பன்றிக் காய்ச்சல் பற்றிய பரவலான செய்திகள் இன்றைய கால கட்டத்தில் பொது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ற பெயரில் உலக நாடுகளின் அரசுகளும், உலக சுகாதார நிறுவனமும் செய்கின்ற விளம்பரங்கள் மக்களை மேலும் திகிலூட்டுவதாக இருக்கிறது.

பன்றிக் காய்ச்சல் பற்றி ஆங்கில மருத்துவத்துறைக்கு உண்மையிலேயே தெளிவான கண்ணோட்டம் இருக்கிறதா என்றால் இல்லையென்று உறுதிபடக் கூறலாம். மக்களை பயமுறுத்துவது என்பது ஆங்கில மருத்துவத்திற்கு கைவந்த கலை. எய்ட்ஸ், சார்ஸ், டெங்கு, சிக்குன் குன்யா, பறவைக் காய்ச்சல் முதற்கொண்டு இன்றைய எலிக்காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் வரை இவற்றின் ஆபத்துக்களைப் பற்றி பட்டியல் போட்டு சுகாதாரத்துறை மூலம் மிகப் பெரிய அளவில் விளம்பரம் செய்வார்கள், இவற்றிற்கான மருந்துகள் இதுநாள் வரை கண்டுபிடிக்கப் படவில்லை என்று கூறுவார்கள். பின்னர், டாமி புளு மாத்திரைகள் மட்டும்தான் பன்றிக் காய்ச்சலுக்கான ஒரே மருந்து. இந்த டாமி புளு மாத்திரைகள் தேவையான அளவில் வாங்கி இருப்பு வைத்திருப்பதாக அறிவிப்பு செய்வார்கள்.

பன்றிக்காய்ச்சலுக்கு பள்ளி மாணவன் பலி! இளம்பெண் பலி! மருத்துவர் பலி! என்கிற வகையில் தொலைக்காட்சிகளும், பத்திரிக்கைகளும் வரிந்து கட்டிக் கொண்டு செய்திகளை வெளியிடுவார்கள். பின்னர் பலியானவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கையில் பன்றிக்காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்படவில்லை என்பார்கள்.

கடந்த காலங்களில் வல்லரசு நாடுகள் வணிக போட்டியில் ஈடுபட்டு, மூன்றாம் உலக நாடுகளின் பலவீனங்களைப் பயன் படுத்திக் கொண்டன. ஆயுத வியாபாரம் முதற்கொண்டு மனிதர்களின் நோய்களுக்கான மருந்துகள், போலியோ-அம்மை-மஞ்சள் காமாலை மற்றும் பிறவற்றிற்கான தடுப்பு மருந்துகள், விவசாயத்தில் பயன்படுத்தப்படும் உரங்கள், பூச்சிக்கொல்லி - களைக்கொல்லி மருந்துகள் வரை பிற நாடுகளின் மீது திணிப்பது என்பது வாடிக்கையாகி விட்டது.

இவ்வாறு திணிக்கப்பட்ட அனைத்துமே மக்களுக்கு நன்மைகள் செய்வதற்கு மாறாக, தீமைகள்தான் அதிகம் செய்திருக்கின்றன. நேரடி யுத்தங்கள் முன்னேறிய நாடுகளுக்கு அவபெயரை உண்டாக்கி விடுகிற காரணத்தால், மறைமுக யுத்தங்களில் ஈடுபட்டு பிற நாடுகளை பணிய வைக்கும் போக்கு தற்போது அதிகரித்துள்ளது.

பொருளாதாரத் தடை விதித்தல், தொழில் நுட்ப உதவி வழங்குதல், உதவி நிதி வழங்குதல், உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்டு அரசியல் ஸ்திரத்தன்மையை சீர்குலைத்தல், நோய்களை உருவாக்கும் நுண்ணியிரிகளை பெருக்கி காற்றில், தண்ணீரில் கலந்து மக்களுக்கும், அரசுகளுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்துவது. சமனற்ற ஒப்பந்தங்களுக்கு நிர்பந்தத்தை உருவாக்குவது போன்ற வழிமுறைகளின் மூலம் வல்லரசு நாடுகள், பலவீனமான நாடுகளை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றன.

முன்னேறிய நாடுகளில் தடை செய்யப்பட்ட மருந்துகள், இந்தியா போன்ற நாடுகளில் எவ்வித கட்டுப்பாடுமின்றி தாராளமாக விற்பனை செய்யப்படுகின்றன. பிற நாடுகளில் தடை செய்யப்பட்ட யூனியன் கார்பைட் (போபால் விஷவாயு விபத்து -மத்திய பிரதேசம்) நிறுவனம் இந்தியாவில் அனுமதிக்கப் பட்டது. அதன் துன்பங்களை (விளைவுகளை) இன்றும் அப்பகுதி மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அரசுகளுக்கு கடும் நெருக்கடிகள் ஏற்படும் போது, பொது மக்களின் கவனங்களை திசை திருப்ப புதிய உத்திகளை கையாள்வது என்பது மரபான ஒன்றாகும். தற்போதைய உலக பொருளாதார நெருக்கடி, வல்லரசு நாடுகளின் ஆணிவேரையே ஆட்டம் காணச் செய்திருக்கிறது என்பது யாவரும் அறிந்த உண்மை. இது போன்ற காலகட்டங்களில் மக்களிடையே பெருமளவில் பீதி ஏற்படுத்தி மக்களின் கவனத்தை திசை திருப்ப கையாளப்படும் வழிமுறைகளில் ஒன்றுதான் பன்றிக்காய்ச்சல் பயங்கரம்.

பன்றிக்காய்சல் வைரசை பரப்புவதும் ஒருவிதத்தில் மறைமுக யுத்தமே ஆகும். அமெரிக்காவில் பன்றிக்காய்ச்சல் தோன்றி பின்னர் உலகளாவிய அளவில் பரப்பப் பட்டதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

உலக நாடுகளில் இயற்கை சீற்றங்கள்- பேரழிவுகளைத் தவிர, பிறவகையில் ஏற்படும் பெரும்பாலான பாதிப்புகளுக்கும் அடிப்படைக் காரணமாக விளங்குவது மேற்கத்திய நாடுகளின் சூழ்ச்சிகளே ஆகும். புதிய நாமகரணங்களை சூட்டிக் கொண்டு வரும் எந்த நோயாக இருந்தாலும், வல்லரசு நாடுகள் அல்லது மேற்கத்திய நாடுகளில் இருந்து பரப்பப் பட்டதுதான் கடந்த கால வரலாறு.

இதை எதிர்கொள்ள உலக நாடுகளும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ற பெயரில்- போர்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக அறிவிப்புகள் செய்து வருகின்றன. இச்சூழ்நிலையில் ஊடகங்கள் பொதுமக்களுக்கு பன்றிக்காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக கருதிக்கொண்டு, மேலும் அதிக பீதி ஏற்படுத்தும் வகையில் செய்திகளை வெளியிடுவது வேதனையானது.

தினசரி, வார, மாதப் பத்திரிக்கைகளை திறந்தால் பன்றிக்காய்ச்சல் பக்கங்கள், தொலைக்காட்சி பெட்டியை இயக்கினால் பன்றிக்காய்ச்சல் பற்றிய செய்திகள் என எங்கும் பன்றிக்காய்ச்சல், எதிலும் பன்றிக்காய்ச்சல் அலை மக்களை மூச்சுத்திணற மூழ்கடித்ததின் விளைவாக, வீட்டில் இருக்கும் குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை யாருக்கு சளி பிடித்தாலும், இருமல் வந்தாலும், காய்ச்சல் வந்தாலும் - வராவிட்டாலும் பயத்தில் உறைந்து விட்டதை கண்கூடாகக் காணமுடிந்தது.

பன்றிக் காய்ச்சலின் பாதிப்புகளைவிட, பன்றிக் காய்ச்சல் பற்றிய செய்திகளால் மக்கள் பெருமளவில் உளவியல் பாதிப்புகளுக்கு ஆளாகி விட்டார்கள்.

பல ஆண்டுகளுக்கு முன்பு குஜராத் மாநிலத்தில் சூரத் நகரில், பிளேக் நோய் தாக்கத்தின் போது பலர் உயிரிழந்தார்கள். அவ்வாறு இறந்தவர்களில் அதிக சதவிதத்தினர் பிளேக் நோய் காரணமாக இறக்கவில்லை. மாறாக பயத்தின் விளைவாக இறந்து விட்டார்கள் என்பது தெரிய வந்தது.

இது தவிர, உலகம் முழுவதும் ஒவ்வொரு வினாடியும் குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை,

வினாடிக்கு 1.78 பேர்

நிமிடத்திற்கு 107 பேர்

மணிக்கு 6,390 பேர்

ஒரு நாளில் 1,53,000 பேர் என பல்வேறு காரணங்களுக்காக இறந்து கொண்டிருக்கிறார்கள்.

இப்படி இயல்பாக இறப்பவர்களில் பலரை , காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதையாக, பன்றிக்காய்ச்சலில் இறந்தவர்கள் பட்டியலில் சேர்த்து விட்டார்கள் என்பதுதான் வேடிக்கை.

பன்றிக்காய்ச்சலுக்கு டாமிபுளு மாத்திரைகள்தான் தீர்வு என அதிகாரபூர்வமாக அறிவித்தவர்களே, டாமிபுளு மாத்திரைகளின் ஆபத்துக்களைப் பற்றியும் எச்சரிக்கை செய்தார்கள். இதன் காரணமாகவும் மக்கள் மத்தியில் பன்றிக்காய்சல் பற்றிய பயமும், குழப்பமும் மேலோங்கி விட்டது.

பத்திரிக்கைகளில் அவ்வபோது கீழ்கண்டவாறு வந்த செய்திகள் மக்களை குழப்பமடையச் செய்வதாகவே இருந்தன.

பன்றிக் காய்ச்சலில் புதிய வகை புளு காய்ச்சலுக்கு இந்தியாவில் 572 பேர் பலி

பன்றிக் காய்ச்சலில் இன்னொரு வகையான புளு காய்ச்சல் உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் சத்தம் இல்லாமல் பலி கொண்ட வருகிறது......

பன்றிக் காய்ச்சலை சுவைன் என்ற கிருமி உருவாக்குகிறது. இதில் 5 வகை கிருமிகள் உள்ளன. அவை எச்1என்1, எச்1என்2, எச்3என்2, எச்3என்1, ஆகும். இதில் எச்1என்1 என்பது இப்போது பரவியுள்ள பன்றிக் காய்ச்சல் ஆகும். மற்ற 4 வகை கிருமிகளின் மூலம் பரவும் காய்ச்சலை காமன் புளு என்று அழைக்கின்றனர்.

இந்த காமன் புளு மூலம் இந்தியாவில் தினமும் 572 பேர் பலியாகிறார்கள். உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும், புளு காய்ச்சலுக்கு 5 லட்சம் பேர் பலியாகி வருவதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது......

1918-ம் ஆண்டு எச்1என்1 என்ற இப்போதைய பன்றிக் காய்ச்சல் கிருமி உலகம் முழுவதும் பரவியது. 2 ஆண்டுகள் தொடர்ந்து தாக்கியது. இந்த நோயால் அப்போது 2 கோடியிலிருந்து, 10 கோடி மக்கள் பலியானார்கள்.

1956-ல் எச்2என்2 என்ற கிருமி உலகம் முழுவதும் பரவியது

பன்றிக் காய்ச்சலுக்குத் தீர்வுதான் என்ன?

கானல் நீரை காட்டாற்று வெள்ளம் எனக் கூறப்படுவது போலத்தான் பன்றிக் காய்ச்சல் பற்றிய செய்திகள். எனவே பொது மக்கள் வீணாக அச்சப்படத் தேவையில்லை.

உடலுக்கு அல்லது மனதிற்கு எவ்விதத்தில் பாதிப்பு நேர்ந்தாலும், நோய்கள் தாக்கினாலும் தன்னைத்தானே தகவமைத்துக் கொள்ளும் பண்பும், ஆற்றலும் இயற்கையிலேயே பெற்றிருக்கிறது. இதற்கு ஆதாரமாக விளங்குவது உயிராற்றல் மற்றும் உடலின் நோய் எதிர்ப்புத் தன்மையாகும்.

மனிதனின் உயிராற்றல் பலவீனமடையும் போதுதான், அவரவர் உடலின் தன்மை மற்றும் மனதின் தன்மைகேற்ப நோய்கள் தாக்குகிறது.

உதாரணமாக மழையில் பலர் நனையும் போது உயிராற்றல் நல்ல நிலையில் இருப்பவர்களுக்கு எவ்விதமான பாதிப்புகளும் வருவதில்லை. உயிராற்றல் பலவீனமாக உள்ளவர்களில் அவரவர் தன்மைக்கேற்ப சிலருக்கு சளி பிடிக்கிறது. சிலருக்கு தலைவலி வருகிறது. சிலருக்கு காய்ச்சல் வருகிறது. சிலருக்கு சளி, தலைவலி, காய்ச்சல் அனைத்துமே வருகிறது.

மூக்கு இருக்கின்ற வரையில் சளி பிடிக்கத்தான் செய்யும். தலை இருக்கின்ற வரையில் தலைவலி ஏதோ ஒரு வகையில் வரத்தான் செய்யும் என்று பாமர மக்கள் கிண்டலாக பேசுவதுண்டு.

பன்றிக் காய்சலுக்கான அறிகுறிகளாக கூறப்படும் மூக்கில் ஒழுகுதல், இருமல், தொண்டை புண், காய்ச்சல், தலைவலி, வாந்தி, வயிற்றுப் போக்கு, உடல் சோர்வு, மந்த நிலை இவை எதுவுமே மனிதர்களுக்கு புதியதாக வந்ததல்ல. காலம் காலமாக மனிதர்களுக்கு பழக்கப்பட்டவைதான். இவை எதுவும் புதிய கண்டுபிடிப்புகளல்ல.

மேற்படி அறிகுறி உள்ளவர்கள் பன்றிக் காய்ச்சல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டுமென கூறப்படுகிறது. பன்றிக்காய்ச்சல் பரிசோதனைக் கட்டணம் அதிகமில்லை ஜென்டில் மேன்..... முதற்கட்ட பரிசோதனைக்கு ரூ.750.00 (எழுநூற்று ஐம்பது ரூபாய்) மட்டுமே..... இறுதிகட்டப் பரிசோதனைக்கு ரூ. 5000.00 (ஐந்தாயிரம் ரூபாய்) மட்டுமே. பரிசோதனையில் பன்றிக்காய்சல்தான் என உறுதி செய்யப்பட்டால் சாப்பிட வேண்டிய மாத்திரை டாமிபுளு. ஒரு மாத்திரையின் விலை ரூ. 300.00 தான்.

உடலில் அல்லது மனதில் ஏற்படும் நோய்களை குணப்படுத்துவது என்பது உயிராற்றல் மற்றும் உடலின் நோய் எதிர்ப்புத் தன்மையை மேம்படுத்தும் வகையிலான, நோய் குறிகளின் அடிப்படையில் கொடுக்கப்படும் மருந்துகளின் மூலமே சாத்தியமாகும். இவ்வகையில் செயல்படக்கூடிய ஒரே மருத்துவ முறை ஹோமியோபதி மட்டுமே ஆகும்..

பன்றிக் காய்ச்சல் அறிகுறிகளாக கூறப்படும் நோய்க்குறிகளுக்கு ஹோமியோபதி மருத்துவத்தில் ஜெல்சிமியம், ஆர்சினிகம் ஆல்பம், ரஸ்டாக்ஸ், பெல்லடோனா, பிரையோனியா ஆகிய மருந்துகள் பிரதானமாக இடம் பெறுகின்றன. மற்ற குறிகளுக்கேற்ப காய்ச்சலின் அடிப்படையில் நூற்றுக்கணக்கான மருந்துகள், ஹோமியோபதியில் மருத்துவத்தில் உள்ளன. மருந்துகளுக்கான செலவினமோ அதிகபட்சம் 50 பைசாவில் அடங்கும்.

சிக்குன்குன்யா தாக்குதலின் போதும் ஹோமியோபதியர்கள் தான் ஹோமியோபதியின் பெருமையை நிலைநாட்டினார்கள். தற்போதும் கூட பன்றிக்காய்ச்சலுக்கு மருந்து ஹோமியோபதியில் உண்டு என அவர்கள்தான் அதிகமாக குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

பன்றிக்காய்ச்சல் பயங்கரத்தை எதிர்கொள்ள, பொதுமக்களும் தன்னியல்பாக ஹோமியோபதி மருத்துவர்களை நாடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தாமதமாகவேனும், பன்றிக்காய்ச்சலுக்கு ஹோமியோபதியில் தடுப்பு மருந்தாக, ஆர்சினிகம் ஆல்பம்-30 -ஐ தரலாமென, மத்திய அரசின் ஆயுஷ் நிறுவனமும், மத்திய அரசின் ஹோமியோபதி ஆராய்ச்சி நிறுவனமும், கேரள மாநில அரசும் அறிவித்திருப்பது பாராட்டத்தக்கது. பிற மாநில அரசுகளும் இதைப் பற்றி பரிசிலிக்க வேண்டும்.

ஹோமியோபதியைக் கைக்கொள்வோம்!

பன்றிக்காய்ச்சலை எதிர்கொள்வோம்!!

அச்சம் தவிர்ப்போம்!!!

Pin It