சாதி வெறி, மத வெறி, ஆணாதிக்க வெறி தமிழகத்தில் தலைவிரித்து ஆடத் தொடங்கியிருக்கிறது. தமிழக அரசோ கைகட்டி வேடிக்கை பார்க்கிறது.

ஓராண்டிற்கு முன்பு நக்கீரன் இதழ் அலுவலகம் வன்முறையாளர்களால் மிகக் கடுமையான தாக்குதலுக்கு உள்ளானது. அண்மையில், நாமக்கல் மாவட்டத்தில் எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய நாவலுக்குக் கண்டனம், அரசு அதிகாரிகள் முன்னிலையில் கட்டப் பஞ்சாயத்து, மிரட்டல், மன்னிப்புக் கடிதம் எழுதி வாங்குதல் ஆகியன அரங்கேறியுள்ளன.

இதைத்தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் எழுத்தாளர் புலியூர் முருகேசன் எழுதிய நாவலுக்கும் கண்டனம். அவரைக் கடத்திச் சென்று அடி உதையும் கொடுத்திருக்கிறார்கள். இப்போது புதிய தலைமுறை தொலைக்காட்சி அலுவலகத்தின் மீது தாக்குதல், வெடிகுண்டு வீச்சும் நடந்திருக்கிறது.

உலக மகளிர் நாளையட்டி புதிய தலைமுறை தொலைக்காட்சியில், மார்ச் 8ஆம் நாள், “தாலி பெண்களைப் பெருமைப்படுத்துகிறதா? சிறுமைப்படுத்துகிறதா?” என்ற தலைப்பில் ஒளிபரப்பாக இருந்த நிகழ்ச்சியின் முன்னோட்டம், மார்ச் 7ஆம் தேதி ஒளிபரப்பானது.

மறுநாள் காலை 9.30 மணியளவில் இந்து முன்னணி அமைப்பினர் தொலைக்காட்சி முன்பு திரண்டனர். ஒளிப்பதிவாளர் செந்தில்குமார் தாக்கப்பட்டு, ஒளிப்பதிவுக் கருவி உடைக்கப்பட்டது.

இது குறித்துக் காவல் உதவி ஆணையர், இணை ஆணையர் ஆகியோரிடம் சொன்னபோது, “நீங்க ஏதாவது நியூசைப் போடுவீங்க. நாங்க உங்களைப் பாதுகாக்கணுமா?” என்று கேட்டதாகப் புதியதலைமுறைச் செய்திப்பிரிவினர் கூறுகின்றனர்.

குறிப்பிட்டுச் சொன்னால் கருத்துச் சுதந்திரத்திற்கு எதிராக இந்து அமைப்புகள் வரிந்து கட்டிக் கொண்டு வன்முறையில் இறங்குவதும், அதைக் காவல்துறை கண்டுகொள்ளாமல் இருப்பதும் தமிழக அமைதிப்பூங்காவிற்கு வாடிக்கையாகிவிட்டது.

புதிய தலைமுறை தேர்ந்தெடுத்த “தாலி பெண்களைப் பெருமைப் படுத்துகிறதா? அல்லது சிறுமைப்படுத்துகிறதா?” என்ற தலைப்பு அவ்வளவு கொடுமையானதா?

சங்க இலக்கியத்தில் தாலி இருந்ததா, இல்லையா? தாலி கட்டுவது என்பது தமிழர் மரபா? தாலி என்றால் என்ன? என்பன போன்ற விவாதங்கள் தமிழகத்தில் பல்லாண்டுகளாக நடைபெற்று வருகின்றன.

oviyamansuapootranetc 600

‘தமிழர் திருமணத்தில் தாலி’ - என்ற தலைப்பில் பேராசிரியரும், தமிழ் ஆய்வறிஞருமான டாக்டர் மா. இராசமாணிக்கனார் ஒரு நூலே எழுதி இருக்கிறார்.

கடையெழு வள்ளல்களில் ஒருவனான ஆய் அண்டிரனைப் பற்றி ஏணிச்சேரி முடமோசியார் என்ற புலவர் பாடிய புறநானூற்றுப் பாடலில் இடம்பெற்றுள்ள மங்கலநாண் என்னும் சொல் தாலியைக் குறிக்காது என்று தன் ஆய்வுரையில் மா.இராசமாணிக்கனார் குறிப்பிட்டுள்ளார்.

அகநானூறு பாடல்கள் இரண்டில் இடம்பெற்றுள்ள மணவிழாக் காட்சியில், மகப்பேறுடைய பெண்கள் புதுநெல், அரிசி, திணைப் பொருள்கள் பரப்பி மலர்கள் சூழ நிகழ்த்திய மணவினையில் தாலி, மங்கலநாண் என்ற சொற்களோ, தாலி கட்டும் நிகழ்வோ சொல்லப்படவில்லை.

புலிப்பல் தாலி என்று சொல்வதை மா.இராசமாணிக்கனார் முற்றிலும் மறுக்கிறார். அது வீரத்தின் அடையாளம், திருமணத்தின் அடையாளம் இல்லை என்பதை அவர் நிறுவுகிறார்.

கி.பி.இரண்டாம் நூற்றாண்டு வரை தமிழ் மரபில் காணப்படாத தாலி சிலப்பதிகாரத்தில் அறிமுகமானதாகச் சிலர் சொல்வார்கள்.

அதுகூட, “மங்கல நல்லமளி ஏற்றினார்” என்றுதான் இருக்கிறது. “மங்கல நாண் ஏற்றினார்” என்று சிலம்பு சொல்லவில்லை. மங்கல நல்லமளி படுத்தினார் என்பது வேறு. மங்கல நாண் ஏற்றினார் என்பது வேறு. அங்கேயும் தாலி இல்லை.

எனவே தமிழர் மரபில் தாலி கட்டும் முறை பிந்தைய காலத்தில்தான் ஏற்பட்டது என்பது தெளிவாகிறது.

மனிதநேயப் பகுத்தறிவாளர்கள் தாலியை ஏற்கமாட்டார்கள். தாலி என்பது பெண்களை அடிமைப்படுத்தும் அடிமையின் சின்னம் என்கிறார் தந்தை பெரியார்.

“கற்பு என்கிற பதத்திற்குப் பதிவிரதை என்கிற பொருள் கொள்ளப்படுகிறது. இந்த இடத்தில்தான் கற்பு என்கிற வார்த்தைக்கு அடிமைக் கருத்து நுழைக்கப்படுகிறது என்பது எனது அபிப்பிராயம். அதாவது, பதியைக் கடவுளாகக் கொண்டவள், பதிக்கு அடிமையாய் இருப்பதையே விரதமாகக் கொண்டவள், பதியைத் தவிர வேறு யாரையும் கருதாதவள் எனப் பொருள் கொடுப்பதுடன், ‘பதி’ என்கிற வார்த்தைக்கு அதிகாரி, எஜமான், தலைவன் என்கிற பொருள்கள் இருப்பதால், அடிமைத்தன்மையை இவ்வார்த்தைகள் புலப்படுத்துகின்றன” என்று விளக்கும் தந்தை பெரியார், இதற்கான ஓர் அடிமைச் சின்னம், ஆணாதிக்கச் சின்னமாகத் தாலியைக் காட்டுகிறார்.

பெண்களின் கற்பைப் பேசும் இந்து மரபு ஆண்களின் கற்பைப் பற்றிப் பேசுவது இல்லை.

பெண்களுக்கு ஆண்கள் தாலி கட்டினால், அதே ஆண்களுக்குப் பெண்கள் ஏன் தாலி கட்டக்கூடாது என்ற பெரியாரின் சமூகப் புரட்சிக் கேள்விக்கு இன்றுவரை பதில் இல்லை.

திருமணம் என்றால் ஆணும் பெண்ணும் இணைந்து வாழ வேண்டும். அதற்கு ஒரு பதிவு இருக்க வேண்டுமே ஒழிய வேறு (தாலி-சடங்கு) ஒன்றும் தேவையில்லை என்கிறார் டாக்டர் அம்பேத்கர்.

தந்தை பெரியார் சொல்கிறார், “நாம் சமுதாயத்திலே பெரிய மாறுதல் வேண்டும் என்று சொல்கிறோம். சம உரிமை வேண்டும் என்று சொல்கிறோம்”.

மாற்றம் என்றும் நிலையானது. காலத்திற்கு ஏற்ப மாறுதல் வேண்டும். பழைய மரபு, பஞ்சாங்கம் என்றெல்லாம் திரிவது அறிவுடைமை ஆகாது.

இன்று காதல் திருமணம், சாதி மறுப்புத் திருமணம், தாலி மறுப்புத் திருமணம் என்ற மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டு இருக்கின்றன. இந்த மாற்றத்தில் தாலி ஒரு பொருட்டே அன்று. தாலிக்குப் பதிலாக மணமக்களின் சமத்துவம் மட்டுமே தேவை.

வருணாசிரமக் கட்டமைப்பில் சமத்துவத்திற்கு இடமில்லை. சமத்துவமற்ற சாதியின் அடையாளங்கள் தாலியிலும் வந்து நிற்கிறது. ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொரு அடையாளத் தாலி என்ற நிலை இன்றுவரை இருக்கிறது.

இப்பொழுது எழும் கேள்வி, தாலியா? சமத்துவமா? இதைத்தான் புதியதலைமுறைத் தொலைக்காட்சி தன் பாணியில் தாலி பெண்களைப் பெருமைப்படுத்துகிறதா? சிறுமைப்படுத்துகிறதா? என்று கேட்டது. இரண்டு தரப்புக் கருத்துகளுக்கும் அத்தொலைக்காட்சி இடம் அளித்திருந்தது.

கருத்துகளைக் கருத்துகளால் எதிர்கொள்ள இயலாதவர்கள், தடி கொண்டு தாக்க வருகிறார்கள். தடிகள் உடைந்து நொறுங்கும் என்பதும், கருத்துகள் காலத்தை வென்று நிற்கும் என்பதும்தான் இன்று வரையிலான வரலாறு.

Pin It