப் பொறுத்தவரை தண்டனை என்னைப் பெரிதாக அச்சப்படுத்தவில்லை. ஆசிரியர் இரண்டுதடவை யோசனை செய்தபிறகே என்னைத் தண்டிப்பார் என்று எனக்குத் தெரியும். என் அப்பா ஒரு மேஜர். அப்பாவிடம் வாள் இருக்கிறது. என்னை அடிப்பதற்கு ஆசிரியருக்குத் துணிச்சல் வராது.

குறைந்த காலத்திற்குள் ஸுல்டி இந்த விஷயத்தில் திறமைசாலியென்று ஆசிரியர் கண்டுபிடித்தார். அன்றிலிருந்து அடிக்கின்ற வேலை அவனுடையது. அவன் அதை கம்பீரமாகச் செய்தான். மற்றவர்கள் செய்ய முடியாத விதத்தில் அவன் பிரம்பைப் பயன்படுத்துவான். குறைந்தபட்சம் ஒன்றிரண்டு அடிகளாவது விழாத பீரியடுகள் இல்லை. பிறகு வருவது வெப்பமான தங்கநிறமுடைய மதியப்பொழுதுகள். அந்த நேரத்தில் நாங்களெல்லாம் பரபரப்படைந்திருப்போம். மூன்று மணிமுதல் நான்கு மணிவரையுள்ள இரண்டாவது பீரியட் முழுவதும் பிரம்புப் பூஜைதான். ஒவ்வொரு வரிசையிலும் ஒருவராவது அடிவாங்கிச் சுருள்வார்கள்.

அன்றொரு சமயம் என் மூக்கினுள்ளிருந்து ரத்தம் வந்தது. கீழே போய் பியூனிடமிருந்து தண்ணீர் வாங்கிக் கழுவுவதற்கான அனுமதி கிடைத்தது. கழுவியதும் ரத்தக் கசிவு நின்றது. மீண்டும் மேலே ஏறிக்கொண்டிருந்தேன். கீழ் மாடியில் சிறுமிகளின் வராண்டாவில் எம்மா நிற்பதைப் பார்த்தேன். அவள் வகுப்பின் வாயிலிலிருந்து வெளியே திரும்பி நின்றிருந்தாள். அவள் என்னைப் பார்த்தாள். அவளை வகுப்பிலிருந்து வெளியேற்றி நிறுத்தியிருக்கிறார்கள். நான் அருகில் சென்றேன். முத்தம் கொடுப்பதற்கும், அனுதாபம் காட்டுவதற்கும். அவளைப் பார்த்தால் அவ்வளவு வருத்தப்படுபவளாகத் தெரியவில்லை. நாங்கள் பேசிக்கொள்ளவில்லை. வெறுமனே பரஸ்பரம் பார்த்துக் கொண்டிருந்தோம். அவள் அழகி மட்டுமல்ல. அகங்காரம் கொண்டவளாகவும் இருந்தாள். என் அப்பா சாதாரண ஒரு மேஜர்தான் என்றும் அவளது அப்பா லெப்டிணன்ட் கர்னல் என்றும் அவள் எனக்கு உணர்த்துவது போலத் தோன்றியது. அவள் பின்னிய தலைமுடியைக் கையில் எடுத்தாள். இளம்சிவப்பு நிற ரிப்பனை அவிழ்த்து முடியை மீண்டும் பின்னிக்கட்டினாள். நான் சோர்வாக அவளைப் பார்த்து நின்றேன்.

ஒவ்வொரு முறையும் அவள் என்னைக் கடைக்கண் பார்த்தபோது என் இதயம் துடித்தது.

அடுத்த நாள் மதியம் அவள் எங்களுக்கு அருகில் வந்து ஒரு விஷயத்தை ரகசியமாக வைக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டாள். அவள் தண்டிக்கப்பட்டிருக்கிறாள். வகுப்பிலிருந்து வெளியேற்றப் பட்டிருக்கிறாள். நான் ஒன்றும் பேசவில்லை. மாலையில் இர்மாவிடம் என்ன விஷயம் என்று கேட்டேன்.

"இப்போது தெரிந்துகொள்ள வேண்டாம்'' என்பதாயிருந்தது அவளது பதில்.

பொறுக்கி இர்மா! அவளுக்கு அடி உதை கொடுக்க வேண்டும் என்று தோன்றியது எனக்கு. அவள் பொறாமை பிடித்தவள். எம்மாவை நான் நேசிப்பது அவளுக்குப் பிடிக்கவில்லை. என்னை எம்மா விரும்புவதும். என்னுடன் ஒளிந்து விளையாட எம்மாவை விடாமல் எப்போதும் அவளுடனேயே நின்று கொண்டிருப்பாள். எம்மாவைக் கொஞ்சிக்கொண்டும், முத்தமிட்டுக் கொண்டும், அவள் கழுத்தைக் கட்டிப்பிடித்து தொங்கிக் கொண்டும் இருப்பாள்.

எம்மாவிடம் நான் ஏதாவது பேசுவதுகூடப் பிடிக்காமல் அவளை அப்பால் அழைத்துக் கொண்டு போவாள். கைகளைக் கோர்த்தபடி முற்றத்தின் மறுமுனைவரை உலாத்துவாள். அதைக் கண்டு ஒவ்வொரு முறையும் எனக்குக் கோபம் வந்தது.

எப்படியானாலும் அவர்களது நெருக்கமான பிணைப்பு சட்டென்று வெறுப்பாக மாறியது. ஒரு நாள் நான் பார்த்தபோது அவர்கள் வெவ்வேறு நண்பர்களுடன் பள்ளியிலிருந்து போவதைப் பார்த்தேன்.

அதற்குப் பிறகு எம்மா சந்திப்பதற்கு வரவில்லை. நட்பு முறிந்தது எதனால் என்று நான் தங்கையிடம் கேட்டேன். சட்டென்று திரும்பி அவள் ஓடிச்சென்றாள். சாப்பிட அமர்ந்தபோது பழி தீர்ப்பதற்காக நான் இந்த விஷயத்தை அப்பாவிடம் சொன்னேன்.

அப்பாவின் கேள்விகளுக்கொன்றும் இர்மா பதில் சொல்லவில்லை. அதனால் அறையின் மூலையில் சென்று அவள் மண்டியிட்டு நிற்கவேண்டி வந்தது. வழக்கமான ஆப்பிளும் கிடைக்கவில்லை.

வாரங்கள் கடந்து சென்றன. என் தங்கையையும் எம்மாவையும் பரஸ்பரம் பேசவைப்பதற்கு நான் முயற்சி செய்தும் பலிக்கவில்லை. பேசக்கூடாது என்பதில் இர்மா உறுதியாக இருந்தாள். அவளுடைய கண்களில் மறைப்பு ஏற்பட்டிருந்தது. கண்ணீர் வழிந்திறங்கியது. காரணமில்லாமல் கிடந்து அழுதாள்.

அக்டோபர் மாதத்தின் நடுவில் வைத்து பள்ளியில் ஒரு பயங்கரச் சம்பவம் நடந்தது. ஒரு புதுமைக்காக வேண்டி அன்றைக்கு முதலாவதாக அடி வாங்குபவன் ஸுல்டியாக இருக்கட்டும் என்று முடிவு செய்தார் ஆசிரியர். அவனை அழைத்தார், "மரியாதையாக இங்கே வா!''

ஸுல்டி ஒன்றும் பேசாமல் நின்றான். உடனே உத்தரவு வந்தது. "பிடித்து இழுத்து இங்கே கொண்டுவா-''

ஒரு டஜன் பிள்ளைகள் அவனைச் சுற்றிவளைத்தனர். சில பின் பெஞ்சுக்காரர்களும் உண்டு, எங்களின் கூட்டத்தில். பலருக்கும் ஸுல்டி மீது அச்சமிருந்தது. பலருக்கு அவன் சாரமற்றவனாகவுமிருந்தான். எனக்கு அவன் மீது வெறுப்பு இருந்தது. உண்மைதான். முதலில் நானும் சென்று அவனைப் பிடித்து இழுக்க வேண்டும் என்று தோன்றியது. சட்டென்று நான் யோசித்தேன், ஒரு சிறுவனுக்கெதிராக கூட்டம் கூடுவோரில் நானும் உண்டு என எப்படியாவது அப்பாவுக்குத் தெரிந்தால், அப்பாவுக்கு என் மீது வெறுப்பு ஏற்படும். அதனால் நான் மூச்சுவிடாமல் இருந்த இடத்திலேயே இருந்தேன். என் முழங்கால்கள் நடுங்கின.

ஸுல்டியை பெஞ்சில் இருந்து இழுப்பதற்கு முயன்ற பையன்கள் அவனைக் கட்டிப் பிடித்துத் தள்ளி மூச்சு வாங்கினார்கள். படியில் உறுதியாகக் கால் வைத்திருந்த ஸுல்டியின் காலில் கொஞ்சம் பேர் பற்றி இழுத்தார்கள். மற்றவர்கள் பெஞ்சைப் பிடித்திருந்த அவனது கையை விடுவிக்க முயன்றார்கள். பெரிய இழுபறியாயிருந்தது. ஐந்து நிமிடங்களானது அவனை அங்கிருந்து இழுத்துவந்து தரையில் தள்ளுவதற்கு. தரையில் கிடந்தபடியே அவன் மீண்டும் நகத்தால் மற்றவர்களைக் கீறி, முரண்டு பிடித்துத் திமிறினான். ஆசிரியர் இந்தப் போராட்டத்தையெல்லாம் பார்த்துக்கொண்டு நாற்காலியில் இருந்த காரணத்தால் அவன் யாரையும் அடிக்கவில்லை. ஆசிரியர் எந்த சமயத்திலும் இதில் தலையிடலாம். ஆசிரியரின் முகம் கோபத்தால் சிவந்திருந்தது.

கடைசியில் எல்லோரும் சேர்ந்து கையையும் காலையும் பிடித்து ஸுல்டியைப் புரட்டினார்கள். பிறகு அவனை மேசைக்கு அருகே தரதரவென்று இழுத்துக் கொண்டு வந்தார்கள். அவனது முதுகு தரையில் உராய்ந்தபடி இழுபட்டது.

"- அவனை விடாதீர்கள்.'' ஆசிரியர் அலறினார். "மல்லாக்கப்போடுங்கள். கைகால்களை அசையவிடாமல் பிடித்துக் கொள்ளுங்கள்!''

மிக்க மகிழ்ச்சியுடன் சக்தியனைத்தையும் திரட்டி பிள்ளைகள் உத்தரவை நிறைவேற்றினார்கள். ஸுல்டி பிடித்துக் கொள்வதற்கு ஒன்றும் கிடைக்கவில்லை. அவனது கைகளின் மீது நின்று அவர்கள் குனிந்து பார்த்தார்கள். நான்கு பேர் அவன் கால்களின் மீது குந்தியிருந்தார்கள். இரண்டுபேர் தலையைப் பிடித்துக் கொண்டார்கள்.

ஆசிரியர் காத்திருந்தது இந்த சமயத்திற்காகத்தான். அவர் அமைதியாக அவர்களருகே மெதுவாக வந்தார். பிள்ளைகளை அகன்றுபோகச் சொன்னார். பிரம்பு வீசப்படும் எல்லைக்குள் யாரும் நிற்கக் கூடாது. வேலை தொடங்கியது. ஸுல்டிக்கு ஆறு அடிகள்.

அதிபயங்கரமான அலறல். வலுவான, துல்லியமான பிரம்படிகள். நான் ஒடுங்கி வியர்த்துப் போனேன். ஒரு காந்த மண்டலத்தில் ஈர்க்கப்பட்டதைப்போல தரையில் குதிகால்களை அழுத்தி நின்று ஒரு காட்சியையும் தவறவிடாமல் நான் பார்த்தேன். ஆசிரியர் அடிப்பதை நிறுத்தினார். தலையுயர்த்தி பார்க்கக் கூடச் செய்யாமல் ஸுல்டி அடி முழுவதையும் வாங்கினான்.

"உன் முரட்டுத்தனத்தை நீ நிறுத்தமாட்டாயாடா?'' ஆசிரியர் சாந்தமாகக் கேட்டார். சற்று நேரம் காத்திருந்த பிறகு குரோதத்தால் தலை மந்தித்ததுபோல அவர் அலறினார் "வேகமாகச் சொல்!''

ஸுல்டி பேசவில்லை.

"பரவாயில்லை, கெட்டிக்காரன்தான்''. ஆசிரியர் சீறினார். "இப்போது நீ சொல்லவில்லையென்றால் எனக்கொரு மயிரும் இல்லை. உன்னைப் பேசவைப்பது எப்படி என்று எனக்குத் தெரியும்!''

முன்பைவிட விரைவாக அதிபயங்கரமாக அவர் பிரம்புப் பிரயோகம் நடத்தினார். எவ்வளவு அடியென்று எண்ணக்கூட என்னால் முடியவில்லை. இதைத் தாங்கக்கூடிய அளவுக்கு அந்தத் தடியனுக்கு அவ்வளவு சக்தியிருந்தது. ஆசிரியர் களைத்து மூச்சுத் திணறினார். கடைசியில் மிகவும் சோர்ந்து போய் அடிப்பதை நிறுத்தினார். கர்ஜிக்கும் குரலில் பிறகும் கேட்டார் "உன் முரட்டுத் தனத்தை நிறுத்த மாட்டாயடா?''

ஆனால் ஸுல்டி ஒன்றும் பதில் சொல்லவில்லை.

ஆசிரியர் புருவத்தை நெளித்து கோமாளிச் சேட்டை காட்டிக்கொண்டு அடியைத் தொடர்ந்தார். இப்போது ஒவ்வொரு அடி அடித்து முடித்த பின்னரும் சாவகாசமாகக் கேட்டார். "உன் முரட்டுத்தனத்தை நிறுத்த மாட்டாயாடா?''

மீண்டும் ஒரு டஜன் அடி. அப்போது பீதியளிக்கக்க கூடிய ஒரு அலறல் எழுந்தது "இல்லை!''

ஆசிரியர் பிரம்பைக் கீழே போட்டார். பிள்ளைகளிடம் போய் அமரச் சொன்னார். ஸுல்டி எழுந்தான். தையல் விட்டுப்போன உடையை மீண்டும் இறுக்கிக் கொண்டான். இழுபறியில் அது கிழிந்துபோயிருந்தது. திரும்பி இருக்கைக்குச் சென்றான். அவன் முகம் முழுவதும் அழுக்கும் சேறும் தோய்ந்திருந்தது. உடை கண்ணீரால் நனைந்திருந்தது. வாயிலிருந்து வந்த ரத்தத்தை அவன் துப்பினான். எதற்காகவோ ஆசிரியர் அவனை மீண்டும் அழைத்தார்.

" உன்னை யார் உட்காரச் சொன்னது? இங்கே வந்து நில். கேட்கிறதா, நிற்கச் சொன்னேன்!-''

ஸுல்டி காலிடறி நின்றான். அவன் தலை ஒரு புறமாகச் சரிந்து கிடந்தது. ஆசிரியர் கைகளைத் தேய்த்துக்கொண்டார், ஒரு சிறிய வேலையைச் செம்மையாக செய்து முடித்ததைப் போல. பிறகு சாந்தமான குரலில் மரியாதையுடன் பெருந்தன்மையாகச் சொன்னார். "டேய் பையா. இது ஒரு முன்னறிவிப்புதான்.

அடுத்தமுறைக்கான முன்னறிவிப்பு ஆசிரியர்களை அணுசரிக்காமல் இருப்பதன் மானக்கேட்டை உனக்குப் புரியவைப்பதற்கு. உன் சுபாவம் கெட்ட குணமாகப் பிறழ்ந்திருக்கிறது. அதனால் உன் செவிட்டில் நான் இரண்டு கொடுக்கப் போகிறேன்.''

அடி! மீண்டும் மீண்டும் அடி. செவிட்டில். இடைவிடாத அடியேற்று ஸுல்டி கரும்பலகையின் மீது துவண்டு விழுந்தான். பிறகு அவன் எப்படியோ ஒரு விதமாக நிமிர்ந்து எழுந்து வெளியே ஓடினான். ஆசிரியர் சபித்தபடி அவன் பின்னால் ஓடி கதவை அடித்துச் சாத்தினார். திரும்பி மேசைக்கருகில் வந்து நின்றார். ஊசி விழுந்தால் கேட்கக்கூடிய அமைதி.

வீட்டிற்கு வந்தபோது எனக்கு நல்ல ஜுரம். நான் வாய்க்கு வந்ததைப் புலம்பத் தொடங்கினேன். படுக்கையில் வீழ்ந்தேன். மாலையில் அப்பா வந்து என்னைக் கேள்வி கேட்டார். ஸ்கூலில் நடந்ததையெல்லாம் நான் சொன்னேன். அப்பாவும் அம்மாவும் என் ஆசிரியரைத் திட்டினார்கள். அடுத்த வாரம் நகரத்தில் உள்ள ஒரு நல்ல பள்ளிக்கு என்னை மாற்றினார்கள்.

அதற்கிடையில் எம்மாவை தினமும் பார்க்க முடியவில்லை. என் இதயத்தில் ரத்தம் ஒழுகியது. அக்டோபர் 25ல், பத்திரிகையில் பயணிகளில் ஒருவனை கொள்ளையடித்துக் கொலை செய்த ஒரு வண்டிக்காரனை தூக்கிலிட்டுக் கொன்றதாக நான் படித்தேன். மரண தண்டனை குறிக்கப்பட்ட நாளுக்கு முன்பும், மரண நாள் காலையிலும் தூக்குமரத்தின் அடியில் அவன் எப்படி நடந்து கொண்டான் என்பதைப் பற்றிய ஒரு நீண்ட விவரணம் பத்திரிகையிலிருந்தது. அன்று இரவு அப்பாவும் அம்மாவும் உணவு நேரத்தில் அதைப் பற்றிப் பேசினார்கள். இருபது வயது உள்ளபோது ஒரு தூக்குத் தண்டனையை நேரடியாக கண்டதைப் பற்றி அப்பா விவரித்தார்.

"ஹா, அதை நான் பார்த்திருந்தால் எவ்வளவு நன்றாயிருந்திருக்கும்'' நான் சத்தமாகச் சொன்னேன்.

"பார்க்காமல் இருப்பதுதான் நல்லது.'' அப்பா சொன்னார். “ஒருபோதும் அதைப் பார்க்கச் செல்லாதே. பார்த்துவிட்டால் அடுத்த ஏழு வருடம் முழுவதும் கனவு காண்பாய். நான் கண்டதைப் போல.''

அடுத்த நாள் ஸ்கூல் விட்டவுடன் சகோதரன் காபேரும் நானும் சேர்ந்து மாடியில் ஒரு தூக்குமரம் நிர்மாணிப்பதற்கு ஏற்பாடு செய்தோம். நாயையோ அல்லது பூனையையோ தூக்கிலிட உத்தேசித்தோம். காபேருக்கு இந்த ஏற்பாடு பிடித்திதிருந்தது. நாங்கள் வேலையை ஆரம்பித்தோம். ஒரு துணிக்கயிறைத் தேடிப்பிடித்து அதில் அவிழ்ப்பதற்கியலாத ஒரு கடுமையான முடிச்சிட்டோம். நேராக நிறுத்துவதற்கு ஒரு உயரமான கழி கிடைக்காததால் தூக்குமரம் அமைக்கும் திட்டம் முடங்கியது. தோட்டத்து மூலையில் தூக்கிலேற்றத் தொடங்கினால் அப்பாவும் அம்மாவும் தலையிடுவார்களோ என்ற பயமும் இருந்தது.

மிருகங்களைத் தொல்லைப் படுத்துவதில் காபேருக்குப் பெரிய ஆர்வம் ஒன்றுமில்லை. ஆனால் தொடங்கியதுடன் மகத்தான கருத்துக்கள் அவனுக்கு உதிக்கத் தொடங்கின. உதாரணமாக அவன் ஒரு பூனையை பச்சை உயிருடன் காய்கறி நறுக்கும் கத்தியால் அரிந்தான், தோட்டத்தில் வைத்து. ஆனியும் ஜூலியும் பூனையைத் துரத்தி சுற்றிவளைத்துப் பிடித்தார்கள். எல்லோருமாகச் சேர்ந்து அதை தூக்கிக் கொண்டு வந்தார்கள். காபேர் பூனையின் வயிற்றில் ஒற்றை அடிகொடுத்து வீழ்த்தினான்.

மாடியின் உத்திரக் கட்டையில் நாங்கள் ஒரு கயிற்றைக் கட்டினோம். அன்று மதியம் முதல் கேட்பாரற்ற நாயொன்று சாலையில் பொறுக்கித் திரிந்தது. நாங்கள் கேட்டை அடைத்து அதைப்பிடித்து இழுத்துக் கொண்டு வந்தோம். சிறுமிகளுக்கு இது நல்ல உற்சாகமான வேலையாயிருந்தது. காபேரும் நானும் அமைதியாக ஆயத்தங்களைத் தொடங்கினோம்.

" நீதான் நீதிபதி'' காபேர் சொன்னான். "நான்-தான் தூக்குப் போடுபவன். நான் இதோ அறிவிக்கிறேன். கனம் நீதிபதி அவர்களே, தூக்கிலேற்றுவதற்கு எல்லாம் தயார்.''

"நல்லது.” நான் சொன்னேன். " தூக்கிலேற்றுபவனே, உன் வேலையைச் செய்.''

நான் நாயைத் தூக்கினேன். காபேர் கழுத்தில் சுருக்கிட்டான். கொடும் வேதனையுடன் நாய் துடித்துக் கதறியது. மஞ்சள் புள்ளிகள் உடைய கால்களால் கீறியது. ஆனால் சட்டென்று அது தளர்ந்து குனிந்து அசைவற்றுப்போனது. அதை நன்றாகப் பார்த்துவிட்டு அப்படியே தொங்கவிட்டுவிட்டு காப்பி குடிப்பதற்காக நாங்களெல்லாம் ஓடிச்சென்றோம். அந்த நிகழ்ச்சி முடிந்தும் சிறுமிகள் கேட்டுக்குப் பக்கத்திலேயே நின்றுகொண்டிருந்தனர். வேறொரு நாயை ஒரு சர்க்கரைக் கட்டி கொடுத்து ஆசைகாட்டி உள்ளே அழைத்து வந்தனர். பாவாடை கிழியும்படி வலுக்கட்டாயமாகப் பிடித்து இழுத்துக்கொண்டு வந்த அதையும் தூக்கிலேற்றிக் கொல்லும்படி காபேரிடம் சொன்னாலும், ஒரு நாளுக்கு ஒன்றுதான் என்ற நியாயத்தைச் சொல்லி அவன் அதை மறுத்தான். ஜுலி கேட்டைத் திறந்து நாயை வெளியே விட்டாள்.

கொஞ்சம் நாட்களுக்கு நாங்கள் அதையெல்லாம் மறந்திருந்தோம். ஒரு புதிய பந்து கிடைத்திருந்தது. காபேரும் நானும் எறிந்து பிடித்து விளையாடினோம்.

பின்பு ஒரு தடவை நாங்கள் எம்மாவைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். "அவளை நான் வெறுக்கிறேன்''

என்று காபேர் சொன்னான். "அவள் ஒருமேனாமினுக்கி. இர்மா அவள்மீது இவ்வளவு பிரியம் கொண்டிருந்தது அவள் ஒரு மடக்கழுதை என்பதால்தான்'' என்று அவன் சொன்னான்.

"- அவர்கள் இனி ஒருபோதும் நண்பர்களாக மாட்டார்கள் என்பதுதான் என் ஆசை. சேர்ந்து கொண்டால் பிறகு பீற்றிக்கொண்டு எம்மா இங்கே வரத்தொடங்குவாள் -'' கோபத்துடன் சொன்னான் காபேர்.

காபேரின் ஆசை நிறைவேறவில்லை. அடுத்தநாள் உச்சிப்பொழுதிற்குப் பிறகு இர்மா எம்மாவையும் அழைத்துக்கொண்டு வந்தாள்.

"இவளைக் கண்டால் குமட்டுகிறது.'' காபேர் என்னிடம் முணுமுணுத்தான். "அவள் அல்லவா அழகான பெண்...?'' என்று நான் மனதிற்குள் சொல்லிக் கொண்டேன். இர்மா மீது எனக்குப் பொறாமை தோன்றியது. அவ்வளவு சந்தோஷத் திமிர்ப்பிலிருந்தாள் இர்மா. நாங்கள் விளையாட்டில் மூழ்கியிருந்தபோது அவள் தன்னருகே எம்மாவை அழைத்து கட்டிப்பிடித்து முத்தமிட்டு மூச்சு முட்டச் செய்தாள். ஆனாலும் பிறகும் அவர்களுக்கிடையில் சச்சரவு உண்டானது.

"-ரோஸியோடு இனி பேசமாட்டேன் என்று என்னிடம் சத்தியம் செய்தாயல்லவா?'' இர்மா அழுகையுடன் கேட்டாள்.

"-இல்லை.'' எம்மா அவலட்சணமாகச் சிரித்துக் கொண்டு உறுதியாகச் சொன்னாள்.

ஜுலியும் ஆனியும் தங்களுக்கிடையில் ஏதோ ரகசியம் பேசிக்கொண்டனர். இர்மா, காபேர், நான் எல்லோரும் எம்மாவைப் பார்த்துக்கொண்டு நின்றோம். "கடவுளே! எப்பேர்ப்பட்ட பேரழகு!''

சூரியப் பிரகாசம் நிறைந்த அந்த கோடைகால மாலைப்பொழுது எரிந்தடங்கிக் கொண்டிருந்தது. எங்களுடையது மட்டுமே ஆயிற்று தோட்டம். அப்பாவும் அம்மாவும் கார் எடுத்துக்கொண்டு சென்றிருக்கின்றனர். சமையல்காரி எங்களுக்கு கொக்கோ கலக்கிக்கொடுத்துவிட்டு மீண்டும் சமையலறைக்குச் சென்றாள்.

"-நீ என்றாவது தூக்கிலேற்றிக் கொல்லப்படுவதைப் பார்த்திருக்கிறாயா?'' என் தங்கை எம்மாவிடம் கேட்டாள்.

"-இல்லை'' எம்மா தலையாட்டிக் கொண்டு சொன்னாள். அவளது முடியிழைகள் கன்னங்களில் உரசின.

"-உன் அப்பா சொல்லிக் கேட்டதில்லையா?''

"-கேட்டிருக்கிறேன். ஒரு கொலையாளியைத் தூக்கிலிட்டதைப் பற்றி அப்பா சொல்லியிருக்கிறார்'' அவள் ஈடுபாடற்று சாவகாசமாகச் சொன்னாள்.

"-அப்படியென்றால் கேட்டுக்கொள். எங்களுக்குச் சொந்தமாக ஒரு தூக்குமரம் உண்டு. எங்களுக்கு மட்டுமே சொந்தமானது அது. ஜுலி பெருமையுடன் பிரஸ்தாபித்தாள்.

நாங்கள் தூக்குத் தண்டனையைக் காட்டுவதற்காக எம்மாவை மாடிக்கு அழைத்துச் சென்றோம். கொஞ்சம் நாட்களுக்கு முன்பு காபேரும் நானும் சேர்ந்து நாயைக் குழிதோண்டிப் புதைத்திருந்தோம். தூக்குக்கயிறு உத்திரக் கட்டையிலேயே கிடந்து சூன்யமாக ஆடிக்கொண்டிருந்தது.

"- நாம் தூக்குப்போட்டுக் கொல்லும் விளையாட்டு விளையாடலாம்'' இர்மா சொன்னாள், "எம்மாவுக்குத் தண்டனை கொடுங்கள். நாம் அவளைத் தூக்கில் போடுவோம்.''

"- உன்னைத்தான் தூக்கிலேற்றிக் கொல்ல வேண்டும்'' எம்மா புன்னகைத்தாள்.

"-தூக்கிலேற்றுபவனே, உன் வேலையைச் செய்'' காபேர் எனக்குக் கட்டளையிட்டான்.

சட்டென்று எம்மாவின் முகம் வெளுத்தது. ஆயினும் மந்தகாசமாகப் புன்னகைத்தாள்.

"- அசையக்கூடாது'' இர்மா சொன்னாள்.

நான் கயிற்றின் சுருக்கை எம்மாவின் கழுத்திலிட்டேன்.

"- வேண்டாம் வேண்டாம். நான் தூக்கில் சாகவேண்டாம்.'' அந்தச் சின்னஞ்சிறுமி ஆழ்ந்த விசனத்துடன் முனகினாள்.

"- கொலைபாதகி நமது கருணையை வேண்டுகிறாள்'' சிவந்து முறுக்கேறிய முகத்துடன் காபேர் இனிமையாகச் சொன்னான். ஆனால், தூக்கிலேற்றுபவனின் உதவியாளர்கள் தண்டனையளிக்கப்பட்டவளை வளைத்துப் பிடித்தனர். ஆனியும் ஜுலியும் அவளது கைகளை உறுதியாகப் பிடித்துக் கொண்டனர்.

"-இல்லை எனக்குச் சம்மதமில்லை'' எம்மா விம்மி அழத்தொடங்கினாள்.

"- கருணை தெய்வத்திடம்தான் இருக்கிறது'' காபேர் இனிமையும் லயமுமாகச் சொன்னான். இர்மா தன் தோழியின் தொடையில் பிடித்துத் தூக்கினாள்.

அந்த காரியம் அவ்வளவு சுலபமாயிருக்கவில்லை. இர்மாவின் கால் இடறியது. நான் அவளுக்கு உதவினேன். எம்மாவை கைகொண்டு தொடுவதற்குக் கிடைத்த முதலாவது வாய்ப்பாயிருந்தது அது. சகோதரன் கயிற்றைப் பிடித்து இழுத்தான். மறுமுனையை உத்தரக் கட்டையிலேயே சுற்றிக் கட்டினான். எம்மா அங்கேயே தொங்கிக்கிடந்தாள். முதலில் கைகள் துடிதுடித்தன. சிறிய, மெலித்த, வெள்ளைக் காலுறை அணிந்த வெண் கால்களைப் போட்டு உதைத்துக்கொண்டாள். அவளது அசைவுகள் மிகவும் பழையதாகத் தோன்றின. அந்த முகத்தை எனக்குக் காண முடியவில்லை.

மாடியில் இருட்டு அதிகமாயிருந்தது. சட்டென்று எல்லாம் நிச்சலனமானது. அவளது உடல் நீண்டு நிவர்ந்தது, பிடித்து நிற்பதற்கு எதையோ தேடுவதைப்போல. பிறகு அசையவில்லை. பயங்கரமான பீதி எங்களை விழுங்கியது. பிரக்ஞையற்று நாங்கள் மாடியிலிருந்து கீழே குதித்துச் சிதறி பூந்தோட்டத்தில் ஒளிந்தோம். ஆனியும் ஜுலியும் அதிவேகமாக வீட்டிற்கு ஓடினார்கள்.

அரைமணி நேரம் சென்று ஏதோ சாமான் எடுப்பதற்காக மாடிக்குச் சென்ற வேலைக்காரி எம்மாவின் உடலைப் பார்த்தாள். அவள் உடனடியாக எம்மாவின் அப்பாவை வரவழைத்தாள். எங்களது அப்பாவும் அம்மாவும் வரும் முன்பு...

சம்பவ விவரணம் இங்கே வைத்து முடிகிறது. இந்தக் கொடூரமான நிகழ்ச்சியில் பங்காளியாக நேர்ந்த அதிர்ஷ்டம்கெட்ட அந்த டைரி எழுதியவன் பிறகு ஒன்றும் சொல்லவில்லை. அந்தக் குடும்பத்தின் பிற்கால சரித்திரத்தைப்பற்றி எனக்குத் தெரிந்தது இதுதான். அப்பா ஒரு கர்னலாக பென்ஷன் வாங்கினார். இர்மா இன்று ஒரு விதவை. காபேர் பட்டாளத்தில் ஆபீசர்.

Pin It