gazah 350“இன்று 10 குழந்தைகள் உட்பட 50 பேர் கொல்லப்பட்டார்கள்”

 “இன்று 20 குழந்தைகள் உட்பட 100 பேர் கொல்லப்பட்டார்கள்”

- என்பது போன்ற செய்திகள் நாள்தோறும் வெளியாகின்றன.

பாலஸ்தீன நாட்டின் காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திவரும் கொடூரமான குண்டு வீச்சில் கொல்லப்படும் பொதுமக்கள் தான் இவர்கள்.

இஸ்ரேலிய இளைஞர்கள் 3 பேர் பாலஸ்தீனத்தின் மேற்குக் கரைப் பகுதியில் கொல்லப்பட்டார்கள். “இவர்களை ஹமாஸ் அமைப்பினர் தான் கொன்றார்கள். எனவே ஹமாஸ் அமைப்பினர் வலுவாக உள்ள காசா பகுதியில் தாக்குதல் நடத்தி அவர்களை அழிக்கப் போகிறோம்” என்று இஸ்ரேல் கூறியது. ஆனால் அதற்கான எந்த ஆதாரத்தையும் அளிக்கவில்லை.

கடந்த ஜூலை 8 ம் தேதி இஸ்ரேல் ராணுவம் தாக்குதலைத் தொடங்கியது. இதனால் கடந்த 22 நாள்களில் நூற்றுக் கணக்கான குழந்தைகள் உட்பட 1,250க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டார்கள். இதற்குப் பதிலடியாக ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது குண்டு வீசியதில் 50க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்ட பாலஸ்தீனியர் களின் எண்ணிக்கை ஆயிரம் இல்லை; ஒரு லட்சத்துக்கும் மேல், அங்கே இஸ்ரேல் என்ற நாடு செயற்கையாக உருவாக்கப்பட்ட 1948ஆம் ஆண்டு முதல் கணக்கிட்டால்.

அதுமட்டுமல்ல; லட்சக்கணக் கானோர் படுகாயம் அடைந்து ஊனமானார்கள். 70 லட்சம் பேர் வெளி நாடுகளில் அகதிகளாக உள்ளனர். மற்றவர்கள் சொந்த நாட்டிலேயே மேற்குக் கரைப் பகுதியில் 25 லட்சம் பேரும், காசா பகுதியில் 15 லட்சம் பேரும் அகதிகளைப் போல் வாழ்கிறார்கள்.

எப்படி ஏற்பட்டது இந்தச் சோகம்? இதன் வரலாறு என்ன ?

ஆப்ரஹாமை நோக்கிக் கர்த்தர் சொன்னார். “நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனாருடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு நான் உனக்குச் காண்பிக்கும் தேசத்துக்குப் போ”.

கர்த்தர் காட்டிய தேசம், ‘கானான் தேசம்’. அப்போது அந்த தேசத்தில் பிலிஸ்தீனியர்கள், கானானியர்கள், பீனிசியர்கள் உட்படப் பல பழங்குடியினர் இருந்தார்கள். இந்தக் கானான் பிரதேசத்தில் ஆப்ரஹாமும் அவரைச் சார்ந்தவர்களும் குடியேறினார்கள்.

ஆப்ரஹாமின் சந்ததியில் தோன்றிய ஜேக்கப் தனது இனத்தவருக்குப் பெரும் தலைவராக விளங்கினார். ஜேக்கப் பின்னாளில் ‘இஸ்ரேல்’ என்று அழைக்கப் பட்டார். அவரது சந்ததியினர்தான் ‘இஸ்ரேலியா’ அல்லது ‘யூதர்கள்’ என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் வாழ்ந்த கானான் தேசம் ‘இஸ்ரேல்’ என்று அழைக் கப்பட்டது.

எனினும் அண்டை நாடுகளில் அடுத்தடுத்து அமைந்த பேரரசுகள் இஸ்ரேலை ஆக்கிரமித்து, யூதர்களைக் கொடுமைப்படுத்தி, விரட்டியடித்தன. இஸ்ரேலின் பெயரும் பின்னாளில் மாற்றப்பட்டு ‘பாலஸ்தீனம்’ என்று பெயரிடப்பட்டது.

எனவே ‘பைபிள்’படி யூதர்களுக்குக் கர்த்தர் கொடுத்த தேசமான பாலஸ்தீனத் தில் மீண்டும் யூதர்கள் குடியேறி, இழந்த நாட்டைக் கைப்பற்ற வேண்டும்” என்று அறிவித்து, ‘ஜியோனிஸ்ட் இயக்கம்’ தோன்றியது 1897ஆ-ம் ஆண்டில்.

இதை மறுத்தார்கள் அரபு இனத்தைச் சேர்ந்த பாலஸ்தீனியர்கள்.

“பைபிள்படியே பார்த்தால் கூட பாலஸ்தீனத்தின் பழங்குடியினர், மண்ணின் மைந்தர்கள் - பிலிஸ்தீனியர் களும், மற்ற பழங்குடியினரும்தான். பிலிஸ்தீனியர்களின் தேசம்தான் பாலஸ் தீனம் எனப்பட்டது. அவர்களது சந்ததி யினர்தான் அரபு இனத்தைச் சேர்ந்த பாலஸ்தீனியர்களாகிய நாங்கள். மறுபுறம் வரலாற்றின்படி பார்த்தால் சிரியாவின் ஒருபகுதியாகத்தான் பாலஸ்தீனம் இருந்தது. சிரியா, அரபு நாடுதான். எனவே எங்கள் தாயகமான பாலஸ்தீ னத்தை வேறு எவரும் ஆக்கிரமிக்க விட மாட்டோம்” என்றார்கள் பாலஸ் தீனியர்கள்.

அப்போது பாலஸ்தீன மக்கள் தொகையில் 92 சதவிகிதம் பேர் பாலஸ் தீனியர்கள், 8 சதவிகிதம் பேர்தான் யூதர்களும், மற்ற இனத்தவர்களும்.

இந்த நிலையில் குறுக்கிட்டது முதல் உலகப்போர். போரில் அராபியர்களின் ஆதரவைப் பெறுவதற்காக மெக்காவின் ஷெரீஃபுக்கு பிரிட்டன் ஒரு வாக்குறுதி அளித்தது. “மேற்கே மத்தியதரைக்கடல் முதல் கிழக்கே பாரசீக வளைகுடா வரை உள்ள பெரும் நிலப்பகுதிகளில் அரபு மக்கள் தங்களது ‘அகன்ற அரபு தேசத்தை’ அமைத்துக்கொள்ள பிரிட்டன் ஏற்பாடு செய்யும்.”

மறுபுறம் இதற்கு நேர் மாறாக, யூதர்களின் ஆதரவைப் பெற யூதர்களுக் கும் பிரிட்டன் ரகசியமாக வாக்குறுதி அளித்தது. “யூதர்களுக்கு ஒரு தனி நாட்டை பாலஸ்தீனத்தில் அமைக்க பிரிட்டன் ஏற்பாடு செய்யும்.”

இரட்டை வேடம் ? அல்ல ! மூன்று வேடம். மூன்றாவது வேடம் :

பிரான்ஸக்கும் பிரிட்டன் வாக்குறுதி அளித்தது. “போரில் துருக்கிப் பேரரசு முறியடிக்கப்பட்டதும் அதன் ஆதிக்கத்தில் உள்ள பாலஸ்தீனம் உட்பட அனைத்து நாடுகளையும் பிரான்ஸ§ம் பிரிட்டனும் பங்கு போட்டுக் கொள்ளலாம்.”

போர் முடிந்தது. 1918-ஆம் ஆண்டில், போரில் துருக்கி தோற்று சரண் அடைந் தது. துருக்கியின் ஆதிக்கத்தில் இருந்த சிரியா நாட்டை பிரான்ஸ் ஆக்கிரமித்துக் கொண்டது. துருக்கியின் ஆதிக்கத்தில் இருந்த பாலஸ்தீனம், ஜோர்டான், ஈராக் ஆகிய நாடுகளை பிரிட்டன் ஆக்கிர மித்தது.

அரபு மக்களுக்கு அளித்திருந்த வாக்குறுதியைக் காற்றில் பறக்கவிட்ட பிரிட்டன், பாலஸ்தீனத்தில் யூதர்களைக் குடியேற்றுவதில் தீவிரமாக இறங்கியது.

இதையடுத்து பாலஸ்தீனத்தில் யூதர் களுக்குத் தனி நாடு அமைக்க அனுமதி கோரி ஐ.நா.சபையில் பிரிட்டனின் ஆதரவோடு யூதர்கள் மனுச் செய்தார்கள். இதை ஏற்று பாலஸ்தீனத்தைத் துண்டுபோடும் தீர்மானத்தை ஐ.நா.சபை நிறைவேற்றியது.

“பாலஸ்தீனத்தை இரண்டாகப் பிரிக்கவேண்டும். ஒரு பகுதியில் யூத இனத்தவர் தங்களது சுதந்திர நாட்டை அமைத்துக் கொள்ளவேண்டும். மறு பகுதியில் அரபு இனத்தவர் தங்களது சுதந்திர நாட்டை அமைத்துக்கொள்ள வேண்டும். இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையில் குறுக்கிடும் சாலைகள், பகுதி கள் - ஐ.நா.சபையின் நேரடி நிர்வாகத்தில் இருக்கும். பாலஸ்தீனத்தில் உள்ள புனித நகரான (முஸ்லீம்கள், யூதர்கள், கிறிஸ்து வர்கள் ஆகியோரின் புனித நகரமான) ஜெருசலேம், ஐ.நா.சபையின் நேரடி நிர்வாகத்தில் இருக்கும்” என்று கூறிய அந்தத் தீர்மானம் ஐ.நா.சபையின் மூன்றில் இரண்டு பங்கு மெஜாரிட்டி யுடன் 1947 நவம்பர் 29ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. இந்தியா, கியூபா உள்ளிட்ட பல நாடுகள் எதிர்த்து வாக்களித்தன.

யூதர்கள் தங்களுக்கு கிடைத்த பகுதிக்கு ‘இஸ்ரேல்’ என்று பெயர் சூட்டி, 1948 மே 14-ல் சுதந்திர நாடாக அறிவித் தார்கள். அரபு மக்கள் இதை ஏற்க மறுத் தார்கள்.

அன்று தொடங்கியது அரபு - - இஸ்ரேல் யுத்தம்.

1948, 1956, 1967, 1973 ஆகிய ஆண்டுகளில் கடும் யுத்தம் நடந்தது. அமெரிக்கா, பிரிட்டன் ஆகியவற்றின் முழு உதவியுடன் போரிட்ட இஸ்ரேல், பாலஸ்தீனம் முழுவதையும் ஆக்கிரமித்து சிரியா, ஜோர்டான், லெபனான், எகிப்து ஆகிய நாடுகளின் பல்வேறு பகுதிகளை யும் சேர்த்து ஆக்கிரமித்துக் கொண்டது.

பின்னர் 1978-ம் ஆண்டில் எகிப்தும் இஸ்ரேலும் சமரசம் செய்து கொண்டதன் அடிப்படையில் எகிப்தின் சினாய் பகுதியை இஸ்ரேல் திருப்பிக் கொடுத்து விட்டது. இதற்கிடையில் பாலஸ்தீனத்தை விட்டு லட்சக்கணக்கான பாலஸ்தீனியர்கள் வெளியேற்றப்பட்டார்கள். அவர்கள் வெளிநாடுகளில் அகதிகளாகத் தஞ்சம் அடைந்து பரிதவித்து வருகிறார்கள். அவர்களின் எண்ணிக்கை இப்போது சுமார் 70 லட்சம். சுமார் 40 லட்சம் பாலஸ்தீனியர்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழ்ந்து வருகிறார்கள். சுமார் ஒரு லட்சம் பாலஸ்தீனியர்கள் கொல்லப் பட்டார்கள்.

இஸ்ரேலின் ஆக்கிரமிப்பைக் கண்டித்து ஐ.நா.சபை ‘ஆயிரத்தெட்டு’ தீர்மானங்கள் போட்டது. தீர்மானங்கள் எல்லாம் பேப்பரில் மட்டுமே இருந்தன.

இந்தச் சூழ்நிலையில் 1963-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது ‘பாலஸ்தீன விடுதலை இயக்கம்’. 1969இ-ல் யாசர் அராபத் இதன் தலைவரான பின்பு பிரமாண்டமான போராட்டங்கள் நடந்தன. ஆயுதம் தாங்கிய போராட்ட மாகவும், ஆயுதமற்ற போராட்டமாகவும் பாலஸ்தீனத்திலும், வெளிநாடுகளிலும் வகைவகையான போராட்டங்கள் நடந்தன.

இந்தியா, சீனா, ரஷ்யா உட்பட உலகின் பெரும்பாலான நாடுகள் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தை அங்கீகரித்தன.

ஆனால், “பாலஸ்தீன விடுதலை இயக்கம் என்பது ஒரு பயங்கரவாத இயக்கம். அதை அழித்துவிட்டுத்தான் மறுவேலை” என்று அறிவித்துச் செயல் பட்டது இஸ்ரேல் ! அதற்கு ஆதரவளித் தன அமெரிக்காவும் பிரிட்டனும் மற்ற சில ஆதரவு நாடுகளும்.

மறுபுறம், “இஸ்ரேல் அரசு ஒரு சட்டவிரோத அரசு. அதை அழித்து விட்டுத்தான் மறுவேலை” என்று அறிவித்துச் செயல்பட்டது பாலஸ்தீன விடுதலை இயக்கம்.

இரண்டும் நடக்கவில்லை. மாறாக, பாலஸ்தீனியர்களும், மற்ற அராபியர் களும், இஸ்ரேலியர்களும் லட்சக்கணக்கில் கொல்லப்பட்டதுதான் மிச்சம்.

இதற்கிடையில் இஸ்ரேல் அரசுக்கும், பாலஸ்தீன விடுதலை அமைப்புக்கும்     இடையே சமரசம் ஏற்படுத்தப் பல முயற்சிகள் நடந்தன. கடைசியில் 1993 ம் ஆண்டில் சமரச உடன்பாடு ஏற்பட்டது. முதல் முறையாக இஸ்ரேல் நாட்டையும், அரசையும் பாலஸ்தீன விடுதலை அமைப்பு அங்கீகரித்தது. அதேபோல் பாலஸ்தீன விடுதலை அமைப்பையும், பாலஸ்தீனத்தில் சுயாட்சி அதிகார அமைப்பு அமைக்கப்படுவதையும் இஸ்ரேல் அரசு அங்கீகரித்தது. அனைத்துப் பிரச்சினைகளுக்கும் சமாதான முறையில் பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண கால வரம்புடன் கூடிய திட்டம் உருவாக்கப்பட்டது.

ஆனால் இதற்கு இஸ்ரேலி லும், பாலஸ்தீனத்திலும் தீவிர வாத அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்தன. இஸ்ரேல் பிரதமர் இட்சாக் ராபின் இஸ்ரேலியத் தீவிரவாதியால் சுட்டுக் கொல் லப்பட்டார். பாலஸ்தீனத்தில்  ஹமாஸ் என்னும் அமைப்பு செல்வாக்குப் பெற்றது. இப்போது பாலஸ்தீனத்தின் மேற்குக்கரைப் பகுதி பாலஸ்தீன விடுதலை அமைப்பின் கட்டுப்பாட்டிலும், காசா பகுதி ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டிலும் உள்ளன.

சமீபத்தில் இஸ்ரேலிய இளைஞர்கள் மூவர் கொல்லப்பட்டதைச் சாக்காக வைத்து, காசா பகுதியை சுடுகாடாக்கும் கொடூர நடவடிக்கைகளில் இப்போது இஸ்ரேல் ராணுவம் ஈடுபட்டுவருகிறது. நாள் தோறும் படுகொலைச் செய்திகள்.

இரு தரப்பும் போர் நிறுத்தம் செய்து, பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று வழக்கம் போல ஐ.நா. சபைப் பொதுச் செயலாளரும், மற்ற பலரும் வேண்டுகோள் விடுத்துவருகிறார்கள்.

இந்தியா, ரஷ்யா, சீனா, பிரேசில், தென் அமெரிக்கா ஆகிய ஐந்து நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட பிரிக்ஸ் அமைப்பு 15, ஜூலை, 2014 அன்று இது தொடர்பாகத் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. “இரு தரப்பும்  பேச்சுவார்த் தையில் ஈடுபட வேண்டும். 1967, ஜூன், 4 அன்று இருந்த எல்லைப் பகுதிகளைக் கொண்ட, கிழக்கு ஜெருசலேமைத் தலைநகராகக் கொண்ட பாலஸ்தீனம் அமைக்கப்பட வேண்டும்” என்று அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதுதான் சாத்தியமான சரியான தீர்வு. இதை நோக்கியே உலக ஜனநாயக சக்திகளின் செயல்பாடுகள் அமைய வேண்டும்.

Pin It