சுப்ரபாரதிமணியனின் புதிய நாவல் - தறிநாடா

நெசவாளர் வாழ்க்கை சார்ந்த இலக்கிய பதிவுகள் தமிழில் குறைவாகவே இருக்கின்றன. சோசலிச யதார்த்தவாதம் என்ற முத்திரையுடன் தொ.மு.சி இரகுநாதனின் “பஞ்சும் பசியும்” முன்நிற்கிறது. திருப்பூரில் நடைபெற்ற நாற்பதாண்டுகளும் முந்திய நெசவாளர் போராட்டம் ஒன்றினை இந்நாவல் மையமாகக் கொண்டுள்ளது. கூலி உயர்விற்காக கூட அவர்கள் போராடவில்லை. குறைத்த கூலியை சீராக்கக் கோரிதான் அப்போராட்டம் நடைபெற்றது. தொழிற்சஙக ரீதியாக நெசவாளர்கள் போராடினார்கள் என்பதை விட ஜாதிய ரீதியில் ஒன்றுபட்டது அந்தப் போராட்டத்தின் பலவீனமாகும். நெசவாளர் சமூகம் சார்ந்த தொன்மக்கதைகள் இந்நாவலில் விரவிக் கிடக்கின்றன. தொனம மனிதர்களின் பிரதிகளான அவர்கள் வாழ்க்கை நிகழ் காலத்தில் விரிகிறது. ஜாதீய வன்முறைகளைக் கண்டு ஒடுங்கிப்போகிறார்கள். அரசின் அலட்சியமும் அவர்களை அந்நியமாக்குகிறது.

பனியன் தொழிலுக்கு இடம் பெயர்கிறார்கள் சிலர். கேரளாவிற்கு அரிசி கட்த்தவும் செல்கிறார்கள். போராட்டங்களும் சிறை வாழ்க்கையும் அவர்களுக்குப் புதிதாக இருக்கிறது. அச்சமூகத்திலிருந்து வரும் இளைஞன் ஒருவனின் வாழக்கை மீதான பார்வையும் அவனின் எதிர்கால லட்சியமும் மாறுவதை இந்நாவல் சித்தரிக்கிறது. “இதென்ன எம்.ஜி. ஆர் வாளா. கையில் எடுத்ததும், பிரச்சினை தீர்ந்து போறதுக்கு. கொல்லன் பட்டறையிலே இருக்கறது, தட்டித் தட்டிதான் செழுமையாக்க முடியும். தானே செழுமையாகும்” என்ற இயங்கியல் அவனின் வாழ்க்கையில் வித்தாகிறது.போராட்டமும் பொதுவுடமை இயக்க வாழ்வும் அவன் ஏற்றுக் கொள்கிறதாகிறது. உலகமயமாக்கல் சூழலில் தொழிற்சங்க இயக்கங்கள் வலுவிழந்து கொண்டிருக்கும் நிலையிலும், இளைஞர்களின் கவனம் அரசியலுக்கு மாறாத நுகர்வுச் சூழலிலும் இந்நாவலுக்கு முக்கியத்துவம் இருக்கிறது.

தொழிற்சங்கங்கள் அரசியலுக்குள் வரவேண்டும்.அரசியல் அதிகாரம் இல்லாமல் தொழிற்சங்கங்கள் செயல்பட முடியாது. தொழிலாளர்களைப் பாதுகாக்க முடியாது. பொருளாதார இயல்பில் எல்லாம் மாறுவதை, வளரும். ஒடுக்குமுறை, ஏற்றத்தாழ்வுகளின் எல்லா வடிவங்களையும் எதிர்த்துப் போராடுவது புதிய சமூகத்தை நிர்ணிக்கும் என்பதை வாழ்வியல் மூலம் இந்நாவல் முன்வைக்கிறது. (தறிநாடா பக். 240, விலை ரூ 185 / என்சிபிஎச் வெளியீடு, சென்னை)

சப்பரம் -நுணுக்கமான வரிகளால் பின்னப்பட்ட எழில்மிகு சேலை.

நெசவாளர் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் வாழ்க்கையில்தான் பெற்ற வலியைப் பொறுக்க முடியாமல் துவண்டு போகிறநிலை இன்னும் எத்தனை ஆண்டுகளுக்குத் தான் தொடரப் போகிறது. கண்ணகியும், நல்லதங்காளும், சீதாவும், பாஞ்சாலியுமாய் எத்தனை பெண்கள்.

நெசவாளர் சமுதாயத்திற்கே உரிய கத்தி போடுதல், கோயில்கள், கொண்டாட்டங்கள், தறிக்குழி மண்ணைக் கொண்டு சௌண்டியம்மன் கோயில் தீர்த்தத்தில் கரைந்து இறக்கும் தறுவாயில் உள்ளவருக்கு ஊற்றுவது போன்ற நிகழ்வு யாவும் சிறப்பாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

ரோஹினியின் மரணம் அதுகுறித்த அவதூறு ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு. தூக்கிச் செல்வதற்காக கட்டப்பட்ட பல்லக்கு பல்லக்காய் இல்லாமல் சப்பரமாய் இருக்கிறது என்ற வரிகளோடு கதை முடிகிறது.

மெல்லிய இசை போல் இழையோடிக் கொண்டிருந்த காதல் தகப்பனின் பொறுப்பற்ற தன்மையாலேயே இடையிலேயே அறுபட்டு அல்லாடுகிறது.

விரிவான முன்னுரை அவரின் இலக்கிய அனுபவங்களையும் திரைப்படத்துறை கசப்புகளையும் விரிவாய் சொல்கிறது. தன்னைச் சூழ்ந்துள்ள மனிதர்கள் நெருக்கமானவைகளை மட்டுமின்றி கண்டு கேட்ட உற்று உணர்ந்தவற்றையே தன் படைப்பில் வெளிப்படுத்தியுள்ளார். - கோவை ஆட்டனத்தி (ரூ.100, காவ்யா பதிப்பகம் வெளியீடு, சென்னை)

சுப்ரபாரதிமணியனின் நீர்ப்பாலை கட்டுரைத் தொகுதி

சுப்ரபாரதிமணியனின் இந்நூலின் கட்டுரைகள் அவரின் சில எழுத்துலக அனுபவங்கள், சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சினைகள் குறித்தக் கட்டுரைகள் என்று இரு வகையில் அமைந்துள்ளன. ஒரு வகையில் அவரின் சுயசரிதை தன்மையை இது வெளிப்படுத்துவதாகக் கூட கொள்ளலாம்..முதல் பகுதி சுற்றுச்சூழல் குறித்த அக்கறை எண்ணங்கள் உள்ளன. நதிகள் மாசுபாடு, விவசாயம் பாழடைதல், குழந்தைத் தொழிலாளர் நிலைமை, வளர் பெண்கள் சுமங்கலித் திட்டத்தால் பாதிக்கப்படுவது, தொழிற்சுமையால் நாறப்துகளிலேயே கிழடு தட்டிப்போகும் தொழிலாளர்கள் என்று தன்னுடைய பெரும்பான்மையான நூல்களின் மையமான கருத்துக்களை ஒவ்வொரு கட்டுரையிலும் விவரணையாக எடுத்துரைக்கிறார் சுப்ரபாரதிமணியனின் இவ்வகைச் சிந்தனைகளும் இன்னும் பல சமகால எழுத்துக்களையும் எழுத்தாளர்களையும், சமூக சிந்தநையாளர்களையும் பற்றி அறிய , அரிய அனுபவமாகவும் இந்நூல் விளங்குகிறது. அவரின் இன்றைய எழுத்துலக, சுற்றுச்சூழல், தமிழ்வழிகலவிப்பணியோடு இணைத்துப் பாக்கிற அம்சங்களை இக்கட்டுரைகளில் காண முடிவதால் இந்நூலில் சுயசரிதை அம்சங்களை வேறு பரிமாணத்தில் அறிந்து கொள்ள முடிகிறது.(ரூ.50, வைகறைப் பதிப்பகம், திண்டுக்கல்)

-மருத்துவர் சு. முத்துச்சாமி, பாண்டியன் நகர், தாய்த்தமிழ்ப்பள்ளி, திருப்பூர்.

சாயத்திரை : சுப்ரபாரதிமணியனின் நாவல்

தமிழக அரசின் சிறந்த நாவல் பரிசு பெற்றது.

ஆங்கிலம், ஹிந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் வெளிவந்துள்ளது. தமிழின் சிறந்த நாவல் பட்டியலில் இடம் பெறுவது.

விளம்பர யுகத்தின் வண்ணங்கள் காட்டும் மாயையில் இன்று நாம் சிக்கியிருக்கிறோம். இந்த வானவில்லின் பின்னால் அனைத்தும் சோகம். இயற்கையைப் பார்த்து, அதைப் போல் தானும் வர்ணங்களை சிருஷ்டிக்க முடிந்த மனிதன், புலியைப் பார்த்து பூனை சூடிட்டுக்கொண்டாற்போல் அவதியுறுவதை சுப்ரபாரதிமணியன் மறக்க முடியாத-அல்ல, மறக்கக் கூடாத-புதினமாக வடித்திருக்கிறார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தரையில் உதிர்ந்த பவழ மல்லி மலர்களைப் பிழிந்து தம் உடைக்குக் காவி ஏற்றிய புத்த பிட்சுக்கள் இயற்கையை அழிக்கவில்லை. இன்று இயற்கையின் மகத்தான படைப்பாம் மனிதனை இந்த வண்ண மோகம் எப்படி அரித்துக் கொண்டிருக்கிறது, அழித்துக் கொண்டிருக்கிறது என்ற அவலத்தை சாயத்திரை நாவல் எடுத்துச் சொல்கிறது.

இந்த நாவல் தற்காலத் தமிழ் இலக்கியத்தில் கலைப்பாங்குடன் சொல்வது என்பதிலும் பொருள் காரணமாகவும் முக்கியத்துவம் பெறுகிறது. நவீனத்திற்குப் பின் எனப்படும் உத்தியில், கதை முன்னேறுவது போல் தோன்றாமலே முன்னேறும் வகை ஒன்றுண்டு. இதை இடைவெளி வழி (Spatial form என்பார்கள். பல அனுபவங்கள் திட்டுத்திட்டாகத் தரப்படும். ஒன்றுக்கு ஒன்று சொல்லிக் கொள்ளும்படியான தொடர்ச்சி இருப்பது போல் தோன்றாது. ஆனால் புள்ளிகள் சேரச்சேர கோலத்தின் சொரூபம் தெரிவது போல் சில நேரங்களில் பல மனிதர்களின் அனுபவங்களை உள்வாங்கிக் கொள்ளும்போது, கதாசிரியரது நோக்கம் புரியும். சுப்ரபாரதிமணியன் இந்த எழுத்து நடையை சிறப்பாகக் கையாண்டிருப்பதால் நம் சிந்தனைகள் நெஞ்சை நெருடுவதேயன்றி, மனிதாபிமானத்துடன் நாம் செயல்பட வேண்டும் என்பதையும் உணர்த்துகிறது.

1962ல் முதன் முதலாக வெளிவந்த ரேகல் கார்ஸனின் மவுன வசந்தம் (The silent Spring)) நூல் தந்த அதிர்ச்சியில், மேலை நாடுகளில் சுற்றுச்சூழலைக் காக்க வேண்டும் என்ற உணர்வு பரவலாயிற்று. சுப்ரபாரதிமணியனும் அப்படியரு அதிர்ச்சி தந்திருக்கிறார். (விலை : ரூ.195, எதிர் வெளியீடு, நியூ ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி. 98650 05084)

குப்பை உலகம் :

சுப்ரபாரதிமணியன் திருப்பூரில் இருந்து கொண்டு தமிழ்கூறு நல்லுலகத்தைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் என்றால் அதற்குக் காரணம் அவரது அறச் சீற்றம். சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்காக அவர் எழுப்பும் குரல் ஓங்கி ஒலிக்கிறது. ஆனால் செவிட்டு உலகம் அதைக் கேட்க மறுக்கிறது. அதலானென்ன. அவர் ஊதுகிற சங்கை ஊதிக் கொண்டுதான் இருக்கிறார். இருப்பார்.

சுற்றுச்சூழல் பிரச்சினைகள் பற்றிய 25 கட்டுரைகளின் தொகுப்பை “குப்பை உலகம்” என்கிற தலைப்பில் புத்தகமாக வெளிக் கொணர்திருக்கிறார் சுப்ரபாரதிமணியன். சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் எல்லாப் பிரச்னைகளையுமே இந்தக் கட்டுரைத் தொகுப்பு தொட்டுக் காட்டியிருக்கிறது. நமது மூளையில் உரைப்பது போல சுட்டிக் காட்டுகிறது.

“பாதரசத்தின் உற்பத்தியில் பாதி அளவு மின்னணு பொருள்களின் தயாரிப்பிற்குப் பயன்படுகிறது. பாதரசம் நிலத்தடி நீரில் கலந்து குடிநீராக சுலபமாக வீட்டுக்குள் வந்து சேர்ந்து விடுகிறது. இரத்தத்தில் சிறுகச் சிறுக சேர்கிறது. மூளை சிறுநீரகம், கல்லீரல் போன்றவற்றை மெல்ல பாதிக்கிறது. கருவுறுதல், இனப்பெருக்கத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இப்படி மின் குப்பைகளால் பாதிப்பு, துரித உணவால் பாதிப்பு என்று ஏற்படுவதுடன் உலகமே குப்பையாகிக் கொண்டிருக்கிறது.

சுப்ரபாரதிமணியனின் இந்தப் புத்தகத்தை படிக்கும் ஒவ்வொருவரும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆர்வலராகி விடுவீர்கள். நீங்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அக்கறை செலுத்துபவரா? ஒரே ஒரு உதவி செய்யுங்கள். அய்ந்து இளைஞர்களுக்கு இந்தப்புத்தகத்தை வாங்கிப் பரிசளியுங்கள். அவர்களை இந்தப் பிரச்சனை பாதிக்குமேயானால், அய்ந்து பேருக்கு அதே போல வாங்கிப் பரிசளிக்கப் பணியுங்கள். சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய மிகப் பெரிய விழிப்புணர்வை நாம் தமிழகத்தில் செய்து காட்டிவிடலாம். - “தமிழ்மணி” யில் கலா ரசிகன் ­வைத்தியநாதன்

குப்பை உலகம் - சுப்ரபாரதிமணியனின் சுற்றுச்சூழல் கட்டுரைகள் , ரூ 50 / வெளியீடு : (சேவ், 5 அய்ஸ்வர்யா நகர், கேபி என் காலனி, திருப்பூர் (0421 2428100, 98422 31033)

முத்துக்கள் பத்து (சுப்ரபாரதிமணியனின் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 சிறுகதைகள்)

சுப்ரபாரதிமணியனின் மொத்த சிறுகதைகள் 200. தன் அரசியல் முகத்தை சுப்ரபாரதி மணியன் என்றைக்கும் ஒளித்து வைத்துக் கொண்டதில்லை. மாற்று அரசியல் குறித்த அக்கறையை அவை சுட்டுகின்றன. அவை கோரும் தத்துவ சார்பை எப்போதும் உரக்கத் தொனித்ததில்லை. யதார்த்தம் மீறிய மாயத்தன்மையை அவரின் சில கதைகளில் அடையாளம் கண்டு கொள்ளலாம். அவை பெரும்பாலும் கனவு நிலைகளில் வெளிப்படுகிறது. எந்த முன் தீர்மானமும் இன்றி கதைகள் நகரும்போது சொடுக்கப்படும் சாட்டையின் வீச்சை சுலபமாகக் கண்டு கொள்ளலாம். மனிதத்துவத்திற்கு எதிராக நடக்கும் எல்லாவிதமானக் கொடூரங்களையும், அதீத செயல்களையும் அடையாளம் கண்டுகொள்கிறார். அடையாளப்படுத்துகிறார். விளிம்புநிலை மக்களில் பொறுக்கிகள், உதிரித் தொழிலாளர்களும்கூட இக்கதைகளில் அழுத்தமாக இடம் பெற்றிருக்கிறார்கள் நம்முடன் உறவாட இவ்வளவு மனிதர்கள் இருக்கிறார்களா என்ற எண்ணமும், நம்பிக்கையும் இவரின் கதாபாத்திரங் களோடு பயணிக்கும்போது தென்படுகிறது. (ரூ 90, அம்ருதா பதிப்பகம், சென்னை)

சுடுமணல் : நாவல்

மனிதர்களுடைய வாழ்க்கை நிலைப்பாடு என்ற நிலையில் அவசியமான தேவையாக உள்ள இழைப்புச் சக்தியைக் குத்தகைக் கம்பெனிகளுக்கு அடகு வைக்கும் செயலில் கூட்டாகச் சேர்ந்து செய்யப்படும் அரசியல் கட்சிகளுக்கு எதிராகவும், மக்கள் விரோத சக்திகளுக்காய் எதிராகப் போராடும் அமைப்புகளுக்கு ஆதரவாகவும் காணப்படுகிற நிலைப்பாடுகளை அடையாளப்படுத்தும்விதத்தில் நதிநீர்ப் பிரச்சினையால் பாதிக்கப்படுகிற சமூகம் பற்றி படைக்கப்பட்டுள்ள நாவல்தான் “சுடுமணல்”. -தோப்பில்மீரான்

 (மறுபதிப்பு ரூ 75/ என் சி பி எச் வெளியீடு சென்னை)

வேறிடம் : குறுநாவல்கள் தொகுப்பு

புகைப்பட நுணுக்கங்களில் சொல்லில் விரியும் அனுபவங்கள். ‘பொறியில் அகப்பட்டுக் கொண்ட எலி’ போல் வாசகனது மனதை அலைக்கழிக்கும். படபடவென மூச்சுத் திணற வைக்கும் முடிவுகளின் அழுத்தம், மனதில் துளைக்கப்பட்ட வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும். அவ்வகையில் அமைக்கப்படும் முன் புனைவுகளின் நிர்பந்தம் புரிபடுகின்றது.

அதிகார வர்க்கத்தினரின் அகோரப் பசிக்கு இரையாகும் உயிர்ப்பலி விளையாட்டை அப்பட்டமாகச் சொல்லும் ‘நகரம் 90, நித்திய கண்டம் பூர்ணாயுகமாக கர்ப்பியூ காலத்து அவதிப்படும் ‘நரக’ வாழ்க்கையைக் கண்முன் நிறுத்துகிறது. நித்தம் நடக்கும் கொலை, கொள்ளை, அடாவடித் தனத்தைக் காரணம் காட்டி ஆளும் கட்சியின் எதிர் குரூப் முதலமைச்சரைக் கவிழ்த்துவிட்டு நாற்காலியைப் பிடுங்கிக் கொள்கிறது. அதற்கான விலையாகத்தான் அப்பாவி மக்களின் உயிர்ப்பலிகள். ( ரூ.120.என்சிபிஎச்)

நாளை மற்றொரு நாளல்ல : திரைப்படக் கட்டுரைகள்

“இந்தியாவில் நடைபெறும் திரைப்பட விழாக்களில் கலந்து கொள்பவர் சுப்ரபாரதிமணியன். விழாக்கள் குறித்தும் அதில் பங்கு பெற்ற திரைப்படங்கள் குறித்தும் விரிவாக அலசுகிறார் இந்த நூலில். உலக அரசியல் திரைப்படங்கள் குறித்தும் விளிம்பு நிலை மனிதர்களின் திரைப்படங்கள் குறித்தும் அதிகம் பேசப்படாத குறும்படங்கள் குறித்துமான அவரது நுண்மையான பார்வையை அழுத்தமாகப் பதிவு செய்கிறது இந்த நூல். (ரூ.60, உயிர்மை பதிப்பகம், சென்னை.)

மனக்குகை ஓவியங்கள் : கட்டுரைகள்

எழுத்தாளர்கள் பற்றிய அபிப்பிராயங்களை, புத்தக அறிமுகங்களை சுப்ரபாரதிமணியன் மனக்குகை ஓவியங்கள் என்று இதில் தொகுத்துள்ளார். அவருடைய அஸ்திவாரமே விளிம்பு நிலை மக்கள், சுமங்கலித்திட்டம், குழந்தைத் தொழிலாளர் உழைப்பு, நதி மாசுபடல் போன்றவை. அதன் மீதான எழுத்தில் அக்கறை கொண்டவர். நிறையப் பத்திரிக்கைகள், தொலைக்காட்சி ஊடகங்கள் மக்களைத் தங்கள் வசம் ஈர்த்துக் கொண்டு இருக்கிற நேரத்தில் நிறைவான எழுத்தாளர்களைப் பற்றி மனக்குகை ஓவியங்கள் என்ற தலைப்பில் கட்டுரைகள் விரிகின்றன. தியானத்தில் உட்கார்ந்தால் முதலில் வருவது வண்ணங்களே. அது போல் எழுத்தாளன் தனக்கென்று வண்ணங்களை வைத்து ஓவியமா, காவியமா என்பதைப் பற்றிய புத்தகம். -சாமக்கோடாங்கி ரவி (விலை.60, என் சி பிஎச், சென்னை)

 மந்திரச்சிமிழ் -கவிதைத் தொகுப்பு

சமூகமும் அதன் செயல்பாடுகளும் ஏற்படுத்தும் மன அவஸ்தைகளின் வெளிப்பாடாகவும், இருப்பின் சிதைவையும், வெளி உலகத்தின் நிர்ப்பந்தங்களையும், அவற்றின் எதிர்வினையாகவும் இக்கவிதைகளைக் கொள்ளலாம். இக்கவிதைகள் எளிமையானச் சொற்களுடனும், படிமங்களின் பாரத்தாலும், அனுபவங்களின் திரட்சையாலும் மூச்சுத்திணற வைக்கின்றன. காட்சிகளின் விவரிப்பும், படைப்பாக்க ரசவாத்தின் சூட்சுமமும் பெரும் வெளியாய் விரிகின்றன. அடிமைத்தளத்திலிருந்து வெளியாகும் முனகல்கள் விடுதலைக்கான அம்சங்களையும் கொண்டிருக்கின்றன. கதறலும், காதலும், அன்பின் வலிமையும், சுதந்திரமாய் பறத்தலும் என்று விரிகின்றன. அவரின் புனைகதைகளின் அம்சங்களை இவற்றிலும் அடையாளம் கண்டுகொள்ள முடிந்தாலும் அதன் கச்சாப்பொருட்களிலிருந்து அவரால் விலக்கிக் கொள்ள முடியாதபடி இக்கவிதைகளின் மறுவாசிப்பு அமைந்துள்ளது. கவிதை மூலம் மொழி சார்ந்த பயிற்சி, புதிய பிரக்ஞைக்கான தளம், அனுபவப் பகிர்வு, தொடரும் வாசகனின் நுண்ணியப் பார்வைக்கான சவால் இக்கவிதைகள். (காவ்யா, சென்னை. ரூ.100)

மண் புதிது -பயண அனுபவம்

சுப்ரபாரதிமணியனின் வெளிநாட்டுப் பயண அனுபவங்கள். அய்ரோப்பியா, இங்கிலாந்து நாடுகளின் சுற்றுலா இடங்கள் போல வாசகர்களுக்கு அறிமுகப்படுத்த புலம் பெயர்ந்த தமிழர்களும் நிறையப் பேர் இருக்கிறார்ள். திரைப்படம், ஓவியம் என்று அவர்களின் உலகமும் இதிலுண்டு. (மறுபதிப்பு ரூ.60 என் சி பி என், சென்னை)

நோபல் பரிசு பெற்றவர்களின் கதைகள்

கனவு இதழில் வெளிவந்த 9 நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர்களின் கதைகளின் தொகுப்பு இது. பொன்மன வலசகுமார், குறிஞ்சிவேலன் மொழிபெயர்ப்பில் வந்தவை. வெவ்வேறு நாடுகளின் கலாச்சாரங்கள், மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலிப்பவை. (என்.சி.பி.எச்., சென்னை)

உயில் மற்றும் பிற கதைகள் :

பி.தாஸின் ஒரியக்கதைகள் : தமிழில் : சுப்ரபாரதிமணியன்

ஒரிய எழுத்தாளரான் ஜெ.பி. தாஸ் சரஸ்வதி விருது, சாகித்ய அகாதெமி விருது போன்ற பல முக்கிய விருதுகளைப் பெற்றவர். கவிதை, சிறுகதை, நாவல்கள், நாடகம், ஆய்வுகள் உட்படப் பல தளங்களில் இயங்கி வருபவர். ஒரிய விளிம்பு நில மக்களின் வாழ்க்கையை அம்மக்களின் கலாச்சார அம்சங்களோடும், தொன்மங்களோடும் தனித்தன்மையுடன் வெளிப்படுத்தியிருப்பவர். இத்தொகுப்பின் கதைகளில் ஒரு பகுதி எழுத்தாளர்களின் அனுபவங்கள், பெண்களின் பிரச்சினைகளைக் கூர்ந்து கவனித்துப் பேசுபவை என்பதால் மிகுந்த கவனம் பெறுபவை. (ரூ 160, 260 பக்கங்கள், சாகித்ய அகாதமி வெளியீடு, சென்னை)

Pin It