எழுத வேண்டும்
எழுதியே தீர வேண்டும்

கதவுகள் திறக்கப்பட்டு
வெளிச்சம் வழியும் அறையில்
தரையில் அமர்ந்தபடி
உன்னுடன் அருந்திய
தேநீர் பற்றி

எதிலோ தொடங்கிய
உரையாடல்
லதா மங்கேஷ்கரில்
மையம் கொண்ட பொழுதில்
தூரத்திலிருந்து பிரயாணித்து வந்த
சாவன் கா மகீனா
பாடல் பற்றியும்

நீ ரசித்துச் சொன்ன
குழந்தைப் பிராயத்து
குதூகலங்களும்
கோமாளித்தனங்கள்
குறித்தும்

மழைக்காலத்து
மேகங்கள் குறித்தும்
லேசாக நனைக்கும்
சாரல் குறித்தும்

அப்பொழுது
அனிச்சையாய் கோர்த்துக் கொண்ட
நம் விரல்கள் குறித்தும்
முத்தமிட்டது குறித்தும்

எழுத வேண்டும்
எழுதியே தீர வேண்டும்

எனினும்
பின்மழை பொழுதுகளில்
கேட்டு ரசித்த புல்லாங்குழலிசை
காகிதங்களில் வசிப்பதில்லை.

- ந.லட்சுமி சாகம்பரி

Pin It