முதலில் நான் உணர்ந்தது, என்னுடைய இடையில் மிகச்சிறிய ஒட்டுத் துணியுடன் மட்டுமே தார்ச்சாலையில் நடந்து கொண்டிருக்கிறேன். தார்ச்சாலையின் சூட்டில் கால்கள் சுடுகின்றன. சூட்டின் மீது கவனம் விழுந்தாலும் உடையற்று நான் திரிவது மேலோங்கி நிற்கிறது. சுற்றிலும் யாரும் என்னைக் கண்டு அதிர்ச்சி அடையவோ அல்லது உடை கொடுக்கவோ முற்படவில்லை. எல்லோரும் ஏதோ வேலைகளை நோக்கிச் சென்றுகொண்டே இருக்கின்றனர். தார்ச் சாலைச் சூட்டை எப்படித் தணிப்பது என்ற குழப்பம். சற்றே மணலில் மாற்றி நடந்தால் தீர்வு கிடைக்கும் என்ற எண்ணத்தில் சாலையின் ஓரத்தில் சிதறிக் கிடக்கும் மணல்மீது வெற்றுக் கால்களைப் பதிய வைக்கிறேன். சூட்டை அதிகமாக உணர முடிகிறதே தவிரக் குறையவில்லை. கால்களின் சூட்டையும் விட ஆடையற்ற அவமானம் மேலோங்கி நிற்கிறது. என் உடலை நானே உற்றுநோக்குகிறேன். நான் எண்ணுவது போன்றன்று, வற்றிச் சுருங்கி, கறுத்து, யாரோ போலத் தோற்றம் தந்து கொண்டிருக்கிறது. உறக்கத்திலிருந்து திடீரென விழித்தாற்போல உலகம் எனக்குத் தோற்றம் தருகிறது. தெருவில் நடந்து செல்லும் குழந்தைகள் எனக்குப் பரிச்சயமற்றுத் திரிகின்றனர். நடுத்தர வயதுடையோர், முதியோர் யாருமே எனக்குத் தெரிந்தவர் இல்லை போலும். யாரையுமே அடையாளம் காண இயலாமல் திரிகின்றேன். தலைமீது தன்னிச்சையாகக் கை விழுகிறது. அடர்ந்த நீண்ட கூந்தல், அதன் பெருமிதம் ஒருசேர என்னிடம் நிமிர்ந்து நிற்கும் தலையின் மீது வெற்றுத் தோல் மிதக்கிறது. வெற்றுக் கால்கள் வெற்று உடம்புகள் வெற்றுத் தலை. 

சாலையோர மரங்களும் சில வீடுகளும் எனக்கு அடையாளமாகின்றன. நடக்கும் தெரு பரிச்சயமாகிறது. அசையும் உயிர்களில் தெளி வற்ற நான் அசையா உயிர்களில் என்னையும் அவற்றையும் இணைத்து அடையாளம் காண்கிறேன். கொஞ்சம் கொஞ்சமாக உறக்கத்திலிருந்து இப்போது விழித்திருக்கும் இடையிலான காலம் சரியாகக் கணக்கிடப் பட முடியவில்லை என்றாலும் ஓரளவுக்குப் புரியத் தொடங்குகிறது. 

தலையில் முடியெல்லாம் புழுக்களாக மாறி என் உறக்கக் காலத்தில் என்னுடைய தலையை எப்போதும் துளைத்துக்கொண்டே இருந்தன. எனவே அவற்றை ஒவ்வொன்றாகப் பிடுங்கி எறிவேன். தரை புழுக்களால் நிரம்பத் துவங்கும். புழுக்கள் என்மீது மறுபடியும் ஏறி ஏறித் திரும்பவும் தலையில் வந்து அமர முயல்கின்றன. தலையில் ஓட்டையிட்டுக் குத்திட்டு நிற்க ஆரம்பிக்கின்றன. புழுக்களைக் கண்ட காகங்கள் உற்சாகமாகத் தலையி லமர்ந்து கொத்தித் தின்ன ஆசை கொள் கின்றன. கையில் கோலுடன் காக்கைகளை யும் புழுக்களையும் விரட்ட ஆரம்பித்தேன். தலையில் ஓயாத துளையிடும் சப்தத்தையும் துளையிடுவதால் உண்டாகும் வலியையும் எத்தனை நேரம் பொறுத்துக் கொண் டிருப்பது? உடையின் மீதாக ஏறிச்சென்று தலையை அடைய முயலும் புழுக்களுக்காக உடையை உதறி அவிழ்த்தெறிவேன். இலைகளைக் கட்டி எடுத்துத் தரையைப் பெருக்கி எல்லாவற்றையும் நெருப்பிட்டுக் கொளுத்த வேண்டும். இப்போதுதான் தரையைப் பெருக்கத் துவங்கி இருந்தேன். ஓயாமல் புழுக்கள். ஓயாமல் காக்கைகள், ஓயாத மக்கள் என்னைச் சுற்றி வட்டமிட்ட படி புழுக்கள் அங்கும் இங்குமாக ஓடத் துவங்க, நானும் தப்பிக்க முன்னே ஓடத்துவங்குவேன். 

இன்றுவரை ஓடிக்கொண்டே இருந்திருக்கிறேன் என்பதை விழித்தெழுந்த நான் கனவு போல உணரத் தொடங்குகிறேன். உறக்கத்திற்கும் விழிப்புக்குமான இடைப்பட்ட காலம் என்பது எனது வளமான அங்கங்களிலிருந்து வறண்டு சுண்டிப் போனது வரையிலான காலமாக இருக்கிறது. சிறிது சிறிதாக நான் என்னை உணர்கிறேன். எனது வீடு, எனது தெரு, எனது குடும்பம் எல்லாமே மேலேறிக் கிளர்ந்து நினைப்பின் மேல் அடுக்கில் வந்து அமர்கிறது. யாரோ ஒருவர் மேல் துணி கொடுத்தால் நன்றாக இருக்கும். ஆனால் ஒருவரிடமும் அணிந்திருக்கும் ஒற்றை உடையைத் தவிர ஏதுமற்றுத்தான் திரிந்து கொண்டிருக்கிறார்கள் போலும். எல்லோரும் இல்லை என்கின்றனர். இதற்குள் விழிப்புற்ற என் உடலின் ஆடையற்ற நிலை என்னுள் இயல்பாகிப் போகிறது. யாரும் கவனிக்காத, அல்லது கவனிக்கத் தேவையற்றதான நிர்வாணத்திற்காக நான் ஏன் அல்லலுற வேண்டும்? 

கால்கள் தரையில் பரவ, ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து நான் எனது அறிமுகமான தெருக்களின் இடையே நடந்து செல்கிறேன். சூடுடனும் சூடற்றும் பாதங்கள் முன்னேறிக்கொண்டே இருக்கின்றன. எனது வீட்டின் முன் நிற்கும்வரை. 

வீடு அழிக்கப்பட்டு விட்டிருக்கிறது. வீட்டின் மக்களின் நினைவுகளிருந்தும் நான் அழிக்கப்பட்டும் நெடுங்காலமாகி விட்டி ருக்கிறது. எனது அடையாளத்தை நான் உணரவும் என்னை அடையாளம் காணப் படவுமாக நான் என் தாயைத் தேடுகிறேன். தாய் உடன் பிறப்பின் இடத்தில் இருப்பதாக அறிகிறேன். நெடுந்தூரம் நடந்து அடைய வேண்டிய தொலைவில் இருக்கும் சகோதரன் வீட்டிற்குச் செல்ல வாகனம் ஏற முற்படும் பொழுதுதான் எந்த வாகனமும் காசற்றுக் கிடைக்காது என்பதையும் அறிவு மேலடுக் கிற்கு அனுப்புகிறது. கையில் கைப்பை, காசிருக்கும் பர்ஸ் அனுமதிச்சீட்டு, முகவரிக் காகிதம் ஏதுமற்று வெற்றுக்கைகளாகத் தொங்கிக்கொண்டிருக்கின்றன இருபுறமும். 

திரும்பவும் நடக்கத் தொடங்குகிறேன். சாலையோரம் எறியப்பட்டிருந்த சிறு துணித் துண்டெடுத்து என்மேல் உடலைப் போர்த்திக் கொள்கிறேன். மிகப் பெரிய ஆசுவாசம் கிடைக்கிறது. சற்றே அமைதியும். அறிந்த பாதையிலும் அறியாத பாதையிலுமாக எனது பயணம் தொடர்கிறது. கால்கள் சோர, வெற்றுடம்புடன் வெற்று வயிறும் வெற்றுக் கால்களும் காய அன்னையைக் காண்கிறேன். 

உடன் பிறந்தவன் வீட்டில் மிகப் பெரிய கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. பெரிய பெரிய அடுப்புகள், பெரிய பெரிய எண்ணெய்ச் சட்டி, எல்லோரும் முகங்களின் மீது மகிழ்ச்சியை அப்பிக் கொண்டு அலைந்து திரிந்து கொண்டு இருக்கின்றனர். ஆனால் யாருக்கும் என்னை அடையாளம் தெரிய வில்லை. அன்னையின் முன்பாக நிற்கிறேன். அவளும் அடையாளம் கடந்த வயோதிகத்தில் இருக்கிறாள். 

திடுக்கிட்டு அருவருப்புடன் ஏறிட்டுப் பார்க்கிறாள். என்னைக் கண்ட அதிர்ச்சி முகத்தில் அப்பட்டமாகத் தெரிகிறது. இந்தப் பைத்தியம் இப்போது இங்கே எப்படி? வா, வா, எப்படி வந்தாய்? விசாரிப்பு ஊட்டப் பட்ட செயற்கை மகிழ்ச்சியுடனும் முகம் ஏற்காத பாவனையிலும் உடனே அப்புறப் படுத்தும் எண்ணத்திலும் இருக்கிறது. பைத்தியம் என்ற ஒற்றைச் சொல் என் மனதின் குழப்பத்தைத் தெளியச் செய்கிறது. நான் உறக்கத்தில் இருந்ததாக எண்ணிக் கொண்டிருக்கிறேன். இவர்களுக்கோ அது பித்தென்று புரிகிறது. 

வெற்றுக்கால்களுக்கும் வெற்றுடம்பிற்கும் வெற்றுக் கைகளுக்கும் வெற்று வயிற்றுக்கும் காரணம் சற்றே புரிபடத்துவங்குகிறது. ஒளி பொருந்திய முகத்தை ஏந்தியபடி அங்கும் இங்கும் அலைந்துகொண்டிருந்த முகங்கள் மங்கிப்போகின்றன. சங்கடமாக நெளிகின் றனர். என்னாலும் என்ன செய்வதென்று தீர்மானிக்க முடியவில்லை. திகைக்கத்தான் முடிகிறது. என்னை எதிர்கொள்ளும் நிலையில் அங்கிருந்த யாருமே இல்லை, அன்னை யையும் சேர்த்து, ஏற்றுக்கொள்ளவும் முடியாது என்ற உண்மையும் புரிகிறது. 

மனதிற்குள் கடல் பெரும் ஓசையை எழுப்புகிறது. கடல் பொங்கிப் பொங்கி எனது எல்லா துவாரங்களின் வழியாகவும் வெளியேறத் தொடங்குகிறது. நீராக வழிகிறது. கடல் நீர் என்னிலிருந்து கீழிறங்கத் துவங்கு கிறது. வெளியேற்றப்பட்ட நீரின் தாரை அறையில் பரவுகிறது. எல்லோரையும் கவலை கொள்ளச் செய்கிறது. விழாக் கோலத்தை மாற்றி அமைக்கவோ நான் திரும்பி வந்ததை விழாவாக அறிவிக்கவோ அங்கு யாரும் தயாராக இல்லை. நான் பெருக்கெடுத்து ஓடும் என்னுள் ஓங்கும் கடலைக் கடின முயற்சிக்குப்பின் என்னுள் திரும்பவும் எடுத்து அடைத்துக்கொள்கிறேன். 

ஆனாலும் ஆடை ஒன்றாவது எனக்குக் கொடுக்கும்படி அங்கிருக்கும் உறவு அனைத் திடமும் கெஞ்சியபடியே இருக்கிறேன். விழா நாயகிக்கோ எனது வற்றல் உடலுக்கும் அவளது பூரித்த இளம் உடலுக்கும் எந்த விதத்திலும் ஒப்பிட முடியாத சந்தேகம் இடையே நெளிகிறது. “உன்னுடைய சிறு வயது உடை ஏதாவது இருந்தால் எனக்குக் கொடு மேலங்கி இவ்வளவு நீளமாக வேண்டாம்.” கொடுக்கப்பட்ட உடையை அங்கேயே அணிந்து கொள்கிறேன். மேலிருக்கும் இடுப்பிலிருக்கும் துண்டுத் துணிகளை உதறிவிட்டு, அனைவரும் அபாயகரமாக உணர்கின்றனர். ஆடையை விடுவேனோ என்று. எனக்கு விழிப்பு ஏற்பட்டு விட்டது என்பதில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை என்றாலும் என்னாலும் நிரூபிக்க முடியவில்லை. உடை அணிந்து, அதுவும் சரியான முறைப்படி அணிந்துகொண்டவுடன் எல்லோருக்கும் பெரிய ஆசுவாசம். 

பசி உணரத் தொடங்குகிறேன். விதவிதமான பலகாரங்கள். அடுக்கப்பட்டவற்றிலிருந்து கையேந்திக் கேட்கிறேன். முகச் சுளிப்புடன் அளிக்கப்படுகிறது. ஆனாலும் ஆறுதலாய் உணர்கிறேன். எனது உறக்கத்துக்கான காரணத்தை அன்னையிடமாவது கூற மனம் விழைகிறது. கூற முற்படும்போது வரவேற்பு அற்றதுடன், எதிர்ப்பும் காட்டும் முகத்தைக் கண்டேன். “அம்மா என்ன ஆயிற்று? எனக்குப் புரிந்தவரை கூறட்டுமா? எதையும் கேட்கப் பொறுமையற்ற முகங்கள். எங்காவது பூமியின் அடியில் என்னை ஒளித்து வைத்துவிட்டுத் தங்கள் கொண்டாட்டத்தைத் தொடரத் தயாராகிறார்கள். நானோ, சொற்கள் கோர்வையற்று உரைக்கிறேன் போலும். இன்னமும் தெளிவாக விளக்க முற்படுகிறேன். எதிரில் ஏந்துகிற கைகளற்ற வெற்றுச் சொற்கள். வீடெங்கும் இரைந்து கிடக்கின்றன. உறக்கத்திலும் இப்படித்தான் ஓயாமல் சொற்கள் வீசினேனோ? என் விழிப்பின் அடையாளம் காக்க வேண்டும் என்றால் சொற்கள் அரிதாக வெளியேற்றப்பட வேண்டும். ஆனாலும் என் விழிப்பின் நிலையை, உறுதியை சொற்களைத் தவிர வேறு எதை நான் நம்ப இயலும்? எனது சொற்களோ கேட்பாரற்றுப் பாதாளச் சாக்கடையிலிருந்து, அடைப்பை நீக்கி வெளியேற்றப்பட்டுக் குவிக்கப்பட்டிருக்கும் நிலையில் துர்நாற்றம் வீசிக்கொண்டிருக்கிறது.  

“எனக்குக் குளிக்க வேண்டும். தயவு செய்து உதவுங்கள்.” குளிப்பதற்கும் குடியிருப்பதற்கும் முற்படாதே. ‘சாப்பிட்டாயிற்றென்றால் இடத்தைக் காலி செய். விழாக் காலத்தில் சனியன் போல இது ஏன் இப்போது வந்து கழுத்தை அறுக்கிறது?’ 

‘அடர்ந்த கருங்கூந்தலோடு என்னை அனுப்பினயோ அம்மா, கணவன் வீட்டிற்கு. எல்லாக் கூந்தலும் புழுக்களாக மாறியது எந்த நாள் என்று நான் கூற வேண்டாமா? எல்லாப் புழுக்களையும் எவ்வளவு கஷ்டத்துடன் எடுத்து எறிந்தேன் என்று நீ அறிய வேண்டாமா? அதை நான் உன்னோடு பகிர்ந்துகொள்ள வேண்டாமா? இதோ பார். இங்கு இன்னொரு தலைமுறையின் முதல் திருமணம் நடக்க இருக்கிறது. பார் அவளை. எவ்வளவு அழகோடும் இளமை பொங்கும் அங்கங்களோடும் சுற்றித் திரிந்துகொண்டு இருக்கிறாள் என்பதை. வாருங்கள் பெண்களே அக்கம் பக்கம் அழைக்க வேண்டும். எவ்வளவுதான் பார்த்து பார்த்துச் செய்தாலும், முக்கியமானவர்கள் விடுபட்டுவிடுவார்கள். வாருங்கள் அழைக்கப் போகலாம். 

பளபளப்பான உடைகளில் ஒரு குழு அழைக்கக் கிளம்புகிறது. என்னுள்ளும் உற்சாகம் பொங்கி வருகிறது. நானும் கூட வருகிறேன். எனக்கும் எல்லோரையும் பார்த்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டன. பல முகங்கள் மறந்துகூடப் போய்விட்டன. எவ்வளவு காலம் உறக்கம் கணக்கில்லாமல். இவளாவது உறக்கத்திற்கு ஆளாகாமல் விழிப்புடனேயே எப்போதும் இருக்கும்படியான வாழ்வு அமைத்துக் கொடுப்பீர்களா? நான் பங்கு கொள்ளாமலா அழைப்பு? எனக்கும் நல்ல உடை கொடுங்கள். எல்லாத் தவறுகளுக் காகவும் உங்கள் அனைவரின்முன் மண்டி யிட்டு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். 

திரும்பவும் தெருவோரத்தில் குவிக்கப்பட்டிருக்கும் பாதாளச் சாக்கடையின் கழிவுக் குவியலைப் போல, என்னை அனைவரும் பார்க்கின்றனர். நான¢ விழித்து விட்டவள் என்று நிரூபிக்க நான் செய்யும் முயற்சிகள் அனைத்துமே, புதைகுழிக்குள் எம்பித் தவிக்கும் ஒரு கனத்த உடல் இன்னமும் இன்னமும் மூழ்கிப்போவதை ஒத்ததாக முடிகிறது. 

குடும்பத்தில் ஒரு பெண் மட்டும் என்னை அழைத்துச் செல்வதாக வாக்களிக்கிறாள். முகம் கழுவக் குளியலறை செல்கிறேன். அங்கு இருக்கும் சீயக்காய்த் தூளைப் பார்க்கிறேன். கருகருவென்று நீண்ட அடர்ந்த கூந்தலைக் குளித்து அலசி உதறி விரித்துப் போட்டால் உடலும் உலகமும் மயங்காதோ? தண்ணீரில் கரைந்து எடுத்து அப்பிக் கொண்டு வெளியில் வருகிறேன். நீரற்ற குளியல் அறையில் எப்படிக் குளிப்பதாம்? தண்ணீர் வேண்டும். குளிக்கத் தண்ணீர் வேண்டும். எடுத்துத் தாருங்கள். கண்கள் எரிகின்றன என்று அலறுகிறேன். அலற அலற எரிச்சலும், பயமும் என்னை நோக்கிப் பாய்ந்து வருகிறது. 

முன் நின்ற ஒருத்தி வந்து என்னுடன் வா. தண்ணீர் இருக்கும் இடம் காண்பிக்கிறேன் என்று சொல்லி நான் அடைய முடியா வேகத்துடன் முன்னால் ஓடிக்கொண்டே இருக்கிறாள். நானும் பின் தொடர முயன்று ஓடிக்கொண்டே இருக்கிறேன். படிகளைக் கடந்தும் படிகளில் ஏறியும் பின் இறங்கியும் பின் சமதளத்தில் நடந்தும் செல்கிறேன். ஓடி ஓடிப் பின்தொடர்கிறேன். ஆனாலும் தண்ணீரும் குளியலறையும் மட்டும் காணவே இல்லை. இன்னமும் இன்னமும் நடை தொடர்ந்துகொண்டே இருக்கிறது. நெடும் தொலைவு கடந்த பின்னே ஒரு பூட்டப்படாத கதவு காணக்கிடக்கிறது. அப்பெண் அக்கத வருகில் புன்சிரிப்புடன் நின்று கொண்டிருக்கிறாள். நான் அவள் அருகில் செல்லும்வரை அக்கதவு திறக்கப்படாமல் எனக்காகக் காத்துக் கிடக்கிறது. நான் சென்ற உடன் கதவு திறக்கப்பட்டுச் சட்டென்று பின் அறைந்து மூடப்பட்டும் விடுகிறது. பக்கெட் எங்கே? தண்ணீர் எங்கே? என்று நான் தேடத் துவங்க அது அறையே இல்லை. அது ஒரு தெருவின் முனை. 

ஆட்கள் அரவமற்ற அத்தெரு நீண்ட நெடும் தார்ச்சாலை கொண்டதாய் இருக்கிறது. அது முடிக் கற்றைகளாய¢ மாறிச் சீயக்காய் படிந்த என் தலையினுள் உள் நுழைந்து தொங்க ஆரம் பிக்கிறது. கரும் பாம்பென அலை அலையாய். 

மனம் கொள்ளாப் பெருமிதத்துடன் எனது ஆடைகளை ஒவ்வொன்றாய் வீசி எறிகிறேன். பொங்கும் அங்கங்கள் தளும்பித் ததும்புகின்றன. 

- க்ருஷாங்கினி

Pin It