நேத்து செத்த பொதியம்மாளுக்கு ரெண்டாம் நாள் பால் தெளிப்புக்காக மொத்த சாதி சனமும் கூட்டமாக ஊருக்குக் கெழக்காலே தள்ளியிருக்கிற சுடுகாட்டப் பார்த்து போய்க்கிட்டு இருந்தாக. அந்த அம்மாவோட ஒரே புள்ள முருகானந்தம் தலையும் முகமும் மழிக்கப்பட்டு பரிதாபமாக முன்னே நடந்தான். மேல்சட்டையை கழட்டி இடுப்பில் துண்டுபோல கட்டியிருந்தான். தாய சாவக்கொடுத்த துயரம் முகத்தில் கவிந்திருந்தது.

ஊருக்குள்ளிருந்து நீளும் தார்ச்சாலையில் பிரிந்து இருபுறமும் எருக்கஞ்செடி மண்டிக் கிடக்கும் ஒடுக்கமான மண் சாலை வழிச்சென்று, கண்ணுடையான் கம்மாயை கடந்து கோயில்தோப்பை நெருங்கிவிட்டால் அடுத்து சுடுகாடு.

நாவிதன் ஊதிய சங்கொலி அதிர்வில் சிறு ஒழுங்கையின் இருமருங்கும் ஆள் உயரத்தில் வளர்ந்திருந்த தேர்க்கள்ளிச் செடிகளின் விரிந்து மலர்ந்த பூக்களில் அமர்ந்திருந்த தேனீக் கூட்டம் பறந்து எழுந்தன.

நல்லையா பிள்ளை ஊர்த்தலைவரா ஜெயிச்ச பீரிடுல கட்டுனது அது. மேற்புறம் ஆஸ்பெட்டாஸ் வேயப்பட்டது. உச்சிப்பொழுது உரத்த எதிர்காற்று கூரையில் மோதும்போது அந்த இடத்திற்கே உண்டான அமானுஷ்ய சப்தங்களை அது எழுப்பும். தரையில் இடுப்பு உயரத்திற்கு சிமெண்ட் தளம். மாடுமேய்க்கும் பெரிசுகள்
கால்நடைகளை அக்கம் பக்கத்து தரிசுகளில் பத்தி விட்டுட்டு வீசும் சிலுசிலு காற்றில் கண் செருகி உறங்கிப் போவார்கள். சுகமான சுடுகாட்டு நிழல். பள்ளிக்கூடம் போகாத நாட்களில் எட்டு ஒன்பது படிக்கும் பையன்கள் பட்டம் விட ஏதுவான இடம். தடைகள் ஏதுமற்ற வெட்ட வெளி காற்றில் நீண்ட வால் ஒட்டிய காகிதப்பட்டங்கள் குட்டிப் பேய்களைப்போல உயரத்தில் பறந்தலைவதை பார்ப்பது நல்ல வேடிக்கை....

அறுவடை சமயங்களில் கருத்த மேகங்கள் சூழ்ந்து இருளும்போது கதிரடித்த தான்ய மூட்டைகளை சுடுகாட்டுக் கொட்டகைக்கு அள்ளி வந்து அடுக்கி வானம் வெளிவாங்கும் வரை காத்திருப்பார்கள். பேருந்து செல்லும் சாலை சற்று சமீபம். துக்கத்திற்கு வந்த தூரத்து உறவு ஆண்கள் இறுதிக் கிரியை முடிந்தவுடன் நாலுவயல்கள் தாண்டினால் போதும்; பஸ் பிடித்து விடலாம். பக்கத்து ஊர் டவுன் பஸ் ஸ்டாண்டிலிருந்து கூட்டிவந்த அவுசாரிகளுடன் சிலர் அங்கு ஒதுங்கிப் போவதும் உண்டு. விடியக்கருக்கலில் வயலுக்குத் தண்ணீர் கட்டச் செல்லும் உள்ளூர்வாசிகள் கண்களில் அதற்குண்டான சாட்சியங்கள் காணக்கிடைக்கும். உதிர்ந்த கனகாம்பரம், பாதி தீர்ந்த மிக்சர் பாக்கெட், பரோட்டா துணுக்குகள் ஒட்டிய தேக்கிலைகள், சிந்திக்கிடக்கும் மணக்கும் குருமா, பார்சல் கட்டிய பருத்தி நூல்கள், உருவி வீசிய ஆணுறைகள்.....

கொஞ்ச நேரத்தில் டீக்கடைக்கு செய்தி பரவும். "எந்தப் பயமொவனோ தேவடியாளோட வந்து சுடுகாட்டுல ராத்தங்கி போயிருக்கான்.''

அவ்வப்போது வரும் பாடைகளை அலங்கரிக்கும் மலர் மாலைகளிலிருந்து உதிர்ந்த விதைகள் முளைத்துப் பெருகிய பல நிறங்கொண்ட பூச்செடிகளால் நந்தவனமாகியது சுடுகாடு

வந்த கூட்டத்தின் செம்பாதியினர் ஆஸ்பெட்டாஸ் கூரையின் கீழ் வந்து நின்றனர். கொஞ்சம்பேர் மலைப்பூவரசு மரத்தடியில் அமர்ந்துகொண்டனர். அங்கும் இடம் கிடைக்காத மிச்ச சொச்சம் தள்ளியிருந்த கருவமரத்தடி போய் மேலேயிருந்து புழுக்கள் நூல் கட்டி இறங்குகிறதாவெனப் பார்த்து, உதிர்ந்து கிடந்த சிறு முட்களை காலால் தள்ளி ஒதுக்கி காலணிகளை கழட்டி அதன்மேல் சம்மணமிட்டனர்.

"கொண்டு வந்த மம்பட்டியால ரெண்டு ஆளுக வந்து சாம்பல அள்ளி வெரசா எறிங்க. ரெண்டு பேரு கொடத்த எடுத்துகிட்டு குட்டயில போயி நாலு கொடம் தண்ணி கொண்டாங்க. அப்பதான் வேலை விறுவிறுப்பா நடக்கும். அப்பறம் விருந்து சாப்பிட லேட்டாச்சுன்னு என்னய கோவப்பட வேணாம்'' நாவிதன் கட்டளையாகச் சொன்னான்.

சிதை எரிந்த இடத்தில், கொண்டுவந்த குடங்களில் இருந்த தண்ணீரை சிலிர்ப்பி விசிறினர். மண்ணுக்குள் ஒளிந்திருந்த காற்று வெப்பக் குமிழிகளாய் படபடத்து உடைந்தது. மண் சூடு ஆற இன்னும் பொறுக்க வேண்டும்.
நாவிதன் மண்டியிட்டுக் குனிந்தான். பஸ்பமாக எரிந்து நீர்த்து அடங்கிப்போயிருந்த சிதையிலிருந்து எலும்புத் துண்டுகளை விரல்களால் கிண்டி எடுத்தான். வந்த பங்காளிமார்களில் ரெண்டுபேர் மூச்சிறைக்க சாம்பலை சாந்து சட்டிகளில் அள்ளி அப்புறப்படுத்தியபடியிருந்தனர். தூசு ஒத்துக் கொள்ளாத ஆஸ்துமாக்காரர்கள் தள்ளிப் போய் மலைப்பூவரசு நிழலில் நின்றார்கள்.

"கிட்டத்தட்ட மூணுவருசமா சேந்து கெடக்கற சாம்பல பத்து லாரில அள்ளலாம் போல மலையா குமிஞ்சி ஒசந்து போச்சு.'' ---பழைய பிரசிரெண்டு சம்பிரதாயமாக ஒரு பேச்சைத் துவக்கினார்.

"அது மட்டுமில்ல; சுடுகாட்டுக்கின்னு இருக்கிற இந்தக் கேணியப் பாருங்க. இடிஞ்சு தூந்து கெடக்கு. இதுக்கொரு வழி செஞ்சா தண்ணிக்கு ரொம்ப தூரம் கொடமெடுத்துக்கிட்டு குட்டய தேடி போகவேண்டியதில்ல.''- அடுத்த ஒரு தீர்மானத்த செல்வம் எடுத்து வைத்தான்.

வந்த வெளியூர் ஒறமொறைக்காரன் ஒருவனின் செருப்பை ஊடுருவி பாதத்தில் பதிந்தது கருவேலம் முள். உருவி எடுக்கையில் ரத்தம் கசிந்து விரல் நீள முள் முழுவதும் செந்நிறம் பூசியிருந்தது.

"மத்தது எப்புடியிருந்தாலும் சுத்தி நிக்கிற கருவ மரங்கள மொதல்ல வெட்டி எறியணும். முள்ளும் மொடசலுமா சுடுகாட்ட வச்சிருந்தா மத்த ஊர்லருந்து வந்துருக்கிற சாதிசனம் என்ன நெனைக்கும் நம்ம ஊரப் பத்தி?''
ஆவேசமாக சொல்லிவிட்டு தங்கராசு அத்தனை பேர் முகங்களை ஏற இறங்கப் பார்த்தார்.

"ஆளாளுக்கு சொல்ற எல்லாமே சரிதான். வர்ற கோடையில நம்ம சாதிக்காரவுக அவ்வளவு பேரும் ஒண்ணு கூடி சுடுகாட்ட சீர்திருத்தம் பண்ணுறது தொடர்பா பேசி ஒரு முடிவுக்கு வரணும்.''-அடுத்து தலைவர் பதவிக்கு நிக்கிற ஆசையிலிருக்கும் மதிவாணன் தோரணையாகச் சொல்லி அடங்குவதற்குள், "ஆமாய்யா... பேசி முடிவுக்கு மட்டும்தான் வருவீக. ஆத்துல தண்ணி தெறந்து விட்டுட்டா அப்பறம் ஆளாளுக்கு நாத்து நடவுன்னு அவுகவுக சோலிய பாக்க வய கொல்லைன்னு வாலக் கெளப்பிக்கிட்டு போயிருவீக. மறுபடிக்கு ஏதாவது எழவு விழுந்தா திரும்பவும் இதே கதய சுடுகாட்டு நெழலுல நின்னு பேசிட்டு வேட்டிய ஒதறிக்கட்டிக்கிட்டு மறந்துட்டு பழையபடியே போயிருவீக'' -நக்கலாக சொல்லிவிட்டு நாவிதன் ஈரமணலை கைகளால் அள்ளி அணைத்து பொதியம்மாளைப் போல பொம்மை உரு செய்தான். பொறுக்கி எடுத்த சிரசு,நெற்றி, நெஞ்சு, கை, கால் எலும்புகளை மண் ஆள் உருவின் அதற்குண்டான இடங்களில் பதியச் செய்தான்.

"வண்ணான கூப்பிடுங்கய்யா யாராச்சும்''-சொல்லிவிட்டு தோளில் கிடந்த நீளத்துண்டை எடுத்து முகத்தைத் துடைத்துவிட்டு முண்டாசு கட்டி இளநீர் சீவ அரிவாளைத் தேடினார் தங்கராசு.

வளர்ந்திருந்த எருக்கஞ்செடி நிழலிலமர்ந்து சுருட்டுப்புகைத்துக்கிட்டுருந்த சலவைத் தொழிலாளி காளிமுத்து வேண்டா வெறுப்பாக எழுந்து மெதுவாக வந்தான்.

எட்டுமுழ வேட்டியை நான்காக மடித்து பொம்மை உரு அருகே போட்டான். தாயைப் பறிகொடுத்தவன் வழிந்த கண்ணீரை சட்டையால் தொடைத்தபடி மண்டியிட்டு அதில் அமர்ந்தான்.

"ஏண்டா காளிமுத்து, கூப்புட்டா ஒடனே வரமாட்டியா? அதான் எல்லாத்துக்கும் காசு வாங்கிக்கிறியன்னா; வந்து செய்ய வேண்டியதுதானே.''ஒரு மேல்சாதி எகிறியது.

"என்ன பெருசா கொட்டி கொடுக்குறீக.... அதெல்லாம் எங்குடும்பத்துக்கு ஒருநா கதைக்குக் கூட ஆகாது. அப்பறம் வர்ற செலவழிவுக்கெல்லாம் அடுத்து எப்படா எழவு விழும்னு காத்துக்கெடக்கணும்; மானங்கெட்ட பொழப்பய்யா இது.''

"ஒங்கப்பன் செவந்தான் உசிரோட இருக்கப்ப வீடுவீடா வந்து அழுக்கு எடுத்தான். இப்ப நீயென்னடான்னா மார்க்கெட்டு பாலத்துக்கிட்ட ஒரு கடைய கட்டி வச்சிக்கிட்டு எங்கள அழுக்குத் துணிமணிகள அள்ளிகிட்டு அங்க கொண்டுவந்து போடச் சொல்ற.''

"காலத்துக்கு தக்கன மாறிக்கிறதுதான் எல்லாருக்கும் மரியாதை. பழய பழக்கமொற எனக்கு கட்டுபடியாகாது.''

"ஏம்பா கட்டுபடியாகாது. பொழுதோட வந்து வாசல்ல நின்னா சட்டியில சோறு போட்டம் வீட்டுக்கு வீடு. அத நீயாகத்தானே நெறுத்திக்கிட்ட.''

"ஒங்க வீட்டு ஓசிச்சோறு எங்களுக்கு வேணாம் சாமி. நீங்க தர்ற வரும்படி வெள்ளாவி அடுப்புக்கு வெறகு வாங்கவே காணாது இந்தக் காலத்துல. துணிய கொண்டுவந்து கடையில போடுங்க. செய்யிற வேலைக்குத் தக்கன காசு; அதுபோதும்.''

"ரொம்பத்தான் எல்லாரும் கவுரவத்துக்கு ஆசப்படுறீங்க.''

"இதப்பாருங்க எஜமான்மார்களே, ரொம்ப எம்பிக் குதிக்காதிய... எங்கொழுந்தியா மவன் என்னய கேரளாவுக்கு கூப்புடுறான். அங்க அவனுக்கு சொந்தக் கடை. மூனு வேள சாப்பாடு; மாசம் சொளயா மூவாயிரம் சம்பளம். வர்ற ஆவணி மாசம் வரதான் இங்க. அதுக்கப்பிறம் காசர்கோட்ல போயி ராசா மாதிரி இருப்பேன். அங்க யாரும் ஒங்கள மாதிரி "இங்க வாடா வண்ணான்... அங்க போடா வண்ணான்'ன்னு என்னய ஏவ முடியாது.''
கோபாவேசமாகக் கொட்டிவிட்டு எருக்கஞ்செடி நிழலில் போய் மறுபடி அமர்ந்துகொண்டான்.

நாவிதன் தாயை இழந்தவனின் இரு கைகளையும் சேர்த்து கவிழ்த்து பொம்மை உடலருகே கொண்டு வந்தான். சிறு வெள்ளிக் கிண்ணமொன்றிலிருந்து எண்ணெயை அவன் புறங்கைகளில் வழிய விட்டு தாயின் எலும்புகளில் நனையும்படி மெதுவாக கைகளை நகர்த்தினான். மண் கலயங்களில் நிரப்பியிருந்த சீயக்காய், மஞ்சள்தூள், பன்னீர் கரைசல்களை அடுத்தடுத்து வரிசையாக அவன் புறங்கைகள் வழியே வழியவிட்டு மண்பொம்மையை குளிப்பாட்டினான். வழிந்தோடிய திரவியங்கள் சிறு பள்ளங்களில் வாசனை சிறு குளங்களாகத் தேங்கின. துக்கத்தின் கரு நிழல் எல்லார் முகங்களிலும் கவிந்தது.

தவசிப்பிள்ளை எறிந்த வார்த்தை நிலவிய சூன்யத்தின்மேல் அலைகளாக விரிந்தது. "மாட்டுச்சந்தையிலிருந்து வர்றப்ப வடிவேலப் பாத்தேன்; எந்த வடிவேலன்னு புரியுதா...'' எல்லார் முகத்தையும் ஒரு சுத்து பார்த்துவிட்டு
"தெக்க யிருந்து பஞ்சம் பொழைக்க வந்தானே அவனத்தான் சொல்றன்.'' என்றார்.

"புரியுது புரியுது. விசயத்துக்கு வாங்க பட்டுன்னு'' முண்டாசு கட்டிய ஒருவன் அவசரப்படுத்தினான்.

"என்னப்பா வடிவேலு ஒம் பெரியாயி புருசன் தொண்டக்கும் வாய்க்குமா இழுத்துகிட்டு கெடக்குறானாமே. செத்தா எங்ககொண்டு போயி அடக்கம் பண்றதா உத்தேசம்னேன் அவனபார்த்து. அதுக்கு அவன் "என்னப்பு இப்படி சொன்னா எப்படி. இந்த ஊருக்கு வந்த நா மொதலா ஒங்க சாதிக்கார மனுசக கூடதானே தாயா புள்ளயா பொழங்கி வர்றோம்'ன்னான்''.

"அவனுக்கு நீங்க என்ன சால்சாப்பு சொல்லி அனுப்புனீங்க'' சாம்பல் குன்றை மண்வெட்டியால் சரி செய்தபடியிருந்த பங்காளிமார்களில் ஒருவன் குறுக்கிட்டுக் கேட்டான்.

தவசி தொடர்ந்தார்.

"அவனுக்கு நா சொன்னேன், அதெல்லாம் சரிதான் வடிவேலு; நாம தாயாப்புள்ளையா இருந்ததெல்லாம் உண்மைதான். இல்லேங்கல. ஆனா இன்னிக்கு ஒனக்கு எரக்கப்பட்டா அப்புறம் நாளக்கி சேரிக்குடியிருப்புல பொணம் விழுந்தாக்க "இந்த சுடுகாட்டுல வச்சுதான் கொளுத்துவே'ன்னு அடம்புடிச்சு வம்பு பண்ணுவானுக. அதனால நல்லா கேட்டுக்க வடிவேலு, நாளபின்ன ஒம் பெரியாயி புருசன் செத்தான்னு வச்சுக்க; ஒம் வீட்டு வாசல்ல பொணத்த போட்டுகிட்டு எங்ககிட்டு வந்து நின்னு, "என்ன ஏது பண்ணலாம்'ன்னு தலய சொரியாம, பெரியஏரிக்கு அந்தாண்ட கெடக்குது பாரு ஒவட்டுத் தரிசு; அங்க கொண்டுபொயி அடக்கம் பண்ணிரு. பொறம்போக்கு நெலந்தான்; ஊருக்குப் பெரிய மனுசன் யாரும் ஒன்னும் சொல்லமாட்டான்னு அடஞ்சவருப்பா சேதி சொல்லி வுட்டுட்டேன்''

"அத்தோடு வச்சுக்கிங்க'' பழைய ஊர்த்தலைவர் முத்தாய்ப்பு வைத்தார். வெள்ளைத் துணியால் சுற்றப்பட்டு கட்டியிருந்த சிறு மூட்டையின் முடிச்சுகளை அவிழ்த்தான் நாவிதன். உள்ளே பெரிய தாம்பளத்தில் படையலுக்கான பண்டங்கள் நிரம்பியிருந்தன. அதிரசம், இட்லி, லட்டு, வடை, திரட்டுக் கொழுக்கட்டை, தேங்காய்ப்பூ தூவிய முருங்கைக்கீரை வதக்கல். பலா இலைகளால் வேய்ந்த சிறு தொன்னைகளில் பரப்பி வைக்கப்பட்டன பதார்த்தங்கள்.

பிரண்டைச் செடியை மண்பொம்மை தலைமாட்டில் பதிய வைத்தான் நாவிதன்.

அடுத்தபடியாக...

கொல்லுப்பட்டறை வச்சிருந்த பெத்தைய ஆசாரி பற்றிய குற்றச்சாட்டை ஊதிக்கிளப்பினான் ஒருவன். நடுத்தெரு கோவிந்தப்பன் வீட்டு எழவில் நடந்தது அது. ஊர் முக்கியஸ்தர்களுக்கும் பெத்தைய ஆசாரிக்கும் பெரிய தள்ளு முள்ளாப்போச்சு.

"வேவுற வெயில்ல பகல் முழுசா நின்னு பாடை செய்றதுக்கு நீங்க குடுக்கிற கூலி எங்க குடும்பத்துக்கு காணாது. பத்து மைல் தள்ளியிருக்கிற பக்கத்து டவுனுக்கு வேலைக்குப் போனா எனக்கு என்னா சம்பளம் விழுவும்னு தெரியுமா? ஒரு பீரோல் கோத்துக் கொடுத்தா துண்டா ரெண்டாயிரம். ஒரு கட்டிலுக்கு ஐநூறு அறநூறு கூடகெடக்கும். இங்க மாதிரி அங்கெல்லாம் யாரும் அதட்டி "ஆசாரிகீசாரி'ன்னு பேச முடியாது''. மறுநாள் குடிகிளப்பிய பெத்தைய ஆசாரி பெறகு ஊரையே எட்டிப்பார்க்கவில்லை. நவீன அதிதொழில் நுட்பத்துடன் சவ ரதம் தருவிக்கப்பட்டது.

மேற்புறம் தகரக்கூரை குவிந்த விதானங்களில் செடி கொடி பூ மயில் ஓவியங்கள். முன்பொரு காலத்தில் மூங்கில் பாடையை சுமக்க வரும் பங்காளிமார்களுக்கு பயம் தெளிய சாராயம் இல்லாவிட்டால் செக்கு செல்லாது. போதையில் ஆளுக்கொருபுறம் அசைத்து இழுக்க பிணத்திற்கு முதுகு வலிவந்து அழ ஆரம்பித்துவிடும். இப்போது டீலக்ஸ் சவ ஊர்தியில் நான்கு புறமும் காற்றடைத்த சைக்கிள் டியூப்கள். வெளிநாட்டு காரில் வந்திறங்கும் நடிகையைப்போல பிணம் அலுங்காமல் குலுங்காமல் சுடுகாடு வந்தடைவதில் ஊர்க்காரர்களுக்குப் பெருமிதம்.

நாவிதன் கூட்டிலிருந்த பத்திகளை கொத்தாக கொழுத்தி வாழைபழத்தில் செருகினான். தூபக்காலில் மூட்டியிருந்த அனலில் சாம்பிராணிப் பொடிகளைத் தூவ எழும்பிய புகையில் அமானுஷ்யத்தின் வாசம் கமழ்ந்தது.

"அடுத்தாப்ல இன்னொரு பிரச்சன. அத பேசறதுக்கு பொருத்தமான எடமும் இதுதான். நம்ம சாதிகாரவுங்க அத்தன பேரும் கூடியிருக்கோம்ல'' புதிதாக செயித்து வந்த தலைவர் விசயத்தை முன்மொழிந்த போது ஒட்டுமொத்த கூட்டமும் அவர் முகம் பார்த்தது.

"தொடந்தாப்ல ரெண்டுமூணு எழவுக்கு எவனும் தப்படிக்க வரல''

"ஊர்த்தலைவர் நீங்கதானே அதெக்கேட்டு என்ன எப்புடின்னு வழி பண்ணனும்''

"கேட்டேனே''

"என்ன சொன்னானுவ''

"இத்தன காலமா நாங்க தப்படிச்சோம். அடிச்சு அடிச்சு எங்க கை அசந்து போச்சு. கொஞ்ச காலம் நீங்க அடிச்சா அதுல என்ன தப்புங்றான்''

நாவிதன் படையலில் பரப்பியிருந்த பதார்த்தங்களைப் பிட்டு முருகானந்தம் கையில் கொடுத்தான். மண்பொம்மை உருவின் வாயில் ஊட்டச் சொன்னார்கள் உறவினர்கள். அவன் அம்மாவை நினைத்து அழுதான்.
நாவிதனைப் பார்த்து ஊர்பெரிசு ஒருவர் அறிவுரை சொல்வதாகப் பாவித்துச் சொன்னார்.

"ஏம்ப்பா சுப்பு, ஒம் பையன் வீட்ல சும்மாயிருந்தா அவனயும் கையோட அழைச்சி வரதுதானே. ஒனக்கும் இங்கு ஒத்தாசயா இருக்கும்; அவனும் வேலய தெரிஞ்சுக்கிட்டதா இருக்கும்.

"வேண்டாம் அப்புகளா. ஒங்க புள்ளைகள மட்டும் டவுன்ல கொண்டுபோயி கம்ப்யூட்டரு படிக்க வக்கறீங்க, எம் பொள்ள வந்து இதே அடிமை வேலய கத்துக்கணும்னு நெனக்கிறீங்க எல்லாருக்கும் ரொம்ப பரந்த மனசுதான் போங்க.''

எளக்காரமாக சிரித்தபடி மண் கலயத்தில் திருநீரை குழைத்து மூன்று பக்கமும் பட்டையாக பூசினான். முப்புறமும் குங்குமத்தால் பொட்டிட்டான்.

"அதுக்கில்ல சுப்பு, நான் ஏன் சொல்றேன்னா...''

"நீங்க ஒன்னும் சொல்ல வேணாம். அதெல்லாம் எந்தலயோட போவட்டும். எம் புள்ள படிச்சு பெரிய வேலைக்குப் போயி டவுன்லதான் குடியிருக்கணும். இன்ன சாதின்னு மூஞ்சிலயா எழுதி ஒட்டி வச்சிருக்கு. இந்த ஊர்க்காரவுக கண் காணாத எடத்தில போயி அவனாவது மரியாதயா வாழட்டும்'' என்று நாவிதன் சொல்லி சூடம் ஏற்றி மண் உரு பொம்மைக்கு ஆரத்தி எடுத்தான். முருகானந்தம் விழுந்து வணங்க குனிந்தான்.
தன்னையும் அறியாமல் வாய்விட்டுக் கத்தினான்.

"என்னப் பெத்த தாயே... எனக்கு இனி யாரு பொங்கிப்போடுவா'' அவனை கைத்தாங்கலாகப் பற்றி அழைத்துப் போனார்கள்.

நாவிதன் மண் பொம்மையில் பதித்து வைத்த சிரசு, நெற்றி, நெஞ்சு எலும்புகளை கவனமாகப் பெயர்த்து உருவினான். அவைகளை கலயத்தில் இட்டு சாம்பிராணி புகையை உள்ளே பரவ விட்டான். மஞ்சள் துணியால் கலயத்தின் வாயை மூடி மல்லிகைச் சரம் சுற்றி முடிச்சு போட்டான். மரணத்தின் முகம்போல இருந்தது மண்கலயம்.

நாவிதன் சங்கெடுத்து உரத்து உதினான். கூட்டம் மெல்லக் கலைந்து கொண்டிருந்தது.

தலை மழிக்கப்பட்ட, தாயை சாவக்கொடுத்த பிள்ளை தோளில் சுமந்தலயத்துடன் சுடுகாட்டு குளத்தில் மூழ்கி எழுந்தான். அவன் கைகளில் அந்தக் கலயம் இல்லை.

Pin It