தமிழகத்தின் ஈரோடு நகரில் வசித்துவந்த இரு இளம் மணமான பெண்கள் (பெயர் அறிவிக்க விரும்பவில்லை) சென்ற ஆண்டு இந்திய சுதந்திர தினத்தன்று தங்கள் வீடுகளை விட்டு ஓடினர். வழக்கமான காரணங்களான வரதட்சணைக் கொடுமையோ, கணவன் கொடுமையாலோ அல்ல. அவர்கள் ஒருவரை ஒருவர் காதலித்தனர். காலம் முழுவதும் சேர்ந்து வாழ ஆசைப்பட்டனர். ஓரினச் சேர்க்கையை (Homo sexuality) மையப்படுத்தி பணிபுரியும் சில நிறுவனங்கள் மூலம் இவ்விரு பெண்களும் பெங்களூரை அடைந்தனர்.

சென்னையில் வாழவும் பணிபுரியவும் ஆசைப்பட்ட இப்பெண்களைப் பாதுகாப்பாகக் கொண்டு சொல்ல இடமில்லாத நிலையிருந்தது. இந்நேரத்தில் சென்னையில் பெண்ணிய அரசியல் சார்ந்து பணிபுரியும் நிறுவனம் ஒன்று, அவர்களுக்குப் பாதுகாப்புக் கொடுக்க மனமுவந்து முன்வந்தது; அப்பெண்களோ வேறுசில காரணங்களால் பெங்களூருக்கு மீண்டும் திரும்பினர்.

இம்மாதிரியான சிக்கலான நேரங்களில் பாதுகாப்புப் கொடுக்க ஒரு நிறுவனம் சென்னையில் இருப்பதே மகிழ்ச்சியளிக்கும் செய்தியாகும்.

குஷ்பு என்ற பிரபலமான தமிழ்த் திரைப்பட நடிகை பாலுறவில் பாதுகாப்பு மேற்கொள்வது பற்றி ஒரு புள்ளிவிவரத் தகவல் சேகரிப்பில் சொல்லப்பட்ட - திருமணத்திற்கு முன் பல பெண்கள் பாலுறவில் ஈடுபடுகின்றனர் - என்ற செய்தியைக் கூற, தமிழ் பண்பாட்டின் பாதுகாவலராக தன்னைத்தானே நியமித்துக் கொண்ட “தமிழ் மகன்கள்” குஷ்புவின் உருவப் பொம்மையை எரித்தனர்.

நமது தமிழகத்தில் நடந்த இரண்டு வித்தியாசமான, ஆனால் ஒன்றிணைந்துப் பார்க்கக்கூடிய இரு கதைகள் இவை. பெண்ணிய அரசியலின் மிக முக்கியமான அங்கமாக பாலியல்பு இந்தியத் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 377, “இயற்கையை மீறிய எந்த வகையான பாலினச் சேர்க்கை செயல்களை” (Carnal intercourse against the order of nature) சட்டத்திற்குப் புறம்பானதாக்குகிறது. இச்சட்டத்தின் பொருள் தெளிவாக வெளிப்படுத்தப்படவில்லை. ஆனால் ஓரினச் சேர்க்கை விழைவு உள்ள ஆண்களுக்கு எதிராகவும் அரவாணிகளுக்கு எதிராகவும் இது பயன்படுத்தப்படுகிறது. இச்சட்டத்தை எதிர்த்து ஓரினச்சேர்க்கை சார்ந்த அரசியலில் ஈடுபடுபவர்களும் பெண்ணிய அரசியல் சார்ந்தவர்களும் 2001-ல் இருந்து நீதிமன்றத்திலும், வீதிகளிலும், நிறுவனங்களிலும், தொடர்புச் சாதனங்கள் மூலமாகவும் போராடி வருகின்றனர்.

இப்போராட்டம் தில்லி, மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் நடந்து வருகின்றன. தமிழகத்தில் பாலியல்பு சார்ந்த அரசியல், அரவாணிகளின் போராட்டங்களின் மூலம் பெரிய அளவில் வெளிக் கொணரப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல், பெண்ணியம் சார்ந்து பணிபுரியும் பலர் - அவர்கள் தன்னார்வக்குழுவினர் ஆனாலும் சரி, கவிஞர்கள், நாடகக் கலைஞர்கள் ஆனாலும் சரி - பாலியல்பு சார்ந்த அரசியல் பற்றியும், அதனூடே எதிர்ப்பாலின் இயல்பாக்கத்தைப் (Heteronormativity) பற்றியும் அரசியல் முதிர்ச்சியுடன் விவாதித்து வருகின்றனர். நிகழ்ந்து வரும் இந்த விவாதங்கள் தமிழகத்தின் முற்போக்குவாதிகள் மத்தியிலும் கூட விளிம்புநிலையிலேயே உள்ளன. வர்க்கம், சாதி அல்லது பெண்ணிய அரசியலுக்கு பல வருடப் போராட்டத்திற்குப் பிறகு அளிக்கப்படும் மதிப்பு, பாலியல்பு சார்ந்த அரசியலுக்கு அளிக்கப்படுவதில்லை. பல வகை அரசியல்கள் வரிசைப் படுத்தப்படும்போது, பல இடங்களில் பாலியல்பு சார்ந்த அரசியல் அடிமட்டத்திலேயே வைக்கப்படுகிறது.

இவ்வகை அரசியல், நமது வாழ்க்கைக்கு இன்றியமையாதது இல்லை என்று கூறப்படுகிறது. ஒவ்வொருவரின் வாழ்க்கையைப் பார்த்தால் கிடைக்கும் உண்மை வேறாகும். ஒவ்வொருவரின் தன்னிலைக் கட்டமைப்பிலும் அடங்கும் சாதி, மதம், பால் போன்றவற்றில் பாலியல்பும் முக்கியமானதாகும். சமூகத்தின் இரட்டைத்தனத்தால் ஊமையாக்கப்படும் பாலியல்பு சார்ந்த அரசியல், ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் மிக முக்கியமான முறைகளில் தாக்கம் செலுத்துகிறது.

தொடக்கத்தில் குறிப்பிட்ட இரு கதைகளிலும் ஒரு பகுதி பொதுவானதாகும். இருகதைகளும் பெண்கள் பற்றியதாகும். பாலியல்பு அரசியல் பேசும்பொழுது ஆண்கள் மத்தியிலும் ஆண்களைப் பற்றியும் பேசுவது கடினமானாலும் பெண்களைப் பற்றி பேசுவது கூடுதல் சிரமத்தைத் தருகிறது. 15 வருடங்களாக இவ்வரசியல் பேசிவரும் பல நகரங்களில் கூட பெண்கள் பாலியல்பைப் பற்றி பேசுவது இப்போதும் கடினமாகவும் மிகக் குறைவாகவுமே உள்ளது. இவ்வாதங்கள் பெரும்பாலும் வன்முறையை மையப்படுத்தியே அமைகின்றன. வன்முறை பற்றிய விவாதம் இன்றும் இன்றியமையாததாக உள்ளது. அதை மீறி பெண்களின் பாலியல்பை ஆக்கபூர்வமான குரலுடன் பேசுவதற்கான மொழி இல்லாமல் போகிறது. முலை, யோனி போன்ற வார்த்தைகளைச் சொல்வதோ, எழுதுவதோ அத்துமீறலாகக் கருதப்படுகிறது. பெண்கள் உடல் சார்ந்த பாலியல்புச் செயல்பாடுகளை வெளிப்படையாகப் பேசும் அரசியல் அனுமதிக்கப்படுவதில்லை. இதற்கு மூலகாரணமாக, பெண்களின் தன்னிலை உருவாக்கத்தில் பாலியல்பின் பண்பு மறுக்கப்படுவதுதான் என்று கூறலாம். இதன் விளைவு பெண்களின் மனிதத்துவம் (Humanness) மறுக்கப்படுகிறது.

இவ்வகை அழுத்தங்களில் இருந்து எழும் பல பிரச்சினைகளில் ஒன்று, ஓரினச்சேர்க்கை விழைவு உள்ள பெண்களின் உரிமைகளை மறுப்பதாகும். இப்பெண்களின் போராட்டம், பல பெண்களின் வெவ்வேறு வகையான போராட்டங்களிலிருந்தோ, அரவாணிகளின் போராட்டங்களிலிருந்தோ முழுக்க வேறுபட்டதல்ல. இவ்வெவ்வேறு போராட்டங்கள், வெவ்வேறு வகையில் எதிர்ப்பாலின இயல்பாக்கத்தை கேள்விக் குள்ளாக்குகிறது. நமது வரலாற்றில், பெண்கள் பிரச்சனைகள் சார்ந்த போராட்டங்கள் எல்லாவற்றிலும் பாலியல்பு அரசியல் ஊடும்பாவுமாகக் கலந்துள்ளது. இவ்வரசியலை தெள்ளத்தெளிவாக உரக்கப் பேசுவது நமது போராட்டங்களை திடப்படுத்துமே தவிர, அவற்றின் வலிமையைக் குறைப்பதாக அமையாது.

இந்த செயல்பாடு அரசியல் நடைமுறைகளைப் போன்று பல ஆண்டுகள் அல்லது தலைமுறைகள் கடந்த பிறகு ஏற்கப்படலாம். ஆனால் கடந்த சில வருடங்களில் தொடங்கியுள்ளது என்பதை எவரும் மறுக்க முடியாது. பெண்ணியவாதிகளும் மற்றும் பல முற்போக்கு சிந்தனையாளர்களும் இதைப் பற்றிச் சிந்திப்பதும் உரையாடுவதும் இன்றியமையாதவையாகும்.

பால், சாதி, மதம், வர்க்கத்தின் பெயரில் ஏற்படும் அநீதிகளை எதிர்த்து நடந்துவரும் மற்றும் நடக்கப்போகும் போராட்டங்களில், பாலியல்பு சார்ந்த அரசியல் பற்றிய விவாதங்கள் மேலும் வலுவூட்டும். இவ்வலிமையை முழுக்கப் பயன்படுத்தி சுயமரியாதையுடனும் சுதந்திரத்துடனும் அடிப்படை உரிமைகளுடனும் ஒவ்வொரு மனிதரும் தமக்குரிய போராட்டத்தைப் பாட்டும் கூத்துமாய் நடத்துவோம்.

- அ. பொன்னி

புதுடில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முதுகலை வரலாறு முடித்திருக்கிறார். “நிகா” (NIGAH) என்ற அமைப்பு மூலம் பெண்ணிய/பாலியல்பு அரசியல் தொடர்பான பணிகளில் ஈடுபட்டு வருபவர்.

Pin It