‘பங்கரி’லிருந்து வந்த மனிதனை
வரவேற்றேன்.
தேநீரும், சாப்பாடும் வாங்கித் தந்தேன்
ஒரு குளியல் போட்டால் நன்றாக இருக்கும் என்றார்
அலுவலக நேரத்தில்
அலுவலகக் கழிப்பறையில் (குளியலறை என்று தனியே இல்லை)
ஒரு மனிதனைக் குளிக்க வைப்பது
சாமான்யக் காரியமல்ல
(மெமோ - விளக்கம் தரவேண்டியிருக்கும்
அலுவலகத் தண்ணீர் குழாயிலிருந்து
இரண்டு குடம் குடிநீர் கொண்டு போனதற்கான நடவடிக்கை
என்மேல் இன்னும் கோப்பில் இருக்கிறது)
‘பங்கரில்’ கடவுளையும், சாத்தானையும்
சந்தித்ததாகச் சொன்னார்.
கடவுள் நீங்குகையில் சாத்தானும்
சாத்தான் நீங்குகையில் கடவுளும் வெளிப்படுவதாகக்
கற்பனை செய்து கேட்டேன்.
இருவரும் ஒரே நேரத்தில்
“பங்கர்” குழிக்குள்
அருகருகே பதுங்கியிருந்தார்கள் என்றார்.
எனக்காவது தூக்கம் அவ்வப்போது வாய்த்திருந்தது
கடவுளும், சாத்தானும் ‘பங்கரிலும்’ தூங்குவதில்லை என்பது
வருத்தமாக இருந்தது.
முடிகிறபோது வாருங்கள் என்றார்.
அவரின் அழைப்பு ‘அபரிதமானதாக’த் தோன்றியது.
ஆனாலும் தலையசைத்தேன்.
எனது அலுவலக பகுதியோ
எனது வீடுள்ள பகுதியோ
நான் காலை நடை போகும் பகுதியோ
இன்னும் குண்டு வீச்சுக்கு ஆளாகவில்லை என்றேன்
சீக்கிரம் ஆளாகலாம் என்று சொல்வது
வருத்தம் தருகிற விஷயமாக இருந்தது.
கடவுளும், சாத்தானும்
என்னுடன் ஒரே குழியில் கிடக்கும் காட்சி
அவ்வப்போது மனதில் வந்து போகிறது.

---

எனக்கிருக்கும் இதய நோயைப் பற்றி
சமீபத்தில்தான் அறிந்து கொண்டேன்.
உணவுக் கட்டுப்பாடும், உடற்பயிற்சிகளும்
என் வாழ்நாளைக் காப்பாற்றிவிடும்
என்ற நப்பாசை இருந்தது.
ஆனால் பெண்கள் படுத்தும் உபத்திரவம் தாளமுடியவில்லை
அழகு என்று கூட வேண்டாம்.
சற்றே இளமை (16 - 26)
சற்றே முதிர்ச்சி (40 - 50)
என்று எல்லோரும்...
என் இதயத் துடிப்பை அதிகரிக்கச் செய்கிறார்கள்.
வயதானதை பிறர் அழைக்கும் அழைப்பு வார்த்தைகளில்
கண்டு கொள்ள முடிகிறது.
தலைச் சாயத்தை இன்னும் ஆரம்பிக்கவில்லை.
சருகாவதை விட
உதிர்வது துரதிருஷ்டமானது.
வெறும் பார்வை பார்த்துக் கொண்டே
உதிர்ந்து விடுவதில் துயரமிருக்கிறது.
பெண்கள் தரும் படபடப்பைத் தவிர்க்க
வீதியில் நடமாடாமல் இருக்க முடியாது.
திரைப்படங்களைத் தவிர்க்க இயலாது.
முத்தங்கள் கூட இல்லாமல் போகும் வாழ்க்கை
துயரமானதுதான்.

Pin It