MP-Tarun-Vijay 350மத்திய அரசு சமற்கிருத வாரத்தைக் கொண்டாடும்படி அறிக்கை விட்டிருக்கும் இவ் வேளையில், ‘திருவள்ளுவர் தினத்தை இந்திய மொழிகளின் தினமாகக் கொண் டாட வேண்டும்’ - ‘வட இந்தியர்கள் தமிழைக் கற்க வேண்டும்’ என்றொரு குரல் வடக்கிலிருந்து ஒலித்திருக்கிறது. நாடா ளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரான தருண் விஜய், தமிழுக்கு ஆதர வாக மாநிலங்களவையில் இவ்வாறு பேசியிருக் கிறார். இது தொடர்பான அவருடைய நேர்காணல் ஒன்றும் ஜுனியர் விகடனில் (13.08.14) வெளிவந்திருக்கிறது.

அரசியல், பண்பாடு, கல்வி, வரலாறு உள்ளிட்ட அனைத்து தளங்களிலும், வடக்குக்கும், தெற்குக்கும் இடையில் எவ்வளவு பெரிய வேறுபாடு நிலவு கிறது என்பதை அவரு டைய பேச்சு மீண்டும் ஒருமுறை அழுத்தமாகச் சொல்கிறது.

வருணாசிரம தர்மத்தையும், சமற்கிருத ஆதிக்கத்தையும் எந்த எதிர்ப்பும் இன்றி ஏற்றுக்கொண்ட வட மாநிலங்களின் கலாச்சாரம், பண்பாடு, வரலாறு ஆகியன வற்றையே, இந்தியாவின் அடையாளங் களாக உலக அரங்கில் முன்னிறுத்து கின்றனர் மத்திய ஆட்சியாளர்கள். தமிழ்நாட்டின் வரலாற்றுப் பாடங்களில், வட இந்திய மன்னர்களான குப்தர்கள், நந்தர்கள் மற்றும் ஷெர்சாக்களுக்கு இடம் தரப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்களும் சரி, கல்லூரியில் வரலாறு படிக்கும் மாணவர்களும் சரி, ‘குப்தர்கள் காலம் பொற்காலம்’ என்னும் பாடத்தை இன்றும் படித்துக் கொண்டு வருகிறார்கள். ஆனால், சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் வரலாறு, வட இந்தியப் பாடப்புத்த கங்களில் இடம் பெற்றுள்ளனவா என்றால், இல்லை என்று தெளிவாகக் கூறுகிறது, தருண் விஜயின் நேர்காணல். அதற்கு, டெல்லியை ஆண்டவர்களின் ஆணவமும், அறியாமையுமே காரணம் என்றும் சொல்கிறார்.

உபநிடதங்களும், இராமாயணமுமே போதும் என்று டெல்லிக் காரர்கள் முடிவு கட்டிக் கொண்டனர். உலகுக்கே நீதி சொன்ன திருக் குறளை அவர்கள் ஏறிட் டுப் பார்க்கவும் தயாராக இல்லை. மொழி ஆதிக்கச் சிந்தனையால், குறுகிய பார்வை உடையவர் களாக ஆகிவிட்டனர். ஒற்றுமையைப் புறந்தள்ளி, ‘ஒரே மாதிரி’ என்னும் கருத்தாக்கத்தை திணிக்க முயல்கின்றனர்.

சிவாஜி, ராஜீவ், இந்திரா, நேரு, காந்தி என்ற வட இந்தியத் தலைவர்களின் பெயர்களோடு தமிழர்கள் இங்கே வலம் வருகின்றனர். இதைப்போன்று, காமராசர், அண்ணா, தியாகராயர், சிங்காரவேலர், பாரதிதாசன், வள்ளுவர், தொல்காப்பியர் போன்ற பெயர் தாங்கியவர்களை வடஇந்தியாவில் பார்க்க முடிவதில் லையே? தமிழ்நாட்டுத் தலைநகர் சென்னையில், சர்தார் பட்டேல் பெயரில் சாலை இருக்கிறது. இந்தியாவின் முதல் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்த சண்முகம் செட்டியார் பெயரில் வட மாநிலத் தலைநகர் எதிலாவது சாலை உண்டா?

இந்தக் கேள்விகளை எல்லாம், அன்றே பேரறிஞர் அண்ணா மாநிலங்கள வையில் எழுப்பி இருக்கிறார்.  மாநிலங் களவை உறுப்பினர் தருண் விஜய்யின் பேச்சு மீண்டும் அதை நமக்கு நினைவூட்டு கிறது. பொதுவான மனித நேய பிரச்சினை களில் கூட, வட மாநிலங்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் உள்ள வேறுபாட்டையும் தருண் விஜய் சுட்டிக்காட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

அரை நூற்றாண்டுக்கும் மேலாக நீடித்து வரும், ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றினை வடக்கில் இருப்பவர்களில் எத்தனை பேர் அறிந்திருக்கிறார்கள்? அங்கு நடந்த தமிழினப் படுகொலை குறித்து யாருமே கவலைப்படவில்லையே என்ற தருண் விஜய்யின் ஆதங்கம் அங்கே ஒருவரிடம் கூட வெளிப்படவில்லையே? ஆனால் அதே நேரத்தில், காஷ்மீர் பிரச்சினை, பாபர் மசூதி, சிங்கூர், உத்தரகாண்ட் பழங்குடியினர் பிரச்சினைகளுக்காக, தமிழ்நாட்டில் எத்தனை எத்தனை போராட்டங்கள் நடைபெறுகின்றன?

“ஒரு வட இந்திய மொழி மேலாதிக்கம் செய்து அரசு இயந்திரத்தைக் கட்டுப்படுத்தக் கூடாது” என்னும் தருண் விஜய்யின் கருத்தை, சமற்கிருத வாரம் கொண்டாடச் சொல்பவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். இந்தியா ஒரு ஜனநாயக நாடு, மக்களாட்சித் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட நாடு என்னும் கூற்று பொருள்மிக்கதாக வேண்டுமானால், ஒற்றைத் தன்மையை நிலைநாட்டத் துடிக்கும் அகண்ட பாரதக் கனவைக் குழியில் போட்டுப் புதைத்துவிட வேண்டும். தருண் விஜய்யின் விசாலமான பார்வை, டெல்லிக்காரர்கள் அனைவ ருக்கும் வேண்டும்.

Pin It