என் அம்மா

நான் ஒவ்வொருமுறையும்
புதிய கவிதை எழுதும்போது
என் படிப்பறிவில்லா அம்மா
முதலில் புரிந்து ரசித்துக் கொள்வது வழக்கம்
வார்த்தைகளின் அர்த்தத்தொனி
அவளுள் மினுங்கும். 

என் விரியும் கண்களும்
துடிக்கும் உதடுகளும்
அவளின் கண்களில் மினுங்கும்.
அவளின் சோறு ஊட்டும் விரல்களிலும்
பலபல சிரிக்கும் கவிதைகள் மினுங்கும்.

‘இன்றையக் கவிதை
நேற்றையது போல இல்லை.
அதைவிடச் சிறப்பாக
முந்திய கவிதையைவிட இதில் அர்த்தமிருக்கிறது.

புது அர்த்தம், தொனி நிரம்பியிருக்கிறது
இன்றைய கவிதையில்.

நீ என் கவிதை, மகனே
நீ என் ஜீவன் மகனே
உன் கவிதை
பல வர்ண வானவில்லையும்
கந்தர்வ சங்கீத லயத்தையும் தருகிறது.

அது என் உயிர், பலம் என் மகனே’
இதுபோல் என் அம்மா
அவளின் மௌனத்தில் பாடுகிறாள்.

என் அம்மா
சாதாரணமானவள்
மாயாஜாலமானவள்
மர்மமானவள்

இப்போது மயில் மகிழ்ச்சியாக ஆடுவதைப்போல
என் பக்கத்தில்
படித்த மனைவி ஆடுகிறாள்.

படித்த என் மனைவியுள்
படிப்பறிவில்லாத என் அம்மாவை
நான் தேடுகிறேன்.

பையன்கள் அப்படியே

பெண்கள் அதுபோல என்று
அவர்களைப் பின் தொடராதே, சுற்றாதே என்று
உன்னிடம் மகனே ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.

காட்டின் இனியப் பாடலை
புரிந்து கொள்ளாதது போல
சமூகத்திலும், குழுக்களிலும் பல பெண்களைப் போல,
அழகானப் பெண்களின் ஆழத்தை
புரிந்து கொள்ள முடியாது என்று நான் சொன்னேன்.

நீ பிடிவாதக்காரன்
என் அறிவுரையைச் சரியாகப் புரிந்து கொள்ளத் தவறுகிறாய்
ஏதாவது ஒரு பெண்ணின் பின்னால் மட்டும்
மறுபடியும் மறுபடியும்
தினமும் திரிந்தால்
சரியாக ஏதோ நடந்திருக்கும்.

உற்சாகத்தில் நீ
பல பெண்களைத் துரத்தினாய்.
இப்போது இருக்கட்டும்
இந்தப் பெண்கள் அப்படியே
என்ன செய்ய
பையன்களின் அலட்சியத்தால்
சிதைந்த வர்ணமயமானப் படிமங்கள் முட்டி மோதுகின்றன.
ஒவ்வொரு வார்த்தைக்கும்
அவன் பதிலளிக்கிறான்
எனவே நான் விட்டுவிட்டேன்

காதல், திருமணம், இத்யாதி
என்ற இந்த இலக்கணத்தில்
ஒரு ‘ஒருமை’ மட்டுமே நல்லது.
அது புரிந்து கொள்ளச் சுலபமானது, பத்திரமானது.

ஒருமையாக
ஒரு பையன் ஒரு பெண்
ஒரு பெண் ஒரு பையன் சரியானது.

பன்மையாக அது -
எல்லா மொழிகளிலும்
எங்கும் பிளவு ஏற்படுத்துகிறது.
பலருக்கு இதைப் புரிந்து கொள்வது சிரமம்.

என்ன செய்ய
பெரும்பாலும் பையன்கள் மட்டும் இப்படி.
இவர்களை எப்படி புரிந்து கொள்ள வைப்பது
அவர்களின் வயதில் நாங்கள் இருக்கும்போது பட்ட
காயங்களும், வேதனைகளும் அவர்களால்
புரிந்து கொள்ள முடியாது.

என்ன செய்ய
இது தெளிவான கணக்கு.
பையன்கள் இதுபோலவே.
எனவே பெண்களும் அதுபோலவே.

சுந்தரி

பரம சுந்தரியாக இருந்தாள் அவள்
நான் அவளை மிகவும்
மிகவும் நேசித்தேன்.

இதன் மத்தியில் ஏதோ நடந்துவிட்டது.
வேறுபாடுகள் விசுவரூபித்து
உறவு ஆழமாய் பிரிந்து வேதனை தந்தது.

இப்போது வாழ்க்கை என்னும் நதி
பிரவாகமாய் ஓடிக் கொண்டிருக்கிறது.
திருமணத்திற்கு பிறகு
வெகு ஆனந்தமாய் நாட்கள் கழிந்தன.
காரணம் யூகிக்க முடியுமா?
என் யௌவன காலத்தில் என்வாழ்க்கையில்
நான் தொலைத்த பரமசுந்தரியை
பல வருடங்களுக்குப் பிறகு கண்டுபிடித்தேன்
நம் மகளாக கண்டுபிடித்தேன்

நானும் அவளும் இப்போது
மிகவும் மிகவும்
நேசிக்கிறோம்.

(சாகித்ய அகாதமியின் Ethic Literature in Indian languagesதேசிய கருத்தரங்கில் (பொள்ளாச்சி) இடம் பெற்ற கவிதைகளில் சில...)

தமிழில் : ஆர்பிஎஸ்

Pin It