‘இந்திய விடுதலைக்குப் பின் நாட்டில் ஏற்பட்ட சிக்கல்களுக்கு எல்லாம் நேருதான் காரணம். இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை, காந்தி படுகொலை உள்ளிட்ட அனைத்துத் துயரங்களும் நேருவின் சுயநலத்தினால் விளைந்த கேடுகளே. அந்த வகையில், கோட்சே தவறான நபரைக் கொலை செய்துவிட்டார் என்றே தோன்றுகிறது. காந்திக்குப் பதிலாக நேருவைக் கொலை செய்திருக்கலாம்’

என்ன அதிர்ச்சியாக இருக்கிறதா?

மத்தியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிப் பொறுப்பேற்றது முதலே ஆர்.எஸ்.எஸ்., விசுவ இந்து பரிஷத், இந்து முன்னணி உள்ளிட்ட இந்து மத அடிப்படைவாத இயக்கங்கள் தங்கள் நடவடிக்கைகளை, வெளிப்படையாகவும், தீவிரமாகவும் செயல்படுத்தத் தொடங்கி விட்டன. சிறுபான்மையினருக்கு எதிரான பேச்சுகள், வகுப்புவாதப் பரப்புரைகள், இந்தி - சமற்கிருதத் திணிப்பு, இந்தியா இந்துக்களுக்கே என்னும் முழக்கம் என, தங்களுடைய அடிப்படைக் கொள்கைகளை மீண்டும் நிலைநாட்டிட முயன்று வருகின்றன. நாட்டில் பாரதிய ஜனதா கட்சி என்னும் பதாகையின் கீழ், சங் பரிவாரங்களின் ஆட்சி நடப்பதாகவே தெரிகிறது. நாட்டு நடப்பும் நிலைமை அப்படித்தான் போய்க்கொண்டிருக்கிறது என்பதை உறுதிப்படுத்துகிறது.

godse and savarkarமேலே சொல்லப்பட்ட செய்தி, கடந்த அக்டோபர் 17ஆம் தேதி, கேரளாவிலிருந்து வெளிவரும் ‘கேசரி’ வார இதழில் வெளியான கட்டுரையில் இடம்பெற்றிருக்கிறது. கேசரி வார இதழ் - கேரள மாநில ஆர்.எஸ்.எஸ்.சின் அதிகாரப் பூர்வமான வார ஏடாகும். வழக்குரைஞர் பி. கோபாலகிருஷ்ணன் என்பவர், “காந்திஜியைப் பின்னிருந்து குத்தியவர்” என்ற தலைப்பில் எழுதியுள்ள கட்டுரையில் (பக். 21- 25)தான் மேலே சொல்லப்பட்ட கருத்துகள் இடம் பெற்றுள்ளன. இக்கட்டுரையாளர், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், பா.ஜ.க. சார்பாக, சாலக்குடி தொகுதியில் போட்டியிட்டுத் தோற்றவர்.

இது குறித்த செய்தி வெளியானதும், பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கண்டனங்கள் வெளியாகின. காங்கிரஸ் கட்சியும் தன் ‘கண்டனத்தை’த் தெரிவித்தது. கேரள மாநிலக் காவல்துறையும் விசாரித்து வருவதாகத் தெரிகிறது. ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தும் தன் பங்குக்கு ஓர் அறிக்கை வெளியிட்டு, முன்னாள் ‘குருஜிக்களுக்கு’ப் பெருமை சேர்த்துக் கொண்டார். ‘கேசரியில் வெளியான கட்டுரையிலுள்ள கருத்துகள், கட்டுரையாளரின் தனிப்பட்டக் கருத்துகள். ஆர்.எஸ்.எஸ்.சின் கருத்து அல்ல’ என்னும் ‘உண்மையை’ பகவத்தின் அறிக்கை நாட்டு மக்களுக்கு உரத்துச் சொன்னது.

சுப்பிரமணியன்சாமி எதைச் சொன்னாலும் - ராஜபக்சேக்கு பாரத ரத்னா விருது அளிக்க வேண்டும் என்று சொன்னாலும், அது அவருடைய தனிப்பட்ட கருத்து என்கிறார்கள் பா.ஜ.க.வினர். பா.ஜ.க. அமைச்சராகவே இருந்தாலும், ஜாமீனில் வெளிவந்த ஜெயலலிதாவுக்கு வாழ்த்தும், நல் ஆதரவும் நல்கிய மேனகாகாந்தியின் கருத்தும்கூட அவருடைய சொந்த கருத்துதான். சுய சிந்தனையே கூடாது என்னும் விதிகளை உடைய சங் பரிவாரங்களும் இப்போது, அந்தப்படியே சொல்கின்றன. அது என்னமோ, என்ன மாயமோ தெரியவில்லை, இப்போது நம் நாட்டில், அதிலும் குறிப்பாகக் ‘காவி’ வட்டாரத்தில் ‘சுய சிந்தனையாளர்கள்’ அதிகரித்து விட்டார்கள் போலிருக்கிறது.

சரி, கேசரிக்கு வருவோம். ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் அப்படிச் சொன்னபோதிலும், கேசரி ஏட்டின் ஆசிரியர், என்.ஆர். மது, கட்டுரைக்கும், கட்டுரையாளருக்கும் ஆதரவாகவே பேசியிருக்கிறார். உண்மைகளை ஆதாரமாக வைத்தே அக்கட்டுரை எழுதப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 ஆர்.எஸ்.எஸ்.சின் அதிகாரப் பூர்வ ஏட்டில் வெளிவந்த கருத்துக்கும் ஆர்.எஸ்.எஸ்.க்கும் தொடர்பில்லை என்று மோகன் பகவத் சொல்வது, இந்த உடம்பு என்னுடையதுதான், ஆனால் அதன் உள்ளே ஓடுகின்ற ரத்தம் எனக்குச் சொந்தமானதில்லை என்பதைப் போல இருக்கிறது.

தி இந்து தமிழ் நாளிதழும், உரலுக்கும் வலிக்காமல், உலக்கைக்கும் நோகாமல் நெல்லுக்குத்துவது போல, தடவிக் கொடுத்து மென்மையாகக் கண்டித்திருக்கிறது.

“வரலாற்றில் எவருமே விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. அதேபோல, ஒரு பத்திரிகையில் வெளியாகும் ஒவ்வொரு வரியும் அந்தப் பத்திரிகையின், அல்லது அந்தப் பத்திரிகையை நடத்தும் அமைப்பின் பார்வையை வெளிப்படுத்துகிறது என்றும் சொல்லிவிட முடியாதுதான். ஒரு ஜனநாயக ஊடகம் என்பது பல்வேறு கருத்துகளுக்கும் இடமளிப்பதுதான். நாம் இந்த சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் அங்கீகரிக்கிறோம்” என்கிறது அக்டோபர் 30ஆம் நாளிட்ட அதன் தலையங்கம்.

 ‘ஜனநாயக ஊடகம் என்பது பல்வேறு கருத்துகளுக்கும் இடமளிப்பதுதான்’ என்று தி இந்து கூறும் ஜனநாயகம், ஆர்.எஸ்.எஸ்.சின் ‘கேசரி’க்கும் பொருந்துமா? ஆர்.எஸ்.எஸ். அமைப்பைத் தடை செய்ய வேண்டும், அது ஒரு தீவிரவாத அமைப்பு என்று கட்டுரை எழுதினால், அது கேசரியில் வெளியிடப்படுமா? இன்றைய சூழலில், அச்சு ஊடகங்கள், காட்சி ஊடகங்கள் உள்ளிட்ட எந்தவொரு ஊடகங்களும் ஏதோ ஒரு சார்பு நிலையில் இருந்தே செயல்படுகின்றன. தி இந்து சொல்லும், ‘பத்திரிகையின் பார்வை’ என்பதைப் பொதுவான செய்திப் பத்திரிகைகளுக்கு வேண்டுமானால் பெயரளவிற்குப் பொருத்திப் பார்க்கலாம். ஆனால், ஓர் அமைப்பின் தனிப்பட்ட - அதிகாரப் பூர்வமான - ஏட்டிற்கு எப்படிப் பொருந்தும்.

 கோபாலகிருஷ்ணனின் கட்டுரையில், காந்தி கொலைக்கும், ஆர்.எஸ்.எஸ்-.சுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்னும் பழைய பல்லவியைப் பாடவும் மறக்கவில்லை. இதுபோல் இன்னும் பல பொய்களை அவிழ்த்துவிட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். சாவர்கருக்கும் காந்தி கொலைக்கும் தொடர்பு இல்லை என்பதும் அவற்றில் ஒன்று.

ஆனால், நீதிமன்றத்தில் திகம்பர் பட்கே கொடுத்த வாக்குமூலமும், அக்கொலையைப் புலனாய்வு செய்ய அமைக்கப்பட்ட, கபூர் கமிசன் அறிக்கையும் கொலைச் சதி தீட்டியதில் பெரிய மூளையாக இருந்து செயல்பட்டது சாவர்க்கர்தான் என்பதை ஆணித்தரமாகச் சொல்கின்றன. காந்தி கொலையின் பின்னணியில் உள்ள உண்மைகளை, அரசியல் விமர்சகரும், வழக்குரைஞருமான ஏ.ஜி.நூரணி, மார்க்சிய எழுத்தாளர் அருணன் உள்ளிட்ட பலரும், வரலாற்றுப் பின்புலங்கள் மற்றும் நீதிமன்ற ஆதாரங்களோடு நூல்களாகவும், கட்டுரைகளாகவும் வெளிக்கொணர்ந்துள்ளனர்.

ஆனால், இன்றளவும் சங் பரிவாரங்களாகட்டும், பா.ஜ.க.வாகட்டும், தாங்கள் அவிழ்த்துவிடும் கட்டுக்கதைகளே கண்கண்ட உண்மைகள் என்பதான தலைகீழ் வரலாற்றை எழுதத் தொடர்ந்து முயல்கின்றன.

‘நாதுராம் கோட்சே ஆர்.எஸ்.எஸ். ஐ மிக மோசமாக விமர்சிக்கக் கூடியவர். ஆர்.எஸ்.எஸ். இந்துக்களை ஆண்மையில்லாதவர்களாகச் செய்கிறது என்பதே அவர் குற்றச்சாட்டு. நாம் கோட்சேவை வைத்து எதுவும் செய்ய முடியாது. வேறு எதுவும் இல்லாதபோது, கோட்சே விவகாரத்தைக் கிளப்புவதைக் காங்கிரஸ் வழக்கமாகக் கொண்டுள்ளது’ என்று அத்வானி ஒரு நேர்காணலில் (The Times of India, Nov.22, 1993) சொன்னதற்கு, நாதுராம் கோட்சேவின் சகோதரன் கோபால் கோட்சே கடுமையாக விடை சொல்லியிருக்கிறான்.

‘நான் அதை (அத்வானியின் கூற்றை) மறுக்கிறேன். அவ்வாறு சொல்வது கோழைத்தனமானது. ‘நீ போய்க் காந்தியைக் கொன்றுவா’ என ஆர்.எஸ்.எஸ். தீர்மானம் நிறைவேற்றவில்லையே தவிர, நீங்கள் அவரை (நாதுராம்)க் கைவிட முடியாது. இந்து மகாசபா அவரைக் கைவிடவில்லை. ஆர்.எஸ்.எஸ்.சில், அறிவார்ந்த ஊழியராக இருந்த போதே, 1944 முதல் நாதுராம் இந்து மகா சபாவிலும் பணியாற்றத் தொடங்கிவிட்டார்’ (Gopal Godse interview, Frontline, January 28, 1994).

மேலும் அதே நேர்காணலில், ‘எல்லாச் சகோதரர்களும் அதில்(ஆர்.எஸ்.எஸ்.சில்) இருந்தோம். நான், நாதுராம், தாத்தாத்ரேயா மற்றும் கோவிந்தன் ஆகியோர் இருந்தோம். நாங்கள் எங்கள் வீட்டில் வளர்ந்ததைவிட ஆர்.எஸ்.எஸ்.சில்தான் அதிகம் வளர்ந்தோம். அது எங்களுக்குக் குடும்பம் போன்றது’ என்று அழுத்தமாகச் சொல்கிறான்.

நாதுராம் கோட்சேயும் தன் பங்குக்கு, ஆர்.எஸ்.எஸ்.சில் தான் பல ஆண்டுகளாகப் பணியாற்றியதையும், சாவர்க்கரோடு தனக்கிருந்த நெருக்கத்தைப் பற்றியும் தன்னுடைய வாக்குமூலத்தில் பதிவு செய்துள்ளான். 1948 நவம்பரில் அளிக்கப்பட்ட வாக்குமூலத்தைத் தொகுத்து, 1977இல் “May it Please Your Honour” என்னும் பெயரிலும், அதையே 1993இல் “Why I assasinated Mahatma Gandhi?” என்னும் பெயரிலும் கோபால் கோட்சே நூலாக வெளியிட்டான்.

இதேபோல், சங் பரிவாரங்களின் ‘புனித ஆசான்’ சாவர்கரின் பங்கு குறித்து அறிய பெரிய அகழ்வாராய்ச்சி எல்லாம் செய்ய வேண்டியதில்லை. அரசுத் தரப்புச் சாட்சியாக மாறிய திகம்பர் பட்கேயின் வாக்குமூலம், காந்தி படுகொலைக்கும் சாவர்கருக்கும் உள்ள தொடர்பைத் தெள்ளத் தெளிவாகக் காட்டுகிறது. கோட்சே சாவர்கரின் விசுவாசமான சீடன் என்பதும் வெட்ட வெளிச்சமாகிறது. தீர்ப்பு நாளன்று, நீதிபதி தண்டனை விவரங்களை அறிவித்த உடனேயே, நீதிமன்றத்திலேயே, கோட்சே, ஆப்தே உள்ளிட்ட அனைவரும் சாவர்கரின் காலில் விழுந்து வணங்கியதும், முதல் கொலை முயற்சியின்போதே (ஜனவரி 17) “வெற்றியோடு வாருங்கள்” என்று வாழ்த்தியனுப்பியதும் உண்மையிலும், உண்மை என்பது வரலாற்றுப் பக்கங்களில் பதிவு செய்யப்பட்டுவிட்டது. சாவர்கர் இறந்தபிறகு, 1966இல் அமைக்கப்பட்ட கபூர் விசாரணைக்குழுவும், “இந்த விபரங்கள் எல்லாம் சாவர்கரும் அவரது குழுவினருமே கொலை செய்ய சதி செய்தார்கள் என்பதைத் தவிர இதர கருதுகோள்களை எல்லாம் தகர்த்து விட்டன” என்று தீர்ப்பினை வாசித்து முடித்து விட்டது.

rss

ஆனாலும், சந்தனத்தில் பொட்டு வைத்து, சாணியைப் பிள்ளையாராக்கியது போல, கருணை மனு ‘புகழ்’ சாவர்கரை, ‘வீர’ சாவர்கராக்கி, நாடாளுமன்றத்தில், காந்தி படத்திற்கு அருகிலேயே அவருடைய படத்தையும் வைத்துவிட்டார்கள். சாவர்கருக்குப் போட்டுவிட்ட, வீர வேடத்தைத் தக்கவைக்க, வரலாற்றை மாற்றவும், திரிக்கவும் செய்கிறார்கள்.

1915 ஏப்ரல் 9இல் இந்து மகாசபா தொடங்கப்பட்டது. மதன்மோகன் மாளவியா, லாலா லஜபதிராய் போன்றவர்கள் தொடக்கத்தில் அதன் தலைவர்களாக இருந்தனர். ஆங்கில அரசாங்கத்திடம் மன்னிப்புக் கடிதம் கொடுத்துச் சிறையில் இருந்து வெளியில் வந்த சாவர்கர், 1937இல் இந்து மகாசபையின் தலைவரானார். 1911 ஜுன் 4இல் அந்தமான் சிறையில் அடைக்கப்பட்ட சாவர்கர், அதே ஆண்டிலேயே ஆங்கில அரசாங்கத்திற்கு மன்னிப்புக் கடிதம் எழுதிவிட்டார். பிறகு அதை நினைவுபடுத்துவதற்காக அதைவிட மோசமான இன்னொரு மனு. ஒவ்வொன்றிலும், பிரிட்டிஷ் அரசுக்கு விசுவாசமாக நடப்பதாக, மிகவும் தாழ்மையுடன் உறுதியளிக்கிறார் ‘வீர சாவர்கர்’. வரலாற்றாசிரியர் ஆர்.சி. மஜும்தார், இந்திய ஆவணக் காப்பகத்திலிருந்து திரட்டிய ஆதாரங்களின் அடிப்படையில் தன்னுடைய Penal Settlements in Andamans என்னும் நூலில் பதிவுசெய்கிறார்.

“1911இல் நான் எழுதிய கருணை மனுவை மேன்மை பொருந்திய தாங்கள் பரிசீலிக்க வேண்டும் என்றும், இந்திய அரசுக்கு அனுப்பி வைக்க அனுமதிக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.... எனக்குள் ஏற்பட்டிருக்கிற மாற்றம் எதிர்காலச் செயல்பாடு பற்றிய உணர்வுப் பூர்வமானது என்பதால் அரசு விரும்புகிறபடி எந்த முறையிலும் அதற்குச் சேவை செய்யத் தயாராயிருக்கிறேன். .வழிதவறிப் போன மகன் அரசு எனும் பெற்றோர் வீட்டைத் தவிர வேறு எங்கு திரும்ப முடியும்” (Penal Settlements in Andamans). எப்படி இருக்கிறது பாருங்கள், ‘வீர சாவர்கரின் வீரம்’! இப்படிக் காலில் விழுந்து காரியம் சாதிக்கின்ற நரித்தந்திரத்தைத் தொடக்கி வைத்த பெருமையும், சங் பரிவாரங்களின் ‘புனித ஆசானையே’ சாரும்.

 சாவர்கர் பிரிட்டிசாருக்கு அடிமைசானம் எழுதிக் கொடுத்த விவரங்களை, மறுக்க முடியாத ஆதாரங்களுடன், கே.என்.பணிக்கர் தொகுத்த, Towards Freedom, 1940: A Documentary History of the Freedom Struggle என்னும் இரண்டு தொகுதிகளையும், தன் கட்டுப்பாட்டில் இருந்த இந்திய வரலாற்று ஆய்வுக் கவுன்சில் வெளியிடாமல் தடை செய்தார் முரளி மனோகர் ஜோஷி.

 சு.சாமி வேறு புதிதாக, சாவர்கர் ‘படம்’ ஓட்டியிருக்கிறார். தி ஹிண்டு(அக்.11,2014) நாளேட்டில் எழுதிய கட்டுரையில் (History and the nationalist project) , அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாவர்கர் செய்த ‘தியாகங்கள்’ குறித்தும், ஒரு கதாநாயகனைப் போல அவர் தப்பித்து வந்த வீரச் செயலைப்பற்றியும் நினைவுபடுத்துகிறார். அத்தோடு, இவற்றையெல்லாம் பேசாத வரலாற்று நூல்களையும் கொளுத்த வேண்டும் என்கிறார். அது சரி, நீதிமன்றச் சாட்சிக்குக்கூட, புராணங்களே போதும் என்றானபின், அவர்களுக்கு வரலாறு எதற்கு? நாடே இல்லாத நாடோடிக் கூட்டத்திற்கு வரலாற்றைப் பற்றி என்ன அக்கறை இருக்க முடியும்? அதனால்தான், பிழைப்புக்கு வசதியானபடியெல்லாம் வரலாற்றை மாற்ற நினைக்கிறார்கள்.

பள்ளிக்கூடங்களில், ஒற்றைவரி வினாவிற்கு விடையாக மட்டுமே அறியப்பட்டு வந்த, சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு, வானுயரச் சிலை வைத்து, இந்தியாவின் அடையாளமாக்க நினைக்கிறார், இன்றைய பிரதமர் மோடி. அதற்குக் காரணம் என்ன தெரியுமா? பதவியும், பட்டமும் காங்கிரசில், பட்டேல் சாய்ந்திருந்ததும், சார்ந்திருந்ததும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை! பிரதமர் நேருவும், காந்தியும் ஆர்.எஸ்.எஸ். மீது கடுமையான விமர்சனங்களை வைத்தபோது, ஆர்.எஸ்.எஸ். மீதான தன் நம்பிக்கையை வெளிப்படுத்தியவர் பட்டேல்.

ஒரு முறை சிலர், ஆர்.எஸ்.எஸ்.சின், அமைப்புக் கட்டுப்பாட்டைப் பற்றிக் காந்தியிடம் புகழ்ந்து பேசியபோது, சட்டென்று இடைமறித்து காந்தி சொன்னார், “ ஹிட்லரின் நாஜிகளும், முசோலினியின் பாசிஸ்டுகளும்கூட இப்படித்தான் இருந்தார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்”.

1947 டிசம்பரில், அதாவது காந்தி கொலையாவதற்கு முன்பே, மாகாண முதலமைச்சர்களுக்கு நேரு பின்வருமாறு ஒரு கடிதம் எழுதினார்,

“தனி ராணுவப் படை என்கிற குணத்தோடுதான் ஆர்.எஸ்.எஸ். இயங்கி வருகிறது என்பதற்கு நம்மிடம் நிறைய ஆதாரங்கள் உள்ளன. கறாரான நாஜிப் பாதையை அவர்கள் பின்பற்றுகிறார்கள். அந்த அமைப்பின் வழி முறைகளைக் கடைப்பிடிக்கிறார்கள்”

ஆனால் பட்டேலின் நிலைப்பாடு எப்படி இருந்தது தெரியுமா? காந்தி கொலையைப் பொறுத்தவரை, சாவர்கரைத் தப்புவிக்கச் செய்யும் மிகச் சிறந்த கிரிமினல் வழக்கறிஞராகவும், ஆர்.எஸ்.எஸ்.சைக் காப்பாற்றும் விசுவாசியாகவுமே நடந்துகொண்டார். உடல் காங்சிரசுக்கு, உயிர் சங் பரிவார்க்கு என்பதே பட்டேலின் நிலைப்பாடாக இருந்தது. நான் அடிப்பதுபோல அடிக்கிறேன், நீ அழுவதைப் போல அழு என்று, ஆர்.எஸ்.எஸ்.சைத் தடை செய்து, உடனே தடையை நீக்கியும் விட்டார் பட்டேல்.

அதேபோல், பாகிஸ்தான் பிரிவினையைத் தீவிரமாக ஆதரித்தவர்களில் பட்டேல் முதன்மையானவர்.

“(கிரிப்ஸ்)அமைச்சரவைக் குழுவின் திட்டம் இதைவிடச் சிறந்தது என்னும் ஆசாத்தின் கருத்தை பட்டேல் மறுத்தார். அவர் கூறினார் - கடந்த ஒன்பது மாத காலமாக இடைக்கால சர்க்காரில் இருந்த அனுபவத்தைக் கொண்டு பார்க்கும்போது, மே 16 அறிக்கை ( அமைச்சரவைக் குழு அறிக்கை) நடைமுறைக்கு வராமல் போனதற்கு எனக்கு வருத்தம் ஏதுமில்லை. அதை நாம் ஏற்றுக் கொண்டிருந்தால், முழு இந்தியாவும் பாகிஸ்தான் வழியில் போயிருக்கும். இப்போது நமக்கு 75 முதல் 80 சதவீதம் வரையிலான பகுதி கிடைக்கிறது. இதை நமது சிந்தனைக்கு ஏற்ப வளர்க்கலாம், வலுவாக்கலாம்” என்பதே பட்டேலின் எண்ணமாக வெளிப்பட்டது என்கிறார் ஆர்.சி. மஜும்தார்.

வர்ணாசிரமத்தின் விளைச்சலான சாதியத்தையும் இரும்புமனிதர் கெட்டியாகக் கடைப் பிடித்திருக்கிறார். இதைப்பற்றிய பதிவு பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு 16 இல் இருக்கிறது. அதில் அம்பேத்கர் இப்படி எழுதுகிறார்.

“1942இல் உலகப்போரை முன்னிட்டு, இந்தியர்களின் ஆதரவைப் பெறும் நோக்கோடு, வைசிராய் லின்தோ பிரபு பல்வேறு பகுதியினரின் பிரதிநிதிகளையும் தம்முடைய இருப்பிடத்துக்கு அழைத்துப் பேசினார். இவ்வாறு அழைக்கப்பட்டவர்களில் ஷெட்யூல்டு வகுப்புகளைச் சேர்ந்தவர்களும் இருந்தனர். இத்தகைய கீழ்த்தரமானவர்களுக்கு வைசிராய் அழைப்பு விடுத்ததை திரு வல்லபாய் பட்டேலால் சகித்துக் கொள்ள முடியவில்லை. இதற்குப் பிறகு ஆமதாபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய திரு வல்லபாய் பட்டேல் பின்கண்டவாறு கூறினார்.

“வைசியராய் இந்து மகாசபைத் தலைவர்களை அழைத்தார், முஸ்லீக் தலைவர்களை அழைத்தார். அத்தோடு காஞ்சிகள் (எண்ணெய் எடுப்போர்), மோச்சிகள் (செருப்பு செப்பனிடும் செம்மான்கள்) போன்றோரையும் கூட அழைத்தார்”

திரு வல்லபாய் பட்டேல் மனக் காழ்ப்பும், வன்மமும், சுடுசொல்லும் கொண்ட தமது சொற்களால் காஞ்சிகளையும், மோச்சிகளையும் மட்டுமே குறிப்பிட்ட போதிலும், இந்த நாட்டின் அடிமட்ட வகுப்புகளிடம், ஆதிக்க வகுப்புகளும், காங்கிரஸ் மேலிடமும் கொண்டுள்ள பொதுவான வெறுப்பையும், இகழ்ச்சியையுமே அவருடைய உரை குறிக்கிறது என்பதில் அணுவளவும் ஐயமில்லை. (பக்கம் 338- -339).”

எனவே, சிறுபான்மையினர் எதிர்ப்பு, வருணாசிரமத்தின் விளைச்சலான சாதியைக் காப்பாற்றுதல் எனும் தகுதிகளோடு, தங்கள் ‘குருஜீ’க்களைக் காப்பாற்றிய நன்றியும் சேர்ந்துகொள்ள, காந்தி, ஜவஹர்லால் நேரு உள்ளிட்ட யாரைக் காட்டிலும், பட்டேலே இந்திய ஒருமைப்பாட்டுக்கு உழைத்தவர் என்கிற ‘புதிய’ வரலாற்றை எழுத நினைக்கிறது பா.ஜ.க.

சரி, மீண்டும் நாம் முதலில் குறிப்பிட்ட, கேசரி வார ஏட்டின் செய்திக்கு வருவோம்.  ‘கோட்சே நேருவைக் கொலை செய்திருக்கலாம்’ என்னும் வரிகள் புதிய கண்டுபிடிப்பு அன்று. கட்டுரையாளர் கோபாலகிருஷ்ணன் மூலமாக அதை மீண்டும் புதுப்பித்திருக்கிறார்கள், அவ்வளவுதான்! காந்தியோடு, நேருவையும் கொலை செய்யவே திட்டம் தீட்டினார்கள் என்பதை, அரசுத் தரப்பு சாட்சியாக மாறிய, திகம்பர் பட்கேயின் சாட்சியம் சொல்கிறது. (நீதியரசர் ச. மோகனின் ‘தியாக தீபம்’ கட்டுரைத் தொகுப்பிலிருந்து எழுத்தாளர் அருணன் - கோட்சேயின் குருமார்கள் நூலில்).

பா.ஜ.க. தலைவர்கள் போற்றும் ‘குருஜீ’ கோல்வால்கர், ஆர்.எஸ்-.எஸ். மீதான தடையை நீக்க வேண்டும் என்று நேருவுக்குக் கடிதம் எழுதியபோது, ‘ஆர்.எஸ்-.எஸ். ஒரு மதவெறி அமைப்பு’ என்று கடுமையாகப் பதில் எழுதினார். நேருவின் வரிகள் இன்றைக்கும் பொருந்தும் என்பதை, கேசரி ஏட்டின் கட்டுரையும், சங் பரிவார் தலைவர்களின் மதவெறிப் பேச்சும் உறுதிப்படுத்துகின்றன. என்னவென்று? ஆர்.எஸ்-.எஸ். அமைப்புத் தடை செய்யப்பட வேண்டிய அமைப்பு என்பதையும், அதற்கான அவசியத்தை உறுதிப்படுத்துகின்றன.

காங்கிரஸ் கட்சியின் முதல் பிரதமர் நேருவைக் கொலை செய்திக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ்.சின் வார ஏடு எழுதுகிறது. உணர்வுடையவர்களாகவும், துணிவுடையவர்களாகவும் இருந்தால், ‘ஆர்.எஸ்-.எஸ்.சைத் தடை செய்’ என்று காங்கிரசார் போராட்டக் களத்தில் குதித்திருக்க வேண்டாமா?

 தன் இயக்கத்தின் மீதான தடையை நீக்கும்படி கோல்வால்கர் கேட்டபோது, ‘ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் “காங்கிரசில் சேருவதன் மூலம் அவர்கள் தங்களது தேசபக்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்” என்று ஆலோசனை சொல்லி, காந்தியைக் கொன்ற ஆர்.எஸ்-.எஸ்.சைக் காங்கிரசுக்குள் பொதிந்து வைத்துக் காப்பாற்றத் துடித்தார் பட்டேல். அன்று அது நடக்கவில்லை. இன்று, ஆர்.எஸ்-.எஸ்.சைக் காங்கிரசில் சேர அழைப்பு விடுத்த பட்டேலை, புதிய ‘குருஜீ’யாகப் பதவி உயர்வு கொடுத்து, பா.ஜ.க.விலேயே இணைத்து விட்டார், மோடி!

பட்டேலின் பிறந்தநாளையொட்டி ஒற்றுமைக்கான ஓட்டத்தையும் பிரதமர் மோடி தொடக்கி வைத்திருக்கிறார். சிறுபான்மையினர் எதிர்ப்பில் ஊறிப்போயிருந்த வல்லபாய் பட்டேலின் பிறந்தநாளில் தொடங்கப்பட்டுள்ள இந்த ஒற்றுமை ஓட்டம், யாருக்கு எதிரான - யாருடைய ஒற்றுமையை வலியுறுத்துகிறது என்னும் கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. ஓட்டத்தைத் தொடக்கி வைத்துப் பேசிய, பிரதமர் மோடி, ‘ராமகிருஷ்ண பரமஹம்சர் முழுமை அடைந்ததற்கு விவேகானந்தான் காரணம். அதேபோல, மகாத்மாகாந்தி முழுமை அடைந்ததற்கு சர்தார் வல்லபாய் பட்டேல்தான் காரணம்’ என்று பேசியிருக்கிறார். காந்தி முழுமையடைந்தாரா இல்லை ‘முக்தி’ அடைந்தாரா என்பதையும், ‘வரலாற்று ஆய்வாளர்’ மோடி விளக்கியிருக்கலாம்!

ஏற்கனவே கடந்தமுறை ஆட்சியைப் பிடித்தபோது, ‘தேசப்பிதா’ காந்தி படத்திற்குப் பக்கத்திலேயே ‘வீர’ சாவர்கர் படத்தை வைத்தாகிவிட்டது. (கூட்டணி ஆட்சியிலேயே நாங்கள் அப்படி... இன்றோ ‘அசுர’பலத்துடன் தனித்து ஆள்கிறோம்...கேட்கவா வேண்டும்). இந்த முறை, கோட்சே படத்தையும், இன்னொரு பக்கத்தில் வைத்து விட்டால், ‘தேசப்பிதா’விற்குத் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புக் கொடுத்த பெருமை, மோடி அரசுக்கு வந்துசேரும். அப்படியே கையோடு பட்டேலின் சிலையையும் திறந்து, பாடப்புத்தகங்களையும் திருத்தி விட்டால், (நமக்கு இதெல்லாம் புதுசா என்ன?) எல்லாம் ‘சுபமாக’ முடிந்துவிடும்!

சரியாய்த்தான் சொல்லியிருக்கிறார், சிவசேனைத் தலைவர் பால்தாக்கரே, ‘எதிர்காலத்தில் காந்திகளுக்கு அல்ல, கோட்சேக்களுக்குத்தான் சிலை வைப்பார்கள்’.

உதவிய நூல்கள்:

சாவர்கர் உண்மைச் சித்திரம் - எம். அசோகன்

கோட்சேயின் குருமார்கள் : காந்திஜி படுகொலை திடுக்கிடும் உண்மைகள் - அருணன்

சவர்கரும் இந்துத்துவமும் மகாத்மா காந்தி படுகொலையும் - ஏ .ஜி. நூரணி

கோட்சே காந்தியைக் கொன்றது ஏன்? - வி.டி. ராசசேகர்

Pin It