karunadhini 350‘வந்தேன், திரும்புகிறேன்’ என இரண்டே சொற்களில் தமிழக அரசின் ஜனநாயகத் தன்மையற்ற போக்கை ஊடகவியலாளர்களிடம் விளக்கிவிட்டு, விடைபெற்றார் தலைவர் கலைஞர். இப்படித்தான் தொடங்கிற்று இந்த முறை தமிழ்நாடு சட்டமன்றம்.

தலைவர் கலைஞர் ஏற்கனவே அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். தன் உடல்நிலை கருதி தனக்கேற்ற இருக்கை ஒன்றை அமைத்துத் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.

முதலமைச்சர் பன்னீர்ச்செல்வம் தன் கோரிக்கையை ஏற்று, தனக்கில்லை, இந்நாட்டின் ஜனநாயகத்திற்கு இடம் தருவார் என்ற நம்பிக்கையோடு, சட்டமன்றம் வந்த தலைவருக்கு ஏமாற்றமே காத்திருந்தது.

நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு, சட்ட மன்றத்தில் இடத்தை இழந்தவருக்கு இன்னமும் அங்கே ஓர் இடம் தனியாக ஒதுக்கப்பட்டே இருக்கிறது.

ஆனால், திருவாரூர்த் தொகுதி மக்களால் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினரான தலைவர் கலைஞருக்கோ அங்கே இடமில்லை. இப்படி முரண்பட்டுக் கிடக்கிறது இன்றைய சட்டமன்றம்.

இருப்பினும் நாம் முறையாக நடந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில், தி.மு.கழக சட்டமன்றக் கட்சித் தலைவர், தளபதி மு.க.ஸ்டாலின், முதலமைச்சர் ஓ.பன்னீர்ச்செல்வத்தை நேரில் சந்தித்துத் தன் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

அதன்பின், தளபதி தலைமையில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அவையில் இருந்தோம். கேள்வி நேரம் முடிந்தவுடன் தளபதி அவர்களும், அண்ணன் துரைமுருகன் அவர்களும் மிக முக்கியமான பிரச்சினையாக காவிரியியின் குறுக்கே அணைகட்டுவதால், டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும் நிலை குறித்து விவாதிக்க அனுமதிக்க வேண்டும் என்றனர்.

ஆனால், சபாநாயகர் அனுமதி தர மறுத்ததால், நாங்கள் வெளிநடப்பு செய்தோம். அவர்களாகவே அவர்களைப் புகழ்ந்து கொண்டும், தி.மு.க.வை விமர்சித்துக் கொண்டும் இருந்தனர்.

முதல்வர் ஓ.ப., கழக அரசை வழக்கம்போல் மைனாரிட்டி அரசு என்று ஏளனம் செய்து பேசினார். உடனே நம் தளபதி எழுந்து இந்த அரசு ஒரு பினாமி அரசு என்றார். உடனே முதல்வர் 99 உறுப்பினர்களைக் கொண்ட பெரும்பான்மை இல்லாத அரசு என மாற்றிக் கொண்டார்.

மீண்டும் இன்று டெல்டா மாவட்டத்தில், காவிரி ஆற்றின் குறுக்கே அணைகள் கட்டுவதால் ஏற்படும் விளைவுகளை அரசுக்கு உணர்த்த போராட்டங்கள் அனைத்துக் கட்சிகள் சார்பில் நடத்தப்பட்டு, பல்லாயிரக்கணக்கானவர்கள் சிறை சென்றுள்ளது குறித்துப் பேச வேண்டும் என்று கேட்டோம். அதற்கும் சபாநாயகர் அனுமதி தரவில்லை. மீண்டும் வெளிநடப்புச் செய்ய வேண்டியதாயிற்று.

வெளியில் வந்து ஊடகவியலாளர்களுக்குப் பேட்டியளித்த தளபதி அவர்கள், கீழ்க்காணும் செய்திகளை முன்வைத்தார்:

1. காவிரிக்குக் குறுக்கே அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்த மத்திய அரசைத் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.

2. உரத்தட்டுப்பாட்டைத் தமிழக அரசு உடனே போக்க வேண்டும்.

3. சர்க்கரை ஆலைகள் டிசம்பர் 1 முதல் தரவேண்டிய, டன் ஒன்றுக்கு 300 ரூபாயை உடனே வழங்க வேண்டும்.

4. தருமபுரி குழந்தைகளின் சாவுக்கு உண்மையான காரணத்தை அரசு தெரிவிக்க வேண்டும்.

இவைகளை வெளியில் வந்துதான் பேச முடிகிறதே தவிர, சட்டமன்றத்திற்குள் பேசுவதற்கு எங்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை.

இரண்டாம் நாள் சட்டமன்ற நிகழ்வுகள், மின் வெட்டுப் பிரச்சினை குறித்ததாக இருந்தது. மின்வெட்டுப் பிரச்சினையில் பதில் சொல்ல முடியாமல் மின்துறை அமைச்சர் தடுமாறினார். இடையிடையே எல்லா அமைச்சர்களும் குறுக்கிட்டனர். வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமார், முதியோர் உதவித் தொகையை கடந்த அரசைவிட 65 சதவீதம் கூடுதலாக வழங்கு கிறோம் என்றார்.

STALIN 350

உடனே றை அமைச்சர் ஐ. பெரியசாமி அவர்கள், உண்மைக்கு மாறான தகவலை நீங்கள் தெரிவிக்கிறீர்கள் என்றார். தனது ஆத்தூர் தொகுதியில், 50 சதவீதத்திற்கு மேற்பட்டவர்களுக்கு உதவித் தொகையையே இந்த அரசு ரத்து செய்து விட்டது என்று கூறினார்.

ஒருவர் இறந்தால்தான் இன்னொருவருக்குக் கொடுக்கும் கொடுமை இங்கு நிகழ்கிறது என்றும், இவற்றையெல்லாம் மெய்ப்பிப்பதற்கு நாங்கள் தயார், அமைச்சர் பதிலுக்குப் பொறுப்பு ஏற்பாரா என்றும் அறைகூவல் விடுத்தார். அமைச்சரிடமிருந்து எந்தப் பதிலுரையும் வரவில்லை.

வாக்குவாதம் முற்றி, வீட்டு வசதித் துறை அமைச்சர் வைத்தியலிங்கம் ஒரு சண்டியரைப் போல கையை ஓங்கிக்கொண்டு தளபதியை அடிப்பதற்குப் பாய்ந்தார். தி-.மு.க. உறுப்பினர்கள் சபாநாயகரைப் பார்த்து, அவர் அமைச்சரா ரௌடியா என்று கேட்டார்கள். நியாயம் கேட்டதற்காக, தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரையும் வெளியேற்றிட ஆணையிட்டார்.

08.12.14 அன்று இறுதிநாள் பணிகளுக்காக அவை கூடியது. கேள்வி நேரம் இல்லை. துணை மானியக் கோரிக்கைக்குரிய விவாதம் தொடங்கியது-. அ.தி.மு.க.வின் ஜால்ராக்கள் செ.கு. தமிழரசன் தொடங்கி ஒவ்வொருவராகப் பேசினர். தி.மு.க. சார்பில் தளபதி பேசும் நேரம் வந்தது. தளபதி அவர்கள் சில புள்ளி விவரங்களை முன்வைத்தார்.

2013ஆம் நிதியாண்டில், 110ஆவது விதியின் கீழ் முப்பத்தி ஆறு அறிவிப்புகளில், அறிவிக்கப்பட்ட செலவினத் தொகை சுமார் 32 ஆயிரம் கோடி. ஆனால், இப்போது அரசு தந்துள்ள துணை மானிய அறிவிப்பில் ஒதுக்கி இருக்கும் தொகை 1200 கோடி மட்டுமே. அப்படியானால், பழைய அறிவிப்புகள் எல்லாம் என்ன ஆயின? அவற்றுக்கான நிதி ஒதுக்கீடு எங்கே? அவையெல்லாம் வெற்று அறிவிப்புகளா என்று கேட்டார்.

உடனே முதல்வர் பன்னீர்ச்செல்வம் மைனாரிட்டி அரசு நடத்தியவர்கள் நீங்கள் என்றார். அதற்குத் தளபதி அவர்கள், ஒரு பினாமி முதல்வராக இருந்து கொண்டு இதனை நீங்கள் குறிப்பிடக்கூடாது என்றார். நான் பினாமி முதல்வர் இல்லை என்றார் பன்னீர்ச் செல்வம். அப்படியானால், முதல்வர் இருக்கையில் அமர வேண்டியதுதானே என்று தளபதி கேட்க, எந்த விடையும் வரவில்லை. சபாநாயகர் குறுக்கிட்டு, எங்களை வெளியேற்றினார்.

தமிழக சட்டமன்றத்தில், ஜனநாயகம் கவலைக்கிடமாக உள்ளது-. மக்கள் என்னும் மருத்துவர்கள்தான் காப்பாற்ற வேண்டும்.

Pin It