தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே. நகர் தொகுதியில் மக்கள் நலக் கூட்டணி சார்பில், கல்வியாளர் வசந்தி தேவி, விடுதலைச் சிறுத்தைகளின் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரான வசந்தி தேவி, இடதுசாரிச் சிந்தனையாளர் என்பதும்  சமூக அக்கறை மிக்கவர் என்பதும் எல்லோரும் அறிந்த ஒன்றே! எனவே அவருக்காக அறிவாளர்கள் சிலர் தங்கள் முகநூல் பக்கங்களில் ஆதரவுக் கருத்தினைப் பதிவிட்டுள்ளனர். நல்லவருக்கு, வல்லவருக்கு வாக்களியுங்கள் என்னும் கோரிக்கையும் ஆங்காங்கு கேட்கிறது.

நல்லவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை யார்தான் மறுப்பார்கள்? ஆனாலும் நல்லவர் யார் என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது, தனி ஒரு நல்லவர் சட்டமன்றத்திற்கோ, நாடாளுமன்றத்திற்கோ சென்று என்ன செய்ய முடியும் என்று இரண்டு வினாக்கள் நம் முன் உள்ளன.

நல்லவர் என்றால் யார்  என்று எளிதில் வரையறை செய்து விட முடியாது.அது ஒரு பொத்தாம் பொதுவான சொல். ஒருவருக்கு நல்லவராக இருப்பவர், இன்னொருவருக்குக் கெட்டவராக இருப்பார். நாம் வாழும் காலமோ அவதூறுகள் நிறைந்த காலம். சொல்லப்படும் குற்றச்சாற்றுகளில் உண்மைகளும், பொய்களும் கலந்தே கிடக்கின்றன. உண்மை அறியும் குழுவை நியமித்து, நல்லவரைக் கண்டறிவதற்குள் தேர்தல் முடிந்துபோய் விடவும் வாய்ப்பு உள்ளது.

இதனை விட முதன்மையானது எதுவெனில், சட்டமன்றம் போன்ற அமைப்புகளில் 'ஒரு நல்லவர்' என்ன செய்து விட முடியும் என்பதுதான். உள்ளாட்சித் தேர்தல் வேறு, சட்டமன்றத் தேர்தல் வேறு. உள்ளாட்சித் தேர்தலில், கட்சி பேதம் பார்க்காமல், ஊருக்கு உழைப்பவரை நாம் தேர்ந்தெடுக்கலாம். அங்கு கட்சிகளுக்கு வேலையில்லை.

ஆனால் சட்ட்டமன்றம், நாடாளுமன்றம் போன்றவை சட்டங்களை உருவாக்கும் அமைப்புகள் (Constitution making bodies). அங்கே கட்சிகள்தாம் எதனையும் தீர்மானிக்கும் உரிமை உடையவை. தனி மனிதர்கள் தங்கள் விருப்பத்திற்குச் செயல்பட முடியாது. கட்சி கட்டளைகளை ((Whip) மட்டும்தான் அவர்கள் நிறைவேற்ற முடியும். அப்படிச் செய்கின்றனரா என்று கவனிப்பதற்குத்தான் கொரடா என்று ஒருவரை ஒவ்வொரு கட்சியும் நியமிக்கிறது. கட்சிக் கட்டளையை மீறினால் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.

தங்களுக்கு விருப்பம் இல்லாத ஒரு தீர்மானத்தையும், கட்சி கட்டளையிட்டால் அவர்கள் நிறைவேற்றியே தீர வேண்டும். தாங்கள் விரும்பும் தீர்மானத்திற்கு எதிராகவும், கட்சியின் ஆணைப்படி வாக்களிக்கவும் நேரும். எனவே, சட்டமன்றம், நாடாளுமன்றத் தேர்தல்களில் ஆட்களைப் பார்த்து வாக்களிக்கக் கூடாது. கட்சியைப் பார்த்தே வாக்களிக்க வேண்டும்.

இந்த அடிப்படையை நாம் உள்வாங்கிக் கொள்ளும்போது இன்னொரு உண்மை நமக்குப் புரியும். ஆர்.கே. நகரில் வசந்தி தேவிக்கு ஆதரவாக விழும் ஒவ்வொரு வாக்கும் விஜயகாந்த்க்கு விழும் வாக்காவே அமையும். சிம்லா முத்துச் சோழனுக்கு விழும் வாக்குகள் அனைத்தும் கலைஞரைச் சென்றடையும். ஜெயலலிதாவிற்கு அளிக்கும் வாக்குகள் மட்டுமே அவருக்குப் போகும்.

ஆதலால் ஆர்.கே. நகர் தொகுதியில் வசந்தி தேவியும், சிம்லாவும் போட்டியிடவில்லை.அவர்களை மறந்து விடுங்கள். அவர்கள் வெறும் குறியீடுகள் மட்டுமே.  விஜயகாந்தும், கலைஞரும் போட்டியிடுகிறார்கள் என்று புரிந்து கொண்டு, தமிழகத்திற்குக் கலைஞர் முதல்வராக வருவது நல்லதா, விஜயகாந்த் முதல்வராக வருவது நல்லதா என்பதை முடிவு செய்யுங்கள்.

இடையிடையே அன்புமணி வேறு குறுக்கிடுகின்றார். முதலமைச்சர் வேட்பாளர்களில் ஒருவரால் நிற்க முடியாது, ஒருவரால் நடக்க முடியாது, ஒருவரால் சரியாகப் பேச முடியாது, விரைந்து ஓடும் ஆற்றல் மிக்க எனக்கே ஓட்டுப் போடுங்கள் என்கிறார்.

மே 16 அன்று தமிழ்நாட்டில் நடக்க இருப்பது தேர்தல்தானே தவிர, ஓட்டப்பந்தயம் இல்லை என்பதை அவருக்குச் சொல்லுங்கள்!

தொடக்கத்தில் வசந்தி தேவி படமும், முடியும் இடத்தில் அன்புமணி படமும் இடம்பெறலாம். நாளை காலை 6 மணிக்க - இந்திய நேரம் - வெளியிடலாம்). 

Pin It